Tuesday 5 May 2015

நுனிப்புல் பாகம் 3 - 2

நுனிப்புல் பாகம் 3 - 1

2. சுந்தரனின் இரண்டாவது காதல்

சுந்தரன் இன்று தன்னுடன் வேலைப் பார்க்கும் பிரபாவிடம் தனது விருப்பத்தைச் சொல்லிவிடலாம் என தீர்மானம் கொண்டான். பிரபா குறித்து ஓரளவுக்குத் தகவல்கள் சேர்த்து வைத்து இருந்தான். பிரபா சம்மதம் சொல்லிவிட்டால் பிரச்சினை இருக்காது என்றே திட்டமிட்டான். பாரதியுடன் நேர்ந்தது போலத் தனக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் சற்று பதட்டம் இருக்கத்தான் செய்தது. வாசனின் கவிதைப் புத்தகம்தனை தேடினான். அதில் இருக்கும் சில கவிதைகளை மனப்பாடம் செய்து கொண்டான்.

சேகர், அருண் வரும் முன்னரே வேலைக்குச்  சென்று சேர்ந்தான் சுந்தரன். பிரபாவும் கொஞ்சம் தாமதமாகவே வந்து சேர்ந்தாள். பிரபா, மாநிறம். நடுத்தர உயரம். இங்கு வேலைக்குச்  சேர்ந்து ஆறு மாதங்களே ஆகிறது. எல்லோரிடம் நன்றாக பழகும் குணம்.

எப்போது பிரபாவிடம் பேசும் தருணம் கிடைக்கும் என சுந்தரன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான். மனம் வேலையில் ஒட்டவில்லை. அருண் கூட இரண்டு முறை சுந்தரனை வந்து சத்தம் போட்டுச் சென்றான். மதிய வேளையில்தான் நேரமே கிடைத்தது. எப்படியும் சொல்லிவிட வேண்டும் எனும் எண்ணத்தில் பிரபாவை நோக்கிச் சென்றான் சுந்தரன்.

''பிரபா, உன்கிட்ட ஒரு முக்கிய விஷயம் பேசணும்''

''என்ன திடீருனு''

''நீ யாரையாச்சும் காதலிக்கிறியா''

''இல்லை, எதுக்கு இந்த கேள்வி. நான் இங்க வேலைக்கு சேர்ந்ததுல இருந்து பார்க்கிறேன், உன்னோட பார்வை சரியில்லையே''

''உன்னை யாரும் காதலிக்கிறாங்களா''

''எனக்கு எப்படித்  தெரியும், இதுவரைக்கும் யாருக்கும் சொல்ல தைரியம் இருந்தது இல்லை, ஆமா என்ன இன்னைக்குப் பேச்சு ஒருமாதிரியா இருக்கு''

''உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு, உன்னை நான் காதலிக்கலாமா?''

இதைக் கேட்டதும் பிரபா குலுங்கி குலுங்கிச் சிரித்தாள்.

''என்ன சிரிக்கிற?''

''காதலிச்சிக்கோ, யாரு வேணாம்னு சொன்னாங்க''

''உனக்காக இந்த கவிதையை யோசிச்சி வைச்சேன், நீ கேளு''

''கவிதை எழுதுவியா, சொல்லு கேட்கலாம்''

''நான் மட்டும் இருந்தேன்
உலகம் வெறுத்தது
நீ என் உடன் வந்தாய்
உலகம் இனித்தது''

''நீதான் எழுதினியா?''

''ஆமாம், இன்னொரு கவிதை கேளு''

''சொல்லு''

''பொய் உரைக்க வருவதில்லை
ஐயம் உள்ளத்தில் எழுவதில்லை
உன்னுடன் பேசுவதாலே''

''நிசமாவே நீதான் எழுதினியா''

''இதோ இதுவும்
வலி வந்ததும் உன்னை மட்டும் நினைத்தேன்
வந்த வழி நோக்கியே வலியும்  சென்றதே''

''வாசன் அப்படின்னு ஒரு கவிஞர் உனக்குத் தெரியுமா?''

''யார் வாசன்?, என்ன கவிஞர்?''

''நீ சொன்ன கவிதை எல்லாம் நான் கவிதைப் புத்தகத்தில் படிச்சி இருக்கேன். என் வீட்டுல இந்த புத்தகம் இருக்கு. கிருத்திகா என்னோட சொந்தம்தான். தமிழரசி என்னோட அத்தை. இவங்களை உனக்குத் தெரியாதுன்னு சொல்லாதே. அவங்களோட எங்களுக்கு கொஞ்சம் மனஸ்தாபம், அதான் அவங்க யாரு நாங்க யாருனு இருக்கோம், ஆனா கிருத்திகா, பாரதி எல்லாம் என்னோட பேசுவாங்க. உன்னோட பார்வையை வைச்சி நான் உன்னை தெரிஞ்சிக்க முயற்சி பண்ணினப்ப நீ யாரு, பாரதி யாரு, இந்த கம்பெனி முதலாளி யாருனு எல்லாம் எனக்குத் தெரியும். உன்னை திட்டிகிட்டே இருப்பாரே அருண் அவர் கூட யாருனு தெரியும்''

''பிரபா அது வந்து''

''பொய் உரைக்க வருவதில்லை அதை நீ சொல்லி இருக்கக்கூடாது, உனக்கு பாரதியோட லவ் பெயிலியர், இப்போ என்கிட்டே முயற்சி பண்ற. என்கிட்டே பெயிலியர் ஆயிருச்சினா அடுத்து யாரு''

''இல்லை பிரபா, உன்னை எனக்கு நிறையப் பிடிச்சி இருக்கு''

''எதுக்கு இப்படி காதலிக்கத் துடிக்கிற''

''காதலிக்காம கல்யாணம் பண்ணினா வாழ்க்கை நல்லா இருக்காது''

''யார் சொன்னா''

''எனக்குத் தெரியும், நானாத்தான் சொல்றேன்''

''சுந்தரா அங்கே என்ன பேசிட்டு இருக்க, மணி என்ன ஆகுது. பிரபா அவனோட உனக்கு என்ன பேச்சு''

அருண் அவர்களை நோக்கி கத்தியபடியே வந்தான். சுந்தரன் பிரபாவிடம் சொல்லிவிடாதே என கண்களால் கெஞ்சினான்.

''இல்லை சார், சில புரோசெசிங் எல்லாம் இன்னைக்குள்ள பண்றதைப் பத்தி சொல்லிட்டு இருந்தார்''

''சுந்தரா, ஒழுங்கா வேலையை மட்டும் பாரு. நீ எனக்கு நிறைய உதவியா இருக்கிறனுதான் இன்னும் இங்கு இருக்க. வேலை இடத்தில இப்படி வெட்டியா நின்னு பேசிட்டு இருந்த குளத்தூருக்கு பெட்டியை கட்டு''

''வேலை பத்திதான் பேசிட்டு இருந்தேன்''

''போ, எதிர்த்துப் பேசாத''

சுந்தரனை  இது போல பலமுறை அருண் அவமானபடுத்திக்கொண்டே இருந்து வருகிறான். தனது தங்கையை காதலித்தான் என்கிற ஒருவித மன எரிச்சல் அவனுடன் இருந்து கொண்டே இருந்தது. வேறு வழியின்றி இதை எல்லாம் பொறுத்துக் கொண்டே இருப்பது சுந்தரனுக்கு பழகிவிட்டது. வாசனின் கவிதைகள் இத்தனை தூரம் பிறர் தெரிந்து இருப்பார்கள் என சுந்தரன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

அன்று மாலை வேலையை முடித்து கிளம்பும்போது சேகர் வந்து சுந்தரனை வீட்டுக்கு தன்னுடன் வருமாறு அழைத்தார். சுந்தரன் தான் ஓரிடம் செல்ல இருப்பதாக சொல்லி பிறகு வருகிறேன் என சொல்லி அனுப்பினான். அருண் சுந்தரனை முறைத்துப் பார்த்துவிட்டு 'வேகாம வீடு வந்து சேரு' என எச்சரித்துச் சென்றான்.

வீட்டிற்கு கிளம்பிய பிரபா சுந்தரனிடம் வந்தாள். அவர்கள் இருவரும் சேர்ந்து பக்கத்தில் இருக்கும் ஒரு காபி கடைக்கு சென்றார்கள். இவர்கள் இருவரும் இப்படி சேர்ந்து செல்வது இன்றுதான் முதல்முறை.

''சுந்தரா, சொந்தமா ஒரு கவிதை எழுதி எனக்குத்  தா, இப்படி அடுத்தவங்க கவிதையைத் திருடாதே. உன்னை அருண் சார் எப்படி அவமானப்படுத்துறார், உனக்கு வேற வேலை இந்த ஊரில கிடைக்காதா?''

''இல்லை பிரபா, வேற எங்கயாச்சும் வேலைக்குப் போனா ஊருல திட்டுவாங்க, அதுக்கு இவர்கிட்ட திட்டு வாங்கிட்டுப் போயிரலாம். உன்னை நான் காதலிக்கலாமா''

''இனிமே திட்டு வாங்காம இருக்கப்பாரு. வாரத்தில மூணு நாளு திட்டு வாங்கிருற''

''என்மேல இருக்கப் பிரியத்திலதான நீ அருண் கிட்ட சொல்லலை''

''பாவமா இருந்துச்சி, அதனால்தான் சொல்லலை, சரி நீயா யோசிச்சி ஒரு கவிதை இப்போ சொல்லு''

''சூரியன் ஒளி  தொலைத்தாலும்
உனது ஒளி
ஒருபோதும் என்னுள் தொலையாதே

நிலவு சுற்றுப்பாதை
மறந்தாலும்
உன்னை பின்தொடரும்
பாதை எனக்கு மறக்காதே

கொடுங்கனவு ஒன்றில்
நீ வந்து நின்றதும்
மகிழ்கனவாக மாறுதே

என் அழகு பன்மடங்கு
கூடிவிடும்
என் உலகு சிறந்து
மலர்ந்து விடும்
நீ மட்டும் காண்பதாலே

என் மதியும் மயங்கும்
வான் மதியும் தயங்கும்
உன் அழகை காண்பதாலே''

சுந்தரன் மடமடவென சொல்லி முடித்தான். பிரபா குலுங்கி குலுங்கி மீண்டும் சிரித்தாள்.

''என்ன சிரிக்கிற பிரபா''

''மறுபடியும் வாசன் கவிதைகளா''

''உனக்கு எப்படி இத்தனை ஞாபகமா தெரியும்''

''அப்போ அப்போ எடுத்துப் படிப்பேன், இதுமாதிரி நிறைய கவிதைகள் மனசுல பதிந்து இருக்கு. எல்லோரும் சொல்றதுதானே''

''என்னை உனக்குப் பிடிச்சி இருக்கா''

''காதலில் தோத்து இருக்க, அதனோட வலி உனக்குத் தெரியும். அதனால என்னை நீ ஏமாத்தமாட்டனு நம்பலாம்''

''அப்படின்னா என்னை நீ காதலிப்பியா''

''நீதான் என்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டியே''

''உனக்கு கவிதைப் பிடிக்குமா''

''ஆமாம்.

சாப்பிட்டு முடித்து இருந்தேன்,
மீண்டும் பசித்தது.
அப்போதுதான் உணர்ந்தேன்
நீ இன்னும் சாப்பிட்டு இருக்கவில்லை என''

''சூப்பர் சூப்பர்''

''இதுவும் வாசன் எழுதின கவிதைதான். நான் ஒண்ணும்  எழுதலை. இந்த கவிதையை மனப்பாடம் பண்ணலையா''

''பிரபா உங்க வீட்டுல நீ ஒரே பொண்ணுதான. உனக்கு அப்பா இல்லைதானே. உங்க அம்மா கூட பள்ளிக்கூட டீச்சர்''

''நான் யாரு என்ன பண்றேன் எங்க குடும்பம் எப்படி அப்படின்னு ஊரெல்லாம் விசாரிச்சி இருக்கப்போல''

''உங்க சொந்தம் பந்தம் எல்லாம் விசாரிக்கலை. உங்க வீடு பக்கம் கூட நிறையவாட்டி வந்து இருக்கேன்''

''கள்ளத்தனம் உன்கிட்ட நிறைய இருக்கு''

''இல்லை, உன் மேல இருக்கிற அக்கறைதான்''

''பார்க்கலாம் எப்பவுமே இருக்குமான்னு''

இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். பிரபாவுடன் அவளது வீடு வரை வந்து விட்டுவிட்டே தனது வீடு நோக்கிச் சென்றான் சுந்தரன். அன்று இரவு சாப்பிட அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். சேகர் சுந்தரனை நோக்கி கேட்டார்.

''பிரபாவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?''

''எந்த சம்பந்தமும் இல்லை''

''சுந்தரா, என்கிட்டே நீ எதையும் மறைக்க நினைக்காதே, உண்மையை சொல்லு. என்னை நம்பித்தான் உன்னை உங்க அப்பா அம்மா இங்கே அனுப்பி இருக்காங்க''

''எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர் ஒருத்தரை பிடிச்சி இருக்கு''

''அப்பா இவனை நம்ம வீட்டை விட்டு வெளியேப் போகச்  சொல்லுங்க. இவனால நமக்குப் பிரச்சினைதான்''

அருண் சற்று கோபத்துடன் சொன்னான். பாரதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

''இரு அருண். நீ இவனை இனிமே வேலை இடத்தில திட்டுறதை குறை. எத்தனை தடவை சொல்றது. சுந்தரா, நீ வேலை இடத்தில் வேலையில்  கவனமா இரு. நான் பிரபா அம்மாகிட்ட பேசுறேன். எதுவும் பிரச்சினை வராமல் இருக்கணும்''

''நான் எதுவும் பிரச்சினை பண்ணமாட்டேன்''

''அப்பா, என்ன நீங்க. இவனை...''

''அருண். நீ தலையிடாதே''

சுந்தரனுக்கு அன்று நிம்மதியாக இருந்தது. தன்னை சேகர் ஐயா புரிந்து இருக்கிறார் எனும்போது சற்று ஆறுதலாக இருந்தது, இல்லையெனில் இந்த அருண் பெரிய பிரச்சினை பண்ணி இருப்பான். தன்னை நிராகரித்த பாரதிக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்க வேண்டும், அவளுக்குள் ஒரு வலி உண்டாகி இருக்க வேண்டும். அதனால்தானே அமைதியாக இருந்தாள்  என சுந்தரன் நினைத்தான்.

சுந்தரன் வாசனின் கவிதைப் புத்தகத்தைப் புரட்டினான்.

'எல்லாம் சொல்லிவிட்டாயா என்றாள்
ஆம் என்றேன்.
இனி நீ சொல்ல ஒன்றும் இல்லைதானே? என்றாள்.
உன்னை காதலிக்கிறேன் என்றேன்.
வெட்கித்  தலை குனிந்தாள்'

(தொடரும்)





Sunday 3 May 2015

நமது திண்ணை - சிற்றிதழ் வடிவமைப்பு

பொதுவாக ஒரு புத்தகமோ, மாத இதழோ, வார இதழோ அதன் வடிவமைப்பு மிகவும் முக்கியமானது. கைக்கு அடக்கமாகவும், தூக்குவதற்கு ஏதுவாகவும்  இருப்பவை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் இப்போது இணையத்தில் வெளியிடும் வகையில் புத்தகங்கள் எல்லாம் வந்துவிட்ட சூழலில் கருப்பு வெள்ளை என பழைய முறையை பின்பற்றியே வெளியிடுவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு பக்கத்திற்கும் மெனக்கெட்டு வண்ணம் மாற்றி செயல்படுவது அவசியமற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆனால் இணையதளத்தை பார்த்தோம் எனில் படிப்பவர்களின் மனதை கவரும் வண்ணம் ஒவ்வொரு பக்கமும் சிறப்பாக செய்து இருப்பார்கள். அதற்கு அவர்கள் செலவிடும் நேரம் அந்த வடிவமைப்புக்கு உரிய சிந்தனை என உடன் இருந்து பார்த்து இருப்பதால் பிரமிப்பு ஏற்பட்டது உண்டு.

மிகவும் சரியாக வண்ணக்கலவை, அந்த இணையதளம் என்ன சொல்ல வருகிறது என்பதை வெளிக்காட்டும் பாங்கு என இருக்க வேண்டும். அப்படி ஒரு விஷயத்தை இணைய இதழாக வெளிவரும் நமது திண்ணை சிற்றிதழில் முயற்சித்தால் என்ன என திரு அல்  அமீன் அவர்களின் சிந்தனை ஒரு செயல்பாட்டாக மாறி இருக்கிறது. இதழ்களின் வடிவமைப்பு பற்றி முன்னரே குறிப்பிட்டு இருந்தாலும் இந்த இதழின் வடிவமைப்பு குறித்து சற்று பார்ப்போம். அதாவது வடிவமைப்பு மெருகேற்றினால் இந்த சிற்றிதழின் அளவு அதிகமாகும் அபாயம் இருக்கிறது. அப்படி அளவு அதிகமாகும்போது தரவிறக்கம் செய்ய அல்லது பிறருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப சிரமம் உண்டாகும்.

சரி வடிவமைப்புக்கு செல்வோம். முதல் பக்கம் அத்தனைத் தெளிவாக இல்லை. சமீபத்தில் மறைந்த திரு ஜெயகாந்தன் அவர்களின் படத்தை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. நான் 50% அளவில் தான் பார்க்கிறேன் ஆனால் தெளிவு இல்லை. மொபைல் மூலம் செய்வதாலோ அல்லது பெறப்பட்ட படம் அத்தனை தெளிவான ஒன்று என இல்லாததாலோ அத்தனை சிறப்பாக வரவில்லை. சற்று கவனம் செலுத்தலாம். பளிச்சென மனம் ஒட்ட  வேண்டும்.

இரண்டாவது பக்கம் சற்று நன்றாக இருக்கிறது. மிகவும் தெளிவாக வடிவமைக்கப்பட்டு வரவேற்பு இதழ் போல உள்ளது. அடுத்த பக்கம் அதே பிரச்சினை. பின்புறத்தில் என்ன இருக்கிறது (பெண் முகம்) என தெளிவாகத் தெரியவில்லை. கவிதை சோகத்தைத் தாங்கி இருப்பதால் பின்புறம் சோகமாக இருக்கட்டும் என விட்டுவிட்டார்.

அடுத்து வருகிறது எனது கதை. இங்கே தான் வண்ணமயமாக்கல் தொடங்குகிறது. கருப்பாக இருந்தபோது இல்லாத தெளிவு வண்ணத்தில் தெளிவாக இருக்கிறது. எனது கதைக்கு நான் எந்த ஒரு யோசனையும் அவரிடத்து சொல்லவில்லை. எனக்கு இந்த பின்புற படம் பார்த்தபோது பிரமிப்பு ஏற்பட்டது உண்மை. எத்தனைப் பொருத்தம். எழுத்தும் வண்ணம் கொண்டு இருப்பது படிப்பதற்கு இடைஞ்சலே இல்லை. எனது கதை என்பதால் எனக்கே ஒரு தனி கர்வம் தந்தது என்றால் மிகையாகாது.

அடுத்து அடுத்த பக்கங்கள்  மிகவும் ஜொலிக்கின்றன. நல்ல வண்ண நிறங்களுடன் கூடிய நகைச்சுவை பக்கம். நினைவலைகள் பசுமையாக இல்லாது இருப்பதை காட்டும் வண்ணம் என பக்கவாட்டில் ஒரு வண்ணம் என நன்றாகவே இருக்கிறது. அடுத்த பக்கத்தில் மரத்தின் கீழ் உள்ள ஒரு சிறுவனின் ஓவிய அமைப்பு என வண்ணங்கள் தெளித்து சிறப்பித்துவிட்டார். திருப்பூர் என்பதற்கு திரைப்படத்தில் வருவது போல பெயர்ப்பலகை மற்றும் பின்னணியில் ஒரு வாகனம் என சிறப்பாகவே இருக்கிறது. வண்ணம் நமக்கு எரிச்சல் தரவே இல்லை.

அக்ஷய திரிதி முதல் பக்கம் கருப்பு பின்புலம் சரியில்லை. தங்க நாணயங்கள் சரியாக தெரியவில்லை. இனி வரும் இதழில் இந்த சாம்பல், கருப்பு வண்ணங்களை பின்புறத்தில் இருக்குமாறு உள்ளதை தவிர்க்கலாம். அடுத்த பக்கம் மீண்டும் அருமையாக வந்து இருக்கிறது. பஜ்ஜி ரொட்டி எல்லாம் நன்றாகவே இருக்கிறது. திரு அல் அமீன் அவர்களின் உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது. கிளிக்ஸ் பை மீ பக்கமும் நன்றாகவே இருக்கிறது.

ஸ்ரீராமானுஜர் பக்கங்கள் மிகவும் அருமை. இப்படிப்பட்ட ஒரு தெளிவான படத்தை முதல் பக்கத்தில் திரு ஜெயகாந்தன் அவர்களுக்கு அலங்கரித்து  இருக்கலாம்.எனக்கு வண்ண வண்ண எழுத்துகள் மிகவும் பிடிக்கும். சலிப்பு ஏற்படுத்தாத வண்ணம் பின்புறத்தில் ராமானுஜர் இருப்பது வெகு சிறப்பு. திண்ணை பாடகி பக்கமும் அருமையாகவே இருக்கிறது.

பாடல் பரவசம் பின்புறம் அத்தனை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பெண், மாட்டுவண்டி, நிலம் என சிறப்பு படுத்தி இருக்கிறார். கருத்தம்மா என தெரிகிறது. நல்லதொரு முயற்சி. மழலையர் மன்றம் பின்புறம் நன்றாக இருக்கிறது என்றாலும் புத்தகங்கள் பற்றிய பக்கங்களில் அத்தனைத் தெளிவு இல்லை. ஆனால் வடிவமைப்பு வெகு சிறப்பு. மேடைப்பேச்சு பக்கங்கள் வடிவமைப்பு சிறப்பு. கடைசிப் பக்கத்தில் வாலி நன்றாகத் தெரிகிறது.

வண்ணமயமான இந்த சிற்றிதழ் மொத்தத்தில் 88 சதவிகிதம் வடிவமைப்பு வெகு சிறப்பாக அமைந்து இருக்கிறது. இது எத்தனை கடினம் என்பதை உழைப்பவரிடத்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும். நான் இதை எழுத எடுத்தக்கொண்ட நேரம் 46 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் இதை வடிவமைக்க எத்தனை மணி நேரங்கள் செலவிட்டு இருப்பார் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. ஒவ்வொரு வரிகளுக்கும் வண்ணம் கொடுத்து பின்புறம் அந்த எழுத்துகளை பாதிக்காது இருக்கும் வண்ணம் வடிவமைத்து ஏதோ  ஒரு இணைய இதழ் வெளியிட்டோம் என இல்லாமல் இத்தனை சிறப்பாக செய்து இருக்கும் திரு அல்  அமீனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இங்கே எழுதப்பட்டவை எனது பார்வையில் தென்பட்ட சிறு சிறு குறைகள்தானே  தவிர உங்கள் உழைப்பை ஒருபோதும் குறைத்து மதிப்பிட இயலாது. ஒரு படைப்பினை வெளியிட்டு அதற்கு கிடைக்கும் பாராட்டோ, திட்டோ அது நமக்கானது என எண்ணும்  மனநிலை எனக்கு இருப்பது போல உங்களுக்கும் இருப்பது அறிவேன்.

நமது திண்ணை தமிழில் ஒரு அற்புத இணைய சிற்றிதழ் என கூறிக்கொண்டு ஆசிரியர் திரு ஆந்தைகண்ணன் மற்றும் திரு அல்  அமீன் அவர்களுக்கு எனது நன்றிகலந்த வணக்கங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன். 

Friday 1 May 2015

நமது திண்ணை மே மாத இணைய சிற்றிதழ்

ஒரு விசயத்தை தனலாபம் இல்லாமல் தொடர்ந்து செய்வதற்கு ஒரு தனித்துவமிக்க ஈடுபாடு மிக மிக அவசியம். அது மட்டுமில்லாமல் மிகச் சிறந்த வரவேற்பும் அதைச் சார்ந்த மக்களிடம் இருந்து தொடர்ந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது ஒரு விஷயம் பெரும் தொய்வினை சந்திக்கும் என்பது வலி தரும் செய்தி. இந்த உலகத்தில் பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் ஆர்வத்தினால் உண்டானவை, அவர்களது வெற்றிக்கு காரணம் அவர்களுக்குத்  தொடர்ந்து பிறரது ஆதரவு இருந்ததுதான். நல்லதொரு ஆதரவை ட்விட்டர் மக்கள் நமது திண்ணை (சிற்றிதழுக்கு இங்கே அழுத்தவும்) இணைய சிற்றிதழுக்கு வழங்கி வருவது இணைய சிற்றிதழின் ஆசிரியர் மற்றும் சிற்றிதழ் வடிவமைப்பாளர் திரு அல்  அமீன் அவர்களின் ஆர்வத்தை மென்மேலும் உற்சாகமாக வைத்து இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஆசிரியரின் கருத்தும் இதையே பிரதிபலிக்கிறது.

ஸ்ரீராமானுஜர். சுசீமா அம்மா அவர்கள் எழுதும் ஒரு புதிய தொடர். இந்த தொடர் மூலம் பல புதிய விசயங்கள் அறிய முடிகிறது. எனக்கு அதிகமாக ஸ்ரீராமானுஜர் பற்றி தெரியாது  என்பதால் இந்த தொடர் எனக்கு பேரானந்தம் தரக்கூடிய ஒன்றாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. இங்கொன்று அங்கொன்று என இவர் குறித்த விசயங்கள் மட்டுமே அறிந்து வைத்து இருக்கிறேன். நாலாயிர திவ்விய பிரபந்தம் தனில் இவரது புகழ் பேசப்பட்டு இருக்கிறது. சமய ஒற்றுமை, மனித ஒற்றுமை குறித்து பாடுபட்ட ஒரு நற்பண்பாளர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அரங்கனின் கண்கள். விசிட்டாத்துவைதம். எனக்கு அத்வைதம், துவைதம் அடிக்கடி குழப்பத்தைத் தரக்கூடிய ஒன்று. விசிட்டாத்துவைதம் பற்றி எனக்குத் தெரியாமல் கல்லுக்கும் உணர்வு உண்டு, உணர்வற்ற நிலையில் உன் உணர்வு உண்டு என நாராயணனை நோக்கி எழுதியவை நினைவுக்கு வருகின்றன. நல்லதொரு அற்புத தொடர் அம்மா. வாழ்த்துக்கள்.

கமலா அம்மா அவர்களின் புற்றுநோய் குறித்த பதிவு அனைவருக்கும் நல்லதொரு விழிப்புணர்வு தரும் பதிவு. சமீபத்தில் நண்பர் புகழ் அவர்கள் ஒரு சாமியார் எனது புற்றுநோயை தீர்த்து வைக்கிறேன் என்று சொன்னால் அந்த சாமியாரை நம்பமாட்டேன், எனக்கு புற்றுநோய் என்று சொன்ன வைத்தியரைத்தான் சந்தேகிப்பேன் என்று எழுத அவருடனான எனது வறட்டுத்தனமான விவாதங்களை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அதை ஒட்டிய கருத்துடன் இந்த பதிவு. மிக மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா. மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் எப்படி மக்களின்  பலவீனத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள் என தான் கண்ட நண்பரின் நிகழ்வு மூலம் விரிவாக சொல்லி இருக்கிறார். முந்தைய காலத்தில் ஹோமியோபதி, மூலிகை மருத்துவம் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது, இப்போது தொடர்கிறது ஆனால் அவற்றின் செயல்பாடுகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி உலகம் எப்போதும் ஒரு சந்தேகப்பார்வை கொண்டு இருக்கிறது என்பது உண்மைதான். இந்த புற்று நோய்க்கு மருந்து எட்டாத கனி போலத்தான். இப்போது மருத்துவ உலகம் கொண்டுள்ள முன்னேற்றம் அம்மா அவர்கள் சொன்னது போல முறையாக பரிசோதனை செய்து கொண்டு வாழ்வதே நல்லது. வாழ்த்துக்கள் அம்மா.

உமாகிருஷ் அவர்களின் பாடல் அலசல். இந்த பாடலை நான் கேட்டது உண்டு. இத்தனை உன்னிப்பாக கேட்டது இல்லை. இத்தனை விசயங்களை இந்த பாடல் சொன்னது என இன்றே இவரது பாடல் அலசல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இதைத்தான் இலக்கியம் படைத்தல் என்பார்கள். அதாவது எழுதப்படும் வரிகள் அந்த மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். அதை இந்த பாடல் வெகு சிறப்பாக செய்து இருக்கிறது என அறிய முடிந்தது. எத்தனை கிராமத்து வார்த்தைகள். இவர் குறிப்பிட்ட வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பரிச்சயம். வெள்ளாமை, பொட்டக்காடு, கூழ், கஞ்சி என வாழ்ந்த வாழ்க்கையில் இருந்தது இவரது எழுத்தை அதிகம் நேசிக்க செய்தது எனலாம். வாழ்த்துக்கள். நாலு வரி நோட்டு போல இந்த தொடர் உருவாகலாம்.

சாய்சித்ரா அவர்களின் நகைச்சுவை என்றுமே என்னை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும். அவரது பெயர் பார்க்காமல் படித்தும் கூட டிஷ் பற்றிய நகைச்சுவை சிரித்துக் கொண்டே இருக்க வைத்தது. மற்ற நகைச்சுவைகள் இம்முறை சுமார் ரகம் தான். விடுகதை இந்த முறை விடுபட்டு போய்  இருக்கிறது. சோபியா தங்கராஜ் அவர்களின் கவிதை ஒரு காதல் தொலைத்த சோகம் தான். நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு இருக்கிறது. சின்ன சின்ன விசயங்கள் என டிவிட்கள் அனைத்துமே வெகு சிறப்பு. எழுதியவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் என நம்பலாம்.

அக்ஷ்ய திரியதை பற்றி ரவிக்குமார் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். வருடா வருடம் வீட்டில் எனக்கு இந்த நாளை ஞாபகபடுத்தி விடுவார்கள். நானும் இவரைப்போல கதை எல்லாம் சொல்லிப் பார்ப்பேன். ஆனால் வாழ்வில் சந்தோசம் என்பது சில நம்பிக்கைகள் உண்டாக்கி தருவது. எனவே எத்தனை சொன்னாலும் மக்களின் மனதில் சில விசயங்களை அகற்ற இயல்வதில்லை. இந்த வருடம் தான் அப்படி என்ன இந்த நாளுக்கு சிறப்பு எனத் தேடி அறிந்து கொண்டேன். அதைப்போல அனைத்து விசயங்களையும் சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள்.

ஒரு முழு பக்கத்தை நளபாகத்திற்கு ஒதுக்கி இருக்கலாம். நாங்கள் வீட்டில் ரொட்டியை வெட்டி பஜ்ஜி செய்வது வழக்கம். ஆனால்  இத்தனை விசயங்களை கொண்டு செய்வது என்பது இன்றுதான் அறிந்தது. சமையல் கலையை அறிந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். பசித்தால் உடனே விருப்பப்பட்ட ஒன்றை செய்து சாப்பிட்டுவிடலாம். நண்பர் ரவி வீட்டிற்கு விருந்தாளியாக சென்றால் நிச்சயம் வீட்டு சமையல் அதுவும் அவரின் சமையல் இருக்கும் என உறுதியாக நம்பலாம். எங்கள் வீட்டிற்கு வந்தால் ஏதேனும் ஒரு கடை பலகாரம் மட்டுமே.

திருப்பூர். இந்த ஊர் பற்றி மிக சிறப்பாக எழுதி இருக்கிறார் மணி. இவர் ஒரு நல்ல சிந்தனையாளர் கூட. எனக்கு கொடிகாத்த குமரன் மூலமே இந்த ஊர் அறிமுகம் என நினைக்கிறேன். பின்னர் பனியன் பற்றிய அறிமுகம். அடுத்து இந்த ஊரில் இருந்து நிறைய டிவிட்டர்கள் உண்டு என்பது தெரிய வந்தது. கோவை, திருப்பூர் போன்ற ஊர்கள் எல்லாம் தொழில் ஊர்கள் போலத்தான். தென்னிந்திய மான்செஸ்டர், குட்டி ஜப்பான் என பட்டப்பெயர்கள். இந்த ஊருக்கு இதுவரை சென்றது இல்லை. இந்த ஊரை சென்று பார்க்கும் ஆர்வத்தை உண்டுபண்ணி இருக்கிறது எழுத்து. வாழ்த்துக்கள்.

ரீவிஷாலின் ஓவியங்கள் வெகு அருமை. சிறுவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில்  நல்லதொரு தொடக்கத்தை நமது திண்ணை உருவாக்கி இருக்கிறது. சோபியா துரைராஜ் அவர்களின் கவிதை மற்றுமொரு காதல் வலி சொல்லும் கவிதை. நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு மழையில் ஆரம்பித்து மழையில் முடிகிறது.

மழலையர் மன்றம் புகைப்படங்கள் மிகவும் அருமை. அர்விந்த் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. மேடையில் நேரடி நகைச்சுவை சற்று கடினமான ஒன்று. பேசினால் அறுவை ஜோக் என சொல்லும் சமூகத்தில் ஒவ்வொரு வரிக்கும் சிரிப்பு என்பது எத்தனை கஷ்டம் என பல ஆங்கில நிகழ்வுகள் கண்டு எண்ணியது உண்டு.

புத்தகங்கள் குறித்தும் ஒரு எழுத்தாளனின் நிலையை குறித்தும் முத்தலிப் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். பாராட்டுக்குரிய விசயங்கள். புத்தகங்கள் பல வீணர்களை திருத்தி இருக்கிறது என்றே புத்தகத்தின் பெருமையை சொல்லும்போதே சாமி அறையை விட ஒரு நூலக அறையே வீட்டினை அலங்கரிக்க இயலும்.

பாடல் கேட்பது குறித்து ஹேமாமாலினி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். பாடல் பாடி பிறர் கேட்கும் வண்ணம் வைப்பது. அதாவது எல்லோருக்கும் பாடும் திறமை உண்டு. அதை உற்சாகப்படுத்தும் வண்ணம் இது அமையும்.

வாலி குறித்த ஆசிரியர் பார்வை வெகு சிறப்பு. ''ஒரே ஒரு விமர்சனம் மட்டும் தெளிவா வரணும்'' என தனது பணி குறித்து வடிவமைப்பாளர் அல்  அமீன் அவர்கள் கூறி இருப்பதால் அதை தனி பதிவாக வைக்கப் போகிறேன். சற்று பொறுத்துகொள்ளுங்கள் நண்பரே.

நமது திண்ணை நல்ல நல்ல விசயங்களுடன் வெகுசிறப்பாக இருக்கிறது ஆசிரியர் அவர்களே. உங்கள் நமது திண்ணை அனைவரது வீட்டிலும் வெகு விரைவில் கட்டப்பட வேண்டும் எனும் ஆசையை இங்கே எழுதி வைக்கிறேன்.

(தொடரும்)


Wednesday 29 April 2015

நுனிப்புல் பாகம் 3 - 1

1. தாவரங்களே போற்றி

இருளும் ஒளியும் சேருமிடத்து
இருளும் ஒளியும் இருப்பது இல்லை
இருள் தனியா, ஒளி தனியா
உன்னைத் தவிர எவரும் அறிவது இல்லை


வாசனுக்கு நெகாதம் செடி எல்லாம் வாடிப் போனது பெரும் வருத்தம் தந்து கொண்டு இருந்தது. நிலத்திற்கு அடியில் காய் தரும் கனி தரும் தாவரங்கள் ஒரு முறைதான் வளரும். அவைகளைப் பிடுங்கி எறிந்ததும் விலங்குகளுக்கு உணவு ஆகும், நிலத்திற்கு உரம் ஆகும். நிலத்திற்கு வெளியில் காய்க்கும் சில தாவரங்களை வேருடன் பிடுங்கிட அதன் ஆயுட்காலம் அத்துடன் முடியும். ஆனால் கனி மட்டும் பறித்த பின்னர் இப்படி வதங்கிப் போகும் தாவரங்கள் ஏதேனும் உண்டா என வாசனுக்கு புரியவில்லை.

ரோகிணியிடம் அல்லது பூங்கோதையிடம் கேட்டுப் பார்க்கலாம் என்றே நினைத்தான். ஒருவேளை விநாயகம் ஐயாவுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறதா என அவரை நோக்கிச் சென்றான்.

''என்ன வாசன், ஒரு மாதிரியாக இருக்க''

''எல்லா செடிகளும் வாடி வதந்கிருச்சியா, இனிமே அவை கனி தராது, பிடுங்கிற வேண்டியதுதான்''

''இதைப் பத்தி அந்த நோட்டில் எதுவும் எழுதலையே, நம்மகிட்ட கொஞ்சம் விதைகள் இருக்குதானே, அதை வைச்சி மீண்டும் விதைக்கலாம். ஆனால் இதனோட மருத்தவ பலன் என்னன்னு  எனக்குத் தெரியலை, அந்த கனியை சாப்பிட்டுப் பார்த்தாலாவது சொல்லலாம், எப்படி விற்பனை பண்றது யார் வாங்குவாங்க புரியலையே வாசன்''

''ஐயா இப்போதைக்கு இந்த கனி எதையும் நாம விற்க வேணாம், சாப்பிட வேணாம். அதில் இருக்கிற விதைகளை நாம விதைக்க இந்த நிலத்தை பண்படுத்தி ஆகணும் அதுக்கு எப்படியும் ஒரு இரண்டு வாரங்கள் ஆகும்''

''அப்படின்னா இந்த செடிகளை பிடுங்கிரலாம் வாசன்''

''இதை எல்லாம் காய வைச்சி நம்ம பூங்கோதை இல்ல ரோகிணிகிட்ட கொடுத்து ஆராய்ச்சி பண்ண சொல்லலாம்''

''பூங்கோதை இப்பதான் குழந்தைக்கு தாய் ஆகி இருக்கா, நீ ரோகிணிகிட்ட  கேட்டுப் பாரு வாசன்''

''நீங்க சொன்ன மாதிரி இந்த செடி மனசை நெகிழ வைக்கும் செடியா இருக்குமோ?''

''இருக்கும் வாசன்''

''ஆனா, இந்த செடியே வாடிப் போகுதே இது எப்படி மருத்தவ குணம் கொண்டதாக இருக்கும்''

''இன்னும் உனக்கு சந்தேகம் போகலையா?''

''ஐயா கேள்வி கேட்கிறது சந்தேகத்தின் அடிப்படையில் இல்லை, தெரிஞ்சிக்கணும் போல இருக்கு''

''முத்துராசுவை கூப்பிட்டு எல்லா செடிகளையும் பிடுங்கி காயப்போட்டு பத்திரமா எடுத்து வை, அப்படியே நிலத்தை உழுது போட்டுரு, எரு  எல்லாம் அடிக்கணும்''

''எப்போ ஐயா சாத்திரம்பட்டி போகலாம், எனக்கு அங்கே போகணும் போல இருக்கு''

''இல்லை வாசன் அதுபத்தி பேச வேணாம்''

இந்த தாவரங்கள் நைட்ரேட், பாஸ்பேட், பொட்டாசியம் போன்ற முக்கிய தாது பொருட்கள் இல்லாமல் ஒழுங்காக வளராது. மேலும் இந்த இலைகளில் இருக்கும் குளோரோபில் மெக்னீசியம் கொண்டு இருக்கும். இப்படி தாது பொருட்கள் உட்கொண்டு வளரத் தொடங்கியதுதான் இந்த தாவரங்கள்.

வெறும் பாறைகளாக இருந்தது அந்த பாறைகளில் இருக்கும் தாது பொருட்கள் மண்ணுக்குள் போகத் தொடங்கின. நைட்ரஜன் ஆகாய வெளியில் அதிகம் இருந்த போது  மின்னல்கள் அந்த நைட்ரஜன்களை  நைட்ரேட்களாக மாற்றின. இந்த நைட்ரேட்கள் பூமிக்குள் புதையுண்டு இருந்தன.

பாக்டீரியாக்கள் இந்த பூமியில் உருவான காலத்தில் அவைகளும் இந்த நைட்ரஜனை நைட்ரேட்களாக மாற்றும் வல்லமை கொண்டு இருந்தன. அது மட்டுமின்றி இந்த நைட்ரேட்களை நைட்ரஜனாக மாற்றும் வல்லமை சில பாக்டீரியாக்களுக்கு இருந்தது.

தாவரங்கள் நேரடி நைட்ரஜன் உட்கொள்வதில்லை. மாறாக கரியமில வாயு உட்கொண்டு உணவு தயாரிக்கும். மனிதர்கள் ஆக்சிஜனை உட்கொண்டு ஆற்றல் பெற்றார்கள். இந்த நைட்ரஜன் ஒரு முக்கிய தனிமம். இவை நமது உடலில் காணப்படும் மரபணுக்களில் வியாபித்து இருக்கின்றன. நீர் வளம் கொண்டு இருந்தாலும் கனிம வளம் இல்லாத நிலம் வறண்ட நிலம்தான்.

''முத்துராசு அண்ணே, அந்த செடி எல்லாம் பிடுங்கிரலாமா?''

''இருக்கறதே அம்பதோ அறுவதோ, இதுக்கு ரெண்டு பேரா?''

''துணைக்கு இருந்தா நல்லா இருக்கும்னு பார்த்தேண்ணே''

''ஆமா வாசா, நீயும் ஐயாவும் இந்த செடியை  வேரோட பிடுங்கி கொண்டு வரப்ப வாடாத செடி பழத்தை பறிச்சதும் எப்படி வாடிருச்சி, அதுவும் சில பழங்களில் விதை கூட இல்லாம இருந்துச்சே''

''யாருக்குண்ணே தெரியும்''

''நீங்க மலையில் இந்த செடியை பிடுங்கறப்ப, வேற வாடின செடி எதுவும் இருந்துச்சி?''

''அப்படி எதுவும் கண்ணுக்குத் தெரியலைண்ணே''

''கத்தரிக்காய் கூட சில மாசங்கள் வரும், இது ஒரு வருஷம் கழிச்சி ஒரே வாட்டி பழத்தை கொடுத்துட்டு தலையைப் போட்டுருச்சி, என்ன மகிமை செடியோ''

''வாங்கண்ணே வேலையை முடிச்சிரலாம்''

''இரு வாசா, இந்த பாத்திக்கு தண்ணி பாச்சிட்டு வந்துருறேன், நீ மேற்கொண்டு படிக்கலாம்ல, என்னமோ அக்ரி படிப்பு இருக்காமே''

''அது யாருண்ணே  சொன்னா''

''நம்ம வீட்டு பிள்ளைக படிக்குதல''

''பரவாயில்லைண்ணே படிப்பு விபரம் தெரிஞ்சி வைச்சிருக்கீங்க. நெத்து  விடுற செடி எல்லாம் ஒரு பொழப்புதான், அண்ணே இதுல சில செடிகளை தண்டுவ வெட்டி வைச்சி பார்ப்பமோ''

''உன் இஷ்டம் வாசா, நீயும் ஐயா பேச்சு கேட்டு இந்த பகுமான செடியை நட்டு வைச்ச, உரம் தண்ணீ பாய்ச்சினதுதான் மிச்சம், ஒரு காசும் இன்னும் பாக்கலை''

''கொஞ்சம் காலம் ஆகட்டும்ணே''

வாசனும் முத்துராசுவும் எல்லா செடிகளையும் நிலத்தில் இருந்து பிடுங்கி பத்திரப்படுத்தினார்கள். செடி அத்தனை மிருதுவாக இருந்தது. வேர்கள் உதிர்ந்து போயிருந்தன.

நிலத்தில் வேர் மூலம் உறிஞ்சி அதை இலைகளுக்கு கடத்திய பின்னர் இலைகள் கரியமில வாயுவுடன் கலந்து குளுக்கோஸ் எனும் கார்போஹைட்ரெட் உருவாக்கும். இந்த குளுக்கோஸ் இந்த தாவரங்களில் பல்வேறு விதமாக மாற்றம் கொள்ளும். அவை செல்லுலோசாக மாறி செடியின் செல்களில் சுவர்களாக தேங்கும். ஸ்டார்ச்சாக மாறி சேமித்து வைக்கப்படும். கனிகளில் இவை மேலும் இனிப்பு தன்மை கொண்டதாக சுக்ரோஸ் வடிவம் எடுக்கும். இதே குளுக்கோஸ் எண்ணெய் வடிவம் விதைகளில் எடுக்கும். மிக முக்கியமாக இந்த குளுக்கோஸ் நைட்ரேட் உடன் இணைந்து அமினோமிலங்களாக உருமாறி பின்னர் புரதமாக மாறும்.

தன்னிறைவு கொண்ட தாவரங்கள் இந்த உலகில் போற்றப்பட வேண்டியவைகள்.

'நெகாதம் செடி' வாசன் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

(தொடரும்)



Saturday 25 April 2015

இறைவனும் இறை உணர்வும் - 5 (From Man to God - Mrs Sushima Shekar)

பகுதி - 4    From Man to God My Father's Spiritual Journey - Mrs Sushima Shekar

நாம் உலகில் எவர் எவருடன் தொடர்பு கொள்கிறோம் என்பது நமது செயல்பாடுகள், நடவடிக்கைகள் பொருத்து அமைகிறது. நான் இணைய உலகில் எழுத வராமல் இருந்து இருந்தால் பலருடைய அறிமுகம் எனக்கு கிடைத்து இருக்காது. எனது உலகம் மிகவும் சிறியது. எனக்கு இறைவன் பிடிக்கும். அதற்காக இறை மறுப்பு கொள்கையாளர்களை எல்லாம் நான் வெறுப்பது இல்லை. அவரவருக்கு அவரவர் அறிவு.

இந்த தொடரை நான் எழுத ஆரம்பித்து சில ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் அதிகம் புத்தகங்கள் வாசிக்கும் வழக்கத்தை இன்னும் மீண்டும் தொடரவில்லை. திடீரென ஒருமுறை புத்தகம் பற்றி சுசீமா அம்மா அவர்கள் நண்பர் ரவியுடன் பேசுகையில் என்ன புத்தகம் எங்கு கிடைக்கும் என்றேன். அந்த புத்தகம் அன்புக்காக வழங்கப்படுவது, விற்பனைக்கு அல்ல எப்படி உங்களிடம் சேர்ப்பது என்றார். அப்போது அர்ச்சகர் ஒருவர் ஊரில் இருந்ததால் அவரிடம் தரச்சொல்லி இருந்தேன். அவரும் புத்தகத்தை என்னிடம் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தார்.

இறைவன் உணர்வு என்பது உண்மைக்கு நெருக்கமானது அதை நீங்கள் உணரும் வரை இறைவன் பற்றிய கேள்விக்குறி இருக்கும் என்றே பலர் சொல்லி இருக்கிறார்கள். எனக்கு இறைவன் உணர்வு இதுவரை வந்தது இல்லை என மிகவும் தெளிவுபடுத்திவிட்டேன், ஆனால் அடுத்தவர்கள் கொண்டுள்ள இறைவன் உணர்வு குறித்து நான் ஒருபோதும் கேலி செய்வது இல்லை, மாறாக எனக்கு இன்னும் அந்த வாய்ப்பு இல்லை என்றே கருதுவது உண்டு. இந்த நூல் ஒரு தந்தையின் இறைவன் உணர்வு பற்றி அதுவும் எனக்கு மிகவும் நெருக்கமான ஓம் நமோ நாராயணா என்று சொல்லிச் சென்றது எனக்குள் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது.

சுசீமா அம்மா அவர்கள் சொன்னதுபோல எவர் ஒன்றை உணர இயலுமோ அவரால் மட்டுமே மற்றவரின் உணர்வுகளை உணர இயலும். பிறரின் நலனுக்கு பாடுபடும் எந்த ஒரு மனிதரும் போற்றப்பட வேண்டியவர் என்பதில் மறு கருத்து இல்லை. தனது வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்த சுசீமா அம்மா அவர்களின் தந்தை எப்படி எல்லாம் பிறருக்காக வேண்டினார் அவருள் உணர்ந்த இறைவன் எப்படி என மிகவும் அழகாக விளக்கி இருக்கிறார்கள். இந்த நூலைப் படிக்கும்போது எனது தந்தை நினைவுக்கு வந்தார்.

எங்கள் வீட்டில் எவருக்கேனும் ஏதேனும் நோய் வந்தால் கூட சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் திருநீறு வைத்துவிடுவார். நான் திருநீறு வைக்காமல் வீட்டைவிட்டு எங்கும் செல்வதில்லை. பின்னர் குங்குமம் வைக்க ஆரம்பித்து இருந்தேன். தினமும் இரவில் சாமி கும்பிடும் வழக்கம் எங்கள் வீட்டில் உண்டு. என் தந்தை சமீபத்தில் கீழே விழுந்து நடக்க முடியாமல் போனபோது அவரை பார்க்க சென்று இருந்தேன். எனக்கு அழுகை வந்ததை நிறுத்த இயலவில்லை. ஆனால் என் தந்தைக்கோ என்னைப் பார்த்ததில் சந்தோசம். நடந்திருவேன்  என நம்பிக்கை சொன்னவர் இரண்டே வாரங்களில் நடந்தார். எனக்கோ இன்னும் ஆச்சரியம். கடவுள் பற்றி அதிக நம்பிக்கை உள்ளவர் என்றாலும் ஏமாற்றுத்தனம் என் தந்தைக்கு கொஞ்சம் கூடப் பிடிக்காது. இப்படி வாழ்வில் எப்போதும் எவர் உதவி இன்றி வாழப் பழகிய என் தந்தை சில வாரங்கள் பிறரை நம்ப வேண்டி இருக்கிறதே என மனதளவில் குற்ற உணர்வு கொண்டார் என்றே அறிந்தேன். வயது 86. தனது குடும்பமே முன்னுரிமை என்பதில் என் தந்தை முழு உறுதியாக இருந்தார்.

இந்த நூல் படிக்கும்போது ஒரு பார்கின்சன் நோய் மூலம் பாதிக்கப்பட்ட சுசீமா அம்மாவின் தந்தையின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என என்னால் எண்ணிப்பார்க்க இயலவில்லை. ஆனால் அவரது மன உறுதி பிறருக்கு வேண்டும் அந்த குணம் வியப்பில் ஆழ்த்தியது. அவரது உண்மையான உழைப்பு தன்னை ஏமாற்றியவர்களை மன்னிக்கும் மனப்பாங்கு என அவரது தெய்வீகத் தன்மையை நூல் முழுவதும் அறிந்து கொள்ளலாம். அவரது இறுதி மரண நிகழ்வு ஒரு நிமிடம் என்னை உலுக்கியது. எனது அன்னை இறந்தபோது அவரது பிள்ளைகள் நாங்கள் எவருமே அருகில் இல்லை. ஆனால்  இறக்கும் நாள் அன்று எல்லோர் கனவிலும் என் அன்னை வந்தார் என்றே எல்லோரும் சொன்னார்கள். எனக்கும் ஆச்சரியம். என் அம்மா இறந்துவிட்டார்கள் என அதிகாலை நான்கு மணிக்கு தூக்கத்தில் நினைக்கிறேன். ஆறு மணிக்கு செய்தி வந்துவிட்டது. என் அம்மாவின் மரணம் குறித்து எண்ணும் போதெல்லாம் எனக்கு அரங்கனின் மீது ஒரு கேள்வி எழும். அது இருக்கட்டும்.

இன்றைய காலத்தில் இந்த இறைவன், இறைவன் உணர்வு எல்லாம் ஒரு கேலிப் பொருளாகவே ஒரு பிரிவினரால் பார்க்கப்படுகிறது. அதற்கான காரணம் ஏமாற்றுத்தனம். சில ஏமாற்றுக்காரர்களினால் பல உண்மையானவர்களின் மனம் புண்படத்தான் செய்கிறது. எனது சிந்தனைகள் பலரை புண்படுத்தி இருக்கிறது. நான் விமர்சிக்காத பகவத் கீதையா? வள்ளலாரா? மதங்களா? இறைத்தூதர்களா? மகான்களா? அது என் மற்றொரு சிந்தனையின் கோணம். விமர்சிப்பது தவறு என்று சொல்லவில்லை, ஆனால் எது எத்தகைய விமர்சனம் எனும் பக்குவம் அவசியம் தேவைப்படுகிறது. இறைவன் சொன்னார் என ஒரு மனிதன் சொல்லும்போது எனக்கு கேள்வி எழுகிறது. இறைவனின் அவதாரங்கள் என சொல்லும்போது எனக்கு கேள்வி எழுகிறது. அந்த கேள்விகளை எல்லாம் என்னால் எளிதாக புறந்தள்ள முடிவதில்லை. அவை கேள்விகள், அதற்கான விடைகளை  நானே உருவாக்கி அவையெல்லாம் பித்தலாட்டங்கள் என எப்போது நான் முடிவு செய்கிறேனோ அப்போதே எனது அறியாமை அங்கு வெளிப்படுகிறது. ஏனெனில் அடுத்தவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை நான் உணராத காரணத்தின் மூலம்  புறந்தள்ளுவது என்றான பின்னர் அங்கே உண்மை எனக்கு தெரியாமல் போய்விடுகிறது.

இந்த நூலினைப் படிப்பவர்கள் அதே இறைவன் உணர்வில் பயணிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால் படித்ததும் இந்த இறைவனின் உணர்வுக்குத் தொடர்பு உடையவர்கள் நிச்சயம் உணர்வார்கள். எனக்குள் அந்த சலனத்தை இந்த நூல் ஏற்படுத்திச்  சென்றது என்னவோ உண்மை.

இப்போது கூட ஓம் நமோ நாராயணா எனும் மந்திரம் ஒலிக்க  பூஜை அறையில் அமர்ந்துதான் இதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

இறை உணர்வு அனைவருக்கும் வாய்ப்பது இல்லை. தெய்வீகம் என்பதை மத சடங்குகளுடன் இணைத்து விடாதீர்கள்.

வெகு சிறப்பாக எழுதப்பட்ட ஒரு அருமையான புத்தகம்தனை படித்தபோது படித்து முடித்த பின்னர் சுசீமா அம்மாவின் தந்தையுடன் பயணித்த உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. எனது அன்புகளும் நன்றிகளும் அம்மா.

புத்தகம் வேண்டுவோர் twitter-ல்  @amas32 அம்மாவிடம் கேளுங்கள்.

Friday 3 April 2015

நமது திண்ணை ஏப்ரல் மாத இணைய சிற்றிதழ்

நமது திண்ணை  (இணைப்பு) மூன்றாவது மாத இணைய சிற்றிதழ் இன்று வெளியிடப்பட்டது. இது பாராட்டுக்குரிய விஷயம். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகளை ஆசிரியர் மனமுவந்து தெரிவித்து இருக்கிறார். ஒரு இணைய சிற்றிதழ் மூலம்  சிறப்பான படைப்புகளை கொண்டு வருவது அந்த இணைய சிற்றிதழ் ஆசிரியர் மற்றும் குழுவுக்கு மட்டுமல்ல அதில் எழுதுபவர்களுக்கும் ஒரு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர் தனது பார்வையில் இதை  மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார்.  மேலும் தமிழ் எழுதுபவர்களை இது உற்சாகம் கொள்ளச் செய்யும். தமிழ் கீச்சர்கள் சந்திக்க இருக்கும் விழா ஒன்று குறித்த அறிவிப்பு இதில் இருப்பது ஆச்சரியம் அடையச் செய்தது. உண்மையிலேயே இந்த இணைய சிற்றிதழ் தமிழ் எழுத்துக்காக பெரும் பங்காற்ற இருக்கிறது என்பதை உறுதியாக நம்பலாம். ஆசிரியருக்கு பாராட்டுகள்.

தமிழ் கீச்சர்கள் பற்றி நான் விரிவாக எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. என்னால் புரிய முடியாத ஓர் உலகம் அங்கு உண்டு. அந்த உலகத்தை முற்றிலும் புறக்கணிக்கிறேன். ஆனால் இந்த இணைய சிற்றிதழ் காட்டும் உலகம் எனக்குப் பிடித்த ஒன்று. எப்போதும் அதில் மட்டுமே பயணிக்க விரும்புகிறேன்.  இந்த சிற்றிதழின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. வெயில் காலத்தை குறிப்பிடும் வண்ணம் குளிர்ச்சியான பழ வகை, நொங்கு போன்றவைகளை கொண்டு மிகவும் அழகாக சிந்தித்து இருக்கிறார்கள். சிற்றிதழுக்கென உருவாக்கப்பட்ட வடிவம் சிறப்பு. அருமையாக வடிவமைப்பு செய்து வரும் நண்பர் அல் அமீன் அவர்களுக்கு பாராட்டுகள். எப்படி எல்லாம் இந்த இணைய சிற்றிதழ் உருவாகிறது அதற்கான பின்னணி என்ன என்பதை அறியும் போது  பிரமிப்புதான்.

முதலில் நாம் காண இருப்பது சுஷீமாசேகர் அம்மாவின் 'குகன்' எனக்கு இந்த குகன் பற்றி முன்னரே அறிந்து இருந்தாலும் பல புதிய விசயங்கள் தெரிந்து கொண்டேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும் அதற்கு மிக்க நன்றி அம்மா. மொத்தமாக ஒரு கதை படிப்பது என்பது வேறு. அதில் ஒரு கதாபாத்திரம் குறித்து படிப்பது வேறு. ஒரு படகோட்டிக்கு குகப் பெருமாள் எனும் பட்டமெல்லாம் அன்பினால் மட்டுமே சாத்தியம் என்பதை திருக்குறள் மூலம் ஆரம்பித்து வால்மீகி சொல்லாத விசயங்களை கம்பர் சொன்னார் என முடித்தபோது அருமை என சொல்லாமல் எவரும் இருக்கமாட்டார். குகன் பற்றிய வர்ணனை கம்பர் பார்வையில் இருந்து அம்மாவின் பார்வை அருமை. நீங்கள் என்றுமே பார்க்காத ஒருவர் மீது பிறர் சொல்வதைக் கேட்டு அன்பு கொள்வீர்களேயானால் நீங்களும் குகப் பெருமாள் தான். அடடா! இன்றுதான் திருமங்கையாழ்வார் குறித்து ஒரு பதிவு எழுதினேன். அதே திருமங்கையாழ்வார் குறிப்பிட்டு ஒரு பாசுரம். என்ன தவம் செய்தனை! இந்த உலகம் கொஞ்சம் விசித்திரமானது, நாம் புரிந்து கொண்டால் விசாலமானது. குகனின் பண்பு நலன்கள், பரதனிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதெலாம் படிக்க படிக்க நமக்கே அப்படி இருக்க ஓர் ஆசை வரும். பாராட்டுகள். இன்னும் பல அதிசய மனிதர்களை இந்த சிற்றிதழ் காட்டும் என்றே நம்புகிறேன்.

அடுத்து விருதுநகர். எனது தந்தை நடந்து சென்று படித்த ஊர். எனது கைராசி மருத்துவர் டாக்டர் வெள்ளைச்சாமி இருக்கும் ஊர். சிறுவயதில் கை முறிந்து லைசாண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊர். என் அம்மா, மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்த ஊர். திரைப்படம் பார்த்துவிட்டு நாங்கள் தொலைந்து போனதாக பிறரை எண்ண வைத்த ஊர். இப்படிப்பட்ட எங்கள் பக்கத்து ஊரை செல்வி. நந்தினி எங்கள் ஊர் என எழுதி இருக்கும் விதம் என்னை அந்த ஊருக்கே மீண்டும் அழைத்துச்  சென்றது. எத்தனை நினைவுகளை இந்த பதிவு கீறிவிட்டது என எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அத்தனை அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறார்.

 எனது முதல் நாவலில் இந்த மாரியம்மன் கோவிலை மனதில் வைத்தே எழுதினேன். என் பேரு எப்படி இந்த சாமிக்கு தெரியும் என்பது கதைநாயகனின் கேள்வி. கதைநாயகி சொல்வாள், அணுவுக்கும் அணு கூட அந்த சாமிக்கு தெரியும் என்பது போல ஒரு காட்சி. அப்படி பட்ட அந்த கோவில் சிறப்பு என அந்த பங்குனி மாதம் விழாவை குறிப்பிட்டது நாங்கள் மாட்டுவண்டியில், ட்ராக்டரில் சென்ற காலங்களை நினைவில் கொண்டு வந்துவிட்டது. இதை நாங்கள் அஞ்சாம் திருநாள் என்றே அழைப்போம். நான் சிறுவயதில் சென்றதால் அவர் குறிப்பிட்டது போல காதல் மங்கையர்களை கண்டது இல்லை. அப்போது எல்லோரும் அக்காக்களாக கண்ணுக்குத் தெரிந்து இருப்பார்கள். பொருட்காட்சி என்றால் மதுரை தான் என்றாலும் இங்கேயும் இந்த விழாவினை முன்னிட்டு விருதுநகர் ஜொலிக்கும் என்பது கண்ணில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.

கல்வி. இவர் விருதுநகர் பற்றி எழுதி இருக்கிறார் என்று சொன்னபோது நிச்சயம் கல்வி பற்றி இருக்கும் என்றே எண்ணினேன். ஆமாம், அங்கு ஒரு பள்ளிக்கூடம் உண்டு. நான் படித்த காலத்தில் கூட கல்வியில் முதலிடம், இப்போதும் தான். எங்கள் கரிசல் மண் அப்படி. விழுந்து விழுந்து படிப்போம். கல்வி காலங்களை கொண்டு வந்து காட்டியதற்கு மீண்டும் நன்றி. விருதுநகர் வியாபாரிக்கு வித்துப்போடு செல்லக்கண்ணு என பாடும் அளவுக்கு பெருமிதம் உள்ள ஊர் என சொல்லிவிட்டார். ஆமாம், எங்கள் ஊர் வியாபார ஸ்தலம் கூட அதுதான். விவிஎஸ் இதயம் நல்லெண்ணெய் முதற்கொண்டு. கல்வித்தந்தை காமராஜர் என ஒரு குறிப்பு போதும் ஓராயிரம் கட்டுரைகள் எழுதலாம் என மிகவும் சிறப்பாக சொல்லிவிட்டார்.

அதானே, எங்கே புரோட்டா இல்லாமல் போகுமா? அதுவும் சிறப்பாக சொல்லி இருக்கிறார். நான் எண்ணெய் புரோட்டா வாரம் ஒருமுறை சாப்பிட்டு விடுவேன். மதுரை புரோட்டா தினமும் படித்த காலத்தில் சாப்பிட்டது உண்டு. என்னதான் மதுரை புரோட்டா என்றாலும் அவர் சொன்னது போல விருதுநகர் விருதுநகர் தான். பங்குனி திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள் என அழைப்பு விடுத்தது அன்பின் வெளிப்பாடு. திருமணம் ஆகாதவர்களை அழைக்கிறார் என நீங்கள புரிந்துகொண்டால் அதற்கு அவர் பொறுப்பல்ல. அருமையான எழுத்துங்க, பாராட்டுகள். நந்தினி என்றால் தமிழ் ட்விட்டர் ட்ரென்ட் செட்டர் என்ற ஒரு பெயர் உண்டு. அதை இங்கும் நிரூபித்துவிட்டீர்கள். அவரது கள்ளம் அற்ற உள்ளம் போலவே அன்பு சிறப்பினை சொல்லி இருக்கிறார். சிறப்பு பார்வை சரிதானா என நந்தினிதான் இனி சொல்லவேண்டும்.

களவு போகும் உழவு எனும் கவிதை - ரிஸ்வான். உழவுத்தொழில் நசிந்து வருகிறது. ஏன்  இப்படி இருக்கிறீர்கள் என சமூக அக்கறை சொல்லும் அருமையான கவிதை. உழைப்பை நம்பி கலப்பை சுமந்து என தொடங்கி ஓர் உழவன் மண்ணில் விதையாவான், அவள் மனைவி விதையாவள் என்பது எத்தனை வலி தரும் என அந்த மண்ணில் வசிப்பவரை கேட்டுப்பாருங்கள். அந்த வலியை  வார்த்தைகளால் உணர வைத்துவிட்டார்.

நச்சுனு சிரிங்க. எல்லாமே சிறப்பாக சிரிக்க வைக்கும் ரகம் தான். எத்தனை நகைச்சுவை மிக்க மனிதர்கள் நம்மில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். சாமி சத்தியமா என்பது நல்ல விழிப்புணர்வு கதை. விஜய் என்பவர் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு மனிதரும் இப்படி திருந்திவிட்டால் இந்த உலகம் எப்படி சிறப்பாக இருக்கும். ஒருவர் திருந்த ஒரு சிறு பொறி போதும். அந்த பொறி எப்படி பற்றிக்கொள்கிறது என அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. பாராட்டுகள். பொன்ராம்  அவர்களின் நீரின்றி அமையா உடம்பு அருமையான பதிவு. தண்ணீர் சிகிச்சை முறை என்ற ஒன்று உள்ளது. முறையாக எல்லாம் செய்துவர எல்லாம் சிறப்பாக இருக்கும், நல்ல தகவல்கள் கொண்ட பகுதி. இன்னும் பல விசயங்கள் எழுதி இருக்கலாமோ என தோணியது. நற்பணி தொடரட்டும். ஆங்காங்கே சின்ன சின்ன விஷயங்கள் சிந்திக்கும் வண்ணம் ஆங்காங்கே செதுக்கப்பட்டு இருக்கின்றன.

கவிஞர் இளந்தென்றல் திரவியம் அவர்களின் அழகிய அழுத்தமான பலகாரக் கிழவி  முக்கு கவிதை. ஒரு கவிஞரின் கவித்தன்மைக்கு ஒரு சில வரிகள் போதும். அந்த கடைசி வரிகள்தான் பலரது மூக்கை உடைக்கும் வரிகள். இன்றுவரை பிள்ளைகள் ஏதும் பெறாத எந்த பெண்ணும் பலகாரக் கிழவியாய் வந்தது இல்லை. எங்கள் ஊர் அரசுப்பள்ளியினை நினைவில் கொண்டு வந்து விட்டீர்கள் சார். அட்டகாசம். பாராட்டுகள். அடுத்து சத்யா அவர்களின் அவள். ஆஹா அவள் உங்கள் கைகளில் அழகாகவே தவழ்ந்து இருக்கிறாள். கவிதையில் காதல் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது.

கீர்த்திவாசன் மற்றும் சக்திவேல் அவர்களால் எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. இந்த சிற்றிதழில் முடிந்த மட்டும் தமிழ் தலைப்பு இருப்பது நலம் என்பது எனது எண்ணம். பழமொழியும் அர்த்தங்களும் எழுதுவது எவர் எனத் தெரியவில்லை. மிகவும் சிறப்பு. போக்கத்தவன், வக்கத்தவன் என்பதான எனது அர்த்தம் வேறாக இருந்தது. ஆனால் உண்மை அர்த்தம் இப்போதே கண்டு கொண்டேன். நன்றி. வழக்கம்போல விடுகதைகள் பதில் சில தெரிந்தது. அதோடு மஹியின் பாராமுகம், பாலைவனம் ஒரு நல்ல கவிதை. பெண்கள் இதுபோன்ற கவிதைகளை தவிர்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டியது இல்லை. இப்படிப்பட்ட கவிதைகள் தான் பலரால் எழுதப்படுகின்றன. நானும் ஒன்பது வருடங்களாக பார்க்கிறேன், புரட்சி கவிதாயினிகளை காண இயலவில்லை. ஏதேனும் சொன்னால் எழுத வருவதுதானே வரும் என ஹூம் என சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.

மாறா மரபு. நான் இந்த தொடர்கதை குறித்து என்ன சொல்வது. ட்விட்டரில் கதை சொல்வது எனது வழக்கம். கதைசொல்லி என பட்டம் கொடுத்து திருமதி.மீனம்மாகயல் தந்த பரிசுதான் நான் எனது பெயர் கொண்டு இந்த வலைப்பூவில் அலங்கரித்து வைத்து இருப்பது. 'சிறந்த கதை சொல்லி' அல்ல. 'கதைசொல்லி', அவ்வளவுதான். ஒரு கதையை எந்த முகாந்திரம் இல்லாமல் தொடங்குவேன். ஒரே ஒரு வரி கதைக்கான கரு. அப்படியே அதை ஒரு நாடகத்தொடர் போல வளர்த்து செல்வேன். அப்படி ட்விட்டரில் எழுத ஆரம்பித்த கதை இது. திடீரென நிறுத்தி நாளைத் தொடரலாம் என இருந்தபோது நண்பர் அல் அமீன் கேட்டதும் மறுக்க மனம் இல்லாமல் எடுத்துக்கொள்ளுங்கள் எவரேனும் திட்டினால் நிறுத்திக்கொள்ளும் உரிமையும், கதையில் மாற்றம் செய்யும் உரிமையும் உங்களுக்கு உண்டு என்றேன். ஆனால் அவர் தைரியம் தந்த காரணமே இந்த கதை இந்த சிற்றிதழில். நன்றி சார். கதை தலைப்பு என்ன எனக் கேட்டார். உடனே மாறா மரபு என  சொன்னதுதான், தலைப்பு.  இந்த கதையை தொடர்கதையாக வெளியிடுவோம் என நண்பர் அல் அமீன் அவர்கள் சொன்னதும் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. என்னவொரு நம்பிக்கை! ஒரு வரி கூட மாற்றாமல் அப்படியே வெளியிட்டு இருக்கிறார்கள். இதைவிட எழுதுபவருக்கு என்ன சுதந்திரம் வேண்டும்? இதுவரை எந்த ஒரு தமிழ் அல்லது ஆங்கில இதழில் எனது எழுத்து வந்தது இல்லை. இப்படி ஒரு நல்ல வாய்ப்பை தந்த அவருக்கும் ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என் எழுத்துக்கான பெரும் பாக்கியம் அது.

ஆஹா பிரமாதம் குழந்தைகள் படம். அதுவும் மாஸ்டர் கானபிரபா அவர்களின் எழுத்தும், சுஷீமா அம்மாவின் எழுத்தும் என்னவொரு பொருத்தம். மனதை கொள்ளைகொண்டன எழுத்தும் குழந்தைகளும். கருப்பையா அவர்களின் வாசிப்பு அனுபவம் கேள்விபட்டது உண்டு. அவர் ஒரு அற்புத கவிஞர். அவருக்குள் ஒரு அற்புத எழுத்தாளர் இருக்கிறார். அவர் பார்வையில் சுமித்ரா எனும் நாவல் குறித்த அவரது அனுபவம் நம்மை அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் வண்ணம் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். அருமைங்க. பாராட்டுகள். அதுவும் நூல் விமர்சனம் முடிக்கும்போது எழுதப்பட்ட வரிகள் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் சிந்தனை போல உள்ளது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும். சுமித்ரா ஒரு பிரமிப்பு.

சாப்பாடு பக்கம். நளபாகம் ரவி அவர்களின் அக்கி ரொட்டி தயாரிப்பு. பெயரே வித்தியாசம். சப்பாத்தி போல ஆனால் இது சப்பாத்தி அல்ல என அழகாக சொல்லி இருக்கிறார். மைதா மாவு இல்லாதபோது இந்த அரிசி மாவு கொண்டு அக்கி ரொட்டி செய்து மனம் மகிழுங்கள். பாடல் பரவசம் மூலம் நம்மை பரவசபடுத்தி இருப்பவர் செல்வி.உமாகிருஷ். எடுத்துக்கொண்ட பாடல் வெகு சிறப்பு. மிகவும் அற்புதமாக விவரித்து இருக்கிறார். அதுவும் எனக்குப் பிடித்த ரஜினி. நான் இப்படி எல்லாம் ரசித்தது இல்லை. எனக்கு ரஜினி திரையில் இருந்தால் போதும், ரஜினியாகவே நான் உணர்வேன். இவரது எழுத்து வாசித்த பின்னர் ரஜினியை யோசித்துப் பார்த்தேன். பிரமாதம். வரிகள், இசை சிலாகித்த விஷயம் சரி.

ஒரு கவிஞர் என்ன மனோபாவத்தில் எழுதினார் என்பது கவிஞருக்கே வெளிச்சம். அவர் குறிப்பிட்டது போல பாடியதில் தவறு சாத்தியம்தான். ஆனால் இது ஒரு கவிஞரின் எழுத்து என வரும்போது நினைத்தாயோ என்பதை விட நிலைத்தாயோ ஒரு படி மேல்தான். அப்படித்தான் புரிந்து கொண்டேன் என்கிறார். அதுதான் சரி. மறப்பேனா என்ற ஒரு மன நிலையில் நீ நிலைத்துவிட்டாயா? என்ன ஒரு அக்கிரமம் என்பது போல அந்த வரியை எடுத்துக்கொள்ளலாம். அட! இத்தனை தூரம் வரிகள் சிலாகிப்பார்களா என ஆச்சரியமூட்டும் விசயங்கள்.

தேசிய விருது குறித்து எழுதி இருப்பது மகிழ்ச்சி. இறுதியாக ஆசிரியரின் தெரிந்த பிரபலங்கள் தெரியாத உண்மைகள். சந்திரபாபு, நான் ரசித்த ஒரு அற்புத கலைஞன். பல தகவல்கள் அறிய முடிந்தது.

ஆக மொத்தத்தில் இந்த சிற்றிதழ் ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவத்தை தந்தது. எல்லோர் மனதிலும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இந்த இணைய சிற்றிதழ். நமது எழுத்தை எப்போது இந்த சிற்றிதழ் ஏற்றுக்கொள்ளும் என பலரை எண்ண வைத்து இருப்பது  இந்த சிற்றிதழ் பெற்றுவிட்ட மாபெரும் பெருமை. சிறந்த வடிவமைப்பு, நல்ல கருத்துகள் தாங்கி வந்து இருக்கிறது என்றே சொல்லி மகிழ்வர். ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்தினைத் தாண்டி பாருங்கள். பிரமிக்க வைத்து இருக்கிறார் நண்பர் அல்  அமீன்.

அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

'தமிழ் வளர்த்த நமது மண்ணை 
தமிழ் கொண்டு சிறக்க 
வைப்பது நமது திண்ணை' 

நன்றி 

Thursday 2 April 2015

வாடினேன் வாடிவருந்தினேன்

'பக்தா'

'வாருங்கள் சாமி, வந்து அமருங்கள், நான் வெகுவாக திருந்திவிட்டேன், இப்போது எல்லாம் எவருடனும் நான் அதிகம் பழகுவது இல்லை. என் வேலை உண்டு நான் உண்டு என இருக்கிறேன். மனமும் நிம்மதியாக இருக்கிறது. அன்று நீங்கள் சொன்னபிறகுதான் என்னுள் இத்தனை மாற்றம்'

'பக்தா'

'ஆமாம் சாமி, நான் இப்போது எல்லாம் எல்லா நேரங்களிலும் நாலாயிர திவ்விய பிரபந்தங்கள் மட்டுமே கேட்கிறேன். அதிலும் திருமங்கையாழ்வாரின் பாடல் என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம் சாமி. அதிலும் முதற்பாடல் தொடங்குகிறதே எத்தனை பேரானந்தம்'

'பக்தா'

'மன்னா இம்மனிசப் பிறவியை நீக்கி 
தன்னாகித் தன்னினருள் செய்யும் தலைவன் 
மின்னோர் முகில்சேர் திருவேங்கடம் மேய 
என்னானை யென்னப்பன் என்னெஞ் சிலுளானே 

இந்த பாடல் எத்தகைய தன்மை கொண்டது பார்த்தீர்களா சாமி. ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டு வாழ்க்கையெல்லாம் அழிந்து போனதே என்று அழுந்தி அழுது ஓம் நமோ நாராயணா எனும் நாமம் கண்டு கொண்ட பின்னர் எத்தகைய சிந்தனை வந்து இருக்கிறது. அதைப்போலவே எனக்கும் இந்த காதல், கல்யாணம் எல்லாம் வேண்டாம் என முடிவு எடுத்து உங்களைப் போல நானும் ஒரு சாமியாராக மாறலாம் என முடிவு எடுத்துவிட்டேன் சாமி. என்னை நீங்கள் தான் உங்கள் சிஷ்யராக ஏற்றுக்கொண்டு எம்மை ஒரு 'சின்ன சாமியாக' மாற்ற வேண்டும்.

'பக்தா'

'உண்மையிலேயே சொல்கிறேன் சாமி. என் மனம் இத்தனை நாளாக அந்த பெண்ணின் மீது மையல் கொண்டு அவளை காதலித்து களித்து  இருந்தேன். நீங்கள சென்ற முறை சொன்னபோது கூட நான் உங்களை மிகவும் வெறுத்தேன். ஆனால் நீங்கள் சொன்னது எத்தனை உண்மை என புரிந்து கொண்டேன். இறைவன் புகழ் பாடியவர்களில் சிலர் எப்படி பெண்பித்து பிடித்து வாழ்வை சீரழித்தார்கள் என உங்களுக்கு நான் சொல்லியா தெரியவேண்டும், நீங்கள் சாமியாராக மாறியது பலன் உணர்ந்தேன்'

'பக்தா'

'பாருங்கள் சாமி, எப்படி எழுதி இருக்கிறார் என.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து 
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்தரும் கலவியே கருதி 
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் திரிந்து 
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம் 

ஆவியே அமுதே என நினைந்துருகி அவரவர்ப்பணைமுலை துணையா 
பாவியெனுணரா தெத்தனை பகலும் பழுதுபோயோழிந்து போயின நாள்கள் 
தூவிசேரன்னம் துணையோடும் புணரும் சூழ்புனற்குடந்தையே தொழுது என் 
நாவினாலுய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்

 இப்படி எவராவது இன்று எழுதிவிட முடியுமா? சொல்லுங்கள் சாமி. தான் எப்படி எல்லாம் பெண்கள் மீது  மோகம் பிடித்து அலைந்தேன் என எப்படி சாமி இவரால் இப்படி சொல்ல முடிந்தது. எனக்கு இந்த இருபத்தி இரண்டு வயதில் இந்த ஞானம் வர இவரே காரணம். அவளை எண்ணி எண்ணி அவள் பின்னால் நான் அலைந்து திரிந்தேன். அவளிடம் காதல் சொல்லி, அவளும் காதல் ஏற்று இருக்கும்பட்சத்தில் நீங்கள் வந்து சொன்னீர்கள். இவரது பாடல்கள் படித்த பின்னரே நல்லவேளை இந்த சம்சார உலகில்  சிக்கிவிடாமல் தப்பிக்க வழி செய்து கொண்டேன். என்னை அழைத்து செல்லுங்கள் சாமி, உங்கள் குருகுலத்தில் தங்கிவிடுகிறேன்'

'பக்தா'

'உங்களை எப்படி எல்லாம் வெறுத்து ஒதுக்கி இருக்கிறேன். ஆனாலும் நீங்கள் என்னைத் தேடி தேடி வந்து கொண்டே இருந்தீர்கள். ஒருமுறை வைகுண்டம் கூட அழைத்தீர்கள் நான் தான் மறுத்துவிட்டேன். இப்போது எங்கே வேண்டுமெனினும் அழைத்துச் செல்லுங்கள் சாமி'

'பக்தா'

'சாமி, என்னை நீங்கள் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் ஒன்றும் பேசமாட்டேன் என்கிறீர்களே, நீங்கள் பேசுங்கள் சாமி'

'பக்தா'

'சொல்லுங்கள் சாமி'

'எனக்கு அடுத்த மாதம் திருமணம், நானும் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன் பார்

நாராயணா நரனே உன்னை பின்பற்றி பின்பற்றி பலவும் கண்டேன் 
பாராயணம் செய்து கொண்ட புண்ணியம் எனக்குப் பின் எவர் உன்னை 
ஆராதனை என்போல் பண்ணக்கூடும் என்றே அவளோடு கலவி கொண்டு 
சேராதனை சென்று அடைய கண்டுகொண்டேன் அவளது நாமம்

உனக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா பக்தா. சம்சாரத்தில் இருப்பவர் சாமியாராக மாறுவதும், சாமியாராக இருப்பவர் சம்சார உலகில் செல்வது இவ்வுலக இயல்பு. மறக்காமல் வந்துவிடு'

'ஐயோ சாமி'

என்னடா ஆச்சு, தூக்கத்தில இப்படி ஐயோ சாமின்னு கத்துற, மணி பாரு எட்டு ஆகுது. எப்ப பாரு அந்த சாமியாரு கனவு கண்டுகிட்டு, புலம்பிகிட்டு. ரெண்டு தடவை சுபா போன்  பண்ணிட்டா, நீ கிளம்பிட்டியா, இல்லையானு. சீக்கிரம் கிளம்பி அவளை கூப்பிட்டு வேலைக்குப் போகற வழியைப் பாரு. அடுத்த மாசம் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நாங்க பேசி வைச்சிருக்கோம்.

இனி எப்படி அம்மாவிடம் சொல்வது, நான் சாமியாராகப் போக இருக்கும் கனவு வந்தது என்று. எப்படி அந்த திருமங்கையாழ்வார் இப்படி மாறி இருப்பார் என நினைத்து அம்மாவிடம் கேட்டேன்.

'ஏன்மா ஒருத்தர் பெண் மீது ஆசை கொண்டு பின்னர் கடவுளே வழினு எதுக்குமா போவாங்க'

'ம்ம்ம்ம் அது அந்த பொண்ணு கொடுக்கிற டார்ச்சர் தாங்காமாதான் அப்படி போவாங்க, போயி கிளம்பற வழியைப் பாரு'

அம்மா சொன்னது உண்மையாய் இருக்குமோ?!








Tuesday 17 March 2015

மிட்டாய் பொண்ணு

தினந்தோறும் தவறாமல் பள்ளிக்கு செல்லும் முன்னர் அந்த கடை முன் வந்து நின்றுவிடுவாள். கடைக்காரர் முகம் சுளிக்காமல் ஒரு மிட்டாய் கொடுப்பார். இப்படி எல்லா பிள்ளைகளுக்கும் கொடுத்தா எப்படிபா வியாபாரம் பண்ணுவ என கேட்டால் வேற யாரும் வந்து நிக்கிறத பாத்த என கடைக்காரர் சிரிப்பார். அவள் ஐந்தாம் வகுப்புக்கு முதல் நாள் சென்றபோது மாமா எனக்கு தினமும் மிட்டாய் தந்தால் படிச்சி எல்லா காசு தரேன் என சொன்னதற்காக கடைக்காரர் தருவது என எண்ணுவது தவறுதான்.

அவளுக்கு அந்த மிட்டாய் ஒரு ஆனந்தமும் உற்சாகமும் தந்து கொண்டிருந்தது. மாதக்கடைசியில் 15ரூபாய் ஆயிருச்சி மாமா என்றபோது இதைப்போய் கணக்கு வைத்து இருக்கிறாளே என கடைக்காரர் ஆச்சரியம் அடைந்தது என்னவோ உண்மை. சரிம்மா, நல்லா படி என்பதான பதில் அவளுக்கு சந்தோசம் தந்தது.

225 சதுர அடியில் ஒரே ஒரு அரை கொண்ட மணல், கல் கொண்டு கட்டப்பட்ட கூரை வீடுதான் அவள் வீடு. விறகு அடுப்பு. கயிறு கட்டில் ஒன்று. மர  அலமாரி ஒன்று. தாத்தா பாட்டி படங்களோடு கருமாரி அம்மன் படம் மாட்டிய மேற்கு சுவர். அவள் இவர்களை வணங்காமல் பள்ளி செல்வதில்லை. விவசாய கூலி தொழில்.

ஒன்பது மணி வரை படிப்பாள். வரவு செலவு என அவள் கணக்கு எழுதுவாள். பெற்ற பிள்ளையின் அறிவு கண்டு கொண்ட அலுப்பு எல்லாம் ஓடிவிடும். தட்டாங்கல்  பிடித்தமான ஒரு விளையாட்டு. அம்மாவோடு சிறிது நேரம் விளையாடுவாள். அப்பாவோடு கதை பேசுவாள். வயசுக்கு வந்துட்டா சொந்தக்காரங்களுக்கு சொல்லணுமே என்ற அம்மா சொன்ன வாக்கியம் ஏனோ அவளுக்குப் பிடிக்கவில்லை. எனக்கொண்ணும் செய்ய வேணாம்மா என்ற அவள் வார்த்தை அம்மாவுக்கு வலித்தது. சின்னபிள்ளையாய் பேசாம இரு என்ற அம்மாவின் அதட்டல் அவள் அமைதி அடிய போதுமானதாக இருந்தது.

ஆறாம் வகுப்புக்கு நடந்தே பக்கத்து ஊர் செல்ல வேண்டி இருந்தது. அதே மிட்டாய் தினம் வாங்கிச்  செல்வாள். அவள் கடன் கணக்கு 185 ரூபாய் ஆகி இருந்தது. இதுவரை அம்மா அப்பாவின் கடன் ரூ 5645.25 அக்கி இருந்தது. தனக்கென தம்பி தங்கை இல்லாத குறையை அந்த ஊரில் இருந்த சிறுவர் சிறுமிகள் தீர்த்து வைப்பதாகவே எண்ணுவாள். அவளது அறிவுதனை பள்ளி மெச்சியது. அவளுக்கு இருந்த உதவி குணம் அதிசயிக்க வேண்டிய ஒன்று. தான் கொண்டு வரும் உணவை பள்ளியின் வெளி வாசலில் அமர்ந்து இருக்கும் பாட்டிக்குத் தருவாள்.

முதல்நாள் அந்த பாட்டியை மதியம் பார்த்தபோது அவள் உள்ளத்தில் ஏதோ  ஒன்று தோணியது. சாப்பாடு வேணுமா பாட்டி என்றபோது ஆம் என தலையசைத்த பாட்டிக்கு சோறு தருவது தவறு இல்லை என ஆசிரியரின் அனுமதி பெற்றே தந்து வந்தாள். பாட்டி சாப்பிட்டதும் போய்விடுவார். இப்படியாய் அவள் செய்யும் உதவிகள் பல.

பெரிய பெண் ஆன பின்னர் மிட்டாய் பழக்கத்தை அவள் கைவிடவில்லை. அவள் நன்றாக படித்து பத்தாவதில் நிறைய மதிப்பெண்கள் பெற்றதை ஊரே கொண்டாடியது. பன்னிரண்டு வரை அதே பள்ளி. மாமா இனி எனக்கு மிட்டாய் வேண்டாம் இதோட ரூபாய் 1150 ஆயிருச்சி. பன்னிரண்டு முடிச்சப்பறம் மேற்கொண்டு படிக்க உதவி செய்வீங்களா? அவளது கேள்விக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் தரேன்மா, நல்லா படி என்று சொன்னபோது மிட்டாயை விட அதிகம் இனித்தது. பெற்றோரின் கடன் ரூ 854.35 என வந்து நின்றது.

அடுத்த நாள் அந்த கடையை கடக்கும்போது அவளை அறியாமல் அங்கு நின்றாள். காசு கணக்கு வைக்க வேணாம் என கடைக்காரர் மிட்டாய் காட்டியபோது வேணாம் என அவள் மறுக்கவில்லை. கணக்கு வைச்சிக்கிறேன் மாமா என வாங்கிக்கொண்டு நடந்தாள். ஏழு கழுதை வயசு ஆகி போச்சு இன்னும் மிட்டாய் சாப்பிடுது என அங்கிருந்தவர் சொன்னது அவளுக்குள் எவ்வித சலனத்தையும் உண்டு பண்ணவில்லை. அந்த மிட்டாய் அவளுக்கான உற்சாகமும் ஆனந்தமும்.

எத்தனயோ பேர் எதுக்குடி அந்த மிட்டாய் தினமும் வாங்கி சாப்பிடுற என கேட்கும்போதெல்லாம் பிடிச்சிருக்கு என்றே சொல்வாள். நீங்களும் வாங்கி சாப்பிடுங்க என பலரிடம் சொன்னாலும் எவரும் தினம் வாங்கி சாப்பிடும் வழக்கம் கொண்டு இருக்கவில்லை. பதினோராவது முடித்து பன்னிரண்டில் அடிஎடுத்து வைக்கும்போதுதான் அவளுக்குள் காதல் உணர்வினை ஒருவன் விதைத்து இருந்தான். அவளுக்கு அவனை மிகவும் பிடித்து இருந்தது. அவனுக்கும் அவளை பிடித்து இருந்தது.

முதன் முதலில் காக்கா கடி கடித்து ஆளுக்கு பாதி மிட்டாயை பகிர்ந்தபோது இதைப்போய் எப்படி சாப்பிடற என அவன் துப்பிவிட்டான். தனக்குப் பிடித்த மிட்டாயை துப்பிவிட்டானே என அவன் மீது கோபம் எல்லாம் அவள் கொள்ளவில்லை. எனக்குப் பிடித்து இருக்கிறது என்றே நகர்ந்துவிட்டாள். பன்னிரண்டில் காதலும் படிப்பும் என இறுதி தேர்வு வந்தது. மிகவும் அருமையாகவே எழுதினாள்.

என்னை மறந்துராதே என்ற அவனின் கெஞ்சல் அவளுக்குள் நிறைந்து இருந்தது. பெற்றோரின் கடன் எல்லாம் முடிந்து ரூ 1000 சேமிக்க தொடங்கி இருந்தார்கள். இவளது கடன் ரூ 1520ல் வந்து நின்றது. தேர்வு முடிவு கண்டு மீண்டும் ஊரே கொண்டாடியது. ஆவலுடன் படித்த பல பிள்ளைகள் குறைந்த மதிப்பெண்களே எடுத்தார்கள். அவளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு வந்தது.

பணத்திற்காக கடைக்காரரிடம் சென்று நின்றபோது எவ்வளவு வேணும் என்று கேட்க ரூ 30000 மாமா என்று அவள் சொன்னதும் சரி வந்து வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டார். வீட்டில் எதுக்கு அவ்வளவு பணம் என்று கேட்டு வைத்தார்கள். போயிட்டு வர முடியாதா, அங்கேயே தங்கிதான் படிக்கணுமா என்ற அம்மா அப்பாவின் கேள்விக்கு ரொம்ப கஷ்டம் என்று சொன்னதும் சரி என்றார்கள்.

அவளும் படித்தாள். அவளது கடன் வருடம் வருடம் அதிகரித்துக் கொண்டே போனது. கடைக்காரர் ஐந்து வருடங்களுக்கும் பணம் தந்தார். அவளது தந்தை கூலித்தொழில் விட்டுவிட்டு வேறு வேறு இடங்களுக்கு வேலைக்கு சென்று மாதம் ரூ 2000, 3000 என கொண்டு வர கடைக்காரருக்கு கொஞ்சம் கொஞ்சம் கட்டினார்கள். மருத்துவ படிப்பு முடிந்தபோது அவளது கடன் ரூ 1,15,250.40 என்று இருந்தது. இந்த ஐந்து வருடங்கள் மிட்டாய் இல்லாத வருடங்கள் என சொல்ல முடியாது. மொத்தமாக வாங்கி வைத்து ஒரே ஒரு மிட்டாய் தினம் சாப்பிட்டு வரத்தான் செய்தாள்.

பன்னிரண்டாவது படித்தபோது காதல் கொண்ட பையன் வீட்டில் இருந்து பெண் கேட்டு வந்தார்கள். ஆனால் வீடு வசதி பார்த்து வேண்டாம் என சென்று விட்டார்கள். அந்த பையன் எவ்வளவோ சொல்லியும் அவனின் பெற்றோர் கேட்கவில்லை. நான் வேலைக்கு சென்று சம்பாதிப்பேன் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவர்கள் கேட்பதாக இல்லை. அவன் அவனின் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்வேன் என சொன்னதும் வேறு வழியின்றி சரி என்றார்கள்.

மாமா, கல்யாண செலவுக்கு பணம் வேண்டும் என்று நிற்க எவ்வளவு வேணும் என்றார். ஒரு ஐந்து லட்சம் வேணும் மாமா என்றதும் சரி வந்து வாங்கிக் கொள் என்றார். கடைக்காரர் தான் இவளுக்கு பணம்தருவது தனது மனைவிக்கு மட்டும் தெரியும்படி வைத்துக்கொண்டார். அவளது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணம் முடித்த கையேடு வேலைக்கும் சென்றாள். கடைக்காரர் அவளது திருமணத்திற்கு நிறைய மிட்டாய்கள் கொண்டு வந்து பரிசாக தந்தார். அவளுக்கோ அத்தனை சந்தோசம்.

அவனிடம் தனது மிட்டாய் கதை எல்லாம் சொன்னாள். அவன் அவனின் பெற்றோர்களிடம் சொல்லி அத்தனை பணத்தையும் கடைக்காரரிடம் கொண்டு வந்து கட்டினான். மாமா, இவர் எதுவும் கடன் இருக்கக்கூடாதுன்னு சொல்லிட்டார், ஆனா அந்த மிட்டாய் கணக்கு மட்டும் நான் தரேன் என்றாள். என்னம்மா, இன்னுமா அதை கணக்கு வைச்சிருக்க என்றார். உனக்கு நான் எவ்வளவு வேணுமினாலும் செய்யலாம்மா, நீ என்னோட குல தெய்வம் என்ற கடைக்காரர் சொன்னது அவளுக்கு புரியவில்லை. என்ன மாமா குல தெய்வம்னு சொல்றீங்க என்றாள். அது அப்படித்தாம்மா, மறக்காம உனக்குப் பிறக்கப்போற குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுமா என்றார். சரி மாமா என்றாள்.

அவளது பெற்றோரை தங்களோடு வந்து இருக்கச் சொன்னான் அவன். அவர்களோ அந்த கூரை வீடு, வேலை என விட்டுவர மறுத்தார்கள். காலம் நகன்றது. மிட்டாயை நிறுத்தியபாடில்லை. ஒரு பையன், ஒரு பொண்ணு என அவள் தாயானாள். குழந்தைகளுக்கு பத்து வயது மேல் ஆனது.

ஒருமுறை அவனும் அவளும் வீதி வழியே சென்றபோது அங்கே ஒரு பெண்ணிடம் ஒருவன் வம்பு செய்து கொண்டு இருந்தான். அதை கண்டு அவள் அங்க பாருங்க ஒருத்தன் வம்பு பண்றான். நீ பேசமா வா, எல்லோரும் பேசாமத்தான போறாங்க என்றபோதும் என்னங்க அந்த பொண்ணை  அடிக்கிறாங்க, வாங்க என்னன்னு பார்ப்போம். சொன்னா கேளு வேணாம். என்னவாச்சும் பண்ணிட்டு போறாங்க. அவளுக்கு மனம் கேட்பதாக இல்லை.

என்னங்க இப்படி பொறுப்பு இல்லாம பேசறீங்க என அவனை இழுத்துக்கொண்டு அங்கே சென்றாள். அவர்களுக்கான வாக்குவாதம்தனை நிறுத்த சொன்னாள். அங்கிருந்தவனோ அவளை தகாத வார்த்தையால் திட்டினான். ஒரு பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்கிறியே அறிவில்லை என அவள் திட்ட அங்கிருந்தவன் கோபம் ஆனான். தன்னிடம் இருந்த ஆயுதம் கொண்டு அவளை தாக்கினான். அங்கிருந்தவனை அவளது கணவன் தடுக்க போக அவளது கணவனுக்கும் அடி விழுந்தது. இருவருக்கும் சரமாரியாக அடி விழுந்தது.

அதற்குள் அங்கிருந்தவர்கள் கூடிட அங்கிருந்தவன் ஓடினான். அந்த பெண்ணிடம் கேட்க அவன் தன காதலன் எனவும் தனக்கு இடைஞ்சல் தந்ததாக கூறினாள். இவர்கள் வராவிட்டால் அவளது காதலன் அவளைக் கொன்று இருக்கக்கூடும் என்று சொன்னாள்.

அடிபட்ட காயத்திற்காக அவள் அவளது கணவன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். எவருக்கோ உதவி செய்யப் போய்  இப்படி ஆகிவிட்டதே என அவளது கணவன் நான் சொல்ல சொல்ல கேட்காம பாரு என்றான். ஒவ்வொருத்தரும் இப்படி ஒதுங்கி போறதால பெண்ணின் மீதான தாக்குதல் அதிகம் ஆகுது என்றாள். காயத்திற்கு மருந்து எல்லாம் போட்டுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். அவளுக்கு இப்படி ஆனதை ஊரில் கேள்விப்பட்டு அவளது பெற்றோர் கடைக்காரர் எல்லாம் வந்தார்கள்.

இந்தம்மா மிட்டாய் என்று தர மாமா மறக்காம கொண்டு வந்துட்டீங்க என்று சொல்ல அங்கு எல்லோரும் சிரித்தார்கள். மம்மி யூ ஆர் த மிட்டாய் பொண்ணு என அவளது மகள் சொல்லி சொல்லி சிரித்தாள். (முற்றும்)

------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த கதையை இந்த மிட்டாய் பொண்ணு இறந்து போவதாக சோகமாக முடிக்க நினைத்தேன். அது உண்மை நிகழ்வை எழுதுவது போல ஆகிவிடும் என்பதால் தவிர்த்தேன்.  இந்த கதையில் சொல்லப்பட்ட எல்லாமே கற்பனைதான். ஆனால் கடைசியில் நடந்த விஷயம் சற்று உண்மையானது. எவரோ வாக்குவதம்தனில் ஈடுபட தனது கணவனுடன் சென்றபோது எனக்கென செல்லாமல் அவர்களுக்குள் சண்டையை விலக்கி விட சென்று அந்த கொடூரனால் தாக்கப்பட்டு உயிர் இழந்த ஒரு பெண்ணின் நிகழ்வு தான் இந்த கதையை எழுத வைத்தது. அந்த பெண்ணின் கணவனுக்கும் நிறைய காயங்கள்.

வேடிக்கைப் பார்ப்பது நல்லது என இந்த சமூகம் அறிவுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தாலும் இது போன்ற வீரம் நிறைந்த பெண்மணிகள் இந்த உலகிற்கு வேண்டும். அப்போதுதான் கயவர்கள் கட்டுக்குள் இருப்பார்கள். அந்த பெண்ணின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

Saturday 14 March 2015

நமது திண்ணை - சிற்றிதழ் மின்னிதழ் ஒரு பார்வை

மின்னிதழ் நமது திண்ணை இங்கே

எனக்கு தமிழ் தாங்கி வரும் இதழ்களில் ஆர்வம் எப்போதோ முற்றிலும் குறைந்து போனது. குமுதம், ஆனந்தவிகடன் எல்லாம் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. எங்கேனும் தமிழ் இதழ் வாசிக்க கிடைத்தால் உள்ளே சினிமா சினிமா மட்டுமே. அதை குறை கூறவும் முடியாது. அறிவை வளர்த்துக்கொள்ள இது போன்ற இதழ்கள் எல்லாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் தவறான விண்ணப்பம் ஆகும்.

திரு. அல் அமீன் அவர்கள் இந்த நமது திண்ணை - சிற்றிதழ் மின்னிதழை எனது பார்வைக்கு கொண்டு வந்தார். அவருக்கு நன்றி. இது ஒரு மாத மின்னிதழ். சிற்றிதழ் என்பதால் மிக மிக குறைவான பக்கங்கள் எனினும் நல்ல விசயங்கள் உள்ளடக்கி இருந்தது. 17 பக்கங்கள் கொண்ட முதல் இதழ் பிப்ரவரியில் வெளிவந்து இருக்கிறது. 21 பக்கங்கள் கொண்ட அடுத்த இதழ் மார்ச் மாதம் வெளிவந்து இருக்கிறது. முதல் இதழில் மாதம் குறிப்பிடவில்லை. 

முதலில் என்ன இருக்கிறது எப்படி இருந்தது என பார்த்துவிடும் முன்னர் இந்த மின்னிதழின் ஆசிரியர் திரு. ஆந்தைகண்ணன் முயற்சியை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அவரது உரையில் தமிழை வளர்க்கும் ஆர்வம், தமிழ் எழுதுபவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கம் என குறிப்பிட்டு இருப்பது பாராட்டுக்குரியது. இவருக்கு உறுதுணையாக இந்த மின்னிதழை சிறப்பாக வடிவைமக்க உதவிய நண்பர் திரு அல் அமீன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். 

முதல் இதழின் அட்டை பக்கத்தில் பல முகங்கள் தென்படுகின்றன. அதில் எனக்குத் தெரிந்த முகங்கள் பலர் இருந்தார்கள். இதழின் உள்ளே பல படங்கள் இருக்கின்றன. அவை ஏனோ தெளிவின்றி காணப்படுகிறது. இரண்டாவது இதழில் உள்ளிருக்கும் படங்களில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது என சொல்லலாம். இரண்டாவது இதழின் அட்டைப்படத்தில் தமிழர் விளையாட்டு குறித்து காணப்படுகிறது. பல்லாங்குழி விளையாட்டில் நாங்கள் புளியம்பழ முத்துக்கள் வைத்து தான் விளையாடி இருக்கிறோம். தாயம் விளையாடுவதற்கு கூட ஒரு பக்கம் உரசப்பட்ட முத்துகள் உபயோகித்து இருக்கிறோம். சோசியர் உபயோகிக்கும் முத்துகள் பல்லாங்குழியில் இருப்பது ஆச்சரியம். அட்டைப்பட வடிவமைப்பை சற்று மெருகேற்றினால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அதைப்போல 'நமது திண்ணை' என்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்டு எல்லா இதழிலும் ஒரே மாதிரியாக வந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். திண்ணை என்பதற்கு ஆசிரியர் தந்த விளக்கம் சரிதான். திண்ணை ஒரு ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஓர் இடம். எங்கள் கிராம வீட்டில் திண்ணை இருந்தது. இப்போது அது மூடப்பட்டு எவரும் அமர இயலா வண்ணம் இருப்பது வருத்தம் தரக்கூடியது.

முதலில் சுஷீமா அம்மாவின் என் பார்வையில் திரௌபதி. இவரது எழுத்து மிகவும் எளிமையாக அனைவரையும் கவரும் வண்ணமாக இருக்கும். ஒரு பெண்ணின் பெருமையை சொல்லும் எழுத்து என சொல்லலாம். சீதை, அகலிகை, மன்டோதரி, தாரை பற்றி குறிப்பிட்டு திரௌபதி பெருமை சிறப்புதான் என எண்ண வைக்கும் வகையில் சிறப்பாக எழுதி இருக்கிறார். பெண் அடிமை என்பதெல்லாம் நாம் ஏற்படுத்திக் கொண்டது என அன்றே ஒரு பெண்ணின் திறமையை போற்றி இருக்கிறார்கள், வெற்றி பெற்று இருக்கிறார் என தெளிவாக சொல்லி இருக்கிறார். அடுத்த இதழில் எடுத்துக்கொண்ட என் பார்வையில் அனுமன். மிகவும் அருமையாக இருந்தது. பொக்கிஷம் போல போற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஸ்லோகம் மற்றும் எழுத்து. எங்கிருந்தோ வந்து குரங்கு ராமர் கதை கேட்கும் விஷயம்  நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதுவும் வணங்கியது போல நிற்கும் அனுமன். பிரமாதம். உங்கள் எழுத்துகளில் எப்போதும் அன்பு இருக்கும். திருக்குறள், கம்ப ராமாயணம் என அருமை. ஆன்மிகம் குறித்த எனது குறுக்குசால் எண்ணங்களை கைவிட வேண்டும் என எண்ண  வைத்துவிட்ட உங்கள் எழுத்துக்கு பாராட்டுகள்.

அடுத்ததாக 'நளபாகம்' நண்பர் ரவி. இவரது சிந்தனை கண்டு வியப்பது உண்டு. அதுவும் மகளே என அனு, நிவேதி, கோதை, ரேணுகா, நிலாமகள் போன்ற சக பெண் ட்விட்டர்களை இவர்கள் அழைக்கும்போது நிறைய ஆச்சரியம் அடைவது உண்டு. எத்தனை உரிமையாக பழகும் எண்ணம். அதுவும் இவரது நளபாகம் அனைவரிடத்தில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. சமையல் செய்ய இவரது இணையதளம் எனக்கும் உதவியது என்று சொல்வதில் மகிழ்ச்சிதான். முதல் இதழில் மைசூர் பாகு. அடுத்த இதழில் கைமா இட்லி. மிகத் தெளிவாக எழுதி இருக்கிறார். படித்ததும் சமைக்க வேண்டும் என எண்ணம் வரும்படி இருக்கிறது. பாராட்டுகள்.

செல்வி. உமாகிரிஷ் அவர்களை புரட்சி பெண்மணி என்றே சொல்லலாம். சமூக ஆர்வலர். இசைப்பிரியை. இவர் சென்ற வருடம் இளையராஜா இசைக்குழு நிகழ்வுக்கு சென்று வந்து எழுதிய கட்டுரையில் நம்மையும் அங்கே அழைத்து சென்றுவிட்டார். அதுபோல இவர் முதல் இதழில் குறிப்பிட்ட பாடல் பரவசம் அபாரம். இசை, பாடும் விதம், பாடல் வரிகள், பாடியவர் நளினம் என அற்புதமான விவரிப்பு. எனக்கு மிகவும் பிடித்த பாடல் கூட. இரண்டாவது இதழில் பாடல் கேள்விபட்டது இல்லை. அதற்காக இசை சண்டை எல்லாம் செய்து விடாதீர்கள். ஆனால்  அந்த பாடல் மூலம் எழுந்த எண்ணங்கள் என அவர் சொன்ன விசயங்கள் ஒவ்வொன்றும் அருமை. பனை ஓலை கொண்டு பதநீர் குடித்தது உண்டு. குருத்தோலை என்றெல்லாம் நான் கேள்விபட்டது கிடையாது. பல விசயங்கள் அறிய முடிந்தது. பாராட்டுகள்.

கவிதை என இரண்டு இதழிலும் எடுத்தவுடன் தொடங்குகிறது. முதல் இதழில் ரிஸ்வான் அவர்களின் புதிய வரவு கவிதை. குழந்தைகளின் வலி சொல்லும் கவிதை. தாயின் உருவம் வரைதல், பாலூட்டி செல்தல் என பல வரிகளில் நம்மை மனம் வலிக்க செய்து புதிய வரவுதனை குப்பை தொட்டியில் எதிர்பார்க்கிறேன் என முடிப்பது சமூக அவலம் மாறவில்லை என்பதை குறிப்பிடுகிறது. அடுத்த இதழில் மிஸ்டர்.ஒயிட் என்பவரின் நண்பேன்டா கவிதை பாடல் வரிகளை போல வாசித்து செல்லும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒவ்வொருவரும் அந்த வரிகள் சொல்லும் நிகழ்வில் இருந்து இருப்பார்கள். இருவருக்கும் பாராட்டுகள்.

அடுத்து நகைச்சுவை, சிரிங்க நல்லா சிரிங்க. எனக்கு நகைச்சுவை என்று சொன்னதும் திருமதி ஜனனி என நினைக்கிறேன். அவர்கள் சொன்ன 'மொக்கை ஜோக்குக்கும் விழுந்து விழுந்து சிரிப்பான்' என்பதுதான் எனக்கு நினைவுக்கு வரும். திரு முருகன் மற்றும் திரு செந்தில்குமார் அவர்களின் நகைச்சுவை அருமை. திரு செந்தில்குமார் அவர்களின் நகைச்சுவை தனித்துவம் வாய்ந்தது என்றே சொல்லலாம். எவரேனும் ஒரு நகைச்சுவையை கொண்டு வந்து யாரோடது என கேட்டால் திரு. செந்தில்குமார் என சொல்லிவிடலாம். அதற்காக என்னை பரிசோதிக்க வந்துவிடாதீர்கள். திரு முருகன் வித்தியாசமான சிந்தனையாளர்.

திக் திக் திக் எனும் கதை ஒரு கனவுதான் என எண்ணும்படியாக  மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார் சம்பத். சுதா ஆனந்த் அவர்களின் ஹைக்கூ அருமை. விடுகதை என இரண்டு இதழ்களிலும் உள்ளது. மிகவும் நல்ல முயற்சி. திரு விவேக் மற்றும் திரு சுரேஷ் அவர்களின் ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் என இரண்டு இதழ்களில் வெளிவந்து இருக்கும் விசயங்கள் அந்த செல்பேசி பயன்பாட்டாளருக்கு நன்மை தரும். ஜப்பான் திரு ரகு அவர்களின் புகைப்படங்கள் அழகு சேர்க்கின்றன. எப்போதும் போல திரு பரணி அவர்களின் ஓவியங்கள் மிகவும் அருமை. மின்னிதழில் சற்று தெளிவாக வந்தால் நல்லது. இரண்டாவது இதழில் திரு ராஜா முகம்மது அவர்களின் புகைப்படங்கள் மற்றும் திரு தினகர் அவர்களின் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. இப்போது இந்த புகைப்படங்கள் ஓவியங்கள் என்ன சொல்ல வருகின்றன எனும் ஆராய்ச்சியை இப்போதைக்கு தள்ளி வைப்போம். பொதுவாக புகைப்படங்கள், ஓவியங்கள் தங்களுக்குள் ஒரு பெரும் கதையை மறைத்து வைத்துக் கொண்டு இருப்பதாக சொல்வார்கள். எதையோ எடுக்கிறோம், எதையோ வரைகிறோம் என்பதல்ல. அதற்காக பின்னணி குறித்து ஒரு கதையே எழுதலாம். வாழ்த்துகள்.

மருத்துவர் நேரம் என டாக்டர் வந்தனா அவர்களின் சர்க்கரை நோய் பற்றிய விபரங்கள் மிகவும் அருமை. பயனுள்ள விசயங்கள் இருந்தது. அடுத்த இதழில் பல் மருத்துவர் டாக்டர் ரியாஸ் அகமது அவர்களின் பற்சொத்தை மிகவும் சிறப்பும் பயன்படும் வண்ணம் இருந்தது. இந்த சர்க்கரை வியாதி மற்றும் பல்லுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த இரண்டு விசயங்களை அடுத்து அடுத்து இதழில் கொண்டு வந்தது வெகு சிறப்பு. வாழ்த்துகள்.

முதல் இதழில் திரு கவுண்டமணி, இரண்டாவது இதழில் திரு எம் ஆர் ராதா குறித்து பல விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இதை ஆசிரியர் அவர்களே எழுதி இருக்கிறார்கள். அப்படியே தமிழ் புலவர்கள், தமிழ் அறிவியல் அறிஞர்கள் என குறிப்புகள் இருப்பது கூட நன்றாக இருக்கும். நூல் விமர்சனம் இரண்டவாது இதழில் உள்ளது, வெகு சிறப்பாக பிறர் நூலை வாங்கும் வண்ணம் எழுதி இருப்பது சிறப்பு. எழுத்தாளர் முத்தலிப் அவர்களுக்கு பாராட்டுகள். திரு சாத்தூரான் அவர்களின் பாட்டி கதை இவ்வுலகில் அன்பு எப்படி இருக்கிறது, எப்படி மனிதர் கஷ்டம் கொள்கிறார்கள் என அறிய முடிந்த அழகிய பதிவு. நிறைய அனுபவங்கள் கொண்டவரும் இயற்கையை நேசிப்பவரும் ஆவார். அருமை.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வித்தியாசம். என்ன காரணத்திற்கு சொல்லப்பட்டு இருக்கும் அதன் பின்னணி என்ன என அலசிப்பார்க்கும் பழமொழிகள் குறித்த எண்ணங்கள் அருமை. திரு பாலகணேஷ் அவர்களின் புதிர் சிறப்பு. மேலும் ஆங்காங்கே டவிட்கள் மின்னுகின்றன. முன்னரே படித்து இருந்தாலும் இதழில் படிக்கும்போது அதற்குரிய சிறப்பே தனிதான்.

ஒரே வரியில் விமர்சனம் - நமது திண்ணையில் வெட்டிக்கதைகள் பேசப்படுவதில்லை.

ஆசிரியர் திரு. ஆந்தைகண்ணன், வடிவமைப்பாளர் திரு அல் அமீன் அவர்களின் முயற்சி தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

நன்றி. 


Tuesday 3 March 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - 37

''நில்லுடா''

''எமது வேகத்துக்கு உம்மால் ஈடுகொடுக்க இயலாது அடியாரே''

கதிரேசன் ஒரு கல்லை எடுத்து மதுசூதனன் மீது எறிந்தான். அந்த கல் மதுசூதனின் முதுகில் பட்டது. ஆ எனும் அலறல் ஒலி  கேட்கும் என நினைத்த கதிரேசன் சற்றே ஏமாந்தான். திரும்பிய மதுசூதனன் கதிரேசனை நோக்கியபடி வந்தான்.

''இந்தா கல், எமது தலையில் ஓங்கி அடித்துவிடும், எதற்கு என் மீது உமக்கு இத்தனை வன்மம், நீவிர்  எமது அடியார். இவ்வுலகில் எல்லோரும் எம் அடியார்கள்''

''மதுசூதனா, உனது புத்தி பேதலித்து போய்விட்டதா''

''யாம் திரிகோடன், எம்மை இனி திரிகோடன்  என்றே அழைக்கவும்''

''ஒரு பெண்ணை காதலிச்சி, ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி இப்படி அவங்க வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியேடா, நீயெல்லாம் படிச்சி பட்டம் வாங்கி என்னடா பிரயோசனம். நீ உன்னை ஒரு சாமியார் மாதிரி நினைச்சிகிட்டு பண்ற அலப்பறை  உனக்கே நல்லா இருக்காடா, உன்னை எப்போ சந்திச்சேனோ எதுக்கு சந்திச்சேனோ. இனியாவது திருந்துடா, எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு ருக்மணிக்கு வாழ்க்கைக் கொடுடா. நானும் இப்படி சிவன் சிவன் இருக்க மாட்டேன்டா. சொன்னா கேளுடா''

''அடியாரே, பேசி முடித்தாகிவிட்டதா? யாம் மாபெரும் மாற்றம் எம்மில் கொண்டோம். இனி எமது வாழ்வில் கல்யாணம், காதல் என்பதற்கு இடம் கிடையாது. எம்மை சாமியார் என்றா அழைத்தீர். யாம் அடியார்க்கெல்லாம் அடியார். எமது அடியார்களாகிய உமக்கு யாமே இனி ஒரு அடியார்''

''மதுசூதனா, என்னடா இப்படி மாத்தி மாத்திப் பேசற''

''எம்மை திரிகோடன்  என அழைத்துப் பழகவும், இன்றுடன் எமது சிவன் சொற்பொழிவு முடித்துவிட்டு நாளை யாம் பௌத்தம் பேச இருக்கிறோம்''

''மதுசூதனா, மதி கெட்டவனே. எக்கேடு கேட்டுப் போ'' என சொல்லிவிட்டு கதிரேசன் வீடு திரும்பினான். மதுசூதனனின் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ருக்மிணி கடும் கோபம் கொண்டவளாகத் தென்பட்டாள்.

''இனி அவனைத் திருத்த முடியாது. திரிகோடனாம்''

அன்று இரவு சொற்பொழிவு ஆரம்பித்தது.

''தாங்க இயலாத சோகம் நம்மைத் தாக்கும்போது நம்மால் பேசவும் இயலாது, எழுதவும் இயலாது. அனால் யாம் அப்படி அல்லன். எத்தனை சோகம் எனினும் எமக்கு இறைவனின் புகழ் பாடுவது மட்டுமே. நாளை முதல் யாம் பௌத்தம் தழுவ இருக்கிறோம். எமது பெயர் திரிகோடன். இங்கே ஒரு இடம் அமைத்து அங்கே பௌத்தம் பரப்ப ஆரம்பிப்போம். எம்மை நீவீர் தொடர்வீரா''

மதுசூதனின் பேச்சு பலரை ஆச்சரியம் உண்டு பண்ணியது. கூட்டத்தில் இருந்த ஒருவர் 'இவனை இன்னைக்குத் தீர்த்துரனும்ல, இல்லைன்னா நிறைய குழப்பத்தை உண்டு பண்ணிருவான்ல' என்றார்.

''எம்மை பின் தொடர்வீரா, மாட்டீரா?''

''நாங்கள் சிவன் பக்தர்கள், எங்களால் உங்களை பின் தொடர முடியாது''

''உங்களுக்கு அடியாராக நான் இருக்கிறேன். அடியார்க்கெல்லாம் அடியாராக நான் வருகிறேன். எம்மை பின் தொடருங்கள்''

கூட்டத்தில் இருந்தவர்கள் எழுந்தார்கள். பெரும் சலசலப்பு உண்டானது. இதுதான் சமயம் என இருவர் மதுசூதனனை தரதரவென இழுத்து சென்றார்கள். கூட்டத்தில் இங்கும் அங்கும் ஓடினார்கள்.

''அடியார்க்கெல்லாம் அடியாரா நீ, உன்னை இரும்லே, என்ன பண்ணுதேன்''

கத்தி எடுத்து மதுசூதனின் கழுத்தில் வைத்தான் அவன்.

''யாம் மீண்டும் திரிகோடனாக  பிறவி எடுப்போம்''

''இன்னுமால பேசற''

மதுசூதனனை கொலை செய்துவிட்டு அந்த இருவரும் ஓடிப்போனார்கள். மதுசூதனின் மரணம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பௌத்தம் பின்பற்ற சொன்னதற்காக கொலை செய்யப்பட்டான் என்றே பேசினார்கள்.

வாழ்வில் தடம் மாறிப் போனவர்கள் எந்த ஒரு தடயமும் இல்லாமல் இறந்து போகிறார்கள்.

(முற்றும்) 

Thursday 29 January 2015

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - யூதர் உலகம்

முந்தைய பகுதி   சென்ற பதிவுக்கு சில எதிர்ப்புகள்  இருந்தது என்பதால் இந்த தொடரை எழுதுவதை தள்ளிவைக்கவில்லை. அவ்வப்போது எழுதுவதுதான் வாடிக்கை. என்றோ வாழ்ந்து அழிந்தவர்களின் வரலாற்றை அருகில் இருந்து பார்த்தது போல  எழுதப்படும் விசயங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க இயலாது.

எகிப்து, பாபிலோனிய பயணத்தின் போது  இந்த இஸ்ரேல் குறித்து என்னவென பார்க்க ஆவல் பிறந்தது. இன்றைய இஸ்ரேல் குறித்து எழுதப்படும் பார்வை அல்ல இது. மேலும் பைபிளில் குறிப்பிடப்படுவது எல்லாம் அத்தனையும் பொய் புரட்டு என ஒதுக்கி விட இயலாது, அதே வேளையில் எல்லாம் உண்மை எனவும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு சுவாரஸ்ய வாசிப்புதனை முன்னர் எழுதப்பட்டு இருப்பவை தந்து போகின்றன. அதை எடுத்துக்கொண்டு பிரம்மனின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் என இப்போதும் கட்டி அழ வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் ஒன்றின் மீது நம்பிக்கை, தைரியம் இல்லாதவன் எதிரியை பலவீனப்படுத்தும் முறை என ஒன்று உண்டு.

இந்த இஸ்ரேல் முன்னர் எகிப்தியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இறைத்தூதர்கள் என அறியப்பட்டவர்களின் கட்டுபாட்டில் இருந்தது என பைபிள் குறிப்பிடுகிறது. கிட்டத்தட்ட 3035 வருடங்களுக்கு முன்னர் சால் என்பவன் ஒரு பேரரசனாக இருந்தான். இவனைப் பற்றி குறிப்பிடும்போது இவன் ஸ்திரதன்மை  அற்றவனாக இருந்து இருக்கிறான். மன உறுதி அற்றவர்கள் வாழ்க்கையில் சீரழிந்து போவார்கள் என்பதற்கு இவன் ஒரு உதாரணம். அதற்குப் பின்னர் வந்த டேவிட் என்பவன் இந்த இஸ்ரேலிய பேரரசுதனை விரிவாக்கம் செய்தான். இவனது காலத்தில் ஜெருசலம் புனித தலமாக  விளங்கி வந்தது. இவனது மகன் சாலமன் ஒரு மாநிலத்தை பன்னிரண்டு மாவட்டங்களாக பிரித்தான். இவனது காலத்தில் வியாபாரம் பெருகியது. ஜெருசலத்தில் பெரிய கோவில் ஒன்றை கட்டினான் சாலமன்.

பழங்குடியினரை இந்த சாலமன் மிகவும் மோசமாக நடத்தினான் எனும் குற்றச்சாட்டு உண்டு. இந்த காலகட்டத்தில் இஸ்ரேலில் வன்முறைகள் வெறியாட்டம் போட்டன. எப்போது ஒரு மக்களின் உரிமைகளை மறுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும். அது அந்த காலம் என்றல்ல, எந்த காலமும் அப்படித்தான். அஷ்ஷிரியர்கள் இந்த இஸ்ரேலை குறி வைத்து இருந்தார்கள். வட  பகுதியில் ஏற்பட்ட அதிருப்தியை பயன்படுத்தி அஷ்ஷ்ரியர்கள் இஸ்ரேலை தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். இஸ்ரேலின் தென் பகுதி மட்டுமே சாலமன் மற்றும் அவனது மகனின் வசம் இருந்தது. சாலமன் வட  பகுதி மக்களை ஒழுங்காக நடத்தி இருந்தால் இந்த பிரச்சினை வந்து இருக்காது.

இந்த அஷ்ஷிரியர்களை எதிர்த்து வந்தவன் ஹெசக்கியா. பெர்சியன் அரசன் பாபிலோனியாவை கைப்பற்றியதும் யூதர்களை அங்கு அனுமதித்தான். அவர்களுக்கு முழு சுதந்திரம் தரப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்கள் எல்லாம் ஜெருசலத்தில் கட்டப்பட்டன. இஸ்ரேலியர்கள் இதுதான் சமயம் என மத வழிபாடுகளில் மிகவும் ஈடுபாடு கொண்டார்கள். பெர்சியர்களின் தலைமையில் யூதர்கள் பெரும் சமூகமாக உருவானார்கள். இந்த மத சுதந்திரம் எல்லாம் ஒரு முன்னூறு ஆண்டுகள் செழிப்பாக இருந்தது.

கோவில்கள் கட்டுவது என ஒரு கூட்டமும், கோவில்களை இடிப்பது என ஒரு கூட்டமும் அன்றே இருந்து இருக்கின்றன. மேலும் கோவில்கள் மூலம் சேர்க்கப்படும் பொருளை கைப்பற்றி அரசையே மாற்றியவர்கள் இருந்தார்கள். இந்த காலகட்டத்தில் ரோமானியர்கள் இஸ்ரேலில் காலடி எடுத்து வைத்தார்கள். ஒற்றுமையின்மையை பயன்படுத்தி ரோமானியர்கள் ஜெருசலத்தினை கைப்பற்றினார்கள், அதோடு கோவில்களை இடித்து தள்ளினார்கள்.

யூதர்கள் இஸ்ரேலில் இருந்து உலகம் எல்லாம் பரவிய காலம் அது. யூதர்கள் ஜெருசலத்தில் தங்கக்கூடாது என கிட்டத்தட்ட 2125 வருடங்கள் முன்னர் ஒரு அரசர் கொண்டு வந்த சட்டம் யூதர் சமூகத்தை அலங்கோலம் செய்தது. இப்போது நமது இலங்கையை எடுத்துக் கொள்வோம். இலங்கையில் ஒரு கொடுங்கோலன் ஆட்சி செய்தான், தமிழர்களை இலங்கையில் இருக்கவே விடாமல் உலகம் எல்லாம் விரட்டிட செய்தான் என 2025 வருடங்கள் கழித்து படிப்பவனுக்கு அது எல்லாம் உண்மை அல்ல என நினைப்பான் எனில் நாம் கண்டது எல்லாம் பொய்யா?

ஒற்றுமையின்மை, பலமின்மை வாழ்க்கையில் தனி மனிதரை மட்டுமல்ல, ஒரு சமூகத்தையே சீரழித்து விடும்.

(தொடரும்)


Monday 19 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை நிறைவு 4

நிறைய நாட்கள் கழித்து முதன் முறையாக ஒரு தமிழ் இதழை வாசித்து முடித்து இருக்கிறேன். முத்தமிழ்மன்றத்தில் நிறைய பேர் நிறைய எழுதுவார்கள். 2006 ம் வருடத்தில் இருந்து அங்கே உறுப்பினராக இருந்தேன். அப்போது திரு. ரத்தினகிரி, திருமதி பத்மஜா போன்றவர்களின் எழுத்துகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவர்கள் தந்த கருத்துகளால் எனது நுனிப்புல் முதல் பாகம் நாவல் வளர்ந்தது என்றால் மிகையாகாது, அந்த நன்றியை அவர்களுக்கு முதல் நாவலில் தெரிவித்தேன். அதற்குப் பின்னர் அவர்களது ஊக்கம் இருந்தாலும் எழுதுவது எனது எண்ணமாக இருந்ததால் இரண்டாம் பாகம் அவர்களின் அதிக பங்களிப்பு இன்றி எழுதி முடித்தேன். மூன்றாம் பாகத்திற்கு எவரேனும் என்னோடு பயணிக்க கூடும். குழு மனப்பான்மை, சச்சரவுகள் என பல இருந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று. அப்படித்தான் எழுதினேன். பின்னர் வலைப்பூ ஆரம்பித்தபிறகு முத்தமிழ்மன்றம் மட்டுமல்ல எனது வலைப்பூவில் எழுதுவது கூட குறைந்து போனது. இதற்கு நான் 2010 ல் மீண்டும் ஆலயம் ஒன்றில் தொண்டுபுரியும் அறங்காவலராக பணிபுரிய சென்றது என்று சொல்லலாம். அவ்வபோது எழுதி வந்து இருக்கிறேன், முற்றிலும் நிறுத்தியது இல்லை. அப்படி இந்த ட்விட்டரில் கடந்த ஒரு வருடம் முன்னர் எழுத ஆரம்பித்து தமிழ் எழுத்துகள் வாசித்து வந்தது மகிழ்வாக இருந்தது.

அப்படி ட்விட்டரில் எழுத்து மூலம் பழகியதால்  திரு. என். சொக்கன், திரு கண்ணபிரான் ரவிசங்கர், 'திருப்பூர் இளவரசி' சு.ஐஸ்வர்யா இவர்களின் பழக்கம் அவ்வளவாக இல்லாதபோதும் இவர்களிடம் நுனிப்புல் பாகம் 2 க்கு அவர்களது எண்ணங்களை வாங்கி புத்தகம் வெளியிட முடிந்தது. அதுவும் திரு என். சொக்கன் அவர்கள் என் நாவலை திருத்தித் தந்தது இங்கு நினைவுகூறத்  தக்கது. இப்படி பலர் எழுதிக்கொண்டு இருக்கும் ட்விட்டரில் இருந்து ஒரு மின்னிதழ் வெளியே வந்து இருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். ஆசிரியர் ஒரு எழுத்தாளர் என்றாலும் முதல் பார்வையில் சொன்னது போல ரைட்டர் என செல்லமாக அழைக்கப்பட்டாலும், ட்விட்டர் உலகில் இருந்து பலரை இந்த தமிழ் மின்னிதழில் அறிமுகம் செய்து இருக்கிறார். அது எழுத்துக்கு கொடுக்கப்பட்ட கௌரவம்.

பொதுவாக நான் எதையும் விமர்சனம் பண்ணும் தகுதி உள்ளவன் என என்னை எண்ணுவதில்லை. அதனால் எனது சினிமா விமர்சனம் கூட மேலோட்டமாகவே இருக்கும். விமர்சனம் என்பது ஒன்றை பண்படுத்த உதவ வேண்டும், பழுதுபடுத்த அல்ல. மென்மேலும் முயற்சிக்க வைக்க வேண்டும், முடங்க வைக்கக்கூடாது. இங்கே இந்த தமிழ் மின்னிதழில் எனது பார்வையை முன் வைத்து இருக்கிறேன், இது எனக்கே கூட ஒரு புது அனுபவமாக இருந்தது. பக்கத்து ஊர்க்காரர் எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணனின் எழுத்துலக பயணம் எனக்கு ஆச்சரியம் உண்டுபண்ண வைத்தது. எங்கள் ஊரில் கூட சில எழுத்தாளர்கள் உண்டு. முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் எல்லாம் எங்கள் கிராமத்தில் உண்டு. அப்படி சிறு வயதில் எழுத ஆரம்பித்தேன். கல்லூரியில் படித்தபோது இப்படி நோட்டில் கிறுக்கிக் கொண்டே இருக்காதே என அறிவுரை எல்லாம் எனக்குத் தந்தார்கள். நான் எழுத்துலகில் ராமனுஜனாக எழுத்தில் பரிமாணம் எடுக்க இயலாமல் போனதற்கு ஒரே ஒரு காரணம் எனது திமிர், ஈகோ. எழுதி ஏமாற்றுகிறார்கள் என்பதே எனக்குள் இருக்கும் எழுத்து மீதான விமர்சனம். எழுதுபவன் எழுத்தில் மட்டுமல்ல, களத்திலும்  இறங்க வேண்டும் என எண்ணுபவன், அதனால் எனது எழுத்துகளில் ஒருவித ஏக்கப் பெருமூச்சு அவ்வப்போது இருந்து கொண்டே இருக்கும். அதை எல்லாம் தாண்டிப் பார்த்தால் எழுத்து ஒரு தவம். அது சிலருக்கே கை வந்து இருக்கிறது. அப்படி பலரை கௌரவம் செய்து இருக்கிறது இந்த தமிழ்  மின்னிதழ். அனைவருக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

தமிழ் திரைப்பட விருதுகள் - 2014  எனக்கு சிறு வயதில் இந்தவிருதுகள் பட்டியல் எல்லாம் பார்க்க பேரானந்தமாக இருக்கும். இப்போது கூட தேசிய விருதுகள் பட்டியலை ஆர்வத்தோடு பார்ப்பேன். எனக்கு பிலிம்பேர் விருதுகள், இன்னபிற விருதுகள் எல்லாம் பல வருடங்களாக ஈடுபாடு தந்தது இல்லை. தேசிய விருது மட்டுமே நான் அதிகம் விரும்பி பார்ப்பது. இங்கே என்ன விருதுகள் என்ன தரப்பட்டு இருக்கிறது என்று பார்த்தால் பெரும்பாலான படங்கள் நான் இன்னமும் பார்க்கவில்லை. இதற்கு ஒரு காரணம் நமது ஊரில் உள்ளதுபோல திரையரங்கு சென்று பார்க்கும் அளவுக்கு படங்கள் வருவது இல்லை. குறிப்பிட்ட சில படங்களே வரும். மேலும் பெரும்பாலான படங்கள் இணையம் அல்லது டிவிடியில் பார்க்க வேண்டிய சூழல். ஊரில் இருக்கும்போது பாடல்கள் நிறைய கேட்பது உண்டு, இங்கே வெகுவாக குறைந்துவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கலை உலகினருக்கு பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக விருது என்பது விமர்சனத்திற்குரியது, பலருக்கு திருப்தி தருவதைவிட அதிருப்தி தந்துவிடும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விருது வழங்குவது தொடர்ந்து நடைபெறுவது நல்ல விஷயம்.

அடுத்து படித்த எழுத்து சற்று வித்தியாசமானது.  முதலில் சில வரிகள் படித்ததும் தமிழ் - மின்னிதழை மூடிவிட்டேன். பொதுவாக இப்படி இருப்பவர்கள் என குறிப்பிட்டு வாசிக்க வேண்டாம் என சொல்லிவிட்டால் அதில் ஏதேனும் ஒன்று எனக்குப் பொருந்தும் எனில் கூட நான் வாசிப்பதே இல்லை. எழுதுபவருக்குத்  தரும் மரியாதையாகவே நான் அதை கருதுவேன். அப்படித்தான் படிக்கவே வேண்டாம் என முடிவு செய்தேன். ஆனால் இந்த தமிழ்-மின்னிதழ் அந்த கொள்கையை தகர்த்த சொன்னது. முழுமையாகப் படிக்காமல் வாசிப்பது முழுமை அடையாது என வாசித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. புதிய எக்சைல் - புனைவும் புனைவற்றதும் - சுரேஷ் கண்ணன் எழுதி இருக்கிறார். அதிலும் எழுதுவதற்கு ஆசிரியரின் பரத்தை கூற்று தனை காரணம் காட்டுகிறார். உங்ககளை  வாசிக்கக் வைக்கவே அப்படி தொடக்கத்தில் எழுதினேன் என்கிறார். அப்படி எல்லாம் வாசிக்கமாட்டேன் சுரேஷ்கண்ணன். வாசிக்காதே என்றால் வாசிக்கவே மாட்டேன். எவருக்காகவும் எழுத்து சமரசம் செய்யக்கூடாது, தனது நிலையை எழுத்து மாற்றக்கூடாது என எண்ணுபவன் நான். காமக்கதைகளுக்கு இங்கு மவுசு அதிகம் என நான் எழுதிய கதை ஒன்றில் ஒரு வார்த்தை கூட வேறு விதமாக எழுதி இருக்க மாட்டேன். வாசகனுக்கு எழுத்தாளனை விட கற்பனை சக்தி அதிகம் என நினைப்பேன். கதாபாத்திரங்கள் மூலம் அழகாக பல விசயங்களை எழுதி இந்த புதிய எக்சைல்  எனும் தமிழ் நாவலுக்கு இரண்டு விமர்சனங்கள் வைத்து இருக்கிறார். அவரே குழப்பம் அடைந்து இருக்கிறார் என முடிவில் நையாண்டியாக முடிக்கிறார். சுவாரஸ்யமான எழுத்து.

காமத்தை முன்னிறுத்தி எழுதப்படும் கதைகளில் சமீபத்தில் ராஜன் என்பவர் எழுதிய தேர்க்கால் எனும் சிறுகதை அப்படியே மனித உலகில் உபயோகிக்கப்படும் வார்த்தைகளை பிரயோகித்து இருப்பார். வாசகன் இதைக் கண்டு அஞ்சக்கூடாது அதுதான் நிதர்சனம். இதைவிட மோசமான வார்த்தைகளை எங்கள் கிராமத்தில் உபயோகம் செய்வார்கள். சுரேஷ் கண்ணன் மறைமுகமாக சில வார்த்தைகளை உபயோகம் செய்கிறார். ஜ்யோவரம் சுந்தர் என நினைக்கிறேன், ஒரு கட்டுரையில் அப்படியே வார்த்தைகளை உபயோகம் செய்து இருப்பார்.  எழுத்து நாகரீகம் கருதி அப்படியே எவரும்  எழுதுவதில்லை. ஆங்கில நாவல்கள் விதிவிலக்கு என கருதுகிறேன். இப்போதெல்லாம் எவ்வித மன சஞ்சலம் இன்றி எதையும் வாசிக்க முடிகிறது. எனது மனம் சிறுவயது கட்டுக்கோப்பில் இருந்து வெகுவாக வெளியேறிவிட்டது ஆனால்  என்னால் இப்படி எழுதவே இயலாது, எழுத வேண்டிய நிர்பந்தமும் எனக்கு இல்லை. எழுதுபவர்கள் எழுதட்டும்.

இசை - இசையை நோக்கி நகர நகர இசையை விட்டு வெளியேறிக்கொண்டே இருக்கிறேன். ராகங்கள் எல்லாம் கற்று தாளங்கள் கற்று நானும் ஒரு இசை மேதை ஆக விருப்பம். ஆனால்  சாத்தியமற்ற ஒன்று. இளையராஜா, இசைஞானி. இவரது ரமண மாலை, திருவாசகம் எல்லாம் நான் திரும்பத் திரும்ப கேட்பவை. ஆனால் என்ன ராகம் என்ன இசை வாத்தியங்கள் என்ன என்றெல்லாம் மனம் சஞ்சரிப்பது இல்லை. வார்த்தைகளுக்காக நான் மயங்குவேன். காரணமின்றி கண்ணீர் வரும் என்றவுடன் எனக்கு கண்ணீர் வரும். ஆனால் எஸ். சுரேஷ் சுவப்னம் கனவுகளுக்கான இசை என ஒரு ஆல்பத்தை அழகாக இசைத்து இருக்கிறார். கானடா, காம்போதி, ஜோக், பிலஹரி என பல ராகங்கள், மிருதங்க இசை, பாடல் பாடும் அழகு என ஆராதனை செய்து இருக்கிறார். நிச்சயம் இவரை நம்பி இந்த ஆல்பம் கேட்டு மகிழலாம் என நினைக்கிறேன்.

இந்திரன் எழுதிய பந்து புராணம். அட்டகாசம். எனது கிரிக்கெட் வாழ்நாளை அசைபோட வைத்தது. என்ன இந்திரன் வேறு ஊர்களுக்கு சென்று விளையாடவில்லையா என்றே கேட்கவேண்டும் என இருக்கிறேன். வேறு ஊர் அணிகளில் அவர்களுக்காக களம் இறங்கவில்லையா என்ற கேள்வியும். எங்கள் ஊரில் பெண்கள் கிரிக்கெட் விளையாண்டது இல்லை. அவர் குறிப்பிட்டது போல ஊரில் உள்ள அக்காக்கள் எல்லாம் வேற பொழப்பே இல்லையா இப்படியா வேகாத வெயிலில் விளையாடுறீங்க நீங்க சின்ன பசங்க எங்க மாமாவை எல்லாம் ஏன்டா  இப்படி விளையாட இழுத்துட்டு போறீங்க என திட்டாத நாளில்லை. வெயிலில் விளையாடியே கருத்து போனேன் என வீட்டில் சொல்வார்கள். பழைய நினைவுகளை அசைபோட வைத்த அற்புத விபரிப்பு, அதுவும் கடைசியில் முடிக்கும் போது  ஒரு காவியம் போல முடித்து இருக்கிறார்.

பாலா மாரியப்பனின் நிழோலோவியம். ஏதேனும் தென்படுகிறதா என பூவினை தாண்டி பார்த்தேன். புகைப்படம் அருமை. எனக்கு ஓவியம் என்றால் கொள்ளைப்பிரியம். ஓவியத்தில் மனதை அழகாக சொல்லலாம். ட்விட்டரில் ஓவியம் வரையும் ராகா, பாரதி, அகழ்விழி, அண்ணே ஒரு விளம்பரம், தமிழ்பறவை, பிரசன்னா மீனம்மாகயல் என ஒரு பெரிய ஓவியர்கள்  பட்டாளமே உண்டு. எனது  நுனிப்புல் பாகம் 2 நாவலுக்கு அகழ்விழி தான் ஓவியம் வரைந்து தந்தார். அப்படியே நான் அவரது ஓவியத்தை எடுத்துக்கொண்டது அவருக்கு சற்று ஆச்சரியம். இந்த தமிழ் மின்னிதழில் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த இயக்குனர் கே பாலசந்தர் அவர்களைப் பற்றிய நினைவு கூறல் என தனது அருமையான அனுபவத்தை அவர் ஒரு தொடர்கதை என கார்த்திக் அருள் அழகாக எழுதி இருக்கிறார். அதுவும் அவருடன் நேரடியாய் பேசிய அனுபவம் சிறப்பு. நானும் கே பாலசந்தர் படங்களை பார்க்கலாம் என இருக்கிறேன்.  தமிழ் மின்னிதழின் கடைசி பக்கத்தில் பரணிராஜன் வரைந்த பாலசந்தர் ஓவியம் அப்படியே பாலசந்தரை ஒரு விழாவில் அமர்ந்து இருப்பதை பார்ப்பது போன்ற போன்ற உணர்வைத் தந்தது. இவர் வரையும் ஓவியங்கள் அத்தனை தத்ரூபமாக இருக்கும். மாதுளம் பழம் ஒன்று உரித்து அது தட்டின் மேல் இருக்கும் ஒரு ஓவியம் பிரமிப்பு தரும், பாராட்டுகள். எப்படி இப்படி வரைவது என இவரிடம் ஓவியம் கற்றுக்கொள்ளவும் ஆசைதான்.

இணைய நூற்றாண்டு குறித்து சிறகு அவர்கள் மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார். மிகவும் உண்மை. இந்த உலகம் இணையம் மூலம் பெரும் உதவியையும் அச்சுறுத்தலையும் சந்தித்து வருகிறது. அருமையான  எழுத்து. இறுதியாக திறமைசாலிகள்  என ட்விட்டர் மூலம் அடையாளம் காட்டப்படும் எழுத்து என எஸ்கே செந்தில்நாதனின் குவியொளி வெகு சிறப்பு. ஆத்திசூடி போன்று டிவிட்டர்சூடி. எழுதிய அனைவருக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த தமிழ் மின்னிதழ் குறித்து இரு வாக்கியங்களில் ஒரு விமர்சனம்.

'நிர்வாணத்தை மறைக்க விரும்பாத ஒரு அழகியல் -தமிழ் மின்னிதழ்' 

'நிர்வாணத்தை மறைத்த பின்னும் கண்களை அகற்ற இயலாத பேரழகியல் - தமிழ் மின்னிதழ்'

எனது பார்வை நிறைவுப் பெற்றது. இந்த தமிழ் மின்னிதழ் காலாண்டு இதழாக தொடரும். அன்றும் தமிழ் - மின்னிதழில்  பகிரப்படும் படைப்புகள் குறித்து இங்கே எழுதுவேன் எனும் நம்பிக்கையுடன் வாழ்த்தி மகிழ்கிறேன்.

 (முற்றும்)

Saturday 17 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 3

என்னால் எழுத்தாளன் ஆக இயலாது என உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டபோது எழுதுவது எனக்கு மிகவும் எளிதானது. நான் பாடப்புத்தகங்கள் வாசித்து வளர்ந்தவன். எனக்கு இந்த நாவல், சிறுகதை தொகுப்பு எல்லாம் அதிகம் வாசிப்பது ஒரு பதினாறு வயதுடன் முடிந்து போனது என்றே கருதுகிறேன். அவ்வப்போது சில நாவல்கள் வாசிப்பது உண்டு. நாவல் எழுத அமர்ந்தபோது எப்படி எழுத வேண்டும், என்ன எழுத வேண்டும் என்ற சிந்தனை இல்லை. எழுத வேண்டும், அவ்வளவுதான். எனது எழுத்துக்களைப் பார்த்து இன்னும் சிறப்பாக எழுதுங்கள், விரிவாக, விபரமாக எழுதுங்கள் என சொன்னவர்கள் ஏராளம், அவர்களை எல்லாம் ஏமாற்றுவது எனக்கு வாடிக்கை. ஆனால் ஒரு எழுத்தாளன் யார், அவன் எப்படிப்பட்டவன், எப்படியெல்லாம் எழுத்தாளன் உருவாகிறான் என நீங்கள் தெரிந்து கொள்ள இந்த 'தமிழ்' மின்னிதழில் வெளியாகி இருக்கும் மின்காணல்தனை நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.

பொதுவாக நேர்காணலில் உள்ள பிரச்சினை என்னவெனில் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே எழுதுவது சற்று சிரமம். அப்படியே எழுதினாலும் வசதிக்கேற்ப எழுத்துகளை மாற்றி அமைத்து வெளியிடுவார்கள். அந்த பிரச்சினை இதில் இல்லை, அவர் என்ன எழுதி அனுப்பினாரோ அதையே பிரசுரித்து இருக்கிறேன் என்கிறார் ஆசிரியர். அதற்கு முதலில் பாராட்டுகள்.

அடேங்கப்பா! எத்தனை பெரிய மின்காணல். கிட்டத்தட்ட 47 பக்கங்கள், 54 கேள்விகள். புத்தகத்தில் 35 சதவிகித பக்கங்கள். வெற்றி பெற்ற எழுத்தாளன், படைப்பாளி  பேசினால் அதில் திமிர்த்தனம், தலைக்கனம் எல்லாம் வெளிப்படும். பணிவாக இருப்பவனே சிறந்தவன் என்கிற பண்பாடு எல்லாம் இப்போது மட்டுமல்ல எப்போதுமே இல்லை. எழுத்துலகில் மட்டுமல்ல எதிலும் அரசியல் எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒன்று. வெற்றி பெற்ற சக மனிதனின் மீது பொறாமை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவே காணப்படுகிறது. அனைவராலும் சொல்லப்படும் ஈகோ.

ஜெமோ என செல்லமாக அறியப்படும் ஜெயமோகன். எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். இவரது கருத்துகளில் எல்லோரும் உடன்பட வேண்டிய அவசியமில்லை. தனக்குத் தெரிந்ததை, தனக்குப் புரிந்ததை, தனக்குள் பிறர் நிரப்பிய விசயங்களை பகிர்தல் என்பது ஒரு எழுத்தாளன் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் செய்துகொண்டுதான் இருக்கிறான். எனக்கு இவரைப்பற்றி நிறையத் தெரியாது என்பதால் எல்லாமே சுவாரஸ்யமாக இருந்தது. அதுவும் 'ஒருபோதும் எழுத்தாளன் அன்றி பிற அடையாளங்களை நான் ஆசைப்பட என் அம்மா விரும்பியதில்லை' என்ற வரிகள் அட! 'எழுத்தில் சாதித்துவிட்டதாகத் தோன்றியபின் எழுதவே தோணாது'.

'வாசிப்பே என்னை எழுத்தாளனை உருவாக்கியது' என்பதோடு ஆன்மிக நாட்டம் குறித்து நண்பன் மற்றும் அம்மாவின் தற்கொலையை குறிப்பிடுகிறார். எனது நண்பன் கிரியின் தற்கொலையை நினைவுபடுத்தியது. கற்பனையே எழுத்துக்கு வழி. அமரர்கள் சுந்தர ராமசாமி, சுஜாதா, சுஜாதாவின் மனைவி குறித்த இவர் கருத்துகள், மனுஷ்யபுத்திரன், பெண்கள், மலையாளி முத்திரை, சொல் புதிது, குருநாதர், சினிமா உலகம், இவரது நாவல்கள், நோபல் பரிசு, நகைச்சுவை கதைகள், குழந்தை நாவல்கள், அறிபுனைவு, வாசிப்பாளனின் இயலாமை, விமர்சனம் பண்ணவேணும் எனும் அயோக்கியத்தனம், இணைய மொண்ணைகள் என இவரது விவரிப்பு ஆச்சரியங்களை உள்ளடக்கியது. ஆசிரியரின் கேள்விகள் எழுத்தாளனின் உள்ளக்கிடங்கை கிளறி இருக்கிறது.  'நல்ல எழுத்தாளன் புகழ் அங்கீகாரம் எதற்காகவும் எழுதுவது இல்லை'. அடடே! எதற்கும் நீங்களே எல்லாம் வாசியுங்கள். அவரது ஒவ்வொரு வரிகளை எழுதிக்கொண்டு இருந்தால் நான் ஒரு புத்தகம் தான் எழுத வேண்டி இருக்கும். அப்புறம் என்னை அவர் வசையாகத் திட்டிவிடுவார். எனக்குப் பிறரிடம் திட்டு வாங்கும் அளவுக்கு எழுதும் தைரியம் இல்லை.

அடுத்து வினோத நகரம். - முரளிகண்ணன் எழுதி இருக்கிறார். அதுவும் எங்கள் விருதுநகர். அவர் எழுதியதில் எண்ணையில் குளித்த புரோட்டா, சினிமா காட்சிகள் மட்டுமே எனக்குத் தெரியும். மற்றபடி பெண்கள் இதற்காகத்தான் திருவிழா செல்வது, குடும்ப உறவுகளின் பலம், நகை எடுக்கும் பாங்கு இதெல்லாம் நான் ஊன்றி கவனித்தது இல்லை. ஐந்தாம் திருவிழா என டிராக்டர் சென்ற அனுபவம் சினிமா சென்று தொலைந்து போன அனுபவம் என பல உண்டு. விருதுநகரில் இருந்து பதினோரு  கிலோமீட்டர் தொலைவில் எனது ஊர் என்பதால் எனக்கு விருதுநகர் சற்று அந்நியம்  தான். மிகவும் நன்றாக எழுதி இருக்கிறார்.

அடுத்து புனைவுகள். எல்லா புனைவுகளையும் வாசித்து முடித்துவிட வேண்டும் என திட்டமிட்டே வாசித்தேன். நளீரா, என்னை நடுநடுங்க வைத்துவிட்டாள். தோழர் கர்ணா சக்தி எழுதி இருக்கிறார். கருவில் உள்ள குழந்தை கதை சொல்வது போல அமைந்து இருக்கிறது. அபிமன்யு நினைவுக்கு வந்தான். தோழர் கர்ணா சக்தி ஒரு புரட்சி சிந்தனையாளர். பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தது என கேட்கும் பலரிடம் பிறக்கும் முன்னரே குழந்தை என்ன செய்தது என சமூகத்திடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். தோழரே, இந்த சமூகம் மூடர்களால், மடையர்களால் ஆனது, அறிவாளிகள் கூட சாதி, மதம் என வந்தபின்னர் அறிவிழந்து போகிறார்கள். சந்ததியை அழித்தால் எல்லாம் அழியும் எனும் கொடூர எண்ணம் கொண்டு வல்லூறுகள் வட்டமிட்டுக் கொண்டே இருக்கின்றன. இணக்கமான சமூகம் அழிந்து கொண்டே இருக்கிறது. மனதை கலங்க வைத்த கதை.

0 F  மத்யமன் என்பவர் எழுதி இருக்கிறார். வித்தியாசமான கதை, வித்தியாசமாகவே தொடங்குகிறது. அதுவும் ட்விட்டர் சம்பவங்களை வைத்தே தொடங்கி ஆருத்ரா தரிசனம், ஒரு ஆத்திகனுக்குள் நாத்திகன் என கதை பரபரப்பாக நகர்கிறது. குளிர் குறித்த விவரிப்பு, சமன்பாடு என கடைசியில் மனித நேயம் சொல்லி முடிகிறது கதை. உதவும் மனப்பான்மையை நட்புகளிடம் மட்டுமே கொண்டு இருக்க வேண்டியது இல்லை என சொல்லும் கதை எனவும் கொள்ளலாம். நன்றாக இருக்கிறது.

சிறகில்லாப் பறவைகள் - அல்டாப்பு வினோத் எழுதி இருக்கிறார். எனக்கு சரியாக ஞாபகம் இருந்தால் காந்திய கோட்பாடுகளுக்கு எதிரானவர் என்றே எண்ணுகிறேன். ரஜினி ரசிகர் என்பது கூட இவர் அடையாளம் என எண்ணுகிறேன். கதை சொல்லும் பாணி ஒரு சினிமாவைப் போன்று காலங்கள் நேரங்கள் குறித்து எழுதி இருக்கிறார். ஒரு இளைஞனின் வாழ்க்கை குறித்த கதை. இறுதி நிகழ்வு மனதில் ஒரு வெறுமையை ஏற்படுத்திவிடுகிறது. வெளிநாடு செல்பவர்கள் எல்லாம் பணத்தில் குளிப்பவர்கள் அல்ல என எளிமையாக உலகிற்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார். அருமை வினோத்.

அடுத்து கவிதைகள் தாவினேன். நிறைவேறாத ஆசைகள் - மிருதுளா. எதிர்நீச்சல் என்ற பாடல் வரிகள் போல இருக்கிறது என எனது எதிர்பார்ப்புகள் கவிதைகள் குறித்து என் தங்கை சொன்னது உண்டு. ஆனால் இந்த நிறைவேறாத ஆசைகள் இருபக்க விசயங்களை அழகாக தொட்டு செல்கிறது. இருக்கலாம் என்பதான வார்த்தையே கவிதைக்கு அழகு, அதுவும் முடித்த விதம் சிறப்பு.

சிரஞ்சீவியும் ஜீவிதாவும் - சொரூபா. மனதை கனக்க  வைத்த கவிதை. சிரஞ்சீவிடா, ஜீவிதாடி. கவிதையில் கலங்க வைக்க இயலும் என சொல்லி இருக்கிறார். நிறுத்தி நிதானமாக நிகழ்வுகளை அசைபோடுங்கள்.

நா ராஜு கவிதைகள். மிருதுளா, சொரூபா அற்புதமான எழுத்தாளர்கள் என ட்விட்டர் உலகம் அறியும். எனக்கு ராஜு, அசோகர் பரிச்சயமில்லை. முத்தம் மூர்க்கமெனினும்  காதல். அருவி, நீர், பறவையின் பாட்டு என வேறொரு பொருள் உண்டு இங்கு என்கிறார். முன்னேற்பாடுகள் அற்ற விசயங்கள் என கவிதையின் ஆழம் அருமை.

ஒரு பெண் ஒரு ஆண் - அசோகர். வித்தியாசமான கவிதைக்களம். சிந்தனை மாறுபாடு ஒன்றும் காதலுக்கு அலுக்காதுதான். நன்றாகவே இருக்கிறது. ஒப்புமை குறியீடுகளில்  மூழ்கி முத்தெடுங்கள்.

விமர்சனம். ஸ்டான்லி க்ப்யூரிக் - இயக்குனர்களின் ஆசான்  எழுதி இருப்பவர்  நவீன் குமார். நல்ல சுவாரஸ்யமாக படம் பார்க்கும் உணர்வை தந்து இருக்கிறது எழுத்து. மிகவும் அற்புதமாக எழுதி இருக்கிறார். படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் வந்து போகிறது, அதே வேளையில் நேர்மையாக இருக்கும் கணவன் மனைவி குடும்பத்தில் சர்ச்சை தோன்ற வைத்துவிடும் அளவிற்கு இந்த படம் ஒரு மன உளைச்சலை தந்துவிடும் எனும் அபாயமும் உள்ளது. பொதுவாக கணவனுக்கும் மனைவிக்கும் நல்லிணக்கம் அத்தனை இருப்பதில்லை என்பதுதான் பெரும்பாலான குடும்பங்களில் காணப்படுவது. நக்கல், கேலி, கிண்டல் என இருந்தாலும் மெல்லிய காதல் குடும்ப அமைப்பில் இருந்து கொண்டே இருக்கும். எப்போது நிராகரிப்பு, புறக்கணிப்பு நிகழ்கிறதோ அப்போது பிரச்சினை தலைதூக்கும். ஒருமித்த கருத்து உள்ள தம்பதிகள்  வாழ்வின் வரம்.

இப்படியாக 'தமிழ்' மின்னிதழை வாசித்துக் கொண்டே இருக்கிறேன். புனைவுகள், கவிதைகள், நேர்காணல் எனும் மின்காணல் என வாசித்து முடித்த தருணத்தில் இந்த தமிழ் மின்னிதழ் ஒரு அருமையான இலக்கிய இதழ் என தைரியமாக சொல்லலாம். இது ஆசிரியரின் முதல் முயற்சி என்றாலும் தெரிவு செய்த விதங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த மின்காணல் இந்த தமிழ் மின்னிதழின் முத்தாய்ப்பு.

நான் நேசிக்கும் ஓவியர்கள் என ட்விட்டரில் நிறைய உண்டு. எவராவது கோலம் படம் போட்டால் கூட ஓடிச்சென்று அதை சேமித்து விடுவேன். அதுபோல எவரேனும் படம் வரைந்தால் அட என பிரமித்துவிடுவேன். ஓவிய ஈடுபாடும் இந்த தமிழ் மின்னிதழில் உள்ள வேறு சில ஓவியங்களோடு விமர்சனம் அனுபவங்கள் என சில நாளைப் பார்க்கலாம்.

மின்காணல் வாசித்து முடித்ததும் மனதில் எழுந்தது இதுதான். எதையும் முழுதாய் வாசிக்கத் திராணியற்ற இணைய மொண்ணைகளே, ஒன்றை விமர்சனம் செய்ய முழுவதுமாக வாசித்துவிட்டு பின்னர் விமர்சனம் செய்யுங்கள், இல்லையெனில் போங்கடா வெண்ணைகளா என திட்ட வேண்டி இருக்கும். ஷப்பா... தமிழ் எழுத்துலகம் என்னை மிரள வைக்கிறது.

(தொடரும்)


Friday 16 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 2

சிறுகதையோ, கதையோ புனைவு என்று அழைத்துக் கொள்கிறார்கள். கவிதை கூட புனைவதுதான் ஆனால் அது புனைவு என சொல்லப்படுவதில்லை. நாவலை புதினம் என்றும் அழைக்கிறார்கள். புனைவு எனும் சொல் நன்றாகவே இருக்கிறது.

பைத்தியக் காலம் என்றொரு புனைவு    எழுதியவர் 'இலக்கிய எழுத்தாளர்' நர்சிம்.  இவரைப்பற்றி அதிகம் குறிப்பிடத்தேவையில்லை. எழுத்துலகம் இவரது எழுத்துக்கள் பற்றி அறியும். இவரது எழுத்துக்கள் குமுதம், ஆனந்தவிகடன் என அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன. இவரிடம் சென்று எழுத பயின்று கொண்டால் நான் நன்றாக எழுத ஆரம்பிக்கலாம். ஒருமுறை நான் எழுதியதை கவிதை என்றேன். சற்று மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்றார். எப்படி மாற்றி அமைப்பது என சிந்தித்து பின்னர் வேண்டாம் என விட்டுவிட்டேன்.

'தான் தவிர்க்கப்படுதல் தெரியாமல் அண்டை வீட்டிற்கு விளையாடச் சென்று வெறுமையாய் திரும்பும் சிறுவனின் மனவலியை உணரச் செய்து விடுகிறார்கள் சிலர்'. இது அவரின் எழுத்து. எனக்கு என்னவோ இந்த எழுத்து வெகுவாக என்னை பாதித்துவிட்டது. எனது கிராமத்தின் சூழலை கண் முன்னர் கொண்டு வந்து நிறுத்தியது. இப்படித்தான் இவரது எழுத்துக்களை வாசிக்கும் போதெல்லாம் நிகழ்வு மனக்கண் முன்னால் வந்து போகும். சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். அதில் இவர் சொல்லும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும். விவரிப்பு அதில் வரும் கதாபாத்திரங்கள் அழுத்தமான ஒன்றை சொல்லி செல்லும். இந்த பைத்தியக் காலம். கதையை வாசித்து முடித்தபோது அதே பிரமிப்பு. கோமாதா, நந்தி அட! சொல்ல வைத்தது. அதுவும் கதையில் வரும்காட்சிகளின் பின்னணி. முடிவுதான் கதைக்கான மொத்த தளமும்.

அடுத்து பொன் வாசுதேவன் அவரது கவிதைகளுக்குப் போனேன். எளிமையான மனிதர். நேரில் பார்த்து இருக்கிறேன், பேசி இருக்கிறேன். எனது இரண்டு புத்தகங்கள் வெளிவர காரணமானவர். இவரது  இருபது வருடங்களுக்கு மேலான வாசிப்பு அனுபவம் இவரது எழுத்துகளில் மிளிரும். ஒரு நாவல் எழுதிக் கொண்டு இருந்தார். தமிழும், அடர்ந்த கருத்து செறிவுமான  கவிதைகள் . ம்ம் இவரிடம் கவிதை எழுத கற்றுக்கொள்ளப்போகலாம். 'தப்பிப் பதுங்கிய சிறுதுளி நீர் சிற்றலை நெளிய' பிரமாதம். நிழல் குறித்து  அட! வாழ்தலின் பலி கொண்டலையும் அற்ப சிம்மாசனம். வேரிழந்த எழுத்துக்கள். எனக்கு மிகவும் கடினம் இதுபோன்ற வார்த்தை கோர்ப்புகள். அதனால் தான் எனது கவிதைகளை வெறும் வார்த்தைகள் என கர்வத்துடன் சொல்லிக்கொண்டேன்.

அடுத்து என் சொக்கன் அவர்கள். இவருடனான அறிமுகம் ட்விட்டரில் இடம்பெற்றது. இவர் அழகாக வெண்பா எழுதுவார். அழகாக கதையும் சொல்வார். இவரது புனைவின் தலைப்பு காரணம். இவரது கதையை படிக்கும் முன்னரே நான் இப்படி எழுதி இருந்தேன்.

மனமுவந்து பாராட்டுவதை கூட உள்நோக்கம் ஏதேனும் இருக்குமோ என எண்ண  வைத்தது சந்தேக குணத்தின் குரூரமான பக்கம். 

இவரது கதையை படிக்கும்போது இதே சிந்தனை கொண்ட கதை. ஆனால் மனிதர்கள்  எப்படி விலகிப் போய்விட்டார்கள் என சொல்லும் அழுத்தமான கதை.

அடுத்து ரைலு. முத்தலிப். நகைச்சுவை உணர்வு உடையவர். பெயர்தான் முத்தலிப் ஒரு முத்தம் கூட தன இதழ்கள் கண்டதில்லை என என்னை சிரிக்க வைத்தவர். ரைலு ஒரு கனவும் அந்த கனவின் ஏமாற்றமும் சொன்ன கதை. இவர் தற்போது எழுத்துலகில் பரப்பரப்பாக கண்காணிக்கப்படுபவர். இந்த கதையும் அப்படியே. அதுவும் எங்கள் ஊர் பக்க கதை என்பதால் ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை ரயில் மனத்திரையில் வந்து போனது. உள்ளப் போராட்டங்களை சொன்னவிதம் வெகு சிறப்பு. சில புதிய சொற்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

சங்கீதா பாக்கியராஜா. இலங்கையை சேர்ந்த எழுத்தாளர். இவரது எழுத்துகளில் ஒரு கனமான வலி இருக்கும். அது சிறிது நாட்கள் வலித்துக் கொண்டே இருக்கும். இவரது எழுத்து பெண்களின் பிரச்சினைகளை நிறைய பேசும். இந்த அன்றில் பறவை ஒரு தபுதாரனின் கதை. நான் இந்த கதையைப் பற்றி நிறைய சொல்லப்போவதில்லை. ஒரே வரி மனைவி போனால் எல்லாம் போம்.

அடுத்து தமிழ் தமிழ் தமிழ். ஆம். கண்ணபிரான் ரவிசங்கர்.  இவரது சிந்தனைகள் இவர் ஒரு தமிழ் மாமேதை. எனக்கு இவரைப் பார்க்கும்போதெல்லாம் கணிதமேதை ராமனுஜன் நினைவுக்கு வருவார். இவர் முருகனின் அருள் பெற்றவர். தரவு இல்லையெனில் வெளியே போ என மிரட்டும் கோபக்காரர். இவரோடு நான் ஒருமுறை ஆண்டாள் பற்றி விவாதம் செய்தபோது நான் விளையாட்டாக எழுதினேன் ஆனால் இவர் எல்லாவற்றையும் ஆணித்தரமாக எழுதினார். இதோ தரவு இப்படி அர்த்தம் கொள்ளலாம் என்றார். எனக்கு பொதுவாக புராணங்கள், பழைய விசயங்களில் அத்தனை தரவு பார்ப்பதில்லை, கற்பனைதான். ஆனால் இவரின் சிந்தனை வேறு. இவரைப்போல தமிழுக்கு பலர் வேண்டும். இவருக்கு எழுத்துலகில் கடும் எதிர்ப்புகள் இருப்பதால் பிளாக்கில் எழுதுவதை நிறுத்திவிட்டார். மீண்டும் இவர் எழுத வேண்டும். இவர் எல்லாம் மாதம் ஒரு தமிழ் நூல் வெளியிடலாம். தமிழில் சிலப்பதிகாரம்தனை ஆய்வு செய்து உள்ளார். இவரது எழுத்து எனது நூல் ஒன்றுக்கு கிடைத்ததே பெரும் பாக்கியம்.  அதைப்போல இவரது எழுத்து சுமந்து வந்த 'தமிழ்' மின்னிதழ் பெரும் பாக்கியம் செய்து இருக்கிறது. இலக்கியம், இலக்கணம் என சொல்லி எல்லா விசயங்களையும் இங்கே அருமையாக எழுதி இருக்கிறார். தகவல் களஞ்சியம், தமிழ் களஞ்சியம்.

அட இப்படி எழுதலாமா என ஜி ரா எண்ண  வைத்துவிட்டார். கேபியும் மூன்று பெண்களும் என்பதான புனைவு. எனக்கு அவர் குறிப்பிட்ட படங்கள் தெரியாது என்பதால் முழுவதும் உள்வாங்க இயலவில்லை. ஆனால் கதைநாயகிகள் மூலம் அற்புதமாக பல விசயங்கள் சொல்லி இருக்கிறார். படம் பார்த்து மீண்டும் படித்தால் சுவராஸ்யமாக இருக்கும்.

இன்று இறுதியாக விமர்சனம். உலகப்படங்கள் பார்ப்பவர்கள் தமிழில் அதிகம், ஆனால் அதை அழகாக விமர்சனம் செய்வது இவருக்கு மட்டுமே கைகூடும். இவரது எழுத்து எனக்கு முன்னரே பரிச்சயம். புத்தக விமர்சனங்கள் இவர் எழுதுவது உண்டு. இவர் எழுதியதைப் படித்தபோது அந்த நியூரி பில்கே சிலேன் இயக்குனரின் படங்களைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. மிகவும் தெளிவான நடை. தற்போது இவரது எழுத்துக்கள் பத்திரிக்கைகளிலும் வருகிறது.

நாளை, விஷ்ணுபுரத்தான் ஜெயமோகன் மற்றும் சில கவிதைகளும், புனைவுகளும்.

(தொடரும்)


Thursday 15 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 1

நூற்றி முப்பத்தெட்டு பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ள தமிழ் மின்னிதழ் ஒன்று தமிழ் ட்விட்டர் சமூகத்தில் 'ரைட்டர்' என செல்லமாக அழைக்கப்படும் திரு சி சரவணகார்த்திகேயன் அவர்களின் முயற்சியால் இன்று வெளிவந்து உள்ளது.

தமிழ் மின்னிதழ். அட்டையில் ஓ!  இவர்தான் ஜெயமோகனா என ஆசிரியரின் எழுத்தைப் படித்த பின்னரே தெரிந்தது. "எழுத்து ஒரு நிகர்வாழ்க்கை எனக்கு!" நேர் வாழ்க்கை தெரியும், எதிர் வாழ்க்கை தெரியும். நிகர்வாழ்க்கை எனக்குப் புதிது.  ஜெயமோகன் எழுத்து நிறைய கேள்விபட்டதுண்டு. வாசித்தது இல்லை.

"தமிழ்" எழுத்து வடிவமைப்பு மிகவும் எளிமையுடன் கூடிய சிறப்பு. 'தமிழ் சிற்பி' மீனம்மாகயலுக்கு பாராட்டுகள். சமூக இருள் போக்க வரும் தமிழ். ஆசிரியர் சி சரவணகார்த்திகேயன் அவர்களை இந்த முயற்சிக்கு வெகுவாக பாராட்ட வேண்டும். இவருக்கு பக்கபலமாக இருந்த ஆலோசனைக்குழு கௌரவ குழுவிற்கும் ஆசிரியருக்கும் உளம்கனிந்த பாராட்டுகள். தை என எழுதாமல் பொங்கல் என இதழ் 1 வந்தது தித்திக்கும் இனிப்புதான், தமிழுக்கு தமிழருக்கு வெகு சிறப்பு.

பிரசன்னகுமார் அற்புதமான ஓவியர் சமீபத்தில்தான் இவரது ஓவியங்கள் கண்ணுக்குப்பட்டது. வெகுநேர்த்தியாய் எழுத்தாளனாக ஒரு ஜெயமோகனை வடிவமைத்த விதம் பாராட்டுகள். புதியன விரும்பு என்பது கட்டளைச் சொல். தமிழுக்கு அந்த உரிமை உண்டு. ஆசிரியர் உரை படிக்கிறேன். கல்லூரி கனவு நனவாகி இருக்கிறது. உலகம் யாவையும் என வாசித்ததும் அப்படியே உள்ளுக்குள் மகிழ்ச்சி ஓடும் அது அந்த பாடலின் வலிமை. இது ஒரு தொடக்கம் என்கிறார் ஆசிரியர். தொடர்ந்து  சிறப்பாக நடக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து அமரர் சுந்தர ராமசாமிக்கு சமர்ப்பணம் செய்தது வெகு சிறப்பு என தமிழ் மின்னிதழைப் போற்றி மகிழ்கிறேன்.

 எனக்கு தமிழ் எழுத்துலகம் தெரியாது. பெயர்கள் மட்டுமே பரிச்சயம் எவருடைய நாவல்களும் பல ஆண்டுகளாக வாசித்தது இல்லை. எனது வாசிப்பு blog twitter மட்டுமே. அப்படி வாசித்தபோது பழக்கமான சிலர் முகங்கள் இங்கே இந்த தமிழ் மின்னிதழில் உண்டு. எவருடனும் நெருங்கி பழகிய அனுபவம் இல்லை.

நான் போற்றும் மனிதர்களான  எனது நூல்களை வெளியிட்ட பொன்.வாசுதேவன், தமிழ் உயிர்மூச்சு என இருக்கும் 'முருகனுருள்' 'சிலுக்கு சித்தன்' புகழ் கண்ணபிரான் ரவிசங்கர், வெண்பா புகழ் என் சொக்கன், பிரமிக்க செய்யும் நர்சிம், முத்தமிழ்மன்ற தொடர்பு ஜி ராகவன், நல்ல வாசகி லேகா,  இந்த எழுத்துலகில்  எனக்கு புதிதாக அறிமுகம் ஆன மீனம்மாகயல், முத்தலிப், சங்கீதா பாக்கியராஜா, கர்ணா சக்தி, மிருதுளா, சொரூபா  மற்றும் ட்விட்டரில் தனக்கென ஒரு சாம்ராஜ்யம் வைத்திருக்கும் சௌம்யா.

நான் Facebook படிக்கும் வழக்கம் இல்லாத காரணத்தினால் பெருமாள் முருகன் சமீபத்தில் எழுதிய மாதொருபாகன் எனும் நாவல் குறித்த சர்ச்சை ட்விட்டரில் கேள்விபட்டேன். அது குறித்து கிருஷ்ணபிரபு இந்த மின்னிதழில் எழுதி இருக்கிறார். ஒரு எழுத்தாளன் சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளை அப்படியே வைப்பதில் என்ன தவறு இருக்கிறது என இந்த மதமும் சாதியையும் துள்ளிக்கொண்டு திரிகிறது என தெரியவில்லை. எத்தனை பிரம்மானந்தா, நித்யானந்தா இந்த சமூகம் கண்டு இருக்கிறது. அவர்களை எல்லாம் செருப்பால் அடிக்காமல் விட்டது இந்த சமூகத்தின் தவறு.

எங்கள் கிராமத்தில் கூட முன்னொரு காலத்தில் பிடித்தவனோடு பிள்ளை பெறும்  கலாச்சாரம் உண்டு என சில வருடங்கள் முன்னர் என் பெரியம்மா சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் என்ன சொல்றீங்க என கேட்டபோது ஆமாம் எடுபட்ட  சிறுக்கிக  என திட்டிய காலம் என் பெரியம்மா காலமாக மாறி இருக்கலாம். வைப்பாட்டி எல்லாம் இல்லாமலா? ஆனால் என்ன இந்த சமூகத்தில் சாமியால் நடைபெறும் விசயங்கள் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. ஏனெனில் இறைவன் தூய்மையானவன், இறைவனை பின்பற்றுபவர்கள் தூய்மையானவர்கள் எனும் ஒரு மனநிலை மனிதர்களில் பதிந்துவிட்டது.

பெருமாள் முருகன் எழுதாமல் விட்டால் அது தமிழ் எழுத்து உலகிற்கு நல்லதல்ல எனவும் நல்லது எனவும் கூறுகிறார்கள். எனக்கு நாவல் படித்தது இல்லை என்பதால் எதுவும் சொல்ல இயலாது. ஆனால் காலங்கள் பல தடைகளை பல கலாச்சாரங்களை கடந்தே வந்து இருக்கின்றன. தொன்மைபழக்கங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது இல்லை. ஆனால் தெரிந்து கொள்வதில் தவறில்லை.

கானல் - மீனம்மாகயல் எழுதிய ஒரு கதை. இந்த கதையை சற்று கவனமாக வாசிக்கத் தவறினால் என்ன சொல்ல வருகிறது என புரியாமல் போகும். கதையில் குறிப்பிடப்பட்ட நேரமே இரண்டு நிகழ்வுகளை விவரிக்கும் பாங்கு. இவருக்கு நல்ல தமிழ் சிந்தனை உண்டு, ஆனால் என்ன எழவோ காமத்தை சுற்றியே இவரது எழுத்தும் எண்ணமும் அமைந்துவிடுவது இவருக்கான பலமும் பலவீனமும். ஒட்டுமொத்த சமூகம் காமத்தினால் அல்லல்படுவது இயற்கைதான். வெளிச்சொல்ல இயலாமல் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் நிலை உலகில் மிகவும் பரிதாபத்திற்குரியது. அதே பாலியல் வன்முறையை எழுத்துகளில் சாடும் பெண் என்றாலோ, எழுத்துகளில் வைத்திடும் பெண் என்றாலோ அந்த பெண்ணை பற்றிய சமூகத்தின் பார்வைதான் நான் குறிப்பிட்ட 'என்ன எழவோ'. அந்த கதையில் குறிப்பிட்ட 'தா..' என்ற வார்த்தையை கூட நான் எழுதுவதும்  உச்சரிப்பதும்  இல்லை. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது உடல்நிலை ஆசிரியர் அந்த வார்த்தையை அதிகம் உபயோகிப்பார். அட ஆசிரியர் சொல்கிறார், சொல்வதற்கு நன்றாக இருக்கிறதே என நானும் சில நாட்கள்  சொன்னேன். ஒரு பனங்காடி  நண்பன் அழைத்து அது கெட்ட வார்த்தை என சொன்னதில் இருந்து அந்த வார்த்தை நான் உபயோகம் செய்வது இல்லை.

ஆனால் சமீபத்தில் என் அத்தை ஒருவர், என் அப்பா அந்த வார்த்தை உபயோகித்தபோது எனக்கு சங்கடமாக இருந்தது. இந்த கதையில் சொல்லப்படும் விசயங்கள் கானல் தான். ஒரு பெண்ணை பலவந்தபடுத்த சமூகம் தயாராக காத்து இருக்கிறது. அதை எதிர்த்து போராட வழி இல்லை. இதே போன்று ஒரு உண்மையான நிகழ்வை ட்விட்டரில் பூங்குழலி எனும் மருத்தவர்  எழுதி இருந்தார். மகளை பறிகொடுத்த தந்தை. கிராமங்களில் நிறைய நடைபெறுகிறது. பாதுகாப்பற்ற சமூகம்.

சௌம்யாவின் கவிதைகளுக்கு தாவினேன். சௌம்யாவின் எழுத்து எவரையும் காயப்படுத்தாது. அவரின் பண்பு அவரை எல்லோருக்கும் பிடித்த ஒருவராகவே இந்த ட்விட்டர் சமூகம் பார்த்து வருகிறது மீ காதல் ஒரு எளிய அன்பின் வெளிப்பாடு. பெண்ணியம் என்ற வார்த்தை இப்போது நிறைய பயன்பாட்டில் உள்ளது. இதழதிகாரம், அதிக காரம் எல்லாம் இல்லை.மிகவும் இனிப்புதான். அதுவும் என் பெண் முத்தங்கள் என்றே முடிகிறது கவிதை.அவளதிகாரம்  அவனதிகாரம், மகளதிகாரம்  மனைவியதிகாரம் என நிறைய இருக்க இதழதிகாரம். இலக்கியமாக சொல்லிச் செல்லும் ஊடலுணவு. கோபத்தில் பாசம் வெளிப்படும் என்பதை வெளிச்சொல்லும் கவிதை.

நாளை நர்சிம், கண்ணபிரான், சொக்கனோடு பிரயாணிக்கிறேன்

(தொடரும்)


Tuesday 13 January 2015

மதமும் சாதியும்

மூர்க்கர்கள் நிறைந்த உலகில் இந்த மதம் சாதி  எல்லாம் குறித்து கண்டித்து எழுதினாலும் மூர்க்கர்கள் திருந்தவே மாட்டார்கள்.

இந்த மதம், சாதி குறித்து எழுதினால் தரம் தாழ்ந்துவிடும். தரங்கெட்டதை குறித்து எதற்கு எழுதுவானேன்.

                                                     நன்றி வணக்கம்.

இப்படியெல்லாம் எழுத்தாளன் ஓடி ஒளியக்கூடாது. எழுதிக்கொண்டே இருப்பதுதான் எழுத்தாளன் பணி, இல்லையெனில் சமூகத்தின் பிணியை எவர் தீர்ப்பது.

திருவள்ளுவர் எழுதியே திருந்தாத சமூகம் நம்மளோடது, அதனால் எழுதுவது மட்டுமே எழுத்தாளன் பணி. மக்களை நல்வழிபடுத்தி செல்வது அரசு பணி .