Sunday, 15 December 2019

நாவல் வெளியீடு - பாமரத்தியும் பட்டாம்பூச்சியும்


எனது அடுத்த நாவல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட இருக்கிறது. நாவலுக்கு ஆசியுரை, அணிந்துரை, மதிப்புரை, வாழ்த்துரை  எழுதித்தந்த இலட்சுமி, அருணா, ஜனனி, சத்தியநாராயணன், வேணி மற்றும் சந்திரகலா ஆகியோருக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்
இராதாகிருஷ்ணன்


Wednesday, 16 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 24

24. காலத்தில் காலம் இல்லை.

இந்த உலகில் எதுவுமே தெரியாமல் இருந்து கொள்வது கூட ஒரு வகையில் பேரின்பம்தான். நாம் பேசுகின்ற பல விசயங்கள் பெரும்பாலும் பிறரைப் பற்றியதாகவே இருக்கிறது. புறங்கூறுதல் போலவே புறங்கூறுதலை கேட்பதும் மோசமானது. ஒருவர் புறம் பேச ஆரம்பித்தவுடன் நாம் விலகியே இருந்தாலும் சிறிது நேரத்தில் அப்பேச்சில் ஈர்க்கப்பட்டு நாமும் அதில் இணைந்து விடுகிறோம். அதே வேளையில் அறிவியல் வளர்ச்சி, புரட்சி என ஒரு புறம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, மறுபுறம் தங்களது நம்பிக்கைகளை எல்லாம் அத்தனை எளிதாக விட்டுத்தர முன் வராமல் மகிழ்வோடு இருந்து கொள்ளவே பலரும் விருப்பம் கொள்கின்றனர்.

பாமாவும், நாச்சியாரும் இரவு எட்டு மணிக்கு குண்டத்தூர் வந்தடைந்தனர். அங்கு இருந்த ஒரு உணவகத்தில் உணவு அருந்திவிட்டு பெருமாள்பட்டிக்கு நடக்கத் தொடங்கினர். இருள் என்பது ஒளியற்ற ஒரு நிலை. அதே இருள் மனதில் இருப்பின் அதை அறிவற்ற நிலை என்றே குறிப்பிடுகின்றனர். பாமரத்தனம் என்பது அறிவற்ற நிலை என்பதைக் காட்டிலும் தெளிவற்ற நிலை என்றே குறிப்பிடலாம். பாமரத்தனத்தை வெகுளித்தனம் என எண்ணுபவர்களும் இருக்கின்றனர். நிலாவின் வெளிச்சத்தில் சாலை தெளிவாகவே தெரிந்தது.

''பாமா, ஆழ்வார் திருநகரி பத்தி ஏதேனும் உனக்கு முன் ஞாபகம் இருக்கா'' நாச்சியாரின் பாமரத்தனமான கேள்வி அது.

''இல்லைம்மா, எனக்கு அப்படி ஒன்னும் தெரியலைம்மா. நம்மாழ்வார் பத்தி படிச்சதால தெரிஞ்சிகிட்ட ஊருதான் அது, வாழ்நாளில் கட்டாயம் போய் பாக்கனும்னு நினைச்ச ஊருல ஒன்னு அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியலம்மா. அதிலயும் நான் இன்னும் திருவரங்கமோ, திருவில்லிபுத்தூரோ போனது இல்லைம்மா''

''ஒருவேளை உனக்கே தெரியாம இருக்கும், எதுக்கும் நீ ஆழ்ந்த தியானம் இருந்து பாரு''

''பண்றேன்மா, ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து இப்படி ஒரு எண்ணம் எல்லாம் எனக்கு வந்ததே இல்லை. அப்பாதான் எனக்கு பெருமாள் அறிமுகம் பண்ணி வைச்சார். நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிப்பார், அதில உண்டான ஈர்ப்புதான்ம்மா மற்றபடி என்ன சொல்றதுனு தெரியலை அதுவும் உங்களோட இந்த உறவு எல்லாம் எனக்கு நிறைய மகிழ்ச்சி தரக்கூடியதா இருக்கு''

''தியானம் இருந்து பாரு பாமா''

''சரிம்மா''

பெருமாள் கோவிலின் கோபுரத்தில் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தது. நாச்சியார் பாமாவின் தெய்வீகத் தொடர்பு குறித்து எண்ணிக் கொண்டு இருந்தார். ஆனால் பாமாவுக்கு பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் முளைத்து விட வேண்டும் என்பதிலும், நாராயணிக்கு கை கால்கள் வர வேண்டும் என்பதிலும் இருந்தது.

நல்ல மனிதர்களாக இருப்பதுவும், நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களோடு பிரியாமல் சேர்ந்து இருப்பதுவும் இன்றைய காலத்தில் பெரிய விசயம்தான். அதே போல நமது செயல்களை எந்த ஒரு காலத்தில் நினைத்துப் பார்த்தாலும் நாம் தலை நிமிர்ந்து இருக்கும்படியாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு வாழ்வை பாமா சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை. படித்தோம், வேலைக்குச் சென்றோம் என்று இருக்கும் என்றுதான் எண்ணி இருந்தாள். இந்த உலகில் காலத்தின் தேவைக்கு ஏற்ப காலம் விசயங்களை நடத்திக் கொள்ளும். காலத்தின் தேவை, தேவையாகவே இருந்திருக்கவில்லை என காலமும் ஒரு கணத்தில் உணர்த்தி வைக்கும். இந்த மொத்த அண்டவெளியும் காலத்திற்கானது இல்லை, காலத்தில் காலமும் இல்லை.

சனிக்கிழமை அன்று அதிகாலையில் யசோதையின் வீட்டை அடைந்தாள் பாமா.

''சொன்ன நேரத்திற்கு சரியா வந்துட்ட பாமா''

''காலத்தில் காலம் இல்லை யசோ, வண்ணத்துப்பூச்சியை கவனிச்சிக்கிட்டதுக்கு நன்றி''

''யசோ, என்னோட அத்தை கூப்பிடற மாதிரியே இருக்கு. உன்னோட பேரழகுல நானே மயங்கிருவேன் போல. தெய்வீகக்கலையம்சம் உனக்கு பாமா''

''உங்க அத்தை உங்களுக்கு ஒருவேளை அந்த யசோதையை பார்த்துதான் பெயர் வைச்சி இருப்பாங்க போல''

''நல்லாவே பேசற பாமா''

''உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லனும், எவ்வளவு பெரிய உதவி நீங்க பண்றது''

யசோதை முகம் மலர்ந்தாள். இருவரும் மருத்துவர் மாறனை சந்திக்கச் சென்றனர்.

மருத்துவர் மாறன் யசோதைக்காக காத்து இருந்தவர் போல வரவேற்றார். பட்டாம்பூச்சியைப் பார்த்தவர் வியப்பு அடைந்தார்.

''நான் கொடுக்கப்போற இந்த ட்ரீட்மென்ட்ல ஒருவேளை இந்த பட்டாம்பூச்சி இறந்து போகலாம், அதுக்காக என் மேல பழி சுமத்தக் கூடாது. இப்படி டெவெலப்மென்ட் ஆகாம இத்தனை நாட்கள் இது உயிரோட இருக்கிறதே அபூர்வம்தான்''

''என்ன சொல்றீங்க டாக்டர்''

மாறன் தான் எழுதி வைத்து இருந்த விசயத்தை அவர்களிடம் காண்பித்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார். இவ்வுலகில் உருவான அத்தனை உயிரினங்களும் தங்களுக்குள் பெரும் அதிசயத்தைப் புதைத்து வைத்து இருக்கிறது. பாமா மெய் மறந்து அமர்ந்து இருந்தாள்.

(தொடரும்)

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் 23


23. பாமரத்தனம்

சடகோபன் தன்னை பாமரத்தி எனக் குறிப்பிட்டுச் சென்றது குறித்து நாச்சியாரிடம் பாமா கேட்டாள். நாச்சியாருக்கு எதுவும் புரியவில்லை. நம்மை புதிதாகப் பார்க்கும் ஒருவர் நம்மைக் குறிப்பிட்டச் சொல் சொல்லும்போது அவர் எதற்காகச் சொன்னார் என்பதை அவர் உண்மையாக உரைக்காதபோது நாம் அதன் உண்மைத்தன்மையை அறிய முடிவது இல்லை.

நாச்சியார் சடகோபனிடமே கேட்டு விடுவது நல்லது என எண்ணினார். இருவரும் கோவிலுக்குள் சென்று வணங்கிவிட்டு வந்தார்கள். சடகோபனிடம் சென்று நாச்சியார்தான் கேட்டார்.

''பாமாவை நீங்க பாமரத்தினு சொன்னீங்களே, என்ன காரணம்''

''தான் யார் என்ன அப்படினு ஒரு தெளிவில்லாம இருக்காளே அதை வைச்சுத்தான் சொன்னேன்''

பாமாவுக்கு இப்போது ஒன்றும் புரியவில்லை. தான் யார், என்ன என அறியாத அளவுக்கா நான் இருக்கிறேன், தன்னைப் பற்றி அப்படி என்ன இவர் புரிந்து வைத்து இருக்கிறார் அதுவும் பார்த்து சில மணி நேரங்கள் கூட ஆகவில்லை என யோசித்தாள். 

''என்ன சொல்றீங்க, என்ன தெளிவு இல்லை பாமாகிட்ட''

''இவளுக்கும், இந்தக் கோவிலுக்கும் முன் பிறவி தொடர்பு இருக்கு, அதை இவ இன்னும் உணரலை. இதோ இந்த புளியமரம் இருக்கே அது பல ஆயிரம் ஆண்டுகளா இங்கதான் இருக்கு, அந்த மரம் சாதாரணமான ஒன்னு இல்லை, ஆனா சாதாரணமான ஒன்னாத்தான் மத்தவங்க கண்ணுக்குத் தெரியும். அதுபோலத்தான் இவளும். நம்மைப் பத்தி நிறைய தெரிஞ்சிக்க நாமதான் முயற்சி பண்ணனும்''

பாமா இதை எல்லாம் கேட்டபடி அமைதியாகவே இருந்தாள்.

''உங்களுக்கு எப்படி இது எல்லாம் தெரியும்'' நாச்சியார் கேட்டார்.

சடகோபன் கலகலவென சிரித்தார்.

''நமக்குள்ள உள்ளுணர்வுனு ஒன்னு இருக்கு, அதைக் கேட்டா எல்லாம் தெரியும், அவளுக்கு உணரணும்னு தோனுறப்ப  உணரட்டும்''

சடகோபன் அவ்வாறு சொன்னதும் நாச்சியாருக்கு பாமாவை சந்தித்தபோது உண்டான ஒருவித உணர்வு நினைவில் வந்து போனது.

''நீங்க சொல்றமாதிரி எனக்கும் அவளைப் பார்க்கிறப்ப தோனிச்சி, எனக்கு உங்களை மாதிரி இப்படிச் சொல்லத் தோனலை''

''தோனாதும்மா'' எனச் சொல்லிவிட்டு பாமாவைப் பார்த்தார். பாமா பெரும் யோசனையில் இருந்து விடுபட்டவளாகவே இல்லை.

வாழ்வில் சில மனிதர்களை அவசியம் சந்திக்க வேண்டும். சில மனிதர்களை கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் சந்திக்கவே கூடாது. பாமாவுக்கு சடகோபன் வாழ்வில் சந்திக்க வேண்டிய நபராகவே தென்பட்டார், ஆனால் பாமா தான் ஒரு சாதாரணமான பெண் என்பதை மட்டுமே அறிவாள். தனக்குள் எவ்வித அபூர்வ சக்தி இல்லை என்பதையும் உணர்வாள். தனக்குத் தெரிந்தது எல்லாம் எல்லோரிடத்தில் பாசத்தோடும், அன்போடும் மட்டுமே இருப்பது, பட்டாம்பூச்சிகள் வளர்ப்பது. பெருமாளை காலை மாலை எனத் தவறாமல் வணங்கி பாசுரங்கள் பாடுவது. இதைத் தாண்டி அவளால் என்ன அவளைப் பற்றி உணர இயலும் என அவள் அறிந்திருக்கவில்லை.

பாமரத்தனம் என்பது ஒருவரின் தெளிவற்ற அறிவைக் குறிப்பிடுவதுதான். ஒரு விசயத்தைக் குறித்து தெளிந்த அறிவு இல்லாதபோதும் எதையும் அப்படியே நம்பி விடுவது. உண்மை எதுவென அறியாமல் உண்மை என நம்பிக்கைக் கொள்வது. ஒன்றைக் குறித்து முழுமையாகக் கற்றுக்கொள்வதால் அந்த விசயம் குறித்த இந்த பாமரத்தனம் அகன்றுவிடும்.

பாமரத்தனம் உடையவர்களை, பாமரன், பாமரள், பாமரத்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். பாமாவின் பாமரத்தன்மை என சடகோபன் நினைப்பது பாமாவின் இறை மீதான முழு உணர்வற்றத் தன்மையை. பாசுரங்கள் பாடுவதால் மட்டுமே ஒருவர் சிறந்த பக்தி கொண்டவராக ஆகி விட இயலாது. நமது வாழ்வில் நாம் நம்மை முழுமையாக உணர்வது கிடையாது. நமக்கு புற விசயங்கள் பெரிதாகப் படுகிறது, அக விசயங்களுக்கு நாம் அத்தனை முக்கியத்துவம் தருவதும் இல்லை.

''நீங்க பள்ளிக்கூடம் கட்ட உதவி பண்றதே பெரிய விசயம், அதை மட்டும் பண்ணிக் கொடுத்துருங்க''

பாமா சடகோபனிடம் சொன்னதும் வானத்தைப் பார்த்தவர்

''அதைப்பத்தி கவலைப்பட வேண்டாம், நீ என்ன வேணும்னு கேட்டாலும் நான் பண்ணித்தர ஏற்பாடு பண்றேன். உனக்குனு நான் பண்ற காரியம் எல்லாம் பெரும் புண்ணியம். ஸ்ரீ ஆண்டாளுக்கு உண்டான விருப்பத்தை ஸ்ரீ இராமானுசர் நிறைவேத்தி வைக்கலையா அது போல உன் விருப்பம் எதுவோ அதை நான் நிறைவேத்தி வைக்கிறேன்''

பாமா அவரை நோக்கி கைகள் கூப்பி வணங்கினாள்.

''அதோ அந்த பெருமாள் அவரை மட்டுமே வணங்கு'' என்றவர் நாச்சியாரிடம்  ''உங்க ஊருக்கு அடுத்த புதன்கிழமை அன்னைக்கு விருதுநகர்ல இருந்து வந்து பார்ப்பாங்க, இடம் எல்லாம் காட்டுங்க மத்த விசயங்களை நான் அதுக்கடுத்து நேர்ல வந்து பார்க்கிறேன்''

சில மனிதர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். தாங்கள் அறிந்தது போல நம்மால் சாத்தியமே அற்ற விசயங்களைக் கூட சொல்வார்கள். அவர்களுக்கு எப்படி இப்படியான விசயங்கள் தெரிகிறது என்பது வியப்புக்குரிய விசயங்களில் ஒன்று. மேலும் எவ்வித பலனும் எதிர்பாராத உதவி என்பது உலகில் அரிதான விசயம் ஆனாலும் அதைச் செய்யும் மனிதர்கள் உண்டு.

அன்று மாலையே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

''நான் பாமரத்தியாம்மா'' பாமா மிகவும் அப்பாவியாய் கேட்டாள்.

''நீ பாமரத்தி இல்லைம்மா, பட்டாம்பூச்சி. எல்லோரையும் மகிழ்விக்கிற பட்டாம்பூச்சி'' எனச் சிரித்துக் கொண்டே சொன்னார் நாச்சியார்.

பாமா புன்னகை புரிந்தாள்.

''நான் நானாகவே இருக்கேன்மா''

நாம் நாமாக இருப்பது ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆனால் பலருக்கும் நாம் நாமாகவே இருப்பது இல்லை போன்றே தெரிகிறது.

(தொடரும்)