Friday, 15 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் -3

சிங்கப்பூர்!

நாடா? நகரமா?

இந்த நாடு பற்றி நிறைய கேள்விப்பட்டதுண்டு. ஆனால் நேரில் சென்றுப் பார்த்தால் தான் உண்மை நிலவரம் அறிய இயலும். சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்று சேர்ந்த போது மணி மாலை 7.  முன்னரே, கார் எடுத்து சிங்கப்பூரில் ஓட்ட வேண்டும் என பதிவு செய்து இருந்தேன். ஏழு நபர்கள் சென்று இருந்தோம். அதில் இருவர் எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்.  விமான நிலையத்தில் இறங்கியதும் எங்களை வரவேற்க உறவினர் வந்து இருந்தார். அப்போது எனது மொபைல் ஒலிக்க எனக்கு சற்று ஆச்சரியம், பொதுவாக வெளிநாடுகளில் நான் லண்டன் மொபைல் உபயோகிப்பது இல்லை .

கார் கொண்டு வந்து இருக்கிறேன், கீழே நிற்கிறேன் வந்து பெற்றுக் கொள்ளவும் என சொன்னபோது புதிதாக இருந்தது. விமான நிலையத்தில் அவர்களது அலுவலகம் இல்லை என பின்னரே தெரிந்தது. கார் தந்தவர் வழிகாட்டி கொண்டுவர மறந்து போனார். அடக்கடவுளே என்று இருந்தது. உறவினர் உடன் வர காரில் இடம் இல்லை. ஹோட்டல் செல்லும் வழியை PIE CTE havelock road என வழி சொன்னார். வழிகாட்டி இல்லாமல் இரவு எட்டு மணிக்கு அதுவும் புதிய ஊர், தைரியமாகவே வாகனம் எடுத்தேன்.

அட! சாலைகள் அருமை! வாகனங்கள் நிதானம்! அவர் சொன்ன பாதை நினைவில் வைத்து சரியாக ஹோட்டல் வந்து அடைந்தேன். வழிகாட்டி இருந்தாலே சேருமிடம் வந்ததும் சுற்றும் நான் வழிகாட்டி இன்றி சரியாக சேர்ந்தது ஆச்சரியம். இரவு சாப்பாட்டிற்கு முருகன் இட்லிக்கடையை தொடர்பு கொண்டேன். அவர்களோ இன்னும் சிறிது நேரம் கடை மூடிவிடும் என்றார்கள். இரவு ஹோட்டலில் சாப்பிட்டோம். கார் நிறுத்தும் வசதி ஹோட்டலில் இருந்தது.

பண அட்டை ஒன்றை காரில் வைத்துக் கொண்டால் கார் நிறுத்தும் இடம், சில சாலைகள் என பணம் எடுத்துக் கொள்ளும் வசதி. மிகவும் பிடித்து இருந்தது. சாப்பிட்டு முடித்து ஹோட்டலில் பையை திறந்து பார்த்தேன் blog எழுத உதவிய tablet device காணவில்லை. தொலைந்து போனது!!!

(தொடரும்)



Sunday, 10 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 2

இந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ விஷயங்கள் நடந்தேறிவிட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம் என ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு முடிந்து போன கதை என கணக்கு எழுதலாம் என நினைத்தால் சில விசயங்கள் தொடர்கதையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நீ இல்லாமல் இருந்து இருந்தால், நான் இல்லாமல் இருந்து இருந்தால் போன்ற வசனங்களுக்கு குறைவில்லை. முடிந்து போன விசயங்களுக்கு கொண்டாடப்படும் உரிமைகள் என்றுமே மாறப் போவதில்லை.

2012ல் ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்து சென்ற பின்னர் நவம்பர் மாதம் மகனுக்கு 2013ல் மிருதங்க அரங்கேற்றம் நடத்த வேண்டும் என சொன்னபோது பயம் நிறைய இருந்தது. மிருதங்க குரு முதலில் வேண்டாம் என சொன்னவர் நவம்பரில் கேட்டபோது சரி என சொன்னதும் அதிக பயம் ஒட்டிக்கொண்டது. ஒரு வருட முயற்சிக்கு ஏழு எட்டு வருட உழைப்பு இருந்தது. மகனும் துணிவாக அரங்கேற்றம் பண்ணுகிறேன் என சொன்னபோது 2013ல் இந்தியாவுக்கு வருவது தள்ளிப்போனது. இந்த மிருதங்க அரங்கேற்ற அனுபவம்தனை ஒரு தனி பதிவாக வைத்து விட இருக்கிறேன்

2012 வந்த போது மாமனார் மாமியார் சிங்கப்பூரில் முன்னர் வசித்து இருந்ததால் அவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது என் மனைவியின்  ஆசை, ஆனால் கோவில் கும்பாபிஷேகம் என்பதால் செல்லவில்லை. இந்த வருடம் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என முடிவு செய்து மாமனார் மாமியார் என் அப்பா என அழைத்து செல்ல முடிவு செய்து விமானபயண சீட்டு கேட்டால் அதிக விலை. எப்போதும்  இல்லாமல் எர் இந்தியா பதிவு செய்தோம்

வித்தியாசமான பயண அனுபவம் என சென்னை வந்து இன்று சேர்ந்தோம். ஹோட்டல் பக்கத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் போனால் சென்னையில் இருப்பது போல் இல்லை. விமான பயண அனுபவத்தை பின்னர் குறிப்பில் வைக்கிறேன். இப்போது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். நாளை சிங்கப்பூரில் இருப்போம்.

(தொடரும்)

Saturday, 9 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் -1

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு இந்தியப் பயணம். ஊர் எப்படி இருக்குமோ? மக்கள் எப்படிப் பழகுவார்களோ என உள்ளூர அச்சம் இருக்கத்தான் செய்கிறது. சென்றமுறை வந்தபோது கோவில் கும்பாபிஷேகத்தில் நாட்கள் செலவழிந்தது. ஒரு பயணக்கட்டுரை எழுதாமல் விட்டுப்போனது அந்த ஒரு முறை மட்டுமே. இம்முறை எவ்வித கட்டுப்பாடுகள் அன்றி பயணம்.

நுனிப்புல் பாகம் இரண்டு அச்சடிக்கப்பட்டு விடும். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு நன்றி. அகநாழிகைப் பதிப்பகம் மூலம் நூல் வெளிவருவது உள்ளூர ஆனந்தம். சென்ற முறை வெளியிடப்பட்ட தொலைக்கப்பட்ட தேடல்கள் போது பலருக்கு நன்றி சொல்லாமல் விட்டுவிட்டேன். புத்தக வெளியீடு பின்னர் இந்தியா வந்தபோது கும்பாபிஷேக வேலை காரணமாக எவரையும் சந்திக்க இயலவில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்வு.

ட்விட்டரில் கடந்த ஒரு வருடம் நிறைய எழுதினேன். என் எழுத்துக்கு இளமை அடையாளம் தந்தது காதல் வரிகள். நிறைய அறிமுகங்கள். முத்தமிழ்மன்ற உறவுகள் போல பலர் அங்கே. எவரைச் சொல்வது? எவரை விடுப்பது? இந்த இந்திய பயணத்தில் வேறு ஒரு சிறு பயணமும் உண்டு. நான் எப்போதுமே பயணம் தொடங்கும் முன்னர், பயணத்தின் போது எழுதிப் பழகியதில்லை. மொத்தமாக மனதில் வைத்துக்கொண்டு எழுதுவதே வழக்கம். இம்முறை சற்று மாற்றி அமைப்போம்.

நாளை சென்னையில் இருப்பேன்

(தொடரும்)