Monday, 30 September 2013

டிவிட்டர்களில் அறிவு ஜீவிகள்

பொதுவாகவே இந்த சமூக இணைய தொடர்புகளுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்லை என்றே ஒதுங்கி கொள்வது உண்டு. எவரேனும் நண்பர்கள் லண்டன் வந்தால் கூட என்னால் நேரம் ஒதுக்கி சென்று பார்க்க இயலாத நிலையில் தான் எனது வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டு இருக்கிறது. அதே போன்று, ஊருக்கு சென்றாலும், இருக்கின்ற மூன்று வார விடுமுறையில் உறவினர்கள் தேடி சென்று பார்ப்பதில் கழிந்து விடுகிறது. இதன் காரணமாக எப்போதும் தனித்தே இயங்கி பழகியாகிவிட்டது. 

கணினியில் வந்து அமர்ந்து ஒரு விசயம் படித்த காலம் மலையேறி விட்டது, இப்போதெல்லாம் தமிழில் மொபைல் போனில் எழுதும் வசதியெல்லாம் பெருகிவிட்டதால் படித்த விசயத்திற்கு உடனே பதில் எழுதும் வசதி வந்துவிட்டது. வீட்டில் மொபைலில் அப்படி என்ன இருக்கிறது என திட்ட ஆரம்பித்து விட்டார்கள். தமிழை படிப்பது எத்தனை சுகம்? 

டிவிட்டரில் நான் இணைய வேண்டாம் என ஒதுங்கியே இருந்த காலம். இணைந்த பின்னர் என்ன எழுதுவது என புரியாத போது பலரின் எழுத்துகள் வாசிக்க நேர்ந்தது. எண்ணற்ற நல்ல கருத்துகளை பகிர்ந்து கொண்டு இருப்பதை பார்க்கும்போது அட என்று தான் தோணியது. பெரும்பாலும் தமிழ் டிவிட்டுகள் சினிமாவை பற்றியே இருந்தாலும் இன்னும் எனது வாசிப்பு விரிதல் அடையவில்லை. கூகுள் பிளஸ், பேஸ்புக் இவையெல்லாம் விட டிவிட்டர் மிகவும் வசதியாக இருப்பது போல் எனக்கு தோணுகிறது.

சமூக இணைய தளத்தில் பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் ட்விட்டரில் சற்று அதிகமாகவே இருக்கும் போல தெரிகிறது. வீணாக பேசி பொழுதை கழிக்கும் நபர்கள் உண்டு என்றே புலம்புவதை காண இயல்கிறது. இதை எல்லாம் தவிர்த்து அறிவியல் அறிஞர்கள் கூட வலம் வருகிறார்கள். சற்று அறிவை வளர்த்து கொள்ள உதவும் என்றே நினைக்கிறேன். 

திருக்குறள் போல டிவிட்டர் செயல்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எழுத இயலாது என்பதால் ஒரு சில வரிகளில் எண்ணத்தை பகிர வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. 

நான் சில விசயங்களை பொதுவாக சொல்லும் போது அதை சற்றும் நம்புவதில்லை. இவ்வுலகில் இதுதான் இப்படித்தான் என எவராலும் வரையறுக்க இயலாது. அவரவர் அனுபவத்தின் அடிப்படையில் செய்தியை பகிர்ந்து கொள்கிறார்கள். பொதுவில் சில விசயங்கள் தவறாகவே தெரிகிறது. 

தாய் மட்டுமே கருணை உடையவரா? தாயின் கருணையை ஒரு ஆணினால் மிஞ்ச இயலாதா? என்பன போன்ற விசயங்கள் பகிரப்படுகின்றன. சட்டென சிரிப்பு மூட்டும் வசனங்கள் வலம் வருகின்றன.நேரடியாக நேரம் கிடைக்கும் போது பல தமிழ் மக்களுடன் பேசும் வாய்ப்பு போன்றே இருக்கிறது. 

டிவிட்டரில் அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள், அவர்களை மட்டும் கண்டு கொள்ளுங்கள். தேவையில்லாமல் சண்டை போட்டு மன உளைச்சலுக்கு உட்படாதீர்கள். டிவிட்டர் அது ஒரு சமூகம் என்கிறார் ஒருவர். சரி என்றே படுகிறது! 

Thursday, 26 September 2013

ஜீரோ எழுத்து 8 ( அணுக்களின் உலகம் )

'நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்' என நம்மில் பலர் மிகவும் எளிதாக சொல்லிக் கொள்வோம். ஆனால் நமக்குள் இருக்கும் வேறுபாடு சொல்லிமாளாது. இப்படித்தான் இந்தியாவின் பெருமை பெருமளவில் சீரழிக்கப்பட்டது. இந்த அணுக்கள் பற்றி கிரேக்கர்கள் தான் முதலில் சொன்னார்கள் என அவர்களை பெருமைபடுத்தி பார்த்தது மேலைநாட்டு உலகம். ஆனால் இந்தியர்கள் இந்த அணுக்கள் பற்றி அதிகம் தெரிந்து இருந்தார்கள், இருப்பினும் அணுக்கள் பற்றி அறிவித்தவர்கள் கிரேக்கர்களா, இந்தியர்களா எனும் சர்ச்சை இன்னமும் உண்டு. 

2600 வருடங்கள் முன்னரே இந்த அணுக்கள் பற்றி சொல்லித் தரக்கூடிய  பள்ளிகள் இந்தியாவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஜெயின் சமயம் மிகவும் தழைத்தோங்கி இருந்த சமயம் அது. அஜிவிகா, கார்வகா, வைசேசிகா, நியாய போன்ற பள்ளிகள் அணுக்கள் பற்றியும் அணுக்கள் இணைந்தால் மூலக்கூறு உருவாகும் என்றெல்லாம் சொல்லி தந்தது. இதே சமயத்தில் கிரேக்கத்தில் தேமாக்ரிடுஸ், லூசிப்பஸ் போன்றோர்கள் அணுக்கள் பற்றி பேசினார்கள். 'அணுவை துளைத்து' என்றெல்லாம் தமிழில் பாடி வைத்து இருக்கிறார்கள். கிரேக்க தத்துவ மேதைகள் இயற்கை விதிகளை படித்து அணுவை சொன்னதால் முதல் அறிவியலார்கள் என சொல்லப்பட்டார்கள். ஆனால் வேதங்களில் கூட அணு பற்றிய செய்தி உண்டு. அணுவில் என்ன இருக்கும் எனும் அன்றைய சிந்தனை சற்று குறைவு அல்லது அது குறித்து அவர்கள் சொன்னது அழிந்து போயிருக்கலாம். 

200 வருடங்கள் முன்னர் தான் இந்த அணுக்களில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எல்லாம் கண்டு பிடித்தார்கள். டால்டன் கண்டுகொண்ட அணு, மென்டலீவ் இடம் விட்டு வரைந்த தனிம அட்டவணை எல்லாம் அறிவியலின் அதிசயம். வெற்றிடம் எதுவும் இல்லை என்பதுதான் இவர்கள் சொல்லாமல் சொன்னது. குவார்க்ஸ் எனும் அடிப்படை துகள்கள்  மூலமே இந்த புரோட்டான், நியூட்ரான் உருவானது என கணடுபிடித்தார்கள். அணுக்களின் உள்ள கருவில் இந்த புரோட்டான்கள்  இருக்கின்றன எனவும், இவைகளை சுற்றி எலக்ட்ரான்கள் வருகின்றன என ரூதர்போர்டு 1911ம் வருடம்  சொன்னபோதுதான் அணுக்கள் பற்றிய ஆராய்ச்சி மிகவும் சூடுபிடித்தது. சாட்விக் நியூட்ரான் கண்டுபிடித்தார். 1897ம் வருடம்  ஜே. ஜே. தாம்சன் எலக்ட்ரான் கண்டுபிடித்தார். 1912ம் வருடம் நீல்ஸ் போர் கண்டுபிடிப்பு எப்படியெல்லாம் எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன எனும் அறிவிப்பே குவாண்டம் கொள்கையின் ஒரு ஆரம்ப நிலை. பத்து பன்னிரண்டு வருடங்களில் குவாண்டம் இயற்பியல் மிகவும் பேசப்பட்டது. பால் டிரக் என்பவர் 1925ம் வருடம் குவாண்டம் இயக்கியல் உருவாக்கினார். 

1945ம் வருடத்திற்கு பின்னர் நூற்றுக் கணக்கான புது புது துகள்களை தற்போதைய அறிவியல் தொழில்நுட்பம் மூலம் கண்டு பிடித்தார்கள். இவைகள் ஹெட்றான் என அழைக்கப்பட்டன. புரோட்டான் மற்றும் நியூட்ரான் இவைகளில் அடக்கம். இருப்பினும் இந்த ஹெட்றான் குவார்க்ஸ் என அறியப்பட்டது. எலக்ட்ரான்கள் லெப்டான்கள் எனப்பட்டன. லெப்டான்கள் தனியாக இருக்கும், அதற்கு ஒரு இணைப்பு ஆற்றல் இல்லை. ஆனால் குவார்க்ச்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இணைப்பு ஆற்றலுடன் இருக்கும் என அறியப்பட்டது. 

குவார்கக்ஸ், குலான்ஸ் எனப்படும் துகள்களால் பிணைக்கப்பட்டு இருக்கும். இந்த குவார்க்ஸ் மேசான்ஸ், ப்ரையான்ஸ் என துகள்கள் உருவாக்கி பின்னர் ஹெட்றான்ஸ் துகள்களாக இருக்கும். ப்ரையான்ஸ் துகளே நியூட்ரான், புரோட்டான் என அறியப்பட்டது. ஒரு அணு எப்படி நிறை கொண்டது என்பதை அறிய தற்போது நிறைய பொருட்செலவில் நடத்தப்படும் ஆய்வில் கண்டறிய பட இருக்கும் போஸான் எனும் கடவுள் துகள் மேசாணில் இருந்து உருவானது. 

லெப்டான் தன்னில் ஆறுவகை கொண்டு இருக்கிறது. எலக்ட்ரான், மோவோ, டாவோ மற்றும் மூன்று வகை நியூட்ரினோக்கள். எலக்ட்ரான் எதிர் பாசிட்ரான் என்றெல்லாம் கண்டு சொல்லப்பட்டது. இவ்வாறு பல துகள்கள் கொண்டு இருக்கும் இந்த அணுக்கள் உலகம் மிக மிக விசித்திரமானது. அதைத்தான் குவாண்டம் கொள்கை சொன்னது. இந்த அணுக்களின் உலகம் முற்றிலும் வேறானது என. 

ஆறு குவார்க், ஆறு லெப்டான் சேர்ந்து உருவாக்கியதுதான் இந்த உலகம், இந்த பிரபஞ்சம் எல்லாம். மூன்றே குவார்க் இணைந்து ஒரு நிறையை உருவாக்கி விட்டது என எண்ணினார்கள். புரோட்டன், நியூட்ரான்! இதை எல்லாம் தாண்டிய ஒரு அணுக்களின் உலகம் இருப்பதாக அறிவியல் நம்பத் தொடங்கியதுதான் குவாண்டம் கொள்கை. கருந்துளைகள் கண்டறியபட்டபோது அறிவியல் சற்று ஸ்தம்பித்து போனது.

(தொடரும் ) 

Wednesday, 25 September 2013

பச்சை மாமலைபோல் மேனி

காலையில் இருந்து மாலை வரை எப்படியும் ஆயிரத்து எட்டு தடவை இந்த பாசுரத்தை கேட்டு இருந்து இருப்பேன். ''பச்சை மாமலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்''. எப்படித்தான் இப்படி ஒரு அற்புதமான பாசுரத்தை இயற்ற முடிந்ததோ என்றே எண்ணிக கொண்டே இருந்தான். என்னப்பா யோசனை என்றே அப்பா கேட்டார். நானும் பாசுரம் பற்றிய விசயம் சொன்னேன். இதில் என்ன பெரிய அற்புதம் இருக்கு என்றே சொல்லிவிட்டார்.
ஆனாலும் மனம் கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் அதே பாசுரம் மனதில் நிழல் ஆடிக் கொண்டு இருந்தது.

பக்கத்தில நாலு பிளாட் விலைக்கு வருதுடா, எப்படியாவது வாங்கிரனும் என்றார் அம்மா. ஏதுமா, நாலு போகம் நெல் விளையுமே, அந்த நிலத்திலா பிளாட் போடுறாங்க என ஆச்சர்யத்துடன் கேட்டேன். ஆமாடா, அடுத்த அறுவடையோட அந்த நிலம் எல்லாம் அபார்ட்மென்ட் ஆகிப் போகும்டா, யோசனை பண்ணிட்டு இருக்காதே, லோன் போடனும்னா, உடனே ஏற்பாடு செய்டா. பச்சை மாமமலைபோல் மேனி என பாடியபோது தொண்டை விக்கியது.

நகர்ப்புறங்களில் தான் இப்படி செய்கிறார்கள் எனில், கிராமப்புறங்களிலும் இந்த அவலம் தொடர்கிறதே என்றே மனம் வேதனையுற்றது. அந்த வேதனையில் அப்படியே தூங்கிப் போனேன்.

''பக்தா''

''வாருங்கள் சாமி, அமருங்கள்''

''மிகவும் மன வேதனையில் உழன்று கொண்டு இருக்கிறாயோ''

''ஆமாம், சாமி, விளைநிலங்கள் எல்லாம் வீடுகள் ஆகி கொண்டு இருக்கின்றன, இப்படியே போனால் இந்த பூமி தரிசாக மாறிவிடுமே, மக்கள் உணவுக்கு மிகவும் கஷ்டப்படுவார்களே, அதை நினைத்துதான் வேதனை அடைந்தேன்''

''பக்தா, உனது வேதனை புரிகிறது, எனினும் இந்த வேதனை எல்லாம் ஆகாது, எல்லாம் அந்த விஷ்ணு பார்த்து கொள்வான்''

''விளைநிலங்களை காப்பாற்ற தெரியாத விஷ்ணு, என்ன விஷ்ணு''

''பக்தா, விஷ்ணுவை கோபித்து என்ன லாபம், நமது மானிடர்களின் செயல்பாடு அப்படி, என்ன செய்வது''

''சாமி, இறைவன் நினைத்தால் எல்லாம் நடத்தலாமே''

''நடத்தலாம், நினைக்க வேண்டுமே, சரி, ஒரு பாசுரம் பற்றி நிறைய யோசனையில் இருந்தாயே''

''ஆமாம், சாமி, நல்ல வேளையாக நினைவுபடுத்தி விட்டீர்கள், பச்சை மாமலைபோல் மேனி எனும் பாசுரம் தான் என்னை நிறைய யோசிக்க வைத்தது''

''அது அற்புதமான பாசுரம் ஆயிற்றே, அதில் என்ன ஐயப்பாடு''

''அதெப்படி பச்சை மாமலைபோல் மேனி?''

''காக்கை சிறகினிலே நந்தலாலா எனும் பாடலில் கூட ஒரு அற்புதம் இருக்கிறது. நீல வண்ண கண்ணா வாடா எனும் பாடலில் கூட அற்புதம் இருக்கிறது''

''சற்று விளக்கமாக சொல்லுங்கள் சாமி''

''பக்தா, இப்போதெல்லாம் உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது, முன்னர் எல்லாம் நான் வந்தால் என்னை விரட்டுவதில் என் மீது வெறுப்பு காமிப்பதில் மட்டுமே குறியாய் இருப்பாய், ஆனால் இப்போதோ பொறுமையை கடைபிடிக்கும் வழக்கம் வைத்து இருக்கிறாய்''

''சாமி, விளக்கம் சொல்லுங்கள்''

''இந்த பூமியில் கரியமில வாயு மட்டுமே நிரம்பி இருந்தது. அப்போது இந்த விஷ்ணுவின் உடல் கரியநிறம் கொண்டு இருந்தது. வெறும் கரியமில வாயுவை உட்கொண்டே வந்த விஷ்ணு தனது செல்களில் குளோரோபிளாஸ்ட் அதாவது தற்போது செடி, மர இலைகளில் எல்லாம் இருக்குமே அது போல கொண்டு வந்தார். அப்படி கொண்டு வந்த சமயத்தில் அவரது உடல் பச்சை நிறமானது. அப்படி நமது பூமியில் இருந்த கரியமில வாயு எல்லாம் இந்த குளோரோபிளாஸ்ட் மூலம் ஆக்சிஜன், குளுக்கோஸ் எல்லாம் உருவாக்கினார். இந்த ஆக்சிஜன் குறைவான போது அவரது உடல் நீல வண்ணம் ஆனது. எப்போது பச்சை வண்ணம் கொண்டாரோ இதே சமயத்தில் தான் ஆர்கேபாக்டீரியா, சையனோபாக்டீரியா எல்லாம் தோன்றியது. அவைகளும் இந்த கரியமில வாயுவை உட்கொண்டு உணவு உற்பத்தி செய்தன. இப்படி உருவானபோது நீராவி எல்லாம் குளிர்ந்து தண்ணீராக மாறியது. அப்போது தண்ணீரில் பாசிகள் உருவான. அந்த பாசிகள் கூட பச்சை வண்ணம் கொள்ள ஆரம்பித்தது. அதற்கு பின்னர் மரம் செடிகள், கொடிகள் எல்லாம் தோன்றியதும், விலங்கினங்கள் உருவானதும் நீ அறிந்தது தானே''

''செவ்வாய் கிரகத்தில் சென்று எதற்கு விஷ்ணு பச்சை வண்ணம் கொள்ள வில்லை சாமி"

''அங்கே இன்னும் கரிய நிறமாகத்தான் இருக்கிறார் பக்தா''

''சாமி, பச்சை மாமலைபோல் மேனிக்கு ஏதோ விளக்கம் சொல்கிறீர்களே, கரியமில வாயு இந்த பூமியில் அதிகரிப்பதாக சொல்கிறார்களே''

''பக்தா, இந்த பூமியில் எல்லா விளைநிலங்களும் மாறிவிடும் எனில் மனிதர்களில் உள்ள தோல் செல்கள் எல்லாம் குளோரோபிளாஸ்ட் உருவாக்கிக் கொண்டு தனக்கு தானே உணவு தயாரித்து கொள்ளும். அதனால் எதற்கும் கவலைப்பட வேண்டாம். கரியமில வாயு அதிகரிப்பின் இந்த குளோரோபிளாஸ்ட் கொண்ட செல்களுக்கு கொண்டாட்டம் தானே. இந்த பூமி எத்தகைய இன்னல்களுக்கு உட்பட்டாலும் மீண்டும் வளமாகவே இருக்கும்''

''சாமி, இப்படி நீங்கள் பேசுவதுதான் எனக்கு வெறுப்பை வரவழைக்கிறது''

''பச்சை மாமலைபோல் மேனி''

சாமியார் பாடியதை கேட்டு விழித்துப் பார்த்தேன். சாமியார் அங்கே இல்லை. வீட்டில் தேடினேன் அம்மா, அப்பா கூட இல்லை. வீட்டின் வெளியில் வந்து பார்த்தேன். அம்மாவும், அப்பாவும் வீட்டுத் தோட்டத்தில் மரங்கள் நற்றுக் கொண்டு இருந்தார்கள். நானும் வேகமாக அவர்களுக்கு உதவப் போனேன்.