Monday, 27 February 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 4

பகுதி - 3 

திருமூலர் கதையை பற்றி அறிந்ததும் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்றே மனம் சொல்லி அமைதி கொண்டது. பேய் பிடித்து அதை விரட்ட சொல்லி எங்கள் ஊருக்கு முனியாண்டி என்ற ஒரு பூசாரியிடம் வந்த பலரின் கதையை கேட்டதுண்டு. ஒவ்வொருவரும் ஒரு விதமாகவே சொன்னார்கள். அந்த அம்மா, அந்த பொண்ணு போலவே பேசினாங்க. என்ன நடந்த்துச்சினு, எப்படி நடந்துச்சுன்னு சொன்னாங்க என்றெல்லாம் சொன்னதை கேட்டதும் மனதில் ஆச்சர்யம் பொங்கி வழிந்தது. ஆனால் இதுவரை எதையும் சோதனை செய்தது இல்லை. 

நான் உறங்கி கொண்டிருக்க, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஆவியை வைத்து விளையாடிய கல்லூரி நண்பர்கள் சொன்ன கதை பலிக்காமல் போனது கண்டு புன்முறுவல் மட்டுமே செய்ய முடிந்தது. 

திருமூலரின் கதை சுருக்கத்தை மீண்டும் பார்க்கலாம். 

திருமூலர் சுந்தரநாதா எனும் இயற்பெயர் கொண்டவர். இவர் வாழ்ந்த காலம்  எட்டாம் நூற்றாண்டு அல்லது பதினோராம் நூற்றாண்டு என்றே கருதபடுகிறது. அதுவும் இவர் எழுதிய திருமந்திரம் மூலமே இவரது காலம் கணிக்கப்படுகிறது. அதாவது எப்போது வாழ்ந்தார், எப்படி வாழ்ந்தார் என்கிற ஒரு விபரங்கள் கிடைக்காத படச்சத்தில் இவரைப் பற்றிய ஒரு விசயம் பரவலாகப் பேசப்படுவது ஆச்சர்யமே. அதாவது இவர் கூடு விட்டு கூடு பாயும் கலையை கற்று கொண்டவராக சொல்லப்படுகிறது. இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராகவும், அறுபத்தி மூன்று நாயன்மார்களிலும் ஒருவராகவும் போற்றப்படுகிறார். 

இவர் இமாலய மலைப்பகுதிகளில் தோன்றியவர் என்றும் கூறப்படுகிறது. இமாலய மலைப்பகுதிகளில் தோன்றிய இவர் தென்னிந்தியாவிற்கு வந்து அதுவும் தமிழில் மூவாயிரத்திற்கும் மேலாக பாடல்கள் இயற்றி இருப்பது  பெருமைக்குரியது. பொதுவாகவே இந்த சித்தர்கள், முனிவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் போலவே இடம் விட்டு இடம் செல்லுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். மனிதர்கள் வணிகம் செய்ய செல்வார்கள், இவர்கள் எதற்கு இப்படி இடம் பெயன்றார்கள்? 

இவர் பொதிகை மலையில் இருந்த தனது நண்பர் அகஸ்தியரை  காணவே கைலாய மலைகளில் இருந்து கிளம்பினாராம். அன்றைய காலத்தில் தொலைபேசி இல்லை, கடித போக்குவரத்து புறா மூலம் இருந்து இருக்கலாம். இதை எல்லாம் உபயோகிக்காமல் நேரடியாக அகஸ்தியரை காண திருமூலர் கிளம்பிவிட்டார். அப்படி வரும்போது சாத்தனூர் எனும் ஊருக்கு அருகில் பசுக்கள் எல்லாம் இறந்து போன ஒரு மனித உயிரை சுற்றி அழுது கொண்டிருந்தனவாம். அந்த மனிதர் மூலன், அந்த மாடுகளை தினமும் மேய்ப்பவன். இப்படி மாடுகள் அழுவதை கண்டு இரக்கப்பட்ட திருமூலர், தான் ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவு செய்தார். தனது உடலை ஒரு மரக்கட்டையில் பத்திரப்படுத்திவிட்டு இந்த மூலன் உடலில் தான் உட்புகுந்தார். அந்த மாடுகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தன. அந்த மாடுகளை எல்லாம் வீட்டில் பத்திரமாக சேர்த்துவிட்டு தனது உடலை பார்க்க வந்த திருமூலர் உடல் காணாமல் போனது கண்டு கலக்கமுற்றார். இப்போது மாடுகள் திருமூலருக்கு வழிகாட்டியதா? அல்லது மூலனின் உடலில் நுழைந்ததால் எல்லா விசயங்களும் திருமூலருக்கு நினைவுக்கு வந்ததா? இப்போது தான் மூலன் இல்லை என்கிற ஒரு உணர்வு திருமூலருக்கு இருந்து இருக்க வேண்டும், அதே வேளையில் மூலன் என்பவனின் எண்ணங்களும் திருமூலருக்கு இருந்து இருக்க வேண்டும். எது சரி? 

அந்த மூலனின் உடலில் இருந்து கொண்டே பல பாடல்கள் இயற்றியமையால் திருமூலர் எனும் பெயர் அடைந்தார் என்கிறது வரலாறு. இப்போது இந்த பாடலை எழுதியது மூலன் என்பவனா? அல்லது மூலனின் உடலில் உட்புகுந்த சுந்தரநாதா எனும் திருமூலரா? மூலனின் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் சிந்தனையை உருவாக்கியது திருமூலரின் ஆன்மாவா? அல்லது மூலனின் சிந்தனைகளா? 

சுந்தரநாதா என இருந்தவரை எந்த ஒரு பாடலும் இயற்றியதாக வரலாறு இல்லை. அதுவும் சுந்தரநாதா என இருந்தபோது என்ன மொழி இவர் அறிந்து இருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் கிடையாது. மூலன் தமிழன். தமிழில் பாடல் இயற்றிய திருமூலர் இதை எங்கேனும் சொல்லி இருக்கிறாரா என பாடல் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறேன். 

எதற்கு திருமூலர் கதை? எழுதியவரே இப்படி எல்லாம் எழும் கேள்விகள் என ஆங்காங்கே பதில்கள் எழுதி வைத்து இருக்கிறார். அதே வேளையில் நரம்பு மண்டலத்தை அலசி பார்க்க இதுதான் ஒரு சிறந்த வழியாக தெரிகிறது. பரிணாமம், கடவுள் என்றெல்லாம் பேசி பேசி மொத்த நரம்பு மண்டலத்தை சிதைத்து கொண்டிருக்கிறோமோ என்னவோ! 

நரம்புகள் பற்றிய பார்வை மூலம் எப்படி ஒருவர் முக்காலமும் அறிந்தவராக மாற முடியுமா என்பதை காணலாம். இந்த நரம்பு மண்டலம் தான் சிந்தனைகளை தூண்டுகின்றனவா? நமது மூளைக்கும், விலங்குகளின் மூளைக்கும் என்ன வித்தியாசம்? இந்த மூளையை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடவுள் பகுதி என ராமச்சந்திரன் என்பவர் மூளையில் ஒரு இடத்தை கண்டுபிடித்ததாக நுனிப்புல் நாவலில் எழுதி வைத்தேன். அதாவது கடவுள் பற்றாளர்கள் மத, கடவுள் எண்ணம் எழும்போது மூளையில் ஒரு பகுதி அதிக அளவில் செயல்படுவதாகவும், அதே வேளையில் கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு மூளையில் அந்த பகுதி செயல்படுவதில்லை எனவும் சொல்லி இருப்பது விவாதத்திற்கு உரியது என்றாலும் ஒன்றை ஒன்றுடன் தொடர்பு படுத்தி பார்ப்பதுதான் அறிவியலில் உள்ள வேலை. 

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்றும் இல்லை
அவனன்றி ஊர்புகு மாற்றி யேனே (6 )

மேற்குறிப்பிட்டபடி திருமூலர் வரலாறு என்றே திருமூலரே பல பாடல்களில் எழுதி இருக்கிறார். அதில் ஒரு பாடலில் இப்படி எழுதி இருக்கிறார். 

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது 
முன்னைநன் றாக முயல்தவஞ் செய்கிலர் 
என்னைநன் றாக இறைவன் படைத்தனன் 
தன்னைநன் றாக தமிழ்ச்செய்யு மாறே (80 )

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே  சதாசிவ னாயினேன் 
நந்தி அருளால்மெய்ஞ்  ஞானத்துள்  நண்ணினேன் 
நந்தி அருளால் நானி ருந்தேனே (92 )

இந்த பாடலில் திருமூலர் ஒரு ரகசியத்தை எழுதி வைத்து இருக்கிறார். மூலனை நாடிப்பின் சதாசிவ னாயினேன். 

அதிலும் ஒரு சிறப்பு. 

சுந்தரனாதன் எழுதியது என்று திருமூலர் சொல்லவில்லை. 

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் 
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் 
ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே (99 )

யான் பெற்ற பெறுக இவ்வையகம் என்றே சொல்கிறார் திருமூலர். அதோடு மட்டுமில்லாமல் மூலனின் உடலில் உட்புகும் முன்னர் சிவனோடுதான் இருந்தேன் என்கிறார். சிவநாமங்கள் ஓதிக்கொண்டிருந்தேன். நந்தியின் இணையடிக்கீழ்  இருந்தேன் என்கிறார். 

விநாயகர் பற்றி துதி எழுதியது திருமூலர் இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு நிலவுவது உண்டு. திருமூலருடன் சேர்ந்து  பல முனிவர்களை சந்திப்பதோடு நரம்பு மண்டலம் நோக்கிய பயணம் தொடரும்.  

Sunday, 26 February 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - ஹிட்டிடேஸ்

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி, என்னை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். இந்த வரிகள் உலகில் உள்ள பலருக்கும் பலவாறு பொருந்தும். சுடர்மிகு அறிவுடன் இருப்பவர்களே முட்டாள்தனமாக செயலாற்றும்போது அறிவற்று இருப்பவர்களின் நிலை குறித்து எதுவும் பேச வேண்டியதில்லை. எது சரி, எது தவறு என்பதில் காலமும், சூழலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என வரும்போது அங்கே எதுவுமே உறுதியாய் நிற்பதில்லை.

ஹிட்டிடேஸ் என்பவர்கள் இந்திய-ஐரோப்பா மொழி பேசும் கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போதைய துருக்கி நாடும், அன்றைய பெரும்பகுதியான அனடோலியா எனப்பட்ட பகுதியில் வாழ்ந்தவர்கள். இந்த அனடோலியா எனும் பகுதியானது கடல்களால் சூழப்பட்டதாகும். வடக்கே  கருங்கடல். மேற்கே ஏகன் கடல். தெற்கே மெடிடேரியன் கடல். மற்றும் மலைகளால் சூழப்பட்ட இடமாகும்.



இவர்களின் கலாச்சாரமும், நாகரிகமும் மறந்து போன ஒரு வரலாறாகவே ஆகிப்போனது. மேசபோடோமியா நாகரிகத்தில் உட்பட்ட ஒரு பிரிவினர் இவர்கள் என்றே தெரிய வருகிறது. இந்த அன்டோலியா பல்வேறு நாகரிகங்களுக்கு அடித்தளமிட்ட ஒரு இடமாகும். ஆயிரத்து தொள்ளாயிரத்து ஆறாம் ஆண்டு, துருக்கியில் உள்ள ஒரு இடத்தில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் எழுத்து மாத்திரைகள் இவர்களது வாழ்க்கை முறை, சட்ட திட்டங்கள் எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டன. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இப்படியொரு நாகரிகம் இருந்தது என்பது தெரிய வந்தது. இவர்கள் மிகவும் தொன்மையான இந்திய-ஜெர்மானிய மொழி தெரிந்தவர்களாகவும், பல எழுத்து முறைகளை அறிந்தவர்களாகவும் இருந்து இருக்கிறார்கள். குறிப்பாக குநெய்பாரம் எனும் எழுத்து வடிவமாகும். சுமேரியன் காலத்தில் இந்த எழுத்து ஐயாயிரம் வருடங்கள் முன்னர் பயன்படுத்தபட்டவை. இவர்களின் மொழி நேசாலி என்றும் ஹட்டி என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் பற்றிய குறிப்பு பைபிளில் இருப்பதாக தெரிகிறது. அதனாலேயே இவர்கள் ஹிட்டிடேஸ் என அழைக்கப்படுகிறார்கள் என்கிறது வரலாறு.

இவர்களின் தோற்றம் மூவாயிரத்து எண்ணூறு வருடங்கள் முன்னர் என்றே அறியப்படுகிறது. இவர்கள் கிட்டத்தட்ட நானூறு வருடங்கள் போராடி பல பிரதேசங்களை தங்களின் ஆளுமைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். இவர்களின் காலம் வெண்கல காலம் ஆகும். அதற்கு பின்னர் இரும்பு காலத்தில் அடியெடுத்து வைத்தவர்களும் இவர்களே. இந்த இந்திய-ஐரோப்பா ஹிட்டிடேஸ் மக்கள் ஹட்டி எனும் ஒரு அரசமைப்பை அனடோலியாவில் இருந்த மக்களுடன் சேர்ந்து உருவாக்கியதாக குறிப்புகள் தென்படுகிறது. இவர்கள் வணிக வியாபாரம் செய்ய நகரங்களை உருவாக்கியபோது பக்கத்து பிரதேச மக்களுடன் சண்டை போட வேண்டி வந்ததால் ஹட்டுசா எனும் இவர்களின் நகரம் அழிக்கப்பட்டது. ஆனால் ஹட்டுசி எனும் அரசரால் அலெப்போ எனும் இடம் கைப்பற்றபட்டதும், ஹட்டுசா மீண்டும் அதி வேகத்துடன் உருவானது.

பின்னர் இவர்கள் சிரியா, லெபனான் போன்ற இடங்களை எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள். லெபனான், சிரியா போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்கள், வன்முறைகள், கொலைகள் எல்லாம் எதன் அடிப்படையில் என்பதை இப்போது ஆராய வேண்டியது இல்லை. அந்த காலத்தில் எதிர்ப்புகள் மற்றும் பஞ்சங்கள் ஏற்பட்டதால் தேலேபினு எனும் அரசர் ஒரு அரசியல் அமைப்பை கொண்டு வந்தார். தேலேபினு கொண்டு வந்த அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் கோவில் இடங்கள், ராணிகள் இடங்கள் எல்லாம் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன. சரியாக நடைமுரைபடுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டது. அன்றைய காலத்தில் மரண தண்டனைகள், வாரிசு நடைமுறை எல்லாம் அழித்தார் தேலேபினு.

ஹிட்டிடேஸ் சூரியனை கடவுளாக கும்பிட்டு வந்தார்கள். அதே வேளையில் ஆயிரம் கடவுளர்களை கொண்டவர்களாகவும் விளங்கினார்கள். புதிய புதிய கடவுளர்களை அவர்கள் அறிமுகபடுத்தி கொண்டே வந்தார்கள். இவர்களின் கடவுள் கலாச்சாரம் பெருமளவுக்கு இன்றைய இந்திய நாகரிகங்களுக்கு சரியாகவே இருக்கிறது. எதற்கெடுத்தாலும் ஒரு கடவுள் என்கிற கோட்பாடு பெருமளவில் இருந்து இருக்கிறது. ஹிட்டி ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் சுப்பிழுலியுமா என்பவர். உள் நகரங்கள், வெளி நகரங்கள் என பிரித்ததோடு இல்லாமல், ஹட்டுசாவை மிகப்பெரிய தலைநகரமாக மாற்றினார். ஒரு காலகட்டத்தில் எகிப்து நகரமே இவர்களின் கட்டுபாட்டிற்கு வர வேண்டிய சூழலில் எகிப்துவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பெண் கேட்டு சென்ற ஹிட்டிடேஸ் இளவரசர் சுட்டு கொல்லப்பட்டதால் இவர்களுக்கு எந்த உறவும் இல்லாமல் போனது என்பதை விட உறவு சீரழிந்தது.

இதனால் எகிப்துவுக்கும் இந்த ஹட்டி நாட்டு பகுதிக்கும் வணிகத்தில் பெருமளவு சண்டை ஏற்பட தயாராக இருந்தது. வாழ்க்கையில் சீரழிய என்ன வேண்டும்? போர் தொடங்கியது. எகிப்து இளவரசர் ராம்செஸ் ஹிட்டிடேஸ் பகுதியை வென்றாலும் ஒரு கட்டத்தில் அவர் ஹட்டி அரசரால் கொல்லப்பட்டார். அதற்கு பின்னர் வந்த அரசர் அமைதி ஒப்பந்தம் தனை போட்டதால் இந்த இரண்டு ராஜ்ஜியங்களுக்கு இடையே நல்ல உறவு வளர்ந்தது. ஆனாலும் எல்கை அதிகரிப்பதில் ஹட்டி அரசர்கள் பின் வாங்கவில்லை. சைப்ரஸ் நாட்டினை வளைத்தார் துடாலியா. அங்கே பெருமளவு கோவில்கள் கட்டப்பட்டன.

வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பதற்கேற்ப இவர்களின் ராஜ்ஜியத்தை அடக்க வந்தார்கள் வேறொரு மக்கள். அதே வேளையில் பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடின. சரியாக மூவாயிரம் வருடங்கள் முன்னாள் மொத்த ஹட்டுசாவும் அழிக்கப்பட்டது, அவர்களின் நாகரிங்களும் தொலைந்து போனது. ஒரு அருமையான வாழ்க்கையை வாழ்ந்து ரசித்து இருக்க வேண்டிய அந்த ஹிட்டிடேஸ் மக்கள் எப்படி சீரழிந்ததற்கு நல்லுறவு பேணாமையே காரணம். அறிவுடன் இருக்க தெரியாதவர்கள் அழிவை நோக்கியே பயணிக்கிறார்கள்.

இந்த ஹிட்டுசாவை அழித்தவர்கள் யார்?

Friday, 24 February 2012

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 13

பாதை 12 

13 . பகுப்பாய்வு முறைகள்

மிளகுதனில் இருந்து பைப்பெரின் எனும் மூலக்கூறினை பிரித்தெடுத்தாகிவிட்டது. அது பைப்பெரின் தானா என சரி செய்து கொள்ள வேறு சில செய்முறைகளை செய்தாகவேண்டிய சூழல். அவை அனைத்துமே ஒருவகையில் ஒளி, எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், காந்தபுலம் போன்ற விசயங்களின் மூலமே நடைபெறுகின்றன.

அப்போதுதான் ஆய்வகத்தில் எழுதபட்டிருந்த ஒரு வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பொருளின் தனித்தன்மையை எந்த ஒரு ஆய்வும் முழுமையாக சொல்லிவிட இயலாது என்றே எழுதப்பட்டு இருந்தது. அது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனெனில் நாம் ஒரு பொருளை ஆய்வு செய்யும் பொது அதற்கான இலக்குகளை மட்டுமே வைத்து செயல்படுவது உண்டு.

ஒரு மூலக்கூறினை சரியா என அறிந்து கொள்ள பயன்பாட்டில் உள்ள எளிய முறைகள். முதலில் யு.வி. (அல்ட்ராவயலட்). அதற்கடுத்து எம்.எஸ் (மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி), அதற்கடுத்து ஐ.ஆர் (இன்ப்ரா ரெட்ஸ்பெக்ட்ரோஸ்கோபி) அதற்கடுத்து என்.எம்.ஆர் (ந்யுக்ளியர் மேக்னேடிக்  ஸ்பெக்ட்ரோஸ்கோபி). இப்படி ஒவ்வொரு நிலையிலும் அந்த மூலக்கூறு பகுத்தறியப்பட்டு இறுதியில் எல்லா ஸ்பெக்ட்ரம்களை ஆய்வு செய்து இதுதான் மூலக்கூறு என்று உறுதி செய்வதாகும். அப்படி இந்த முறைகளுக்கு உட்படுத்தபடாத மூலக்கூறின் வடிவமைப்பை கண்டு கொள்வது மிகவும் கடினமாகும். இதை எல்லாம் செய்தாலும், உண்மையிலேயே இந்த மூலக்கூறுதானா என்பதை இறுதியாக உறுதி செய்வது ஈ.எம் (எளிமெண்டல் அனலிசிஸ்). இந்த ஈ. எம் மூலம் அந்த மூலக்கூறில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் சதவிகித அளவு கண்டுபிடிக்கப்படும். ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டிருக்கும் ஒத்த மூலக்கூறுகள் இருந்தால் சற்று பிரச்சினைதான், எனினும் மற்ற ஆய்வுமுறைகள் மூலம் தெளிந்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட தொழில்நுட்பங்களை நான் ஆய்வு மேற்கொள்ளும் முன்னர் செய்தது இல்லை. முதலில் எம்.எஸ் செய்ய வேண்டும் என மூலக்கூறினை எடுத்து கொண்டு வேறொரு இடத்தில் உள்ள ஆய்வகம் சென்றேன். அங்கே ஒரு படிவத்தை நிரப்பி கொடுத்துவிட்டு எனது மின்னஞ்சல் தர சொன்னார்கள். ஆய்வு செய்ததும் முடிவினை அனுப்பி வைக்கிறோம் என சொன்னதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. நான் கற்று கொள்ள என்ன இங்கே இருக்கிறது என நான் இந்த உபகரணத்தை இயக்கலாமா என அங்கே இருந்த பெரிய உபகரணத்தை சுட்டி காட்டினேன். அதற்கு அவர் சிரித்து கொண்டே இதோ இந்த மூலக்கூறினை இங்கே வைத்துவிட்டால் அதோ அங்கே இருக்கிற கணினியில் அரைமணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும். இதை எங்கே பெரிதாக இயக்கப் போகிறாய் என்றார்.

மனிதர்களின் சிந்தனை, கண்டுபிடிப்புகள் என ஒவ்வொன்றும் பெரிதும் ஆச்சர்யம் அடைய செய்பவை. ஒரு மூலக்கூறினை பகுதி பகுதியாக சிதைத்து அந்த மூலக்கூறின் நிறை எண்ணை கண்டு கொள்ளும் முறை தான் இந்த எம்.எஸ். இந்த எம். எஸ் மூலம் ஒரு மூலக்கூறின் நிறை எண்ணை துல்லியமாக சொல்லிவிடலாம், இருப்பினும் இந்த எம்.எஸ் மூலம் ஒரு மூலக்கூறு நூறு சதவிகிதம் தூய்மையானதா என்று மட்டும் கண்டுகொள்ள முடியாது.

அடுத்த பகுதியில் ஒவ்வொரு உபகரணம், அது எப்படி செயல்படுகிறது, எனது அனுபவங்கள் குறித்து பார்க்கலாம்.

எம்.எஸ். உபகரணம். நன்றி கூகிள்.