வலி என்பது என்னவெனில் ஒரு தனிப்பட்ட மனிதரின் உணர்வுகளால் உண்டாவது, மேலும் ஏதேனும் திசுக்களில் பாதிப்பு ஏற்படுவதாலும் உணரக் கூடியது. இந்த வலி ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டும்போது நம்மால் தாங்க முடியாமல் போகிறது. வலி என்பது எப்போதும் நம்முள் இருந்து கொண்டிருக்கும் ஒன்றாகும். அதை உணரும் தன்மை வரும்போதுதான் வலி என அறிகிறோம். நமக்கு அதிக வலி ஏற்படும் போது நாம் உட்கொள்ளும் மருந்துகள் இந்த வலி உணரக் கூடிய அளவினை அதிகரிப்பதால் நாம் வலியில் இருந்து நிவாரணம் பெறுவதாக கருதுகிறோம்.
ஒரு வலி ஏற்படும் போது அது சம்பந்தப்பட்ட திசுக்கள் நீக்குவதன் மூலமாகவோ, வேறு வழியின் மூலமோ நிவாரணம் தேடுவது வாடிக்கை. முதுகு வலி, தலை வலி, பல் வலி, மூட்டு வலி, அடி வயிற்று வலி போன்றவைகளால் வரும் உபாதைகள் மிகவும் இம்சையானவைகள்.
இப்படிப்பட்ட வலிதனை உணரும் தன்மை இருபாலருக்கும் ஒரே விதத்தில் தான் இருக்கிறதா எனும் ஆராய்ச்சி பல வருடங்களாக இருந்தாலும் கடந்த ஆறு வருடங்கள் மேலாக மிகவும் ஒரு முக்கியமான ஆராய்ச்சியாகவே கருதப்படுகிறது. வலி சம்பந்தப்பட்ட விசயங்கள் ஆண்களை விட பெண்களால் மிகவும் அதிகமாகவே உணரப்படுவதாக வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் ஒரு தன்மை சார்ந்தவையாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் நிச்சயமாக இந்த மாதிரியான வலி வித்தியாச உணர்வுக்கு ஏதேனும் காரணம் இருக்கலாம் என அந்த காரணத்தையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள். சமூக, கலாச்சார எண்ணங்கள், பயம், மன அழுத்தம், நடந்து கொள்ளும் முறை, பாலின ஹார்மோன்கள் ஆகியவை வலி உணரும் தன்மைக்கு ஒரு அளவுகோலாக செயல்படுகிறது.
பொது இடங்களில் ஆண்கள் அழுவது கௌரவ குறைச்சல் என கருதப்படுகிறது. வலி ஏற்பட்டாலும் அதைத் தாங்கிக் கொண்டு 'ஹி ஹி, வலிக்கலையே' என தைரியம் காட்டும் ஆண்கள் அதிகம் எனினும் தனியாக அறையில் சென்று அந்த வலிதனை தாங்க முடியாது அழும் ஆண்களும் உண்டு என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள்.
நமது உடலில் இருக்கும் பாலின ஹார்மோன்கள் இந்த வலி உணரும் தன்மைக்கு ஒரு காரணியாக இருக்கிறது, எப்படியெனில் இந்த பாலின ஹார்மோன்களும் அதனுடைய ரிசெப்டார்களும் அதிக அளவில் நமது மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படுகிறது. வயதுக்கு வந்த பின்னர் பெண்களில் இந்த வலி உணரும் தன்மை அதிகம் வேறுபடுவது இந்த பாலின ஹார்மோன்களால்தான். பெண்களில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஷ்டீரோன் இந்த வலி உணரும் தன்மையில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ப்ரோஜெஷ்டீரோன் அளவு அதிகம் இருக்கும்போது இந்த வலி உணரும் தன்மையின் அளவு அதிகரிக்கப்பட்டுவிடுகிறது. இதனால் கருவுற்று இருக்கும் பிற்காலங்களில் அதிக அளவிலான வலியை பொறுத்துக் கொள்ள முடிகிறது. மாத விடாய் காலங்களில் முதல் நான்கு ஐந்து நாள்களில் இந்த ப்ரோஜெஷ்டீரோன் குறைந்த அளவு இருப்பதால் வலி சற்று அதிகமாகவே உணரப்படுகிறது.
மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படும் ம்யு எனப்படும் ரிசெப்டார் இந்த வலி நிவாரணத்தில் மிக முக்கிய ஒன்று என கருதப்படுகிறது. மருந்துகள், மார்பின், இந்த ரிசெப்டாரில் சென்று இணையும் பொது வலி குறைவு ஏற்படுகிறது. இந்த ரிசெப்டார் ஆண்களில் வித்தியாசமாகவும், பெண்களில் வித்தியாசமாகவும் தூண்டப்படுகிறது. இதனால் ஆண்களுக்கு வலி வேகமாக குறைகிறது எனவும், பெண்களுக்கு வலி குறைவதில் வேறுபாடு இருப்பதாகவும் கருதப்படுகிறது. தலைவலி, முதுகு வலி என தரப்படும் ஐபூப்ரோபன் எனப்படும் மருந்து பெண்களுக்கு சரியாக வேலை செய்யாது என்பது மிகவும் குறிப்பிட தகுந்த விஷயம்.
மேலும் இந்த வலி நிவாரணிகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் போது பெண்கள் ஆராய்ச்சியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆண்களில் இந்த மருந்துகள் நன்றாக வேலை செய்கிறது என காட்டப்பட்டு சில விற்பனைக்கு வந்துவிட்டன. இப்படி வலி உணரும் தன்மை, வலி குறையும் தன்மையில் வேறுபாடுகள் இருப்பதால் பெண்களும் ஆராய்ச்சியில் உட்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
பெண்கள், பயம் தரும் விசயங்கள் என பல விசயங்களில் மிகவும் எச்சரிக்கை உணர்வு உடையவர்களாக இருப்பதால் அவர்களால் வலிதனை மிகவும் எளிதாக உணர முடிகிறது என்கிறது ஒரு அறிவியல் ஆராய்ச்சி.
காரணம் புரிகிறது, ஆசிரியர்கள் கூட பள்ளியில் மாணவிகளை அடிக்கும்போது மெதுவாகவே அடிப்பார்களாம். பல பெண்கள் சட்டென அழுதுவிடுவதன் மர்மம் தெரிகிறது. பெண்களால் வலி தாங்க இயல்வதில்லை.
எங்கள் ஊரிலும் சொல்வார்கள், 'அட பொட்ட புள்ளைய போய் எப்படி அடிக்கிறான் பாரு' என. எத்தனை கணவன்மார்கள் தங்கள் மனைவிமார்களை அடித்து இருப்பீர்கள், எத்தனை தந்தைமார்கள் தங்கள் பெண் குழந்தைகளை அடித்து இருப்பீர்கள். அவர்களுக்கு எப்படியெல்லாம் வலித்திருக்கும் என நினைக்க தோன்றுகிறதா?
பூரி கட்டைகள், சட்டிகள் என ஆண்களை அடிப்பதற்கு உதாரணம் சொல்லப்பட்டது. ஏனெனில் வலி தாங்கும் மகானுபாவாக காட்சி தருபவர்கள் அல்லவா ஆண்கள். அது சரி வலி தாங்கும் சக்தி இருந்துவிட்டால் அடிப்பது நியாயமா என்ன? காதலால் ஏற்படும் வலி இருபாலருக்கும் வேறு வேறா? அறிவியல் இன்னும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறது.