பீகார் மற்றும் கல்கத்தாவில் இருந்து வாய்ப்பு வந்தது. இரண்டும் 10 நாட்கள் என்ற வித்தியாசத்தில் இருந்ததால் இரண்டும் செல்ல வேண்டியது என முடிவு எடுத்தாலும் கல்கத்தாவில்தான் எனது மனம் நின்றது. அப்பொழுது செல்லும் முன்னர் எனது தாயிடம் ஒரு கேள்வி கேட்டேன். இதுவரை வாழ்ந்துவிட்ட நீங்கள் உலகினைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? இதுதான் அந்த கேள்வி. உலகில் ஒன்றுமே இல்லை இதுதான் எனது தாய் தந்த பதில். ஒரு மாபெரும் ஆசிரியராக எனது தாய் எனது கண்ணிற்கு தெரிந்தார். அவர் 3 வது வரை படித்து இருந்தார். ஐந்தாவது வரை படித்து இருந்தால் ஆசிரியராகி இருப்பார். படிக்க முடியாததன் காரணம் இளம் வயதில் அவர் அவரது தாயை இழந்தது. மக்களைப் பெற்ற மகராசி என பெயர் பெற்றவர். பொறுமையின் சிகரமாக போற்றப்படுபவர். எனக்கு அவரது பதிலில் வாழ்க்கையின் முக்கியமான விசயம் புரிந்து போனது.
ஜதாவ்பூர் பல்கலைகழகம் கல்கத்தா.
பீகாரில் தோல்வி அடைந்து கல்கத்தாவில் மருந்தியல் நுண்ணுயிர்கள் பிரிவினை எடுத்தேன். பின்னர் நான் கேட்ட pharmaceutical chemistry கிடைத்தது ஆனால் நான் மாற்ற வேண்டாம் என முடிவுக்கு காரணமானவர் சுஜாதா கோஷ் டஷ்டிதார் என்னும் ஆசிரியை.
சுஜாதா : இவர்தான் எனது முதுநிலை மருந்தியல் படிப்பின் supervisor. பொதுவாக ஆறு மாதம் செய்ய வேண்டிய ஆய்வகப்பணியினை 18 மாதங்கள் செய்ய வைத்தவர். கல்லூரி தொடங்கிய தினம் அன்று முதல் முடிக்கும் வரை ஆய்வகத்தில் வேலை பார்த்தேன். ஆராய்ச்சியில் எனக்கு இருந்த ஈடுபாடு அதிகமானதற்கு காரணம் இவர்தான். சிறந்த ஆராய்ச்சி செய்ய உதவியவர். அதிக கோபம் வரும். நன்றாக பாடம் நடத்துவார். இதே நுண்ணுயிர் பிரிவில் உள்ள மற்றொரு ஆசிரியர் புகைத்துக் கொண்டே பாடம் நடத்துவார். மிக மிக வித்தியாசமாக உணர்ந்தேன், ஆசிரியர்களிடம் நெருங்கிய நட்பு இங்குதான் ஏற்பட்டது.
பயோகெமிஸ்ட்ரி மற்றும் பார்மகாலஜி இரண்டும் எனது துணைப்பாடங்கள். இதில் பயோகெமிஸ்ட்ரி ஆசிரியர் 5 முறை ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். மிக சிறப்பாக பாடம் நடத்துவார். பார்மகாலஜி ஆசிரியர் மிகவும் சிறப்பாக பாடம் நடத்துவார். நல்ல திறமையானவர். மேலும் சில பாட ஆசிரியர்கள் முதுநிலை தானே என விடாமல் சிரத்தையுடன் பாடம் நடத்துவார்கள். பாட வகுப்பில் அமர்ந்த காலங்கள் விட ஆய்வகத்தில் செலவிட்ட காலங்கள் இங்கு அதிகம்.
சுஜாதா அவர்களிடம் பி ஹெச் டி பண்ண வாய்ப்பு கிடைத்தும் மறுத்துவிட்டு டில்லி சென்றேன். டில்லியில் AIMS ல் பி ஹெச் டி பண்ண வாய்ப்பு தந்தார் ஒரு ஆசிரியர். சில மாதங்கள் இருந்துவிட்டு நானே ஆசிரியராக மாறினேன். இலண்டன் சென்ற பின்னர் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனும் எனது கொள்கையில் பிடிப்புடன் முதன் முதலில் அமலா எனனும் ஆசிரியை சந்திக்கச் சென்றேன்.
அவர்தான் மாணவர்கள் நலன் பேணுபவராக அந்த தருணத்தில் இருந்தார். அவரிடம் இருந்த புரொஜெக்ட்ஸ்களை காட்டினார். இதில் உனக்கு விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள் என்றார். ஒரு நிமிடம் யோசித்தேன். அப்படி ஒரு நிமிட சிந்தனையில் வந்து விழுந்ததுதான் அந்த புரொஜெக்ட். எந்த நம்பிக்கையில் தேர்ந்தெடுத்தேன் எந்த நம்பிக்கையில் அவர் என்னிடம் கொடுத்தார் என்பது தெரியாது. பதினைந்து நாட்கள் இருந்த பட்சத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கான பண நிதிக்கு விண்ணப்பம் பண்ண வைத்து வெற்றி பெற வைத்து எனது ஆராய்ச்சிக்கு வித்திட்டவர். இவர் ஒரு perfectionist. இவர் தந்த ஊக்கம் வார்த்தையில் சொல்லி வைக்க இயலாது. எனது மேல் கொண்ட நம்பிக்கையில் எனக்கு இவர் மற்றொரு ஆசிரியரை துணை மேலாளாராக வைத்துக் கொள்ள வேண்டி அறிமுகப்படுத்தினார். நான் எடுத்துக் கொண்ட புரொஜக்ட், ஒரு வருடத்தில் கிடைத்த ஆய்வு வெற்றியின் காரணமாக ஒரு நிறுவனம் மொத்தமாக நிதி உதவி செய்தது. ஆராய்ச்சி என்றால் இவரைப் போல் செய்ய வேண்டும் என எனக்கு வழி காட்டியவர் இந்த ஆசிரியை. இரு வாரத்திற்கு ஒரு முறை என அனைத்து ஆய்வக முடிவுகளை முகம் கோணாமல் சரி பார்ப்பார். இரண்டரை வருட காலங்களே நான் முடித்து இருந்த வேலையில் அதே ஆய்வகத்தில் அந்த நிறுவனம் என்னை பணியாளானாக ஏற்றுக் கொண்டது, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றது இன்னமும் மறக்க முடியாத நினைவு.