Monday, 14 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் -22

22. வயதற்ற கனவுகள்

நாச்சியார் பாமாவை தன்னுடன் ஆழ்வார் திருநகரிக்கு வருமாறு அழைத்தார். பாமாவும் சம்மதம் சொன்னாள். நாச்சியாருக்கு பாமா மீது நிறைய அன்பும், மதிப்பும் பெருகிக் கொண்டே இருந்தது. அதிகாலையிலேயே சென்றுவிட்டு அன்றே இரவே திரும்பி விடுவதாக முடிவு செய்தனர். குண்டத்தூர் வந்து விருதுநகர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.

''பாமா, சடகோபன் அப்படிங்கிறவரைத்தான் பார்க்கப் போறோம், இன்னைக்கு இரவுக்குள்ள திரும்பிரலாம். நீ உன்னோட திட்டம் போல சனிக்கிழமை யசோதை கூடப் போய் என்ன ஏதுனு பாரு''

''சரிங்கம்மா''

''நீ எதிர்பார்த்த சம்பளம்தான நாங்க பேசினது''

பாமா சிரித்தாள்.

''என்னாச்சு பாமா''

''இங்கே என்ன செலவு இருக்கும்மா, தங்குற வீடு, சாப்பிட சாப்பாடு முதற்கொண்டு எல்லாமே நீங்க தரது, அதோட சம்பளம்னு பணம் வேற சொல்லி இருக்கீங்க.  எங்க அப்பா நிறைய சம்பாதிக்கிறார் ஆனா மிச்சம் எதுவும் இல்லைனு சொல்லிட்டே இருப்பார். இதுக்காகவே அம்மா, அப்பா கொண்டு வர பணத்தில் எனக்குன்னு சேர்த்து வைச்சிருவாங்க, என்னதான் இருந்தாலும் கிராமம் வேற, சிட்டி வேறதானம்மா''

''உன்னோட தோழிகள் எல்லாம் உன்னோட முடிவு பத்தி எதுவும் சொல்லலையா''

''யாரு என்ன சொன்னாலும் நம்ம மனசுக்குனு பிடிக்கனும்னு நினைப்பேன், என்னமோ நீங்க என்கிட்டே பேசினதுல இருந்து எனக்கு நீங்க சொல்றத கேட்கனும்னு தோனிச்சி, இன்னைக்கு இப்படி ஒரு அற்புதமான பெருமாள் கோவிலைப் பார்க்க உங்களாலதான் கொடுத்து வைச்சி இருக்கு, நிறைய திருப்தியா இருக்கும்மா. இந்த வாழ்வை ஒரு பயனுள்ள வகையில் வாழனும்னு நினைச்சேன், நாராயணியை நினைக்கிறப்போ பயனுள்ள வாழ்வாவே இருக்கு''

''மெடிக்கல் உலகத்தில நிறைய முன்னேற்றம் வந்துருச்சி, யசோ கூட வேலன் சொல்லித்தான் இந்த கை , கால் வளர்ச்சி, உடல் உறுப்புகள் மாற்றம்னு படிக்க ஆரம்பிச்சா, வேலன் இல்லைன்னா நிச்சயம் இதை எல்லாம் படிச்சி இருக்கமாட்டேனு சொல்வா, யாராவது ஒருத்தர் ஒரு உற்சாகம், ஊக்கம் தரக்கூடியவங்களா அமைஞ்சிருறாங்க. எனக்கு எப்பவுமே பெருமாள் தான்''

''எனக்கும் எப்பவும் பெருமாள் தான்ம்மா''

நாச்சியார் அமைதியாக இருந்தார். அவரது மனம் நிறைய யோசிக்கத் தொடங்கியது. கல்லுப்பட்டி தாண்டி விருதுநகரை நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்தது.

''கல்யாணம் பண்ணு பாமா''

''இரெங்கன் கிடைச்சா பண்ணிக்குவேன்ம்மா, இல்லைன்னா உங்களை மாதிரியே இருந்துக்கிறேன்''

''என்னை மாதிரியா?, இன்னொரு நாச்சியார் வேணாம்''

பாமா சிரித்தாள். அவள் சிரிக்கும்போது கண்களும், புருவங்களும், கன்னங்களும் அழகிய கதையை சொல்வது போல் இருக்கும்.

''எல்லா பாசுரமும் மனப்பாடமா தெரியுமா?''

''எல்லாம் தெரியாதும்மா, குறிப்பிட்டது மட்டும் அதுல நிறைய நம்மாழ்வாரோடது''

விருதுநகர் வந்து அடைந்தார்கள். நாச்சியாரின் பள்ளிக்கூட கனவு என்பது வயது கடந்த கனவுகள் போல தோன்றினாலும் கனவுகள் வயது அற்றவைகள். அங்கிருந்து திருச்செந்தூர் சென்று ஆழ்வார் திருநகரி அடைந்தபோது பதினோரு மணி ஆகி இருந்தது. சடகோபனைத் தேடிச் சென்றனர். அறுபது வயதுக்கும் மேலானவராக இருந்தார். காரைவீடு. நிறைய ஆட்கள் அங்கே பணிபுரிந்து கொண்டு இருந்தனர். நாச்சியார் தன்னிடம் இருந்த கடிதம் கொடுத்ததும் சடகோபன் இவர்களை வரவேற்று உபசரித்தார். பாமா தங்களது திட்டம், என்னவெல்லாம் செய்ய இருக்கிறோம் என அத்தனை அருமையாக பல எடுத்துக்காட்டுகள் மூலம் பள்ளிக்கூடம் பற்றி சொன்னதும் தன்னால் முடிந்த உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். இது நாச்சியாருக்கு சற்று வியப்பாக இருந்தது. விருதுநகரில் உள்ள ஒருவர் மூலமே எல்லா அனுமதியும் பெற்று தருவதாகவும் உறுதி அளித்தார். கனவுகள் நிச்சயம் வயது அற்றவைதான்.

ஒரு விசயத்தை பல வருடங்களாக செய்ய முயற்சி செய்து எல்லாம் தடைபட்டுக் கொண்டே இருப்பதை எண்ணி மனம் தளர்ந்து போவார்கள், அதன் காரணமாக அந்த விசயத்தை வேண்டாம் என கைவிட்டு விடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே அந்த விசயங்கள் குறித்த கனவை தங்களுடனே சுமந்து கொண்டு இருப்பார்கள். ஒரு மரம் எப்படி பலன் தர பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறதோ அது போலவே சில காரியங்கள் நடக்க பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். ஆனால் அதை நிறைவேற்ற தகுந்த மனிதர்கள் வரும் வரை அந்தக் கனவுகள் தங்களை இருக்கப் பிடித்துக் கொள்ளும். நாச்சியார் பாமாவை கட்டிப்பிடித்துக் கொண்டார். பாமா பேசிய முறை தன்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது என புகழாரம் சூட்டினார். பாமா நம்மாழ்வாரை எண்ணி மனமுருக வேண்டிக் கொண்டாள். அவளது மனதில் கம்பர் தனது கனவினை நிறைவேற்ற சடகோபன் அந்தாதி பாடிய நிகழ்வினை எண்ணினாள்.

கம்பர் தனது இராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கர் சன்னதியில் அரங்கேற்ற விருப்பம் கொள்ள அது தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. அப்போது இத்தடை போக்க என்ன செய்ய என நாதமுனிகளிடம் கேட்க அவர் அரங்கன் சன்னதியில் அரங்கேற்றம் பண்ண அனுமதி அளித்தார். அதன்பின்னும் தடை உண்டானது. கம்பர் ஸ்ரீரெங்கனிடம் வேண்ட, பெருமாளே அவரது எண்ணத்தில் வந்து நம் சடகோபனை பாடினாயோ எனக்கேட்க நம் சடகோபன் நம்மாழ்வார் ஆனார். இதன் காரணமாகவே கம்பர் சடகோபன் அந்தாதி இயற்றினார். அதன்பின்னரே அவரால் எவ்வித தடைகள் இல்லாமல் அரங்கேற்றம் பண்ண முடிந்தது. கம்பர் அரங்கம் இன்றும் அரங்கன் கோவிலில் உண்டு.

கம்பனின் கனவை நிறைவேற்றியவர் அச்சடகோபன். நாச்சியாரின் கனவை நிறைவேற்ற இருப்பவர் பாமாவின் மூலமாக இச்சடகோபன். கம்பர் நம்மாழ்வாருக்கு என இயற்றிய முதல் துதி.

தருகை நீண்ட தயரதன் தரும்
இருகை வேழத்தி இராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட
குருகை நாதன் குரைகழல் காப்பதே.

சாதாரண நிகழ்வைக் கூட நம் மனம் எத்தனையோ ஆண்டுகள் முன்னர் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பெருமிதம் கொள்ளும். பல வருடங்களாக ஒன்றின் ஒன்றாகத் தொடர்ந்து நடப்பது போல ஒரு மாயத்தோற்றம் உண்டாகும்.

சடகோபன் அவர்களை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிசேத்திரத்திற்கு அழைத்துச் சென்றார்.  இந்த ஊரின் பழைய பெயர் திருக்குருகூர். தான் அவதரித்த இந்த ஊரை நம்மாழ்வார் பாசுரங்களில் குருகூர் என்றே குறிப்பிட்டு இருக்கிறார். பாமா அந்த ஆலயத்தில் கால் வைத்ததும் மெய் சிலிர்த்தாள். தான் இதுவரை மனதில் வேண்டிய ஒருவரின் தலத்திற்கு வந்து இருப்பது அவளுக்குள் பேரின்பத்தை உண்டு பண்ணியது. அங்கே இருந்த புளிய மரத்தின் பொந்தில் தான் நம்மாழ்வார் 16 வருடங்கள் வாசம் இருந்தார். எல்லாப் பாடல்களும் அவர் இங்கேயே இயற்றினார். இந்த புளிய மரம் கூட பெருமாளே புளிய மரமாக வந்ததாக கதை உண்டு. புளிய மரத்தைத் தொட்டு வணங்கினாள் பாமா.

''அம்மா, நீங்க இதுக்கு முன்ன இங்க வந்து இருக்கீங்களா?'' பாமா நாச்சியாரிடம் கேட்டாள்.

''இல்லை பாமா, உன்னோட நான் வரனும்னு இருந்து இருக்கு''

சடகோபன் பாமாவிடம் இந்தக் கோவிலோட பூர்வ ஜென்ம தொடர்பு உனக்கு இருக்கும்மா என்றார். பாமா வியப்பாக அவரைப் பார்த்தாள். தனக்கு அப்படி ஒரு எண்ணம் எப்போதுமே உண்டானது இல்லை என அவள் அறிவாள், ஆனால் நம்மாழ்வார் மீது அவளுக்கென தனிப்பிரியம் சிறு வயதிலேயே உண்டானது. சடகோபன் பாமாவின் யோசனையைப் பார்த்துவிட்டு ஆலயம் நோக்கி வணங்கினார்.

''நீ ஒரு பாமரத்தி''

சடகோபன் பாமாவை நோக்கி சொல்லிவிட்டுச் சென்றதும் பாமா அப்படியே புளியமரத்தைப் பற்றிக் கொண்டு நின்றாள். புளியமரத்தின் அடியில் நான்கு சுவர்களில்  நிறுவப்பட்ட முப்பத்தி ஆறு திவ்ய தேசப் பெருமாள் சிற்பங்கள் எல்லாம் அவளை நோக்கி அருளாசி வழங்குவது போல இருந்தது. இந்த நிகழ்வு ஒருவன் சொன்ன கவித்துவ நிகழ்வுக்கு ஒப்பாக இருந்தது.

'கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் 
எனக்கு பெருங்குழப்பம் நேர்வது உண்டு 
நீ தெய்வங்களை கும்பிடுகிறாயா அல்லது 
உன்னை தெய்வங்கள் கும்பிடுகின்றனவா என்று'

பாமாவின் கண்களில் இருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் கசிந்து கொண்டு இருந்தது. ஒன்றின் மீதான காதலின் உயர்நிலையில் பாமா நின்று கொண்டு இருந்தாள்.

(தொடரும்)






Sunday, 13 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 21

21 மரபணுக்கள்

யசோதை, சில தினங்களுக்குப் பிறகு பாமாவை மதுரைக்கு வருமாறு அழைத்தாள். தான் ஒரு மருத்துவரிடம் கலந்து ஆலோசித்ததாகவும், அவரும் பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் வரவைக்கலாம் எனவும் சொன்னதாக சொல்லி சனிக்கிழமை அன்று அவரைச் சந்திக்க பதிவு செய்து இருப்பதாகச் சொன்னாள்.

அது எப்படி செய்ய இருக்கிறார்கள் என பாமா கேட்டதும் மிகவும் சுருக்கமாகச் சொன்னாள் யசோதை.

''வண்ணத்துப்பூச்சிகளுக்கு இரண்டு வாழ்வு பாமா. ஒன்னு கம்பளிப்பூச்சியா இருக்கிறது, மத்தது வண்ணத்துப்பூச்சியா மாறுரது. கம்பளிப்பூச்சியில இருந்து வண்ணத்துப்பூச்சியா மாறும் சமயத்தில் முதல் இருந்த செல்கள் எல்லாம் உடலோட அழிக்கப்பட்டு புது செல்கள் தோன்றும் அப்போ அந்த செல்கள் நிறைய எதிர்ப்புகள் மேற்கொண்டு தங்களை அங்கே நிலைநிறுத்தி வண்ணத்துப்பூச்சியை உருவாக்கும். முதலில் இருந்த செல்களில் உள்ள டிஎன்ஏவும் புதுசா உருவாகுற டின்ஏவும் ஒன்னுதான் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனா வெளிப்படுத்தும் ஜீன் இருக்கில்ல அது மாறுது''

பாமா தான் கேட்டுக் கொண்டு இருப்பது தனக்கு விளங்கிக்கொள்ள முடிகிறது என எவ்வித ஐயமும் கேட்காமல் தொடரச் சொன்னாள்.

''முதலில் இருக்கிற செல்களில் உள்ள ஜீன்கள் கம்பளிப்பூச்சி நிலைக்கு தன்னை வெளிப்படுத்துது ஜீனோடொம் கலந்த பீனோடோம். இரண்டாவது புதுசா உருவாகிற செல்களில் உள்ள ஜீன்கள் வண்ணத்துப்பூச்சியை வெளிப்படுத்திருது இதுவும் ஜீனோடொம் கலந்த பீனோடோம். டாக்டர் என்ன சொன்னாருன்னா சிறகுகள் உருவாக்குற  ஜீன்களை ஹார்மோன் மூலமா ஆக்டிவேட் பண்றது. ஈசோடின் ஹார்மோன் இதைச் செய்யும்னு சொல்றார். வண்ணத்துப்பூச்சி ஜீனோம் எல்லாம் பிரிச்சி வைச்சி இருக்காங்க, பண்ணிரலாம்னு சொல்றார். செலவு எல்லாம் ஒன்னும் ஆகாது. அந்த ஹார்மோனுக்கான செலவு மட்டும்தான். அதான் அதைச் செய்யறப்போ நீ இருக்கனும்னு நினைக்கிறேன்''

அதைக் கேட்டதும் பாமாவுக்கு அளவிலா மகிழ்ச்சி. கட்டாயம் வரேன் என்றாள்.

நம்மாழ்வார் பாசுரம் ஒன்று அவளது நினைவில் ஆடியது. எத்தனை வருடங்களாக இந்த பாசுரங்களை எல்லாம் மனனம் செய்து வருகிறாள் என்பது வியப்புக்குரிய ஒன்று. மகிழ்வான தருணங்களிலும் சரி, சோகமான தருணங்களிலும் சரி அவளுக்கு பாசுரம் பாடத் தோனும்.

நின்றனர் இருந்தனர்
கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர்
கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர்
என நினைவு அரியவர்
என்றும் ஓர் இயல்வோடு
நின்ற எம் திடரே

பாமா பாடிய அடுத்த கணம் அவளது சிந்தனையில் பொறி தட்டியது.  யசோதை சொன்ன விசயங்கள் அப்படியே பொருந்திப் போகும்படியான பாசுரம் இது என வியப்பு அடைந்தாள். இதை எல்லாம் எண்ணி எழுதப்பட்ட பாசுரம் அல்ல அது என அவள் அறிவாள் அவளது அறிவால்.

பூங்கோதையிடம் ஓடிச்சென்று நாராயணிக்கு கை கால் வந்துரும்க்கா என அளவிலா மகிழ்ச்சியோடு சொன்னாள். நாராயணி புன்னகை புரியத் தொடங்கி இருந்தாள். கைகள் இருந்தால் எப்படி நம்மைக் கண்டதும் குழந்தைகள் நீட்டுமோ கால்களை ஆட்டுமோ அதுபோல பாமாவை காணும் போதெல்லாம் நாராயணியின் கை கால் தசைகள் ஆடும். இதைக்கண்டு மிகவும் பூரிப்பு அடைந்து இருக்கிறாள் பூங்கோதை.

இந்த உலகில் எல்லா உயிர்களும் ஒருவிதத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையன. அன்போடு இருப்பதே உயரிய செயல். எப்போது ஒருவருக்கு நம்மீது வெறுப்பு தோன்றுகிறதோ அப்போது அவர்களிடம் வெறுப்பை நெருப்பென காட்டி நம்மை நாமே சுட்டெரித்து விடாமல் அமைதியாக தெளிந்த நீரோடை போல அவர்களிடம் இருந்து விலகிப் போவது சிறந்தது. ஆனால் இந்த உலகம் அப்படி விலகிப் போவோர்களை ஏளனம் பண்ணி, அடிமைப்படுத்தவே நினைக்கும். பேரன்பினால் ஆனது உலகம் என்று சொன்னாலும் உலகம் அப்படியாக உருவானது இல்லை. ஒன்றின் உணவாக மற்றோன்றின் உடல் எப்போது தேவை என்று ஆனதோ அப்போதே அன்பு என்பதன் பொருள் விலங்கு உண்ணும் உயிர்களிடத்தில் எதிர்பார்க்க இயலாது. இருந்தாலும் பேரன்பினால் ஆனது உலகம் என மனம் மகிழ்கின்றோம்.

நாச்சியாரிடம் விபரத்தைச் சொன்னாள் பாமா.

''ஒரு மாசமோ, இரண்டு மாசமோ அது உயிரோட இருந்துட்டு இறக்கப் போகுது அதுக்கு எதுக்கு இப்படி எல்லாம் பண்ணனும்''

வசுதேவன் இப்படிச் சொல்வார் என பாமா சற்றும் எதிர்பார்க்கவில்லை. நாச்சியார் தான் வசுதேவன் மனம் புரிந்தவராக அமைதியாகச் சொன்னார்.

''உசிரு, உசிருதாண்ணே, ஒருநாள் வாழ்ந்தாலும் இறக்கையோட வாழ்ந்தோம்னு இருக்கும் அதுவும் நினைச்ச இடத்துக்குப் பறக்கும். இப்போதான் எனக்கு உரைக்குது. எதுக்கு ஒரு பட்டாம்பூச்சி கோதை, யசோதை, பாமா தோளில் போய் உட்கார்ந்து இருந்துச்சுனு, என்னை வைச்சி அது ஏதோ ஒரு விளையாட்டை நடத்திட்டு இருக்கு''

வசுதேவன் சிரிப்பை அடக்க முடியாமல் சொன்னார்.

''திருவிளையாடல் புராணம், விஷ்ணுவோட பத்து அவதாரங்கள் புராணம் மாதிரி சொல்ற நாச்சியார், நம்மை எல்லாம் அந்த பட்டாம்பூச்சிக்கு உணர இயலுமா''

''உணரும், உணர்ந்துதான் இப்படி ஒரு நிகழ்வு நடந்துட்டு இருக்குண்ணா''

நாச்சியார் சொன்ன மறு நிமிடம் மன்னிப்பு கேட்டார் வசுதேவன். பாமாவுக்கு வியப்பாக இருந்தது. சட்டென மாறும் மனநிலை அவளுக்குப் புதிராக இருந்தது.

''என் அண்ணன் எப்பவுமே என்னை இப்படி சோதனை பண்ணுவார், நான் உறுதியா இருந்தா பேசாம மறுப்பு தெரிவிக்காம சம்மதம் சொல்லிருவார்'' என்றார் நாச்சியார்.

பாமாவும் புன்னகை புரிந்தார்.

சிறகுகள் முளைத்து விடும் பட்டாம்பூச்சி காண அவள் பேராவலோடு இருந்தாள். அவளது மனம் நாராயணிக்காக வேண்டிக்கொண்டது.

(தொடரும்)


பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 20

20 சிறகுகள்

பாமா பாடி முடித்ததும் மனதில் அவளுக்கு ஒரு யோசனை தோனியது. யசோதையிடம் இந்த பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் வரவைக்க இயலுமா எனக் கேட்கவேண்டும் என நினைத்தாள். சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சியை பட்டாம்பூச்சி என எவரும் அழைக்க மாட்டார்கள். அது ஒரு பூச்சி அவ்வளவுதான். பட்டாம்பூச்சிகளை வளர்த்துப் பழகிய பாமாவுக்கு பட்டாம்பூச்சியை சிறகுகள் இல்லாமல் அடையாளம் காண்பது எளிதாகவே இருந்தது.

யசோதையிடம் அலைபேசி மூலம் பேசி தனது ஆர்வத்தைச் சொன்னாள் பாமா. யசோதை சிறிது நேரம் யோசித்தவள் சிறகுகள் வரவைக்கலாம் என உறுதி தந்தாள். இந்த உலகில் பரிணாம வளர்ச்சி என்பது உணர்தல், தொடுதல், ஊர்தல், பறத்தல், நடத்தல் என்றே பக்கத்திற்கு பக்கமாக விரிவடைந்து வந்து இருக்கிறது.

தமக்கு தேவை இல்லாத உறுப்புகளை உதறித்தள்ளிவிடும் குணாதிசயங்கள் உயிரினங்களுக்கு இருந்து வந்து இருக்கிறது. எல்லா உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி என்பது பிரமிக்கத்தக்க ஒன்றுதான் அந்த அந்த இயற்கை சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் வல்லமை இந்த உயிரினங்களுக்கு உண்டு. இதில் இன்று வரை பெரும் வியப்பு தந்து கொண்டு இருப்பவைகள் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்ணுயிர்கள். தங்களை அழிக்க வருபவைகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கின்றன. எவை எல்லாம் பயனில்லை என்று ஆகிறதோ அவை அழிந்து போகும். எவை மென்மேலும் பயன் உண்டாக்க உதவுமோ அவை மாற்றம் அடைந்து ஒரு நிலைக்கு வரும்.

பூங்கோதை வீட்டுக்குள் சென்றாள் பாமா.

''வாம்மா, உட்கார்'' பூங்கோதை பாமாவை வரவேற்றாள்.

''குழந்தை எப்படி இருக்கா?''

''நல்லா இருக்கா''

''நாராயணி'' என அழைத்தாள் பாமா. குழந்தை குரல் கேட்டு ஒலி எழுப்பியது.

''தன்னைத்தான் கூப்பிடறாங்கனு நினைக்கிறா அக்கா''

''பசிச்சா மட்டும் அழறா, மத்தபடி எந்த ஒரு தொல்லையும் இல்லம்மா, இவளுக்குனு இப்படிதான் துணி எல்லாம் தைச்சி வைச்சிருக்கேன்'' கை கால் வைக்காத துணியைக் காட்டினாள் பூங்கோதை.

''அக்கா, ஆழ்வார்களில் நம்மாழ்வார் எனும் சடகோபன் பத்தி நீங்க தெரிஞ்சி இருக்கீங்களா''

''இல்லைம்மா''

''நம்மாழ்வார் பிறந்தப்போ அழவே இல்லை. அதுக்கு நம்ம உடம்புக்குள்ள இருக்கிற காற்றை நாம வெளியேற்றத்தான் பிறந்த உடனே அழறோம்னும் நம்மாழ்வார் சட அப்படிங்கிற காத்தை அடக்கியாளும் திறமை இருந்ததால அழாம இருந்தார்னு சொல்றாங்க. அதுவும் பதினாறு வருசம் அவர் பேசாம ஒரு பிண்டம் மாதிரியே இருந்து இருக்கார். புளியமரத்துக்கு அடியில இப்படியே அசைவற்று கிடந்தவரை மதுரகவி ஆழ்வார்தான் ஒரு கல்லை தூக்கிப் போட சலனம் இருக்குனு கண்டுபிடிச்சி அவர்கிட்ட கேள்வி கேட்டு அவருடைய அறிவை மெச்சி தனது குருவாக ஏத்துக்கிட்டார், அதுக்கு அப்புறம் அவர் எழுதின பெருமாள் பற்றிய பாசுரங்கள் எல்லாம் சேர்த்து வைச்சி இருக்காங்க. நம்ம நாராயணி அப்படி இல்லைக்கா, நிச்சயம் பதினாறு வருசம் எல்லாம் அப்படி இருக்கமாட்டா, மத்த குழந்தை போல பேசுவா''

''ஆனா அவளால தன்னால் எதுவும் செய்யமுடியாதுல. தவழ்றது, நடக்கிறது, கை கொட்டி சிரிக்கிறதுனு எதுவுமே பண்ண முடியாதுல அதை நினைச்சி எனக்கு அப்போ அப்போ பகீர்னு இருக்கும்மா''

''அதான் யசோதை கை கால் வந்துரும்னு சொல்லி இருக்காங்க, நீங்க கவலைப்படாதீங்க அக்கா''

ஒரு தாய்க்கு தனது சேய் தான் உலகம். கட்டிய கணவனை விட தான் பெற்ற பிள்ளைக்காக எதுவும் செய்யத் துணிவு கொண்டுவிடுவாள் தாய். ஒரு தாய்க்கு மனச்சோர்வு ஏற்பட்டு இந்த வாழ்வைத் தொலைத்து விடுவோம் என எண்ணிக் கொண்டிருக்கையில் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழறயாம்மா, அழாதம்மா நானிருக்கேன்ல எனும் அந்த சேயின் மழலைச் சொல் அந்த தாய்க்கு இந்த வாழ்வின் மீது நிறைய நேசத்தை வளர்த்து விடும். ஆனால் நாராயணி பூங்கோதையின் மனதில் கவலைகளை சேர்த்துக் கொண்டு இருந்தாள். அந்தக் கவலைப் போக்குவதற்கு என்றே பாமா நிறைய நம்பிக்கைகள் தந்து கொண்டு இருந்தாள். பாமாவின் பேச்சு பூங்கோதைக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

பாமா நாச்சியார் சொன்னபடி விவசாய நிலங்களில் வேலை பார்த்து வர ஆரம்பித்தாள். கோவிலை கோவிந்தன் பார்த்துக் கொண்டான். பரந்தாமனிடம் வசுதேவன் இன்னொரு குழந்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் அதனால் இந்த மன வருத்தம் எல்லாம் தீரும் என ஆறுதல் சொன்னார். இனிமேல் தான் பெருமாளுக்கு சேவை செய்தால் நன்றாக இருக்காது என்ற பரந்தாமனுக்கு அப்படி எல்லாம் நினைக்க வேண்டாம் முப்பது நாள் கழித்து தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

யசோதை சொன்னது போலவே அடுத்த வாரம் பெருமாள் பட்டி வந்து சேர்ந்தாள். அவளுடன் சடகோபன் மருத்துவரும் உடன் வந்தார். நாராயணியை பரிசோதித்தவர் ஒரு மாதம் கழித்து தனது மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வரச் சொல்லிவிட்டு கிளம்பினார்.

''யசோ டாக்டர் என்ன சொல்லிட்டுப் போறார்'' நாச்சியார் கேட்டார்.

''முயற்சி பண்ணி பார்க்கலாம்னு சொல்றார் அத்தை. செல்களை மறுபடியும் இயங்க வைச்சி பார்க்கலாம்னு சொல்றார். செல்கள் இயங்க ஆரம்பிச்சிருச்சினா சாதாரணமா வளர்ச்சி அடையறது போல வளர்ந்து விரல்கள், நகங்கள் எல்லாம் உருவாகி நின்றும், கவனமா செய்யனும் இல்லைன்னா ஒரு கைக்கு இரண்டு கை வரக்கூட வாய்ப்பு இருக்குனு சொல்றார்''

''யசோ, உன்னை நம்பித்தான் இருக்கோம்''

''கவலையை விடுங்க அத்தை, குழந்தை இந்தளவுக்கு நல்லா இருக்கிறதே பெரிய விசயம்னு அவர் சொல்றார். நிறைய செலவு ஆகும், அப்பாதான் இதுக்கு உதவி பண்ணணும்''

''பணத்தைப் பத்தி கவலைப்படாத யசோ''

பாமா அப்போதுதான் வந்தாள்.

''எப்போ வந்தீங்க யசோதை''

''இப்பதான், நீங்க எங்க போனீங்க''

''திருமங்கலம்ல வேளாண்மை கூட்டத்துக்குப் போயிட்டு வந்தேன், குழந்தைக்கு எதுவும் முயற்சி பண்ணினீங்களா''

''டாக்டர் வந்துட்டுப் போனார், அடுத்த மாசம் குழந்தையை கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கிறார்''

''ரொம்ப நன்றிங்க யசோதை, பட்டாம்பூச்சிக்கு முயற்சி பண்ணினீங்களா''

பட்டாம்பூச்சியை காட்டினாள் பாமா. பாமா எங்கு போனாலும் காலை, மாலை என நாராயணியையும், பூங்கோதையையும், பட்டாம்பூச்சியையும் பார்க்காமல் செல்வது இல்லை.

''இமேகோ செல்களை செலுத்திப் பார்க்கலாம் பாமா, நான் இதை எடுத்துட்டுப் போறேன்''

''இன்னைக்கே போறீங்களா, ஊருல தங்க மாட்டீங்களா''

''நிறைய வேலைக இருக்கு பாமா, அதான் இன்னைக்கு சாயந்திரமே கிளம்புறேன்''

யசோதை வீட்டுக்குச் சென்றுவிட்டு கிளம்புவதாக இருந்தாள். வசுதேவன் நாச்சியார் சொன்ன விசயங்களை கேட்டதும் மறுப்பு எதுவும் சொல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்டாள். அப்போதே மாணிக்கவாசகரை சென்று பார்த்து விபரங்கள் சொல்ல வேண்டும் என்றார் வசுதேவன். நாச்சியார் தடுத்தார்.

''குழந்தைக்கு நல்லது நடக்கிற வரைக்கும் இதை பேச வேண்டாம்ணா''

வசுதேவன் எதுவும் சொல்லாமல் அமைதியானார். பாமாவை வரச் சொன்னாள் யசோதை. பாமா பட்டாம்பூச்சியை ஒரு காற்றுப் புகக்கூடிய சிறு குடுவையில் அடைத்து அது உயிர்ப்போடு இருக்க மலர்களுடன் கூடிய செடியை உள்ளே வைத்து இருந்தாள். யசோதை அதைப் பார்த்ததும் ஆச்சரியம் கொண்டாள்.

''எப்படிங்க பாமா, இப்படி எல்லாம் பண்ணி கொண்டு வந்து இருக்கீங்க''

''வளர்த்துப் பழகிருச்சிங்க''

பாமாவை மகிழ்வோடு கட்டிப்பிடித்துக் கொண்டாள் யசோதை.

பாமா. பேரழகும் பேரறிவும், பேரன்பும் நிறைந்த ஒரு பெண். அவளுக்கென ஆன கள்ளமில்லா உள்ளம் வேறு எவருக்குமென ஆனது இல்லை. அவளை எண்ணி மகிழ்ந்திட உண்டாகும் உற்சாகம் வேறு எதனாலும் உண்டானது இல்லை. இதை எல்லாம் ஆச்சரியங்களில் அடக்க வேண்டியது இல்லை. அவளது இயல்பே அதுதான்.

சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி பாமாவை நோக்கி நன்றி சொல்வது போல தனது முன்னங்கால்களை சேர்த்து வணங்குவது போல செய்தது.

இந்த உலகில் உள்ள உயிரினங்களின் எண்ணங்கள் எதுவென எவரும் ஆழமாகவும், முழுமையாகவும் படித்தது இல்லை. அதனின் செயல்பாடுகள் எதற்கு என முழுவதுமாக உணர்ந்ததும் இல்லை. மழை வரும் முன்னே தோகை விரிக்கும் மயில், தனது பெண் துணைக்கு தான் விடும் தூது என்றே நாம் சொல்லிக் கொள்கிறோம், அதற்காக மட்டும்தான் என்பதை நாமாக முடிவு செய்தால் மயிலுக்கு தெரியவாப் போகிறது. பாமா பட்டாம்பூச்சியின் செயல் கண்டு புன்னகை புரிந்தாள்.

(தொடரும்)