Saturday, 12 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 19

19. நம்பிக்கைகள்

பாமாவின் தோளில் அமர்ந்த பட்டாம்பூச்சி அப்படியே குழந்தையின் மீது அமர்ந்துவிட்டு பறந்து போனது. சிறகுகள் இருப்பதால் எங்கு வேண்டும் என்றாலும் பறந்து போகும் இந்த பட்டாம்பூச்சிக்கு இலக்குகள் என்று இரண்டுதான், உயிர்ப்போடு இருப்பது, இனத்தைப் பெருக்குவது. பொதுவாகவே எல்லா உயிரினங்களும் இந்த இரண்டுக்காகத்தான் வாழ்கின்றன, இதில் அன்பை, பாசத்தை, நேசத்தை கலந்து வாழும் உயிரினங்கள் இந்த வாழ்வின் மீது ஒரு தீராத காதலை ஏற்படுத்திக் கொள்கின்றன.

முதுகெலும்பு பாதிக்கப்பட்டு நடக்கவே இயலாமல் இருப்பவர்களைத் தூக்கிச் சுமக்கும் தாய்மார்கள், செவிலியர்கள், இயக்கமற்றுப் போய் நினைவே இல்லாமல் படுக்கையிலேயே தமது வாழ்நாட்களை கடக்கும் மனிதர்கள், தான் யார் எவர் என்று அறியாமல் மனநிலையைத் தொலைத்துவிட்டு, மனநிலையைப் பாதிப்புக்கு உள்ளாக்கி நோயாளிகளாகவே வாழும் மனிதர்கள், எவற்றின் மீதாவது வெறுப்புகளை சுமந்து கொண்டே திரியும் மனிதர்கள் என இந்த உலகம் கண்டு கொண்ட, கண்டு கொண்டிருக்கும், கண்டு கொள்ளப்போகும் உயிரினங்கள் என நிறையவே உண்டு.

தலை நிறைய மல்லிகைப்பூவும், நெற்றியில் சிவந்த பொட்டும், காதில் தண்டட்டியும், கழுத்தில் நகைகளும், மூக்குத்தியும் அணிந்து பட்டாடை உடுத்திய ஒரு மூதாட்டி பூங்கோதையின் அருகில் வந்து ''மகராசி கை, கால் இல்லாம பிறந்துருச்சேன்னு வருத்தப்படாத ஆத்தா, இங்க இருக்க வெயிலுக்குகந்தம்மனுக்கு முப்பது நாளு கழிச்சி குழந்தையைத் தூக்கி வந்து அந்த ஆத்தாளுக்கு முன்னாடி கிடத்தி கை கால் வரனும் நிச்சயம் வளர்ந்துரும், உனக்கு கை கால் வெள்ளியில் செஞ்சி வைக்கிறேனு மனமுருக வேண்டிக்கோ ஆத்தா, உனக்கு எந்த குறையும் வராது, நீயும் உன் பொண்ணும், குடும்பமும் நல்லா இருப்பீங்க'' என சிரித்த முகத்தோடு சொல்லியவர் குழந்தையின் கன்னத்தைத் தடவினார்.

பூங்கோதை கைகள் எடுத்து அவரைக் கும்பிட்டாள். ''வேண்டிக்கிறேன் பாட்டி'' எனும் அவளது குரல் தழுதழுத்தது. யசோதையும், பாமாவும் அந்த மூதாட்டியை வியப்போடு பார்த்தவண்ணம் நின்றார்கள். ''நீங்க எந்த ஊரு'' என்றார் நாச்சியார். ''ஸ்ரீரங்கம், குழந்தைக்கு கை கால் வந்துட்டா என்னை வந்து பார்த்துட்டுப் போகப் போறீங்களா?'' என்றார் மூதாட்டி. ''வந்து பார்த்துட்டுப் போறதுல ஒன்னும் தப்பு இல்லையே, வீடு விபரம் தந்தீங்கனா வரோம்'' என்ற நாச்சியாரைப் பார்த்து சிரித்தார் அந்த மூதாட்டி.

அங்கே இருந்த செவிலியர் ஒருவரிடம் காகிதம் வாங்கி எழுதித்தந்தார். ஆண்டாள் என அவரது பெயர் குறிப்பிட்டு இருந்தது. நாச்சியார் அவரிடம்  ''கல்யாண வீட்டுக்குப் போறது போல இங்க வந்து இருக்கீங்க'' என்றதும் ''நான் எப்பவும் அலங்காரத்தோடதான் இருப்பேன், அலங்கரிச்சி கொண்டாடத்தான் இந்த உடம்பும், மனசும்'' என்றவர் பூங்கோதையின் தலையில் கை வைத்து பாமாவை கை காட்டி பூங்கோதையிடம் ''இவ உனக்கு உறுதுணையா இருப்பா ஆத்தா, கவலைப்படாத'' என்றபடி நடந்து போனார். பூங்கோதையின் கண்கள் பாமாவை ஆறுதலுடன் பார்த்தன. பாமாவுக்கு பட்டாம்பூச்சி தந்த மெய் சிலிர்ப்புதனைக் காட்டிலும் அந்த மூதாட்டி தந்த மன உற்சாகம் மிகவும் பிடித்து இருந்தது. யசோதை தான் மருத்துவரை சென்று பார்த்துப் பேசிவிட்டு தகவல் சொல்வதாக மதுரைக்கு கிளம்பினாள். வசுதேவன் யசோதையிடம் ''ஒரு எட்டு ஊருக்கு வந்துட்டுப் போம்மா'' என்றதும் ''அம்மாகிட்ட சொல்லுங்கப்பா அடுத்த வாரம் கட்டாயம் வரேன்'' என்றபடி அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினாள்.

ஒரு குறையும் இல்லை எனும் நம்பிக்கை தரும் சொற்கள் தரும் உற்சாகங்கள் பேரழகானவை. குறையை நிறையாக மாற்றிவிடவே பலரும் முனைகின்றனர். குறையை அப்படியே குறையாக ஏற்று வாழ்தல் என்பது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. நோய் என்று வந்தால் அதற்கு மருந்து என்ற ஒன்றை நாடிச் செல்கின்றனர். இந்த வாழ்வை செம்மையாக வாழ வேண்டும் எனும் பேராவல் பலரிடமும் உள்ளது. ஆனால் தாங்கள் செல்லும் பாதை, தாங்கள் கொள்ளும் நட்பு உறவுகள், பழக்க வழக்கங்கள் அவர்களை வழி மாற்றிவிடுகிறது. மன உறுதி உள்ளவர்கள் தடுமாற்றம் கொள்வது இல்லை.

''பாமா, அந்தம்மா சொன்னது எனக்கு நிறைய மகிழ்ச்சியா இருக்கு'' என்றார் நாச்சியார்.

''நாம வைக்கிற நம்பிக்கைகளோட பலம் நமக்கு உறுதுணையா எப்பவும் இருக்கனும்மா'' என்றாள் பாமா.

நாச்சியார் மட்டுமே அங்கே தங்க அனுமதி வாங்கி இருந்தார். பாமா இரண்டு நாட்கள் கழித்து பெருமாள் பட்டியில் வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு கிளம்ப இருந்தாள். பூங்கோதை பாமாவின் கைகளைப் பிடித்து ''மறக்காம வந்துரும்மா'' என்றார். ''வரேன்க்கா, எதுவும் எடுத்துட்டு வரலை, போய் எல்லாம் எடுத்துட்டு ஊருக்கே வந்துருறேன்'' என்றபோது குழந்தையும் மகிழ்ச்சியால் உடல் அசைத்தது.

மனிதர்களின் நம்பிக்கைகள் அறியாமை கலந்த பேரன்பின் வெளிப்பாடுகள். ஊசி போட்ட பின்னம் திருநீறு பூசி விடுகிறேன் உன் காய்ச்சல் சரியாகும் என்பவர்கள், உன் உடைந்த கை சரியானால் வெயிலுக்குகந்தம்மனுக்கு மாவினால் ஆன கை செய்து வைக்கிறேன் என்பவர்கள். இந்த வாழ்வை பேரழகோடு இரசித்திட தனி மனம் வேண்டும்.

''அம்மா, இன்னைக்குத்தான் நானும் பிறந்தேன்'' என்றாள் பாமா.

''இது புரட்டாசி மாசம், சனிக்கிழமை. பெருமாளுக்குனு ஆனது. காலையிலேயே கருட சேவை பண்ணினேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  நீ பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாம குழந்தைச் செல்வங்களோட நல்லா வாழனும் பாமா'' என்றார் நாச்சியார். ''பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என்றார் பூங்கோதை.

அவள் இந்த புரட்டாசி மாதம்தனில்தான் பிறந்தாள் என்பதைத் தவிர வேறொன்றும் இந்த மாதத்திற்குச் சிறப்பு இல்லை, அதைவிட வேறு எந்த ஒரு மாதத்திற்கும் இந்த சிறப்பும் கூட இல்லை என சென்ற வருடம் கல்லூரியில் தனது பிறந்தநாளுக்கு கிடைத்த பாராட்டை எண்ணி மகிழ்ந்தாள் பாமா.

மதுரைக்குச் சென்று தனது பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு பெருமாள்பட்டிக்கு வந்து சேர்ந்தாள் பாமா. ஊரில் பூங்கோதையின் குழந்தையைப் பற்றி பயத்தோடும் வியப்போடும் பேசிக் கொண்டார்கள். பூங்கோதை வீட்டுக்குச் சென்றாள் பாமா. அப்போது ஒரு பட்டாம்பூச்சி அவள் மீது அமர்ந்து பறந்து ஒரு செடியில் அமர்ந்தது. அதையே பார்த்து நின்றாள் பாமா. மறுபடியும் பறந்து வந்து அவள் மீது அமர்ந்துவிட்டு செடியில் சென்று அமர்ந்தது. என்னவென அச்செடியை நோக்கிச் சென்றாள். கால்கள் தலை கொண்ட சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி ஒன்று மலரில் தேன் அருந்திக் கொண்டு இருந்தது. கண்களில் சட்டென நீர் முட்டிக்கொண்டது. கண்கள் மூடி வணங்கியபடி பாசுரம் பாடினாள்.

வண்டுணு நறுமலரிண்டை கொண்டு பண்டை நம்வினைகெடவென்று அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருளெனக் கருளுதியேல்
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே

தேன் சுவையை விட இச்சுவை பெரிது என எண்ணியது போல பாடல் ஒலி கேட்டு தன் தலை உயர்த்திப் பார்த்தது சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி.

(தொடரும்)

Friday, 11 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 18

18. உயர்வறவுயர்நலம்

தன்னை அழைப்பது எவரென திரும்பிப் பார்த்தாள் பாமா. யசோதை பாமாவின் அருகில் அமர்ந்தாள்.

யசோதையை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டவள்  எப்படி ஆமையானது தனது தலை, கால்களை உள்ளே இழுத்துக் கொள்ளுமோ அப்படி தனது கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

''யசோதை, எப்படி இருக்கீங்க?''

அவளது குரல் அவளது மனதின் வருத்தம்தனை வெளிக்காட்டியது.

''நல்லா இருக்கேன், நீங்க?''

''ம்ம், கோதை அக்காவுக்கு குழந்தை பிறந்து இருக்கு, அவங்களைப் பார்க்கத்தான் நான் போயிட்டு இருக்கேன், நீங்களும் அங்கதான் போறீங்களா''

''ம்ம், அப்பா விபரத்தைச் சொன்னார். அதான் என்ன ஏதுன்னு நேரடியாய் பார்த்துட்டு ஏதாச்சும் பண்ண முடியுமானு பார்க்கனும்''

நடத்துனர் பயணச்சீட்டு கேட்டு வந்தார். இருவருக்கும் யசோதையே பயணச்சீட்டு வாங்கினாள்.

''பரீட்சை எல்லாம் நல்லா எழுதி இருக்கீங்களா, வேலை தேட ஆரம்பிச்சிட்டீங்களா'' பாமாவின் முடிவு குறித்து எதுவும் அறியாத யசோதை கேட்டாள்.

''நல்லா எழுதி இருக்கேன், பெருமாள்பட்டில விவசாயம் சம்பந்தமா வேலை, வீடு எல்லாம் நாச்சியார் அம்மா பார்த்து கொடுத்து இருக்காங்க. கை, கால் இல்லாம குழந்தை பிறக்குமா, அது உயிரோட எவ்வளவு நாள் இருக்கும்''

பாமா அவளது வேலை குறித்து சொன்னதும் யசோதை வியப்போடு நோக்கினாள்.

''என்னது, அந்த ஊரிலேயே வேலையா, அந்த ஊர்ல இருந்து எல்லாம் வெளியூர் போயிட்டு இருக்காங்க, நீங்க என்ன இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கீங்க, நல்லா யோசிங்க பாமா. அப்புறம் அந்த குழந்தை பத்தி கேட்டீங்கள, பொதுவா இந்த மாதிரி பிறக்கிற குழந்தைக மூச்சு விட திணறும், நரம்பு மண்டலம் எல்லாம் ஒழுங்கா உருவாகி இருக்காது, குறைஞ்ச காலத்திலேயே இறந்துருவாங்க, சில விதி விலக்கு இருக்கு. எல்லாமே நல்லபடியா இருந்து கை கால் மட்டும் இல்லைன்னா நம்மளைப் போல உயிர் வாழ்வாங்க, ஆனா யாரையாவது துணைக்கு உடன் வைச்சிட்டே இருக்கனும். கை, கால் வரத பத்தி தான் நான் யோசிச்சிட்டு இருக்கேன்''

''கை கால் வளருமா''

''இதுபத்திதான் எனக்குத் தெரிஞ்ச ஒரு டாக்டர் நிறைய ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காரு. நானும் வேலனும் அவர்கிட்டதான் இதுபத்தி நிறைய கத்துக்கிட்டு இருக்கோம்''

பாமா வியப்போடு யசோதையைப் பார்த்தாள். பேருந்து அதிவேகமாக போய்கொண்டு இருந்தது. இந்த உலகில் குறைகள் அற்ற ஒன்றாக அனைத்தையும் மாற்ற வேண்டும் என நிறைய முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது.

இறந்து போன ஒருவரை தரையில் கிடத்தி வைத்த பிறகு, அவர் இறந்துவிட்டார் என மனதுக்கு தெரிந்தாலும், உயிர்த்து எழுந்து வந்து விடமாட்டாரா என நடக்காத ஒன்றை அவர் மீதான பிரியத்தினால் எண்ணும் மனம் அவரது இழப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அந்த இழப்பை மறந்து விட பல வருடங்கள் ஆகிறது. அவர்கள் வானத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என சமாதானம் அடைகிறது அல்லது தங்களது குடும்பத்தில் பிறக்கும் குழந்தையை அவராக எண்ணி மனதை தேற்றிக் கொள்கிறது. உறுப்புகள் அற்று பிறந்த பிறகு இதுவரை எந்த ஒரு குழந்தைக்கும் உறுப்புகள் வளர்ச்சி அடைந்ததாக மருத்துவக் குறிப்பில் இல்லை.

பொதுவாக எல்லாமே கருவில் தீர்மானிக்கப்படும் விசயமாக இருக்கிறது. நான்காவது வாரத்திலேயே கை கால் தோன்றுவதற்கான ஆயத்தங்கள் தொடங்கிவிடுகிறது. இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் ஸ்டெம் செல்கள் மூலம் பல மாற்றங்களை உண்டாக்கி வருகிறார்கள். இறந்து போன செல்களைப் புதுப்பித்தல் என்பது எல்லாம் நடைபெறுகிறது.

''எப்படியாவது இந்த குழந்தைக்கு முயற்சி பண்ணுங்க யசோதை'' பாமா தனது ஆசையை சொல்லி வைத்தாள்.

''கால் இல்லாம போன தவளைக்கு கால் வர வைச்சி இருக்காங்க, புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்தான் இதுக்கு துணை புரிஞ்சி இருக்கு பாமா, இதையே முன்மாதிரியா வைச்சி மனுசங்களுக்கு செய்யலாம்னு சொல்லி இருக்காங்க. நிறைய பேருக்கு கை கால் வெட்டி எடுத்துட்டா திரும்பி வளர வாய்ப்பே இல்லாம இருந்ததை மனசில வைச்சி இந்த ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு''

''முயற்சி பண்ணுங்க யசோதை''

கட்டாயம் பண்ணுவதாகச் சொன்னாள் யசோதை. அதன்பின்னர் அவர்கள் அமைதியாக வந்தனர். மருத்துவமனையை வந்து அடைந்தபோது மாலை ஆறு மணி ஆகி இருந்தது.  இருவரும் சென்று குழந்தையைப் பார்த்தார்கள். நாச்சியார் அங்கேதான் பூங்கோதையோடு இருந்தார். கை கால்கள் உடன் இல்லாமல் இருந்த குழந்தை பார்க்க மன உறுதி வேண்டும். தாங்கள் வாங்கி வந்த பொருட்களை அங்கே வைத்தார்கள். வைச்சி விளையாட கைக இல்லை என வருந்தினாள் பூங்கோதை. அப்போது சிறு ஒலி எழுப்பியது குழந்தை. கை, கால் முளைக்க வேண்டிய இடத்தில் இருந்த தசைகள் ஆடின.

''கவலைப்பட வேண்டாம்க்கா, உங்க குழந்தைக்கு கை கால் வந்துரும்'' யசோதை பூங்கோதைக்கு நம்பிக்கை கொடுத்தாள்.

''குழந்தை உயிரோட இருந்தாலே போதும் சின்னம்மா'' பூங்கோதையின் வலிமை இழந்த சொற்கள் பாமாவை என்னவோ செய்தது.

''நான் இருக்கேன்க்கா'' பாமா பூங்கோதையின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். குழந்தையைத் தூக்கினாள் பாமா. ''குழந்தை தலை பத்திரம் பாமா'' என்றார் நாச்சியார்.

தன் கன்னத்தோடு குழந்தையின் கன்னம் ஒட்டிக் கொண்டாள். அதன் செவியில் பாசுரம் ஒன்றைப் பாடினாள்.

உயர்வறவுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வறமதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதியவனவன்
துயரறுசுடரடி தொழுதெழன்மனனே

பாமா பாடிய பாடலைக் கேட்டு குழந்தையின் முக தசைகள் புன்னகை புரிவது போல அசைந்தன. வானில் பேரிடி ஒன்று இடித்து ஓய்ந்தது. 'பெருமாளே, இந்தக் குழந்தையை குறையில்லாத குழந்தையா மாத்து' என மனதில் வேண்டிக் கொண்டார் நாச்சியார்.

பாமாவின் தோளினைத் தொட்டாள் யசோதை. எங்கிருந்தோ ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. மெய் சிலிர்த்துப் போனாள் பாமா.

(தொடரும்)

Thursday, 10 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 17

17. ஊனமறு நல்லழகே

கம்பளிப்பூச்சியாக இருந்தபோது அதனில் உள்ள இந்த எதிர்ப்பு சக்தியானது இந்த இமேகோ செல்களை உருவாக விடாமல் தடுத்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாது இவை எல்லாத் தடைகளையும் தாண்டி பல செல்கள் உருவாகி பட்டாம்பூச்சியாய் உருவானது. தோலினுள் உருமாற்றம் தொடங்கி தோலினை கிழித்து தலைகீழாக வெளிவந்தபோது அவைகளுக்கு சிறகுகள் இல்லை. கால்கள் மற்றும் தலையோடு மட்டுமே வெளிவந்தது. சிறகுகள் இல்லாத இதை எப்படி பட்டாம்பூச்சி எனச் சொல்வார்கள்.

வெளிவந்த அடுத்தகணம் தலையை மேற்புறம் திருப்பி தனது தோலுக்கு நன்றி சொல்லிக்கொண்டது போல இருந்தது. அங்கிருந்து பறந்து போக சிறகுகள் இல்லை. துளசி இலையில் இருந்து கீழே பொத்தென்று விழுந்து தரையில் ஊர்ந்து சென்றது. இதைக்கண்டு பட்டாம்பூச்சி ஒன்று அதன் அருகில் சில நிமிடங்கள் நின்றுவிட்டு பரந்தாமனின் வீட்டுக்குள் சென்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டது.

ஊர்ந்து கொண்டே சென்ற இந்த பட்டாம்பூச்சி ஒரு மலர் இருந்த செடியின் மீது ஏறி அந்த மலரில் தேனினை உறிஞ்சத் தொடங்கியது. இமேகோ செல்கள் தங்களது பணியை சரிவரச் செய்யாத காரணத்தால் கால்கள் தலைகளோடு சிறகுகள் அற்ற பட்டாம்பூச்சி உருவானது. தனது நிலையை எண்ணி வருத்தம் எதுவும் கொள்ளாமல் பறந்து செல்வதற்குப் பதிலாக ஊர்ந்து சென்று மலர் இருந்த செடியை அடைந்தது.

விருதுநகர் மருத்துவமனையை அடைந்தார்கள். வலி பொறுக்கமாட்டாமல் கத்தினாள் பூங்கோதை. மருத்துவமனையில் வெகுவேகமாக அனுமதித்தார்கள். குழந்தையின் தலை சரியாக இருக்கிறது. பிரச்சினை எதுவும் இல்லை என மருத்துவர்கள் சொன்னார்கள். பரந்தாமனும் மருத்துவமனையை வந்து அடைந்தான். மிகவும் பதட்டமாகக் காணப்பட்டான். நாச்சியார் ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்.

மழை எப்போது பெய்யும் என்றும், பிள்ளை எப்போது பிறக்கும் என்றும் மகாதேவனே அறிந்தது இல்லை எனும் சொல்வழக்கு உண்டு. நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அறுவை சிகிச்சை எதுவும் செய்யாமல் குழந்தை வெளிவந்தது. குழந்தையைக் கண்ட மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.  கை கால் என இல்லாமல் உடலோடும், தலையோடும் மட்டுமே பிறந்து இருந்தாள். நாச்சியார், எம்பெருமாளே என்ன சோதனை இது எனக் கூறியபடி உடல் நடுங்கினார்.

கால், கை குறைவோடு பிறக்கிறவங்க இருக்காங்க, ஆனா இப்படி கால், கை முழுவதுமே இல்லாம பிறக்கிற குழந்தைக அபூர்வம். இதை அமெலியானு சொல்வாங்க. குழந்தையின் இதயத் துடிப்பு எல்லாம் சீராக இருந்தது.

கை, கால் தோன்றும் இடத்தில் கருமை நிறத்தில் புள்ளிகள் மட்டுமே தென்பட்டன.பூங்கோதை மயக்கத்தில் இருந்து தெளியாமல் இருந்தாள். குழந்தையைப் பாதுகாப்பு பண்ணிவிட்டு பரந்தாமனிடம் விபரத்தைச் சொன்னார்கள் மருத்துவர்கள். பரந்தாமன் கண்களில் நீர் திரண்டு வழிந்தது.

உள்ளே சென்று பூங்கோதையை, பிள்ளையை பார்த்தான் பரந்தாமன்.

''நாராயணி'' தழுதழுத்த குரலோடு அழைத்தான். குழந்தை பரந்தாமன் அழைத்தது கேட்டு வாய் அசைத்தது.

பூங்கோதை விழித்தாள். பிள்ளையைக் கண்டதும் ''நான் என்ன பாவம் பண்ணினேன்'' எனக் கண்கள் கலங்கியவள் குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள்.

''குழந்தை நல்லாதான் இருக்கா, கை கால்கள் மட்டும்தான் வளரலை, நீங்க இதை முன்னமே ஸ்கேன் எடுத்து பார்த்து இருந்தா சொல்லி இருப்பாங்க, இவ்வளவு தூரம் விட்டு இருக்க வேணாம்'' மருத்துவர் சொன்னதைக் கேட்கும் மன நிலையில் அங்கே எவரும்  இல்லை.

வசுதேவன் யசோதைக்குத் தகவல் சொன்னார். நாச்சியார் கேட்டுக் கொண்டதன் பேரில் பாமாவுக்கும் தகவல் சொன்னார் வசுதேவன்.

''ஒரு இரண்டு நாள் இங்க தங்கிட்டுப் பிறகு கூப்பிட்டுட்டுப் போங்க'' தன் பேச்சை சட்டை செய்யாமல் இருப்பது கண்டு மருத்துவர் தனியறை ஒன்று தருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

பத்து தலைகள் கொண்ட இராவணன். ஆறு தலைகள் கொண்ட முருகன். நான்கு தலைகள் கொண்ட பிரம்மன். ஐந்து தலைகள் கொண்ட நாகம். எட்டு கைகள் கொண்ட துர்க்கை. நான்கு கைகள் கொண்ட விஷ்ணு. யானை தலை கொண்ட விநாயகர். சிங்கம் தலை கொண்ட நரசிம்மர். இந்த பூமி இப்படி எண்ணற்ற விசயங்களை கேள்விப்பட்டது உண்டு.

''அம்மா, இப்படி ஆயிருச்சேம்மா, இனி அந்தக் குழந்தை வளர்ந்து எப்படிம்மா இந்த உலகத்தில் வாழப் போகுது'' பரந்தாமன் அழுகையை அடக்க இயலாதவனாகச் சொன்னான்.

''நீ கவலைப்படாத, எல்லாம் நல்லபடியாக நடக்கும், நான் போய் கோதை கூட இருக்கேன்''

தாலிடோமைடு எனும் மருந்துதனை காலையில் வாந்தி வருவதை தடுக்க கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டதால் அனைருக்கும் கை கால் குறைபாடு உள்ள குழந்தை பிறந்தது. அதன்பின் உடனடியாக அந்த மருந்து தடை செய்யப்பட்டது. பூங்கோதைக்கு எப்படி இப்படி ஆனது என மருத்துவரால் புரிந்து கொள்ள இயலவில்லை.

''துளசிச் செடியை அந்த பட்டாம்பூச்சி தின்னப்பவே எனக்கு ஒருமாதிரி இருந்துச்சும்மா'' பரந்தாமன் வருத்தம் பொங்கச் சொன்னான்.

''தேவை இல்லாம கண்டதை நினைச்சி குழப்பிக்காதே, நாங்க அந்த குழந்தையை நல்லா வளர்த்துருவோம்''

வசுதேவன் பரந்தாமனை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

யசோதை அவசரம் அவசரமாக மதுரையில் இருந்து கிளம்பி விருதுநகருக்கு செல்ல பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாள். அவள் ஏறிய பேருந்தில் ஒரு இருக்கையில் பாமா அமர்ந்து இருந்தாள்.

பேருந்தில் பாடல் ஒலித்தது.

''ஊனமறு நல்லழகே, ஊறு சுவையே கண்ணம்மா''

பாமாவின் அருகில் வந்தாள் யசோதை.

''பாமா''

பாமாவின் கண்கள் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தது.

(தொடரும்)