Saturday, 5 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 15

15. மனித உறவுகள்

பாமாவின் முடிவைக் கேட்டு மிகவும் அச்சம் கொண்டார்கள் அவளது பெற்றோர்கள். பாமா தனது முடிவில் உறுதியாக இருந்தாள். ஏதேனும் ஒன்றை நேசித்தல் என்பது பெரும் வரம், அதிலும் எத்தனை மிரட்டல்கள், துயரங்கள் வந்தாலும் அந்த நேசிப்பை விட்டு விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்வது அதனிலும் பெரும் பேரின்பம்.

''நம்மை விட்டு அங்க போய் இருக்கனும்னு முடிவு பண்ணினப்பறம் நாம என்ன பண்ண முடியும், எப்படியும் கல்யாணம் பண்ணி இன்னொரு குடும்பம்னு போக இருக்கிறவகதானே இப்பவே போகட்டும்'' பாமா மனம் மாறாமாட்டாள் எனும் முடிவுக்கு வந்த தந்தை வராகன் சொன்னார்.

''நீங்க இரண்டு பேரும் என்னோட வந்து இருங்க'' பாமா தனது ஆசையை எவ்வித குழப்பம் இன்றி கொண்டு செல்ல ஒரு யோசனை சொன்னாள்.

''இல்லைம்மா, நாங்க வாராவாரம் உன்னை வந்து பாக்கிறோம், நீ மட்டும் அங்கே போய் இரு, நல்லமுறையா பரீட்சை எல்லாம் எழுது, நல்ல மார்க் எடு அது போதும் எங்களுக்கு'' வராகன் பேச பாமாவை பார்த்த வண்ணம் இருந்தார் ருக்மணி.

''என்னம்மா ஒன்னும் சொல்லலை'' பாமா சொன்ன மறுகணம் பாமாவை கட்டிப்பிடித்து அவளது நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னார் அவளது அம்மா.

''தைரியமா போய் வேலையைப் பாரு, அவர் சொன்ன மாதிரி நாங்க வந்து உன்னைப் பார்க்கிறோம். பல தடவை நீ சில விசயங்களுக்கு தயங்கினப்ப நான் சொன்ன கதைதான். இதே போல ஒரு நிலைமை எனக்கு வந்தப்ப உன்னோட பாட்டிதான் எனக்கு தைரியம் தந்து வெளியூருக்குப் படிக்க அனுப்புனது. ஊருல எல்லோரும் எதுக்கு அவ்வளவு தூரம் படிக்க அனுப்பனும்னு சொன்னப்ப என்னோட விருப்பத்துக்கு ஏத்தமாதிரி நடக்கனும்னு முழு சுதந்திரம் கொடுத்தது உன் பாட்டிதான், அப்படிப்பட்ட அம்மாவோட பிள்ளையா நான் இருந்துட்டு தேவை இல்லாம பயப்படுறது தப்பு''

பாமாவுக்கு அம்மாவை நினைத்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த உலகில் உங்கள் விருப்பம் போல வாழ இயலாமல் போவது பெருஞ்சாபம். எப்பாடுபட்டாவது உங்களது விருப்பம் போல உலகில் இந்த வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.

பாமாவுக்கு பெருமாள்பட்டியும், பெருமாள் கோவிலும் திரும்பத்திரும்ப நினைவில் வந்து போயின. ஸ்ரீரங்கம் செல்கிறேன் எனச் சொல்லிச் சென்ற பாட்டியை மீண்டும் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் மேலிட்டது. தனது தேர்வுகள் முடியும் வரை காத்திருப்பது என முடிவுக்கு வந்தாள் பாமா.

பரந்தாமன் துளசிச் செடிகளின் நிலை கண்டு மிகவும் வருத்தம் கொண்டவன் ஆனான்.

''கோதை, அந்த பட்டாம்பூச்சிக்காக இப்படி இந்த துளசிச் செடிகளை வதைக்கிறது எனக்கு நல்லதாகவே படல. மனசுல என்னமோ ஓடுது. இந்த துளசி செடி இல்லாம வேறு எந்த ஒரு செடியில போய் முட்டை போட்டு வளர்ந்து இருக்கலாம்ல உலகத்தில் இல்லாத அதிசயமா ஒரே ஒரு முட்டை போட்டு அதுவும் துளசிச் செடி இலைகள் எல்லாம் நாசாமப் போகுது''

''உங்களுக்குத்தான் தேவை இல்லாம சஞ்சலம், பெருமாளுக்கு அது பக்கத்தில இருக்க துளசிச் செடி இலைகளை எடுத்துப் போய் தீர்த்தம் பண்ணித் தந்தா ஆகாதுன்னு இருக்கா, எதுக்கு இப்படி கவலைப்படுறீங்க''

''உனக்கும் நம்ம பிள்ளைக்கும் எதுவும் ஆகாம இருக்கனும், அது போதும்''

''உங்க பெருமாளே ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலைதான் தனக்கு உகந்ததுனு சொல்லி இருக்காரு அது போல இந்த பூச்சி உண்ட இலைகளை வேணாம்னா சொல்லப் போறாரு''

''எதுக்கு இப்படி எல்லாம் பேசற கோதை, பல வருசங்களுக்கு அப்புறம் இப்பதான் நமக்கு ஒரு புள்ளை வரப்போகுது இந்த நேரத்தில பெருமாள் மேல எதுக்கு நிந்தனை''

''நான் எங்க நிந்தனை பண்ணினேன், இருக்கிறதைத்தான் சொன்னேன்''

''மனசுக்கு ஒருமாதிரியா இருந்தது கோதை, அதுதான் மத்தபடி ஒன்னும் இல்லை''

''எனக்கும் நான் செத்துப் போயிருவேனோனு நினைப்பு வருது''

பரந்தாமன் தனது கண்கள் குளம் போல நிறைய பூங்கோதையின் வாயினை இரு கைகளால் மூடினான்.

''அப்படி எல்லாம் சொல்லாத கோதை''

பரந்தாமனின் கண்களில் இருந்து நீர்த்துளிகள் கொட்டின.

''என் மேல அவ்வளவு பிரியமா, குழந்தை இல்லாதப்ப கூட என் மேல இத்தனை கரிசனத்தோட இருந்தீங்க''

எதுவும் சொல்லாமல் பூங்கோதையை கட்டிக்கொண்டான் பரந்தாமன். இவ்வாழ்வுதனை அழகுற இரசித்து வாழ்வதற்கு எவரேனும் ஒருவரை அல்ல, நமது மனதுக்கு மிகவும் பிடித்த ஒருவரை எப்போதும் நம்முடனே வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மனிதர்கள் இந்த பட்டாம்பூச்சிகள் போலவே மனமாற்றம் கொள்ளும் நிலையை நான்காகப் பிரித்துக் கொள்கின்றனர். அது பட்டாம்பூச்சிகளின் வாழ்வு சுழற்சி போலவே இருக்கிறது என்பதாக சிலரது எண்ணங்கள்.

பட்டாம்பூச்சியாக உருவெடுக்கும் முன்னர் தனது பழைய தோல்களை பலமுறை கழட்டி எறிந்து அதன்பின் கூடு கட்டி அதனுள் தன்  உடலையே திரவ நிலைக்கு மாற்றி அதில் இருந்து சிறகுகளும், கால்களும் என புதுப்பொலிவைப் பெறுகிறதே பட்டாம்பூச்சி அதுபோல மனிதர்களும் பல்வேறு மனமாற்றங்களுக்கு உட்பட்டு புதுப்பொலிவை பெறுகிறார்கள்.

துளசிச் செடியில் வளரும் கம்பளிப்பூச்சி தனது தோல்களை சிலமுறை கழட்டி போட்டபடி துளசிச் செடி இலைகளை உண்டு வளர்ந்து கொண்டு இருந்தது.

(தொடரும்)


Wednesday, 2 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 14

14. தாய்மையின் மனம்

பூங்கோதை பட்டாம்பூச்சி பற்றி சொன்னதும் பாமாவின் இடது தோளில் இருந்து பறந்து போனது பட்டாம்பூச்சி. பாமாவுக்கு பெருமாள்பட்டி மிகவும் பிடித்துப் போனது. தேர்வு முடிந்ததும் பெருமாள்பட்டிக்கே வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் பாமா. நாச்சியார் பாமாவை எண்ணி பெருமிதம் கொண்டார்.

சில முடிவுகள் சூழலுக்கு ஏற்ப எடுக்கப்படுபவைகள். அச்சூழலுக்கு அவை சரியெனப்படும். சூழல் மாறிட எடுத்த முடிவுகள் தவறாகத் தோன்றும். எல்லாச் சூழலுக்கும் அதே முடிவு என்பது அறிவுடைமை ஆகாது, ஆனால் அதைத்தான் நேர்மை, கொள்கைப்பிடிப்பு என்றெல்லாம் சொல்லிக் கொள்கின்றனர்.

பூங்கோதையை மிகவும் கவனமாக இருக்கச் சொன்னார் நாச்சியார். பிள்ளை பெறுதல் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்றெல்லாம் இச்சமூகத்தில் சொல் வழக்கு உண்டு. உயிரில் உயிர் தோன்றி உயிர் பிரித்தல் என்பது பாலூட்டிகளில் மட்டுமல்ல பெரும்பாலான உயிரினங்களில் நடக்கும் ஒன்று.

இதுபோன்ற முதல் கர்ப்பம் தரித்தச் சூழலில் தானும், குழந்தையும் நலமாக இருக்க வேண்டும் என பெண்ணின் மனம் நிறையவே அல்லாடும். இந்த தருணங்களை அழகுற நேசித்தல் பெண்ணுக்குரிய பெருமிதம். இக்கால கட்டங்களை வாழ்நாள் எல்லாம் அசைபோடும் நினைவுகளை சுமக்கும் பெண்ணின் மனம். அதோடு மட்டுமல்ல இனம் புரியாத ஒரு அச்சமும் வந்து சேரும். பூங்கோதைக்கும் அந்த அச்சம் ஏற்பட்டது.

''குழந்தைப் பிறக்கறப்ப நான் செத்துப் போனா என் பிள்ளையை நீங்க கவனிச்சிக்கோங்கம்மா''

பதறிப்போனார் நாச்சியார்.

''கோதை, இப்படி எல்லாம் பேசாத, உனக்கு ஒன்னும் ஆகாது. நல்லபடியா குழந்தையைப் பெத்து பெரிய ஆளா வளர்க்கிற வழியப் பாரு''

''மனசுல என்னமோ தோணிச்சிம்மா'' பூங்கோதையின் மனதில் ஒரு வித வலி.

நாச்சியார், பூங்கோதையின் தலையை வருடியபடி சொன்னார்.

''எதுக்கும் கவலைப்படாத கோதை, உன்னை பெருமாள் கைவிடமாட்டார்''

மனிதர்கள் தரும் நம்பிக்கைகள் எல்லாம் எவ்வித உறுதிப்பாடும் இல்லாதவை. ஆனாலும் இந்த நம்பிக்கைகள் ஒருவித மன நிம்மதியைத் தந்து போகிறது.

''இத்தனை வருசமா என்னை பெருமாள் இந்தக் குழந்தைக்காக காத்திருக்க வைச்சிட்டாரும்மா''

மனதில் ஏற்படும் இரணங்களை சுமந்தபடியே தமக்கு ஒரு விடிவுகாலம் வராதா என ஏங்கியபடியே நாட்களை கடத்துகின்றனர். அவர்களை இச்சூழலுக்கு உண்டாக்கும் எல்லாக் காரணிகளை விட இறைவனே எல்லாவித பொறுப்பும் பெரும்பாலானவருக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். இயக்கம் என்ற ஒன்றைத் தோற்றுவித்து இயங்காமல் இருப்பது என்பது எத்தனை கடினமான செயல்.

பூங்கோதையின் வேதனையை நாச்சியாரால் புரிந்து கொள்ள முடிந்தது.

''இருக்கிற நிலைமைக்கு மகிழ்ச்சியா இருக்கப் பழகிக்கிரனும் கோதை, இப்போவாவது தாயாகும் வாய்ப்பு கிடைச்சதுனு நிம்மதியா இரு''

''இல்லைம்மா, திடீருனு இப்படி தோனுது, அதை மனசில வைச்சிக்க முடியாம உங்ககிட்ட கொட்டிட்டேன்''

''ம்ம், கவலைப்படாத எல்லாம் நல்லா நடக்கும்''

பூங்கோதைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நாச்சியார் பாமாவுக்கென ஒரு வீடுதனை உள்ளூரில் வாடகைக்குப் பார்த்து வைத்தார். நகரங்களில்தான் வாடகைக்கு என விடப்படும் வீடுகள் உண்டு எனில் கிராமங்களில் கூட வாடகைக்கு வீடு விடப்படுவது உண்டு.

வசுதேவனிடம் பள்ளிக்கூடம் குறித்தும், ஆழ்வார் திருநகரி செல்ல வேண்டியது குறித்தும் விரிவாகப் பேசினார் நாச்சியார். வயதான பிறகு இது எல்லாம் தேவை இல்லை என வசுதேவன் மறுத்துவிட்டார். நாச்சியாருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் பாமா நினைவுக்கு வந்து போனாள். பாமா வந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு ஆழ்வார் திருநகரி செல்லத் திட்டமிட்டார்.

''அண்ணா, இதை எனக்காக பாமா செய்வா, அவளே வழி நடத்துவா, நான் பக்கபலமா இருப்பேன், கோவிலுக்குப் பக்கத்தில சின்ன இடம் கிடைச்சா போதும்ண்ணா''

''ஊர்ல இருக்கிறவங்ககிட்ட பேசி செய்ய வேண்டிய காரியம், நான் கலந்து பேசிட்டு சொல்றேன்மா''

''அண்ணா அப்புறம் ஒரு முக்கியமான விசயம். யசோதை, சுந்தரவேலனை கல்யாணம் பண்ணுவேனு இருக்கா, மாணிக்கவாசகர் பையன்''

இதைக் கேட்ட மறுகணம் வசுதேவன் மிகவும் கோபம் கொண்டார்.

''நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கலை, என்ன மனசில நினைச்சிட்டு இருக்கா. எல்லாம் நீ கொடுத்த செல்லம்தான்''

''பதட்டப்படாம அவளோட விருப்பப்படி செய்ற வழியப் பாருங்கண்ணா''

வசுதேவன் இனிமேல் எதுவும் அதிகம் சொல்லக்கூடாது என அமைதி ஆனார்.

''யோசிக்கிறேன்மா''

நாச்சியார், வசுதேவனின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாதவராக இருந்தார். தான் திருமணம் பண்ணமாட்டேன் என்றபோது சரி, உன் விருப்பம் ஆனா உன் மனசு மாறும்னு நினைக்கிறேன் என பல வருடங்கள் காத்து இருந்தார், அதன்பின் தன் மனம் மாறவில்லை என அறிந்ததும் தன் வழி என போய் விட்டார். தான் பெற்ற பிள்ளை என்றதும் நிறைய உரிமை எடுத்துக் கொள்வது போல் நாச்சியாருக்குப் பட்டது.

யசோதையின் ஆசையை நிறைவேற்றுவது நாச்சியாருக்கு மிகவும் முக்கியமாகப் பட்டது. துளசி இலைகளை தினமும் உண்டு தன்னை வளர்த்துக் கொண்டு இருந்தது பட்டாம்பூச்சியாக உருமாற்றம் கொள்ள இருக்கும் அச்சிறு கம்பளிப்பூச்சி.

(தொடரும்) 

Sunday, 29 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 13

13 மன்னுபுகழ் பட்டாம்பூச்சி

பெருமாள்பட்டிக்குள் சென்றாள் பாமா. அதிகம் மக்கள் நடமாட்டம் இல்லாத ஊர். கோழிகள் சேவல்கள் தரையைக் கொத்திக் கொண்டு இருந்தன. நாய்கள் ஒவ்வொரு வீதியிலும் நிழல் பார்த்து படுத்து இருந்தன. எவரேனும் அதன் வழி கடந்தால் தலையைத் தூக்கிப் பார்ப்பதோடு சரி. ஆடுகள், மாடுகள் சில வீடுகளோடு ஒட்டி கட்டப்பட்டு இருந்த தொழுவங்களில் படுத்தவாறு அசைபோட்டு கொண்டு இருந்தன. உழவுக்கு என மாடுகள்தான் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. வீதிகளில் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் கல்லினால் மூடப்பட்டு சுகாதாரம் மிக்க இடமாகவே வீதிகள் காட்சி அளித்தன.

கிணற்றில் நீர் இறைத்துச் சென்றவர்களின் உரையாடல் வெள்ளேந்தி மனிதர்களை அடையாளம் காட்டிக் கொண்டு இருந்தது. தேநீர்க்கடையோ, உணவுக்கடையோ இல்லாமல்தான் அங்கே இருந்தது. ஊருக்கென்று ஒரு மந்தை, அந்த மந்தையை ஒட்டிய ஒரு பலசரக்கு கடை. விவசாயத்தில் விளைந்து வரும் எந்த ஒரு பொருளையும் இங்கே வந்து தந்துவிட்டால் போதும், விருதுநகருக்கோ, கல்லுப்பட்டிக்கோ மொத்த வியாபாரத்திற்கு கடையின் சொந்தக்காரர் மாறன் விற்று பணம் தந்து விடுவார். தனக்கென ஒரு சதவிகிதம் பணத்தை இலாபத்தில் எடுத்துக் கொள்வது அவரது வழக்கம்.

வியாபாரம் என்றாலே நேர்மையற்ற தொழில் என்பதைவிட இந்த உலகில் பிறந்த உயிரினங்கள் தாம் உயிர் பிழைக்க வேண்டி என்னவெல்லாம் செய்யுமோ அதுபோல வியாபாரம் செழித்தோங்க பல்வேறு வழிகளை கடைபிடிப்பது உண்டு, ஆனால் மாறன் அப்படி எல்லாம் செய்வது இல்லை. ஊருக்குள் இருப்பவர்களுக்கு தேவையானப் பொருள்களை தனது கடையில் வாங்கி வைத்து வியாபாரம் செய்வது வழக்கம்.

மந்தையை வந்து அடைந்தாள் பாமா. அப்போதுதான் தான் எதுவுமே வாங்கி வராமல் வந்து இருப்பது அவளுக்கு உரைத்தது. குண்டத்தூரில் ஏதாவது வாங்கி இருந்து இருக்கலாம் அப்போதும் அதை மறந்து இருந்தாள். மாறனிடம் சென்று சேவு, சீரணி என வாங்கினாள்.

''ஊருக்குப் புதுசா இருக்கம்மா, யாரைப் பார்க்கனும்''

தானே வீடு விபரம் கேட்கும் முன்னர் மாறன் கேட்டது பாமாவுக்கு எளிதாகப் போனது.

''நாச்சியார் அம்மா''

''இப்படியே நேராப் போய் வடக்கத் திரும்பினா அந்த வீதியோட கடைசி வீடு, பெரிய வீடு, இரண்டு திண்ணைக வைச்சது இருக்கும், வீட்டுலதான் இருப்பாக''

நன்றி சொல்லிவிட்டு நடந்தாள். மந்தைக்கு அந்தப்பகுதியில் எப்படி வீதிகள் இருந்தனவோ அதேபோலவே இந்தப்பகுதியிலும் மிகவும் அகலமான வீதிகள். நாச்சியார் வீட்டை அடைந்தாள் பாமா. வீட்டின் கதவுகள் திறந்தே இருந்தன. எந்த ஒரு ஊரில் வீட்டின் கதவுகள் திறந்து போடப்பட்ட போதும் திருடுப் போகாதோ அந்த ஒரு ஊரில் உள்ள மனிதர்கள் நேர்மையும், சத்தியமும் நிறைந்தவர்களாவே இருப்பார்கள்.

பாமாவைக் கண்டதும் வியப்பு அடைந்தார் நாச்சியார்.

''என்னைப் பார்க்க வந்ததா அம்மா சொன்னாங்க, அதான் உங்களைப் பாத்துட்டுப் போகனும்னு மனசுக்குப் பட்டுச்சு, கிளம்பி வந்துட்டேன், உங்க ஊர்ல வாங்கின பலகாரம்'' எனச் சொல்லியவாறு நாச்சியார் கைகளில் தந்தார். பாமாவை கட்டிப்பிடித்துக் கொண்டார் நாச்சியார்.

''பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு வரியாம்மா, உட்காரும்மா''

தான் பெருமாள் கோவில் சென்று வந்தது இவருக்கு அதற்குள் எவர் தகவல் தந்து இருப்பார்கள் என யோசித்தாள் பாமா.

''நான் உன்னைப் பார்க்க வந்ததே நீ படிப்பை முடிச்சிட்டு எங்க ஊருல வந்து விவசாயம் சம்பந்தமா வேலை செய்யச் சொல்லி கேட்கனும்னுதான்'' நாச்சியார் சொன்ன மறுகணம் பாமா எவ்வித மறுப்பு சொல்லாமல் சரி என சம்மதம் சொன்னாள்.

''இந்த ஊர் பெருமாள் எனக்கு ரொம்பப் பிடிச்சி இருக்கு''

''எல்லா ஊர்லயும் ஒரே பெருமாள்தானே பாமா''

''இல்ல இந்தக் கோவில் அமைப்பு எல்லாம் மனசுக்கு இதமா இருக்கு''

''கோவிலுக்கு வரவங்க இதைச் சொல்லாமப் போனது இல்ல''

புன்னகை புரிந்தாள் பாமா. தண்ணீர் கொண்டு வந்து தந்தார் நாச்சியார்.

''நான் கேட்டதும் மறுப்பு சொல்லாம சம்மதம் சொன்னதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, கொஞ்ச நேரம் இருந்தா சமையல் முடிச்சிருவேன், அண்ணாவும், அண்ணியும் விருதுநகர் வரை ஒரு கல்யாணத்துக்குப் போய் இருக்காங்க, வர எப்படியும் சாயந்திரம் ஆகிரும்''

''பசி எல்லாம் இல்லைம்மா''

''ஒரு வாய் சாப்பிடனும், அங்க வந்து நில்லு பாமா, இல்லைன்னா கொஞ்ச நேரம் இங்கு உட்கார்ந்து இரு''

சமையல் அறைக்குள் சென்று மீதம் இருந்த வேலைகளை பார்க்கச் சென்றார் நாச்சியார். பாமா வீட்டினை கண்களால் அளந்தார். வீடு தேக்கு மரங்களால் தாங்கப்பட்டு கொண்டு இருந்தது. சுவரில் பெருமாள் தாயார் படம் தவிர வேறு எந்த ஒரு படங்களும் தென்படவில்லை.

சமையல் முடித்து இருவரும் சாப்பிட்டுவிட்டு பூங்கோதையைப் பார்க்கச் சென்றார்கள். செல்லும் வழியில் வீடுகளில் இருந்த சிலர் இது யாரு என பாமாவை கேட்க எல்லோரிடமும் என் மக என பெருமை பொங்கச் சொல்லிக் கொண்டார் நாச்சியார். அதில் ஒரு வயதான மூதாட்டி கல்யாணம் பண்ணாம பிள்ளை பெத்தாளாம் பொன் நிறமா என கேலி பண்ணிச் சிரித்தவர் அன்னைக்கே என் பையன கட்டி இருந்தா இன்னைக்கு இப்படியான பிள்ளைக நாலஞ்சு பெத்து போட்டு இருப்ப என்றார்.

''அம்மா'' நாச்சியார் கைகளைப் பிடித்துக் கொண்டாள் பாமா.

''எனக்கு அந்த பெருமாளே போதும் அத்தை'' நாச்சியார் புன்முறுவலோடு சொன்ன பதில் பாமாவுக்கு அதிசயமாக இருந்தது. பூங்கோதையின் வீட்டை அடைந்தார்கள். பூங்கோதை இவர்களைப் பார்த்து எழுந்து வந்தாள்.

''பாமா, நம்ம ஊர்ல விவசாயம் சம்பந்தமா வேலைப் பார்க்க இன்னும் மூனு வாரத்தில வரப்போறா''

நிறைய பட்டாம்பூச்சிகள் பாமாவைச் சுற்றி வட்டம் அடித்தன. அதில் ஒரு பட்டாம்பூச்சி அவளது இடது தோளில் அமர்ந்தது.

''அம்மா, என் தோள் மேல உட்கார்ந்தது போல இவங்க தோள் மேல உட்காருதும்மா'' என பெருமகிழ்வோடு சொன்னாள் பூங்கோதை.

துளசி இலைகளில் பல ஓட்டைகளோடு காணப்பட்டதை கண்டாள் பாமா.

ஒரு தாவரம் தன்னில் உள்ள எல்லாப் பாகங்களையும் பிற உயிரினங்களின் உணவாக மாற்றிக் கொள்கிறது. துளசிச் செடிகளின் அருகில் சென்ற பாமா தன் அழகிய கண்கள் மிளிர கம்பளிப் பூச்சி போன்று ஊர்வதைக் கண்டு பெரு மகிழ்வு கொண்டாள். அப்படியே பூங்கோதையின் கர்ப்பம் தரித்த வயிறு கண்டாள்.

''மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே'' என பாமா பாட சிலுசிலுவென தென்றல் வீசியது. நாச்சியார் பாமாவின் குரல் கேட்டு அகம் மகிழ்ந்தார். குழந்தை தன் வயிறுதனை முட்டுவதை முதன் முதலாக உணர்ந்தாள் பூங்கோதை.

(தொடரும்)