Sunday, 29 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 12

12. கண்ணி நுண் சிறுத்தாம்பு

பாமா சனிக்கிழமை காலையிலேயே பெருமாள்பட்டி நோக்கி பயணம் ஆனாள். மனிதர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கை அபாயகரமானது என இந்த உலகம் நிறைய அவநம்பிக்கைகளை விதைத்துக் கொண்டே இருந்தாலும் மனிதர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கை பொய்க்காது எனச் சொல்லவும் சில மனிதர்கள் எடுத்துக்காட்டாக இருந்து கொள்கின்றனர். செங்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் பாமா.

இந்த பயணம் தனது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையும் என பாமா நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. நாச்சியார் தன்மீது கொண்ட பிரியம் ஒன்றே அவளது இந்த திடீர் பயணத்துக்கு முக்கிய காரணமாக அமைந்து இருந்தது. இதற்கு முன்னர் குற்றாலம் சென்று இருக்கிறாள் மற்றபடி இந்த பெருமாள்பட்டி எல்லாம் அவள் கேள்விப்படாத ஊர். பேருந்தின் வேகத்தை அவளது பறக்கும் தலைமுடி காட்டிக்கொண்டு இருந்தது, அதோடு கூடிய சிறு தூறல்.

திருமங்கலம் தாண்டியதும் மனதில் நாச்சியாரிடம் என்ன சொல்வது என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கி இருந்தாள். செங்கோட்டை செல்லும் வழியில் திரும்பிய பேருந்து குண்டத்தூர் வந்ததும் இறங்கிக் கொண்டாள். அங்கே இருந்து பெருமாள்பட்டிக்கு நடக்கத்  தொடங்கினாள்.

முன்பின் அறியாத ஊர், அறியாத மக்கள் வழி கேட்டதும் சரியாகத் திசையை காண்பித்தார்கள். சிறு தூறல் விழுந்து கொண்டே இருந்தது. சட்டென யோசனை செய்து உடனே செய்யும் மனிதர்கள் ஒருவகை. யோசித்துக் கொண்டே எந்த ஒரு முடிவும் எடுக்காமல் காலம் கடத்தும் மனிதர்கள் மற்றொரு வகை.

பெருமாள்பட்டி என காட்டிய வழிகாட்டி அவள் சரியான பாதைக்குச் செல்ல வழிவகுத்தது. அவள் செல்லும் வழியில் தோட்டத்தில் வேலை பார்க்கும் மனிதர்கள் தென்பட்டார்கள். வழியில் கண்ட ஒருவயதான பெண்மணி பாமாவை வழி மறித்து விசாரணை செய்தார்.

''யாரு நீ, யாரைப் பார்க்கப் போற, ஊருக்குப் புதுசா இருக்க''

எவர் எனத் தெரியாத ஒருவர் தன்னிடம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதா என யோசிக்காமல் பாமா தெளிவாகவே சொன்னாள்.

''பெருமாள்பட்டியில நாச்சியார் அம்மாவை பார்க்கப் போயிட்டு இருக்கேன், என் பேரு பாமா, ஊர் மதுரை, அவங்க மதுரைக்கு வந்தப்ப பார்த்தேன்''

''சொந்தமா''

''இல்லை''

''சரி சரி போய்ப் பாரு, நானும் அந்த ஊருதான், ஆனா இன்னைக்கு வர நான் ஸ்ரீரங்கம் போயிட்டு அடுத்த வருசம் இதே நாளில வருவேன், கொஞ்ச நேரத்தில வந்து பெருமாளைக் கும்பிட்டுட்டு கிளம்பிருவேன்'' எனக் கூறிக்கொண்டே நிற்காமல் நடந்து போனார்.

ஆச்சரியமாக அவர் போகும் பாதையைப் பார்த்தவள் சிறிது தூரம் நடந்ததும் பெருமாள் கோவிலின் கோபுரம் தென்பட்டது. நேராக பெருமாள் கோவிலுக்குச் சென்றாள். அவளுக்குள் ஒருவித இனம் புரியாத உணர்வு ஊறிக்கொண்டு இருந்தது. தான் நெற்றியில் வைத்து இருந்த ஒரு கோடு போன்ற நீண்ட சிவப்பு பொட்டும் அதன் கீழ் வைத்து இருந்த பிறை வடிவ வெள்ளைப் பொட்டும்  என அவள் பெருமாள் மீது கொண்டு இருந்த பிரியம் வெளிப்பட்டுத் தெரிந்தது.

கருவறை முன் நின்று தாயாரோடு இருந்த பெருமாளை பார்த்த வண்ணம் நின்றாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் நிறைந்தது. பல்லாண்டு பல்லாண்டு பாடியபடியே பரந்தாமன் தீபாராதனை காட்டினான். அந்தப் பாடலே பாமாவுக்குள் இக்கண்ணீர் வரவழைக்கப் போதுமானதாக இருந்தது. துளசி நீர் கொடுத்தான் பரந்தாமன். எவரேனும் புதிதாக வந்தால் யார் எவர் என விசாரிப்பது பரந்தாமன் வழக்கம். பாமாவிடமும் அப்படியே விசாரித்தான்.

''எந்த ஊர்ல இருந்து வரீங்க, உங்களை இதுக்கு முன்னம் பார்த்தது இல்லையே''

''மதுரை''

துளசிச் செடியின் இலைகள் என சில பாமாவுக்குத் தந்தான்.

''இந்தக் கோவில் மனசுக்கு நிறையப் பிடிச்சி இருக்கு, ஆளுக வரமாட்டாங்களா''

''வரப்போ வருவாங்க''

கோவிலைச் சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தாள் பாமா.

அவள் வழியில் கண்ட வயதான பெண்மணி கோவிலுக்குள் வந்தவர் பாமா அமர்ந்து இருப்பதைக் கண்டு நேரடியாக அவளிடம் வந்தார்.

''நாச்சியாரைப் பார்க்க வந்தேனு சொன்ன, இந்த நாச்சியாரைத்தான் பார்க்க வந்தியா, '' எனச் சொல்லிக்கொண்டே பாமாவின் அருகில் அமர்ந்தார்.

''இல்லை, கோவில் தெரிஞ்சது அதான் சேவிச்சிட்டுப் பிறகு போய் அவங்களைப் பார்க்கலாம்னு நினைச்சேன்''

''உன்கிட்ட ஒன்னு கேட்கனும், கேட்கட்டுமா''

''ம்ம் கேளுங்க''

''செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும், சொல்லு'' என்றார்.

பாமா ஒரு கணம் சிலிர்த்துப் போனாள். இது மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரிடம் கேட்டது. இதை ஏன் தன்னிடம் இவர் கேட்கிறார் எனத் திகைத்தாள்.

''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' என்ற பாமாவின் குரல் எத்தனை இனிமை மிக்கது என வாக்கியங்களில் விவரிக்க இயலாது.

''ஆழ்வார் பத்தி தெரிஞ்சி வைச்சி இருக்க, பெருமாள்ன்னா அத்தனை விருப்பமோ''

''ம்ம் நிறைய''

''உனக்குப் பிடிச்ச ஆழ்வார் பாசுரம் சொல்லு''

''நிறைய இருக்கு, எதைச் சொல்றதுனு தெரியலைங்க''

''ஏதாவது ஒன்னு''

''கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே''

''நம்மாழ்வார் உனக்கு நிறையப் பிடிக்கும் போல'' என்றவர் எழுந்து போனார். பாமாவின் இடது தோளின் மீது ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து ஒட்டிக்கொண்டது.

(தொடரும்)

Friday, 27 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 11

11. உயிர்களின் பேரன்பு

நாச்சியார், யசோதையிடம் பெரியவர்கள் பேசி முடிக்கும்வரை மிகவும் கவனமாக இருக்கச் சொன்னார். பொதுவாகவே பெரியோர்களின் அறிவுரைகளை கேட்கும் அளவிற்கு இப்போதைய இளம் வயதுக்காரர்களுக்கு பொறுமை இல்லை, ஆனால் அறிவு நிறைய இருக்கிறதாகவே எண்ணிக் கொள்கின்றனர்.

''கவலைப்படாதீங்க அத்தை, அதெல்லாம் கவனமா இருப்பேன்''

யசோதையின் உறுதியாகத்தான் தென்பட்டாள். நாச்சியார் மீது அவளுக்கு நிறையவே நம்பிக்கை இருந்தது. உறவுகளை உடைத்து தனக்கென ஒரு வாழ்வு வாழ்வது என்பது இப்போதெல்லாம் எளிதாக நடந்தேறிக்கொண்டே இருக்கிறது.

''யசோ, பாமாவை ஒரு எட்டுப் பார்த்துட்டுச் சொல்லிட்டுப் போகலாம்னு இருக்கு, நீ என்கூட வர முடியுமா''

''அவ வீட்டில இருக்காளோ என்னவோ, என்னங்க அத்தை, பாமா மேல இத்தனை கரிசனம்''

''பேசின அந்த கொஞ்ச நேரத்தில மனசுக்கு நெருக்கமா உணர வைச்சிட்டா, விவசாயப் படிப்புதான் படிக்கிறா அவளுக்கு நம்ம ஊரு பிடிச்சி நம்ம ஊரிலேயே இருந்துட்டா விவசாயம் சம்பந்தமா நிறைய பண்ணலாம் அவ மனசுல என்ன இருக்கோ''

''அதை நீங்க கேட்கலையா அத்தை''

''உடனே எப்படி கேட்க முடியும், பட்டாம்பூச்சி பத்தி பேசவே சரியாப் போச்சு, அப்புறம் யோசிச்சிப் பார்க்கிறப்ப இப்படியெல்லாம் தோனுது''

''உங்களுக்குப் பையன் இருந்தா இந்நேரம் பாமாவே உங்க மருமகளா வந்து இருப்பா, இல்லையா அத்தை''

நாச்சியார் மிகவும் அமைதியானார். இந்த உலகில் திருமணம் பண்ணாமல் வாழ்தல் என்பது சற்று சிரமமான ஒன்றுதான். கல்யாணம் பண்ணலையா எனக் கேட்டே கல்யாணம் பண்ண வைத்து விடுவார்கள். அப்படியும் வேறு காரணங்கள் சொல்லி கல்யாணம் கட்டாமல் போனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு கல்யாணம் என்பது நடக்காமலே போய்விடும். கால சூழல் பலரை திருமண வாழ்வில் நுழைய விடாமல் தடுத்து விடுகிறது. நாச்சியார் போன்றோர் திருமணமே வேண்டாம் என சிறு வயதில் இருந்தே இருந்து விடுகிறார்கள். இதற்கு உடல்ரீதியான, மனரீதியான விளக்கங்கள் எனப் பல இருந்தாலும் அவரவரைப் பொருத்தே எல்லாம் அமைகிறது.

''என்னங்க அத்தை, பதில் காணோம்''

''நடக்காத கதையைப் பேசிப் பயன் இல்லைதானே யசோ, நான் மட்டும் பாமாவை பாத்துட்டு ஊருக்குப் போறேன்''

''சரிங்க அத்தை, பத்திரமா போய்ட்டு வாங்க''

நாச்சியார் பாமாவின் முகவரியை சரியாக கண்டுபிடித்து அவளது வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார். பாமாவின் அம்மா ருக்மணிதான் வந்தார்.

''பாமா இருக்காங்களா''

''உள்ளே வாங்க, ஏன் வெளியே நின்னுட்டீங்க, அவ வர சாயந்திரம் அஞ்சு மணி ஆகிரும்''

''ஊருக்குப் போகனும், நாச்சியார் வந்தேனு பாமாகிட்ட சொல்லிருங்க''

''ம்ம், சொல்றேங்க''

நாச்சியார் பெருமாள்பட்டி வந்து சேர்ந்தபோது மாலை நான்கு மணி ஆகிவிட்டது. வீட்டிற்குச் சென்றுவிட்டு பூங்கோதையைப் பார்க்கச் சென்றார்.

''வாங்கம்மா, போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா, பாப்பாத்தி என்னை நல்லாப் பாத்துக்கிட்டாங்க''

''ம்ம், தூத்துக்குடிக்கு போகனும், கொஞ்ச நாள் ஆகட்டும், அந்த பட்டாம்பூச்சி முட்டை எப்படி இருக்கு, வா பாக்கலாம்''

''முட்டையில் இருந்து சின்ன கம்பளிப்பூச்சி மாதிரி வந்து துளசி இலையை சாப்பிட ஆரம்பிச்சிருச்சிம்மா, அவர் செடியைப் பிடுங்கிப் போட்டுரலாம்னு சொன்னார், நான்தான் பாவம் இருக்கட்டும்னு சின்ன வேலி கூட போட்டு வைச்சிருக்கேன்மா''

பூங்கோதையை தனது இடுப்பைப் பிடித்தபடி மெதுவாக நடந்து வந்து காட்டினாள். சிறு பூச்சி ஒன்று துளசி இலைகளைத் தின்று கொண்டிருந்தது.

''கோதை, எந்த ஒரு உயிருக்கும் நீ தீங்கு பண்ணக்கூடாதுனு நினைக்கிற பாரு அந்த நல்ல மனசுக்கு என்னோட நன்றி, அந்த பட்டாம்பூச்சி எதுவும் வந்துச்சா''

''தினமும் காலையில இந்த துளசி இலை பக்கத்தில வந்து துளசி இலையை பறந்தபடியே பார்க்கும் அப்புறம் என் மேல வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போகும்''

''கோதை இந்த உலகத்துல படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் அன்புக்கு கட்டுப்பட்டுத்தான் இருக்கும், சில உயிர்கள் நம் மேல நிறைய நேசம் வைச்சிருக்கும், அது போல சில உயிர்கள் மேல நாம நேசம் வைச்சிருப்போம், இந்த பட்டாம்பூச்சிக்கு உன்னை நிறையவே பிடிச்சி இருக்கு''

''ஆமாம்மா அதான் அவர் சொன்னப்ப கூட எனக்கு அதை கலைச்சி விட மனசு வரலை, நம்ம குழந்தை வளருற மாதிரி அது வளர்ந்து வருது''

''பட்டாம்பூச்சியா வர இன்னும் மூணு வாரம் ஆகும், உனக்கும் குழந்தை பிறந்துரும், நீ செக்கப் பண்ணவே போகலையே கோதை, இப்ப இருக்க உலகம் மருந்து, மாத்திரை, ஸ்கேன் அப்படினு போகுது, உனக்குத் தோனலையா, பிள்ளையாவது ஆஸ்பத்திரில போய் பெத்துக்கோ, கிராமம்தானு நீபாட்டுக்கு அந்தக் காலத்தில மாதிரி வீட்டில பெத்துக்காத''

''சரிம்மா, அவரும் அதான் சொல்லிட்டு இருக்காரு, ரொம்ப வருசம் கழிச்சி உண்டானதால எதுவும் பாக்க வேணாம்னு அப்படியே இருந்துட்டேன்''

''என்ன கோதை சின்ன குடை மாதிரி மேல கட்டி இருக்க, மழை வந்து ஏதாவது பண்ணிரும்னா, தனக்கு என்ன என்ன பாதுகாப்பு பண்ணனுமோ அதை இயற்கை மூலமாவே உயிர்கள் பண்ணிக்கிரும்''

நாச்சியார் சொன்னதும் பூங்கோதை மெல்லிய புன்னகை செய்தாள். தான் தாய் ஆகப்போகிறோம் எனும் ஒரு பேராவல் இந்த உலக உயிர்கள் மீது எல்லாம் தாய்மையை காட்டத்துவங்குமோ எனத் தெரியாது. பூங்கோதை காட்டத்துவங்கி இருந்தாள்.

நாச்சியார் பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு பரந்தாமனிடம் சொன்னார்.

''இந்தக் கோவில் பக்கத்திலேயே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கலாம்ல பரந்தாமா''

''அம்மா நல்ல யோசனை, அய்யாகிட்ட கேட்டுப் பாருங்க, வேணாம்னா சொல்லப் போறாரு''

''நிறைய யோசிக்கிறாரு''

''இன்னொருதடவை முயற்சி பண்ணிப் பாருங்கம்மா''

சரி என சொல்லிவிட்டு அங்கேயே சில மணி நேரங்கள் அமர்ந்து இருந்தார் நாச்சியார். கோவிலுக்கு வந்து செல்வோர் இவரையும் வணங்கிச் சென்றார்கள். மனிதர்கள் பிறர் போற்றும்படி வாழ்தல் பெரும் தவம்.

பாமா, நாச்சியார் வந்த விசயத்தை தனது அம்மா மூலம் அறிந்து கொண்டாள். தன்னைத் தேடி வந்தவரை சென்று பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் உண்டானது. வருகின்ற சனிக்கிழமை பெருமாள்பட்டிக்கு போய் வர அனுமதி கேட்டதும் அவளது அம்மா எதுவும் மறுக்காமல் அனுமதி தந்தார்.

நம்மை புரிந்து கொள்வதோடு, நமது எண்ணங்களுக்கு இடையூறுகள் தராத உறவுகள் அமைவது பேரின்பம்.

(தொடரும்)

Tuesday, 24 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 10

10 மும்முலையாள்

''அத்தை, நீங்க ஏன் பாமாவை நம்ம ஊருக்கு வரச் சொன்னீங்க''

வீட்டுக்கு வந்ததும் வராததுமாக யசோதை நாச்சியாரிடம் கேட்டாள்.

''நல்ல பொண்ணா மனசுக்குப் பட்டுச்சு யசோ''

''நான் கூட வண்ணத்துப்பூச்சி பத்தி எதுவும் இருக்குமோனு நினைச்சேன் அத்தை''

''அதெல்லாம் இல்லை, ஆனா இந்த உலகத்தில நமக்கு எது எது எல்லாம் வளர்க்கனும்னு ஆசை இருக்குப் பார்த்தியா''

''நான் எதுவும் வளர்க்கிறது இல்ல, நீங்களும் எதுவுமே வளர்த்தது இல்லையே அத்தை''

''உன்னை வளர்த்தேனே அது போதாதா அது போல நிறைய பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி வளர்த்து இருக்கேனே யசோ. நாளைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போவோமோ''

''என்னங்க அத்தை, அதிசயமா, பெருமாள் கோவில் தவிர்த்து எங்கேயும் நீங்க போனது இல்லையே, இப்ப மட்டும் என்னவாம்''

''அன்னைக்கு அழகர் கோவிச்சிட்டுப் போன மாதிரி எனக்கென்ன மீனாட்சி மேல கோவமா என்ன, எனக்குப் பிரியம் பெருமாள் மட்டும்தான் மத்த கோவில்களுக்குப்  போகமாட்டேனு எல்லாம் இல்ல, போக வேண்டிய சூழல் எதுவும் அமைஞ்சது இல்ல. பேதம் பார்த்தல் பிழைனு இருக்கு யசோ ஆனா ஒன்றின் மீது மட்டுமே அன்பு செலுத்துதல் பிழை இல்லை ''

''மீனாட்சி கோவிலுக்குப் போகனும்னு என்ன சூழல் இப்போ அத்தை''

''கோதை, குங்குமம் பிரசாதம் வாங்கிட்டு வரச் சொன்னா, வாங்காம போனா அவ மனசு பாடுபடும் இல்லையா அதுவும் பிள்ளைத்தாச்சியா இருக்கா, நாளன்னைக்கு ஊருக்குக் கிளம்பனும். அங்க வேற துளசிச் செடியில முட்டை எப்படி இருக்கோ, எப்படியும் நான் போகப் போறப்ப கம்பளிப்பூச்சி மாதிரி உருமாறி இருக்கும்''

''வண்ணத்துப்பூச்சி நினைப்பாவே இருக்கீங்க, கோதை கிட்ட பேச வேண்டியதுதானே அத்தை, ஒரு போன் வைச்சிக்கோங்கனு சொன்னா உலக அதிசயமா வேணாம்னு சொல்றீங்க என்ன பண்றது. நீங்க சொன்னது போல நாளைக்கு கோவிலுக்குப் போகலாம் ஆனா சாயந்திரம்தான் போகனும், நீங்க பள்ளிக்கூட விசயமா யாரையோ பாக்கனும்னு சொன்னீங்க,  பாத்துட்டு வந்துருங்க''

''ஆழ்வார் திருநகரிக்குத்தான் போகனும். சடகோபனு ஒருத்தரைப் பார்க்கச் சொல்லி இங்க இருந்து ஒருத்தர் கடிதம் கொடுத்து இருக்கார். அவர் மூலமா ஏதாவது ஆகுதானு பாக்கனும்''

''இந்த வயசுக்கு அப்புறம் எதுக்குங்க அத்தை அலைச்சல், அதுவும் தூத்துக்குடி பக்கம் போகனும் வேண்டாத வேலையாக எனக்குப்படுது''

''நல்ல விசயங்களுக்கு வயசு தடை இல்லை யசோ''

யசோதை வேறு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்து கொண்டாள். சடகோபன் எனும் பெயர், ஆழ்வார் திருநகரி எனும் ஊர் நாச்சியார் மனதில் அளவிலா மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. நாச்சியாருக்கு நம்மாழ்வார் என்றால் ஒருவித ஈர்ப்பு உண்டு. நம்மாழ்வார் குறித்து அவர் படித்த விசயங்கள் அவருக்குள் எப்போதும் ஒரு கேள்வியை எழுப்பியபடியே இருக்கும்.

அடுத்த தினம் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்து கொண்டார் நாச்சியார். யசோதை வேலைக்குப் போய்விட்டு மாலை சற்று வேகமாகவே வந்து விட்டாள். யசோதை நாச்சியாருடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனாள்.

''அந்தக் காலத்தில் பெண்களின் ஆட்சி இருந்ததாக எழுதி இருக்காங்க, வீட்டில கூட மீனாட்சி ஆட்சியானு கேட்கறது அதுக்குத்தான அத்தை''

''பெண்கள்தான் உலகம்னு இருந்துச்சி, அப்புறம் ஆண்கள் உலகம்னு மாத்திக்கிட்டாங்க மறுபடியும் பெண்கள் உலகம்னு ஆகிரும்''

''அப்போ உங்க பெருமாள்''

''பெருமாள் எப்பவும் பெருமாள்தான் யசோ''

மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனார்கள். மக்கள் எப்போதுமே கோவிலில் கூட்டமாகத் தென்படுகிறார்கள். தெய்வம் பல மனிதர்களின் தேவையின் ஒன்றாகவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருந்து வந்து இருக்கிறது. தெய்வத்தின் மீதான நம்பிக்கை என்பது ஏமாற்றத்தின்போது கூட தொலைந்து விடாமல் இருப்பது என்பது ஆச்சரியங்களில் ஒன்றுதான்.

நாச்சியார் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி வந்தபோது மூன்று மார்பகங்கள் கொண்ட ஒரு சிலையின் முன்னர் நின்றார். யசோதை நாச்சியார் நின்றதைப் பார்த்து வியப்பு கொண்டாள்.

''அத்தை, இந்தக் கதை உங்களுக்குத் தெரியுமா?''

''குழந்தை இல்லாம மன்னன் பையன் வேணும்னு யாகம் செஞ்சப்ப மூன்று வயசு பெண் குழந்தையா யாகத்தில் இருந்து தோன்றி  மூன்று மார்பாகங்களோடவே வளர்ந்து பெரும் ஆட்சி செஞ்சி கடைசியில் சிவனை மணக்கப் போறப்ப சிவனைப் பார்த்ததும் மூன்றாவது மார்பகம் மறைஞ்சி போனதுதான''

''ம்ம் ஆழ்வார்கள் பெருமாள் கதை தவிர்த்து இது எல்லாம் படிச்சி இருக்கீங்க அத்தை, ஆனா எனக்குச் சொன்னது எல்லாம் இராமானுசரும் ஆண்டாளும் மத்த ஆழ்வாரும் மட்டும்தான், இதுல இருந்து ஒன்னு புரிஞ்சிக்கிறலாம். நம்ம உடம்புல உடல் உறுப்புகள் தேவை இன்றி வளரவும் செய்யும், உடல் உறுப்புகள் குறையவும் செய்யும். நிறைய மாற்றங்கள் கொண்ட மனிதர்கள் பிறக்கத்தான் செய்றாங்க ஆனா குறைந்த அளவில்தான் அந்தமாதிரி மாற்றங்கள் இருக்கு இப்போ கூட இப்படி மூன்று மார்பகங்கள் கொண்டவங்க அங்க அங்க இருக்காங்கனு ஒரு ஆய்வு சொல்லுது ஆனா மீனாட்சியை மும்முலையாள் அப்படினு கூப்பிட்ட  மாதிரி இப்போ கூப்பிட முடியாது அதுவும் இதை பாலினங்களில் உள்ள குறைபாடுனு சொல்றாங்க''

''முக்கண்ணன்னு சொல்றாங்க, இப்போ அப்படி யாரும் இருக்கிறது இல்லை யசோ''

''இதெல்லாம் உண்மையானு தெரியலைங்க அத்தை, ஆனா படிக்க, கேட்க ஆர்வமாத்தான் இருக்கு''

கோதைக்கு என குங்குமம் பிரசாதம் வாங்கிக் கொண்டார் நாச்சியார். யசோதையின், வேலனின்  உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட ஆர்வம் நாச்சியாருக்கு சற்றுப் புதிராக இருந்தது.

மனிதர்கள் என்றால் இப்படித்தான் என வரையறை வைத்துக் கொண்டார்கள். அதை மீறிய எந்தவொரு உருவமும் குறை உள்ளதாகவே இந்த உலகில் கருதப்படுகிறது. எவ்வித குறைகள் இன்றி பிறப்பது வரம் எனில் மனதில் குறைகள் இல்லாமல், இவ்வுலகின் மீது நிறைய நல்ல நம்பிக்கைகள் கொண்டு இருப்பது மாபெரும் வரம்.

(தொடரும்)