Thursday, 27 August 2015

பேய் ஊர்

எவருக்குத் தெரியும்
அந்த ஊரில் தான்
பிறக்கவேணும் என

பூசாரி கோடாங்கி
ஆசாரி செட்டியார்
தேவர் நாயுடு
சக்கிலியர் ரெட்டியார்
அவர்தம்மில் ஒருவராக
அந்த ஊரில் தான்
பிறக்கவேணும் என
எங்கிருந்து தவம் இருந்தனரோ

அவுசாரி தேவடியா
பொறுக்கி குடிகாரன்
கஞ்சா கசக்கி சீட்டு கட்டு
அடிதடி சண்டை
என அல்லல்படும்
அந்த ஊரில் தான்
பிறக்க வேணும் என
எவர் எழுதி வைத்தனரோ

கோவிலு குளம்
முனி பிசாசு
காடு தோட்டம்
கிணறு தோப்பு
தரிசு காஞ்ச கண்மாய்
மண்ரோடு தார்ரோடு
அந்த ஊரில் தான்
அழுது சிரிக்க வென
எப்படித்தான் அங்கு போனாரோ

அரசு வைச்சது ஒரு பேரு
இவங்க வைச்சது பேய் ஊரு
ஆம்பளைன்னு இல்ல
பொம்பளைன்னு இல்ல
ஒன்னு கிணறுல விழுந்து
சாகுறா
இல்லை கயித்துல தொங்கி
சாகுறா
சுடுகாடு ஒண்ணு உள்ள
அந்த ஊரில் தான்
அடக்கம் ஆவோம் என
சத்தியமிட்டு சொல்லி சேர்ந்தாரோ

காதலு தோத்து
விஷம் குடிச்ச ஆளும் உண்டு
கட்டிக்கிட்டவன் சரியில்லைன்னு
தட்டிக்கேட்டு தானே
அவன் கையால செத்தது உண்டு
விவாகரத்து கூத்தியாள்
கூத்தியான் விவகாரமான
அந்த ஊரில் தான்
மணமுடித்து வாழ்  என
கண்கள் இன்றி போனாரோ

என்ன என்னவென்னவோ
நடக்குது
ஆனாலும் பாருங்களேன்
அம்மனுக்கு கூழும்
கருப்பனுக்கு கறிசோறும்
தீபாவளி பொங்கலுன்னு
தின்னு தீக்குறாங்க
அந்த ஊரில் தான்
தின்னு கழியணும்னு
தினவெடுத்து போய் விழுந்தாரோ

எதுவுமே நடக்காத மாதிரி
எல்லோரும் சாமி பேய்னு
சத்தியம் பண்ணி
தீபம் அணைக்கிறாங்க
பேய் இருக்கும் ஊரில
சாமியும் தான் இருக்குமோ
சாமி இருக்கிற ஊரில
பேயும்தான் இருக்குமோ
என்னதான் இருந்தாலும்
பிறந்த ஊரு பெருமை
பேய் ஊருனு ஆனாலும்
விட்டுத்தான் போகுமோ என்றாரோ!





Wednesday, 26 August 2015

தமிழ் மின்னிதழ் - சுதந்திரம் 2015 -1

இம்முறை தமிழ் மின்னிதழ் எழுத்தாளர் திரு. பெருமாள் முருகன் சிறப்பிதழாக வெளிவந்து இருக்கிறது. ஒரு எழுத்தாளருக்கு இதைவிட என்ன பெருமை வேண்டும். அதிலும் எழுத்தாளர் சிறப்பிதழில் எனது எழுத்து வந்தது அதைவிட இரட்டிப்பு சந்தோசம்.

ஆமாம், முதலில் சுயதம்பட்டம் அடித்துக்கொள்வோம்.  சென்ற முறை இங்கே சொன்னது போல ஒரு கதையை தமிழ் மின்னிதழுக்கு எழுதி அனுப்பி அது இடம்பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் மின்னிதழ் ஆசிரியருக்கு கோடானு கோடி நன்றியை சமர்ப்பிக்கிறேன். அதற்காக தொடர்ந்து எனது எழுத்து வரும் என்றெல்லாம் என்னால் சொல்ல இயலாது. ஆசிரியர் மற்றும் இதழின் குழுவைப் பொருத்தது, அதைவிட நான் எழுதி அனுப்புவேனா என்ன எழுதி அனுப்புவேன் என்பதைப் பொருத்தது . ஆசிரியரிடம் இருந்து மின்னஞ்சல் வந்ததும் உள்ளூர அத்தனை சந்தோசம். இந்த தருணத்தில் முதலில் எனது எழுத்துக்கு ஆதரவு தெரிவித்த நமது திண்ணை சிற்றிதழுக்கு எனது நன்றி.  நமது திண்ணை தவிர எனது எழுத்து எந்த ஒரு சிற்றிதழ் இணைய இதழ் என எதிலுமே வந்தது இல்லை. இது என்ன பெரிய விசயமா என்று கேட்டால் என்னைப் பொருத்தவரை பெரிய விசயம் தான்.

எப்படி ஊர் மெச்ச வேண்டி நாம் வாழ நினைக்கிறோமோ அதைப்போலவே ஊர் மெச்ச வேண்டி எழுத்து இருக்க வேண்டும் எனும் எனது எழுத்தின்  தவம் எவருக்கும் தெரியாது, அதன் வலி எவருக்கும் புரியாது. எனது முதல் நாவலை வாசித்துவிட்டு சாகித்ய அகாடெமி விருது கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னேன் என எனக்கு இப்போது நினைவில் இல்லை.

நான் எழுதி அனுப்பிய கதையின் தலைப்பு எண்ணியாங்கு என்கொலல். நண்பர் ஒருவர் சூப்பர் என்றார், ஆனால் எனது வழக்கமான சிறுபிள்ளைத்தனம் அந்த கதையில் இல்லை என்றார். ஆமாம், இரண்டே வார்த்தைகள். எண்ணியாங்கு, என்கொலல். இந்த இரண்டு வார்த்தைகளுமே திருக்குறளில் இருந்து எடுத்தது. என்கொல் என்ற வார்த்தை என்கொலல் என திரிந்தது.

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

இதில் எண்ணியாங்கு எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. இந்த குறள் சொல்வது என்னவெனில் எண்ணியதை செயல்படுத்த உறுதி இருப்பின் எண்ணியது நடைபெறும். கதையில் இதைத்தான் சொல்ல எண்ணினேன். அப்போது  ஒரு பெரிய கேள்விக்குறி எனக்கு எழுந்தபோது மரம் பற்றி நினைவுக்கு வந்தது. மனிதர்கள் தான் தமது எண்ணங்களுக்கு அது இது என சொல்லித் திரிகிறார்கள், ஆனால் மரம்? மரம் என்ன நினைத்து எதை எண்ணி எதில் உறுதியாக இருந்து நிறைவேற்றி கொள்கிறது என்பதே அது. மற்றொன்று நன்றி நவிலல். நாம் சரி, மரம்?

காலைக்குச் செய்த நன்றி என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர்  எனின்

எழுத ஆரம்பிக்கிறேன். கதை சரளமாகவே வரவில்லை. ஒரு கட்டுப்பாட்டில் பயணிக்கும்போது நமது சிந்தனைகள் தடைபடும் என்பது உறுதி. இந்த கதையில் அடுத்து எடுத்துக்கொண்டது அறிவியல் விஷயத்தை எழுதியே ஆக வேண்டும் எனும் ஒரு எண்ணம். இடைச்செருகல் மாதிரி இருக்கக்கூடாது அதே வேளையில் கதையின் ஓட்டத்தை கெடுத்துத் தொலையக்கூடாது. ஆனால் எனக்கு எழுதி எழுதிப் பார்த்தாலும் திருப்தியே வரவில்லை. கடைசியாக நிலம், வீடு, ஸ்டீரால் விஷயம் சரியெனப் பட்டது. பலமுறை யோசித்து அதிகம் என்னால் திருத்தி வெட்டப்பட்ட கதை இதுவாகவே இருக்கும். இதுக்காக பல ஆராய்ச்சி கட்டுரைகளை வேண்டி புரட்ட வேண்டியதாகிவிட்டது.

ஒருவழியாக கதையை எழுதி முடித்து அனுப்பி விட்டேன். முதலில் தவறுதலாக அதில் இருந்த மூலக்கூறுகள்  இரண்டுமே ஒரே மாதிரி அனுப்பினேன். பின்னர் அதை சரிசெய்து அப்போது சில வரிகள் மாற்றி மீண்டும் அனுப்பி வைத்தேன். ஆசிரியரிடம் இருந்து பதிலே இல்லை. எனக்கும் கேட்கவோ பயம். சரி என்ன ஆனாலும் பரவாயில்லை ஒருவேளை வெளியாகாவிட்டால் இருக்கவே இருக்கிறது இந்த வலைத்தளம் என சமாதானம் பண்ணிக்கொண்டேன். ஆனால் உள்ளூர ஒரு கவலை இருந்தது. அதாவது ஒரு பள்ளியில் அனுமதி கிடைக்காத பிள்ளையின் தந்தையின்  கவலை அது. நல்லவேளை, கதை அனுமதி பெற்றுவிட்டது எனும் ஆசிரியரின் பதில் வந்ததும் மனம் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நீங்கள் வாசிக்கலாம், வாசிக்காமலும் போகலாம். ஆனால் எழுதிவிட்டேன் எனும் திருப்தி எனக்கு இருக்கிறது.

விரைவில் தமிழ் மின்னிதழில் இடம்பெற்றுள்ள பிறரின் எழுத்துக்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறேன்.

(தொடரும்)










Tuesday, 11 August 2015

இப்படித்தான் தொடங்கியது

ஒரு ஆரவாரமற்ற அமைதியான இருட்டில் இரவு ஒரு மணி இருக்கும். நார்மன் அந்த கிராமத்தின் தெரு ஒன்றில் நின்று கொண்டிருந்தான். நார்மன் நல்ல உடற்கட்டும் அழகிய முகவடிவும் ஆறடி உயரமும் கொண்டவன். அவனது முதுகில் ஒரு பை இருந்தது. அந்த கிராமத்திற்கு நான்கே தெருக்கள் இருந்தன. ஒவ்வொரு தெருவும் மற்றொரு தெருவுடன் சந்தித்து பேஸ்பால் விளையாடும் விளையாட்டுத்திடல் போல சதுரமாக அந்த தெருக்கள் அமைந்து இருந்தன. அந்த தெருக்களின் உட்புறம் வீடுகள் ஒருங்கே கட்டப்பட்டு இருந்தன. எப்படியும் ஒரு ஐம்பது வீடுகள் தேறும். அந்த தெருக்களின் வெளிப்புறம் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை பச்சை பசேலென மரங்களும், செடிகளும், கொடிகளும் தென்பட்டன. அந்த பச்சை மரங்களுக்கு ஊடே சில ஆறுகள் சில குளங்கள் எல்லாம் இருந்தன.

நார்மன் எல்லா வீடுகளிலும் எவ்வித வெளிச்சமும் இல்லாது இருப்பது கண்டான். இரவில் வெளிச்சம் எதற்கு என எல்லா வீடுகளும் எண்ணி இருக்கலாம். வடமேற்குத் தெரு முனையில் இருந்து தென்மேற்குத்   தெரு முனைக்குப் போனான். அங்கே ஒரு முப்பது நிமிடங்கள் நின்றான். அப்போது சோவென சொல்லிவைத்தாற்போல் மழை கொட்டியது. நார்மனுக்கு ஓடிவிட வேணும் என்றோ எங்கேனும் ஒளிந்து கொள்ள வேண்டுமென்றோ கொஞ்சமும் தோணவில்லை. மழையில் முழுக்க முழக்க நனைந்தான். அவனது பையும் தான்.

சிறிது நேரம் பின்னர் விடாத மழை என்றாலும் தென்மேற்குத் தெருவில் இருந்து தென்கிழக்குத் தெரு சென்றான். இந்த ஊர் பரிச்சயமற்றது. தான் எந்த தெருவில் நிற்கிறோம் என்கிற அறிவு எல்லாம் நார்மனுக்குக் கிடையாது. தண்ணீர் தாகம் எடுத்தது. அப்படியே மழை நீரை கைகளில் ஏந்தி குடிக்கலானான். என்னதான் மழை நீர் எனினும் ஆற்று நீர் போல மழை நீர் சுவையாக இருப்பது இல்லை. குடித்துக் கொண்டு இருந்தவனுக்கு மிகவும் சுவையாகவே இருந்து இருக்கக்கூடும், அல்லது தாகத்திற்கு சுவை எல்லாம் பொருட்டு அல்ல என்று இருக்கலாம்.

நார்மன் அப்படியே அங்கே அமர்ந்துவிட்டான். அமர்ந்தவன் சிறிது நேரத்தில் உறங்கியும் போனான். மழை நீர் தந்த மயக்கம். மழை நார்மனைக் கண்டு இரக்கம்  கொள்வதாக ஒன்றும் தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை மணி நேரங்கள் மேல் கொட்டிக்கொண்டு இருக்கிறது. சில்லிட்டுப் போகும் குளிரில் மனிதர்கள் உறங்க இயல்வதில்லை ஆனால் நார்மன் உறங்கிக்கொண்டுதான் இருந்தான். சிறிது நேரத்தில் மழை நின்றது. அவனில் இருந்த தண்ணீர் எல்லாம் மலையில் இருந்து கிளையில் இருந்து இலையில் இருந்து கொட்டும் நீர் போல கொட்டிக்கொண்டு இருந்தது.

காலையில் ஆறு மணி வரை எவருமே அவனை கவனிக்கவில்லை. ஒரு ஏழு மணி இருக்கு. நடுத்தர வயது மிக்க பிரதேஷ் என்பவர் நார்மனைக் கண்டுத் திடுக்கிட்டார். எப்படி இப்படி ஒரு மழையில் நனைந்து உறங்கிக் கொண்டு இருக்க இயலும் என அவர் யோசித்தவாரே  நார்மனைத் தொட்டு எழுப்பினார். நார்மன் எழுந்தான்.

''யார் நீ, எவரைப் பார்க்க வேண்டும் இப்படியா இந்த மழை நீரில் உறங்குவது, என்னுடன் கிளம்பி வா''

நார்மன் சற்றும் யோசிக்காமல் அவருடன் கிளம்பினான்.

''எனது பெயர் நார்மன் தேச்ரன். எனக்கு வீடு ஊர் என்று எதுவும் இல்லை. எப்படியோ இந்த கிராமத்தில் வந்து சேர்ந்து விட்டேன்''

''அதற்காக அதோ அந்த வீட்டின் திண்ணையில் நீ அமர்ந்து இருக்கலாம் உறங்கி இருக்கலாம், இப்படியா தெருவில் விழுந்து இருப்பது. இந்த உலகில் நல்ல மனிதர்களே இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டாயா?''

''எவரை எனக்குத் தெரியும். அதனால் நான் செல்லுமிடத்து ஏதேனும் உண்டு உறங்கி வாழ்ந்து கழிக்கிறேன்''

பிரதேஷ் வீடு கிழக்குத் தெருவில் இருந்தது.

''சோபியா, நமது வீட்டிற்கு விருந்தாளி வந்து இருக்கிறார். முதலில் நல்ல சூடான காபி தயார் செய்''

''யார் அந்த விருந்தாளி''

''இதோ இவர்தான், அந்த தெரு முனையில் உறங்கிக்கொண்டு இருந்தார். நான்தான் எழுப்பிக் கொண்டு வந்தேன், இவர் குளிக்கட்டும். மாற்று ஆடைகள் தந்துவிடுகிறேன். நீ சாப்பாடு கூட தயார் செய்''

நார்மனுக்கு எதுவும் புரியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என யோசித்தான். பிரதேஷ் சொன்னது போல குளித்து அவரது ஆடைகளை உடுத்திக்கொண்டான்.

அவர்கள் இருவரிடமும் விசாரிக்கையில் அவர்களுக்கு எவருமே உறவினர்கள் இல்லை என்பது தெரிந்து கொண்டான். அன்றே அவர்களை கொல்ல  வேண்டும் என முடிவு செய்தான் நார்மன்.

நிற்க.

இப்படித்தான் ஒரு கதை தொடங்கியது. அதை எங்கு எப்படி எவ்வாறு முடிப்பது என இனிமேல்தான் யோசிக்க வேண்டும்.