Wednesday, 5 August 2015

தேடிக்கொண்ட விசயங்கள் - 7 ஆர் என் ஏ உலகம் இல்லை

பகுதி - 6

ஒன்று கிடைக்கும் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம், பிறகு வேறொன்று கிடைக்கும் உடனே எடுத்த முடிவை பரிசீலனை செய்வோம். எடுத்த முடிவுக்கு எதிராக எது தோன்றினாலும் அதன் தன்மையை பரிசீலனை செய்து அதை ஏற்றுக்கொண்டு பயணிப்போம். இதுதான் இந்த உலகத்திற்கு அறிவியல் சொன்ன நீதி.

அறிவியல் எதற்குமே அவமானப்பட்டது இல்லை. உண்மையைச் சொல்ல எதற்கு அவமானம், வெட்கம், தயக்கம். பல காலங்களாக இந்த உலகம் ஆர் என் ஏ மூலம் உருவாகி இருக்க இயலும் என நம்பிக்கொண்டு இருந்தார்கள். அதற்கான ஆதராங்கள் என பல காட்டப்பட்டன. நியூக்ளிக் அமிலங்களை தாமாக ஒருங்கிணைத்து உருவாகிய ஆர் என் ஏ  பிற்காலத்தில் டி என் ஏ வாக பரிமித்தது என்பதே நம்பபட்டவந்த செய்தி. இப்போதும் கூட இந்த புரதங்கள் உருவாக டி என் ஏ  செல்லின் கருவில் இருந்து வெளிவர இயல்வதில்லை. மாறாக டி என் ஏ வில் இருந்து ஆர் என் ஏ கருவில் நகல் எடுத்து வெளியே வந்து ரைபோசொமில் புரதங்கள் உருவாக்குகின்றன. எனவே இதற்கு முன்னர் இந்த உலகில் உயிரினங்கள் தோன்ற இந்த ஆர் என் ஏ  காரணம் என எண்ணி ஆர் என் ஏ  உலகம் என்று ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டது.

இந்த நியூக்ளிக்  அமிலங்கள் உருவாக வினையூக்கிகள் தேவை. இந்த வினையூக்கிகளை ஆர் என் ஏ தான் செயல்படுத்தி வந்ததாக  நம்பினார்கள். எப்போது புரதம் இந்த வினையூக்கி வேலையை தானே செய்ய ஆரம்பித்ததோ அப்போது இந்த ஆர் என் ஏ  உலகம் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ரைபோசோம்கள் உருவான காலகட்டமே ஆர் என் ஏ  முடிவுக்கு ஒரு காரணம். ஆனால் இதை எல்லாம் மறுத்து ஒரு அறிவியல் அறிஞர் சொல்லி இருப்பது என்னவெனில் நிச்சயம் இந்த ஆர் என் ஏ  உலகம் என்று ஒன்று இந்த உயிர்களைத்  தோற்றுவிக்க காரணம் இல்லை என அறிவித்து இருக்கிறார்.

ரைபோசோம்களை ஆராய்ந்து பார்த்த இவர் இந்த ரைபோசோம்கள் முன்னர் வினையூக்கி போல செயல்பட்டு அமினோ அமிலங்களை இணைத்து புரதம் உருவாக்கி வந்து இருக்கின்றன. இது எல்லா உயிரிகளிலும் தென்படுகிறது. மேலும் இந்த ரைபோசோம்கள் அத்தனை சிறப்பாக ஒன்றும் செயலாற்றவில்லை மேலும் புரதம் போல இவற்றுக்கு எவ்வித வடிவமும் கிடையாது, ஆகவே இந்த ரைபோசோம்  ஒரு பானை போல செயல்பட்டு அதில் என்ன சேர்கிறதோ அதைவைத்து ஒன்று உண்டாக்கப்படும். எனவே இந்த ரைபோசோம்கள் ஒன்றும் இயற்கைத் தேர்வு மூலம் தம்மை முன்னிலைபடுத்தியவை அல்ல, மாறாக மூலக்கூறுகள் இணைந்து உண்டாக்கியவை என எண்ணம் தோன்றுகிறது என்றார்.

ஆர் என் ஏ  மற்றும் புரதங்கள் தாமாக உருவாகக்கூடிய சாத்தியம் இல்லை என முன்னர் சொல்லப்பட்டாலும் கிட்டத்தட்ட 14 அமினோ அமிலங்கள் மற்றும் சில புரதங்கள் தாமாகவே உருவாகும் தன்மை கொண்டவை. எனவே ஆர் என் ஏ  உலகம் என்பதை விட ஆர் என் ஏ/புரதம் உலகம் சரியாக இருக்கும் என்கிறார்.

ஆர் என் ஏ  உலகம் :

ஆர் என் ஏ  தானாக நியூக்ளிக் அமிலங்கள் மூலம் உருவாகி தாமே பெருகி அதில் இருந்து ரைபோசோம்கள் உருவாக்கி பின்னர் அந்த ரைபோசோம்கள் ஆர் என் ஏ தற்போது போல புரதங்களாக மாற்றியதும் அந்த புரதங்கள் வினையூக்கிகளாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.

ஆர் என் ஏ  அல்லாத உலகம் :

இந்த நியூக்ளிக்  அமிலங்கள், அமினோ அமிலங்கள் எல்லாம் கூடி ஆர் என் ஏ வுக்கு முந்தைய ஒன்றையும் அதே போல புரதங்களுக்கு முந்தைய ஒரு புரதம் உண்டாக்கி இருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து அடிப்படை ரைபோசோம்கள் உருவாக்கின. அந்த அடிப்படை ரைபோசோம்கள் வினையூக்கியாக செயல்பட்டு  ஆர் என் ஏ  மற்றும் புரதம் உருவாக்கின. அதற்குப் பின்னர் ஆர் என் ஏ  மற்றும் புரதம் ஆர் என் ஏ மூலக்கூறுகளை பெருகச் செய்தன. பின்னர் இந்த அடிப்படை ரைபோசோம்கள் ரைபோசோம்களாக  மாறி ஆர் என் ஏ  வை புரதம் உருவாக வழி செய்தன என்கிறார்கள்.

 இந்த உலகம் உருவாக ஆர் என் ஏ  மூலக்கூறு காரணம்  இல்லை என்றால் இந்த புரதம் மற்றும் ஆர் என் ஏ  ஒரு சேர அடிப்படையில் தானே தோன்றி இருக்க வேண்டும் என அடிப்படை ரைபோசோம்கள் உருவாக்கி அது ஆர் என் மற்றும் புரதம் உருவாக்கும் வல்லமை கொண்டவையா என சோதிக்கத்  தொடங்கிவிட்டார்கள்.

சற்று பொறுங்கள், இந்த பிரபஞ்சத்தின் தீராத வலியைப் போக்கிக் கொண்டு இருக்கின்றேன்.

(தொடரும்) 

Thursday, 30 July 2015

ஏடு கொண்டார் எவர் கண்டார்

கல்வெட்டு ஒன்றைப் பார்த்து
இதில் எழுதப்பட்டு இருப்பது
உண்மையா என மனம்
எண்ணியபோது தானே பதிலாக
உண்மையாகவும் இருக்கலாம்
உண்மையற்றதாகவும் இருக்கலாம்
என்றே சொல்லி அமர்ந்தது

எத்தனையோ புத்தகங்கள்
எழுதப்பட்டு இருக்கிறது
கதைகளா, கற்பனைகளா என
மனம் வினவிக்கொண்டே
தனக்குள்
கதையாக  கற்பனைகளாக இருக்கலாம்
கதையற்றும் கற்பனையற்றும் இருக்கலாம்
என ஆசுவாசம் கொண்டது

ஆண்டாண்டு காலமாக
இறைவன் குறித்த பாடல்கள்
ஏற்றுக்கொள்வதா மறுப்பதா
என்ற மனதின் ஓசைக்கு
அதுவே இசையாய்
ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம்
மறுத்துவிடவும் செய்யலாம்
என உருகி நின்றது

அவரவர் எண்ணம் கொண்டு
தான் அறிந்த அறிவின் பலம் கொண்டு
இந்த பரந்த பிரபஞ்சங்களின்
ஏடு கொண்டார் எவர் கண்டார்
ஏதுமே எழுதிவைக்காத
மனிதர் கொண்ட மௌனங்களுக்கு
அர்த்தம் நாம் அறியலாம்
அர்த்தம் நாம் அறியாமலும் இருக்கலாம்.




Wednesday, 29 July 2015

களிமண் - மயர்வற மதிநலம்

களிமண் கொண்டு வந்து
ஒரு பொம்மை செய்து தர சொன்னான்
தண்ணீர் ஊற்றி
களிமண்ணில் ஒரு பொம்மை
செய்து தந்தேன்

அந்த பொம்மையை
 தண்ணீரில் கரைத்துவிட்டு
என்ன தண்ணீரில்
பொம்மை அழிகிறதே  என்றான்
நீ கொண்டு வந்த
களிமண் அப்படி என்றேன்

சிறிது நேரம் யோசித்தவன்
நான் எப்படிபட்ட களிமண்
கொண்டு வந்தாலும்
நீ அழியாத பொம்மை
அல்லவா செய்ய வேண்டும் என்றான்

அழியாத புகழோடு வாழ
வழி சொன்னான் அவன்
அழியாத கல்வியோடு மேன்மை
பெற சொன்னான் அவன்
அழியாத சிறப்பு குணம்
கொண்டிருக்க சொன்னான் அவன்

தன்  தேகத்து பெருமை பேசியிராது
பிறருக்கு அடிமையற்று இருந்திடவே
களிமண் கொடுத்துச் சொன்னான் அவன்

உள்ளத்தில் உயர்வு கொண்டு
கழிவிரக்க எண்ணம் அகற்றி
மதிநலம் சிறப்புற மனநலம் தானுயர
அழியாத வாழ்வு வாழச் சொன்னான் அவன்