Monday, 27 July 2015

யாருமற்ற அநாதை பிரபஞ்சம்

சில தினங்களாகவே அந்த சாலை வழியில் பார்க்கிறேன்
ஒரு மரத்தின் நிழலில் அவ்விலங்கு படுத்து இருக்கிறது
எங்கிருந்து வந்து இருக்கும் என அதனிடம் கேட்டாலும்
உர்ரென்று முறைக்கும் அல்லது பாய்ந்து கடிக்கும்

என்னைப்போலவே பலரும் அவ்வழி செல்கிறார்கள்
அதே விலங்குதனை பார்த்தபடி நகர்கிறார்கள்
கல்லெடுத்து எறியும் சிறுவர் கூட அதை
கண்டுகொள்ளாமல் போய் விடுகிறார்கள் மௌனமாக

இப்படியாக இன்னும் சில தினங்கள் நகர்கின்றன
திடீரென ஒருநாள் அந்த விலங்கினை காணோம்
ஏதேனும் வேறு ஒரு மரம் தேடிப்  போயிருக்கும்
என்றே எனது மனமும் சமாதானம் சொல்கிறது

வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு தேடுகிறேன்
எந்த மரத்தின் கீழும் அந்த விலங்கு காணவில்லை
தனித்துக் கிடந்த அந்த விலங்கை வாரியணைத்து
என் வீட்டில் வைத்து அழகு பார்த்து இருக்கலாம்தான்.

Sunday, 19 July 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - ஆசியுரை திருமதி சுஷீமா சேகர்


                                                                        ஆசியுரை 

இப்போதெல்லாம் கிராமங்கள் கூட நகரங்கள் ஆகி வருகின்றன. விவசாய நிலங்கள் வீடு கட்டும் மனைகளாக மாறி விட்டன. கிராம வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நகரில் வளரும் பிள்ளைகளுக்குக் கொஞ்சமும் தெரிவதில்லை. இந்த நாவலைப் படிக்கையில் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் நம்மை ஒரு அழகிய கிராம சூழலுக்குள் அமிழ்த்தி விடுகிறார்.

கிராமத்தில் இருந்து கல்லூரிக்குப் படிக்க வரும் முதல் தலைமுறையினர் படும் அல்லகளையும், அவர்களுக்கு நண்பர்களாலும் சூழ்நிலைகளாலும் நேரும் மனமாற்றங்களையும் அருமையாகப் பகிர்ந்துள்ளார் கதாசிரியர். படிக்க ஆரம்பித்தவுடன் கதை போல் அல்லாமல் சினிமாவைக் காண்பது போல் அவர் எழுத்து நம் கண் முன் விரிகிறது.

கருத்துரிமை மட்டுமே நம்மை ஐந்தறிவுள்ளப் பிராணிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு துடிப்புள்ள இளைஞன் வாழ்வில் ஏற்படும் சலனங்களையும், கேள்விகளையும் அதற்கான விடைத் தேடல்களையும் படிப்படியாக இக்கதையில் விவரித்திருக்கிறார் திரு.ராதாகிருஷ்ணன்.

தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் மதங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ராதா அவர்கள் சமணம், சைவம், வைணவம் ஆகிய மதங்களை இக் கதையில் வரும் பாத்திரங்கள் மூலம் விளக்குவது நல்ல ஒரு உக்தி. கடைசியில் நாம் உணருவது அதையெல்லாம் விட அன்புள்ள மனிதனாய் இருப்பதே சாலச் சிறந்தது என்று! நல்லதொரு முத்தாய்ப்பு கதைக்கு!

அவரின் இந்த நாவலை பலரும் படித்து, சுவைத்து, மகிழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அவரை வாழ்த்துகிறேன். எந்தப் படைப்பும் சரியான சிந்தனையாளர்கள், படைப்பைப் பாராட்டுபவர்கள் கைகளில் போய் சேர்ந்தால் தான் படைத்தவருக்கு ஆனந்தம். அது திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்குக் கிட்ட வேண்டும் என்பது என் ஆசை. இன்னும் பல நற்கதைகள் எழுதி பேரும் புகழும் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அன்பும் ஆசியுடனும்,
சுஷீமா சேகர்.

--------------------------------

மிக்க நன்றி அம்மா. எண்ணில்லா மகிழ்ச்சி கொண்டேன். 

Saturday, 18 July 2015

அவளது சொந்தம்

வேண்டுவன எல்லாம் வேண்டுவன
விடுவன எல்லாம் விடுவன
தான் ஆண்டு தன் பிள்ளை ஆண்டு 
ஆண்டாண்டு காலங்கள் எவரும் இருப்பதில்லை

ஊர்வன எல்லாம் ஊர்வன

பறப்பன எல்லாம் பறப்பன 
கல்வியறிவு களவு அறிவு என 
எந்த அறிவும் கொண்டதில்லை 

நடப்பன எல்லாம் நடப்பன

கடப்பன எல்லாம் கடப்பன
கவலை ஆட்டுவித்து கவலை புரிந்து 
காலங்களில் எல்லாம் விழுந்து கிடப்பன

அவளது சொந்தம் என்று திரிவன

அவனது சொந்தம் என்று வருவன
ஒன்றுக்கொன்று வேறுபட்டு உழன்று 
உடைந்தும் ஒட்டுறவாக இருப்பன

சாமி கண்டேனென சொல்வன 

பொய்யாய் உலகம் வெல்வன
தானே உலகமும் சுற்றமும் என மறந்து 
ஏதோ எவரோ என ஓடி ஒளிவன

அழுவன எல்லாம் சிரிப்பன

சிரிப்பன எல்லாம் அழுவன
இன்பம் மட்டுமே கருதி வாழ்வில் 
துன்பம் கண்டால் நடுங்குவன

ஓடுவன எதையோ நாடுவன

நாடுவன எதையோ தேடுவன
மறதியில் எதையும் மறந்து திரிந்து
ஏதும் அறியாது சிவனாகி கிடப்பன

கண் பார்ப்பன காது கேட்பன

வாய் பேசுவன மூக்கு சுவாசிப்பன
காலமெல்லாம் இதையே நினைந்து

நினைந்து மூளை தோல் உணர்வன 
எது காப்பன எது தோற்பன 
அது அழிவன அதுவே ஆக்குவன
எல்லாம் உருமாறி உருமாறி எக்காலத்தும் 
வழி மாறாது இப்படியே இருப்பன 

எல்லா ன இருந்தாலும் பண ண இல்லாது
போனால் எவரும் எவரையும் மதிப்பன ரோ?