Wednesday, 3 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 5

பகுதி - 4

5. வாசனின் விவசாயம் 

வாசன் பெரியவரை சந்திக்கச்  சென்றான். அவரிடம் சாத்திரம்பட்டி பற்றி கேட்டுக்கொள்ள அதிக ஆர்வம் இருந்தது. இருப்பினும் அதை கேட்க வேண்டாம் என முடிவு செய்தான். பெரியவரின் வீட்டில் வேறு இருவர் அமர்ந்து இருந்தார்கள். உள்ளே செல்வதா, வேண்டாமா என முடிவு செய்வதற்குள் பெரியவர் வாசனை அழைத்தார். 

''வாசா உள்ளே வாப்பா''

அழைத்தபின்னர் செல்லாமல் இருப்பது சரியில்லை என உள்ளே சென்றான் வாசன். அங்கிருந்த அந்த வேறு இரண்டு  நபர்கள் வாசன் அப்படிங்கிறது நீதானா என்பது போல பார்த்தார்கள். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டு அங்கிருந்த ஒரு நாற்காலியில் வாசன் அமர்ந்தான். 

''தம்பி, என்ன வேலை பார்க்கிறீங்க''

நல்ல முறுக்கலான மீசை வைத்து பார்ப்பதற்கு முரட்டுத்தோற்றம் கொண்ட நடுத்தர வயது மிக்க ஒருவர் கேட்டார். 

''விவசாயம் பார்க்கிறேன்''

''விவசாயமா, தம்பிக்கு படிப்பு ஏறலையோ?''

அந்த கேள்வியை வாசன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புன்முறுவல் செய்தான். அதற்குள் பெரியவர் குறுக்கிட்டார். 

''ரொம்ப நல்லா படிக்கிற பையன், பன்னிரண்டாவதுல கூட ஆயிரத்து நூறு மார்க்கு. விவசாயம் மட்டுமே பார்ப்பேன் அப்படின்னு முடிவு பண்ணிட்டார்''

''யாருயா இவனுக்கு பொண்ணு கொடுப்பா''

மெல்லிய தேகம் கொண்ட சற்றே வயதான மற்றொரு நபர் சொன்னதைக் கேட்டு வாசன் மேலும் சிரித்துக் கொண்டான். 

''பொண்ணு எல்லாம் நிச்சயம் பண்ற அளவுல இருக்கு. அதுவும் டாக்டர் படிக்கிற பொண்ணு'' 

பெரியவர் சொன்னதும்தான் தாமதம் இருவரும் கலகலவென சிரித்தார்கள். 

''பொருந்தாத மாட்டைப் பூட்டினா வெள்ளாமை வீடு வந்து சேராது. படிக்காத இவனுக்கு டாக்டர் பொண்ணு, அந்த பொண்ணு கொடுக்கிற இளிச்சவாயன் யாருன்னு பார்க்கணுமே''

சிரிப்பை நிறுத்தி இப்படி உதிர்த்த வார்த்தைகள் அவரைப்போலவே சற்று முரட்டுத்தனமாக இருந்தது. 

''இந்த ஊரில ஒரு டிராக்டர் காணோம், எல்லாம் மாட்டு உழவுதானா, மாட்டுப்பயக  இருக்கிற ஊருல மாடுதான் உழவு போல''

அவர்கள் நிறுத்தாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள். வாசனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. 

''ஐயா, நான் கிளம்புறேன், பிறகு பேசலாம்''

வாசன் சொல்லிக்கொண்டு கிளம்பும் முன்னர் பெரியவர் அந்த இருவரையும் வீட்டைவிட்டு வெளியேப் போகச் சொன்னார். 

''தராதரம் தெரியாம உங்களை இங்க உட்கார வைச்சிப் பேசினேனே அது என்னோட தப்பு. இந்த வாசன் தான் ஊர்த்தலைவர். நீங்க என்ன வியாபாரம் பார்க்க நினைச்சாலும் இவரோட அனுமதி இல்லாம பண்ணக்கூடாது. உங்க புத்தி எல்லாம் சரியில்லை. கிளம்புங்க''

பெரியவரின் சற்று கோபமான குரல் கண்டு அவர்கள் ஏதும் திடுக்கிடவில்லை. 

''அப்படி யாரு இருக்கானு கேட்கத்தான் கேட்டோம். இவர் இப்படியே விவசாயம் பண்ணினா டாக்டர் பொண்ணு விவசாயம் பார்க்குமா, இல்லை இவரோட பிள்ளைகதான்  விவசாயம் பாக்குமா. டாக்டர் பிள்ளைக மாடு மேய்க்கிறத உங்க ஊருல ஏத்துக்குவாங்கள. ரொம்ப கோபபட்டு பேசுறீரு. ஏன்டா வாசு நீ இத்தனை மார்க்கு வாங்கி ஒரு டாக்டர், எஞ்சின்னீர் படிக்காம இப்படி வேகாத  வெயிலுல விவசாயம் பாக்கற, உனக்கு புத்தி ஏதும் கழண்டு கீழ விழுந்துருச்சா, ஒரு அம்பது ஏக்கர் நிலத்தை இந்த ஊருல வளைச்சி போட்டுரலாம்னு தான் வந்தோம். நீ அனுமதி கொடுக்கலன்னா என்ன ஊருல இருக்கவங்ககிட்ட பேசி வாங்கிக்கிறோம்''

பெரியவர் எழுந்தார். 

''இங்க யாரும் உங்களுக்கு நிலம் தர மாட்டாங்க, நீங்க கிளம்பிப் போகலாம்''

''உங்களைப் பார்க்கச் சொன்னாங்கனு வந்தா, மரியாதை இல்லாமல் நடந்துக்கிறீரு. இதே ஊருக்குள்ள  நாங்க வரத்தான் போறோம். உங்களை என்ன பண்றோம்னு பாரு. வாடா போலாம்''

அவர்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் வெளியேறினார்கள். வாசன் அவர்களை பின்தொடர்ந்து சென்றான். 

''உங்களுக்கு என்னப்  பிரச்சினை''

''ஒரு பிரச்சினையும் இல்லை. உன்னப் போல முட்டாப்பயக எல்லாம் விவசாயம் பாக்கத்தான் லாயக்கு. நீ எல்லாம் எப்படிடா ஊர்த்தலைவர் ஆன. உனக்குப் படிப்பு வரலைதானே. ஆயிரம் இரண்டாயிரம் மார்க்குன்னு பொய் சொல்றியா''

அந்த நேரம் பார்த்து முத்துராசு அங்கே வர அவர்கள் பேசியது அவர் காதில் விழ சரியாக இருந்தது. என்ன நினைத்தார் எனத் தெரியவில்லை. அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்து அவர்கள் இருவரையும் சரமாரியாக அடி அடித்தார். வாசன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்குள் அங்கே கூட்டம் கூடியது. என்ன ஏது  என விசாரிக்காமல் அவர்கள் இருவரையும் பலமாகத் தாக்கினார்கள். வாசன் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. 

''இவனுங்க ஊர் ஊராப் போய்  ஆளை ஏமாத்துற கூட்டம், திருட்டுப் பயல்க''

''என்ன அண்ணே சொல்றீங்க''

''டேய் அவனுகளை அந்த மரத்தில கட்டிப்போடு, தோலை உரிச்சிருறேன். இவனுக பத்தி உனக்குத் தெரியாது. இவனுக கூட்டம் பெரிசு''

சத்தம் கேட்டு பெரியவர் வெளியே வந்துப் பார்த்தார். 

''என்ன காரியம் பண்ணி இருக்கீங்க, யார் இப்படி இவங்களை அடிச்சது. முத்துராசு எதுக்கு இப்படி எல்லாம் பண்ணி வைச்சிருக்க''

''ஐயா, இவனுக பொல்லாதவனுக. ஊருக்குள்ள குடியேறி அந்த ஊரையே உலையில் போட்டுருவானுக''

''அப்படி எங்க நடந்திச்சி. உனக்கு எப்படி விபரம் தெரியும்''

''நீங்க சாரங்கன் கிட்ட பேசிப் பாருங்க ஐயா''

''அவன்கிட்டயா?''

''ஆமாயா, சாரங்கனை கூப்பிட்டு பேசுங்க''

முத்துராசு சொன்னது கேட்டு பெரியவர் குழப்பம் கொண்டார். அதற்குள் வாசன் அவர்கள் இருவரிடம் பேசி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருந்தான். 

''எங்களை அடிச்ச இந்த ஊரை கொளுத்தாம விடமாட்டோம்'' என வலியின் ஊடே அவர்கள் பேசியது முத்துராசுவிற்கு பெரும் எரிச்சல் உண்டாக்கியது. அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து முரட்டுத்தோற்றம் கொண்டவரின் வாயில் சரியாக எறிந்தார். வாசன் அதிர்ச்சி அடைந்தான். 

''அண்ணே, போலிஸ் கேஸ் ஆகிரப்போதுண்ணே, விடுண்ணே''

''ராசு, என்ன பழக்கம் இது. கொஞ்சம் கூட மரியாதை இல்லாம. நாங்க எல்லாம் இங்க நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா'' பெரியவர் சற்று கோபமாகவே கண்டித்தார். 

''ஐயா, நீங்க இப்படி வரவங்க எல்லாரையும் மன்னிச்சி அனுப்புங்க, அவனுக இப்படியே வந்து வந்து போகட்டும். அன்னைக்கு அப்படித்தான் திருட வந்தவங்களை மன்னிச்சி அனுப்பினீங்க''

''ராசு''

பெரியவர் சப்தம் இட்டதும் முத்துராசு அமைதி ஆனார். 

''இங்க நடந்தது எல்லாம் உங்களை எச்சரிக்கத்தான். மற்றபடி உங்க மேல எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. ராசு, இவங்களை கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்குப் போ''

அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். வாசன் தான் அவர்களை அழைத்துச் செல்வதாக அவர்களை அழைத்தான். அவர்கள் தாங்களாகவே செல்வதாக தடுமாறிச் சென்றார்கள். கூட்டம் அங்கிருந்து கலைந்தது. 

முத்துராசு தோட்டம் செல்வதாக கூறிக்கொண்டு அவர்களை வேறு வழி சென்று மடக்கினார். 

''பழி வாங்கணும்னு  இந்தப் பக்கம் இனிமே வந்த, நான் என்ன பண்ணுவேன்னு இப்ப காட்டினது விட பலமடங்கு இருக்கும். நீ நாராயணபுரத்தில பண்ணினது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா. சாரங்கன்கிட்ட சொல்லி வை. உன் கூட்டத்து ஆளுக எவனாச்சும் இந்த ஊருல குடி இருக்க வந்து குடி கெடுக்க நினைச்சான், நான் மனுசனா இருக்கமாட்டேன்''

எதுவும் சொல்லாமல் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். 

வாசன் தன்  தோட்ட  வேலைகள் முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான். வாசனுக்கு விவசாயம் பார்ப்பது அத்தனை தவறான காரியமா என யோசிக்க வேண்டும் போல் இருந்தது. என் பிள்ளைகள் விவசாயம் பார்ப்பார்களா? இந்த சுந்தரன் விவசாயம் பார்க்காமல் வெளியூர் போய் விட்டானே. மாதவி எதற்கு மருத்துவம் படிக்கச் செல்ல வேண்டும். 

ஊரில் விவசாயம் பார்த்த கொஞ்சம் சிலரில் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்களாகவே  அவனுக்குத் தெரிந்து கொண்டு இருந்தது. கிராமங்கள் விவசாயம் நம்பி இருக்கிறது. விவசாயம் மழையை நம்பி இருக்கிறது. ஆனால் இந்த நிலத்தை எல்லாம் விலைக்கு வாங்கி அதில் தொழிற்சாலை எழுப்ப, வீடுகள் கட்டி விற்க ஒரு கூட்டம் இன்று அடி வாங்கியவர்களைப் போல அலைந்து கொண்டு இருக்கிறது. 

முத்தையா தனது நிலங்களை எல்லாம் விற்றுவிட்டு தனது பிள்ளைகளிடம் சென்று இருக்கப்போவதாக நேற்றுதான் மந்தையில் கூறிக்கொண்டு இருந்தார். இவரிடம் அதிகம் பணம் கொடுத்து அந்த நிலத்தை இவர்கள் கையகப்படுத்திக் கொண்டால் என்ன ஆவது என வாசன் யோசித்தான். அடிபட்டு போனவர்கள் நிச்சயம் திரும்புவார்கள். 

''என்ன யோசனை, மந்தையில் இன்னைக்கு என்ன பெரிய கலாட்டாவா. அந்த முத்துராசு கையை வைச்சிட்டு சும்மா இருக்கமாட்டானா''

தனது அப்பாவின் குரல் கேட்டு எழுந்தான் வாசன். 

''கிராமத்து நிலத்தை வாங்கி, அதில வீடு கட்டுற கூட்டம் பிரச்சினைப்பா''

''நானும் இப்பதான் கேள்விபடறேன். நீ அதை நினைச்சி வருத்தப்படாதே''

அப்பாவின் ஆறுதல் வார்த்தைகள் வாசனுக்கு இதமாக இருந்தன. அப்போது முத்துராசு வாசனை அழைக்க வந்தார். 

''வாசா, வா நாம போய்  அந்த சாரங்கனை என்ன ஏதுனு  விசாரிச்சிட்டு வருவோம்''

''இப்ப வேணாம்ணே, அவர்தானு  நமக்கு எப்படி தெரியும்''

''சொன்னாக் கேளு, பெரியவர்தான் உன்னை கூப்பிட்டு வரச்சொன்னார்''

வாசனுக்கு சாரங்கனை சந்திக்கப் போவதா வேண்டாமா என யோசனையாக இருந்தது. 

(தொடரும்) 




Sunday, 24 May 2015

தமிழ் மின்னிதழ் - 2 இந்துத்வா

7. இந்து அடையாளமிலி - ரோஸாவசந்த் ( கருத்து)

பல விசயங்களை அலசி ஆராய்ந்து இருக்கும் கட்டுரை என்றால் மிகையாகாது. இணைய பரபரப்பு என்று தொடங்கி நாவல், இந்து, இந்துத்வா என பயணித்தபோது எனக்கு சற்று குழப்பம் நேர்ந்தது உண்மை. எப்போது ஒருவர் தெளிவு இல்லையோ அப்போது ஒருவர் குழப்பம் அடைவார். எனக்கு இந்த கட்டுரையில் குறிப்பிட்ட விஷயங்கள் குறித்தத் தெளிவு இல்லை என்பதால் எனக்கு குழப்பம் நேர்ந்தது உண்மை. கட்டுரையை இரண்டு முறை வாசித்தபின்னர் ஓரளவுக்குத் தெளிவு பிறந்தது. மாதொரு பாகன் நாவல் குறித்தும் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள், அதன் பின்னணி அலசி இருக்கிறது. சாதியம் குறித்த விசயங்களை திரைப்படம், படைப்புகள் எப்படி கையாண்டன என்பது என்னைப்போன்று  அறியாமையில் இருப்போருக்கு  வைக்கக்கூடிய ஒன்றுதான்.

ஒரு படைப்பை எப்படி எல்லாம் சாதகமானவர்கள், பாதகமானவர்கள் கையாள்வார்கள் என்பது இந்த மாதொருபாகன் நாவல் ஏற்படுத்திய தாக்கம்தனில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால் மக்கள் காலப்போக்கில் இதை எல்லாம் மறந்து போவார்கள். அப்படி ஒரு பரபரப்பு என்பது கால காலத்திற்கும் நிலைத்து நிற்காவண்ணம் இயங்குவதுதான் ஊடகத்துறை. இந்துத்வர்கள், யார் இவர்கள், எப்படி இந்த விஷயத்தை நோக்கிச்  சென்றார்கள் எனத் தொடங்கி இந்து, காந்தி என பெரும் சுற்று சுற்று வந்து இருக்கிறது இந்த கட்டுரை.

இந்துத்வா என்றால் என்ன? எனக்கு இதுபற்றி தெரியாது என்பதால் சற்று தேட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்துத்வா என்ற வார்த்தை 1923ம் ஆண்டு விநாயக் தாமோதர் சவார்கர் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. இதை 1989ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தனது கொள்கையாக எடுத்துக்கொள்ள , விஷ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் அமைப்பு எல்லாம் இதை முன்னிறுத்தி செயல்பட்டன.

According to the Oxford English Dictionary, Hindutva is an ideology seeking to establish the hegemony of Hindus and the Hindu way of life. According to theEncyclopedia Britannica, "Hindutva ('Hindu-ness'), [is] an ideology that sought to define Indian culture in terms of Hindu values". (விக்கிப்பீடியா) 

மேற்குறிப்பிட்ட விஷயத்தை மொழிப்பெயர்ப்பு செய்தால் இந்து யார் எனும் கேள்வி வரும்? இந்து என்றால் என்ன? இந்துக்களின் மதிப்பு என்ன? Hindu as one who was born of Hindu parents and regarded India as his motherland as well as holy land. (விக்கிப்பீடியா) 

இப்போது எனக்கு எனது தாத்தாவிற்கு தாத்தா அதற்கு முன்னர் இருந்த தாத்தா பாட்டி எல்லாம் இந்துக்களாக இருந்தார்களா எனும் கேள்வி எழுகிறது. எனது சந்தத்தி இந்தியாவை விட்டு வெளியேறியதால் அவர்கள் தாய்நாடு வேறு என்பதால் இந்து எனும் அடையாளம் இழந்து விடுகிறார்களா? எதுவும் எனக்குத் தெரியாது. இந்துத்வா என்றால் ஒரே குலம், ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் அதாவது சமஸ்கிருத கலாச்சாரம். அப்படிப்  பார்த்தால் இந்தியாவின் நிலை என்ன ஆவது. இந்த கட்டுரை இந்துத்துவம் பற்றி நிறைய எழுத்தாளர்களின் நிலை, மற்றும் ஒரு நாவல் குறித்து எழும் சூழல் விவரிக்கிறது. தனிப்பட்ட மனிதனின் கருத்து சமூக கருத்தாக முடியாது. அதே வேளையில் தனிப்பட்ட மனிதனின் கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டு பின்பற்றப்படும் எனில் அது சமூக கருத்து ஆகும்.

எந்த ஒரு இந்துவும் தன்னை இந்துத்வா என அடையாளம் காட்டிக்கொள்ள அச்சம் கொள்வார். இதற்கு காரணம் இந்துத்வா தன்னை முன்னிறுத்தும் விசயம். ஒரு இந்து எப்படி இருப்பார் என மகாத்மா காந்தி குறித்து எழுதியதைப் படிக்கும்போது எதற்கு கோட்சே ஒரு இந்துத்வா என புரியமுடிகிறது.

மனிதர்களில் இரண்டு வகை ஒன்று மிதவாதிகள், மற்றொன்று தீவிரவாதிகள். மதவாதிகள் பெரும்பாலும் தீவிரவாதிகளாகவே வலம் வருகிறார்கள். இந்த கட்டுரையில் சொல்லப்படும் இந்துமதம் வேறு, இந்துத்துவம் வேறு எனும் கருத்து பலருக்கு ஏற்புடையதே. ஒரு இந்து என்பவர் பிறரை துன்புறுத்தமாட்டார் என்பது பொது கருத்து . ஆனால் ஒரு இந்துத்வா இந்துவை கூட துன்புறுத்த தயங்கமாட்டார். 

இந்துக் கடவுள்களை நம்பும் இவ்வளவு பெரிய  மக்கள் கூட்டம் , திைாதிராவிட அரசியலை மனத்தடையின்றி ஆதரித்து வந்ததற்கும், வருவதற்கும் கூட, இந்து அடையாள உணர்வின்மை ஓர் அடிப்படை காரணம். இது சற்று ஆச்சரியமான வாக்கியம். தான் ஒரு இந்து என்பதால் பிறரை சகித்துக்கொள்ளும் தன்மை உண்டு, மேலும் தனது மதத்தை முன்னிறுத்தி எந்த ஒரு இந்துவும் நடப்பது இல்லை. சாதியின் அடிப்படையில் செயல்படும்போது அங்கே இந்து என்பது எல்லாம் இரண்டாம்பட்சம்தான். இந்து அடையாளமிலி என இந்த கட்டுரை எழுப்பிய சிந்தனைகளுக்கு கட்டுரையாளர் ரோஸாவசந்த் அவர்களுக்கு மிக்க நன்றி. 

8. லஜ்ஜா : மதவாதத்தின் வன்முறை - லேகா இராமசுப்ரமணியன் (விமர்சனம்)

ஒரு நாவல் என்பது எப்படி இருக்க வேண்டும் என இந்த விமர்சனம் மூலம் அறிய முடிந்தது. தீவிர சிந்தனை கண்மூடித்தனத்தை எதிர்க்கும் என்பதான வாசகம் போற்றத்தக்கது. அந்த தீவிர சிந்தனை மதம் எனும் போர்வையில் நிகழும் போது  மதம் ஒரு கண்மூடித்தனம் என்ற நிலை உண்டாகிறது. பெண்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு எழுத்தாளர் நிச்சயம் அதன் வலியை மிகவும் திறமையாக சமூகத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதே இந்த நாவல் குறித்த விமர்சனம் மூலம் அறிய முடிகிறது.  எப்படி அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் சாதாரண மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப்பார்க்கின்றன என்பது பலரும் உணர்ந்த ஒன்றுதான். நாவல் குறித்து ஆவல் எழுப்பியமைக்கு லேகா அவர்களுக்கு மிக்க நன்றி. 

9. அவ்வாறெனில் இது ஏன் இவ்வாறு நிகழ்ந்தது - தமிழில் எம். ரிஷான் ஷெரீப் (மொழிப்பெயர்ப்பு)

சினுவா ஆச்சிபி என்பவரின் சிறுகதையை மொழிபெயர்த்து சொல்லப்பட்டு இருக்கிறது. சினுவா பற்றிய குறிப்பும் பயனுள்ளதாக இருந்தது. வித்தியாசமான சிறுகதை. படித்த மனிதன் ஒருவன் இவ்வாறென ஒன்றை ஏன்  செய்தான்? இந்த கேள்விக்கு பல நிகழ்வுகளை வைத்து கேட்டுக்கொள்ளலாம். 

இப்படியாக வெகுசிறப்பாக பல விசயங்களை கொண்டுள்ள தமிழ் மின்னிதழ், தன்னை அலங்கரிக்க எடுத்துக்கொண்ட விஷயம் ஆண்டாள். அடுத்துப் பார்க்கலாம். 

(தொடரும்) 

Friday, 22 May 2015

நுனிப்புல் பாகம் 3 - 4

 பகுதி - 3 

4. பாரதியின் கனவு

மறுநாள் காலை பாரதியைப் பார்த்து சுந்தரன் என்னோட காதலை உனக்குத்தான் புரியக்கூடிய சக்தி இல்லை என  சொல்லி சிரித்தான். பாரதி சுந்தரனை நோக்கி முறைத்தாள்.

''என்ன முறைக்கிற, உன்னைவிட ஒரு நல்ல பொண்ணுதான் என்னை காதலிக்கிறா, டாக்டருக்குப் படிக்கிறோம்னு உனக்கு தலைக்கனம், உன் திமிரு எல்லாம் வேற எங்காச்சும் வைச்சிக்கோ''

''சுந்தரா, நான் உன்னை எதுவும் சொன்னேனா, நீ யாரையாவது காதலி எனக்கென்ன. எனக்கு உன்னை காதலிக்க மனசு இல்லை அவ்வளவுதான். உனக்கு ஒரு பொண்ணு கிடைச்சிருக்கானுட்டு என்னை நீ இப்படி பேசறத நிறுத்து''

''சும்மா அழாத, உனக்கு அந்த வாசனும் கிடைக்க மாட்டான். அவனுக்கு மாதவியை பேசி முடிச்சிட்டாங்க''

சுந்தரன் சொல்லி முடிக்கும் முன்னர் அவனது பின்னந்தலையில் ஓங்கி ஒரு அடி விழுந்தது.

''என்ன வாய் ரொம்ப பேசுதே, எங்கப்பா உனக்கு சம்மதம் சொல்லிட்டாருன்னுட்டு நீ துள்ளுற, ஒழுங்கா இரு இல்லை வேலை இடத்தில இருந்து தூக்கிருவேன். நீ எதுக்கு பாரதி இவன்கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்க''

அருண் அங்கு வந்து நிற்பான் என்று சுந்தரன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தலையை குனிந்தவாறே அவ்விடம் விட்டு நகர்ந்தான் சுந்தரன்.

''அண்ணா, நீ அப்பா கிட்ட சொல்லி எதுவும் பிரச்சினை பண்ண வேண்டாம். பாவம் அவன்''

''சரி பாரதி''

பாரதி தனது தோழி கிருத்திகாவைச்  சந்திக்கச் சென்றாள்.

''என்னய்யா ஒருமாதிரி சோகமா இருக்க''

''ஒண்ணுமில்லை கிருத்தி''

''மறைக்காம சொல்லுய்யா''

''சுந்தரன் என்னை இன்னைக்கு வம்புக்கு இழுத்தான்''

''காதல் பண்ண ஆரம்பிசிட்டான்ல, இனி அவன் அப்படித்தான்.

''உன்னோட சொந்தக்கார பொண்ணுதான  அந்த பிரபா''

''தூரத்து சொந்தம்தான், சரிய்யா, உன்னோட ஜெனிடிக்ஸ் கனவு எல்லாம் எப்படி இருக்குய்யா, எதுவுமே நீ இதுவரைக்கும் சொன்னது இல்லையே''

''புதுசா ஒரு எண்ணம் இருக்கு கிருத்தி''

''சொல்லுய்யா''

''ஆர்என்ஏ மட்டுமே உள்ள ஒரு மனிதரை உண்டு பண்ணனும், டிஎன்ஏ இல்லாம சர்வைவ் பண்றமாதிரி செட் பண்ணனும்''

''என்னய்யா நீயும் நல்லா கதை சொல்ற, எந்த இங்க்லீஸ் படம் பார்த்த''

''கிருத்தி, நான் திருமால் அவரைப் போய் நாளைக்குப்  பார்க்கப் போறேன். அவருக்கு பல விஷயங்கள் தெரிஞ்சி இருக்கு. நீயும் வரியா''

''நான் வரலைய்யா, நீ மட்டும் போய்ட்டு வந்துரு. இன்னைக்கு ஏதாவது  படம் பார்க்கப் போகலாம்''

''இல்லை கிருத்தி, நான் இந்த ஆர் என் ஏ  பத்தி இங்க உட்காந்து எழுதலாம்னு வந்தேன், உனக்கு ஒண்ணும்  பிரச்சினை இல்லையே''

வாம்மா பாரதி என்றவாறு கிருத்திகா அம்மா வந்தார். கிருத்திகா, பாரதிக்கு குடிக்க ஏதவாது கொடுத்தியா என்றபடி உள்ளே சென்றவர் ஆரஞ்சு பழச்சாறு எடுத்து வந்தவர் எத்தனைவாட்டி சொல்லி இருக்கேன் என வைத்தார்.

''என்ன பாரதி அம்மா, அப்பா அண்ணன் எல்லாரும் நல்லா இருக்காங்களா, அடிக்கடி இந்தப் பக்கம் உன்னைக் காணோமே''

''எல்லோரும் நல்லா இருக்காங்க, கொஞ்சம் வேலை''

''சரி பேசிட்டு இருங்க''

கிருத்திகா அம்மா சென்றதும் பாரதி ஆர்என்ஏ குறித்து குறிப்பெடுக்க ஆரம்பித்தாள்.

'வினையூக்கிகள் மட்டுமே வேதிவினையில் ஈடுபடும் என அறிந்த உலகத்திற்கு இந்த ஆர் என் ஏக்கள்  வினையூக்கிகளாக செயல்படும் என்பது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. வினையூக்கிகள் புரதத்தினால் ஆனவை. புரதம் எப்படி மடங்கி உருவாகிறதோ அதைப்பொருத்தே ஒரு வினையூக்கி உண்டாகும். மேலும் இந்த வினையூக்கி குறிப்பிட்ட வேதிவினையில் மட்டுமே பங்கு கொள்ளும்.

இந்த வினையூக்கித் தன்மை கொண்ட ஆர்என்ஏக்கள் ரைம்போசைம் எனப்படும். இது நமது செல்லில் உள்ள ரைபோசோம்  அல்ல.  இப்படி புரதம் உண்டாகும் முன்னரே இந்த ஆர்என்ஏக்கள் ஒரு வேதிவினையை எதற்கு உண்டு பண்ணி இருக்கக்கூடாது எனும் சிந்தனை செய்யாத மக்கள் இல்லை. இதனால் ஆர்என்ஏ  தான் இந்த உலகில் உயிர்கள் உண்டாக காரணம் என எண்ணுபவர்கள் உண்டு'

''என்னய்யா பயங்கரமா குறிப்பு எடுத்துட்டு இருக்கப் போல''

கிருத்திகாவின் குறுக்கீடு கண்டு பாரதி நிமிர்ந்தாள்.

''நீ எழுதுய்யா, தொந்தரவு பண்ணிட்டேனோ?''

''இல்லை கிருத்தி, இந்த ஆர்என்ஏ  உலகம் அதிசய உலகம் போல தெரியுது''

''எனக்கு இந்த உலகம் போதும், என்னை அதில் இழுக்காதே''

''சரி, ஒரே ஒரு விஷயம் கேளு. இந்த ஆர் என் ஏ  தான் இந்த உலக உயிர்களுக்கு காரணம்''

''அப்படின்னா கடவுள்''

''அது வாசன் கிட்டதான் கேட்கணும்''

''வாசனுக்கு கடவுள், உனக்கு ஆர் என் ஏ''

''அப்படியே வைச்சிக்கோ, சரி கொஞ்சம் இரு''

கிருத்திகாவை பாதியில் நிறுத்திவிட்டு மேலும் சில வரிகள் பாரதி எழுத ஆரம்பித்தாள்.

'புரதம் உண்டாக்கும் வேதிவினையை இன்றளவில் இந்த ஆர் என் ஏக்கள் மட்டுமே நமது செல்லில் உள்ள ரைபோசொமில் செயல்படுத்துகின்றன. இந்த ஆர் என் ஏக்கள் ஸ்திரத்தன்மை அற்றவைகள் என்பதாலும், இவைகளால் எல்லா வேதிவினையை ஊக்குவிக்க முயலாது என்பதாலும் நாளடைவில் இந்த ஆர் என் ஏக்களை புறம் தள்ளிவிட்டு புரதம் முக்கிய வினையூக்கியாக செயல்படத் தொடங்கியது.

இந்த ஆர் என் ஏக்கள் டி என் ஏக்களில் இருந்து தற்போது உருவாகி அவை கரு உறையை விட்டு வெளியேறி இந்த புரதம்தனை உருவாக்குகிறது எனும்போது இந்த ஆர் என் ஏக்கள் தான் டி என் ஏக்கள் உருவாக காரணம் என்பதும் அறிய முடிகிறது. இந்த உலகம் ஆர் என் ஏ  உலகம் என்பதில் மறு கருத்து இல்லை'

''பாரதி, நாம வெளியில் போகலாமாய்யா?''

''கிருத்தி, இப்போதான் கொஞ்சம் எழுதி இருக்கேன், அதுக்குள்ளே வெளியில் போகணும்னு சொல்ற''

''உனக்கு இப்படி ஏதாவது கிடைச்சிருது, எனக்கு என்ன இருக்கு சொல்லுய்யா. ஜாலியா வெளியில் போய்ட்டு அப்புறம் வந்து எழுதலாம்''

''இனி நீ சொன்னால் கேட்கமாட்ட, சரி வா போகலாம்''

இருவரும் வெளியே கிளம்பி கொஞ்ச தூரம் கூட வந்து இருக்கமாட்டார்கள். அவர்கள் எதிரில் சுந்தரனும், பிரபாவும் வந்தனர். இதை பாரதி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

''கிருத்தி, நாம திரும்பிப் போய்ருவோம்''

''எதுக்குய்யா பயப்படற?''

''யார் வராங்க பாரு''

''நம்ம பிரபா, சுந்தரன்யா''

''சொன்னா கேளு கிருத்தி''

சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சுந்தரன் வெகுவேகமாக இவர்களை நோக்கி வந்தான். பிரபாவும் உடன் வந்தாள் .

''பாரதி, இதுதான் பிரபா. உன்னை விட அழகு''

''சுந்தரா, என்ன பேச்சு பேசுற'' கிருத்திகா சற்று கடுமையாகவே சொன்னாள்.

''சொன்னதுல என்ன தப்பு, பாரதிக்கு தான் ஒரு பெரிய அழகினு நினைப்பு''

பிரபா இடைமறித்து ''சுந்தரா, நீ இப்படி எல்லாம் பேசின அப்புறம் நான் உன் கூட பழகுறதை நிறுத்திறுவேன்'' என்றதும் சுந்தரன் நிலைமையை புரிந்துகொண்டு  அங்கிருந்து நகர்ந்தான். பிரபா இருவரிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டு நகர்ந்தாள்.

''நீ சொன்னா கேட்டியா கிருத்தி''

''என்னய்யா அவன் இப்படி இருக்கான், அவனுக்குப் போய்  நான் உதவினேன் பாரு''

''விடு கிருத்தி, அவனுக்கு நான் அவனோட காதலை ஏத்துக்கலைன்னு மன வருத்தம். அவனுக்கு இது ஒரு காயம் மாதிரி இருக்கும். என்னோட கனவு இப்படி காதல் பண்றது இல்லை கிருத்தி. எனக்கு இந்த ஆர் என் ஏ  உலகம் தான் உலகம்''

''ஆர் என் ஏவை  கொஞ்சம் விட்டுத் தள்ளுயா''

''நாளைக்கு நிசமாவே நீ திருமால் பார்க்க வரலையா''

''ஏன்யா இப்படி உங்க கிராமத்து ஆட்கள் முக்கியம்னு இருக்க, அந்த திருமால் என்ன உனக்கு சொந்தமாய்யா. பெருமாள் தாத்தானு  சொல்ற, கொஞ்சம் யூத் மாதிரி பிகேவ் பண்ணுய்யா''

''எல்லாம் சொந்தம்தான்''

''எப்படி''

''நாளைக்கு வா சொல்றேன்''

''ம்ம் சரிய்யா''

விரைவாக வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதில் பாரதி குறியாக இருந்தாள். கிருத்திகாவும் பாரதிக்கு ஏற்றபடி ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பினார்கள்.

விவசாய நிலங்களில் வீடு கட்டுவது போல இந்த பூமியில் பல மாற்றங்கள் எப்படி வெளி கண்ணுக்கு புலப்படுகிறதோ அது போல நமது உடலில் நடந்த அல்லது உடல் உருவாகும் முன்னர் உள்ளே நடந்த விஷயங்களை குறித்து வைக்காமல் போனாலும் இப்படித்தான் என ஒரு தீர்மானத்திற்கு வர முடிகிறது. அப்படித்தான் பாரதியும் ஆர் என் ஏவில் மூழ்கிக் கொண்டு இருந்தாள்.

(தொடரும்)