Sunday, 3 May 2015

நமது திண்ணை - சிற்றிதழ் வடிவமைப்பு

பொதுவாக ஒரு புத்தகமோ, மாத இதழோ, வார இதழோ அதன் வடிவமைப்பு மிகவும் முக்கியமானது. கைக்கு அடக்கமாகவும், தூக்குவதற்கு ஏதுவாகவும்  இருப்பவை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் இப்போது இணையத்தில் வெளியிடும் வகையில் புத்தகங்கள் எல்லாம் வந்துவிட்ட சூழலில் கருப்பு வெள்ளை என பழைய முறையை பின்பற்றியே வெளியிடுவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு பக்கத்திற்கும் மெனக்கெட்டு வண்ணம் மாற்றி செயல்படுவது அவசியமற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆனால் இணையதளத்தை பார்த்தோம் எனில் படிப்பவர்களின் மனதை கவரும் வண்ணம் ஒவ்வொரு பக்கமும் சிறப்பாக செய்து இருப்பார்கள். அதற்கு அவர்கள் செலவிடும் நேரம் அந்த வடிவமைப்புக்கு உரிய சிந்தனை என உடன் இருந்து பார்த்து இருப்பதால் பிரமிப்பு ஏற்பட்டது உண்டு.

மிகவும் சரியாக வண்ணக்கலவை, அந்த இணையதளம் என்ன சொல்ல வருகிறது என்பதை வெளிக்காட்டும் பாங்கு என இருக்க வேண்டும். அப்படி ஒரு விஷயத்தை இணைய இதழாக வெளிவரும் நமது திண்ணை சிற்றிதழில் முயற்சித்தால் என்ன என திரு அல்  அமீன் அவர்களின் சிந்தனை ஒரு செயல்பாட்டாக மாறி இருக்கிறது. இதழ்களின் வடிவமைப்பு பற்றி முன்னரே குறிப்பிட்டு இருந்தாலும் இந்த இதழின் வடிவமைப்பு குறித்து சற்று பார்ப்போம். அதாவது வடிவமைப்பு மெருகேற்றினால் இந்த சிற்றிதழின் அளவு அதிகமாகும் அபாயம் இருக்கிறது. அப்படி அளவு அதிகமாகும்போது தரவிறக்கம் செய்ய அல்லது பிறருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப சிரமம் உண்டாகும்.

சரி வடிவமைப்புக்கு செல்வோம். முதல் பக்கம் அத்தனைத் தெளிவாக இல்லை. சமீபத்தில் மறைந்த திரு ஜெயகாந்தன் அவர்களின் படத்தை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. நான் 50% அளவில் தான் பார்க்கிறேன் ஆனால் தெளிவு இல்லை. மொபைல் மூலம் செய்வதாலோ அல்லது பெறப்பட்ட படம் அத்தனை தெளிவான ஒன்று என இல்லாததாலோ அத்தனை சிறப்பாக வரவில்லை. சற்று கவனம் செலுத்தலாம். பளிச்சென மனம் ஒட்ட  வேண்டும்.

இரண்டாவது பக்கம் சற்று நன்றாக இருக்கிறது. மிகவும் தெளிவாக வடிவமைக்கப்பட்டு வரவேற்பு இதழ் போல உள்ளது. அடுத்த பக்கம் அதே பிரச்சினை. பின்புறத்தில் என்ன இருக்கிறது (பெண் முகம்) என தெளிவாகத் தெரியவில்லை. கவிதை சோகத்தைத் தாங்கி இருப்பதால் பின்புறம் சோகமாக இருக்கட்டும் என விட்டுவிட்டார்.

அடுத்து வருகிறது எனது கதை. இங்கே தான் வண்ணமயமாக்கல் தொடங்குகிறது. கருப்பாக இருந்தபோது இல்லாத தெளிவு வண்ணத்தில் தெளிவாக இருக்கிறது. எனது கதைக்கு நான் எந்த ஒரு யோசனையும் அவரிடத்து சொல்லவில்லை. எனக்கு இந்த பின்புற படம் பார்த்தபோது பிரமிப்பு ஏற்பட்டது உண்மை. எத்தனைப் பொருத்தம். எழுத்தும் வண்ணம் கொண்டு இருப்பது படிப்பதற்கு இடைஞ்சலே இல்லை. எனது கதை என்பதால் எனக்கே ஒரு தனி கர்வம் தந்தது என்றால் மிகையாகாது.

அடுத்து அடுத்த பக்கங்கள்  மிகவும் ஜொலிக்கின்றன. நல்ல வண்ண நிறங்களுடன் கூடிய நகைச்சுவை பக்கம். நினைவலைகள் பசுமையாக இல்லாது இருப்பதை காட்டும் வண்ணம் என பக்கவாட்டில் ஒரு வண்ணம் என நன்றாகவே இருக்கிறது. அடுத்த பக்கத்தில் மரத்தின் கீழ் உள்ள ஒரு சிறுவனின் ஓவிய அமைப்பு என வண்ணங்கள் தெளித்து சிறப்பித்துவிட்டார். திருப்பூர் என்பதற்கு திரைப்படத்தில் வருவது போல பெயர்ப்பலகை மற்றும் பின்னணியில் ஒரு வாகனம் என சிறப்பாகவே இருக்கிறது. வண்ணம் நமக்கு எரிச்சல் தரவே இல்லை.

அக்ஷய திரிதி முதல் பக்கம் கருப்பு பின்புலம் சரியில்லை. தங்க நாணயங்கள் சரியாக தெரியவில்லை. இனி வரும் இதழில் இந்த சாம்பல், கருப்பு வண்ணங்களை பின்புறத்தில் இருக்குமாறு உள்ளதை தவிர்க்கலாம். அடுத்த பக்கம் மீண்டும் அருமையாக வந்து இருக்கிறது. பஜ்ஜி ரொட்டி எல்லாம் நன்றாகவே இருக்கிறது. திரு அல் அமீன் அவர்களின் உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது. கிளிக்ஸ் பை மீ பக்கமும் நன்றாகவே இருக்கிறது.

ஸ்ரீராமானுஜர் பக்கங்கள் மிகவும் அருமை. இப்படிப்பட்ட ஒரு தெளிவான படத்தை முதல் பக்கத்தில் திரு ஜெயகாந்தன் அவர்களுக்கு அலங்கரித்து  இருக்கலாம்.எனக்கு வண்ண வண்ண எழுத்துகள் மிகவும் பிடிக்கும். சலிப்பு ஏற்படுத்தாத வண்ணம் பின்புறத்தில் ராமானுஜர் இருப்பது வெகு சிறப்பு. திண்ணை பாடகி பக்கமும் அருமையாகவே இருக்கிறது.

பாடல் பரவசம் பின்புறம் அத்தனை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பெண், மாட்டுவண்டி, நிலம் என சிறப்பு படுத்தி இருக்கிறார். கருத்தம்மா என தெரிகிறது. நல்லதொரு முயற்சி. மழலையர் மன்றம் பின்புறம் நன்றாக இருக்கிறது என்றாலும் புத்தகங்கள் பற்றிய பக்கங்களில் அத்தனைத் தெளிவு இல்லை. ஆனால் வடிவமைப்பு வெகு சிறப்பு. மேடைப்பேச்சு பக்கங்கள் வடிவமைப்பு சிறப்பு. கடைசிப் பக்கத்தில் வாலி நன்றாகத் தெரிகிறது.

வண்ணமயமான இந்த சிற்றிதழ் மொத்தத்தில் 88 சதவிகிதம் வடிவமைப்பு வெகு சிறப்பாக அமைந்து இருக்கிறது. இது எத்தனை கடினம் என்பதை உழைப்பவரிடத்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும். நான் இதை எழுத எடுத்தக்கொண்ட நேரம் 46 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் இதை வடிவமைக்க எத்தனை மணி நேரங்கள் செலவிட்டு இருப்பார் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. ஒவ்வொரு வரிகளுக்கும் வண்ணம் கொடுத்து பின்புறம் அந்த எழுத்துகளை பாதிக்காது இருக்கும் வண்ணம் வடிவமைத்து ஏதோ  ஒரு இணைய இதழ் வெளியிட்டோம் என இல்லாமல் இத்தனை சிறப்பாக செய்து இருக்கும் திரு அல்  அமீனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இங்கே எழுதப்பட்டவை எனது பார்வையில் தென்பட்ட சிறு சிறு குறைகள்தானே  தவிர உங்கள் உழைப்பை ஒருபோதும் குறைத்து மதிப்பிட இயலாது. ஒரு படைப்பினை வெளியிட்டு அதற்கு கிடைக்கும் பாராட்டோ, திட்டோ அது நமக்கானது என எண்ணும்  மனநிலை எனக்கு இருப்பது போல உங்களுக்கும் இருப்பது அறிவேன்.

நமது திண்ணை தமிழில் ஒரு அற்புத இணைய சிற்றிதழ் என கூறிக்கொண்டு ஆசிரியர் திரு ஆந்தைகண்ணன் மற்றும் திரு அல்  அமீன் அவர்களுக்கு எனது நன்றிகலந்த வணக்கங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன். 

Friday, 1 May 2015

நமது திண்ணை மே மாத இணைய சிற்றிதழ்

ஒரு விசயத்தை தனலாபம் இல்லாமல் தொடர்ந்து செய்வதற்கு ஒரு தனித்துவமிக்க ஈடுபாடு மிக மிக அவசியம். அது மட்டுமில்லாமல் மிகச் சிறந்த வரவேற்பும் அதைச் சார்ந்த மக்களிடம் இருந்து தொடர்ந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது ஒரு விஷயம் பெரும் தொய்வினை சந்திக்கும் என்பது வலி தரும் செய்தி. இந்த உலகத்தில் பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் ஆர்வத்தினால் உண்டானவை, அவர்களது வெற்றிக்கு காரணம் அவர்களுக்குத்  தொடர்ந்து பிறரது ஆதரவு இருந்ததுதான். நல்லதொரு ஆதரவை ட்விட்டர் மக்கள் நமது திண்ணை (சிற்றிதழுக்கு இங்கே அழுத்தவும்) இணைய சிற்றிதழுக்கு வழங்கி வருவது இணைய சிற்றிதழின் ஆசிரியர் மற்றும் சிற்றிதழ் வடிவமைப்பாளர் திரு அல்  அமீன் அவர்களின் ஆர்வத்தை மென்மேலும் உற்சாகமாக வைத்து இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஆசிரியரின் கருத்தும் இதையே பிரதிபலிக்கிறது.

ஸ்ரீராமானுஜர். சுசீமா அம்மா அவர்கள் எழுதும் ஒரு புதிய தொடர். இந்த தொடர் மூலம் பல புதிய விசயங்கள் அறிய முடிகிறது. எனக்கு அதிகமாக ஸ்ரீராமானுஜர் பற்றி தெரியாது  என்பதால் இந்த தொடர் எனக்கு பேரானந்தம் தரக்கூடிய ஒன்றாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. இங்கொன்று அங்கொன்று என இவர் குறித்த விசயங்கள் மட்டுமே அறிந்து வைத்து இருக்கிறேன். நாலாயிர திவ்விய பிரபந்தம் தனில் இவரது புகழ் பேசப்பட்டு இருக்கிறது. சமய ஒற்றுமை, மனித ஒற்றுமை குறித்து பாடுபட்ட ஒரு நற்பண்பாளர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அரங்கனின் கண்கள். விசிட்டாத்துவைதம். எனக்கு அத்வைதம், துவைதம் அடிக்கடி குழப்பத்தைத் தரக்கூடிய ஒன்று. விசிட்டாத்துவைதம் பற்றி எனக்குத் தெரியாமல் கல்லுக்கும் உணர்வு உண்டு, உணர்வற்ற நிலையில் உன் உணர்வு உண்டு என நாராயணனை நோக்கி எழுதியவை நினைவுக்கு வருகின்றன. நல்லதொரு அற்புத தொடர் அம்மா. வாழ்த்துக்கள்.

கமலா அம்மா அவர்களின் புற்றுநோய் குறித்த பதிவு அனைவருக்கும் நல்லதொரு விழிப்புணர்வு தரும் பதிவு. சமீபத்தில் நண்பர் புகழ் அவர்கள் ஒரு சாமியார் எனது புற்றுநோயை தீர்த்து வைக்கிறேன் என்று சொன்னால் அந்த சாமியாரை நம்பமாட்டேன், எனக்கு புற்றுநோய் என்று சொன்ன வைத்தியரைத்தான் சந்தேகிப்பேன் என்று எழுத அவருடனான எனது வறட்டுத்தனமான விவாதங்களை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அதை ஒட்டிய கருத்துடன் இந்த பதிவு. மிக மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா. மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் எப்படி மக்களின்  பலவீனத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள் என தான் கண்ட நண்பரின் நிகழ்வு மூலம் விரிவாக சொல்லி இருக்கிறார். முந்தைய காலத்தில் ஹோமியோபதி, மூலிகை மருத்துவம் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது, இப்போது தொடர்கிறது ஆனால் அவற்றின் செயல்பாடுகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி உலகம் எப்போதும் ஒரு சந்தேகப்பார்வை கொண்டு இருக்கிறது என்பது உண்மைதான். இந்த புற்று நோய்க்கு மருந்து எட்டாத கனி போலத்தான். இப்போது மருத்துவ உலகம் கொண்டுள்ள முன்னேற்றம் அம்மா அவர்கள் சொன்னது போல முறையாக பரிசோதனை செய்து கொண்டு வாழ்வதே நல்லது. வாழ்த்துக்கள் அம்மா.

உமாகிருஷ் அவர்களின் பாடல் அலசல். இந்த பாடலை நான் கேட்டது உண்டு. இத்தனை உன்னிப்பாக கேட்டது இல்லை. இத்தனை விசயங்களை இந்த பாடல் சொன்னது என இன்றே இவரது பாடல் அலசல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இதைத்தான் இலக்கியம் படைத்தல் என்பார்கள். அதாவது எழுதப்படும் வரிகள் அந்த மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். அதை இந்த பாடல் வெகு சிறப்பாக செய்து இருக்கிறது என அறிய முடிந்தது. எத்தனை கிராமத்து வார்த்தைகள். இவர் குறிப்பிட்ட வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பரிச்சயம். வெள்ளாமை, பொட்டக்காடு, கூழ், கஞ்சி என வாழ்ந்த வாழ்க்கையில் இருந்தது இவரது எழுத்தை அதிகம் நேசிக்க செய்தது எனலாம். வாழ்த்துக்கள். நாலு வரி நோட்டு போல இந்த தொடர் உருவாகலாம்.

சாய்சித்ரா அவர்களின் நகைச்சுவை என்றுமே என்னை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும். அவரது பெயர் பார்க்காமல் படித்தும் கூட டிஷ் பற்றிய நகைச்சுவை சிரித்துக் கொண்டே இருக்க வைத்தது. மற்ற நகைச்சுவைகள் இம்முறை சுமார் ரகம் தான். விடுகதை இந்த முறை விடுபட்டு போய்  இருக்கிறது. சோபியா தங்கராஜ் அவர்களின் கவிதை ஒரு காதல் தொலைத்த சோகம் தான். நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு இருக்கிறது. சின்ன சின்ன விசயங்கள் என டிவிட்கள் அனைத்துமே வெகு சிறப்பு. எழுதியவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் என நம்பலாம்.

அக்ஷ்ய திரியதை பற்றி ரவிக்குமார் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். வருடா வருடம் வீட்டில் எனக்கு இந்த நாளை ஞாபகபடுத்தி விடுவார்கள். நானும் இவரைப்போல கதை எல்லாம் சொல்லிப் பார்ப்பேன். ஆனால் வாழ்வில் சந்தோசம் என்பது சில நம்பிக்கைகள் உண்டாக்கி தருவது. எனவே எத்தனை சொன்னாலும் மக்களின் மனதில் சில விசயங்களை அகற்ற இயல்வதில்லை. இந்த வருடம் தான் அப்படி என்ன இந்த நாளுக்கு சிறப்பு எனத் தேடி அறிந்து கொண்டேன். அதைப்போல அனைத்து விசயங்களையும் சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள்.

ஒரு முழு பக்கத்தை நளபாகத்திற்கு ஒதுக்கி இருக்கலாம். நாங்கள் வீட்டில் ரொட்டியை வெட்டி பஜ்ஜி செய்வது வழக்கம். ஆனால்  இத்தனை விசயங்களை கொண்டு செய்வது என்பது இன்றுதான் அறிந்தது. சமையல் கலையை அறிந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். பசித்தால் உடனே விருப்பப்பட்ட ஒன்றை செய்து சாப்பிட்டுவிடலாம். நண்பர் ரவி வீட்டிற்கு விருந்தாளியாக சென்றால் நிச்சயம் வீட்டு சமையல் அதுவும் அவரின் சமையல் இருக்கும் என உறுதியாக நம்பலாம். எங்கள் வீட்டிற்கு வந்தால் ஏதேனும் ஒரு கடை பலகாரம் மட்டுமே.

திருப்பூர். இந்த ஊர் பற்றி மிக சிறப்பாக எழுதி இருக்கிறார் மணி. இவர் ஒரு நல்ல சிந்தனையாளர் கூட. எனக்கு கொடிகாத்த குமரன் மூலமே இந்த ஊர் அறிமுகம் என நினைக்கிறேன். பின்னர் பனியன் பற்றிய அறிமுகம். அடுத்து இந்த ஊரில் இருந்து நிறைய டிவிட்டர்கள் உண்டு என்பது தெரிய வந்தது. கோவை, திருப்பூர் போன்ற ஊர்கள் எல்லாம் தொழில் ஊர்கள் போலத்தான். தென்னிந்திய மான்செஸ்டர், குட்டி ஜப்பான் என பட்டப்பெயர்கள். இந்த ஊருக்கு இதுவரை சென்றது இல்லை. இந்த ஊரை சென்று பார்க்கும் ஆர்வத்தை உண்டுபண்ணி இருக்கிறது எழுத்து. வாழ்த்துக்கள்.

ரீவிஷாலின் ஓவியங்கள் வெகு அருமை. சிறுவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில்  நல்லதொரு தொடக்கத்தை நமது திண்ணை உருவாக்கி இருக்கிறது. சோபியா துரைராஜ் அவர்களின் கவிதை மற்றுமொரு காதல் வலி சொல்லும் கவிதை. நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு மழையில் ஆரம்பித்து மழையில் முடிகிறது.

மழலையர் மன்றம் புகைப்படங்கள் மிகவும் அருமை. அர்விந்த் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. மேடையில் நேரடி நகைச்சுவை சற்று கடினமான ஒன்று. பேசினால் அறுவை ஜோக் என சொல்லும் சமூகத்தில் ஒவ்வொரு வரிக்கும் சிரிப்பு என்பது எத்தனை கஷ்டம் என பல ஆங்கில நிகழ்வுகள் கண்டு எண்ணியது உண்டு.

புத்தகங்கள் குறித்தும் ஒரு எழுத்தாளனின் நிலையை குறித்தும் முத்தலிப் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். பாராட்டுக்குரிய விசயங்கள். புத்தகங்கள் பல வீணர்களை திருத்தி இருக்கிறது என்றே புத்தகத்தின் பெருமையை சொல்லும்போதே சாமி அறையை விட ஒரு நூலக அறையே வீட்டினை அலங்கரிக்க இயலும்.

பாடல் கேட்பது குறித்து ஹேமாமாலினி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். பாடல் பாடி பிறர் கேட்கும் வண்ணம் வைப்பது. அதாவது எல்லோருக்கும் பாடும் திறமை உண்டு. அதை உற்சாகப்படுத்தும் வண்ணம் இது அமையும்.

வாலி குறித்த ஆசிரியர் பார்வை வெகு சிறப்பு. ''ஒரே ஒரு விமர்சனம் மட்டும் தெளிவா வரணும்'' என தனது பணி குறித்து வடிவமைப்பாளர் அல்  அமீன் அவர்கள் கூறி இருப்பதால் அதை தனி பதிவாக வைக்கப் போகிறேன். சற்று பொறுத்துகொள்ளுங்கள் நண்பரே.

நமது திண்ணை நல்ல நல்ல விசயங்களுடன் வெகுசிறப்பாக இருக்கிறது ஆசிரியர் அவர்களே. உங்கள் நமது திண்ணை அனைவரது வீட்டிலும் வெகு விரைவில் கட்டப்பட வேண்டும் எனும் ஆசையை இங்கே எழுதி வைக்கிறேன்.

(தொடரும்)


Wednesday, 29 April 2015

நுனிப்புல் பாகம் 3 - 1

1. தாவரங்களே போற்றி

இருளும் ஒளியும் சேருமிடத்து
இருளும் ஒளியும் இருப்பது இல்லை
இருள் தனியா, ஒளி தனியா
உன்னைத் தவிர எவரும் அறிவது இல்லை


வாசனுக்கு நெகாதம் செடி எல்லாம் வாடிப் போனது பெரும் வருத்தம் தந்து கொண்டு இருந்தது. நிலத்திற்கு அடியில் காய் தரும் கனி தரும் தாவரங்கள் ஒரு முறைதான் வளரும். அவைகளைப் பிடுங்கி எறிந்ததும் விலங்குகளுக்கு உணவு ஆகும், நிலத்திற்கு உரம் ஆகும். நிலத்திற்கு வெளியில் காய்க்கும் சில தாவரங்களை வேருடன் பிடுங்கிட அதன் ஆயுட்காலம் அத்துடன் முடியும். ஆனால் கனி மட்டும் பறித்த பின்னர் இப்படி வதங்கிப் போகும் தாவரங்கள் ஏதேனும் உண்டா என வாசனுக்கு புரியவில்லை.

ரோகிணியிடம் அல்லது பூங்கோதையிடம் கேட்டுப் பார்க்கலாம் என்றே நினைத்தான். ஒருவேளை விநாயகம் ஐயாவுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறதா என அவரை நோக்கிச் சென்றான்.

''என்ன வாசன், ஒரு மாதிரியாக இருக்க''

''எல்லா செடிகளும் வாடி வதந்கிருச்சியா, இனிமே அவை கனி தராது, பிடுங்கிற வேண்டியதுதான்''

''இதைப் பத்தி அந்த நோட்டில் எதுவும் எழுதலையே, நம்மகிட்ட கொஞ்சம் விதைகள் இருக்குதானே, அதை வைச்சி மீண்டும் விதைக்கலாம். ஆனால் இதனோட மருத்தவ பலன் என்னன்னு  எனக்குத் தெரியலை, அந்த கனியை சாப்பிட்டுப் பார்த்தாலாவது சொல்லலாம், எப்படி விற்பனை பண்றது யார் வாங்குவாங்க புரியலையே வாசன்''

''ஐயா இப்போதைக்கு இந்த கனி எதையும் நாம விற்க வேணாம், சாப்பிட வேணாம். அதில் இருக்கிற விதைகளை நாம விதைக்க இந்த நிலத்தை பண்படுத்தி ஆகணும் அதுக்கு எப்படியும் ஒரு இரண்டு வாரங்கள் ஆகும்''

''அப்படின்னா இந்த செடிகளை பிடுங்கிரலாம் வாசன்''

''இதை எல்லாம் காய வைச்சி நம்ம பூங்கோதை இல்ல ரோகிணிகிட்ட கொடுத்து ஆராய்ச்சி பண்ண சொல்லலாம்''

''பூங்கோதை இப்பதான் குழந்தைக்கு தாய் ஆகி இருக்கா, நீ ரோகிணிகிட்ட  கேட்டுப் பாரு வாசன்''

''நீங்க சொன்ன மாதிரி இந்த செடி மனசை நெகிழ வைக்கும் செடியா இருக்குமோ?''

''இருக்கும் வாசன்''

''ஆனா, இந்த செடியே வாடிப் போகுதே இது எப்படி மருத்தவ குணம் கொண்டதாக இருக்கும்''

''இன்னும் உனக்கு சந்தேகம் போகலையா?''

''ஐயா கேள்வி கேட்கிறது சந்தேகத்தின் அடிப்படையில் இல்லை, தெரிஞ்சிக்கணும் போல இருக்கு''

''முத்துராசுவை கூப்பிட்டு எல்லா செடிகளையும் பிடுங்கி காயப்போட்டு பத்திரமா எடுத்து வை, அப்படியே நிலத்தை உழுது போட்டுரு, எரு  எல்லாம் அடிக்கணும்''

''எப்போ ஐயா சாத்திரம்பட்டி போகலாம், எனக்கு அங்கே போகணும் போல இருக்கு''

''இல்லை வாசன் அதுபத்தி பேச வேணாம்''

இந்த தாவரங்கள் நைட்ரேட், பாஸ்பேட், பொட்டாசியம் போன்ற முக்கிய தாது பொருட்கள் இல்லாமல் ஒழுங்காக வளராது. மேலும் இந்த இலைகளில் இருக்கும் குளோரோபில் மெக்னீசியம் கொண்டு இருக்கும். இப்படி தாது பொருட்கள் உட்கொண்டு வளரத் தொடங்கியதுதான் இந்த தாவரங்கள்.

வெறும் பாறைகளாக இருந்தது அந்த பாறைகளில் இருக்கும் தாது பொருட்கள் மண்ணுக்குள் போகத் தொடங்கின. நைட்ரஜன் ஆகாய வெளியில் அதிகம் இருந்த போது  மின்னல்கள் அந்த நைட்ரஜன்களை  நைட்ரேட்களாக மாற்றின. இந்த நைட்ரேட்கள் பூமிக்குள் புதையுண்டு இருந்தன.

பாக்டீரியாக்கள் இந்த பூமியில் உருவான காலத்தில் அவைகளும் இந்த நைட்ரஜனை நைட்ரேட்களாக மாற்றும் வல்லமை கொண்டு இருந்தன. அது மட்டுமின்றி இந்த நைட்ரேட்களை நைட்ரஜனாக மாற்றும் வல்லமை சில பாக்டீரியாக்களுக்கு இருந்தது.

தாவரங்கள் நேரடி நைட்ரஜன் உட்கொள்வதில்லை. மாறாக கரியமில வாயு உட்கொண்டு உணவு தயாரிக்கும். மனிதர்கள் ஆக்சிஜனை உட்கொண்டு ஆற்றல் பெற்றார்கள். இந்த நைட்ரஜன் ஒரு முக்கிய தனிமம். இவை நமது உடலில் காணப்படும் மரபணுக்களில் வியாபித்து இருக்கின்றன. நீர் வளம் கொண்டு இருந்தாலும் கனிம வளம் இல்லாத நிலம் வறண்ட நிலம்தான்.

''முத்துராசு அண்ணே, அந்த செடி எல்லாம் பிடுங்கிரலாமா?''

''இருக்கறதே அம்பதோ அறுவதோ, இதுக்கு ரெண்டு பேரா?''

''துணைக்கு இருந்தா நல்லா இருக்கும்னு பார்த்தேண்ணே''

''ஆமா வாசா, நீயும் ஐயாவும் இந்த செடியை  வேரோட பிடுங்கி கொண்டு வரப்ப வாடாத செடி பழத்தை பறிச்சதும் எப்படி வாடிருச்சி, அதுவும் சில பழங்களில் விதை கூட இல்லாம இருந்துச்சே''

''யாருக்குண்ணே தெரியும்''

''நீங்க மலையில் இந்த செடியை பிடுங்கறப்ப, வேற வாடின செடி எதுவும் இருந்துச்சி?''

''அப்படி எதுவும் கண்ணுக்குத் தெரியலைண்ணே''

''கத்தரிக்காய் கூட சில மாசங்கள் வரும், இது ஒரு வருஷம் கழிச்சி ஒரே வாட்டி பழத்தை கொடுத்துட்டு தலையைப் போட்டுருச்சி, என்ன மகிமை செடியோ''

''வாங்கண்ணே வேலையை முடிச்சிரலாம்''

''இரு வாசா, இந்த பாத்திக்கு தண்ணி பாச்சிட்டு வந்துருறேன், நீ மேற்கொண்டு படிக்கலாம்ல, என்னமோ அக்ரி படிப்பு இருக்காமே''

''அது யாருண்ணே  சொன்னா''

''நம்ம வீட்டு பிள்ளைக படிக்குதல''

''பரவாயில்லைண்ணே படிப்பு விபரம் தெரிஞ்சி வைச்சிருக்கீங்க. நெத்து  விடுற செடி எல்லாம் ஒரு பொழப்புதான், அண்ணே இதுல சில செடிகளை தண்டுவ வெட்டி வைச்சி பார்ப்பமோ''

''உன் இஷ்டம் வாசா, நீயும் ஐயா பேச்சு கேட்டு இந்த பகுமான செடியை நட்டு வைச்ச, உரம் தண்ணீ பாய்ச்சினதுதான் மிச்சம், ஒரு காசும் இன்னும் பாக்கலை''

''கொஞ்சம் காலம் ஆகட்டும்ணே''

வாசனும் முத்துராசுவும் எல்லா செடிகளையும் நிலத்தில் இருந்து பிடுங்கி பத்திரப்படுத்தினார்கள். செடி அத்தனை மிருதுவாக இருந்தது. வேர்கள் உதிர்ந்து போயிருந்தன.

நிலத்தில் வேர் மூலம் உறிஞ்சி அதை இலைகளுக்கு கடத்திய பின்னர் இலைகள் கரியமில வாயுவுடன் கலந்து குளுக்கோஸ் எனும் கார்போஹைட்ரெட் உருவாக்கும். இந்த குளுக்கோஸ் இந்த தாவரங்களில் பல்வேறு விதமாக மாற்றம் கொள்ளும். அவை செல்லுலோசாக மாறி செடியின் செல்களில் சுவர்களாக தேங்கும். ஸ்டார்ச்சாக மாறி சேமித்து வைக்கப்படும். கனிகளில் இவை மேலும் இனிப்பு தன்மை கொண்டதாக சுக்ரோஸ் வடிவம் எடுக்கும். இதே குளுக்கோஸ் எண்ணெய் வடிவம் விதைகளில் எடுக்கும். மிக முக்கியமாக இந்த குளுக்கோஸ் நைட்ரேட் உடன் இணைந்து அமினோமிலங்களாக உருமாறி பின்னர் புரதமாக மாறும்.

தன்னிறைவு கொண்ட தாவரங்கள் இந்த உலகில் போற்றப்பட வேண்டியவைகள்.

'நெகாதம் செடி' வாசன் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

(தொடரும்)