Wednesday, 29 April 2015

நுனிப்புல் பாகம் 3 - 1

1. தாவரங்களே போற்றி

இருளும் ஒளியும் சேருமிடத்து
இருளும் ஒளியும் இருப்பது இல்லை
இருள் தனியா, ஒளி தனியா
உன்னைத் தவிர எவரும் அறிவது இல்லை


வாசனுக்கு நெகாதம் செடி எல்லாம் வாடிப் போனது பெரும் வருத்தம் தந்து கொண்டு இருந்தது. நிலத்திற்கு அடியில் காய் தரும் கனி தரும் தாவரங்கள் ஒரு முறைதான் வளரும். அவைகளைப் பிடுங்கி எறிந்ததும் விலங்குகளுக்கு உணவு ஆகும், நிலத்திற்கு உரம் ஆகும். நிலத்திற்கு வெளியில் காய்க்கும் சில தாவரங்களை வேருடன் பிடுங்கிட அதன் ஆயுட்காலம் அத்துடன் முடியும். ஆனால் கனி மட்டும் பறித்த பின்னர் இப்படி வதங்கிப் போகும் தாவரங்கள் ஏதேனும் உண்டா என வாசனுக்கு புரியவில்லை.

ரோகிணியிடம் அல்லது பூங்கோதையிடம் கேட்டுப் பார்க்கலாம் என்றே நினைத்தான். ஒருவேளை விநாயகம் ஐயாவுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறதா என அவரை நோக்கிச் சென்றான்.

''என்ன வாசன், ஒரு மாதிரியாக இருக்க''

''எல்லா செடிகளும் வாடி வதந்கிருச்சியா, இனிமே அவை கனி தராது, பிடுங்கிற வேண்டியதுதான்''

''இதைப் பத்தி அந்த நோட்டில் எதுவும் எழுதலையே, நம்மகிட்ட கொஞ்சம் விதைகள் இருக்குதானே, அதை வைச்சி மீண்டும் விதைக்கலாம். ஆனால் இதனோட மருத்தவ பலன் என்னன்னு  எனக்குத் தெரியலை, அந்த கனியை சாப்பிட்டுப் பார்த்தாலாவது சொல்லலாம், எப்படி விற்பனை பண்றது யார் வாங்குவாங்க புரியலையே வாசன்''

''ஐயா இப்போதைக்கு இந்த கனி எதையும் நாம விற்க வேணாம், சாப்பிட வேணாம். அதில் இருக்கிற விதைகளை நாம விதைக்க இந்த நிலத்தை பண்படுத்தி ஆகணும் அதுக்கு எப்படியும் ஒரு இரண்டு வாரங்கள் ஆகும்''

''அப்படின்னா இந்த செடிகளை பிடுங்கிரலாம் வாசன்''

''இதை எல்லாம் காய வைச்சி நம்ம பூங்கோதை இல்ல ரோகிணிகிட்ட கொடுத்து ஆராய்ச்சி பண்ண சொல்லலாம்''

''பூங்கோதை இப்பதான் குழந்தைக்கு தாய் ஆகி இருக்கா, நீ ரோகிணிகிட்ட  கேட்டுப் பாரு வாசன்''

''நீங்க சொன்ன மாதிரி இந்த செடி மனசை நெகிழ வைக்கும் செடியா இருக்குமோ?''

''இருக்கும் வாசன்''

''ஆனா, இந்த செடியே வாடிப் போகுதே இது எப்படி மருத்தவ குணம் கொண்டதாக இருக்கும்''

''இன்னும் உனக்கு சந்தேகம் போகலையா?''

''ஐயா கேள்வி கேட்கிறது சந்தேகத்தின் அடிப்படையில் இல்லை, தெரிஞ்சிக்கணும் போல இருக்கு''

''முத்துராசுவை கூப்பிட்டு எல்லா செடிகளையும் பிடுங்கி காயப்போட்டு பத்திரமா எடுத்து வை, அப்படியே நிலத்தை உழுது போட்டுரு, எரு  எல்லாம் அடிக்கணும்''

''எப்போ ஐயா சாத்திரம்பட்டி போகலாம், எனக்கு அங்கே போகணும் போல இருக்கு''

''இல்லை வாசன் அதுபத்தி பேச வேணாம்''

இந்த தாவரங்கள் நைட்ரேட், பாஸ்பேட், பொட்டாசியம் போன்ற முக்கிய தாது பொருட்கள் இல்லாமல் ஒழுங்காக வளராது. மேலும் இந்த இலைகளில் இருக்கும் குளோரோபில் மெக்னீசியம் கொண்டு இருக்கும். இப்படி தாது பொருட்கள் உட்கொண்டு வளரத் தொடங்கியதுதான் இந்த தாவரங்கள்.

வெறும் பாறைகளாக இருந்தது அந்த பாறைகளில் இருக்கும் தாது பொருட்கள் மண்ணுக்குள் போகத் தொடங்கின. நைட்ரஜன் ஆகாய வெளியில் அதிகம் இருந்த போது  மின்னல்கள் அந்த நைட்ரஜன்களை  நைட்ரேட்களாக மாற்றின. இந்த நைட்ரேட்கள் பூமிக்குள் புதையுண்டு இருந்தன.

பாக்டீரியாக்கள் இந்த பூமியில் உருவான காலத்தில் அவைகளும் இந்த நைட்ரஜனை நைட்ரேட்களாக மாற்றும் வல்லமை கொண்டு இருந்தன. அது மட்டுமின்றி இந்த நைட்ரேட்களை நைட்ரஜனாக மாற்றும் வல்லமை சில பாக்டீரியாக்களுக்கு இருந்தது.

தாவரங்கள் நேரடி நைட்ரஜன் உட்கொள்வதில்லை. மாறாக கரியமில வாயு உட்கொண்டு உணவு தயாரிக்கும். மனிதர்கள் ஆக்சிஜனை உட்கொண்டு ஆற்றல் பெற்றார்கள். இந்த நைட்ரஜன் ஒரு முக்கிய தனிமம். இவை நமது உடலில் காணப்படும் மரபணுக்களில் வியாபித்து இருக்கின்றன. நீர் வளம் கொண்டு இருந்தாலும் கனிம வளம் இல்லாத நிலம் வறண்ட நிலம்தான்.

''முத்துராசு அண்ணே, அந்த செடி எல்லாம் பிடுங்கிரலாமா?''

''இருக்கறதே அம்பதோ அறுவதோ, இதுக்கு ரெண்டு பேரா?''

''துணைக்கு இருந்தா நல்லா இருக்கும்னு பார்த்தேண்ணே''

''ஆமா வாசா, நீயும் ஐயாவும் இந்த செடியை  வேரோட பிடுங்கி கொண்டு வரப்ப வாடாத செடி பழத்தை பறிச்சதும் எப்படி வாடிருச்சி, அதுவும் சில பழங்களில் விதை கூட இல்லாம இருந்துச்சே''

''யாருக்குண்ணே தெரியும்''

''நீங்க மலையில் இந்த செடியை பிடுங்கறப்ப, வேற வாடின செடி எதுவும் இருந்துச்சி?''

''அப்படி எதுவும் கண்ணுக்குத் தெரியலைண்ணே''

''கத்தரிக்காய் கூட சில மாசங்கள் வரும், இது ஒரு வருஷம் கழிச்சி ஒரே வாட்டி பழத்தை கொடுத்துட்டு தலையைப் போட்டுருச்சி, என்ன மகிமை செடியோ''

''வாங்கண்ணே வேலையை முடிச்சிரலாம்''

''இரு வாசா, இந்த பாத்திக்கு தண்ணி பாச்சிட்டு வந்துருறேன், நீ மேற்கொண்டு படிக்கலாம்ல, என்னமோ அக்ரி படிப்பு இருக்காமே''

''அது யாருண்ணே  சொன்னா''

''நம்ம வீட்டு பிள்ளைக படிக்குதல''

''பரவாயில்லைண்ணே படிப்பு விபரம் தெரிஞ்சி வைச்சிருக்கீங்க. நெத்து  விடுற செடி எல்லாம் ஒரு பொழப்புதான், அண்ணே இதுல சில செடிகளை தண்டுவ வெட்டி வைச்சி பார்ப்பமோ''

''உன் இஷ்டம் வாசா, நீயும் ஐயா பேச்சு கேட்டு இந்த பகுமான செடியை நட்டு வைச்ச, உரம் தண்ணீ பாய்ச்சினதுதான் மிச்சம், ஒரு காசும் இன்னும் பாக்கலை''

''கொஞ்சம் காலம் ஆகட்டும்ணே''

வாசனும் முத்துராசுவும் எல்லா செடிகளையும் நிலத்தில் இருந்து பிடுங்கி பத்திரப்படுத்தினார்கள். செடி அத்தனை மிருதுவாக இருந்தது. வேர்கள் உதிர்ந்து போயிருந்தன.

நிலத்தில் வேர் மூலம் உறிஞ்சி அதை இலைகளுக்கு கடத்திய பின்னர் இலைகள் கரியமில வாயுவுடன் கலந்து குளுக்கோஸ் எனும் கார்போஹைட்ரெட் உருவாக்கும். இந்த குளுக்கோஸ் இந்த தாவரங்களில் பல்வேறு விதமாக மாற்றம் கொள்ளும். அவை செல்லுலோசாக மாறி செடியின் செல்களில் சுவர்களாக தேங்கும். ஸ்டார்ச்சாக மாறி சேமித்து வைக்கப்படும். கனிகளில் இவை மேலும் இனிப்பு தன்மை கொண்டதாக சுக்ரோஸ் வடிவம் எடுக்கும். இதே குளுக்கோஸ் எண்ணெய் வடிவம் விதைகளில் எடுக்கும். மிக முக்கியமாக இந்த குளுக்கோஸ் நைட்ரேட் உடன் இணைந்து அமினோமிலங்களாக உருமாறி பின்னர் புரதமாக மாறும்.

தன்னிறைவு கொண்ட தாவரங்கள் இந்த உலகில் போற்றப்பட வேண்டியவைகள்.

'நெகாதம் செடி' வாசன் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

(தொடரும்)



Saturday, 25 April 2015

இறைவனும் இறை உணர்வும் - 5 (From Man to God - Mrs Sushima Shekar)

பகுதி - 4    From Man to God My Father's Spiritual Journey - Mrs Sushima Shekar

நாம் உலகில் எவர் எவருடன் தொடர்பு கொள்கிறோம் என்பது நமது செயல்பாடுகள், நடவடிக்கைகள் பொருத்து அமைகிறது. நான் இணைய உலகில் எழுத வராமல் இருந்து இருந்தால் பலருடைய அறிமுகம் எனக்கு கிடைத்து இருக்காது. எனது உலகம் மிகவும் சிறியது. எனக்கு இறைவன் பிடிக்கும். அதற்காக இறை மறுப்பு கொள்கையாளர்களை எல்லாம் நான் வெறுப்பது இல்லை. அவரவருக்கு அவரவர் அறிவு.

இந்த தொடரை நான் எழுத ஆரம்பித்து சில ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் அதிகம் புத்தகங்கள் வாசிக்கும் வழக்கத்தை இன்னும் மீண்டும் தொடரவில்லை. திடீரென ஒருமுறை புத்தகம் பற்றி சுசீமா அம்மா அவர்கள் நண்பர் ரவியுடன் பேசுகையில் என்ன புத்தகம் எங்கு கிடைக்கும் என்றேன். அந்த புத்தகம் அன்புக்காக வழங்கப்படுவது, விற்பனைக்கு அல்ல எப்படி உங்களிடம் சேர்ப்பது என்றார். அப்போது அர்ச்சகர் ஒருவர் ஊரில் இருந்ததால் அவரிடம் தரச்சொல்லி இருந்தேன். அவரும் புத்தகத்தை என்னிடம் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தார்.

இறைவன் உணர்வு என்பது உண்மைக்கு நெருக்கமானது அதை நீங்கள் உணரும் வரை இறைவன் பற்றிய கேள்விக்குறி இருக்கும் என்றே பலர் சொல்லி இருக்கிறார்கள். எனக்கு இறைவன் உணர்வு இதுவரை வந்தது இல்லை என மிகவும் தெளிவுபடுத்திவிட்டேன், ஆனால் அடுத்தவர்கள் கொண்டுள்ள இறைவன் உணர்வு குறித்து நான் ஒருபோதும் கேலி செய்வது இல்லை, மாறாக எனக்கு இன்னும் அந்த வாய்ப்பு இல்லை என்றே கருதுவது உண்டு. இந்த நூல் ஒரு தந்தையின் இறைவன் உணர்வு பற்றி அதுவும் எனக்கு மிகவும் நெருக்கமான ஓம் நமோ நாராயணா என்று சொல்லிச் சென்றது எனக்குள் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது.

சுசீமா அம்மா அவர்கள் சொன்னதுபோல எவர் ஒன்றை உணர இயலுமோ அவரால் மட்டுமே மற்றவரின் உணர்வுகளை உணர இயலும். பிறரின் நலனுக்கு பாடுபடும் எந்த ஒரு மனிதரும் போற்றப்பட வேண்டியவர் என்பதில் மறு கருத்து இல்லை. தனது வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்த சுசீமா அம்மா அவர்களின் தந்தை எப்படி எல்லாம் பிறருக்காக வேண்டினார் அவருள் உணர்ந்த இறைவன் எப்படி என மிகவும் அழகாக விளக்கி இருக்கிறார்கள். இந்த நூலைப் படிக்கும்போது எனது தந்தை நினைவுக்கு வந்தார்.

எங்கள் வீட்டில் எவருக்கேனும் ஏதேனும் நோய் வந்தால் கூட சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் திருநீறு வைத்துவிடுவார். நான் திருநீறு வைக்காமல் வீட்டைவிட்டு எங்கும் செல்வதில்லை. பின்னர் குங்குமம் வைக்க ஆரம்பித்து இருந்தேன். தினமும் இரவில் சாமி கும்பிடும் வழக்கம் எங்கள் வீட்டில் உண்டு. என் தந்தை சமீபத்தில் கீழே விழுந்து நடக்க முடியாமல் போனபோது அவரை பார்க்க சென்று இருந்தேன். எனக்கு அழுகை வந்ததை நிறுத்த இயலவில்லை. ஆனால் என் தந்தைக்கோ என்னைப் பார்த்ததில் சந்தோசம். நடந்திருவேன்  என நம்பிக்கை சொன்னவர் இரண்டே வாரங்களில் நடந்தார். எனக்கோ இன்னும் ஆச்சரியம். கடவுள் பற்றி அதிக நம்பிக்கை உள்ளவர் என்றாலும் ஏமாற்றுத்தனம் என் தந்தைக்கு கொஞ்சம் கூடப் பிடிக்காது. இப்படி வாழ்வில் எப்போதும் எவர் உதவி இன்றி வாழப் பழகிய என் தந்தை சில வாரங்கள் பிறரை நம்ப வேண்டி இருக்கிறதே என மனதளவில் குற்ற உணர்வு கொண்டார் என்றே அறிந்தேன். வயது 86. தனது குடும்பமே முன்னுரிமை என்பதில் என் தந்தை முழு உறுதியாக இருந்தார்.

இந்த நூல் படிக்கும்போது ஒரு பார்கின்சன் நோய் மூலம் பாதிக்கப்பட்ட சுசீமா அம்மாவின் தந்தையின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என என்னால் எண்ணிப்பார்க்க இயலவில்லை. ஆனால் அவரது மன உறுதி பிறருக்கு வேண்டும் அந்த குணம் வியப்பில் ஆழ்த்தியது. அவரது உண்மையான உழைப்பு தன்னை ஏமாற்றியவர்களை மன்னிக்கும் மனப்பாங்கு என அவரது தெய்வீகத் தன்மையை நூல் முழுவதும் அறிந்து கொள்ளலாம். அவரது இறுதி மரண நிகழ்வு ஒரு நிமிடம் என்னை உலுக்கியது. எனது அன்னை இறந்தபோது அவரது பிள்ளைகள் நாங்கள் எவருமே அருகில் இல்லை. ஆனால்  இறக்கும் நாள் அன்று எல்லோர் கனவிலும் என் அன்னை வந்தார் என்றே எல்லோரும் சொன்னார்கள். எனக்கும் ஆச்சரியம். என் அம்மா இறந்துவிட்டார்கள் என அதிகாலை நான்கு மணிக்கு தூக்கத்தில் நினைக்கிறேன். ஆறு மணிக்கு செய்தி வந்துவிட்டது. என் அம்மாவின் மரணம் குறித்து எண்ணும் போதெல்லாம் எனக்கு அரங்கனின் மீது ஒரு கேள்வி எழும். அது இருக்கட்டும்.

இன்றைய காலத்தில் இந்த இறைவன், இறைவன் உணர்வு எல்லாம் ஒரு கேலிப் பொருளாகவே ஒரு பிரிவினரால் பார்க்கப்படுகிறது. அதற்கான காரணம் ஏமாற்றுத்தனம். சில ஏமாற்றுக்காரர்களினால் பல உண்மையானவர்களின் மனம் புண்படத்தான் செய்கிறது. எனது சிந்தனைகள் பலரை புண்படுத்தி இருக்கிறது. நான் விமர்சிக்காத பகவத் கீதையா? வள்ளலாரா? மதங்களா? இறைத்தூதர்களா? மகான்களா? அது என் மற்றொரு சிந்தனையின் கோணம். விமர்சிப்பது தவறு என்று சொல்லவில்லை, ஆனால் எது எத்தகைய விமர்சனம் எனும் பக்குவம் அவசியம் தேவைப்படுகிறது. இறைவன் சொன்னார் என ஒரு மனிதன் சொல்லும்போது எனக்கு கேள்வி எழுகிறது. இறைவனின் அவதாரங்கள் என சொல்லும்போது எனக்கு கேள்வி எழுகிறது. அந்த கேள்விகளை எல்லாம் என்னால் எளிதாக புறந்தள்ள முடிவதில்லை. அவை கேள்விகள், அதற்கான விடைகளை  நானே உருவாக்கி அவையெல்லாம் பித்தலாட்டங்கள் என எப்போது நான் முடிவு செய்கிறேனோ அப்போதே எனது அறியாமை அங்கு வெளிப்படுகிறது. ஏனெனில் அடுத்தவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை நான் உணராத காரணத்தின் மூலம்  புறந்தள்ளுவது என்றான பின்னர் அங்கே உண்மை எனக்கு தெரியாமல் போய்விடுகிறது.

இந்த நூலினைப் படிப்பவர்கள் அதே இறைவன் உணர்வில் பயணிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால் படித்ததும் இந்த இறைவனின் உணர்வுக்குத் தொடர்பு உடையவர்கள் நிச்சயம் உணர்வார்கள். எனக்குள் அந்த சலனத்தை இந்த நூல் ஏற்படுத்திச்  சென்றது என்னவோ உண்மை.

இப்போது கூட ஓம் நமோ நாராயணா எனும் மந்திரம் ஒலிக்க  பூஜை அறையில் அமர்ந்துதான் இதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

இறை உணர்வு அனைவருக்கும் வாய்ப்பது இல்லை. தெய்வீகம் என்பதை மத சடங்குகளுடன் இணைத்து விடாதீர்கள்.

வெகு சிறப்பாக எழுதப்பட்ட ஒரு அருமையான புத்தகம்தனை படித்தபோது படித்து முடித்த பின்னர் சுசீமா அம்மாவின் தந்தையுடன் பயணித்த உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. எனது அன்புகளும் நன்றிகளும் அம்மா.

புத்தகம் வேண்டுவோர் twitter-ல்  @amas32 அம்மாவிடம் கேளுங்கள்.

Friday, 3 April 2015

நமது திண்ணை ஏப்ரல் மாத இணைய சிற்றிதழ்

நமது திண்ணை  (இணைப்பு) மூன்றாவது மாத இணைய சிற்றிதழ் இன்று வெளியிடப்பட்டது. இது பாராட்டுக்குரிய விஷயம். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகளை ஆசிரியர் மனமுவந்து தெரிவித்து இருக்கிறார். ஒரு இணைய சிற்றிதழ் மூலம்  சிறப்பான படைப்புகளை கொண்டு வருவது அந்த இணைய சிற்றிதழ் ஆசிரியர் மற்றும் குழுவுக்கு மட்டுமல்ல அதில் எழுதுபவர்களுக்கும் ஒரு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர் தனது பார்வையில் இதை  மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார்.  மேலும் தமிழ் எழுதுபவர்களை இது உற்சாகம் கொள்ளச் செய்யும். தமிழ் கீச்சர்கள் சந்திக்க இருக்கும் விழா ஒன்று குறித்த அறிவிப்பு இதில் இருப்பது ஆச்சரியம் அடையச் செய்தது. உண்மையிலேயே இந்த இணைய சிற்றிதழ் தமிழ் எழுத்துக்காக பெரும் பங்காற்ற இருக்கிறது என்பதை உறுதியாக நம்பலாம். ஆசிரியருக்கு பாராட்டுகள்.

தமிழ் கீச்சர்கள் பற்றி நான் விரிவாக எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. என்னால் புரிய முடியாத ஓர் உலகம் அங்கு உண்டு. அந்த உலகத்தை முற்றிலும் புறக்கணிக்கிறேன். ஆனால் இந்த இணைய சிற்றிதழ் காட்டும் உலகம் எனக்குப் பிடித்த ஒன்று. எப்போதும் அதில் மட்டுமே பயணிக்க விரும்புகிறேன்.  இந்த சிற்றிதழின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. வெயில் காலத்தை குறிப்பிடும் வண்ணம் குளிர்ச்சியான பழ வகை, நொங்கு போன்றவைகளை கொண்டு மிகவும் அழகாக சிந்தித்து இருக்கிறார்கள். சிற்றிதழுக்கென உருவாக்கப்பட்ட வடிவம் சிறப்பு. அருமையாக வடிவமைப்பு செய்து வரும் நண்பர் அல் அமீன் அவர்களுக்கு பாராட்டுகள். எப்படி எல்லாம் இந்த இணைய சிற்றிதழ் உருவாகிறது அதற்கான பின்னணி என்ன என்பதை அறியும் போது  பிரமிப்புதான்.

முதலில் நாம் காண இருப்பது சுஷீமாசேகர் அம்மாவின் 'குகன்' எனக்கு இந்த குகன் பற்றி முன்னரே அறிந்து இருந்தாலும் பல புதிய விசயங்கள் தெரிந்து கொண்டேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும் அதற்கு மிக்க நன்றி அம்மா. மொத்தமாக ஒரு கதை படிப்பது என்பது வேறு. அதில் ஒரு கதாபாத்திரம் குறித்து படிப்பது வேறு. ஒரு படகோட்டிக்கு குகப் பெருமாள் எனும் பட்டமெல்லாம் அன்பினால் மட்டுமே சாத்தியம் என்பதை திருக்குறள் மூலம் ஆரம்பித்து வால்மீகி சொல்லாத விசயங்களை கம்பர் சொன்னார் என முடித்தபோது அருமை என சொல்லாமல் எவரும் இருக்கமாட்டார். குகன் பற்றிய வர்ணனை கம்பர் பார்வையில் இருந்து அம்மாவின் பார்வை அருமை. நீங்கள் என்றுமே பார்க்காத ஒருவர் மீது பிறர் சொல்வதைக் கேட்டு அன்பு கொள்வீர்களேயானால் நீங்களும் குகப் பெருமாள் தான். அடடா! இன்றுதான் திருமங்கையாழ்வார் குறித்து ஒரு பதிவு எழுதினேன். அதே திருமங்கையாழ்வார் குறிப்பிட்டு ஒரு பாசுரம். என்ன தவம் செய்தனை! இந்த உலகம் கொஞ்சம் விசித்திரமானது, நாம் புரிந்து கொண்டால் விசாலமானது. குகனின் பண்பு நலன்கள், பரதனிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதெலாம் படிக்க படிக்க நமக்கே அப்படி இருக்க ஓர் ஆசை வரும். பாராட்டுகள். இன்னும் பல அதிசய மனிதர்களை இந்த சிற்றிதழ் காட்டும் என்றே நம்புகிறேன்.

அடுத்து விருதுநகர். எனது தந்தை நடந்து சென்று படித்த ஊர். எனது கைராசி மருத்துவர் டாக்டர் வெள்ளைச்சாமி இருக்கும் ஊர். சிறுவயதில் கை முறிந்து லைசாண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊர். என் அம்மா, மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்த ஊர். திரைப்படம் பார்த்துவிட்டு நாங்கள் தொலைந்து போனதாக பிறரை எண்ண வைத்த ஊர். இப்படிப்பட்ட எங்கள் பக்கத்து ஊரை செல்வி. நந்தினி எங்கள் ஊர் என எழுதி இருக்கும் விதம் என்னை அந்த ஊருக்கே மீண்டும் அழைத்துச்  சென்றது. எத்தனை நினைவுகளை இந்த பதிவு கீறிவிட்டது என எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அத்தனை அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறார்.

 எனது முதல் நாவலில் இந்த மாரியம்மன் கோவிலை மனதில் வைத்தே எழுதினேன். என் பேரு எப்படி இந்த சாமிக்கு தெரியும் என்பது கதைநாயகனின் கேள்வி. கதைநாயகி சொல்வாள், அணுவுக்கும் அணு கூட அந்த சாமிக்கு தெரியும் என்பது போல ஒரு காட்சி. அப்படி பட்ட அந்த கோவில் சிறப்பு என அந்த பங்குனி மாதம் விழாவை குறிப்பிட்டது நாங்கள் மாட்டுவண்டியில், ட்ராக்டரில் சென்ற காலங்களை நினைவில் கொண்டு வந்துவிட்டது. இதை நாங்கள் அஞ்சாம் திருநாள் என்றே அழைப்போம். நான் சிறுவயதில் சென்றதால் அவர் குறிப்பிட்டது போல காதல் மங்கையர்களை கண்டது இல்லை. அப்போது எல்லோரும் அக்காக்களாக கண்ணுக்குத் தெரிந்து இருப்பார்கள். பொருட்காட்சி என்றால் மதுரை தான் என்றாலும் இங்கேயும் இந்த விழாவினை முன்னிட்டு விருதுநகர் ஜொலிக்கும் என்பது கண்ணில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.

கல்வி. இவர் விருதுநகர் பற்றி எழுதி இருக்கிறார் என்று சொன்னபோது நிச்சயம் கல்வி பற்றி இருக்கும் என்றே எண்ணினேன். ஆமாம், அங்கு ஒரு பள்ளிக்கூடம் உண்டு. நான் படித்த காலத்தில் கூட கல்வியில் முதலிடம், இப்போதும் தான். எங்கள் கரிசல் மண் அப்படி. விழுந்து விழுந்து படிப்போம். கல்வி காலங்களை கொண்டு வந்து காட்டியதற்கு மீண்டும் நன்றி. விருதுநகர் வியாபாரிக்கு வித்துப்போடு செல்லக்கண்ணு என பாடும் அளவுக்கு பெருமிதம் உள்ள ஊர் என சொல்லிவிட்டார். ஆமாம், எங்கள் ஊர் வியாபார ஸ்தலம் கூட அதுதான். விவிஎஸ் இதயம் நல்லெண்ணெய் முதற்கொண்டு. கல்வித்தந்தை காமராஜர் என ஒரு குறிப்பு போதும் ஓராயிரம் கட்டுரைகள் எழுதலாம் என மிகவும் சிறப்பாக சொல்லிவிட்டார்.

அதானே, எங்கே புரோட்டா இல்லாமல் போகுமா? அதுவும் சிறப்பாக சொல்லி இருக்கிறார். நான் எண்ணெய் புரோட்டா வாரம் ஒருமுறை சாப்பிட்டு விடுவேன். மதுரை புரோட்டா தினமும் படித்த காலத்தில் சாப்பிட்டது உண்டு. என்னதான் மதுரை புரோட்டா என்றாலும் அவர் சொன்னது போல விருதுநகர் விருதுநகர் தான். பங்குனி திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள் என அழைப்பு விடுத்தது அன்பின் வெளிப்பாடு. திருமணம் ஆகாதவர்களை அழைக்கிறார் என நீங்கள புரிந்துகொண்டால் அதற்கு அவர் பொறுப்பல்ல. அருமையான எழுத்துங்க, பாராட்டுகள். நந்தினி என்றால் தமிழ் ட்விட்டர் ட்ரென்ட் செட்டர் என்ற ஒரு பெயர் உண்டு. அதை இங்கும் நிரூபித்துவிட்டீர்கள். அவரது கள்ளம் அற்ற உள்ளம் போலவே அன்பு சிறப்பினை சொல்லி இருக்கிறார். சிறப்பு பார்வை சரிதானா என நந்தினிதான் இனி சொல்லவேண்டும்.

களவு போகும் உழவு எனும் கவிதை - ரிஸ்வான். உழவுத்தொழில் நசிந்து வருகிறது. ஏன்  இப்படி இருக்கிறீர்கள் என சமூக அக்கறை சொல்லும் அருமையான கவிதை. உழைப்பை நம்பி கலப்பை சுமந்து என தொடங்கி ஓர் உழவன் மண்ணில் விதையாவான், அவள் மனைவி விதையாவள் என்பது எத்தனை வலி தரும் என அந்த மண்ணில் வசிப்பவரை கேட்டுப்பாருங்கள். அந்த வலியை  வார்த்தைகளால் உணர வைத்துவிட்டார்.

நச்சுனு சிரிங்க. எல்லாமே சிறப்பாக சிரிக்க வைக்கும் ரகம் தான். எத்தனை நகைச்சுவை மிக்க மனிதர்கள் நம்மில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். சாமி சத்தியமா என்பது நல்ல விழிப்புணர்வு கதை. விஜய் என்பவர் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு மனிதரும் இப்படி திருந்திவிட்டால் இந்த உலகம் எப்படி சிறப்பாக இருக்கும். ஒருவர் திருந்த ஒரு சிறு பொறி போதும். அந்த பொறி எப்படி பற்றிக்கொள்கிறது என அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. பாராட்டுகள். பொன்ராம்  அவர்களின் நீரின்றி அமையா உடம்பு அருமையான பதிவு. தண்ணீர் சிகிச்சை முறை என்ற ஒன்று உள்ளது. முறையாக எல்லாம் செய்துவர எல்லாம் சிறப்பாக இருக்கும், நல்ல தகவல்கள் கொண்ட பகுதி. இன்னும் பல விசயங்கள் எழுதி இருக்கலாமோ என தோணியது. நற்பணி தொடரட்டும். ஆங்காங்கே சின்ன சின்ன விஷயங்கள் சிந்திக்கும் வண்ணம் ஆங்காங்கே செதுக்கப்பட்டு இருக்கின்றன.

கவிஞர் இளந்தென்றல் திரவியம் அவர்களின் அழகிய அழுத்தமான பலகாரக் கிழவி  முக்கு கவிதை. ஒரு கவிஞரின் கவித்தன்மைக்கு ஒரு சில வரிகள் போதும். அந்த கடைசி வரிகள்தான் பலரது மூக்கை உடைக்கும் வரிகள். இன்றுவரை பிள்ளைகள் ஏதும் பெறாத எந்த பெண்ணும் பலகாரக் கிழவியாய் வந்தது இல்லை. எங்கள் ஊர் அரசுப்பள்ளியினை நினைவில் கொண்டு வந்து விட்டீர்கள் சார். அட்டகாசம். பாராட்டுகள். அடுத்து சத்யா அவர்களின் அவள். ஆஹா அவள் உங்கள் கைகளில் அழகாகவே தவழ்ந்து இருக்கிறாள். கவிதையில் காதல் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது.

கீர்த்திவாசன் மற்றும் சக்திவேல் அவர்களால் எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. இந்த சிற்றிதழில் முடிந்த மட்டும் தமிழ் தலைப்பு இருப்பது நலம் என்பது எனது எண்ணம். பழமொழியும் அர்த்தங்களும் எழுதுவது எவர் எனத் தெரியவில்லை. மிகவும் சிறப்பு. போக்கத்தவன், வக்கத்தவன் என்பதான எனது அர்த்தம் வேறாக இருந்தது. ஆனால் உண்மை அர்த்தம் இப்போதே கண்டு கொண்டேன். நன்றி. வழக்கம்போல விடுகதைகள் பதில் சில தெரிந்தது. அதோடு மஹியின் பாராமுகம், பாலைவனம் ஒரு நல்ல கவிதை. பெண்கள் இதுபோன்ற கவிதைகளை தவிர்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டியது இல்லை. இப்படிப்பட்ட கவிதைகள் தான் பலரால் எழுதப்படுகின்றன. நானும் ஒன்பது வருடங்களாக பார்க்கிறேன், புரட்சி கவிதாயினிகளை காண இயலவில்லை. ஏதேனும் சொன்னால் எழுத வருவதுதானே வரும் என ஹூம் என சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.

மாறா மரபு. நான் இந்த தொடர்கதை குறித்து என்ன சொல்வது. ட்விட்டரில் கதை சொல்வது எனது வழக்கம். கதைசொல்லி என பட்டம் கொடுத்து திருமதி.மீனம்மாகயல் தந்த பரிசுதான் நான் எனது பெயர் கொண்டு இந்த வலைப்பூவில் அலங்கரித்து வைத்து இருப்பது. 'சிறந்த கதை சொல்லி' அல்ல. 'கதைசொல்லி', அவ்வளவுதான். ஒரு கதையை எந்த முகாந்திரம் இல்லாமல் தொடங்குவேன். ஒரே ஒரு வரி கதைக்கான கரு. அப்படியே அதை ஒரு நாடகத்தொடர் போல வளர்த்து செல்வேன். அப்படி ட்விட்டரில் எழுத ஆரம்பித்த கதை இது. திடீரென நிறுத்தி நாளைத் தொடரலாம் என இருந்தபோது நண்பர் அல் அமீன் கேட்டதும் மறுக்க மனம் இல்லாமல் எடுத்துக்கொள்ளுங்கள் எவரேனும் திட்டினால் நிறுத்திக்கொள்ளும் உரிமையும், கதையில் மாற்றம் செய்யும் உரிமையும் உங்களுக்கு உண்டு என்றேன். ஆனால் அவர் தைரியம் தந்த காரணமே இந்த கதை இந்த சிற்றிதழில். நன்றி சார். கதை தலைப்பு என்ன எனக் கேட்டார். உடனே மாறா மரபு என  சொன்னதுதான், தலைப்பு.  இந்த கதையை தொடர்கதையாக வெளியிடுவோம் என நண்பர் அல் அமீன் அவர்கள் சொன்னதும் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. என்னவொரு நம்பிக்கை! ஒரு வரி கூட மாற்றாமல் அப்படியே வெளியிட்டு இருக்கிறார்கள். இதைவிட எழுதுபவருக்கு என்ன சுதந்திரம் வேண்டும்? இதுவரை எந்த ஒரு தமிழ் அல்லது ஆங்கில இதழில் எனது எழுத்து வந்தது இல்லை. இப்படி ஒரு நல்ல வாய்ப்பை தந்த அவருக்கும் ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என் எழுத்துக்கான பெரும் பாக்கியம் அது.

ஆஹா பிரமாதம் குழந்தைகள் படம். அதுவும் மாஸ்டர் கானபிரபா அவர்களின் எழுத்தும், சுஷீமா அம்மாவின் எழுத்தும் என்னவொரு பொருத்தம். மனதை கொள்ளைகொண்டன எழுத்தும் குழந்தைகளும். கருப்பையா அவர்களின் வாசிப்பு அனுபவம் கேள்விபட்டது உண்டு. அவர் ஒரு அற்புத கவிஞர். அவருக்குள் ஒரு அற்புத எழுத்தாளர் இருக்கிறார். அவர் பார்வையில் சுமித்ரா எனும் நாவல் குறித்த அவரது அனுபவம் நம்மை அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் வண்ணம் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். அருமைங்க. பாராட்டுகள். அதுவும் நூல் விமர்சனம் முடிக்கும்போது எழுதப்பட்ட வரிகள் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் சிந்தனை போல உள்ளது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும். சுமித்ரா ஒரு பிரமிப்பு.

சாப்பாடு பக்கம். நளபாகம் ரவி அவர்களின் அக்கி ரொட்டி தயாரிப்பு. பெயரே வித்தியாசம். சப்பாத்தி போல ஆனால் இது சப்பாத்தி அல்ல என அழகாக சொல்லி இருக்கிறார். மைதா மாவு இல்லாதபோது இந்த அரிசி மாவு கொண்டு அக்கி ரொட்டி செய்து மனம் மகிழுங்கள். பாடல் பரவசம் மூலம் நம்மை பரவசபடுத்தி இருப்பவர் செல்வி.உமாகிருஷ். எடுத்துக்கொண்ட பாடல் வெகு சிறப்பு. மிகவும் அற்புதமாக விவரித்து இருக்கிறார். அதுவும் எனக்குப் பிடித்த ரஜினி. நான் இப்படி எல்லாம் ரசித்தது இல்லை. எனக்கு ரஜினி திரையில் இருந்தால் போதும், ரஜினியாகவே நான் உணர்வேன். இவரது எழுத்து வாசித்த பின்னர் ரஜினியை யோசித்துப் பார்த்தேன். பிரமாதம். வரிகள், இசை சிலாகித்த விஷயம் சரி.

ஒரு கவிஞர் என்ன மனோபாவத்தில் எழுதினார் என்பது கவிஞருக்கே வெளிச்சம். அவர் குறிப்பிட்டது போல பாடியதில் தவறு சாத்தியம்தான். ஆனால் இது ஒரு கவிஞரின் எழுத்து என வரும்போது நினைத்தாயோ என்பதை விட நிலைத்தாயோ ஒரு படி மேல்தான். அப்படித்தான் புரிந்து கொண்டேன் என்கிறார். அதுதான் சரி. மறப்பேனா என்ற ஒரு மன நிலையில் நீ நிலைத்துவிட்டாயா? என்ன ஒரு அக்கிரமம் என்பது போல அந்த வரியை எடுத்துக்கொள்ளலாம். அட! இத்தனை தூரம் வரிகள் சிலாகிப்பார்களா என ஆச்சரியமூட்டும் விசயங்கள்.

தேசிய விருது குறித்து எழுதி இருப்பது மகிழ்ச்சி. இறுதியாக ஆசிரியரின் தெரிந்த பிரபலங்கள் தெரியாத உண்மைகள். சந்திரபாபு, நான் ரசித்த ஒரு அற்புத கலைஞன். பல தகவல்கள் அறிய முடிந்தது.

ஆக மொத்தத்தில் இந்த சிற்றிதழ் ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவத்தை தந்தது. எல்லோர் மனதிலும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இந்த இணைய சிற்றிதழ். நமது எழுத்தை எப்போது இந்த சிற்றிதழ் ஏற்றுக்கொள்ளும் என பலரை எண்ண வைத்து இருப்பது  இந்த சிற்றிதழ் பெற்றுவிட்ட மாபெரும் பெருமை. சிறந்த வடிவமைப்பு, நல்ல கருத்துகள் தாங்கி வந்து இருக்கிறது என்றே சொல்லி மகிழ்வர். ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்தினைத் தாண்டி பாருங்கள். பிரமிக்க வைத்து இருக்கிறார் நண்பர் அல்  அமீன்.

அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

'தமிழ் வளர்த்த நமது மண்ணை 
தமிழ் கொண்டு சிறக்க 
வைப்பது நமது திண்ணை' 

நன்றி