Wednesday, 5 November 2014

கனவில் வந்தனையோ ஆண்டாள்

ஆண்டாளின் வார்த்தைகள் மீது ஒரு தீராத ஆசை. அதிலும் எற்றைக்கும் என வரிகள் வாசிக்க ஆரம்பித்தால் அப்படியே ஒரு தனி அறையில் சென்று அமரத் தோணும். 

இந்த ஆண்டாள் மீது இத்தனை ஆசை வர காரணம் அவள் கொண்ட அந்த பரந்தாமன் காதல் தான்.  ஒரு மாட வீதி தென்படுகிறது. அந்த மாட வீதியில் கூரைப்பட்டு சேலை உடுத்திய வண்ணம் ஆண்டாள் வந்தாள். அவளிடம் என்னை காதலிக்க கூடாதா என்று கேட்டேன். என்னை உன்னால் காதலிக்க முடியுமா யோசி என்றாள். 

நண்பர்களிடம் ஆண்டாள் காதல் குறித்து பெருங்கவலை கொண்டு இருந்தேன். எல்லோரும் ஆண்டாளை பைத்தியம் என்றார்கள் என்னால் அப்படி சொல்ல இயலவில்லை. பெரியாழ்வாரிடம் சென்று உங்கள் பெண்ணை எனக்கு மணம் முடித்து தாருங்கள் என கேட்டேன். மானிடனுக்கு வாக்கப்படமாட்டேன் என சொல்லிவிட்டாளே என்றார். 

மற்றொரு நாள் ஆண்டாளை சந்தித்தபோது நீ கொண்டிருக்கும் காதல் மாயையானது அறிந்து கொள் என்றேன். நான் காண்பவை உன் கண்களுக்கு தெரியாது என்றாள். பெரியாழ்வாரிடம் சென்று நீங்கள் ஆண்டாளை சரியாக வளர்க்கவில்லை, இதுவே ஒரு தாய் இருந்து இருந்தால் இப்படியாகுமா என்றேன். வேதனையுற்றார். 

என் பெற்றோர்களிடம் ஆண்டாள் குறித்து என் துயரத்தை சொன்னால் அந்த பொண்ணு வாங்கி வந்த வரம் என்றார்கள். என்னால் ஏற்க முடியவில்லை. ஆண்டாளின் தோழிகளிடம் சென்று என் ஆசையை கூறினேன். அந்த தோழிகள் எல்லாம் என்னை ஏளனமாக பார்த்தார்கள். அவள் காதல் உனக்கு இளப்பமா என்றார்கள். 

ஒருநாள் திருவில்லிபுத்தூர் கோவில் வாசலில் நிறு இருந்தபோது ஆண்டாள் வந்தாள் .சிலையாக நிற்பதுதான் உன் காதலனா என்றேன், உயிராக என்னுள் வசிப்பவன் என்றாள். எவரேனும் ஆண்டாளுக்கு அவள் கொண்ட காதல் முறையற்றது என் எடுத்து சொல்லமாட்டார்களா என ஏங்கி  தவித்த எனக்கு நான்தான் முறையற்றவன் என்றார்கள். 

ஆண்டாளின் பிடிவாதமான போக்கு என்னுள் பெரும் அச்சத்தை விளைவித்தது. ஆண்டாளிடம் என் மனக்குமுறல்கள் சொல்லி முடித்தேன். . நாராயணனே பறைதருவான் என்றாள் . பெரியாழ்வாரிடம் நீங்களாவது எடுத்து சொல்லுங்கள் என மன்றாடினேன். ஸ்ரீரங்கத்து ரெங்கமன்னார் மாப்பிள்ளை என்றார். 

ஆண்டாளிடம் சென்று, ஆண்டாள் அந்த நாராயணனை மணம்  முடிக்க நீ மானிட பிறவி கொண்டது பிழை அல்லவா? ஒரு பரமாத்மாவை உன் காதலுக்காக ஜீவாத்மாவாக்கிட நீ துணிந்தது குற்றம் என்றேன். 

என் வார்த்தைகள் கேட்டு வெகுண்டெழுந்தாள். என் காதலை பழித்து கூற உனக்கு என்ன யோக்யதை இருக்கிறது, போ முதலில் காதலித்து பார் என்றாள்  

எந்திரிடா இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும் என அம்மா என்னை எழுப்பிக் கொண்டு இருந்தார். 

நீ மட்டும் இன்றும் மாறாத ஆச்சரியம்

Tuesday, 4 November 2014

கதைத் திருடன்

அன்புக்குரிய மதுசூதனபெருமாள்

எனதருமை நண்பா
எப்படி இருக்கின்றாய்
என்னை உனக்கு இன்னமும்
நினைவு இருக்கிறதா?

இரண்டு மாதங்கள் முன்னர்
இருள்  ஒன்றை பொருட்படுத்தாது
இரண்டு மணி நேரம்
சாலைகளின் பயம் கடந்து
நிறையவே சிந்தித்த கதை ஒன்றை
உன்னிடம் கொண்டு வந்தேன்
எந்த மண்டபத்தில் எழுதி
வாங்கி வந்தாய் என்றே
ஏளனமாக என்னைக் கேட்டாய்

படித்துப் பார் என சொல்லிவிட்டு
கதை எப்படி என்றே உன்னிடம்
கருத்து ஒன்றை கேட்டேன்
குப்பையில் தூக்கிப் போடு
என என் மனதை நீயும்
கசக்கி எறிந்தாய்

பழக்கமான நீயே இப்படி
சொன்னபிறகு எவரிடம்
இந்த கதையை கொண்டு
காண்பிப்பது என உன்னிடமே
இருளோடு மனம் இருள
விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்

அடுத்த ஒரு அற்புதமான சிந்தனை
என புதிய கதை ஒன்றை
எழுதி உன்னிடம் தந்தேன்
எந்த மண்டபத்தில் என்ற
அதே கேள்வியும் குப்பை என்ற
அதே பதிலும் நீ சொன்னாய்

மனம் உடைந்து உன்னிடமே
அந்த கதையையும் ஒப்படைத்து வந்தேன்
இன்னுமொரு கதை சிந்திக்க
இரவு பகல் பாராது முற்பட்டேன்
நீ நன்றாக இருக்கிறது
என சொல்லும்வரை என் முயற்சி
முடங்குவதில்லை உறுதி கொண்டேன்

உன்னை வந்து பார்த்த
மூன்றாவது வாரத்தில்
என் வீட்டு கோபாலன்
எப்போதும் போல என்னிடம் ஒரு
வார இதழ் கொண்டு வந்து
தந்துவிட்டு போனான்
அதில் வந்த கதை ஒன்றை
வாசிக்கையில் உன் பெயர் போட்டு இருந்தது
நான் எழுதி நீ குப்பை
என்று ஒதுக்கிய கதை

கோபாலன் மறுவாரம் வந்து
தந்துவிட்டு போன வார இதழில்
அதில் வந்த கதை
நான் எழுதி நீ குப்பை என
ஒதுக்கிய இரண்டாவது கதை
உன் பெயர் போட்டு

பெற்ற பிள்ளையை
தாயின் அனுமதியின்றி
தத்து கொடுத்தது போல
வார இதழில்
என் கதைகளில் உன் பெயர் கண்டு 
பரிதவித்து போனேன்

அன்றே புதிய கதையுடன்
உன்னை சந்தித்தேன்
நீயும் வழக்கம் போல கேள்வியும்
நிராகரிப்பும் செய்தாய்
வார இதழ்கள் காட்டி
என்ன இது என்றேன்
எனது கதை தான்
எனக்கான புனைப்பெயர்
உனது பெயர் என்றாய்
மன்னித்துவிடு என நீ
என்னிடம் மன்றாடினாய்
பழகிய பழக்கத்திற்கு
பரிதவிப்புடன் நானும்
வீடு வந்து சேர்ந்தேன்


இந்த முறையும் நீ குப்பை
என நிராகரித்த கதையை
நானே அதே வார இதழுக்கு
உனது பெயர் பொறித்து
அனுப்பி வைத்தேன்
முகவரி மாற்றிய விபரம் குறித்து


கோபாலன்
வார வாரம் என்னிடம்
உன் பெயர் பொறித்த
குப்பை கதை சுமந்து
வரும் வார இதழுடன்
வந்து போகிறான்
அதில் உனக்கான பெயரும் பணமும்
எனக்கான அங்கீகரிக்கப்பட்ட
சின்னதொரு திருப்தியும்

அன்புடன்
சீனிவாசபெருமாள்

Thursday, 23 October 2014

பாரதி' யார்? - வேடிக்கை மனிதனா நீ

'நல்லதோர் வீணை செய்தே' என்ற வரிகளை கேட்டதும் எப்படி இருக்கும் என எழுத்தில் வைக்க முடிவதில்லை. ஆம், இந்த வரிகளுக்கு சொந்தகாரர் மகாகவி பாரதியார் தான். மகாகவியின் கவிதைகள் மட்டுமே தெரிந்த நமக்கு அவரின் வாழ்க்கை பற்றி தெரிவதில்லை, தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.

பொது நலத்திற்காக தன்னை அர்பணித்து கொள்பவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பது என்னவோ உண்மை. மகாகவி பாரதியாரின் வாழ்க்கை குறித்து பலருக்குத் தெரிந்து இருக்காது.

''பாரதி கஞ்சா அடிப்பார்'' என்று சொன்ன நண்பனை நான் கோபத்துடன் பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. பாரதியின் வரிகளில் நான் வாழ்ந்து வந்து இருக்கிறேன். ''சென்றதினி மீளாது மூடரே'' என்பது எனக்கு அத்தனை பிரியம். பாரதியின் கவிதை வரிகளை ரசித்து ரசித்து பழகிய நான் பாரதியை ஒருபோதும் தவறாக நினைத்தது இல்லை, நினைக்கப்போவதும் இல்லை.

காதல் வரிகளில் கூட பாரதியை போல எந்த ஒரு கவிஞனும் எழுத முடிவதில்லை. ''காற்று வெளியிடை கண்ணம்மா'' என்பதை விட எனக்கு ''நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா'' கொள்ளைப்பிரியம். எத்தனை கவிதைகள். அதுவும் ''காக்கைச் சிறகினிலே நந்தலாலா'' பாடிக்கொண்டே இருக்கலாம்.

இந்த பாரதி கஞ்சா அடிப்பார் என்று கேள்விப்பட்ட தினம் முதல் எனக்கு அதுகுறித்து அக்கறை இருந்தது இல்லை. ஆனால் பாரதி குறித்து தேடி தேடி படித்த விசயங்கள் பல உண்டு. பாரதியார் குறித்து படம் வந்தபோது பாரதியாரின் பெருமை சிதைந்து போகாமல் பார்த்துக் கொண்டார்கள்.

எனக்கு பாரதியாரின் வாழ்க்கையை குறித்து எவரிடமும் பேசப் பிடிப்பது இல்லை. அவரது கவிதைகள் எனக்கு போதுமானதாக இருந்தது.

''அக்கினி குஞ்சொன்று'' பற்றி இங்கே எழுதி இருக்கிறேன். பாரதியாருடன் நண்பராக வாழ்ந்து இருக்கலாமோ என்ற ஆசை எனக்குள் எப்போதும் இருப்பது உண்டு. ''வேடிக்கை மனிதன் என'' எத்தனை பேர் இதனை பாடி இருப்பார்கள்.

-------

பாரதி குறித்து ஓ சோமசுந்தரம் இப்படி எழுதுகிறார். ''படைப்பாளிகள் சில பொருட்களை உபயோகிப்பார்கள், அதில் பாரதியை பற்றி இங்கே எடுத்துக்கொள்கிறேன்''. கவிஞர்கள் , படைப்பாளிகள் அவர்களது படைப்புகளால் இறவா தன்மை அடைகிறார்கள். அதில் பலர் ஆல்ஹகால் போன்ற போதைப் பொருள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். அறிவார்ந்த தன்மைக்கும், இப்படி பொருட்கள் எடுத்துக் கொள்வதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான சுப்பிரமணி பாரதியாரின் வாழ்க்கையை இங்கே பார்க்க இருக்கிறோம். பாரதியாரின் கவிதையில் என்னதான் இல்லை? பாரதியாரின் தந்தை சின்னசாமி ஐயர் எட்டயபுர அவையில் முக்கிய நபராக இருந்தார். பாரதி எனும் பட்டம் கவிதைகளால் தமிழ்ப்புலமையால் கிடைத்தது.

பாரதியின் தந்தை இறந்த பின்னர் அரசவை ராஜாவுக்கு பாரதியின் மீது பற்று உண்டாகியது. இந்த ராஜா தான் பாரதிக்கு போதைப் பொருள் பழக்கத்தை உண்டுபண்ணியவர். அவர் கொடுத்த பூரநதி லேகியம் கஞ்சா போன்ற பொருட்களை கொண்டது. இதை நீ அருந்தினால் உனக்கு நல்ல பலம் வரும். ஆனால் இதை நம்பி பாரதி தொடர்ந்தாரா என தெரியாது. ஆனால் இதுதான் பாரதிக்கு முதன் முதலில் கொடுக்கப்பட்ட போதைப் பொருள்.

அரசவை ராஜா பாரதியை வாரணாசிக்கு அனுப்பி சமஸ்கிருதம், ஆங்கிலம் என புலமை பெற உதவி செய்தார். அரசவையில் இருந்து விலகி மதுரையில் ஆசிரியராக பணியாற்றி சென்னை சென்று சுதேசமித்திரன் நாளிதழ் சேர்ந்து  பின்னர் இந்தியா பத்திரிகை என ஆரம்பித்து அதில் தனது கவிதைகள் வெளியிட்டார். பாரதியின் வ உ சி உடன் பழக்கமும் வ உ சியின் சுதேசி இயக்கம் அதனால் வ உ சி அடைந்த துயரம் பாரதியை வெகுவாக பாதித்தது.

பாலகங்காதர திலகருடன் இணைந்து பணியாற்றி அதன் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகளால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் (1908-1918) பாரதியார் பாண்டிசேரியில் இருந்தார். பெரும்பாலான கவிதைகள் பாஞ்சாலி சபதம் முதற்கொண்டு பக்தி பாடல்கள் கிருஷ்ணர் முருகர் சக்தி பாடல்கள் எல்லாம் அங்கே இயற்றப்பட்டன.

பாரதியாரின் பாண்டிசேரியில் உள்ள ஒரு சாமியாருடன் ஏற்பட்ட பழக்கம் மிகவும் சுவாரஸ்யமானது. பாரதியாரின் விடுதலை போராட்ட வேட்கையும் தமிழ் இலக்கியமும் மற்றும் இந்த சாமியார் பழக்கம் பாரதியாரை இந்த போதை உலகத்தில் மீண்டும் தள்ளி இருக்கலாம். அவரது இந்த சாமியாருடன் பழக்கமே பல பக்தி பாடல்கள் எழுத காரணமானது. அந்த சாமியாரும், பாரதியாரும் போதை பொருட்களை உபயோகப்படுத்தினர். சில வருடங்கள் போதை பொருட்கள் உபயோகத்தை நிறுத்தி இருந்த பாரதியார் 1911 ம் ஆண்டு போதை பொருட்களை மீண்டும் பாரதியார் உபயோகித்ததை பாண்டிசேரியில் கண்டு வ. ராமசாமி மிகவும் வருத்தம் கொண்டார். நடுஇரவு மருந்து, சாமக்கிரிகை,  என பாரதியார் அங்கே உள்ள வேலையாளை வாங்கி வர சொல்வார். ஆனால் பாரதியார் மீதான மரியாதையில் எதுவும் சொல்லவில்லை. இந்த சாமியார் தெருவில் படுத்து கிடப்பது, நாய்களுடன் சண்டை போடுவது போதை பொருட்கள் உட்கொள்வது  என்றே அவரது வாழ்வு இருந்து இருக்கிறது.

கடைசி மூன்று வருடங்கள் 1918-1921 பாரதியார் சென்னையில் தனது வாழ்நாளை செலவழித்தார். மகாத்மாவின் அகிம்சை செய்கை மகாகவியை புண்படுத்தியது. வ உ சி மகாத்மாவின் வழி பின்பற்ற பாரதி விடுதலை போராட்டத்தை ஒரு கட்டத்தில் கைவிடும் நிலைக்குப் போனார். பாரதியார் நிறைய போதை பொருட்கள் உபயோகித்த கால கட்டம் இதுதான். குள்ளசாமி சாமியாருடன் பாரதியை சென்னையில் கண்ட வ உ சி தன்னால் நம்ப இயலவில்லை. இது பாரதி தானா என்றே சந்தேகம் எழுந்தது. பொலிவிழந்து பாரதியார் காணப்பட்டார்.

வ உ சி , பாரதியாரும் அந்த குள்ளசாமி சாமியாரும் ஒரு பானத்தை அருந்திய பின்னர் அவர்களின் பேச்சு சத்தமாகவும் சுறுசுறுப்பாக உண்டுபண்ணியது கண்டார். வ உ சி என்ன என கேட்டார். அது என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் மருந்து என்றே பாரதியார் பதில் அளித்தார். அடுத்த நாள் பாரதியார் அதை அருந்த, வ உ சி புரிந்து கொண்டார். மண்டயம் நண்பர் பாரதியாரின் நடவடிக்கையில் உள்ள மாற்றத்தை கண்டார். இந்த மூன்று வருடங்களில் பாரதியாரின் உடல்நிலை பெரிதும் மோசமாகியது.

கடைசி காலத்தில்  பண கஷ்டம் வந்தபோது எட்டயபுரம் ராஜாவிடம் கேட்க அவர் உதவ மறுத்துவிட்டார். ஜூலை 1921ல் யானை அவரை தூக்கி வீசியது. அங்கே இருந்த ஒருவர் அவரை காப்பாற்றினார். எந்த ஒரு மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் செப்டெம்பர் மாதம் பாரதியார் மரணம் அடைந்தார்.

ஓபியம், கஞ்சா பெருமளவில் அப்போது உபயோகிக்கப்பட்டது. பெதடின், ஹெராயின், மார்பின் கொடீன் போன்ற பொருட்கள் பின்னர் இவை இடங்களை பிடித்துக் கொண்டன. பாரதியாரின் மரணம் அவரது போதை பழக்கத்தால் ஏற்பட்டது என்பதை பலரால் ஏற்றுக்கொள்ள இயலாது. கண்ணதாசனுக்கு பெதடின் பழக்கம் இருந்தது என்பது பலருக்கு தெரியும். அவரது மரணம் கூட இந்த பெதடின் ஏற்படுத்தியதுதான். பல படைப்பாளிகள் குடிகார சிகாமணிகள்தான்.

பாரதியின் ''மோகத்தை கொன்று விடு'' என்பது  தன்னால் போதை பொருளை விட முடியாத நிலையில் கதறி அழுத  கவிதையாக கூட இருக்கலாம். பாரதிக்கு நல்ல நண்பர்கள்  வாய்க்காமல் போனார்கள். போதைப் பொருளுக்கு போதை மனதுக்கு அடிமையாகிவிட்டால் நல்ல நண்பர்கள் விலகிப் போவார்கள்.

பாரதி நீ மகாகவி
அப்படியே உன்னை
இவ்வுலகம் போற்றி மகிழட்டும்.  

போதை பொருட்கள் என்ன செய்யும் என்பதை படிக்க இங்கு பாருங்கள்.