Monday, 25 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 4

சென்னையில் தங்கி இருந்த ஹோட்டலுக்கு tablet device தொலைந்த விசயத்தை உடனடியாக மின்னஞ்சல் செய்தேன். நான் அதிகம் உபயோகிக்காத ஒன்று என்பதால் தொலைந்து போனது குறித்து அத்தனை கவலை இல்லை. மனைவி சொன்னார், கிடைக்கும் எனில் கிடைக்கும் என! Data roaming, SIM card change எல்லாம் இல்லை என்பதால் சிங்கப்பூர் ஹோட்டல் விட்டு வெளியேறினால் மின்னஞ்சல் பார்க்க வழி இல்லை. மறுநாள் காலை வரை சென்னையில் இருந்து எவ்வித பதில் இல்லை.

சிங்கப்பூரில் ஒரு கோவில்தனை நடந்து பார்க்க சென்றோம். மாரியம்மன் கோவில் ஹோட்டலுக்கு அருகில் இருந்தது. வழிபட்டு முடிக்க, வழிகாட்டிதனை ஹோட்டலில் தந்து இருப்பதாக சொன்னார், அப்பாடா என இருந்தது. அதனை வந்து பெற்றுக்கொள்ள உறவினர் ஒருவர் எப்போது வீட்டுக்கு வருகிறீர்கள் என எனது மொபைலுக்கு (roaming இல்லாமல் பேச முடியும்) அழைத்து கேட்க முகவரி வாங்கிக்கொண்டு இப்போதே வருகிறோம் என காரில் சென்று இறங்கினோம். கார் பற்றி, கார் ஓட்டுவது குறித்து ஆச்சரியப்பட்டார். வழிகாட்டி இருக்க வாகனம் தானாக போகும் என்றேன். சிங்கப்பூர் உல்லாசமான ஊர். உறவினர்கள் அன்று முழுவதும் உடன் இருந்தார்கள்.

குப்பை இல்லாத நாடு என பெயர் பெற்ற நாட்டில் சாலையில் குப்பைகள் கண்டேன். இடத்தின் பெயர் Little Indiaவாம். கோமலா விலாஸ் சாப்பாடு. சீனிவாச பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், நகைக் கடை, துணிக்கடை என சிங்கப்பூரில் தமிழர்கள் பலர் கண்டேன், ஆம் கண்டேன். சிங்கப்பூர் என்பது சிங்களத்தின் திரிபு என பகடி செய்தேன். அன்று சுற்றிய அலுப்பில் இரவு பத்து மணி ஹோட்டல்  வந்து சேர்நதோம்.

மின்னஞ்சல் பார்த்தேன். We found a tablet in another room. Send me details எனும்படி ஒரு மெயில் சென்னை ஹோட்டலில் இருந்து வந்தது. விபரங்கள் அனுப்பினேன். அடுத்தநாள் காலை வரை பதில் இல்லை. கோவில் சுற்ற கிளம்பினோம். வாகனம் செலுத்துவது எத்தனை சௌகரியம் அங்கே!

(தொடரும்) 

Friday, 15 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் -3

சிங்கப்பூர்!

நாடா? நகரமா?

இந்த நாடு பற்றி நிறைய கேள்விப்பட்டதுண்டு. ஆனால் நேரில் சென்றுப் பார்த்தால் தான் உண்மை நிலவரம் அறிய இயலும். சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்று சேர்ந்த போது மணி மாலை 7.  முன்னரே, கார் எடுத்து சிங்கப்பூரில் ஓட்ட வேண்டும் என பதிவு செய்து இருந்தேன். ஏழு நபர்கள் சென்று இருந்தோம். அதில் இருவர் எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்.  விமான நிலையத்தில் இறங்கியதும் எங்களை வரவேற்க உறவினர் வந்து இருந்தார். அப்போது எனது மொபைல் ஒலிக்க எனக்கு சற்று ஆச்சரியம், பொதுவாக வெளிநாடுகளில் நான் லண்டன் மொபைல் உபயோகிப்பது இல்லை .

கார் கொண்டு வந்து இருக்கிறேன், கீழே நிற்கிறேன் வந்து பெற்றுக் கொள்ளவும் என சொன்னபோது புதிதாக இருந்தது. விமான நிலையத்தில் அவர்களது அலுவலகம் இல்லை என பின்னரே தெரிந்தது. கார் தந்தவர் வழிகாட்டி கொண்டுவர மறந்து போனார். அடக்கடவுளே என்று இருந்தது. உறவினர் உடன் வர காரில் இடம் இல்லை. ஹோட்டல் செல்லும் வழியை PIE CTE havelock road என வழி சொன்னார். வழிகாட்டி இல்லாமல் இரவு எட்டு மணிக்கு அதுவும் புதிய ஊர், தைரியமாகவே வாகனம் எடுத்தேன்.

அட! சாலைகள் அருமை! வாகனங்கள் நிதானம்! அவர் சொன்ன பாதை நினைவில் வைத்து சரியாக ஹோட்டல் வந்து அடைந்தேன். வழிகாட்டி இருந்தாலே சேருமிடம் வந்ததும் சுற்றும் நான் வழிகாட்டி இன்றி சரியாக சேர்ந்தது ஆச்சரியம். இரவு சாப்பாட்டிற்கு முருகன் இட்லிக்கடையை தொடர்பு கொண்டேன். அவர்களோ இன்னும் சிறிது நேரம் கடை மூடிவிடும் என்றார்கள். இரவு ஹோட்டலில் சாப்பிட்டோம். கார் நிறுத்தும் வசதி ஹோட்டலில் இருந்தது.

பண அட்டை ஒன்றை காரில் வைத்துக் கொண்டால் கார் நிறுத்தும் இடம், சில சாலைகள் என பணம் எடுத்துக் கொள்ளும் வசதி. மிகவும் பிடித்து இருந்தது. சாப்பிட்டு முடித்து ஹோட்டலில் பையை திறந்து பார்த்தேன் blog எழுத உதவிய tablet device காணவில்லை. தொலைந்து போனது!!!

(தொடரும்)



Sunday, 10 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 2

இந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ விஷயங்கள் நடந்தேறிவிட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம் என ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு முடிந்து போன கதை என கணக்கு எழுதலாம் என நினைத்தால் சில விசயங்கள் தொடர்கதையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நீ இல்லாமல் இருந்து இருந்தால், நான் இல்லாமல் இருந்து இருந்தால் போன்ற வசனங்களுக்கு குறைவில்லை. முடிந்து போன விசயங்களுக்கு கொண்டாடப்படும் உரிமைகள் என்றுமே மாறப் போவதில்லை.

2012ல் ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்து சென்ற பின்னர் நவம்பர் மாதம் மகனுக்கு 2013ல் மிருதங்க அரங்கேற்றம் நடத்த வேண்டும் என சொன்னபோது பயம் நிறைய இருந்தது. மிருதங்க குரு முதலில் வேண்டாம் என சொன்னவர் நவம்பரில் கேட்டபோது சரி என சொன்னதும் அதிக பயம் ஒட்டிக்கொண்டது. ஒரு வருட முயற்சிக்கு ஏழு எட்டு வருட உழைப்பு இருந்தது. மகனும் துணிவாக அரங்கேற்றம் பண்ணுகிறேன் என சொன்னபோது 2013ல் இந்தியாவுக்கு வருவது தள்ளிப்போனது. இந்த மிருதங்க அரங்கேற்ற அனுபவம்தனை ஒரு தனி பதிவாக வைத்து விட இருக்கிறேன்

2012 வந்த போது மாமனார் மாமியார் சிங்கப்பூரில் முன்னர் வசித்து இருந்ததால் அவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது என் மனைவியின்  ஆசை, ஆனால் கோவில் கும்பாபிஷேகம் என்பதால் செல்லவில்லை. இந்த வருடம் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என முடிவு செய்து மாமனார் மாமியார் என் அப்பா என அழைத்து செல்ல முடிவு செய்து விமானபயண சீட்டு கேட்டால் அதிக விலை. எப்போதும்  இல்லாமல் எர் இந்தியா பதிவு செய்தோம்

வித்தியாசமான பயண அனுபவம் என சென்னை வந்து இன்று சேர்ந்தோம். ஹோட்டல் பக்கத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் போனால் சென்னையில் இருப்பது போல் இல்லை. விமான பயண அனுபவத்தை பின்னர் குறிப்பில் வைக்கிறேன். இப்போது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். நாளை சிங்கப்பூரில் இருப்போம்.

(தொடரும்)