Monday, 19 May 2014

வானத்தைக் காணோம்

'அம்மா, வானத்தை காணோம்' என கத்தினேன்.

'பக்தா, என்ன வானத்தை காணோம் என கத்துகிறாய்'

'வானம் இல்லை, வாங்க காட்டுகிறேன்' என வெளியே ஓடினேன். கும்மிருட்டாக இருந்தது. சாமியார் என்னை தொடர்ந்து வந்தார்.

'என்ன பக்தா, வானம் அதோ தெரிகிறதே'

'இல்லை, ஒன்றுமே தெரியவில்லை. வானம் காணாமல் போய்விட்டது'

'பக்தா, என்ன உளறுகிறாய்?'

'வானம் நமது சூரிய குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது. ஒளிக்கீற்று பல வண்ணங்களை உருவாக்கும் வல்லமை கொண்டது. நமது பூமியில் நீல நிறத்திலும் செவ்வாயில் சிவப்பு நிறத்திலும் இந்த வானம் பகலில் தென்படும். ஒளியானது துகள்களில் மீது பட்டு இத்தகைய வண்ணம் ஏற்படுத்துகிறது'

'பக்தா, இந்த வானம் பிரபஞ்சத்தில் உள்ள மாயத்தோற்றத்தில் ஒன்று. நமது சூரிய குடும்பத்திற்கு மட்டுமல்ல சொந்தம் இது. மொத்த பிரபஞ்சத்திற்கும் உண்டான ஒருவித சொந்தம்'

'இல்லை இல்லை. நீங்கள் வானம் ஏறி வைகுண்டம் போவது குறித்து சொன்னீர்கள், எனவே வானம் ஏறினால் அதற்கு பின்னர் வைகுண்டம் தானே'

'பக்தா, அது வேறு இது வேறு'

'எது வேறு'

'வைகுண்டம் என்பது வேறு, வானம் வேறு'

'நட்சத்திரங்கள் வானத்தைத் தாண்டி தானே இருக்கிறது, வானம் பூமிக்கே சொந்தம்'

'பக்தா, வானம் என்பது என்னவெனில் நமக்கு மேல் உள்ளது எல்லாம் வானம். இப்போது பூமிக்கும் நமக்கும் மேல் உள்ள ஒரு பொருளுக்குமான தொடர்பே வானம். தொடுவானம் கேள்விபட்டது உண்டா, அது போலவே ஒரு தொலைவுக்கு உண்டான எல்கை'

'வானத்தைக்  காணோம்'

'பக்தா, பூமிக்குள் நாம் இல்லை. பூமிக்கு மேலே இருக்கிறோம். எப்படி சொல்வது. பறவை எடுத்துக் கொள், பறவை மீது நீ அமர, பறவை பறக்க மேலே வானம், கீழே பூமி. சரியா?'

'என்னை சுமக்கும் அளவுக்கு பறவை உண்டா?'

'இப்ப எதற்கு அந்த கேள்வி, இதுவே நீ பறவையின் வயிற்றில் போனால், உனக்கு பறவையின் உடலே எல்லாம். அது போலவே பூமி மீது நீ, அதன் மேல் இருப்பது வானம். இப்போது நீ பிரயாணம் செய்து வேறொரு நட்சத்திரம் செல்'

'நான் எதற்கு செல்ல வேண்டும்'

'அங்கே வானம் இருக்கும்'

'நமது வானம் அங்கே இருக்குமோ?''

'அதற்கே உண்டான ஒரு வானம், அங்கே எல்லாம் வியாபித்து இருக்கும்'

'எனக்கு புரியும்படி சொல்லுங்கள்'

'இது ஒரு மாபெரும் வெளி. அதாவது ஒரு பாய் எடுத்து விரித்துக் கொள்வோம்'

'சாமி, கில்மா கதை எதுவும் சொல்ல போறீங்களா?

'பக்தா, எனது சாபத்திற்கு நீ ஆளாக நேரிடும். என்னிடம் நீ முறையோடு பேச வில்லையெனில் நான் எப்படி நடந்து கொள்வேன் என உனக்குத் தெரியாது'

'இப்ப என்ன கேட்டுட்டேன்'

'வானத்தைக்  காணோம் என்ற உனக்கு வழி சொல்ல வந்தோம்'

'சொல்லுங்க சாமி'

'பாய் ஒரு பிரபஞ்சம். அந்த பாயில் வடகம் போடுவோம்'

'வட்டமாகவா, நீளமாகவா சாமி'

'இதை எல்லாம் எவரும் ரசிக்க மாட்டர்கள், நீ வாய் மூடி இருக்கவும்'

'ஒவ்வொரு வடகமும் ஒரு சூரிய குடும்பம். அந்த அந்த  வடகத்திற்கு ஒரு வானம் உண்டு. எல்லா வடகங்களுக்கும் பாய் ஒரு வானம்'

'பாய் ஒரு பிரபஞ்சம்'

'இல்லை பாய் ஒரு வானம்' 

'சாமி, அப்படியெனில் வானத்தைக் காணோம்'

'இல்லை, வானம் என்பது பொதுவான ஒன்றாகவே இந்த அண்ட வெளியில் சொல்லப்பட்டு வருகிறது. எனவே பூமிக்கு வானம் உண்டு, வானமே அந்த பிரபஞ்சத்தில் உண்டு'

'அந்த வானத்தைக் காணோம் சாமி'

எந்திருடா, வேலைக்கு போகாம இன்னும் தூங்குற

வெளியில் வந்து பார்த்தேன். வானம் மஞ்சள் கலந்து எழுந்து  இருந்தது. சாமியார் இப்படி என்னை தொல்லை பண்ணுவார் என நினைக்கவே இல்லை.

வானம் என்றால் என்ன?

'A sky is the region of atmosphere or outer space seen from the earth' 

ஒருவேளை செவ்வாயில் நாம் இருந்தால் 'A sky is the region of atmosphere or outer space seen from the mars' 



Tuesday, 13 May 2014

டிவிட்டப் மதுரையில் நானிருந்தேன்

பக்தா, மதுரையில் நடக்கும் டிவிட்டப் விழாவிற்கு கலந்து கொள்ள வில்லையா என்று சாமியார் கேட்டதும் நான் பயந்து போனேன்.

''என்ன சொல்கிறீர்கள் சாமி?''

''ட்விட்டரில் 140 எழுத்துக்குள் எழுதும் கீச்சர்கள் ஒன்று கூடினார்களே, எப்படி இந்த உலகத்தை மேம்படுத்தி செல்வது என, அதில் நீ கலந்து கொள்ளவில்லையா?''

''எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் சாமி?''

''நீயும் ஒரு கீச்சர் தானே''

''எப்பொழுது நான் என்னை கீச்சர் என சொன்னேன், நான் உங்கள் பக்தனே இல்லை, இதில் எப்படி கீச்சர் என்பதெல்லாம்?''

''நீ முழு நேர கீச்சர் ஆகிவிட்டாய்?, என்னோடு நீ பேசுவதே இல்லை''

''இங்கே பாருங்கள், என்னை தொல்லை செய்யாதீர்கள், வைகுண்டம் போக வேண்டியதுதானே''

''மானிடர்கள் தங்களில் பொய் உருவம் உருவாக்கிக் கொள்கிறார்கள், அதில் அந்த கீச்சர்கள் மிகவும் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது நீ அறிந்ததுதானே''

''எனக்கு அதில் ஆர்வம் இல்லை, எவரோ என நினைத்துக் கொண்டு என்னிடம் வந்து பேசுகிறீர்கள்''

''பக்தா, யாம் உமது சித்து விளையாட்டு எல்லாம் அறிவோம்''

''என்னை நீங்க கலங்க படுத்த நினைத்து வந்து இருக்கிறீர்கள்''

''பக்தா, பொய்யாய் வாழ்வது பெரிய பாவம். நீ வேடம் தரித்து சென்றதை யாம் அறிவோம்''

''என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நான் கீச்சரும் அல்ல, கோச்சரும் அல்ல''

''பக்தா, இந்த கவிதை உன்னுடையது தானே''

''எந்த கவிதை''

''ஒன்றென கூடி இருக்கும் தமிழே
உலகம் நமதென ஒலிக்கும் தமிழே
நம் சிந்தையால் வளரும் தமிழ்
மகிழ்ந்தது நமது கூட்டம் கண்டு

எழுத்தில் நம்மை கண்டோம்
வருத்தமின்றி ரசித்து மகிழ்ந்தோம்
தமிழால் சாதித்தது நிறைய
சேர்ந்தோமே இன்று மீண்டும் அதை உரைக்க

ஊர் புகழ் உலகப் புகழ்
எல்லாம் தமிழ் தந்தது
எழுத்து கொண்ட பிம்பம்
எல்லாம் முன்னால் நின்றது
தமிழ் வளர்ப்போம், சிறப்போம்''

''சாமி, இது நான் எழுதலை, ஏன் இப்படி''

''பக்தா, இந்த கவிதை நீ எழுதியது, இதை நீ அங்கே பிறிதொருவரை வாசிக்க வைத்து ஓரிடத்தில் அமைதியாய் அமர்ந்து இருந்தாய், எனக்கு தெரியாதா?''

''உங்கள் கற்பனைக்கு அளவில்லை, நான் எழுதலை, நான் போகவும் இல்லை''

''எத்தனை சிறப்பாக இருந்தது தெரியுமா, ஆடலும், பாடலுமாய் சந்தோசத்தில் திளைத்து இருந்தார்கள், நீயும் தான். நீ அவளைத் தேடித்தான் அங்கே சென்றதும் அறிவேன்''

''போதும் நிறுத்துங்கள், நான் செல்லவே இல்லை''

''நீ இருந்தாய், பெண்கள் பெயரில் எழுதும் கீச்சரில் நீயும் ஒருவன்''

''இல்லவே இல்லை, பழி வேண்டாம்''

''பக்தா, என்னிடம் பொய் சொன்னது போதும். அது நீதான்''

''பெண் வேடமிட்டு எழுதி நான் என்ன சாதிக்கபோகிறேன்''

''பிறரை ஏமாற்றும் நோக்கம் இருக்கிறதே''

''எனக்கு எழுதவே தெரியாது''

''பக்தா, மெச்சினேன் உமது வீர தீரத்தை, நீ அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்து இருந்தாய்''

சட்டென விழித்துப் பார்த்தேன், இருளாக தெரிந்தது. என்னவென எழுந்து எனது மாடி அறையின் சன்னல் திறந்து பார்த்தேன்.

எவரோ ஒருவர் சத்தமாக பேசிய ஊர்ப்புகழ் உலகப்புகழ் எல்லாம் தமிழ் தந்தது என எனது அறையின் உள்ளே பாய்ந்து சென்றது.

மதியம் உறங்காதேனு எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா என அம்மா சப்தம் போட்டுக்கொண்டே மாடிக்கு வந்து கொண்டு இருந்தார்.


Monday, 28 April 2014

அருள்வாக்கு - அசரீரி

சின்ன சின்ன மழைத் துளிகள் பட்டு மண் மணம் எழுப்பிக் கொண்டு இருந்தது. மண் மணத்தை நுகர்ந்தாவரே நடக்கலானான் குரூரம் எண்ணம் படைத்த கோபாலன். எவரையாவது கவிழ்த்து விடவேண்டும் என்பதே இவனது ஆவல். இருப்பத்தி இரண்டு வயது ஆகிவிட்டது. ஆனால் விளையாட்டுத்தனம் இன்னும் இவனை விட்டு போகவில்லை. நல்ல மாநிறம், நல்ல உயரம், குறுகிய விழிகள், குறுகிய உடல்.

இவனது குணங்களை கண்டு எவருமே இவனுக்கு பொண்ணு தர முன்வருவதே இல்லை. இவனுக்கு கூட ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் கேசவன். கேசவன் நல்ல உயரம், கருத்த நிறம். பெரிய விழிகள். சில வருடங்கள் முன்னர் சிரித்த முகத்துடன் வலம் வருவான். கேசவன், கோபாலனை விட மூன்று வயது அதிகம். கடந்த வருடம் திருமணம் ஆகி இருந்தது. நல்ல மனைவி. ஆனால் கேசவன் ஒரு பெண்ணை காதலித்து குடும்ப சூழலால் அந்த பெண்ணை மணம் முடிக்காது போய் அந்த பெண் விஷம் குடித்து இறந்து போனாள் என்றால் எவருமே நம்ப மாட்டார்கள். ஆனால் அப்படித்தான் நடந்தது.

கேசவனின் குடும்பத்தில் அம்மா, அப்பா, அவனுக்கு என ஒரு தங்கை. தங்கை மிக நல்ல நிறம். அழகானவர். நன்கு படித்து இருந்தார். திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருந்தார்கள். அனேகமாக சில மாதங்களில் திருமணம் நடைபெறும் என்றே நம்பி இருந்தார்கள்.

கேசவனும், கோபாலனும் எப்படி நண்பர்கள் ஆனால் என்பதே ஒரு சுவாரஸ்யம். ஒருமுறை சிறுவயதில் ஆசிரியர் கேசவனை நன்றாக அடித்துவிட அழுதபடி நின்று இருந்தான் கேசவன். எதுக்கு அழற என விசயம் தெரிந்து அந்த ஆசிரியரை அவருக்கே தெரியாமல் கோபாலன் கல்லால் அடித்தது கேசவனுக்கு சந்தோசமாக இருந்தது. அப்படித்தான் முதல் பழக்கம். இப்படி ஏதேனும் பிரச்சினை வரும்போதெல்லாம் கோபாலன் கேசவனுக்கு உதவி செய்வதில் குறியாக இருந்தான். அதற்கு காரணம் கேசவனின் தங்கை அவனது வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தாள் என்பதை எல்லாமா எழுதி வைக்க வேண்டும்.

கோபாலனுக்கு கேசவனின் தங்கை வசந்தி மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. அதை கேசவனின் மீது காட்டி கொண்டு இருந்தான். நண்பன் என கேசவனின் நட்பு வட்டத்தில் இணைந்து கொண்டான் கோபாலன். இப்படி முன் அறிவிப்பு எல்லாம் எழுதி எதை எதையோ நியாயப்படுத்த வேண்டி இருக்கிறது. சரி கதைக்கு வருவோம். என்னா கதை உலகம்.

''கேசவா, என்ன ஒரு மாதிரியாக இருக்க''

''ஒன்னுமில்லைடா''

''உன்னோட ஒய்ப் உன்னை அடிச்சிட்டாங்களா''

''அது எல்லாம் ஒண்ணுமில்லை''

''உன்னோட தங்கச்சிக்கு நல்ல வரன் அமையலையா''

''தங்கச்சிதான் பிரச்சினை''

''என்ன பிரச்சினை?''

''தங்கச்சிக்கு பிறக்க போற பொண்ணுதான் என்னை கொல்லுமாம்''

''எந்த படுபாவி அப்படி சொன்னது?''

''பனைமரத்து ஜோசியர் அருள்வாக்கு அய்யாவு தான் சொன்னார்''

''அவரை எதுக்கு பாக்க போன''

''நல்ல அருள்வாக்கு சொல்றாருறு சொன்னாங்கனு நான் பார்க்க போனேன், ஆனா இப்படி தலையில இடி விழறமாதிரி பண்ணிட்டார்''

''எத்தனாவது குழந்தை, எப்படி கொல்லும், எதுக்கு கொல்லும், எத்தனை வயசில கொல்லும் இதெல்லாம் விளக்கமா சொன்னாரா?''

''அதெல்லாம் சொல்லலை, ஆனா முத பொண்ணு குழந்தை ஐஞ்சு வயசு ஆனப்பறம் கொல்லுமுனு சொன்னார்''

''பஞ்ச பரதேசி, தன்னோட பொழைப்புக்காக எப்படி எல்லாம் கதைவிட்டு திரியறான் அந்த ஆளு, அவரைப் போய் நீ நம்புறியே''

''இல்லை, அவர் ரொம்ப பேருக்கு எல்லாம் சொல்றதில்லை, குறிப்பிட்ட பேருக்கு சொல்றார் எல்லாம் அப்படியே நடக்குது''

''இப்ப என்ன பண்ணலாம்''

''எங்காவது தனியா போயிரலாம்னு இருக்கேன்''

''நீ எதுக்கு போற, உன் தங்கச்சிய கொன்னு போட்டுருவோமா''

''என்ன சொல்ற?''

''பிரச்சினை, உன்னோட தங்கச்சி பொண்ணு தானே, உன் தங்கச்சிய கொன்னு போட்டா பிரச்சினை முடிஞ்சது''

''ஆனா, எப்படியாவது இது நடந்தே தீரும்னு சொல்லி இருக்கார்''

''அவர் கிடக்கார், ஒன்னு கொன்னு போடுவோம், இல்லை நான் கட்டிக்கிறேன், குழந்தையே பிறக்காம நான் பாத்துகிறேன்''

''உன் புத்திய காட்டுற பாத்தியா. அவளை கொன்னா காலகாலத்திற்கும் என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்''

''இங்க பாரு, உன்னை காப்பாத்திக்க இரண்டே வழிதான், என்ன சொல்ற''

''உன்னை நம்பலாமா? ஆனா உனக்கு வீட்டுல பொண்ணு தரமாட்டாங்களே''

''நா குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிறவா?''

''பேசாம என் தங்கையை குடும்ப கட்டுப்பாடு பண்ண வைச்சிட்டா ஈசியா போயிரும்''

''அவளை கொல்றது ஈசி, ஆனா அவளை குடும்ப கட்டுப்பாடு பண்ண சொல்றது எல்லாம் கஷ்டம்''

''அவகிட்ட இந்த விசயத்தை சொல்லி என்னை காப்பாதிக்கிரலாமா''

''நாசமா போச்சு, இதெல்லாம் நடக்காது''

''அப்ப என்னதான் பண்றது''

''குழந்தை பிறந்தப்பறம் எங்கனயாவது விட்டுரலாம், இது மூணாவது வழி, அல்லது குழந்தைய கொன்னுரலாம் இது நாலாவது வழி''

''இல்லை, அவ கல்யாணம் பண்ணவ கூடாது''

''சரி பார்ப்போம்''

கோபாலன் வசந்தியை கல்யாணம் பண்ணிக்கொள்வது என நினைத்து இருந்த திட்டம் பாழாகிப் போனது. கேசவன் நிச்சயம் இனி சம்மதிக்கமாட்டான். இந்த விபரத்தை வசந்தியிடம் சென்று சொல்லி வைத்தால் என்ன என யோசித்தான் கோபாலன்.

''வசந்தி, உன்னை உன் அண்ணன் கொல்லப் போறான், உன்னோட முத குழந்தை ஐஞ்சி வயசில உன் அண்ணனை கொல்லுமாம். அய்யாவு சொன்னாராம்''

''நிசமாவா சொல்ற, என் அண்ணன் அப்படி பண்ணாது, நீதான் என்னை மிரட்டுற''

''வேணும்னா அய்யாவு கிட்ட போயி கேளு''

வசந்தி அய்யாவுவிடம் கெஞ்சி கூத்தாடி அவர் சொன்ன விசயத்தை தெரிந்து கொண்டாள். வீட்டில் அனைவருக்கும் தெரிந்தது. கேசவனின் மனைவி யாசவி வசந்தியை கெஞ்சி கூத்தாடினாள். அது எல்லாம் புரட்டு என கேசவனின் பெற்றோர் சமாதானம் செய்து பார்த்தார்கள். வசந்தி கடைசியாக திருமணம் பண்ண மாட்டேன், குழந்தை பெற்று கொள்ள மாட்டேன் என உறுதி கொடுத்தாள்.

ஏழரை வருடங்கள் கழிந்தது. வசந்தியின் தோழி மாதவி தனது கணவன் வசந்தராஜ், தன ஐந்து வயது பெண் குழந்தை சுபி உடன் வசந்தி வீட்டிற்கு  எப்போதாவது வருவது போல பிறந்தநாள் அழைப்புக்கு சொல்ல வந்து இருந்தார்கள். வசந்தி திருமணம் முடிக்காமலே இன்னும் இருந்தார்.

''சுபிக்கு ஐஞ்சு வயசு நேத்து முடிஞ்சிருச்சி, அடுத்த வாரம் சனிக்கிழமை பிறந்தநாள், வந்துருடி''

''எப்படி வளர்ந்துட்டா, வந்துருறேன்''

சுபியை கேசவன் தூக்கி வைத்து கொண்டு தனது அறைக்கு சென்று பொருட்கள் காமித்து கொண்டு இருந்தான். கேசவன் அம்மா எல்லோருக்கும் காபி போட்டு வந்து இருந்தார். கேசவனுக்கும் அவனது அறையில் வைத்து சென்று இருந்தார். கேசவன் சுபியை கீழே விட்டுவிட்டு தனது அறைக்கு சென்றான்.

மாதவி, சுபி, வசந்தராஜ் கிளம்பி சென்றார்கள்.

''ஐயோ'' என  மாதவி கத்தினாள்.

எல்லோரும் ஓடிப் போய் பார்த்தார்கள். கேசவன் மரணம் அடைந்து இருந்தான். மாத்திரை பாட்டில் ஒன்று மூடி கழன்று  மேசைக்கு அடியில் கீழே விழுந்து கிடந்தது.

அருள்வாக்கு அய்யாவு சொன்னது சரியாகவே பலித்தது. எல்லோரும் வசந்தியை பார்த்தார்கள். வசந்தி தலையை குனிந்தாள். 

சரி இந்த ஏழரை வருடங்கள் முன்னர் நடந்த கதை ஒன்று சொல்வோம்.

மாதவிக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் குழந்தை இல்லை. என்ன பிரச்சினை என அறிந்த போது மாதவியிடம் உருவாகும் கரு முட்டை மிகவும் பலவீனமாக இருந்தது. முதிர்ச்சி அடைய கரு முட்டை மறுத்தன. முதிர்ச்சி அடையாத கரு முட்டைகள் கருத்தரிப்பதில்லை. FSH (follicle stimulating hormone) சிகிச்சை எடுத்த பின்னரும் எதுவும் பலிக்கவில்லை. IVF (in vitro fertilisation) கூட செய்து பார்த்தார்கள். அப்போதுதான் வசந்தியை அணுகினாள் மாதவி.

''வசந்தி, எனக்கு ஒரு உதவி பண்ணுவியா?''

''என்ன மாதவி?''

''எனக்கு குழந்தை பாக்கியமே இல்லை, குழந்தை பெத்துக்க ஆசையா இருக்கு, ரொம்ப முயற்சி பண்ணினோம், ஆனா ஒன்னும் முடியலை. என்னை என் புருஷன் வெறுத்து ஒதுக்கிருவாரோனு பயமா இருக்கு. இன்னொரு முறை முயற்சி பண்ணுவோம், இல்லைன்னா வேறு வழி இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டார்''

''தத்து எடுத்துகிரலாமே''

''நான் பெறணும், அப்பதான் அவர் பாசமா இருப்பார்''

''என்னது இப்படி பேசற''

''என்னோட நிலைமை அப்படி இருக்கு''

மாதவியின் அழுகை வசந்தியை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.

''நான் என்ன பண்ணனும்''

''உன்னோட கரு முட்டைகள் தர முடியுமா?, டாக்டர்கிட்ட பேசி இதை வெளிய சொல்லாம பாத்துக்கிறேன்''

''இல்லை, அது வந்து''

''பிளீஸ், முடியாதுன்னு சொல்லாத, நான் செத்துருவேன்''

''கிறுக்கு மாதிரி பேசாத, எனக்கு பிறக்க போற முத பொண்ணு என் அண்ணணனை கொன்னுரும்னு சொல்லி தான் எனக்கு கல்யாணமே பண்ண வைக்க வேணாம்னு வீட்டுல சொல்றாங்க''

''உனக்கு எங்க பிறக்க போது, எனக்கு தானே பிறக்க போகுது, அது எல்லாம் அப்படி நடக்காது, எனக்கு இந்த உதவி செய்டி, உன்னோட உயிர்த்தோழி உயிரோட இருக்க வேணாமா சொல்லுடி''

மாதவியின் அழுகையும் அந்த பேச்சும் வசந்தியின் மதிதனை வேலை செய்யாமல் தடுத்தது. சரி என சம்மதம் தந்தாள்.

வசந்தியின் கரு முட்டை எடுக்கப்பட்டு, வசந்தராஜின் விந்துவுடன் இணைத்து குழந்தை கரு உருவானதும் மாதவியில் கருப்பையில் வைத்து பிறந்தவளே இந்த சுபி என்பது வசந்திக்கும், மாதவிக்கும் டாக்டருக்கு மட்டுமே தெரியும்.

இப்போது வருவோம். நிறைய மருந்து உட்கொண்டதால் கேசவன் உயிர் போனது என மருத்துவ அறிக்கை வந்தது. தற்கொலை என குறித்து வைத்தார்கள். சுபி விபரம் அறியாமல் அவளது வீட்டில் விளையாடி கொண்டு இருந்தாள்

வசந்திக்கு தன்  குழந்தைதான் தன் அண்ணனை கொன்றது என புரிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை.

(முற்றும்)