Monday, 3 March 2014

தாலேலோ ஆண்டாள்

அடேங்கப்பா ஆண்டாள் - 5

விஷ்ணுசித்தர் வில்லிபுத்தூரில் முகுந்த பட்டருக்கும், பத்மவல்லி அம்மையாருக்கும் பிறந்த ஐந்தாவது புதல்வர். முகுந்த பட்டரும், பத்மவல்லி அம்மையாரும் வடபெருங்கோவிலுடையானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு இருந்தார்கள். வேத விற்பன்னராக முகுந்தபட்டார் திகழ்ந்தார்.

விஷ்ணு சித்தரை ஒரு அந்தணர் போலவே வளர்த்தது முகுந்தபட்டர்தான். மற்ற குழந்தைகள் பற்றி எங்கேனும் குறிப்பு இருக்கிறதா, என்ன ஆனார்கள் என்பது குறித்த ஆராய்ச்சி இங்கே அவசியமற்று போகிறது. விஷ்ணுசித்தர் தன்னை ஒரு வைஷ்ணவராய் உருவகித்து பரமனுக்கு கைங்கர்யம் செய்வதில் நாட்டம் கொண்டு வந்தார். எந்தவகையான கைங்கர்யம் சிறப்பு என நினைத்தபோது மாலைகள் அணிவித்து மகிழ்ந்திருப்பது என எண்ணினார் விஷ்ணுசித்தர்.

ஒரு பூந்தோட்டம் அமைத்திட பெரும்பாடுபட்டு குளங்கள் எல்லாம் உருவாக்கி நந்தவனம் உருவாக்கினார். அங்கே எல்லா பூக்களும் பூத்து குலுங்கின. துளசி, தாமரை, முல்லை, மல்லிகை அழகு சேர்த்தன. அம்மலர் வாசனையை தான் நுகரக்கூடாது என நாசிகளை துணிகளால் மூடி மாலையாக்கி வடப்பெருங்கோவிலுடையானுக்கு சமர்ப்பித்து வந்தார்.

பாண்டிய நாட்டின் அரசன் வல்லபதேவன் மறுமையில் பேரின்பம் பெற என்ன வழி என ஒரு அந்தணரை சந்தித்ததால் உண்டான சிந்தனையில் வித்வான்களைத் திரட்டிட பறை அறிவித்து பெரும் பொருளை ஒரு வஸ்திரத்தில் கட்டி பொற்கிழியை ஒரு தோரணத்தில் தொங்கவிடப்பட்டது. எவர் மறுமையில் பேரின்பம் பெற இம்மையில் வழி சொல்கிறார்களோ அவர்கள் பொற்கிழி எடுத்துச் செல்லாமல் என அறிவித்தான்.

அன்றைய காலத்தில் புலவர்களுக்கு வேத விற்பன்னர்களுக்கு எப்போதும் ஒருவித போட்டி இருந்து கொண்டே இருப்பதாகவே வரலாறு குறிக்கிறது. முகுந்தபட்டர் விஷ்ணு சித்தருக்கு வேத சாஸ்திரங்கள் கற்று தந்து இருக்கக்கூடும், ஆனால் வேத சாஸ்திரங்கள் மூலம் இறைவனுக்கு கைங்கர்யம் செய்யாமல் மாலைகள் மூலம் மட்டுமே செய்துவந்தவர் விஷ்ணுசித்தர்.

பாண்டிய மன்னன் அறிவித்தமை கண்டு விஷ்ணுசித்தர் நிச்சயம் நினைத்து இருக்கக்கூடும். தந்தை கற்று தந்த கல்வி மனதில் ஓடியிருக்கும். ஆனால் இறைவனே விஷ்ணுசித்தரின் கனவில் வந்து பொற்கிழி அறுத்து வரும்படி சொல்லப்பட்டு இருக்கிறது. விஷ்ணுசித்தர் இறைவன் தம்மை வைத்து காரியம் நடத்த இருக்கிறார் எனும் உறுதி கொண்டு மதுரைக்கு கிளம்புகிறார்.

விஷ்ணுசித்தர் குறித்து வல்லபதேவன் தனது அவையில் இருந்த அந்தணர் செல்வநம்பிகள் மூலம் அறிந்து  இருந்தான். இப்போது வெறும் மாலைகள் மட்டுமே அணிவித்த ஒரு அந்தணர் ஒரே நாளில் பாண்டித்யம் பெறுவது கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம். சாஸ்திரங்கள் தெரியாத ஒருவரை இந்த அவையில் அனுமதிப்பது தவறு என்றே மற்ற அந்தணர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள். இறைவன் அருளிச்செய்த சாஸ்திரங்களை விஷ்ணுசித்தர் சொல்லி முடிக்கிறார். நாராயணனே பரம்பொருள் என்பதாக அது அமைகிறது.

விஷ்ணுசித்தர் பட்டர்பிரான் என அழைக்கப்பட தருணம் அது. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடிய பட்டர்பிரான் பரம்பொருளால் பெரியாழ்வார் என அழைக்கபட்டார் என்கிறது சேதி. இப்படி வாழ்ந்து வந்த பெரியாழ்வார் கண்ணனை தன்னை ஒரு யசோதாவாக பாவித்து பல பாடல்கள் இயற்றினார்.

தன்னை அன்னையாக வர்ணித்த பெரியாழ்வார் துளசி செடிக்கு அடியில் ஐந்து வயது குழந்தையாய் கண்டெடுக்கப்பட்டவர் ஆண்டாள். கண்ணனை குழந்தையாக, தன்னை தாயாக பாவித்து வர்ணிக்கும் பெரியாழ்வார் கண்டு ஆண்டாள் தனது காதலனாக கண்ணனை சித்தரித்தாள். சின்ன குழந்தையாய் ஆண்டாள். ஆண்டாள் வளர வளர அவள் கண்ணனும் வளர்கிறான் என்றே மனதில் பாடம் கொண்டாள்.

ஆண்டாள் செய்கை கண்டு பெரியாழ்வார் இப்படித்தான் பாடி வைக்கிறார்.

காறை பூணும் கண்ணாடி காணும் தன்
கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறி தேறி நின்று ஆயிரம் பேர்த்
தேவன் திறம் பிதற்றும்
மாறில் மாமணி வண்ணன் மேல் இவள்
மால் உருகின்றாளே

பெரியாழ்வார் போலவே ஆண்டாளும் பாடி முடித்து இருப்பாள். 'வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்' என்பார் பெரியாழ்வார். 'பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலை' 'புதுவையர்கோன் விட்டு சித்தன்கோதை' என்பார் ஆண்டாள்.

தாலேலோ ஆண்டாள், இளம் பிராயத்தில் அப்படியே உள்வாங்கி உன்னையே மாற்றிக் கொண்டாய்

(தொடரும்)

Sunday, 2 March 2014

காதல் மட்டும்

                                                  காதல் மட்டும் - சிறுகதை

                                                   வெ.இராதாகிருஷ்ணன்

இந்த வாழ்வு நமக்காக என்ன வைத்து இருக்கிறது எனத் தெரியாது. ஆனால் பல மகிழ்ச்சியானத் தருணங்களும், மறக்க இயலாத நினைவுகளும் நம்முடனே வந்து சேர்கின்றன. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது மனதுக்குப் பிடித்துப் போன சுபாவைப் பற்றி முன்னரே நிறைய அறிந்து வைத்திருந்தேன். சுபாவிடம் காதலைச் சொல்லும் அளவுக்கு அத்தனை தைரியம் அப்போது இருந்தது இல்லை. அவள் வேறு கல்லூரி நான் வேறு கல்லூரி ஆனபிறகும் மனதில் அவளது எண்ணமாகவே இருந்தது. பருவத்தில் வரும் காதல் போல மாறிவிடும் என்று பார்த்தால் அவள் மீதான காதல் தொடர்ந்தபடியே இருந்தது.

ஒருமுறை அவளைச் சந்தித்தபோது நான் என்ன படிக்கிறேன் என்ன செய்கிறேன் என மிகவும் ஆர்வமாகக் கேட்டாள். ஒருவேளை அவளும் என்னைக் காதலித்துக் கொண்டு இருக்கக்கூடும் என மனதில் நினைத்துக் கொண்டேன். அப்போதும் கேட்கவும் இல்லை. அதன் பிறகு கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு வேலைக்குச் சென்றபிறகு ஒருமுறை அவளைப் பார்த்தேன். அப்போதும் அவள் குறித்த எண்ணம் மனதை விட்டு அகலாமல் இருப்பது கண்டு நானே என் மனதை எண்ணி வியந்தேன்.

அப்போது நான் சேர்ந்த வேலை குறித்துச் சொன்னேன். அவளோ தற்போது தான் வேலைக்குச் செல்ல முடியாத சூழல் எனச் சொன்னாள். சூழல் சரியானப்பிறகு வேலைக்குப் போ எனச் சொல்லிவிட்டு வந்தேன். என்றோ பார்க்கிற முறையில் கூட சில சொற்களை மட்டுமே பேசிவிட்டு வந்தது எனக்குப் புரியாமல் இருந்தது. அப்போதுதான் வீட்டில் என் அம்மா என்னிடம் எனக்குப் பெண் பார்ப்பதாகச் சொன்னார். நான் அவசரம் அவசரமாக மறுத்துவிட்டு சுபாவை காதலிப்பதாகச் சொன்னேன். வீட்டில் அன்று பெரியப் பிரச்சினை ஆகிவிட்டது. இனிமேலும் தாமதிக்கக் கூடாது என அடுத்த வாரமே சுபாவைச் சந்தித்தேன்.

''சுபா உன்னை நான் நிறைய வருசமா காதலிக்கிறேன் ஆனா உன்கிட்ட சொல்ல தைரியம் வந்தது இல்லை, என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா''

''தீபக் உன்னை எனக்கும் நிறையப் பிடிக்கும், ஆனால் கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது வேணும்ன்னா காதலிக்கலாம்''

சுபா சொன்னதை நினைத்து நினைத்து எனக்கு அன்று உறக்கமே இல்லை. காதலின் அடுத்த நிலை கல்யாணம் என்றுதானே சொல்லப்பட்டு இருக்கிறது. காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனில் கல்யாணம் பண்ணிக்கொண்டு காதலிக்கலாம் என்று அவளிடம் சொல்ல வேண்டும் என மனம் நினைத்தது. எதற்கு இப்படி சட்டென திருமணமே வேண்டாம் என சொன்னாள் என்பது குழப்பமாக இருந்தது. சில நாட்கள் போகட்டும் என இருந்தேன்.

திடீரென ஒருநாள் சுபாவை பெண் பார்க்க போவோம் அவளுக்குத் தகவல் சொல்லிரு என வீட்டில் சொன்னதும் அவள் சொன்ன விசயத்தைச் சொன்னதும் வீட்டில் கோபம் கொண்டார்கள். நாம போய் பேசுவோம் இல்லைன்னா உனக்கு வேறு பொண்ணுதான் கல்யாணம் பண்ணி வைக்கனும் என உறுதியாகச் சொன்னார்கள்.

சுபாவின் வீட்டிற்கு பெண் பார்க்கச் சென்றோம். சுபா எவ்வித கோபமும் இல்லாமல் மெல்லிய குரலில் சொன்னாள்.

''நானும் தீபக்கும் காதலிக்கிறோம், ஆனா கல்யாணம் பண்ணிக்கிற மாட்டேன், இப்படியே காதலித்தபடியே இருப்பேன்''

அவ்வளவுதான், என் அப்பா கடுமையாகச் சத்தம் போட்டார்.

''அடுத்த சந்ததினு இல்லாம ஆயிரும் இந்தப் புள்ளையை இங்கேயே தலைமுழுகிட்டு வா'' விறுவிறுவென வெளியேறினார்.

''எங்களை மன்னிச்சிருங்க'' என நானே மன்னிப்பு கேட்டேன்.

''நாங்க எவ்வளவு சொன்னாலும் அவ கேட்கமாட்டேங்கிறா. கல்யாணம் பிடிக்காதுனு ஒரேயடியா சொல்றா நாங்க என்ன பண்ணட்டும்'' சுபாவின் தந்தையின் குரல் உடைந்து போயிருந்தது.

வேறு வேலை தேடிக்கொண்டு அதைக் காரணமாக வைத்து வீட்டை விட்டு வெளியேறியபோது சுபாவை சென்று அழைத்தேன். அவள் வர மறுத்தாள். சுபாவுடன் இருந்த தொடர்புக்கு சற்று இடைவெளி ஏற்பட்டது. ஆனால் மனதில் அவளது எண்ணங்களே இருந்தது. வேறொரு பெண்ணை நினைத்துப் பார்ப்பது என்பது அனலில் பட்ட புழு போல மனம் துடித்தது. காலம்தான் எத்தனை வேகமாகச் செல்லக் கூடியது. ஒரு வருடத்திற்குள் தங்கையின் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. அதற்காகவே ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

சுபாவை சந்தித்து பேசியபோது அவள் மனதில் எவ்வித மாற்றமும் இல்லை.

''சுபா என்னைத்தான் நீ நினைச்சிட்டு இருக்கியா''

''நீ என்னைய நினைச்சிட்டு இருக்கிறப்ப நான் உன்னை நினைச்சிட்டு இருக்க மாட்டேனா''

''கல்யாணம் பண்ணிப்போம் சுபா, என் தங்கை லதாவுக்கு கல்யாணம் பண்ற இடத்தில ஒரு வரன் இருக்கு அதை எனக்கு முடிக்கலாம்னு பார்க்கிறாங்க''

''நல்லபடியா கல்யாணம் பண்ணிக்கோ தீபக், வாய்ப்பைத் தவற விட்டுறாத''

அவளது சொற்கள் என்னைச் சீண்டுவது போல இருந்தது.

''உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் இல்லைன்னா இப்படியே இருக்கிறேன்''

''காதலிச்சிக்கிட்டே''

சிரித்தாள். அவளையும் விட்டு விலக இயலாமல் வேறொன்றை கைப்பற்ற மனம் இல்லாமல் தவித்தேன். அவளது உறுதி என்னை வியப்படையச் செய்தது. மறுபடியும் என்னோடு வருமாறு அழைத்தேன். அதற்கும் சம்மதிக்க மறுத்தாள்.

தங்கையின் வளைகாப்பு வந்தது. அப்போது ஊருக்கு சென்றபோது அவள் ஒரு வேலையில் சேர்ந்து இருப்பதாகச் சொன்னாள்.

''இப்போதாவது சொல் சுபா''

''தெய்வீகம்னா என்ன தீபக்''

''தெரியல, நீயே சொல்''

''சாத்திரம், சடங்கு, வழிபாடு எனும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ளாத தூய்மை, உண்மைதான் என்னைப் பொருத்தவரை தெய்வீகம்''

''அதுக்கென்ன, அதுக்கு ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்லனும்''

''சாத்திரம் சடங்குகளில் விருப்பம் இல்லை''

''சரி சேர்ந்து வாழ்வோம்''

''காதலித்தால் சேர்ந்து வாழனும்னு இருக்கா என்ன''

என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் சென்றுவிட்டேன். வாரம் ஒருமுறை சுபா மறுக்காமல் என்னை அழைத்துவிடுவாள். நானும் அவளை அழைத்துப் பேசுவது உண்டு. கல்யாணம் என்ற பேச்சை நான் பேசுவதை தவிர்த்து இருந்தேன்.

தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தபோது, அவனுக்கு மொட்டை எடுக்கும் போது என ஊருக்கு வந்து போனேன். நான் சுபா என்ன முடிவு எடுக்கிறாளோ அதுவே என் முடிவு எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டேன். சுபா குறித்து என் பெற்றோர்கள் எதுவும் தவறுதலாகப் பேசாது இருப்பது ஆச்சரியமாக இருந்தது.

சுபாவின் வீட்டிற்குச் சென்று என் தங்கையின் கணவர் வீட்டார் சென்று  மிரட்டவும் அவளது பெற்றோர்களை வேறு வீடு பார்க்கச் சொல்லி வீட்டின் உரிமையாளர் சொன்னதும் எனக்கு சுபா தகவல் சொன்னாள். நான் உடனே அவள் வேலை புரியும் இடத்திற்கு அருகில் ஒரு வீட்டினை வாங்க ஏற்பாடு செய்து அவர்களை அங்கே குடியமர்த்தினேன். அப்போது கூட அவள் வேண்டாம் என எவ்வளவோ மறுத்தும் நான் இந்த உதவியை ஏற்றுக்கொள் உனக்கு யாரும் தொல்லை தரமாட்டார்கள் என உறுதி சொன்னேன். அப்போது கூட என்னைத் திருமணம் பண்ணிக்கொள்ள வேண்டும் எனும் மனமாற்றம் அவளுக்கு ஏற்படவில்லை.

எனது தங்கை கணவர் வீட்டில் இனிமேல் சுபாவிற்குத் தொல்லை தந்தால் நானே காவல் நிலையத்தில் புகார் தருவேன் என மிரட்டி வைத்தேன். இனிமேல் உனக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது என தங்கை சொற்களை அள்ளி வீசினாள். எங்களுக்கு வயது முப்பத்தி மூன்று ஆனது. சுபாவின் பெற்றோர்கள் சுபாவை எவ்வித வறுபுறுத்தலும் பண்ணாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அடுத்த வருடமே என் அம்மா நோய்வாய்ப்பட்டது கண்டு ஊருக்கு ஓடோடி வந்தேன்.

''நான் சாகுறதுக்கு முன்னே கல்யாணம் பண்ணிக்கோப்பா, இல்லைன்னாலும் பரவாயில்லை நீங்க மகிழ்ச்சியா இருந்தா போதும்''

அந்தச் சொற்கள் என்னைக் கலங்க வைத்தது. சுபாவின் வீட்டை நோக்கிச் சென்றேன். அவளது தந்தை நோய்வாய்ப்பட்டு இருந்தார்.

''சுபா உன் அப்பா, என் அம்மாவுக்காக கல்யாணம் பண்ணிப்போம்''

''தீபக் காதலிச்சிட்டே இருப்போம், கல்யாணம் மட்டும் வேண்டாம்'' அவளது விழிகளும் கலங்கி இருந்தது.

சுபாவின் அம்மாதான் சொன்னார்.

''தம்பி அவதான் இப்படி இருக்கிறானா நீங்க ஏன் உங்க வாழ்க்கையை வீணாக்கனும் பேசாம ஒரு பொண்ணப் பார்த்து கல்யாணம் பண்ணி மகிழ்ச்சியா இருங்க''

எத்தனை எளிதாகச் சொல்லிவிட முடிகிறது. மனதில் சுபா நிறைந்து இருந்தாள்.

''சுபாதான் என்னுடைய மகிழ்ச்சி'' சொல்லிவிட்டு நடந்தேன். கலங்கிய விழிகளின் ஊடே சுபாவின் இதழ்களில் புன்னகை நிறைந்து இருந்தது. சுபாவுக்கு வீடு வாங்கித் தந்த விசயம் தெரிந்து தங்கை என்னுடன் ஏகத்துக்குச் சண்டை போட்டாள்.

''பெத்த தாய் உசிர விட உன்னோட காதல் பெரிசா ஒரு கல்யாணத்தை பண்ணித்தொலை''

அச்சிறு பெண்ணின் சொற்கள் என்னை அதிர்வுறச் செய்தன.

''அன்னைக்கு உறவு வேணாம்னு சொன்ன, இன்னைக்கு என் வீடு உனக்குச் சொந்தமா''

முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

''அம்மாவின் கைகளைப் பிடித்தபடி என்னை மன்னிச்சிருமா'' என்றேன்.

''நீ என்ன தப்பு பண்ணின, காதலிச்சிட்டுதான இருக்க உன் மேல, அந்தப் பொண்ணு மேல கோபம் எல்லாம் இல்லைப்பா, தங்கமான பொண்ணுப்பா ஏனோ அவளுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை'' அம்மாவின் அந்த மனமாறுதல் என்னை என்னவோ செய்தது. அன்று இரவே அம்மா இறந்து போனார்.

சுபா கதறி அழுத காட்சி என்னை என்னவோ செய்தது. ஈமகாரியங்கள் முடித்த பின்னர் வேலைக்குச்  செல்ல கிளம்பினேன். அப்பா என்னுடன் வர மறுத்தார். தங்கையிடம் அப்பாவை அழைத்து போகச்  சொன்னேன். அங்க என்ன வாழுது என்றாள். அம்மாவின் நகைகள், புடவைகள் எல்லாம் என் தங்கைக்கு என ஆனது. அப்பாவை அழைத்துச் செல்ல தங்கை மறுத்த கணத்தில் அப்பா உடன் செல்ல மறுத்தார். சுபாவும் அங்குதான் நின்று கொண்டு இருந்தாள்.

''டேய் பெத்தது நீங்க உங்க வழினு போயீட்டீங்க, பெறாத மகளா எங்களை கண்ணுக்குள்ள வைச்சி பாத்துக்குச்சி'' சுபாவை கைகாட்டி குலுங்கி குலுங்கி அழுதார். எனக்கு அப்போது சுர் என தைத்தது. வலித்தது.

சுபா வேறொரு அறை சென்று மிச்சம் அழுதாள்.

அவளைத் தேற்றிட நன்றி சொல்லிட எங்கே சொற்கள் தேடுவேன். பார்த்துக்கோ சுபா என வேலைக்குச் சென்றேன். இனம் புரியாத வலி. 

மேலாளரிடம் வேலையை ராஜினாமா செய்வதாக சொன்னேன். அவர் என்னை சத்தம் போட்டதில் மொத்த அலுவல சுவர்களும் விரிபட்டன. முகத்தில் முழிக்காதே என சொன்ன சொற்களில் சட்டென எழுந்தேன். வீடு வந்தேன்.

ஊருக்குத் திரும்பி வந்து அப்பாவுடன் அன்றுதான் மனம்விட்டு பேசினேன். அப்பாவுடன் தங்கி அங்கேயே வேலைப் பார்க்க ஆரம்பித்தேன். அவருக்குப் பணிவிடை செய்வது நிறைவாக இருந்தது. அம்மாவைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பார் அப்பா. எங்களை விட்டுட்டு நீ அப்படி போயிருக்கக் கூடாதுப்பா எனவும் ஊடே சொல்லிக் கொள்வார். 

பிரம்மச்சரியம் என்பது தவம். 
எவ்வித கறையின்றி 
நான் வாழ்வதற்கு நீ துணை. 
உன்னை முதிர்கன்னி என்றே பிறர் 
சொன்னாலும் காதல் இளமை நீ 

சுபாவை நினைத்து கவிதை என எதையோ மனதில் உளறினேன். 

சுபாவின் அப்பாவின் நிலைமை மோசமாகியது. மருத்துவ பலனின்றி மற்றொரு உயிர் போனது. சுபா மனம் மாறவே இல்லை, நானும் மனம் மாறிக் கொள்ளவில்லை. 

சுபா தனது வேலையை விட்டுவிட்டு அவளது அம்மாவை அழைத்துக் கொண்டு குழந்தைகள் காப்பகம் ஒன்றில் வேலை பார்க்க இருப்பதாகச் சொன்னாள். எனக்கும் சரி என்றானது. அந்த வீட்டை தங்கையின் பெயருக்கு எழுதித் தந்தேன். தங்கை, என்னை மன்னிச்சிருண்ணா என ஏதேதோ சொல்லிக்கொண்டு இருந்தாள். அவளுக்கு வீடு கிடைத்த நிம்மதி. 

சில மாதங்கள் கழித்து சுபாவை குழந்தைகள் காப்பகத்தில் பார்க்கச் சென்றேன். துள்ளித்திரிந்த குழந்தைகள் பார்த்து சொன்னேன். 

''இந்நேரம் நமக்கும் இப்படி குழந்தைகள் இருக்கும்ல சுபா''

''காதல் மட்டும்'' சிரித்தாள். 

''தாய்மை என்பது ஒரு பெண்மையின் அடையாளம். அந்த தாய்மை உணர்வு வேண்டாமா சுபா'' 

சின்னக் குழந்தையை அள்ளியணைத்தாள். நானொரு காதல் அன்னை என்றாள். 

விக்கித்து நின்றேன். மற்றொரு குழந்தையை அள்ளியணைத்தேன் நான். எங்கெங்கோ சென்று நிராதவற்ற  குழந்தைகளை கொண்டு வந்து சேர்த்து இருக்கிறாள். அவளது பணி பெரியது. சில வருடங்களில் அவளது அம்மாவும் இறந்து போனார். வாழ்க்கை வேகமாக நகரத் தொடங்கியது. ஐம்பதைத்  தொட்டு இருந்தோம். அப்பா தள்ளாடியபடி இருந்தார். இன்னும் ஒரு வருசமோ இரண்டு வருசமோ ஆனா ஒன்னு நான் உன் அம்மாவை எப்படி அடம் பிடிச்சி கல்யாணம் பண்ணிகிட்டேனோ அதைப்போல நீயும் அந்தப்பொண்ணைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு அடம்பிடிச்சி நின்னுட்ட என்றார். வலியில் கூட அவருக்குள் ஏதோ ஒருவித மகிழ்ச்சி.

ஒருநாள் குழந்தைகள் காப்பகம் சென்று அவளிடம் அங்கே ஓரிடத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தேன்.

''பிரம்மச்சரிய வாழ்க்கை எதற்கு'' 

''கல்யாணம் பண்ணி குழந்தைகள் பெற்று வாழ்ந்து பின்னர் தனித்து விடப்படுவது கொடுமை தீபக்'' 

எனக்கு அதன் பொருள் புரிந்தது. 

''இது மானுட வாழ்க்கை அல்லவே. காதல் புரிந்து கல்யாணம் பண்ணி இல்லறமே நல்லறம் சுபா'' 

''அது சாதாரண மனிதர்கள் செய்வது. உனக்கு அதில் உடன்பாடு இல்லை'' அழுத்தமாகச்  சொன்னாள். 

''என்ன சுபா, இத்தனை வருடங்கள் காதல் மட்டும் எனச் சொல்லிட்டே இருந்த எதற்கு இத்தனைப் பிடிவாதம் இப்போவாச்சும் சொல்லு''

''மனசுக்குப் பிடிச்சவங்க நிறைய. காதலானது கல்யாணம் எனும் சடங்குக்கு உட்பட்டால் களங்கம் தீபக்.  கலவியில் ஈடுபட்டு சுகித்திருப்பது காதல் இல்லை. இனப்பெருக்கம் செய்யப் பிறந்த பிறவிகள் இல்லை நாம். காதல் மட்டும் புரிந்திடவே நாம்''

''இப்படியே அனைவரும் நினைச்சா இந்த பூமி என்ன ஆகும்'' 

என் கண்களை பார்த்துக் கொண்டே இருந்தாள் . நான் அதில் கலங்கி இருந்தேன். 

''இவ்வுலகம் எப்படி உருவாச்சி தீபக்'' 

அம்மா என ஓடிவந்து ஒரு குழந்தை சுபாவின் கழுத்தை அணைத்து பின்னால் வந்து கட்டிக்கொண்டது. 

அந்தக் குழந்தையை உச்சி முகர்ந்தாள். 

''என்னம்மா''

''சாமி கும்பிட வாம்மா''

நானும் சுபாவுடன் சென்றேன்.

''என்ன கும்பிட்ட சுபா''

''இந்த அண்டப் பெருவெளியில் கடவுள் ஒரு புதிர். உயிர் இன்னொரு புதிர். கும்பிட எதுவும் இல்லை''

''இந்த உலகம் கடவுள் படைத்தது என் புரிதல்''

சிரித்தாள். 

''என்ன''

''என்னை இப்பவும் நீ இரசிக்கிறல'' 

''இத்தனை வருடங்கள் இதேதான்''

அதற்கு பின்னர் சுபா சொன்ன விசயம் கேட்டு அதிர்ந்தேன். அப்படி நடக்க சாத்தியமில்லை என்றுதான் எனக்குத் தோனியது. ஒரு செல் உயிரி சரி. எப்படி இப்படி அவள் சிந்தித்தாள்? பல செல்கள் கொண்ட உயிரி தானாக பல்கி பெருகும் காலநிலை ஒன்று வரும் எனவும் அங்கே காதல் மட்டும் நிறைந்து இருக்கும் எனவும் எப்படி அவளால் யோசிக்க முடிந்தது.

''சுபா புரியலை''

''பல செல்கள் உயிரியில் இருக்கும் ஸ்டெம் செல்கள் பருவகாலத்தில் உடலில் இருந்து உதிர்ந்து புதிய அதேபோல உயிரிகள் தோன்றும் தீபக்''

''விதை இல்லாத மரம் சாத்தியமில்லை'' 

''தண்டு வெட்டி மரம் வளரும்'' 

''நினைச்சேப் பார்க்க முடியலை சுபா''

''இனப்பெருக்கத்தில் இரண்டு வகை எப்போதுமே இருக்கு, எப்போ காதல் மட்டும்னு ஆகுதோ அப்போ நான் சொன்னது நடக்கும், மனுசங்க கல்யாணம் குழந்தைகள்னு விருப்பம் கொள்ளாத காலம்னு ஒன்னு உருவாகும் அப்போ நான் சொன்ன ஸ்டெம் செல்கள் குழந்தைகள் உருவாகும்''

அவளது சிந்தனை என்னவோ செய்தது. சில வருடங்கள் கழித்து அப்பா இறந்து போனார்.  மணமுடிக்காமல் காலம் காதலினால் மட்டுமே கடந்தது.

''ஏதேனும் வருத்தம் இருக்கா தீபக்''

''காதல் மட்டும்''

உடலைவிட்டு உயிர் பிரியும் காலம் நெருங்கியது. சுபா ஆவலோடு தழுதழுத்த குரலில் சொன்னாள். 

''இதோ அறிவியல் கண்டுபிடித்துவிட்டது, பல செல்கள் உயிரி தானாக பல்கும், பரிணாமத்தில் ஒரு மாற்றம் நிகழும். இனப்பெருக்க உறுப்புகளற்ற உயிரிகள் தோன்றும்''

''இல்லை சுபா, அப்படியே நிகழ்வுகள் உண்டானாலும் இந்த உலகம் இப்படியே இருந்தால் தான் நல்லது. காதல் புரிவது அதிசயம். அதிலும் காதலுக்கு மட்டுமே வாழ்வது ஆச்சரியம்''

மலர்ந்த முகத்துடன் கண்கள் மூடினாள். அவளது விழிப்பார்வையில் இனி நான் விழமாட்டேன் என எண்ணியபோது என் கண்கள் மூடியது. காதல் மட்டும். 

Wednesday, 26 February 2014

நுனிப்புல் மதிப்புரை - எஸ். ஐஸ்வர்யா

மதிப்புரை 

நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கெல்லாம் உடனே பதில் கிடைத்துவிட்டால் தேடல்கள் முடங்கிவிடும். பதில் கிடைக்கப் போவதும் இல்லை. ஆனால் உண்மை என்ன என்பது தெரிய வேண்டுமெனில் நாம் ஓர் எல்லையை கடந்து தேடுதலை விரிவுப்படுத்த வேண்டும். இந்த நாவலும் இதை நோக்கிய செல்கிறது, சென்று நம்மை தேடுதல் என்னும் மலை அடிவாரத்தில் நிறுத்தி பின் மலை உச்சியில் இருக்கும் உண்மையினை அறிய யாத்திரையை தொடர்கிறது. அப்படிப்பட்ட ஓர் களத்தில் தான் ஆசிரியர் கதாபாத்திரங்களை பயணிக்க செய்துள்ளார். கதாபாத்திரங்கள், நம்முள் பலமுறை தோன்றிய கேள்விகளின் எதிரொலி எழுந்து நின்று விடை தேட முயற்சிக்கின்றனவோ என்பது போல் தோன்றியது.

இயற்கைத் தாயின் அரவணைப்பில் செழித்துக் கொண்டிருக்கும் கிராமத்தில் இருந்து கதை தொடங்கிகிறது. சாதாரண விவசாயக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை முறையைத் தொட்டு, சமூக சிந்தனையை தெளித்துஅறிவியல் பூர்வமான கேள்விகளை எழுப்பி பின், கடவுளிடம் வந்து நின்று உள்ளக்கதவை தட்டிவிடுகிறது.

அறிவியல் சார்ந்த பல நுண் கருத்துக்களை விளக்கி கூற முயற்சித்தது வரவேற்கதக்கது. உயிர் ஆக்கம் செயல்பாடு குறித்தும், மரபியல் ரீதியான ஆராய்ச்சிகள் குறித்தும் கதாபாத்திரங்கள் மூலமாக பேசப்பட்டது நன்று. இன்னும் பேசப்பட்ட அறிவியல் கூற்று சிந்திக்க வைப்பவையாக இருந்தது 

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களின் நோக்கத்தை முன்நிறுத்தியே அனைத்தும் செல்வதாக காட்டினாலும் பின் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிற்கும் தொடர்புடையவையே என்ற உலகின் முக்கிய நியதியை முன்கொண்டு வந்து மெய்யூட்டிவிடுகிறது .

பெரியவர், பாரதி,மாதவி, திருமால், பெருமாள், பூங்கோதை போன்ற பாத்திரங்கள் நம்மை கவர்ந்தது மட்டுமின்றி அவர்களின் சுமைகளை நாம் சிறிது சுமந்தது போல் எண்ணத் தோணிற்று.

பெரியவர்களை போற்றுதல், அனைவரிடமும் அனுசரித்தல் போன்ற தனிமனித குணத்திலும்குழந்தைகளுக்கு பாடங்களையும் நற்கருத்துகளையும் போதித்தல், ஊர் பொறுப்பை ஏற்று மக்களை வழிநடத்தல்தன் நலமின்றி பிறர் நலத்திற்க்காக உழைத்தல் போன்ற சமூக அக்கறை கொண்டவனாகவும், மனஎழுச்சியின் போது தாயிடம் குமுறுவது, அறிந்தும் அறியாமலும் தன்னுள் உறங்கிகொண்டிருக்கும் கேள்விகள் எழும் தருவாயில் விடை தேடும் மனப்போராட்டங்களின் போது என அத்தனை இடங்களிலும் தன் பரந்த மனதைக்கொண்ட இக்கதாநாயகன் வாசன் நம் மனதில் வாசம் செய்துவிடுகிறான்.

ஆனால் இந்த யாத்திரை முழுவதும் ஆசிரியர் நம்மை இக்கதையின் இன்னொரு நாயகனை உடன் வைத்து கொண்டே அவனை நோக்கி  பயணிக்கத் திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு இடத்திலும் அவன் தன் பாத்திரத்தை வேண்டியளவு மட்டுமே வெளிப்படுத்துவது போன்றே கதை நகர்கிறது. அந்த நாயகனே நாராயணன் .

நுனிப்புல் மேய்தல் ஒவ்வொருவரையும் அடி முதல் முடி வரை நோக்கி உள்பொதிந்திருக்கும் கருத்தை திறந்து எடுக்க மனையின் வாசலில் நாம் காத்திருக்கும் நிலையை ஏற்ப்படுத்துகிறது!.

நன்றி


எஸ். ஐஸ்வர்யா

மிக்க நன்றி ஐஸ்வர்யா .