''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு'' இப்படித்தான் ஒரு விளம்பரத்துடன் கூடிய வாசகம் ஒரு தொலைகாட்சியின் நிகழ்ச்சியின் ஊடே வந்து வந்து போய்க் கொண்டு இருந்தது.
ஒரு பெண் ஆணை கற்பழிப்பு செய்ததாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. ஆனால் திருமணம் ஆனபின்னும் மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் உடல் உறவு கொள்ள முனைவானேயானால் அதுவும் கற்பழிப்புக்கு சமம் என்றே இந்த வாசகம் சொல்லிக்கொண்டு இருந்தது.
அப்படியெனில் ஆணுக்கு என்று ஒரு மனம் இருக்கும் இல்லையா, அவனுக்கும் கற்பு எல்லாம் இருக்கும் தானே. கணவன் விருப்பம் கொள்ளாத சமயத்தில் மனைவி வற்புறுத்தினால் அதுவும் கற்பழிப்பு என்றே சொல்லலாம். ஆனால் அது இல்லை. அந்த விளம்பரத்தில் பெண்ணை ஆண் துன்புறுத்துவதாகவே அமைகிறது.
கண்ணீருடன் அந்த பெண் திரும்பி படுத்துக் கொள்ளும் காட்சி கண்டு மனம் திடுக்கிடவே செய்தது. மனைவியின், கணவனின் விருப்பம் இல்லாமல் தாம்பத்ய வாழ்க்கை என்பது கொடுமையான விஷயம். ஆனால் உலகில் நடப்பது வேறு.
தனது இச்சைகளை தீர்த்து கொள்ளும் போக பொருளாகவே ஒரு பெண் பெரும்பாலும் இல்லறத்தில் நடத்தப்படுகிறார். உங்க வீட்டுல எப்படி என்று எல்லாம் எந்த கேள்வியும் இங்கே எழ வேண்டிய அவசியம் இல்லை, எவருடைய அந்தரங்க வாழ்விலும் தலையீடு செய்ய எனக்கோ உங்களுக்கோ உரிமை இல்லை.
ஆனால் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. எப்ப பார்த்தாலும் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு சலித்து போய்விட்டது, அப்பப்ப ஹோட்டல் சாப்பாடு நல்லது என குதர்க்கமாக பேசும் ஆண் சமூகத்திற்கு ஈடாகவே பெண் சமூகம் பேசும் எனில் ஒரு பிரளயம் நடந்தே தீரும். பெரும்பாலான மனைவிகள், கலவிக்கு எங்களை வலுக்கட்டாயமாக கணவன்மார்கள் ஈடுபட செய்கிறார்கள் என்கிறது ஒரு நிகழ்வு. இதையெல்லாம் வெளியில் சொல்லித் திரிய வேண்டி அவசியமில்லை என்கிறது இன்னொரு நிகழ்வு.
குறிப்புணர்தல் என்பது எப்போது மனைவி தயாராக இருக்கிறார் என்பதை அறிந்தே அதன் பின்னர் இந்த தாம்பத்யம் நிகழ வேண்டும் என்கிறது இலக்கியம். அதாவது ஆண் குறித்து எந்த இலக்கியமும் கவலை கொள்ளவில்லை. ஆண் இது குறித்து பேசுவான் எனில், சிந்திப்பான் எனில் அவனை காமுகன் என்றே பட்டம் கட்டிவிடுகிறது சமூகம். தலைவன் தலைவி எனும் இலக்கியம் குறித்து எழுதிட கண்ணகி, மாதவி, கோவலன் போதும்.
இது ஒரு இல்லற வாழ்க்கை. பெரும்பாலான விவகாரத்துகளின் அடிப்படை இதுதான். இல்லற தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படும் மன உளைச்சல் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு காரணம் ஆகிறது. கட்டியணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்றவைகள் எல்லாம் அன்பின் வெளிப்பாடு, ஆனால் கலவியை அன்பின் வெளிப்பாடு என எண்ணாமல் இச்சையின் வெளிப்பாடு என்றே பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். ஆணோ, கலவி என்பது அன்பின் வெளிப்பாடு என நினைப்பது நியாயமா என தெரியாது.
திருமணம் கூட கலவிக்கான ஒரு கட்டுப்பாடு, தீர்மானம், சுதந்திரம் என்றே சமூகத்தில் ஒருவித எண்ணம் உண்டு. ஆனால் அதைக்கூட விருப்பத்துடன் செய் என்றே சொல்லி முடிக்கிறது கோட்பாடு. இருவரின் விருப்பத்துடன் நடைபெற வேண்டும் திருமணம், அதுபோலவே எல்லா விசயங்களும் இருவரின் விருப்பத்திற்கேற்ப நடந்தால் ஆயிரங்காலத்து பயிர் செழிப்பாக வளரும்.
காமத்தின் மீதேறி
அன்பின் வழியதை
அடைத்து விட்டால்
வாழ்நாள் எல்லாம்
வலி தான்.
காமத்தின் மீதேறி
அன்பின் வழியதை
திறந்து விட்டால்
வாழ்நாள் எல்லாம்
சுகம் தான்.
''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு'' இந்த வாசகம் திருமணம் முடிந்தவர்களுக்கு மட்டுமா. திருமணத்திற்கு முன்னர் உடலுறவு என்பது தவறு என்றே சமூகத்தில் ஒரு எண்ணம் உண்டு. இதற்கு சமூகத்தின் எச்சரிக்கை என்னவெனில் வேண்டாத குழப்பங்கள் வந்து சேரும் என்றும் பாதுகாப்பு அற்ற வாழ்வு என்றும் சமூகத்தில் பெயர் கெடும் என்பதுவே. ஆனால் ஒரு பெண், ஒரு ஆண் காதலில் திளைத்து இருக்க காமத்தின் மீதேறி களவு செய்வாரெனில் அவரை எவர் தடுக்க இயலும். களவொழுக்கம் என்றே இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அது அவரவர் விருப்பம், ஆனால் அதற்கு பின்னர் ஏற்படும் ஏமாற்றங்கள் குறித்தே இந்த சமூகம் அக்கறை கொள்கிறது. சீர்கெட்டு விடாதே என்றே சொல்கிறது.
விபச்சாரம் என்பது விருப்பமில்லாத ஒன்று பலருக்கு. ஆனால் பணத்தின் மீது விருப்பம் கொண்டே இதை ஒரு தொழிலாக கொள்வோர் சிறிதளவேனும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை எதிர்த்து போரிடாத சமூகம் வியப்புக்குரியது. அவை பாலியல் பலாத்காரம் என்றே சொல்லப்படுவதில்லை. எந்த பெண்கள் சமூக அமைப்புகளும் அது குறித்து போர்க்கொடி உயர்த்தியதாக தெரியவில்லை. அங்கே அனைவரும் விருப்பம் கொண்டா இருக்கிறார்கள், ஆனால் அவர்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்றே சமூகம் ஒதுக்கி வைத்து விடுகிறது.
மேலிருக்கும் வாசகம் மீண்டும் அந்த நிகழ்வில் ஓடுகிறது.
''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு''
இவர்கள் மீது எல்லாம் எதற்கு கற்பழிப்பு சட்டங்கள் பாய்வதில்லை. இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரு விஷயம் இந்த கற்பழிப்பு, பெண் குழந்தைகள் கடத்தல் போன்ற அட்டூழியங்கள் தான்.
உலகில் இந்த காம உணர்வை கட்டுக்குள் வைத்துவிடும் மருந்து ஒன்று உண்டா என்றே தெரியவில்லை ஆனால் காம உணர்வை நீடித்து வைக்க மருந்து உண்டு.
காமத்தின் மீதேறி
பணம் பண்ணும்
கயமைத்தனம் சமூகத்தில்
புரியவொண்ணா செயல்
காமத்தின் மீதேறி
இளம் பிஞ்சுகளை
இயந்திர பொருளாக்கி
பெண் இனத்தை
பேதலிக்க செய்யும்
கொடிய சமூகம்
நிகழ்ச்சி முடிவடைகிறது.
காமத்தின் மீதேறி கயமைத்தனம் போகும் எனில் காதல் திளைத்து இருக்கும்.