Thursday, 20 February 2014

காமத்தின் மீதேறி

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு'' இப்படித்தான்  ஒரு விளம்பரத்துடன் கூடிய வாசகம் ஒரு தொலைகாட்சியின்  நிகழ்ச்சியின் ஊடே வந்து வந்து போய்க் கொண்டு இருந்தது. 

ஒரு பெண் ஆணை கற்பழிப்பு செய்ததாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. ஆனால் திருமணம் ஆனபின்னும் மனைவியின்  சம்மதம் இல்லாமல் கணவன் உடல் உறவு கொள்ள முனைவானேயானால் அதுவும் கற்பழிப்புக்கு சமம் என்றே இந்த வாசகம் சொல்லிக்கொண்டு இருந்தது. 

அப்படியெனில் ஆணுக்கு என்று ஒரு மனம் இருக்கும் இல்லையா, அவனுக்கும் கற்பு எல்லாம் இருக்கும் தானே. கணவன் விருப்பம் கொள்ளாத சமயத்தில் மனைவி வற்புறுத்தினால் அதுவும் கற்பழிப்பு என்றே சொல்லலாம். ஆனால் அது இல்லை. அந்த விளம்பரத்தில் பெண்ணை ஆண் துன்புறுத்துவதாகவே அமைகிறது. 

கண்ணீருடன் அந்த பெண் திரும்பி படுத்துக் கொள்ளும் காட்சி கண்டு மனம் திடுக்கிடவே செய்தது. மனைவியின், கணவனின் விருப்பம் இல்லாமல் தாம்பத்ய வாழ்க்கை  என்பது கொடுமையான விஷயம். ஆனால் உலகில் நடப்பது வேறு. 

தனது இச்சைகளை தீர்த்து கொள்ளும் போக பொருளாகவே ஒரு பெண் பெரும்பாலும் இல்லறத்தில் நடத்தப்படுகிறார். உங்க வீட்டுல எப்படி என்று எல்லாம் எந்த கேள்வியும் இங்கே எழ வேண்டிய அவசியம் இல்லை, எவருடைய அந்தரங்க வாழ்விலும் தலையீடு செய்ய எனக்கோ உங்களுக்கோ உரிமை இல்லை. 

ஆனால் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. எப்ப பார்த்தாலும் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு சலித்து போய்விட்டது, அப்பப்ப ஹோட்டல் சாப்பாடு நல்லது என குதர்க்கமாக பேசும் ஆண் சமூகத்திற்கு ஈடாகவே பெண் சமூகம் பேசும் எனில் ஒரு பிரளயம் நடந்தே தீரும். பெரும்பாலான மனைவிகள், கலவிக்கு எங்களை வலுக்கட்டாயமாக கணவன்மார்கள் ஈடுபட செய்கிறார்கள் என்கிறது ஒரு நிகழ்வு. இதையெல்லாம் வெளியில் சொல்லித் திரிய வேண்டி அவசியமில்லை என்கிறது இன்னொரு நிகழ்வு. 

குறிப்புணர்தல் என்பது எப்போது மனைவி தயாராக இருக்கிறார் என்பதை அறிந்தே அதன் பின்னர் இந்த தாம்பத்யம் நிகழ வேண்டும் என்கிறது இலக்கியம். அதாவது ஆண் குறித்து எந்த இலக்கியமும் கவலை கொள்ளவில்லை. ஆண் இது குறித்து பேசுவான் எனில், சிந்திப்பான் எனில் அவனை காமுகன் என்றே பட்டம் கட்டிவிடுகிறது சமூகம். தலைவன் தலைவி எனும் இலக்கியம் குறித்து எழுதிட கண்ணகி, மாதவி, கோவலன் போதும். 

இது ஒரு இல்லற வாழ்க்கை. பெரும்பாலான விவகாரத்துகளின் அடிப்படை இதுதான். இல்லற தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படும் மன உளைச்சல் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு காரணம் ஆகிறது. கட்டியணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்றவைகள் எல்லாம் அன்பின் வெளிப்பாடு, ஆனால் கலவியை அன்பின் வெளிப்பாடு என எண்ணாமல்  இச்சையின் வெளிப்பாடு என்றே பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். ஆணோ, கலவி என்பது அன்பின் வெளிப்பாடு என நினைப்பது நியாயமா என தெரியாது. 

திருமணம் கூட கலவிக்கான ஒரு கட்டுப்பாடு, தீர்மானம், சுதந்திரம் என்றே சமூகத்தில் ஒருவித எண்ணம் உண்டு. ஆனால் அதைக்கூட விருப்பத்துடன் செய் என்றே சொல்லி முடிக்கிறது கோட்பாடு. இருவரின் விருப்பத்துடன் நடைபெற வேண்டும் திருமணம், அதுபோலவே எல்லா விசயங்களும் இருவரின் விருப்பத்திற்கேற்ப நடந்தால் ஆயிரங்காலத்து பயிர் செழிப்பாக வளரும். 

காமத்தின் மீதேறி 
அன்பின் வழியதை 
அடைத்து விட்டால் 
வாழ்நாள் எல்லாம் 
வலி தான். 

காமத்தின் மீதேறி 
அன்பின் வழியதை
திறந்து விட்டால் 
வாழ்நாள் எல்லாம் 
சுகம் தான். 

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு''  இந்த வாசகம் திருமணம் முடிந்தவர்களுக்கு  மட்டுமா. திருமணத்திற்கு முன்னர் உடலுறவு என்பது தவறு என்றே சமூகத்தில் ஒரு எண்ணம் உண்டு. இதற்கு சமூகத்தின் எச்சரிக்கை என்னவெனில் வேண்டாத குழப்பங்கள் வந்து சேரும் என்றும் பாதுகாப்பு அற்ற வாழ்வு என்றும் சமூகத்தில் பெயர் கெடும் என்பதுவே. ஆனால் ஒரு பெண், ஒரு ஆண் காதலில் திளைத்து இருக்க காமத்தின் மீதேறி களவு செய்வாரெனில் அவரை எவர் தடுக்க இயலும். களவொழுக்கம் என்றே இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அது அவரவர் விருப்பம், ஆனால் அதற்கு பின்னர் ஏற்படும் ஏமாற்றங்கள் குறித்தே இந்த சமூகம் அக்கறை கொள்கிறது. சீர்கெட்டு விடாதே என்றே சொல்கிறது. 

விபச்சாரம் என்பது விருப்பமில்லாத ஒன்று பலருக்கு. ஆனால் பணத்தின் மீது  விருப்பம் கொண்டே இதை ஒரு தொழிலாக கொள்வோர் சிறிதளவேனும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை எதிர்த்து போரிடாத சமூகம் வியப்புக்குரியது. அவை பாலியல் பலாத்காரம் என்றே சொல்லப்படுவதில்லை. எந்த பெண்கள் சமூக அமைப்புகளும் அது குறித்து போர்க்கொடி உயர்த்தியதாக தெரியவில்லை. அங்கே அனைவரும் விருப்பம் கொண்டா இருக்கிறார்கள், ஆனால் அவர்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்றே சமூகம் ஒதுக்கி வைத்து விடுகிறது. 

மேலிருக்கும் வாசகம் மீண்டும் அந்த நிகழ்வில் ஓடுகிறது. 

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு'' 

இவர்கள் மீது எல்லாம் எதற்கு கற்பழிப்பு சட்டங்கள் பாய்வதில்லை. இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரு விஷயம் இந்த கற்பழிப்பு, பெண் குழந்தைகள் கடத்தல் போன்ற அட்டூழியங்கள் தான். 

உலகில் இந்த காம உணர்வை கட்டுக்குள் வைத்துவிடும் மருந்து ஒன்று உண்டா என்றே தெரியவில்லை ஆனால் காம உணர்வை நீடித்து வைக்க மருந்து உண்டு. 

காமத்தின் மீதேறி
பணம் பண்ணும் 
கயமைத்தனம் சமூகத்தில் 
புரியவொண்ணா செயல் 
காமத்தின் மீதேறி 
இளம் பிஞ்சுகளை 
இயந்திர பொருளாக்கி 
பெண் இனத்தை 
பேதலிக்க செய்யும் 
கொடிய சமூகம் 

நிகழ்ச்சி முடிவடைகிறது. 

காமத்தின் மீதேறி கயமைத்தனம் போகும் எனில் காதல் திளைத்து இருக்கும். 

Wednesday, 19 February 2014

ஆண் கேட்க வந்தவள்

அடேங்கப்பா ஆண்டாள் - 4

பெண் பார்க்க போறது எல்லாம் ஒரு வைபவம் மாதிரியே நடக்கும். முதலில காமிப்பாங்க, அப்புறம் ஜாதகம் பார்ப்பாங்க இதெல்லாம் சரியா இருந்தா பெண் பார்க்க போவாங்க. அப்புறம் பெண் பார்க்க போற இடத்தில் பெண்ணுக்கு என்ன என்ன தெரியும்னு கேட்டுட்டு பையனுக்கு என்ன வேலை, எவ்வளவு சம்பளம் வரைக்கும் பேசி அப்புறம் பலகாரங்கள், இனிப்பு வகைகள் எல்லாம் கொடுத்து அதோட ஒரு காப்பி கொடுப்பாங்க.

இந்த பொண்ணு அன்னைக்குன்னு சும்மா ஜெகஜோதியா அலங்காரம் பண்ணி உலகத்திலே இல்லாத வெட்கத்தை எல்லாம் ஒரு சேர முகத்தில் சேர்த்து அன்னப்பறவை நடை சேர்த்து குனிஞ்ச தலை நிமிராமல் அப்படியே பாத்தும்  பாக்காமல் காபி கொடுத்துட்டு போவாங்க. பொண்ணு பிடிச்சி இருந்தா அந்த நேரத்தில் பையன் முகத்தில் தெரியும் கலக்கமிகுந்த சந்தோசம் ஒருவித  வெட்கம்தான்.

இப்ப எப்படி ஊருல பொண்ணு பார்க்கும் வைபவம் எல்லாம் நடைபெறுகிறதுன்னு தெரியலை. இதே மாதிரிதான் கிட்டத்தட்ட இருக்கும்னு வைச்சிக்கிரலாம். கல்யாணத் தரகர் பண்ண வேண்டிய வேலையை திருமண இணையதளங்கள் பண்ணி கொடுக்குது இப்ப.

சில விசயங்கள் மனசுக்கு பிடிச்சி இருந்தா மேற்கொண்டு எல்லா வைபவங்களும் நடைபெறுது. எப்படினாலும் பெண் கேட்கும் படலம் இருக்கத்தான் செய்து. இது அந்த காலத்தில் கூட உண்டு. சீதையை பெண் பார்க்க வந்த அரசகுமாரர்களுக்கு போட்டி வைத்து அதில் வில் உடைத்து வென்ற ராமனே மணாளான். உண்மையிலேயே ராமன் வில் உடைத்தது அவருடைய பராக்கிரம உடல் வலிமை எல்லாம் கிடையாது. எல்லாம் சீதையின் கடைக்கண் பார்வை வந்த வலிமைதான். என் வலிமை பெண்ணால் வந்ததா அப்படின்னு ராமர் வருத்தப்படமாட்டாரு.

ஆனா ஒரு பெண் ஆண் கேட்க இந்த பூவுலகில் வலம்  வந்தாள். அவள் தான் நம்ம ஆண்டாள். உனக்கு எந்த மணாளன் வேண்டும் எடுத்துக்கொள் என்று எந்த ஒரு போட்டியும் இல்லாமல் தனக்குப் பிடித்த மணாளானை தேர்ந்தெடுத்தாள் ஆண்டாள். ஆனால் அந்த மணாளானை தான் தேர்ந்தெடுக்கும் முன்னர் பட்ட பாட்டிற்கு தமிழ் பெருமை கொண்டது.

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள் 
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோராச் சோர்வேனை 
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே 

என்னை சேராதிருந்தால் அந்த திருவேங்கடத்தானுக்கு என்ன பெருமை, என்னை இப்படி அழ வைக்கின்றானே, என் பெண்மையை அழிக்கின்றான் என மேகங்களிடம் சொல்லித் தவிக்கும் ஆண்டாள் தவிப்பு மேகங்களிடம் ஆண் கேட்டவள். நீ உடன் இருக்க நான் வேண்டினேன் என்பதுவே இது.

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள், வேங்கடத்துத் 
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு 
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் 
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே 

மார்புடன் மார்பாக தான் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் பிறந்து இருக்கிறேன் என சொல்லுமாறு மேகங்களை பணித்த ஆண்டாள், வேங்கடவனின் மார்பில் அந்த நப்பினை பிராட்டி இருப்பதை தெரிந்தேதான் கேட்கிறாள். அடடே ஆண்டாள் பிறரின் கணவன் உனக்கு ஏனடி என்று பெற்ற அப்பா ஓங்கி நாலு அறைவிடாமல் எந்த மணாளன் வேண்டுமென சொல் என்றல்லவா சொல்லி இருக்கிறார் என்பது ஏனெனில் நப்பின்னையே ஒரு ஆண்டாள் உருவம் கொண்டு வந்ததுதான், ஆக அந்த பரந்தாமன் எழுந்தருள வேண்டியதுதான் பாக்கி.

தனக்கு என ஒரு மனைவி இருக்க எப்படியம்மா அவன் கீழிறங்கி வருவான் என்றே நாம் நினைக்க அந்த பரந்தாமன் அருள் பாலித்து வந்தான் என்றே சொல்கிறது ஆண்டாள் வரலாறு. ஆண்டாளின் காதல் தூய்மையானது.

சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச் 
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம் 
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள் 
தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே 

இந்த பாடலுக்கு ஏதோ ஆண்டாள் பரந்தாமனுடன் ஒருநாளேனும் வாழ்ந்து அதாவது கலவி செய்து விடவேண்டுமென ஆசைப்பட்டு அழைப்பது போல் ஓரிடத்தில் அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். ஆண்டாளின் எண்ணம் கலவிக்காக அன்று. அது காதல். ஒரு நாளேனும் அவர் வந்து என்னை அரவணைத்துக் கொண்டால் எனது கொங்கைகளின் மேல் நான் தடவி இருக்கும் குங்கும பூச்சு அழியும், அந்த ஒருநாள் என் உடன் இருக்கும் அன்பு கூட போதும். நான் அந்த நப்பினை பிராட்டியின் அவதாரம் என்றே அந்த பரந்தாமன் அறியமாட்டாவோ என்பதற்கே ஒருநாள் போதும், என் உயிர் வாழும் என்கிறாள்.

அடேங்கப்பா ஆண்டாள், நீ கொண்ட அந்த பரந்தாமன் மீதான காதலில் உனது மார்புக்கு நீ கொடுத்த முக்கியத்துவம் எதற்கு என்றே எண்ணிப் பார்க்கிறேன். காரணம் உனக்கு தெரியாததா ஆண்டாள்.


(தொடரும்) 

Friday, 14 February 2014

அடேங்கப்பா ஆண்டாள் - 3

உண்மையிலேயே ஆண்டாள் பற்றி பேச எனக்கு தகுதி இருக்கானு தெரியலைங்க. ஆனால் ஆண்டாள் பற்றி விஜயபாஸ்கர பட்டர் எழுதின புத்தகத்தில் இருந்து ஏராளாமான விஷயங்கள் ஆண்டாள் பற்றி தெரிஞ்சிக்கிரலாம்.

அந்த புத்தகத்தில் ஒவ்வொரு நாச்சியார் திருமொழி எழுதின காரணத்தை சொல்லி இருப்பாங்க. இப்படியா ஒரு பெண் தன்னை அலைக்கழித்து கொள்வார் என்றே எனக்கு தோணியது. எல்லாம் இந்த பெரியாழ்வார் பண்ணின வேலை. சும்மா இருக்காம எப்ப பார்த்தாலும் கண்ணன் கண்ணன் சொல்லி சொல்லியே ஆண்டாளை இப்படி பண்ணிட்டாரு.

ஆண்டாள் அப்படின்னு பேரு கூட பெரியாழ்வார் கொடுத்ததுதான். இந்த பெரியாழ்வார் பத்தின கதை, ஆண்டாள் பத்தின விபரங்கள் எல்லாம் அப்புறம் பாக்கலாம்.

இந்த ஆண்டாள் எதுக்கு இப்படி எழுதினாள் அப்படின்னு நான் நினைச்சிட்டே இருப்பேன். அந்த பாட்டு இப்போ இங்கே.

சுவரில் புராணநின் பேரேழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தெனொல்லை விதிக்கிற்றியே

வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே

காயுடை நெல்லொடு கரும்பமைத்து
கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிருமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே

மேலிருக்கும் பாடல் எல்லாமே முதல் திருமொழி. இப்போ இதுக்கு இந்த மூணு பாட்டு தேர்ந்தெடுத்தேன் தெரியுமா, எல்லாம் காரணமாகத்தான். எங்க கிராமத்தில எல்லாம் தாய்ப்பால் அப்படின்னு சொல்வாங்க. முலைப்பால் அப்படின்னு ஒருத்தரும் சொல்லமாட்டாங்க. இப்ப எல்லாம் இந்த தாய்ப்பால் விஷயம் எல்லாம் விளம்பரம் பண்ணிற மாதிரி ஆகிப்போச்சு. இந்த தாய்ப்பால் மூலமா குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கடத்தப்படற விஷயம் எல்லாம் அறிவியல் இப்போ சொன்னதுதான். ஆனா இது எல்லா பாலூட்டி ஜீவராசிகளும் வழக்கம் போல செய்வதுதான்.

இந்த பெண்ணின் அங்கம் ஒரு கவர்ச்சி என்ற விதத்தில் மாறிப்போனது நமது துரதிர்ஷ்டம். பாரதியார் கூட கச்சணிந்த கொங்கை மாந்தர் என எழுதினார். அதைவிட அபிராமி பட்டர் ஒருபடி மேலே போய் எழுதி இருப்பார். அவரை பிறகு பார்ப்போம். பைத்தியமாடா உங்களுக்கு என்று இவர்களை ஏசி விடத்தோணுமா, தோணாது. ஆனால் இதை எல்லாம் ஒரு இலக்கியத்தில் வைத்து அழகு பார்த்தார்கள். இந்த வரிகளை படிக்கும்போது ஒருத்தரும் தவறான எண்ணங்களை மனதில் கொண்டு வரமாட்டார்கள், காரணம் என்ன தெரியுமா. அதுதான் அடேங்கப்பா என பிரமிக்க வைக்கும் எழுத்துகளின் ஆளுமை. பெண்களை இப்படித்தான் வர்ணிக்கவேண்டும்  என்பதல்ல. அது காதலின் உச்சகட்டம், கலையுணர்வில் காமம் தெரிவதில்லை என்பதற்கே கல்லில் எல்லாம் நிர்வாண கோலங்களை செதுக்கி வைத்தார்கள். உணர்வில் மறைத்தும், உணர்வற்ற ஒன்றில் வெளிப்படுத்தியும் காட்டியது அன்றைய கலை.

இன்றைக்கு வேண்டாம், எல்லாமே வக்ர துண்டாய தீமஹி என ஆகிவிட்டது. தனது எண்ணத்தை ஆண்டாள் வெளிப்படுத்தினாள், அதைத் தேடிப் படித்து அவள் இப்படி எழுதிவிட்டாள் என சொல்வது நமது குற்றம். கெட்ட நோக்கத்தில் இப்போது சொல்லிவிட்டு ஆண்டாள் மட்டும் எழுதலாமா என்றால் நம்மால் ஆண்டாள் போல் பக்தியை வெளிக்காட்ட முடியுமா என்ன. நினைத்த போதெல்லாம் காதலன், காதலி மாற்றும் நமது சமூகத்திற்கு ஆண்டாள் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.

இந்த ஆண்டாள் எதற்கு இப்படி எழுதினாள். தனது மார்பகங்கள் குறித்து எழுதவேண்டிய நிர்பந்தம் ஆண்டாளுக்கு வந்தது என்ன காரணம். ஒரு பெண் தனது காதலை இத்தனை வெளிப்படையாகவா சொல்ல இயலும். அதுவும் அந்த மன்மதனிடம் மன்றாடினாள். தான் ஒரு பெண் என்பதையும் அந்த எம்பெருமானுக்கே என்னை கொடுத்தேன் என்பதையும் காதலால் கசிந்துருகி சொன்னாள். இதில் எவ்வித விரசமும் இல்லை. எங்கள் கிராமமும், எங்கள் கிராமத்து அம்மாக்கள் எல்லாம் மிகவும் சகஜமாகவே பேசுவார்கள். ஆனால் இன்றைய நாகரிகம் எல்லாம் மூடித்தொலைத்து காமம் என ஆக்கிவிட்டது. அதுசரி ஆண்டாள் எதற்கு சொல்ல வேண்டும் இதோ அவள் எழுத காரணமான காட்சி.


திருப்பாவை ஒன்றில் இப்படித்தான் பாடினாள்

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
     வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
     எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
     தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்


அடேங்கப்பா ஆண்டாள். நீ தைரியமானவள். நான் மிகவும் கோழை.

(தொடரும்)