Thursday, 13 February 2014

அடேங்கப்பா ஆண்டாள் - 2

ஸ்ரீவில்லிபுத்தூர் அப்படினாலே எனக்கு ரொம்ப பிடிச்சது பால்கோவா. ஐயோ எப்படி இருக்கும் தெரியுமா. அப்படியே மொத்தமா வாங்கி சாப்பிட்டு பழகி இருக்கேன். எங்க ஊருல ஒரு ஹெல்ப்பர் மாமா இருந்தாங்க, அவரோட பையன் ஸ்ரீதர். ஸ்ரீதர் என்னோட ரொம்ப நெருங்கிய நண்பன். இன்னமும் என் மேல மாறாத பாசம் வைச்சிருக்கிறவன். சின்ன வயசுல நிறைய புத்தகங்கள் வாசிப்பான். புத்தகத்தை கூட பத்து பைசா, பதினைஞ்சி பைசான்னு வாடகைக்கு தருவான். எங்க ஊருல இருந்து மல்லாங்கிணறுக்கு மாறி போனாங்க. ஆனாலும் ஊருக்கு வந்தா என்னை பாக்காம போகமாட்டான். நான்தான் ரொம்பவே ஒதுங்கி போயிட்டேன். இந்த வாட்டி தேடி வந்து பாத்துட்டு போனான். சந்தோசமாகவே இருந்தது. 

அப்புறம் அவங்க அருப்புகோட்டை போய்ட்டாங்க. ஆனா அதுக்கு முன்னாடி அவங்க ஸ்ரீவில்லிபுத்தூர்ல கொஞ்ச வருஷம் இருந்தாங்க. என்னை அங்க வந்து சில நாள்கள் இருக்க சொன்னாங்க. நானும் விடுமுறைக்கு  அங்க போயி ரெண்டோ மூணோ நாட்கள் தங்கி இருந்தேன். மலைகள் அது இதுன்னு இருந்தது. கோவிலுக்கு எல்லாம் போனேன். அங்கே ஆண்டாள் முகம் பாக்கிற கிணறு எல்லாம் காட்டினாங்க. நான் கூட ஆண்டாளோட முகம் எங்கனயாச்சும் ஒட்டிக்கிடாக்கானு பாத்தேன். சும்மா சொல்லலைங்க, எனக்கு ஆண்டாள் அப்படினா அத்தனை இஷ்டம். 

அப்புறம் எப்போ ஸ்ரீவில்லிப்புத்தூர் போனேன்னு எனக்கு தெரியாது. மறந்து போயிட்டேன். சமீபத்துல சில வருடங்கள் முன்னர்  நுனிப்புல் புத்தக விஷயமா நண்பர் ரத்தினகிரியை சிவகாசியில பார்த்துட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போனேன். அங்கே அனந்தசயன பட்டர் எனக்கு நிறைய கதைகள் சொன்னாரு. அதை வைச்சித்தான் நுனிப்புல் இரண்டாம் பாகத்தில் சில கதைகளை கலந்துவிட்டேன். எனக்கு அவருகிட்ட பேசிட்டே இருக்கணும் போல இருந்தது. 

எப்படி திருவில்லிபுத்தூர் உருவானது முதற்கொண்டு அந்த கதைகள் இருந்தது. எனக்கு பெரியாழ்வார் வம்சாவழி இருக்காங்களான்னு தேடிப் பார்க்கணும் போல இப்போ இருக்கு. ஆனால் அப்போ எதுவுமே எனக்கு கேட்க தோணலையே. அப்போதான் எனக்கு இந்த பெரியாழ்வார்தான் ஸ்ரீ ஆண்டாள் மாதிரி தன்னை உருவகிச்சி எழுதினாரு அப்படின்னு ஒருத்தர் சேதி சொன்னார். உடனே எனக்கு வந்த வாசகம் தான். ''உண்மையை யார் உண்மையாக இருக்க விட்டது'' அப்படின்னு. இதை முத்தமிழ்மன்றத்தில பார்த்த மணிப்பாண்டினு ஒரு நண்பர் இது ஞான வாக்கு அப்படினு சொன்னார். ஐயோ இது கோப வாக்கு அப்படின்னு மனசுல சொல்லிக்கிட்டேன். ஆமா எதுக்கு பெரியாழ்வார் தன்னை ஆண்டாள் மாதிரி வேஷம் போட்டு பண்ணனும். அவருக்கு வேறு வேலை இல்ல. அன்னைக்கி சொன்னவர்கிட்ட பதிலே பேசாம சிரிச்சிட்டே போய்ட்டேன். 

இந்த ஆண்டாள் யாரு பெத்த புள்ளையோ. என்னை எங்க ஊருல ஒருத்தர் 'உன்னை தவிட்டுக்குத்தான் வாங்கினாங்க'னு சொன்னதும் ஓனு அழுதுட்டே போய் என்னை தவிட்டுக்கா வாங்கினீங்கனு அம்மாகிட்ட சின்ன வயசில கேட்டு இருக்கேன். அது கிண்டலுக்கு சொல்றதுன்னு அதுவரைக்கும் எனக்கு தெரியாது. எங்கம்மா சொன்னப்பறம் தான் படுபாவி பசங்க இப்படி கூட பண்ணுவாங்க என நினைச்சேன். அப்போதான் எனக்கு இன்னொரு விஷயம் தெரிய வந்திச்சி. இதைக்கூட எங்கேயாச்சும் சொல்லி வைச்சிருப்பேன். 

என்னோட சின்னம்மா அவங்களுக்கு ஆண் வாரிசு இல்லைன்னு என்னை தத்து எடுத்துகிறேன்னு சொன்னப்ப எங்க அப்பா திட்டி விட்டுட்டாராம். அப்படி ஒரு புள்ளைய எப்படி தர முடியும்னு. இப்ப கூட என் சின்னமாவை நினச்சா கஷ்டமா இருக்கும். என்னைய வேணும்னு கேட்டு இருக்காங்களே.ஆனா எல்லா அக்காக்களும் நல்ல முறையில திருமணம் முடிச்சி எல்லாருமே நல்லா இருக்காங்க. ஆண் வாரிசு, பெண் வாரிசு எல்லாம் ஒன்னுதேன். நாங்க வீட்டுல சின்னம்மா, பெரியம்மா எல்லாம் கூப்பிட மாட்டோம், எல்லோருமே அம்மாதான். 

அதிருக்கட்டும், அம்மா அப்பா தெரியாத ஆண்டாள் துளசி செடிக்கு கீழே கிடந்ததை பார்த்து பெரியாழ்வார் எடுத்து வளர்த்தார் அப்படின்னு சொல்லுது ஆண்டாள் வரலாறு. அதாவது அந்த மகாலட்சுமியே அவதாரமாக வந்ததா நம்மளை எல்லாம் நினைக்க சொல்லுது வரலாறு. ஆனா நான் அப்படி நினைக்கலைங்க. என் ஆண்டாள் எவராலோ கைவிடப்பட்டவர். இந்த ஆண்டாளை இப்படி தன்னந்தனியா போட்டுட்டு போன பெற்றோர்களை நினைச்சா பரிதாபமாகவே இருக்கும். எப்படி ஒரு அற்புதத்தை தொலைத்துவிட்டார்கள்னு. இல்லைன்னா பெரியாழ்வாருக்கு பெயர் போகுமா. 

இப்போ பெரியாழ்வார் வீட்டில வளரும் ஆண்டாளுக்கு ஒன்னே ஒண்ணுதான் தெரியும் அது பெரியாழ்வாரின் பக்தி அப்புறம் இந்த நாராயணன். சின்ன புள்ளைங்க மாதிரி விளையாடும் இந்த ஆண்டாளுக்கு பெரியாழ்வார் பாடுற பாட்டு, நாராயணன் பத்தின அன்பு எல்லாம் சொல்ல சொல்ல தனக்குள்ளே ஆசைய ஆண்டாள் வளர்த்துக்காம என்ன பண்ணுவா. 

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து பல கோடி நூறாயிரம் அப்படின்னு சொன்னா எனக்கே சில்லுனு இருக்கே, எப்படி இருந்து இருக்கும் இந்த ஆண்டாளுக்கு. ஆண்டாள் போல இருந்த தோழிகள் எல்லாம் எதுக்கு ஆண்டாள் மாதிரி பாடலை. அதுதான் கொடுப்பினை. சரி, நான் சமீபத்தில ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு போனேனா, அந்த ஆண்டாள் பார்த்தேனா. சின்ன பொண் போல என் கண்ணுக்கு தெரிஞ்சிதுங்க, பாத்துட்டே இருந்தேனா, கண்ணீர் கோத்திருச்சி. என்ன ஆச்சின்னு மனைவி கேட்டாங்க. ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேன். 

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். அடேங்கப்பா ஆண்டாள். எப்படி இப்படி உன்னால் நினைக்க முடிந்ததுன்னு அப்ப நினைச்சப்ப வந்த கண்ணீர் அது. 

இப்ப கூட எங்கயாச்சும் உட்காந்து ஆண்டாள் பத்தி நினைச்சா கண்ணீர் கோத்துக்கும். என்னை பொருத்தவரை ஆண்டாள் ஒரு கற்பனை உலகத்தை தனக்கு உருவாக்கிகிட்டானுதான் தோணும். 

இந்த ஆண்டாள் நாச்சியார் திருமொழிக்கு காரணமே, திருப்பாவை கேட்டும் மனம் இரங்காத நாராயணன் தான் காரணம்னு சொல்வாங்க. ஒருவேளை இந்த நாராயணன் ஆண்டாள் இப்படி எல்லாம் பாடட்டும்னு நினைச்சி இருப்பாரோ. 

அனங்கதேவன் யாரு தெரியுமாங்க! சிவனால் உடல் எரிக்கப்பட்ட மன்மதன். அடேங்கப்பா ஆண்டாள். 

(தொடரும்) 

Wednesday, 12 February 2014

அடேங்கப்பா ஆண்டாள் - 1

ஒரு கற்பனையான வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும். ஒரு பயலும் நம்மை என்ன ஏதுன்னு கேட்கமுடியாது.நம்ம இஷ்டத்துக்கு வாழ்ந்துட்டு போயிரலாம். ஆனா அந்த கற்பனையை வெளியில் சொன்னா காறி துப்புவாங்கே என்னமோ கற்பனையே பண்ணாதவங்க மாதிரி. ஆனா இந்த ஆண்டாள் இருக்காளே ஆண்டாள் அதுதான் வில்லிப்புத்தூர் கோதை, தன்னோட கற்பனைகளை எல்லாம் வெளியில் அள்ளி கொட்டிட்டா. கொஞ்சம் கூட அவள் யோசிச்ச மாதிரியே தெரியலை.

அவள் விதிக்கிற்றியே அப்படின்னு சொல்றப்ப நான் விக்கித்துப் போனேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் திருப்பாவை மட்டும் தான். அப்போ அப்போ வாரணமாயிரம் சூழ வலம் வந்து கேட்டு இருக்கேன். கற்பூரம் நாறுமோ கேட்டு இருக்கேன். ஆனா முழுசா நான் நாச்சியார் திருமொழி படிச்சது இல்லை. வில்லிப்புத்தூர்காரர் ஒருத்தர் என்கிட்டே நாச்சியார் வரலாறு கொடுத்தாரு அதுல இந்த நாச்சியார் திருமொழி இருக்கு. அவர் கொடுத்து ஐஞ்சு வருஷம் மேல இருக்கும். அப்போ அப்போ எடுத்து பாத்துட்டு வைச்சிருவேன். எனக்கு எங்கே இலக்கியம் படிக்கிற அளவுக்கு அறிவு இருக்கு.

பொதுவாகவே எனக்கு இந்த நாயன்மார்கள், ஆழ்வார்கள் அப்புறம் தமிழ் இலக்கியங்கள் மேல ஒரு ஆசை உண்டு. சாகும் முன்னர் நானும் ஒரு வியாசர், வால்மீகி ஆகணும்னு சின்ன வயசுல மனசுல நினைச்சிப்பேன். இப்ப கூட இந்த ஆராய்ச்சி எல்லாம் தூக்கிப் போட்டுட்டு எல்லா இலக்கியம் எடுத்து படிக்கணும்னு நினைச்சிட்டே இருப்பேன். ஆனாலும் கம்பராமாயணம், ஸ்ரீமத்பாகவதம் எல்லாம் எடுத்துப் புரட்டி பார்த்துட்டு வைச்சிருவேன். ஏகப்பட்ட வேலைகளுக்கு இடையில் இது எப்படின்னு ஒரு மலைப்பு வந்து சேரும்.

நேத்து ஒரு இரவு பத்து மணி இருக்கும். திடீருன்னு ஆண்டாளோட நாச்சியார் திருமொழி யூட்யூப்ல தூங்கிட்டே கேட்க ஆரம்பிச்சேன். இதுமாதிரி பல தடவை நாலாயிர திவ்விய பிரபந்தம் கேட்க நினைச்சி பத்து நிமிசத்தில மனைவிகிட்ட திட்டு வாங்கி நிப்பாட்டி இருக்கேன். ஆனா நேத்து அத்தனை பாட்டையும் கேட்டு முடிச்சிட்டேன். அடேங்கப்பா ஆண்டாள் அப்படின்னு தோணிச்சி. எனக்கு ஆண்டாள் காலத்தில வாழ்ந்து இருக்கணும்னு தோணிச்சி. ஆண்டாள் தோழிகள் கூட பேசி இருக்கணும்னு தோணிச்சி. எதுக்கு ஆண்டாள் இப்படி நினைச்சா, யாரு ஆண்டாளுக்கு இப்படி ஒரு எண்ணத்தை  வரவைச்சதுனு எனக்கு தெரிஞ்சிக்க ஆசை. அதனாலதான் என்னோட நாவலில் குட்டி சுபாவை உருவாக்கினேன். அவள் ஆண்டாள் மீரா போல ஆகணும்னு ஆசை படுற மாதிரி வைச்சேன். எனக்கு இந்த நுனிப்புல் நாவலை திரும்ப எழுதனும்னு ரொம்பவே ஆசை. ஆனா நான் பண்ணிக்கிட்டு திரியற வேலையில இதுக்கெல்லாம் நேரம் எங்கே இருக்கு.

இப்படி நேரம் இல்லை இல்லைன்னு சொல்றியே, விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டுப் போ அப்படின்னு மனசு கூட சொல்லும். ஆனா விருப்பம் நிறையவே இருக்கு. இதைவிட பெரிய கொடுமை, ஒரு பண்டிதர் சொன்னாரு, ஆண்டாள் ரங்கனை நினைச்சி பாடலை, வேறொரு காதல்னு சொன்னப்ப எனக்கு பிரமை பிடிச்ச மாதிரி ஆயிருச்சி. ரெண்டுநாள் சோறு தண்ணி இறங்கல. எப்படி அவதூறு பேசறீங்கனு அந்த பண்டிதர்கிட்ட மனசில இருந்ததை எல்லாம் கொட்டி வைச்சேன். அந்த பண்டிதரை வெறுப்பேத்திட்டேனு கூட நான் உணரலை. உண்மையிலே எனக்கு அன்னைக்கு ரொம்ப கஷ்டமா போயிருச்சி. இதுல என்ன பெரிய கொடுமைனா அந்த பண்டிதருக்கு இந்த ஆண்டாளை ரொம்பவே பிடிக்கும். இதுநாள் வரை நான் அப்படி நடந்ததே இல்லை.

என் ஆண்டாள், என் ஆண்டாள் அப்படின்னு ரொம்பவே ஆண்டாளை நேசிச்சிட்டு இருந்து இருக்கேன். இல்லைன்னா திருப்பாவையை சின்ன வயசுல மனப்பாடம் பண்ணி தினமும் பாடி இருப்பேனா. எங்க வீட்டுல என் அக்காக்கள் பல பேருக்கு நாச்சியார் பேரு தான், இப்ப சில வருஷம் முன்  பிறந்த என் அண்ணனோட பெண் குழந்தைக்கு கூட நாச்சியார் தான். நான் கூட நாவலில நாச்சியார்னு ஒரு பகுதி வைச்சி இருந்தேன். நாவலிலே அது ஒண்ணுதாண்டா நல்லா இருக்குனு என்னோட ஒரு அக்கா கோதை நாச்சியார் சொன்னப்ப மனசுக்கு சந்தோசமாகவே இருந்துச்சி.

எனக்கு ஆண்டாள்னா ரொம்பவே இஷ்டம், இல்லைன்னா ஆண்டாளுக்கு கல்யாணம்னு ஒரு சிறுகதை எழுதி இருப்பேனா. அந்த கதையில் வர பொண்ணு சனிக்கிழமை சனிக்கிழமை கல்யாண கனவு காண்பா. நான் அந்த கதையில சொல்ல வந்ததே இந்த ஆண்டாள் தான், ஆனா cystic fibrosis பத்தி அப்போ படிச்சிட்டு இருந்தேனா அதை அப்படியே கதையில இடைச்செருகல் பண்ணிட்டு இந்த வில்லிபுத்தூர் ஆண்டாளை அப்படியே ஒதுக்கி வைச்சிட்டேன்.

என்கிட்டே என்ன குறைன்னா, எதுவுமே முழுசா தெரியாது. எல்லாம் செவி வழி கேட்டதுதான். உண்மையிலே எனக்கு அறிவு கம்மிதான். ஆனா யாரும் நம்பறதே இல்லை. தன்னடக்கம், புலனடக்கம்னு சொல்லிட்டு போவாங்க. போங்கப்பு எனக்கென்ன. எனக்கு இந்த இலக்கியத்துல இருக்கிற பிரச்சினை மொழி பிரச்சினை.

ஒருத்தர் என்ன எழுதுறாரு என்ன சொல்ல வராருருனு என்னால புரிஞ்சிக்க முடியறது இல்ல. நானே ஒரு அர்த்தம் வைச்சிட்டு போயிருவேன். அது தப்போ சரியோ யாருக்கு கஷ்டம். எனக்குதானே. என்னோட மாமா மகன் வீட்டுல தமிழ் அகராதி வைச்சிருந்தான். நான் அப்பப்போ எடுத்து பார்ப்பேன். ஆனா அதை கூடவே கொண்டு வந்து இருக்கணும். ஆத்தி, ஆண்டாள் என்ன என்ன எழுதி இருக்கா. வார்த்தை தேனாமிர்தம் மாதிரி இருக்கு ஆனா எப்படி அர்த்தப்படுத்தி படிக்கிறதுன்னு எனக்கு தெரியலை.

ஏண்டி ஆண்டாள், உன் காதல் நிறைவேற ரங்கன் கிட்ட கேட்காம அந்த மன்மதன் கிட்ட, காம தேவன் கிட்ட எதுக்குடி கேட்டனு எனக்கு கேட்கணும் போல இருக்கு. போயும் போயும் அந்த மன்மதன்கிட்டவா மன்றாடனும். ஆனா காதலுக்கு மன்மதன் தான் தலைவனாம். ஆண்டாள் தப்பு செய்வாளோ! அனங்கதேவா அப்படின்னு ஆண்டாள் சொல்வா, அடேங்கப்பா!

காதலர்கள் தினம் கொண்டாடுறவங்க எதுக்கும் ஆண்டாள் பாசுரம் எடுத்து படிங்க.

(தொடரும்) 

Wednesday, 5 February 2014

அங்கன எதுக்கு போன

ஸ்ரீராம் என்னைவிட இரண்டு வயது மூத்தவன். அவனைக் கண்டால் சிறு வயதில் இருந்தே பயந்து ஒதுங்கி விடுவேன். அவனை ஊரில் திமிர் பிடிச்சவன் என்றே சொல்வார்கள். நல்ல உயரமாக கருகரு முடியுடன் வாட்டசாட்டமாக இருப்பான். நானோ சோப்ளாங்கி போல இருப்பேன். என்னை கிண்டல் பண்ணாத நாளே அவனுக்கு கிடையாது. அவனிடம் எல்லா கெட்டப் பழக்கங்கள் இருந்தது. பிறரிடம் வம்பு இழுப்பதே அவனது வழக்கம். சண்டியர், வில்லங்கம் என்றே அவனை ஊரில் அழைப்பார்கள். அதனால் அவனுடன் எவரும் அத்தனை எளிதாக பழகமாட்டார்கள். அவனுக்கு பயந்தே ஊரில் பலரும் தவறு செய்ய யோசிப்பார்கள். அவன் கண்ணில் பட்டுவிட்டால் நிறைய பொய்கள் சேர்த்து ஊர் எல்லாம் சொல்லித் திரிவான். .

எப்படியோ இத்தனை வருடங்களாக அவனோடு ஒட்டுதல் உறவு எதுவும் இல்லை என்றாகிவிட்டது. இனியும் இப்படியே கழிந்தால் போதும் என்றே இருப்பேன்.

ஆனால் அன்று  ஸ்ரீராம் என்னை வந்து அழைப்பான் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அழைத்துவிட்டானே என அவனுடன் செல்ல முடிவு செய்தேன். கையில் ஒரு தூக்குவாளி வைத்து இருந்தான். என்ன என கேட்டேன். பேசாம என் கூட வாடா என சொல்லிவிட்டான்.

சரியென அவனுடன் நடந்து போகையில் மழை பெய்ய ஆரம்பித்தது.

''இன்னொரு நாளைக்கு போகலாம்''

''பேசாம கூட வா, இல்லைன்னா உனக்கும் அந்த பொண்ணுக்கும் இருக்க லிங்க்க ஊரு போறா சொல்லிருவேன்''

''எந்த பொண்ணு, என்ன பேசுற''

''அதுதான் அந்த பிரபாவதி''

அவன் அவ்வாறு சொல்லியதும் எனக்கு மழைத்துளிகள் விட அதிக வியர்வைத் துளிகள் பூத்தது. எனக்கும் பிரபாவுக்கும் தெரிந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரியும், நான் சொல்லவே இல்லையே என நினைத்தேன்.

''எனக்கும் அவளுக்கும் என்ன லிங்க்கு''

''நீயும் அவளும் காதலிக்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா, அவளே வந்து சொல்லிட்டா''

''பொய் சொல்லாத''

''டேய் நான் அவகிட்ட என்னோட காதலை சொன்னேன், அதுக்கு உன்னை காதலிக்கிறேன்னு சொல்லிட்டா, போனா போறான்னு விட்டுட்டேன். நீ என்னடா மழுப்பற''

''உன்கிட்ட தப்பிக்கிறதுக்கு அப்படி சொல்லி இருப்பா''

சற்றும் எதிர்பார்க்கும் முன்னர் என்னை ஓங்கி அறைவிட்டான் ஸ்ரீராம். நானும் யோசிக்காமல் பதிலுக்கு ஒரு அறை விட்டேன். இருவரும் கட்டிபுரண்டு சண்டை போட்டோம். நல்லவேளை எவரும் அவ்வழி வரவில்லை. முடிவில் அவனே ஜெயித்தான். எனது குரல்வளையை பிடித்து நெருக்கிட ஆமா ஆமா என என்றதும் விட்டான்.

''ஒழுங்கா கூட வாடா ''

கழுத்து வலியுடன் அவனுடன் நடந்தேன். ஒரு பனை மரத்துக்கு பக்கத்தில் சென்று நின்றான்.

''கீழேயே நில்லுடா''

சரசரவென பனைமரத்தில் ஏறினான். நொங்குகள் பறித்தான். கீழே போட்டான். மடமடவென கீழே இறங்கினான். ஒவ்வொன்றாக உடைத்து தூக்குவாளியில் ஊற்றினான். நிறைய சுண்ணாம்பு சேர்த்தான்.

''குடிடா''

''வேண்டாம்''

''பிரபாவதி பத்தி சொல்லிருவேன்''

''நீயே குடி, எனக்கு பழக்கம் இல்லை'

''வெண்ணைக்கு காதல் பழக்கமோ''

குடிடா என காலால் எட்டி உதைத்தான்.

''யாராவது வந்துருவாங்க''

''இந்த நேரத்தில எவனும் வரமாட்டான், ஒழுங்கா குடிச்சி தொலைடா''

''முடியாது''

சொல்லிட்டு ஓட்டம் எடுத்தேன். என்னை விரட்டிக்கொண்டு வந்தான். கல்லால் அடித்தான். வலியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டில் பயந்து போனார்கள். ஸ்ரீராம் பற்றி சொன்னேன். பனைமரம் சென்ற விஷயம் சொல்லி முடித்தேன்.

''அங்கன எதுக்கு போன''

''நான் பிரபாவதியை காதலிக்கிறேன்''