Wednesday, 5 February 2014

அங்கன எதுக்கு போன

ஸ்ரீராம் என்னைவிட இரண்டு வயது மூத்தவன். அவனைக் கண்டால் சிறு வயதில் இருந்தே பயந்து ஒதுங்கி விடுவேன். அவனை ஊரில் திமிர் பிடிச்சவன் என்றே சொல்வார்கள். நல்ல உயரமாக கருகரு முடியுடன் வாட்டசாட்டமாக இருப்பான். நானோ சோப்ளாங்கி போல இருப்பேன். என்னை கிண்டல் பண்ணாத நாளே அவனுக்கு கிடையாது. அவனிடம் எல்லா கெட்டப் பழக்கங்கள் இருந்தது. பிறரிடம் வம்பு இழுப்பதே அவனது வழக்கம். சண்டியர், வில்லங்கம் என்றே அவனை ஊரில் அழைப்பார்கள். அதனால் அவனுடன் எவரும் அத்தனை எளிதாக பழகமாட்டார்கள். அவனுக்கு பயந்தே ஊரில் பலரும் தவறு செய்ய யோசிப்பார்கள். அவன் கண்ணில் பட்டுவிட்டால் நிறைய பொய்கள் சேர்த்து ஊர் எல்லாம் சொல்லித் திரிவான். .

எப்படியோ இத்தனை வருடங்களாக அவனோடு ஒட்டுதல் உறவு எதுவும் இல்லை என்றாகிவிட்டது. இனியும் இப்படியே கழிந்தால் போதும் என்றே இருப்பேன்.

ஆனால் அன்று  ஸ்ரீராம் என்னை வந்து அழைப்பான் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அழைத்துவிட்டானே என அவனுடன் செல்ல முடிவு செய்தேன். கையில் ஒரு தூக்குவாளி வைத்து இருந்தான். என்ன என கேட்டேன். பேசாம என் கூட வாடா என சொல்லிவிட்டான்.

சரியென அவனுடன் நடந்து போகையில் மழை பெய்ய ஆரம்பித்தது.

''இன்னொரு நாளைக்கு போகலாம்''

''பேசாம கூட வா, இல்லைன்னா உனக்கும் அந்த பொண்ணுக்கும் இருக்க லிங்க்க ஊரு போறா சொல்லிருவேன்''

''எந்த பொண்ணு, என்ன பேசுற''

''அதுதான் அந்த பிரபாவதி''

அவன் அவ்வாறு சொல்லியதும் எனக்கு மழைத்துளிகள் விட அதிக வியர்வைத் துளிகள் பூத்தது. எனக்கும் பிரபாவுக்கும் தெரிந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரியும், நான் சொல்லவே இல்லையே என நினைத்தேன்.

''எனக்கும் அவளுக்கும் என்ன லிங்க்கு''

''நீயும் அவளும் காதலிக்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா, அவளே வந்து சொல்லிட்டா''

''பொய் சொல்லாத''

''டேய் நான் அவகிட்ட என்னோட காதலை சொன்னேன், அதுக்கு உன்னை காதலிக்கிறேன்னு சொல்லிட்டா, போனா போறான்னு விட்டுட்டேன். நீ என்னடா மழுப்பற''

''உன்கிட்ட தப்பிக்கிறதுக்கு அப்படி சொல்லி இருப்பா''

சற்றும் எதிர்பார்க்கும் முன்னர் என்னை ஓங்கி அறைவிட்டான் ஸ்ரீராம். நானும் யோசிக்காமல் பதிலுக்கு ஒரு அறை விட்டேன். இருவரும் கட்டிபுரண்டு சண்டை போட்டோம். நல்லவேளை எவரும் அவ்வழி வரவில்லை. முடிவில் அவனே ஜெயித்தான். எனது குரல்வளையை பிடித்து நெருக்கிட ஆமா ஆமா என என்றதும் விட்டான்.

''ஒழுங்கா கூட வாடா ''

கழுத்து வலியுடன் அவனுடன் நடந்தேன். ஒரு பனை மரத்துக்கு பக்கத்தில் சென்று நின்றான்.

''கீழேயே நில்லுடா''

சரசரவென பனைமரத்தில் ஏறினான். நொங்குகள் பறித்தான். கீழே போட்டான். மடமடவென கீழே இறங்கினான். ஒவ்வொன்றாக உடைத்து தூக்குவாளியில் ஊற்றினான். நிறைய சுண்ணாம்பு சேர்த்தான்.

''குடிடா''

''வேண்டாம்''

''பிரபாவதி பத்தி சொல்லிருவேன்''

''நீயே குடி, எனக்கு பழக்கம் இல்லை'

''வெண்ணைக்கு காதல் பழக்கமோ''

குடிடா என காலால் எட்டி உதைத்தான்.

''யாராவது வந்துருவாங்க''

''இந்த நேரத்தில எவனும் வரமாட்டான், ஒழுங்கா குடிச்சி தொலைடா''

''முடியாது''

சொல்லிட்டு ஓட்டம் எடுத்தேன். என்னை விரட்டிக்கொண்டு வந்தான். கல்லால் அடித்தான். வலியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டில் பயந்து போனார்கள். ஸ்ரீராம் பற்றி சொன்னேன். பனைமரம் சென்ற விஷயம் சொல்லி முடித்தேன்.

''அங்கன எதுக்கு போன''

''நான் பிரபாவதியை காதலிக்கிறேன்''


Thursday, 30 January 2014

மனநிலை பாதிப்பும் மானசீக குருவும்

''ஒவ்வொரு மனிதரும் பைத்தியக்காரர்கள், ஏதேனும் ஒன்றிற்கு தம்மை அடிமையாக்கி பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வார்கள். இவ்வாறு நடந்து கொள்ளும்போது ஒருவித சந்தோசத்தை அனுபவிக்கிறார்கள். இந்த சூழலில் இருந்தாலும் சமூகத்தில் தம்மை இணைத்துக் கொள்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள், இல்லாதபட்சத்தில் மன அழுத்தத்தில் உட்பட்டு தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வார்கள், அல்லது நடைபிணமாக வாழ்ந்து வாழ்க்கையை கழிப்பார்கள்''

வாசித்து முடித்துவுடன் எனக்கு வியர்த்துக் கொட்டியது. நான் கூட பைத்தியகாரனா? என யோசித்துக் கொண்டிருந்தேன்.

''பக்தா, என்ன யோசனையில் அமர்ந்து இருக்கிறாய்?''

சாமியார் வருவார் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. வைகுண்டம் போகிறேன் என்றல்லவா சொன்னார். இப்போது இங்கே வந்து நிற்கிறாரே என குழப்பத்துடன் அவரை நோக்கினேன்.

''என்ன பக்தா, ஆச்சரியமாக பார்க்கிறாய்?''

''நீங்கள் வைகுண்டம் போகவில்லை?, எதற்கு திரும்பி வந்தீர்கள்''

''நீயில்லாமல் நான் மட்டும் எப்படி போவது பக்தா, அதனால் எனது திட்டத்தை நான் கைவிட்டுவிட்டேன்''

''மனநிலை பாதிப்பு என்றால் என்ன?''

''என்ன பக்தா, இப்படி ஒரு கேள்வியை என்னை நோக்கி கேட்கிறாய், நான் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் தான் சாமியாராக இருக்கிறேன் என நினைக்கிறாயா?''

''இல்லையில்லை, மனநிலை பாதிப்பு என்றால் என்ன?''

''மனநிலை என்றால் என்ன பக்தா?''

''உங்களிடம் கேள்வி கேட்டால் என்னிடம் கேள்வி கேளுங்கள், எனக்குத் தெரியாமல் தானே உங்களிடம் கேட்கிறேன்''

''நன்றாக யோசனை செய் பக்தா, மனநிலை என்றால் என்ன?''

''நமது எண்ணங்கள்?''

''அதேதான் பக்தா. எண்ணங்களே மனநிலை. ஒரு விஷயத்தை குறித்து நீ என்ன நினைக்கிறாய், எப்படி உணர்கிறாய், எவ்வாறு செயல்படுகிறாய் என்பதே மனநிலை. இந்த மனநிலை பிறர் நம்மை கண்காணிக்கும் போதும், கண்காணிக்காதபோதும் வெவ்வேறாக இருக்கும். அப்படி உனது மனநிலையை நீ நன்றாக புரிந்து கொண்டால் உனது செயல்பாடுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். அவ்வாறு கட்டுப்பாட்டில் இல்லாதபோது மனநிலை பிறழ்வு நடைபெறும். இதைத்தான் மனநிலை பாதிப்பு என்கிறார்கள்''

''அப்படியெனில் எல்லாருமே மனநிலை பாதிக்கப்பட்டவர்களா? இப்போதுதான் ஒரு பத்தி படித்தேன். மனிதர்கள் அனைவரும் பைத்தியகாரர்கள் என்று எழுதி இருந்தது''

''பக்தா, நீ பைத்தியகாரனா?''

''என்ன பேச்சு பேசுறீங்க, என்னை எதற்கு பைத்தியகாரன் என்று சொல்றீங்க''

''கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல் பக்தா''

''இல்லை, நான் பைத்தியகாரன் இல்லை''

''அதெப்படி உனக்குத் தெரியும். உன்னையறியாமல் நீ ஏதேனும் விஷயத்திற்கு அடிமையாகி இருக்கிறாயா என்று யோசனை செய்து பார்''

''இல்லை, அப்படி ஏதுமில்லை, நான் நன்றாகவே இருக்கிறேன்''

''சாப்பாட்டுக்கு அடிமையானவர்கள் உண்டு, காமத்திற்கு அடிமையானவர்கள் உண்டு, கற்பனை உலகத்தில் சஞ்சாரிப்பவர்கள் உண்டு, சினிமா, இசை, காதல் கல்வி அரசியல், பணம், நிலம், புகழ், பதவி போதை, என பல விசயங்களுக்கு அடிமையானவர்கள் உண்டு. அதில் நீ ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்''

''இல்லை, நான் எதற்கும் அடிமை இல்லை. நீங்கள கூட இறைவனுக்கு அடிமை, ஆனால் நான் இறைவனுக்கு கூட அடிமை இல்லை''

''என்ன பக்தா, பேச்சுவாக்கில் என்னை இறைவன் அடிமை என்று சொல்லிவிட்டாய்''

''ஆம், நீங்கள் இறைவன் பற்றி அதிகம் பேசுகிறீர்கள், இறைவனே நல்வழிபடுத்துவான் என புலம்பித் தள்ளி இருக்கிறீர்கள். நீங்கள் இதை மறுக்க இயலுமா''

''அப்படியே ஆகட்டும் பக்தா, ஆனால் இப்படிப்பட்ட அடிமைகள் எல்லாம் மனநிலை பாதிப்புக்கு நேரடியாக உட்படுவதில்லை. மன அழுத்தத்தில் இவர்கள் நிலை சென்று முடியும். இவர்களுக்கு தகுந்த அன்பும், ஆதரவும் தரும் பட்சத்தில் இவர்களால் இந்த நிலையில் இருந்து மீண்டு வர இயலும். அதற்கு இவர்களுக்கு மானசீக குரு ஒருவர் வேண்டும்''

''யார் அந்த மானசீக குரு''

''அவர்களேதான் மானசீக குரு, அனைவரும் சிந்திக்கும் அறிவுடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் ஒரு தவறான விசயம் செய்யும் முன்னர் அது தவறு என மனம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தவறினை தவறியும் செய்யக்கூடாது என அவர்கள் திடமான மனதுடன் இருக்க வேண்டும். எப்படி ஒரு தவறு செய்து பிடிபட்டால் அவர்களின் நிலை கவலைக்குரியதாக மாறுமோ, அதுபோல பிடிபடாத நிலை இருப்பினும் தவறு செய்ய கூடாது''

''விளையாட்டாக செய்யலாமே''

''அப்படித்தான் பலரும் நடந்து கொள்கிறார்கள். விளையாட்டு புத்தி என்பது ''விநாச காலே விபரீத புத்தி'' என்பது போன்றது. ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும் பக்தா, இஷ்டத்துக்கு வாழ்வதல்ல வாழ்க்கை''

''எதற்கு இப்படி அறிவுரை அள்ளி கொட்டுகிறீர்கள்''

''மானசீக குரு எவர் என்று கேட்டாய் அல்லவா, அவரவரே அவரவருக்கு மானசீக குரு. ஒரு ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதுடன் அவரது பணி  முடிவடைந்துவிடும், அதற்கடுத்து நீயாகவே உனக்கு கற்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர் ஒரு குரு, நீதான் உனக்கு மானசீக குரு''

சாமியார் பேசியதை கண்டு அவரிடம் நான் வாசித்த தாளினை காட்டினேன்.  கலகலவென சிரித்தார்.

''யார்  இப்படி எழுதியது தெரியுமா பக்தா''

''தெரியாது. வெல்லக்கட்டி வாங்க கடைக்கு சென்று இருந்தேன் அங்கு இந்த காகிதம் கிடைத்தது, எடுத்து வந்துவிட்டேன்''

''அதை எழுதியது நான் தான் பக்தா''

''நீங்களா''

''ஆம்''

''ஏனிப்படி எழுதினீர்கள்''

''பல வருடங்கள் முன்னர் இருந்த அந்த மனநிலையைத் தான் சென்று கேட்கவேண்டும்', இப்போது எனக்குத் தெரியாது''

பைத்தியகார சாமியார் என மனதில் நினைத்துக் கொண்டேன்.

''மனநிலை பாதிப்பு குறித்து சொல்லுங்க''

''மனநிலை பாதிக்கப்பட்டதால் நான் சாமியாரா''

''திரும்பவும் கேட்காதீர்கள், சொல்லுங்க''

''ஒரு மனிதர் நான் மேல் சொன்ன பல விசயங்களுக்கு அடிமையாதல் போல மனநிலையானது குறிப்பிட்ட விசயங்களால் மாறுபாடு அடையும். மனநிலை பாதிப்பு நமது உடல், மூளை சம்பந்தப்பட்டதாகவே அமைந்துவிடுகிறது.

1. பயத்தால் வரும் மனநிலை பாதிப்பு. சிறு குழந்தைகளிடம் ஏற்படும் இந்த பாதிப்பு காலகாலத்திற்கு மாறாது. பயத்தைப் போக்கிட மனநிலை சீராகும்.
2. உணர்ச்சி வசப்படுதல் மூலம் ஏற்படும் மனநிலை பாதிப்பு. இதை மூட் ஸ்விங் என சொல்வார்கள்
3. நம்பிக்கையால், அந்த நம்பிக்கை தொலையும் கணத்தில் வரும் மனநிலை பாதிப்பு. காதல், கல்யாணம் நட்பு போன்ற நம்பிக்கை விசயத்தில் ஏமாற்றம் நிகழும்பட்சத்தில் இந்த மனநிலை பாதிப்பு ஏற்படும். கவனத்துடன் கையாள வேண்டிய விஷயம் இது பக்தா. உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்க முடியாது, அதனால் புதுக் கண்ணாடி அவசியம் போன்ற நிலை ஏற்படும்.
4. மொழி, நடக்கும் நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை மூலம் மனபாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது''

''இறைவன் நம்பிக்கையை விட்டுட்டீங்களே, ஜோசியம் நம்பிக்கை எல்லாம் சொல்லலை''

''பக்தா, குறுக்கே பேசாதே, ஜோசியம், இறைவன் எல்லாம் நடக்கும், நடக்காது என்கிற நிலையை மக்கள் அறிந்து வைத்து இருக்கிறார்கள். அதனால் அதை எல்லாம் இங்கே இழுக்காதே''

''ஆமாம், அதுவே ஒரு மனநிலை பாதிப்புதானே''

''பக்தா, எனது சாபத்திற்கு ஆளாகாதே''

''சரி, தொடருங்கள்''

''5. மூளையில் ஏற்படும் சில மாற்றங்களால் மனநிலை பாதிக்கப்படுபவர்கள் உண்டு. அவர்களுக்கு மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து தேற்ற முடியும், ஆனால் ஒரு விஷயம் வரம்பு மீறிப் போய்விட்டால் மருத்துவமுறை கை கொடுக்காது.
6. சிலர் மனநிலை பாதிக்கப்படுவதால் சாப்பிடும் முறையில் கூட வேறுபாடு கொள்வார்கள். ஒல்லியாக இருந்து கொண்டே குண்டாக இருப்பதாக நினைப்பார்கள். அதனால் சரியாக சாப்பிடாமல் உடற்பயிற்சி என உயிரை கொல்லும் அளவுக்கு செல்வார்கள். தன்னை தானே அதிகம் வெறுத்து ஒதுக்குவார்கள். இதைப்போலவே காம உணர்வு மூலம் ஏற்படும் மனநிலை பாதிப்பு. காமுகர்களாக பலர் மாறுவதற்கு அதுவே காரணம். இவர்கள் பலர் இருக்கும்போதே யாரும் நம்மை பார்க்கவில்லை என தறிகெட்டு நடந்து கொள்வார்கள்.
7. சிலருக்கு தூக்கமே வராது. இது கூட மனநிலை பாதிப்பின் வெளிப்பாடுதான் பக்தா''

''கனவு கூட மனநிலை பாதிப்பு தானா''

''என்ன பக்தா, நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று சொல்கிறாய். கனவு மனநிலையை சரி செய்யும் ஒரு காரணி''

''சரி சரி தொடருங்கள்''

8. தன்னைத் தானே மறப்பது கூட ஒருவகை மனநிலை பாதிப்புதான். குறிப்பட்ட விசயங்கள் மறந்து போவதும் இதில் அடங்கும். சமூகத்திற்கு எதிராக நடந்து கொள்வது கூட ஒரு வகை மனநிலை பாதிப்புதான்''

''அரசியல்வாதிகள் எல்லாம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களா''

''பக்தா, உனக்கு ஒருமுறை சொன்னால் போதாதா, எதற்கு இப்படி குறுக்கீடு செய்கிறாய்''

''சரி சரி சரி தொடருங்கள்''

9. அதிர்ச்சி அடையாதே, இப்படி சந்தேகங்கள் எல்லாம் மனநிலை பாதிப்பின் சாராம்சம்தான். இதை ஆங்கிலத்தில் பெர்சானலிட்டி டிஸ்ஆர்டர், ஒழுங்கற்ற நடத்தை  என சொல்வார்கள்.

''இறைவன் எப்படி உலகை படைத்தான், இவ்வுலகம் எப்படி தோன்றியது போன்ற சந்தேகங்கள் எல்லாம் மனநிலை பாதிப்பு என சொல்வது நகைப்புக்குரியது''

''பக்தா, நீ ஒழுங்கற்ற மனநிலையில் இருக்கிறாய். உரிய சந்தேகங்கள் சரி, ஆனால் அனாவசியமான சந்தேகங்கள் மனநிலை பாதிப்பின் வெளிப்பாடு என்றே சொன்னேன். கணவன் மனைவியின் நடத்தையினை சந்தேகம் கொள்வது, பெற்றோர் பிள்ளை, மாமியார் மருமகள் போன்ற உறவு முறை சந்தேகங்கள் மனநிலை பாதிப்பின் அடிச்சுவடுகள்''

இந்த மனநிலை பாதிப்பு மரபணுக்கள், பரிணாம வளர்ச்சிகள் என அடிப்படையில் வந்தவை. மனநிலையோடு மனநிலை பாதிப்பும் உடன் தொடர்பவை, அதனால்தான் மானசீக குரு அவசியம்''

''எனக்கு நீங்கள் மானசீக குருவாக இருக்கலாமே''

''உன்னை எப்படி திருத்துவது என தெரியவில்லை பக்தா, நீ ஆறறிவுடன் படைக்கப்பட்டு இருக்கிறாய், உன்னை வழிநடத்தவோ, நீ ஒருவரை பின்பற்றி நடக்கவோ அவசியமே இல்லை. நீயே உனக்கு மானசீக குரு. எந்த உயிர்களுக்கும் வஞ்சம் இழைக்காதே. நல்ல சிந்தனையுடன் இருந்தாய் எனில் உனது மனநிலை சந்தோசமாகவே இருக்கும். எந்த சங்கடங்களும் இல்லை''

''நான் குறுக்கீடு செய்ததால் சில நல்ல விசயங்கள் தெரிய வந்தது''

''நல்லது பக்தா, அடுத்தவரை துன்புறுத்தி பார்ப்பது மனநிலை பாதிப்பின் உச்சகட்டம்''

''எந்திரிப்பா, மணி பத்து ஆகுது, சனிக்கிழமைன்னா இப்படியா தூங்குவ''

அம்மாவின் குரலில் நான் மனநிலை பாதிப்பில் இருந்து விடுபட்டு இருந்தேன்.


Mental Disorders are often associated with how we perceive things in the world - Radhakrishnan

Wednesday, 29 January 2014

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்



அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

ஒரு கவிஞன் என்ன மனநிலையில் இருந்து எழுதுகிறான் என்பது அந்த கவிஞனுக்கே வெளிச்சம். அந்த கவிஞன் பணி தனது எண்ணங்கள் மூலம் சமூகத்தில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமே.

ஏன் எழுதினேன் தெரியுமா? எதற்காக எழுதினேன் தெரியுமா என இன்றைய கவிஞர்கள் சொல்வது ஒரு புத்தகவடிவில் வந்து விடும் நிலை இன்று இருக்கிறது. அன்றைய சூழலில் இதுபோன்று தனது நெருங்கியவர்களிடம் கவிஞர்கள் சொல்லியிருக்கக்கூடும். அப்படி சொல்லப்பட்டது பதிவு செய்யப்பட்டு இருப்பின் கவிதைக்கான பொருள் நேரடியாக கவிஞன் பார்வையில் கிடைத்துவிடும். இப்பொழுது வாசகன் அங்கு வருகிறான் என வைத்துக்கொள்வோம். வாசகருக்கு கவிஞனின் பின்புலம் எதுவும் தெரியாத நிலை. அப்படியிருக்க கருப்பொருள்தனை தனது கற்பனைக்கு கொண்டு செல்கிறான் வாசகன். இது காலம் காலமாக நடப்பதுதான்.

வாசகன் பல வடிவம் கொண்டவன். சிந்தனையற்ற நிலையில் இருந்து எண்ணற்ற சிந்தனை களம் சென்று பயணித்து வருபவன். படித்தவன் பாட்டை கெடுத்தான் என்பது எத்தனையோ பொருள் தரும். ஒரு பாடலின் கருச்சிதைவு என்பது வாசகனின் பார்வை படும்போதே நடந்தேறிவிடுகிறது. புரிதல் எளிதில்லை என்பதே பலரும் புரிந்து கொண்டு இருப்பது. கவிஞன் மனநிலையை அடைய வாசகன் முற்படுவதே இந்த சங்கடங்களுக்கு காரணம்.

இந்த பாடல் மூலம் பாரதி என்ன சொல்ல வருகிறார் என்பதைவிட என்ன சொன்னார் என்றுதான் முதலில் பார்க்க வேண்டும்.

நெருப்பு பொறி அதுவும் சின்னதாக காண்கிறான். காட்டில் சென்று ஒரு பொந்தில் வைக்கிறான். காடு எல்லாம் வெந்து சாம்பலாகி விட்டது. அவ்வளவுதான்.

ஆனால் அடுத்துச் சொல்கிறான், தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ? தகதகவென எரியும் நெருப்பை போன்ற வீரம் கொள்ள சின்னவர் பெரியவர் என பேதம் உண்டா? த தரிகிட தி தரிகிட தி தோம்

இந்த கடைசி வரியை வைத்தே முதல் வரிகள் பொருள் இப்போது மாறும். வீரம் எதற்கு வேண்டும்? அநியாயம், கொடுமை, பாதக செயல்கள், கொத்தடிமைத்தனம், அடிமைத்தனம், பெண்ணடிமை, சமூகத்தில் புறையோடி இருக்கும் அவலங்கள் என எதிர்க்கவே வீரம் வேண்டும். இங்கே அக்கினிகுஞ்சு சின்ன சிந்தனை நெருப்பு, அதை காடெல்லாம் ஓடி ஓடி வைக்க வேண்டியதில்லை, அதாவது எல்லோரிடமும் சொல்ல வேண்டியதில்லை. தனியாக கூப்பிட்டு சிலரிடம் சொன்னேன், தீ பரவியது! பணி முடிந்தது. பாரதியார் சின்ன வயசு. நானே இப்படி செய்திட முனைய இத்தனை வருசம் என்ன செஞ்சீங்க என குஞ்சென்று மூப்பென்று முண்டோ!

கடைசி வரிகள் மிருதங்க தாளங்கள்
த திரிகிட நான் திருகிட
தி திரிகிட நீ திருகிட
தி தோம் நாம் முடித்தோம்.

த கி ட த க
தி கி ட த க
தி தோம்

கி ட த க என்பது தரிகிட என பாடுவர். அழுத்தி சொல்ல வார்த்தை திருகி தத்தரிகிட என்றார்.

தன்னுள் ஞானம் தோன்றி தனக்குள் உள்ள அழுக்காறுகளை போக்க இந்த பாடல் என்றெல்லாம் புறணி பேசித் திரிவர். பாரதி தனக்கு தேவை எனில் நேராகவே கேட்கும் வழக்கம் கொண்டவன். இது போதும் என்னுள் நெருப்பு சிந்தனை எழுப்புகிறான் பாரதி, என் குடும்பம், என் வாழ்க்கை என என்னை போன்று வாழ்பவருக்கு பாரதியின் சமூக சிந்தனை தோன்றாது! 
இதே பாடலுக்கு ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் கொண்டு உள்ளனர். அதில் ஏதும் தவறில்லை. ஒரு சிறந்த கவிதைக்கு பல அர்த்தங்கள் உண்டு என்பது திருவள்ளுவர் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வரும் வழக்கம். 
''நான் நனையாமல் இருந்துவிட குடை நனைகிறது'' இது என்ன பெரிய கவிதை. இது சாதாரண பேச்சுமொழி. இதில் அர்த்தங்கள் எழுதிப் பாருங்கள். வரி சொல்லும் கதைகள் ஆயிரம்.
''நின்று கொண்டு இருந்தேன் திடீரென அவள் வந்தாள் உன்னை காதலிக்கலாமா என்றாள். என்ன கேள்வி இது, உன் அனுமதி கேட்டா உன்னை காதலிக்கிறேன் என்றேன், வெட்கத்தில் சிரித்தாள்'' இதை எல்லாம் பெரிய கவிதை என சொல்லிவிட முடியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை அது காதலின் வெளிப்பாடு. 
அவள் எல்லாரிடமும் சென்று அவ்வாறு கேட்கவில்லை. தன்னை காதலிக்கிறான் என்பதை உணர்ந்த அவள் அவனது வாயிலிருந்து கேட்கவே வேண்டும் என ஆசைப்படுகிறாள். அவளது உணர்வுகளை புரிந்தவன் சொல்கிறான், உன்னை நான் காதலிக்கிறேன் என! இதில் என்ன பெரிய அர்த்தங்களை கொண்டு சேர்த்துவிட முடியும். ஆனால் அக்கினிக் குஞ்சொன்று அப்படி அல்ல. அதனால் தான் பாரதி ஒரு மகாகவி. 
இந்த கவிதை அவரது பாடல்களில் சமூக பாடலாக வைக்கப்படவில்லை. பிற பாடல்கள் என்ற குறிப்பில் உள்ளது. எனவே அர்த்தம் கொள்வோர் எப்படி வேண்டுமெனில் கொள்க, நல்லவிதத்தில் மட்டுமே என்று முடித்தல் சுபம்.