Thursday, 23 January 2014

இவர்கள் எல்லாம் பெண்களா?

எல்லா பெண்களும் கல்வி, கலவி, காமம், காதல், கல்யாணம், விபச்சாரம் என தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படையாக பேசிவிட்டால் இந்த தமிழகம் தாங்காது. நாகரிகம்  மாறிவரும் வேளையில், கலாச்சாரம், பண்பாடு என இவற்றில் வளர்ந்துவிட்டதால் பல பெண்கள் இவைகளை உதாசீனம் செய்வதோடு உள்ளுக்குள் வேதனை கொள்கிறார்கள். அதையும் தாண்டி தங்கள் மனக் குமுறல்களை வெளிச் சொன்னால் இவர்களுக்கு பெண்ணியவாதி என பட்டம் கிடைத்துவிடுகிறது. பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்து வருகிறார்கள். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, கற்பு, அடக்கம், ஒடுக்கம் என எல்லா குட்டிச்சுவரகளையும் பெண்கள் மீது கட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

வரம்பு மீறி வாழும் பெண்களுக்கு ஆண்களுக்கு ஒருபோதும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமெனில் மணந்து வாழலாம் எனும் போது, ஒரு பெண் எத்தனை ஆண்களை வேண்டுமெனிலும் மணந்து வாழ சமூகம் அங்கீகரிப்பது இல்லை. எந்த ஒரு ஆணும் அதற்கு சம்மதம் சொல்வது இல்லை. எனக்கு இரண்டு புருசர்கள் என எந்த பெண்ணும் சொல்லிக்கொண்டதாக தெரியவில்லை. கேட்டால் சமூக இழிவாம்.

சுதந்திரமாக வாழ எத்தனிக்கும் பெண்களை நோக்கி எழுப்பப்படும் ஒரே கேள்வி இவர்கள் எல்லாம் பெண்களா என்பதுவே! ஆம், தனது சுதந்திரம் பறிபோவதை எதிர்த்து, தனது உரிமைகளுக்கு போராடும் பெண்கள் பெண்கள் தான்.

காமம், கலவி இதில்தான் பல பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். குடும்ப வாழ்க்கைக்கு என தனது சொந்த அபிலாசைகளை தூக்கி எறிந்தவர்கள் இவ்வுலகில் எத்தனை பேர். '' தூக்கி பரண் மேல போட்டாச்சு''

நிற்க.

ஒரு ஊருல சரஸ்வதின்னு ஒரு பெண். இருபத்தியொரு வயசான அந்த பொண்ணு  அந்த ஊருல இருக்கற ஹோட்டலுல வேலைப் பாத்துச்சு. ஹோட்டலு ஒன்னும் பெருசு இல்லை. கூரை மேய்ஞ்ச ஹோட்டல் தான். ஆமை வடை, உளுந்த வடை, போண்டா, இட்லி, தோசை, பூரி சாப்பாடு வகையறாதான் கிடைக்கும். புரோட்டா எல்லாம் இல்ல. கிரைண்டர் இல்லாத காலம் அது. இந்த பொம்பளை தான் எல்லாத்துக்கும் மாவாட்டணும். அந்த கடையில ஒரு பெரிசு டீ, காபி போட்டு கொடுப்பாரு.

இந்த பொண்ணு  ராத்திரி ஆனதும் 'சரக்கு' அடிக்கப் போகும். அது ஊருக்கேத் தெரியும். கம்மாய் ஓரத்தில 'சாராயம்' கொண்டு வந்து விப்பாய்ங்க. ஒரே ஒரு டம்ளர்தான் சரக்கு அடிக்கும். வாய்க்கு வந்தது எல்லாம் திட்டும். அதனால ஒரு பைய அந்த பொண்ணை  தப்பான நோக்கத்தில நெருங்க முடியாது. என்ன சரசுன்னு சொன்னா போதும், போடா பொசக்கட்ட பயலேன்னு சொல்லும். ஹோட்டலுக்கு வரவங்ககிட்ட மட்டும் நல்லா சிரிச்சு பேசும்.

அந்த பெரியவருக்கு குடும்பம் இருந்துச்சு. ஹோட்டலுல நல்ல வியாபாரம் நடக்கும். பக்கத்து ஊரில இருந்து ஆளுக வந்து சாப்பிட்டு போகும், உள்ளூர்காரங்க கொஞ்ச பேருதான் வாங்கி சாப்பிடுவாங்கே.சரக்கு அடிக்குதாம் சரசுனு கேலி பேசுவாங்கே.  இந்த சரசுக்கு ரொம்ப சம்பளம் எல்லாம் கிடையாது. சாப்பாடு, தங்குற எடம் எல்லாம் இலவசம். அந்த பெரிசு இந்த சரசுவை வைச்சிருக்கிறதா ஊரே பேசும், ஆனா பெரிசோட வீடு மட்டும் அப்படி பேசாது. இன்னும் என்ன என்னமோ பேசுவாங்கே, எழுதவே கை கூசுது. தட்டிக்கேட்டா மாட்டிக்கிட்டியானு வம்பு அளப்பாங்கே. எதையும் சரசு கண்டுக்காது. எங்கையா இவளைப் பிடிச்சி வந்தனு கேட்டா, அனாதையா கிடந்தா, கூப்பிட்டு வந்தேன்னு சொல்வாரு பெரிசு.

சரசுக்கு கல்யாணம் காட்சி பண்ணி வைக்க பெரிசு நினைச்சாலும் ஒரு பயலும் கட்டிக்க வரலை. சரசு போட்ட கண்டிசன் தான் காரணம். இந்த ஹோட்டலு, சரக்கு குடிக்கிறதை விடச் சொல்றவன், பொம்பளை சுகம் தேடுறவன் எல்லாம் வரக்கூடாதுன்னு கட் அன் ரைட்டா சொல்லிருச்சி. பெரிசு ஒருநா செத்துப் போனாரு.

பெரிசோட குடும்பம் இந்த ஹோட்டலை மூட நினைச்சிச்சு. சரசு தான் நான் தனியா நடத்துறேனு சொல்லி  அடம்பிடிச்சி நடத்துச்சு. சிரிச்ச முகம் மாறாம இருக்கும். ஒரு பையலையும் கிட்டக்க அண்டவிடலை. சரசு ஹோட்டல் வாடகை பணம் மட்டுமே பெரிசு குடும்பத்துகிட்ட கொடுக்கும். மத்ததெல்லாம் சரசுகிட்ட இருந்துச்சு. கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ணிக்கலை சரசு.

முப்பது  வருசமா நாயா பேயா உழைச்சிச்சி. சரக்கு குடிக்கிறத நிறுத்தலை. இருமல் வந்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில படுத்துருச்சு. ஒரே நாள் தான். சரசு அன்னைக்கே கண்ணை மூடிருச்சி. சரசு செத்துப் போன விஷயம் கேள்விப்பட்டு திமுதிமுன்னு ரொம்ப பேரு வந்துட்டாங்க. அதுல ஊர்க்காரங்களுக்கு தெரியாத சின்ன சிறுசுக ஒரு பத்து பேரு மாப்பிள்ளையும் பொண்ணுமா, குழந்தையோட ஆத்தா ஆத்தா சொல்லாம போயிட்டியே ஆத்தான்னு அழுதுட்டு நின்னாங்க.

யாருன்னு விசாரிச்சப்ப, இந்த ஆத்தாதான் எங்களை வளர்த்தாங்கனு  கல்யாணம் பண்ணி வைச்சாங்கன்னு பத்து பொட்ட்பிள்ளைக சொல்ல ஊரே வாயடைச்சி நின்னுருச்சி.

ஒரு குடும்பத்தை கட்டி பிள்ளைகளை பெத்து அனாதையா போற பொணத்துக்கு மத்தியில சரசோட இறுதி சடங்கு பெருசா நடந்துச்சி. அந்த ஹோட்டல் இருந்த இடத்தை விலைக்கு வாங்கி சரசுக்கு ஒரு கோவில் கட்டி வைச்சாங்க அந்த பிள்ளைக.

அந்த பிள்ளைக வாரம் தவறாம வந்து கும்பிட்டு போறாங்க!

ஊர்க்காரங்களும் தான் போடுற பொங்கச் சோறு திங்கிறாங்கே. மானங்கெட்ட பயலுக.

Tuesday, 21 January 2014

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 22

அப்படியே வீட்டுக்கு வந்து வெளியில் பூட்டிய கதவை மெதுவாக திறந்து உள்ளே சென்றேன்.

''எங்க முருகேசு போய்ட்டு வர''

அப்பாவின் குரல் இருளில் வந்தது கண்டு அச்சம் கொண்டேன்.

''சொல்லு முருகேசு''

மின்விளக்கு போட்டுவிட்டு நடந்த விஷயத்தை அப்பாவிடம் சொன்னதும் அப்பா திடுக்கிட்டார். அம்மாவிடம் சொல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்து அனுப்பினார். எனது அறைக்கு சென்று தூங்க முயற்சித்தேன்.சுபா, கோரன், அவனது அப்பா, ஆசிரியர், ஆசிரியரின் மனைவி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே தலை சுற்றியது. நகர் வாழ்க்கையில் எவர் எவர் எப்படி என்பது தெரிந்து கொள்ள இயலாத வாழ்க்கை சூழல். கோரன் இனி நினைவு இழந்தவன் போல நடிப்பான். ஆசிரியரிடம் விபரம் சொல்ல வேண்டும் என தூங்கிப் போனேன்.

''முருகேசு, எழுந்திருப்பா''

வழக்கம் போல அம்மா எழுப்பிவிட்டார்கள்.

''காயத்ரி உனக்கு ராத்திரி கோரன்கிட்ட இருந்து கொலை பத்திய போன் வந்துச்சுன்னு சொன்னப்பா, என்ன ஆச்சு உங்க அப்பாகிட்ட சொன்னா சும்மா பையனுங்க விளையாடி இருப்பாங்கனு சொல்றார். காயத்ரி அப்படி இல்லைன்னு சொல்றா''

''அம்மா, இன்னும் நான் எந்திரிக்கலை''

''கொலைன்னு சொன்னதும் பயந்து வரேன், நீ எந்திரிக்கலைனு சொல்ற, முகம் அலம்பிட்டு வந்து சொல்லிட்டு அப்புறம் கிளம்பு, இல்லை நீ காலேஜுக்கு போக வேணாம்.''

போர்வையை தூக்கிபோட்டு விட்டு எழுந்தேன். கசங்கிய முகம்தனை கைகளால் மேலும் கீழும் அழுத்தி தேய்த்துவிட்டு சோம்பல் முறித்து கொண்டு சென்றேன்.

''நில்லு முருகேஷா''

''என்னம்மா''

''என்னடா ரத்த காயம், அங்க அங்க ரத்தம்உறைஞ்சிருக்கு, என்னங்க இன வாங்க''

''கொசு கடிச்சி தொலைச்சிருக்கும், இதுக்கு எதுக்கும்மா அப்பாவை கூப்பிடற''

வேகமாக பாத்ரூமில் நுழைந்தேன். இந்த காயத்ரியை ஒரு அறைவிட்டால் சரியாகும் என்றே நினைத்தேன். இந்த அம்மாக்கள் இப்படித்தான். எப்படி ரத்த காயம் எல்லாம் கண்ணில் பட்டது. நன்றாக குளித்துவிட்டு வந்தேன். அம்மா, காயத்ரி, அப்பா நின்று இருந்தார்கள்.

''காயத்தை காட்டுடா''

''அம்மா, என்னை துணி மாத்த விடுமா, இதுல இந்த பொண்ணு வேற நிக்கிறா''

காயத்ரியின் முகத்தில் வெட்கம் வெட்டி சென்றது. இந்த பாரு என கையை காட்டிவிட்டு நடந்தேன்.

''கொசு கடி  தான்''

தயாராகி கீழே வந்தபோது காயத்ரி இன்னும் வெட்கத்தில் இருந்தாள். கல்லூரிக்கு கிளம்பினோம். செல்லும் வழியில் எல்லா விசயங்களையும் காயத்ரியிடம் சொன்னதும் மயக்கம் போடாத குறையாக போலிசுக்கு வா போவோம் என்றாள் . நான் ஆசிரியர் வீடு நோக்கி நடந்தேன்.

''என்ன முருகேசு, இங்கிட்டு நடக்கிற''

''சாரை பாத்துட்டு போவோம்'

''போலீசுல சொல்வோம்''

எதுவும் பேசாமல் நடந்தேன். ஆசிரியர் வீட்டினை அடைந்தோம்.

''என்ன இந்த பக்கம், காலேஜுக்கு போகலை''

''ஒரு முக்கியமான விஷயம் பேசணும்''

''உள்ளே வாங்க''

ஆசிரியரிடம் விபரம் சொல்ல சொல்ல அவரது முகம் மாறியது. வியர்வைத் துளிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கின. சமையல் அறைக்குள் எழுந்து சென்றார்.தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்.

''ரொம்ப வெட்கையா இருக்கு''

''காத்தாடி ஓடுதே''

''அது பழசு''

''உங்க மனைவிக்கும், கோரன் அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்''

''அது எல்லாம் உனக்கு எதுக்கு''

''சார், சொல்லுங்க, நாங்க உதவி பண்றோம்''

நிறையவே யோசித்தார்.

''அது வந்து...''

''என்ன சார்''

''நேரமாகுது, கிளம்புங்க''

''முருகேசு, வா கிளம்பலாம்''

வேறு வழியின்றி கிளம்பினோம். அன்று கோரன் கல்லூரிக்கு வரவில்லை. ஆசிரியரும் வரவில்லை. ஆசிரியர் வீடு சென்று பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது.

கோரன் வீட்டிற்கு செல்ல நினைத்த என்னை காயத்ரி தடுத்தாள். அன்று இரவு எட்டு மணிக்கு கோரன் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டு நண்பனை பார்த்து வருவதாக கிளம்பினேன்.

''கோரன் வீட்டுக்கா''

''காயூ, நீ பேசாம இரு, அம்மா தாண்டவம் ஆடுவாங்க''

கோரன் வீட்டினை அடைந்தேன். கோரன் வீட்டில் கோரன், அவனது அப்பா, அம்மா  இருந்தார்கள் . கோரன் ஒரு பையை எடுத்து கிளம்பினான். திடுக்கிட்டேன். அவனை பின் தொடர்ந்தேன். ஆசிரியர் வீட்டினை அடைந்தான். கதவு பூட்டப்பட்டு இருந்தது கண்டு ஆத்திரம் கொண்டவனாய் கத்தினான். அந்த நேரம் பார்த்து ஒரு காவல் அதிகாரி வந்தார்.

''என்னடா சத்தம் போடுற''

''பூச்சி கடிச்சது சார்''

''போய் டாக்டரை பாரு''

ஆசிரியர் வீட்டினை சுற்றி பார்த்துவிட்டு திரும்பினான்.

''கோரன்''

என்னை பார்த்தவன் திடுக்கிட்டான்.

''எதுக்கு இவரை தேடி வந்த''

''உனக்கு தேவை இல்லாத விஷயம்'

''கொல்ல வந்தியா''

''ஆமா''

''ஏன்''

''முருகேசு நீ தலையிடாத''

வேகமாக ஓடி மறைந்தான். அடுத்த நாள் ஆசிரியர் வீட்டிற்கு சென்றேன். வீடு விற்கப்பட்டு விட்டதாக சொன்னார்கள். கல்லூரி முதல்வரிடம் சென்று ஆசிரியர் குறித்து கேட்டேன். வேலையை நேற்றே விட்டுவிட்டதாக சொன்னார். கோரன் அன்றும் கல்லூரிக்கு வரவில்லை.

(தொடரும்)





 

பதிப்பகங்களும் புத்தகங்களும்

இன்றைய காலகட்டத்தில் எழுதுவது என்பது எல்லோராலும் பொதுவெளியில் எழுதும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. கணினி மற்றும் தமிழ் அச்சு தெரிந்து இருந்தால் போதும், உள்ளக்கிடக்கை எல்லாம் ஊருக்கு வெளிச்சம் போட்டு காண்பித்து விடலாம்.

எனக்கு ஓரளவிற்கு தமிழில் மீது எப்போதும் ஆர்வம் உண்டு. சிறுவயதில் இருந்தே தமிழ் படிப்பதில் அலாதி பிரியம் இருந்தது. எழுத்தாளர்கள் புத்தகங்கள் அவ்வளவாக படிக்கவில்லையெனினும் தினமலர், வாரமலர், குடும்பமலர், குமுதம், ஆனந்தவிகடன், தமிழ் கோனார் உரை, திரைப்பட பாடல்கள், அசோகமித்திரனின் கதைகள்  என தமிழ் படித்தது உண்டு. கடை எனும் ஒரு நாவல் படித்த நினைவு இருக்கிறது. நான் கல்கத்தாவில் படித்தபோது நண்பர்கள் அங்கிருக்கும் தமிழ் சங்கத்தில் இருந்து நிறைய தமிழ் புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பார்கள். அதேபோல அங்கே உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இருந்து நிறைய ஆங்கில புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பார்கள் . நான் அதிகம் படித்தது கவியரசு கண்ணதாசனின் புத்தகங்கள் என சொல்லலாம் மற்றபடி பாடபுத்தகங்கள் மட்டுமே. இதனால் நான் நாவல் எழுத தொடங்கியபோது பாட புத்தகங்களில் உள்ள கருத்துகளை கையாண்டேன்.

பொன்னியின் செல்வன், யவன ராணி, கடல் புறா, மோகமுள்  என பெயர்கள் மட்டுமே எனக்கு நினைவில் இருக்கிறது. இந்த கதைகளை எல்லாம் நான் படித்தது இல்லை. சாண்டில்யன், தி.ஜானகிராமன், கல்கி என பல பெயர்கள் அவர்கள் மூலம் எனக்கு பரிச்சயம். என்னை மிகவும் பாதித்த மலையாள மொழி பெயர்ப்பு கதை உண்டு, இன்னமும் கதை கரு மனதில் நிழலாடுகிறது, ஆனால் தலைப்பு மறந்து போய்விட்டது.

இந்த இணையம் இல்லாது இருந்து இருந்தால் நான் நாவல், கதை எல்லாம் எழுதி இருப்பேனா என்பது கேள்விக்குறிதான். முத்தமிழ்மன்றம் போட்ட விதை நுனிப்புல் இரண்டு பாகங்களும். இப்படியே கவிதைகள், சிறுகதைகள் என முத்தமிழ்மன்றம் தந்த உற்சாகம் மடமடவென எழுத வைத்தது. இன்று எத்தனையோ கதைகள் எழுதியாகிவிட்டது. ஆனால் வெளியிட்டது மூன்றே நூல்கள்.

நாவல் வெளியிட நான் தொடர்பு கொண்ட பதிப்பகங்கள் எல்லாம் கைகளை விரித்தன. அதனால் முத்தமிழ்மன்ற பதிப்பகம் என சொந்த செலவில் புத்தகம் வெளியிட்டேன். அதற்கடுத்து வெளிவந்த கவிதை தொகுப்பு, கதை தொகுப்பு எல்லாம் சொந்த செலவுதான். பதிப்பாளர்களுக்கு ஒரு செலவும் இல்லை. ஆனால் இதுவரை சம்பந்தபட்ட பதிப்பாளார்கள் புத்தகங்கள் குறித்து ஒரு விஷயமும் தெரிவிக்கவில்லை. நானும் கேட்டுக்கொள்ளவில்லை. புத்தகம் அச்சிட்டு தந்தார்களே அதுவே எனக்கு பெருமிதமாக இருக்கிறது. அவர்களிடம் புத்தகங்களை இலவசமாக கொடுத்துவிடுங்கள், எவரேனும் என்ன விலைக்கு கேட்கிறார்களோ கொடுத்துவிடுங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது, ஒரே அறையை அலங்கரிக்கும் அந்த புத்தகங்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு அறையை அலங்கரிக்கட்டுமே. எழுதுவது எனது தொழில் அல்ல, இதன் மூலம் நான் சம்பாதிக்க இருப்பது என்று எதுவும் இல்லை. புத்தகத்திற்காக சிறு பணம் ஒதுக்கி அதை வெளியிடுவதுடன் எனது பணி முடிவடைகிறது.

இப்படி நான் எழுதி சொந்த காசு செலவு பண்ணியும் புத்தகம் வெளியிட பதிப்பகங்கள் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது. ஒரு சிறந்த பதிப்பகம் கிடைக்க வேண்டுமெனில் கதை சிறப்பாக இருக்க வேண்டும், அதுவும் மக்கள் அறிமுக எழுத்தாளராக இருக்க வேண்டும் என்பது காலக்கொடுமை.

நுனிப்புல் பாகம் 2 வெளியிட வேண்டும். நண்பர் சொக்கன் இதை தனி நூலாகவே கொண்டு வரலாம் என்றார். தலைப்பு கூட நெகாதம் என்றே வைக்கலாம் என யோசிக்கிறேன். எவரேனும் இந்த நூலை, தனி  நூலாகாவோ (நெகாதம் தலைப்புடன்) , தொடர் நூலாகவோ (நுனிப்புல் தலைப்புடன்)  பதிப்பகம் ஒன்று அச்சிட்டு வெளியிட முன்வருமாயின் தொடர்பு கொள்ளுங்கள் என்பதை தவிர வேறு என்ன கேட்டுவிட முடியும்.