Thursday, 16 January 2014

நீங்க எந்த ராசி?

''டேய், போயி அந்த பெரியவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்திரு, உன் கல்யாணத்துல எந்த தடையும் வந்திரக்கூடாது பாரு''

''என்னம்மா நீ ரொம்ப தொனதொனத்துட்டே இருக்கே, நானும் ஸ்ரீயும் கல்யாணம் பண்ணப்போறோம், நீ என்னமோ ஆசிர்வாதம் அது இதுன்னுட்டு இருக்க''

''அதுக்கில்லைடா, ஸ்ரீ குடும்பத்தில தகராறு பண்றதா நீதானே சொன்ன, அப்பா வேற ரொம்ப கவலையா இருக்காருடா. சொன்னா கேளுடா''

ராம் 23 வயதான நல்ல உயரமான கருப்பு வண்ண இளைஞன். சமீப ஆறு மாத காலமாக தன்னுடன் வேலை பார்த்து வரும் 21 வயதான சற்றே உயரமான சிவப்பு வண்ண ஸ்திரீயான ஸ்ரீயை காதலித்து வருகிறான். இந்த காதல் விவகாரம் நேற்றுதான் ஸ்ரீ வீட்டுக்கும், ராம் வீட்டுக்கும் தெரிந்தது. ராம் பெற்றோர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஸ்ரீ வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்கள். இந்த எதிர்ப்பு விவகாரத்தை ராம், தனது அம்மாவிடம் சொல்ல அம்மா அவர்கள் ஊரில் இருக்கும் ஒரு பெரியவரை பார்த்து வர சொன்னார்கள். ராம் செல்லமாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டு இருந்தான்.

''யாரும்மா அந்த பெரியவரு, அவர் என்ன சித்தரா, ஸ்ரீயோட அப்பா அம்மா மனசை மாத்துறதுக்கு. சும்மா கிடம்மா, நானே எப்படி கல்யாணம் பண்ணலாம்னு யோசனையில இருக்கேன்''

''டேய், அவரை பாத்துட்டா, தடைபட்ட கல்யாணம் எல்லாம் நடக்குதாம்டா. அதோட இல்லை கல்யாணம் பண்றவங்க எல்லாம் நல்லா இருக்காங்களாம். நம்ம கோமதி பாட்டி கூட வந்து சொல்லிட்டு போனாங்க''

''அப்படினா விவகாரத்து பண்றவங்களை அவரை பார்க்க சொல்ல வேண்டியதுதானே, சேர்ந்து வாழுவாங்கள''

''அப்படியும் நடந்து இருக்காம்டா, சொன்னா கேளுடா. ஸ்ரீ நம்பர் இருக்காடா''

''எதுக்கு, அதெல்லாம் ஒன்னும் வேணாம். சனிக்கிழமை அன்னைக்கு போறேன், என்னை நிம்மதியா போய் தூங்கவிடு''

''நம்பர் தாடா, எதுக்கும் வைச்சிக்கிறேன்''

''இந்தாம்மா''

ராம் உறங்க சென்றதும் ஸ்ரீக்கு போன் செய்தார்.

''ஸ்ரீ, நான் ராம் அம்மா பேசறேன்''

''சொல்லுங்க, இருங்க மாடிக்கு போய்க்கிறேன்''

சிறிது இடைவெளிக்குப் பின்னர்

''ம்ம் சொல்லுங்க''

''ஏன்மா, என் பையனை நீ காதலிக்கிறியாமே, உங்க வீட்டுல பிரச்சினையாமே, ராம் சொல்லி வருத்தப்பட்டுட்டு இருந்தான்''

''ஆமாம், வீட்டுல முடியாதுன்னு சொல்லிட்டாங்க, ஆனா எங்க முடிவுல மாத்தமில்லை, உங்களுக்கு சம்மதம் தானே''

''சம்மதம் தான், நீ எதுக்கும் எங்க ஊருக்கு வெளில ஒரு குடிசையில பெரியவர் ஒருத்தர் இருக்காரு, ராசிசாமினு கேட்டா சொல்வாங்க, அவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போனா எந்த பிரச்சினையும் வராது''

''ம்ம்''

''மறந்துராதம்மா''

''ம், மறக்கலை''

ராம் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அடுத்த நாள் ஸ்ரீ, ராசிசாமியை தேடி வந்துவிட்டாள்.

''வணக்கம் சாமி''

''ம்ம்''

''என்னோட கல்யாணத்துல பிரச்சினை, அதை நீங்க தீர்த்து வைக்கனும்''

''ம்ம் உன்னோட பேரு, ராசி என்னம்மா?''

''ஸ்ரீ, மகரம்''

''என்ன நட்சத்திரம்?''

''திருவோணம்''

''எந்த மாசத்தில் பிறந்த?''

''மே  7''

''பையனோட பேரு, ராசி?''

''ராம், மீனம்''

''பையனோட நட்சத்திரம்?''

''ரேவதி''

''எந்த மாசத்தில் பிறந்தார்?''

''ஜனவரி 11''

''எல்லாம் துல்லியமா வைச்சிருக்கியே''

''காதலிக்க ஆரம்பிச்சதும், ராசி பொருத்தம் பாத்துட்டேன்''

''இது ஜாதகப்படி சரி. எதுக்குனா இது சந்திர ராசி. ஜாதகத்தில எங்க சந்திரன் இருக்கோ அதுதான் ராசி. ஆனா பெரும்பாலான இணையதளங்களில் பிறந்த மாசம் வைச்சிதான் கணக்கு பண்ணுவாங்க. அது சூரிய ராசி. ஆங்கில மாச பிறப்பு படி நீ ரிஷபம், அவர் மகரம். இந்த ராசிக்கான நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டியது இல்லை. ராசி மட்டுமே பாக்கனும், அப்படி பாக்கப்போனா உங்க ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம் இருக்கு. தாராளாம கல்யாணம் பண்ணலாம்''

''சரிங்க சாமி, தட்சிணை எவ்வளவு?''

''அந்த பணத்தை அப்படியே போறப்ப அநாதை பிள்ளைகளுக்கு சோறு வாங்கி கொடுத்துட்டு போ''

ஸ்ரீ, ராமிடம் உற்சாகமாக விஷயத்தை சொன்னாள்.

''அந்த பெரியவர் மாத்தி சொல்லி இருந்தா வேணாம்னு சொல்லி இருப்பியா''

''மனசுக்கு கஷ்டமா இருந்து இருக்கும்''

''சரி, வேலைக்கு வந்து சேரு''

ஸ்ரீ தனது அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.

''சரி கவலைப்படாதே, உன் அப்பாகிட்ட சொல்லி சமாதானம் பண்ணி வைக்கிறேன்''

ஸ்ரீ, ராமிடம் அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.

''நான் சொன்னேன் பார்த்தியா, அதுதான் அந்த பெரியவரோட மகிமை''

''தேங்க்ஸ்த்தை''

ஸ்ரீ வீட்டில் சம்மதம் சொன்னார்கள். ராம் சில தினங்கள் பின்னர் பெரியவரை சந்திக்க சென்றான்.

''எப்படி உங்களால் இந்த கல்யாணம் எளிதாக சாத்தியம் ஆச்சு?''

''என் மேல மக்கள் வைச்சிருக்கிற நம்பிக்கை. நான் சொன்னா நல்லா நடக்கும்னு நினைக்கிறாங்க. இந்த நம்பிக்கையை ஸ்ரீக்கு கொடுத்து அது ஸ்ரீ பெற்றோருக்கு போய் சேர்ந்தது. அவங்க அவங்க மேல நம்பிக்கையை வரவைக்கிறதுதான் என்னோட வேலை. மத்தபடி ராசி, ரோசி எல்லாம் ரெண்டாம் பட்சம். பரஸ்பர நம்பிக்கை இல்லாத வாழ்க்கை என்னைக்குமே பஸ்பம்தான்''

''ரொம்ப நன்றிங்க''

''இந்த நம்பிக்கை விஷயத்தை ஒரு நாப்பது வருஷம் முன்னாடி நான் என்னோட சுமதிக்கு சொல்லி இருந்தா இந்த ராசி கருமாந்திரம் எங்களை பிரிச்சி இருந்து இருக்காது''

ராமின் சந்தோசத்தில் சின்னதாய் வலி ஒன்று வேகமாக ஊடுருவி போனது. 

Tuesday, 14 January 2014

நுனிப்புல் வாழ்த்துரை - என். சொக்கன்

வாழ்த்துரை

நாவல்களில் பலவகை. அறிவியல், ஆராய்ச்சிக் கருத்துகளை அதனுள் தோய்த்துத் தருவது சமீபத்தில் புகழ் பெற்று வரும் தனி வகை.

ஆகவே, நண்பர் ராதாகிருஷ்ணன் அதைப் பின்பற்றி ஒரு நாவல் எழுதிவிட்டார் என்று எண்ணிவிடவேண்டாம். அவர் இந்நாவலையும் அதன் முந்தின பாகமாக அமையும் பிறிதொரு நாவலையும் எழுதிப் பல ஆண்டுகள் ஆகின்றன. அவ்விதத்தில் அவர் ஒரு முன்னோடி என்பதே உண்மை.

இவ்வகை நாவல்களில் ஒரு சின்ன பிரச்னை, இவற்றில் கருத்து அதிகரித்துவிட்டால் கதைச் சுவை தீர்ந்துவிடும், நாவல் நொண்டியடிக்கும், சரி என்று கதை சுவாரஸ்யத்தை அதிகரித்துவிட்டால் கருத்து நீர்த்துவிடும், வாசகனுக்கு எதுவும் சென்று சேராது.

இவ்விரு வட்டங்களிலும் சிக்கிக்கொள்ளாமல், மிக நேர்த்தியாகத் தன் கதையைக் கொண்டுசென்றிருக்கிறார் ராதாகிருஷ்ணன். அவரே மருத்துவ ஆராய்ச்சி நிபுணர் என்பதால், இதில் உள்ள விவரங்கள் அனைத்தும் நேர்த்தியாகவும் எல்லாருக்கும் புரியும்படியும் உள்ளன. குறிப்பாக, அந்தத் துறைப் பின்னணியே இல்லாத வாசகர்களுக்கும்!

கதை பாணி என்று பார்க்கும்போது, ராதாகிருஷ்ணனுக்குக் கல்கி ஆதர்ஷம் என்று ஊகிக்கிறேன். அவரது நாவல்களைப்போலவே பாத்திரங்கள் அறிமுகம், கொக்கிகள், தகவல் பரிமாற்றங்கள், முக்கியமாக, எல்லாரும் நல்லவர்கள். மனத்துக்கு மிகவும் ஆசுவாசமளிக்கும் விஷயம் இது!

கிராமத்துப் பின்னணியில் அமைந்த கதை. ஆகவே, பல பழக்க வழக்கங்களை நுட்பமாகக் காட்டுகிறார். குறிப்பாக, விருந்தினர்களை உபசரிக்கும் விதம், ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் அமைப்பு, மன உளவியல் போன்றவை!

கவிதை, சிறுகதை, நாவல் என்று பல தளங்களில் விரிந்து செல்லும் ராதாகிருஷ்ணனின் எழுத்துகள் எண்ணற்ற வாசகர்கள் மனத்தில் இடம் பிடிக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன். எல்லாவிதமான எழுத்துகளிலும் அவர் கால் பதிக்கக் கோருகிறேன். நன்றி!


என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.

சொக்கன் அவர்களுக்கு மிக்க நன்றி. 

Friday, 10 January 2014

வைகுண்டமும் பெருவெடிப்பு கொள்கையும்

ஒரு புத்தகம் கொண்டு வந்து இதைப் படி என அம்மா கொடுத்துவிட்டு போனார். இந்த இரவு நேரத்தில் தூங்குவதை விட்டுவிட்டு எவரேனும் புத்தகம் படிப்பார்களா என்றே அந்த புத்தகம் பார்த்தேன்.  அந்த புத்தகத்திற்கு எந்த ஒரு பெயரும் இல்லை. எவரேனும் தலைப்பு இல்லாமல் ஒரு புத்தகம் எழுதுவார்களா? அந்த புத்தகத்தினை எழுதியவர் பெயர் கூட இல்லை. முன் அட்டை, பின் அட்டை வெறுமையாக இருந்தது. உள்ளே எடுத்த எடுப்பில் வைகுண்டத்தில் நாராயணன் வாசம் செய்கிறான் என்றே வரி ஆரம்பித்து இருந்தது. பதிப்பகம், விலை என இத்யாதிகளும் இல்லை. ஆயிரத்து எட்டு பக்கங்கள். தலைக்கு அடியில் வைத்து பார்த்தேன். மெத்தென்று இருந்தது. 

''பக்தா, நல்ல தூக்கமோ''

இந்த வார்த்தைகளை நான் வெகு நாட்களாக கேட்டு இருக்கவில்லை. திடீரென எதற்கு சாமியார் வந்து இருக்கிறார் என்றே ஆச்சர்யத்துடன் அவரை வரவேற்றேன். அங்கிருந்த ஒரு நாற்காலி ஒன்றை அவருக்கு போட்டுவிட்டு கீழே நான் அமர்ந்து கொண்டேன். 

''என்ன விஷயமாக வந்து இருக்கிறீர்கள்''

''நான் வைகுண்டம் போகலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன், அதுதான் நீயும் வருகிறாயா என்று அழைத்து போகவே வந்தேன்'' 

''எங்கே, ஸ்ரீரங்கமா?''

''அது பூலோக வைகுண்டம், நான் உன்னை அழைப்பது நாராயணன் வாசம் செய்யும் வைகுண்டத்திற்கு பக்தா''

''என்ன உளறுகிறீர்கள், அந்த வைகுண்டம் எங்கே இருக்கிறது, அது ஒரு கற்பனையான உலகம்''

''பக்தா, இந்த உலகம் எப்படி தோன்றியது''

''பெரு வெடிப்பு கொள்கையின் படி ஒரு புள்ளியில் இருந்தே எல்லாம் தொடங்கின, அதற்கு முன்னர் எதுவும் இல்லை''

''எந்த பாட புத்தகத்தில் படித்தாய் பக்தா, கடவுள் இவ்வுலகை படைத்தார் என்றதும், கடவுளை யார் படைத்தார் என கேட்கும் நீயா, அந்த புள்ளிக்கு முன்னர் எதுவும் இல்லை என சொல்வது''

''நான் எப்போது கடவுளை யார் படைத்தார் என கேட்டேன், இந்த பிரபஞ்சத்தை படைக்கத் தெரிந்த கடவுளுக்கு தன்னை படைக்கத் தெரியாதா?''

''பக்தா, சரி மனம் மாறிவிட்டாய் போலிருக்கிறது, வா வைகுண்டம் போகலாம்''

''இல்லாத ஒரு இடத்திற்கு எல்லாம் என்னால் வர இயலாது, அதுவும் அது எங்கு இருக்கிறது என்பதே எவருக்கும் தெரியாது''

''பக்தா, வைகுண்டம் அழைக்கும் தொலைவில் உள்ளது என்பதுதான் கதை, ஆனால் உண்மையான வைகுண்டம் இந்த பிரபஞ்சத்தைத் தாண்டி உள்ளது''

''இது யுனிவர்ஸ்''

''அப்படித்தான் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது மல்டிவர்ஸ்''

''மல்டிப்ளக்ஸ் மாதிரி பேசறீங்க, என்னால் உங்களுடன் வர இயலாது''

''நாராயணன் இந்த வைகுண்டத்தில் வாசம் செய்கிறார். அந்த வைகுண்டத்திற்கு ஆத்மாக்கள் செல்லும். உடலை இங்கே கிடத்திவிட்டு ஆத்மா அங்கே வாசம் செய்யும். அதற்கு நற்காரியங்கள் புரிந்து இருக்க வேண்டும். நீ நற்காரியங்கள் புரிந்து இருக்கிறாயா''

''எதற்கு இப்போது இப்படி என்னை தொந்தரவு செய்கிறீர்கள்''

''வருடத்தில் ஒரு நாள் மட்டுமே அந்த சொர்க்கவாசல் எனும் பிரபஞ்சத்தை தாண்டி செல்லும் கதவு திறக்கும், நான் தயார் ஆகிவிட்டேன், அதுதான் உன்னை உடன் அழைத்து செல்ல வந்தேன்''

''நான் வரவில்லை, நீங்கள் போய்விட்டு வாருங்கள்''

''அந்த வைகுண்டம் சென்றுவிட்டால் ஆத்மா திரும்பி வர இயலாது, அந்த நாராயணனுடன் ஐக்கியம் ஆகிவிடும். அப்படி செல்ல இயலாத ஆத்மாக்கள் இந்த பிரபஞ்சத்திற்குள் சிக்குண்டு மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கின்றன''

''எனக்கு கூரை ஏறி கோழி கூட பிடிக்கத் தெரியாது''

''வானம் ஏறி வைகுண்டம் போக நான் வழி சொல்கிறேன்''

''வேண்டாம்''

''சரி பக்தா, இந்த பெருவெடிப்பு கொள்கை மூலம் உருவான இந்த உலகம் முடிவில் என்னவாகும்''

''அப்படியே உறைநிலை அடையும்''

''அதுதான் இல்லை, இந்த உலகம் மீண்டும் ஒரு புதிய தொடக்கம் தொடங்கும், இப்படித்தான் இவ்வுலகை படைக்க பிரம்மன், நாராயணன் அமர்ந்து இருக்கும் தாமரை மலரில் சென்று இடம் கேட்பார். ஒரு இயக்கம் முடிந்து, மறு இயக்கம் தொடரும்போது அழித்தலில் இருந்து கொண்டே ஆக்கம் செய்ய இயலாது என்பதை அறிந்த பிரம்மன், நாராயணனிடம் உதவி கோருகிறார். நாராயணன் தனது இருப்பிடம் வருமாறு வைகுண்டத்திற்கு பிரம்மனை வரவழைக்கிறார். பிரம்மன் இப்படித்தான் ஒவ்வொரு யுகம் படைக்கிறார். அதுபோலவே இந்த பெருவெடிப்பு கொள்கை மூலம் உருவாகும் இந்த பிரபஞ்சமும் இதே மாற்றங்களை கொண்டு அமையும்''

''இந்த பிரபஞ்சம் வைகுண்டத்தில் இருந்து உருவாக்கப்படுவதா, பெருவெடிப்பு கொள்கையா''

''வைகுண்டத்தில் இருந்து நடத்தப்படும் பெருவெடிப்பு கொள்கையும் அதைத் தொடர்ந்த விரிவாக்கமுமே பக்தா, இப்போது வருகிறாயா''

''இல்லை, அழைத்த தூரத்தில்தான் வைகுண்டம் இருக்கும் கதை எனக்குப் போதும்''

''பக்தா, அது ஒரு முட்டாள் அரசரை, ஒரு அறிவாளி மடக்கியது, ஆனால் நாராயணன் ஒளியை விட வேகமாக செல்லக்கூடியவர். இந்த பிரபஞ்சத்தில் அப்பாற்பட்டு இருக்கும் வைகுண்டத்தில் இருந்தே நமது தேவைகளை அவர் அறிய இயலும், அந்த தேவைகளை நிறைவேற்ற அவர் தேரில் வர வேண்டியது இல்லை. எனவே வைகுண்டம் அருகில் எல்லாம் இல்லை''

''ஒளியை விட வேகமாகவா''

''ஆம், இந்த பிரபஞ்சத்தில் பார்க்கும் ஒளி என்றோ வெளியிடப்பட்டது, அது நமக்கு வர பல்லாயிரம் வருடங்கள் ஆகும், ஆனால் நாராயணன் அப்படி அல்ல''

''அப்படிப்பட்ட வைகுண்டம் அடைய பல்லாயிரம் வருடங்கள் ஆகுமே''

''நமது உடலை கிடத்திவிட்டு ஆத்மா ஒளியை விட வேகமாக நாராயணன் நோக்கி செல்லும், சில வினாடிகளில் சென்று அடையும். வருகிறாயா''

''கிருஷ்ணர் தேர் மற்றும் உடலுடன் சென்றதாக தானே மகாபாரதம் குறிக்கிறது''

''கிருஷ்ணரின் உடல் இந்த பஞ்சபூதங்களால் ஆனது அல்ல. தேர் கூட இங்கிருக்கும் பொருளால் ஆனது அல்ல. இந்த பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் வைகுண்டத்தில் பஞ்ச பூதங்களே இல்லை. அங்கிருக்கும் நிலை வேறு, ஆமாம் கிருஷ்ணர் கதை சொன்னாயே, ராமர் கதை தெரியுமா''

''ராமர் என்ன செய்தார்''

''அப்படி கேள் பக்தா, ராமர், தனது மக்கள் அனைவருடன் வைகுண்டம் சென்றார், ஆனால் கிருஷ்ணர் தனது குலம் அழிந்து தான் மட்டுமே சென்றார்''

''அப்படியெனில் நீங்கள் மட்டுமே செல்லுங்கள், நான் வாழும் வரை பூலோக வைகுண்டம் சென்று வருகிறேன் அது போதும்''

எந்திருப்பா, படிக்க புத்தகம் கொடுத்தா தலைக்கு வைச்சா படுப்பே, சீக்கிரமா குளிச்சிட்டு வா கோவிலுக்கு போகலாம், இன்னைக்கு வைகுண்ட ஏகாதசி, ஏழு மணிக்கு சொர்க்கவாசல் திறந்திரும். 

சாமியார் சொன்ன சொர்க்கவாசல், வைகுண்டம் விட இந்த கோவில் சொர்க்கவாசல், வைகுண்ட ஏகாதசி எல்லாம் மிகவும் சுகம். எப்படியும் பிரசாதம் தருவார்கள். வேகமாக எழுந்து குளிக்க ஓடினேன்.