எங்கள் வீட்டில் எப்போதாவது அதுவும் விசேச தினங்களில் மட்டுமே மட்டன், சிக்கன் என வாங்குவார்கள். 'மக்காளி மாமா'தான் ஆட்டுக்கறி எல்லாம் விற்பனை செய்வார். எனக்கு இந்த ஆட்டுக்கறி, கோழி என்றால் பிடித்தும் பிடிக்காமலே இருந்தது.
எங்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட ஆடுகள், கோழிகள் கூட இரையாகி இருக்கின்றன. பலமுறை வேண்டா வெறுப்பாகவே சாப்பிட்டு இருக்கிறேன். முட்டை என்றால் மிகவும் விரும்பியே சாப்பிட்டு இருக்கின்றேன். அதுவும் எங்கள் வீட்டில் புரட்டாசி மாதம் என்றால் முட்டை கூட பொறித்து தரமாட்டார்கள். இதனால் எங்கள் வீட்டிற்கு எதிராக இருக்கும் 'உப்புநக்கி அவ்வா' வீட்டில் சென்று பிரத்தியோகமாக எனக்கென முட்டை பொறித்து சாப்பிட்டு வந்து இருக்கிறேன்.
ஒரு முட்டை இருந்தால் போதும், பழைய சாதம்தனை சாப்பிட்டுவிட்டு போய்விடுவேன் என வீட்டில் சொல்லுமளவுக்கு அத்தனை பிரபலம். உத்தங்குடியில் கல்லூரியில் படித்த போது நானும் எனது நண்பர் ராஜேசும் மதுரைக்கு சென்று ஆளுக்கொரு முழுக்கோழி சாப்பிட்டு வந்து இருக்கிறோம்.
உத்தங்குடியில் இருந்த கடை ஒன்றில் தினமும் ஒரு முட்டை கொத்து புரோட்டா சாப்பிடாமல் சென்றதில்லை. புரோட்டா அத்தனை அருமையாக இருக்கும். காத்திருந்து சாப்பிட்டு சென்று இருக்கிறோம். புரோட்டாவை போட்டு அதனை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கும் அழகே தனி. சமீபத்தில் நான் எழுதிய காமக் கதைகளுக்கு எப்பவும் மவுசு அதிகம் என்பதில் இந்த உத்தங்குடி கடையும், நாங்கள் கடைசி வருடத்தில் தனியாக எடுத்த வீடுமே எனது கற்பனையில் வந்து போயின. நாங்கள் ஐவர் தங்கி இருந்தோம், தினமும் காலை, மதியம் இரவு என அந்த கடையில் ஒருமுறையாவது கறியுடன் சேர்ந்தே சாப்பிடுவது உண்டு. மாதம் அறுநூறு ரூபாய் என வந்துவிடும். கல்லூரி முடிக்கும் தருவாயில் இந்த அசைவம் மீது சற்று வெறுப்பு வரத் தொடங்கி இருந்தது.
அசைவமாக இருப்பது சற்று அசௌகரியமாக இருந்தது. விடுமுறை நாளில் வீட்டுக்கு சென்றால் வறுத்த ரத்தம், ஆடு கோழி என அம்மா சமைப்பது உண்டு. எனக்கு பிடிக்கவில்லை என சொன்னாலும் அம்மா சமைக்காமல் விட்டதில்லை. கல்கத்தாவில் படித்தபோது மீன் சாப்பிட ஆரம்பித்தேன். அதன் முள்ளை விலக்கி சாப்பிடுவது பெரிய போராட்டமாகவே இருக்கும். அங்கே கடைகளில் முட்டையை உள்ளே வைத்து முட்டை ரோல் செய்து தருவார்கள். எப்படியும் ஒன்றாவது தினமும் சாப்பிட்டு விடுவேன். இப்படி வெறுப்புடனே அசைவத்தை மிகவும் ரசித்து சாப்பிட்டு வந்தேன்.
சென்னையில் கல்லூரியில் வேலை பார்த்தபோது கடைகளுக்கு சென்று சாப்பிடும்போது சிக்கன் எல்லாம் மிச்சம் இருந்தால் ராதாவிற்கு தந்துவிடுங்கள் என சொல்லுமளவுக்கு சிக்கனை சாப்பிடவே செய்தேன். ஆனால் ஏதோ உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. ஒருமுறை வீட்டிற்கு சென்றபோது அம்மா மட்டன் சமைத்து இருந்தார்கள். வேண்டாம் என்றே பிடிவாதம் பிடித்தேன். ஆனால் அவர்களோ நான் சாப்பிட்டே தீர வேண்டும் என சொன்னார்கள். வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு வைத்தேன். அம்மா உலகில் இல்லாது போனால் இந்த அசைவம் தொடக்கூடாது என முடிவு செய்தேன். அப்போதுதான் எனக்கு திருமணம் எல்லாம் செய்யும் திட்டம் உச்ச கட்டம் அடைந்து இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அம்மா எனக்கு திருமணம் ஆகுமுன்னரே இறந்து போனார்கள். நான் சைவம் ஆவது என முடிவு எடுத்தேன். அம்மா இறந்தபின்னர் மூன்று மாதங்கள் முட்டை மட்டுமே சாப்பிட்டு கொண்டு இருந்தேன்.
திருமணம் நிச்சயம் ஆனது. மனைவியாக வர இருந்தவரிடம் என அசைவ கதையை சொன்னேன். அவர் அசைவம் சாப்பிடுவதில்லை என சொன்னார். அதோடு முட்டையும் சாப்பிட மாட்டேன் என சொன்னார். அப்படி எனில் நானும் முட்டையை விட்டுவிடுகிறேன் என முழு சைவமாக மாறினேன். நீ எங்காவது சாப்பிட்டு வந்தால் எனக்கு என்ன தெரியும் என்றே ஒருமுறை மனைவியாக வந்தவர் சொல்லிவிட மனதில் உறுதி கொண்டேன். குளிர் நாட்டிற்கு வந்ததும் அசைவம் சாப்பிட சொல்லி வற்புறுத்தினார்கள், நான் சைவம் மட்டுமே சாப்பிட்டேன். நான் சைவத்திற்கு மாறியது மனைவிக்காகவே என பலரும், என் மனைவியோ என் அம்மாவுக்காக தான் நான் மாறினேன் என சொல்லிக் கொள்வார்கள்.
நான் சைவத்திற்கு மாறிய பின்னர் சில கனவுகள் கூட வந்தது உண்டு. நான் அசைவம் சாப்பிட்டுவிட்டு அலறியது போன்ற கனவுகள். ஒருமுறை முட்டை சாப்பிட்டுவிட்டு நான் செத்து போனேன் என்றெல்லாம் கனவு கண்டு இருக்கிறேன். கொடுத்த வாக்கு மீறக்கூடாது என்பதில் நான் கொண்டிருந்த பற்றுதான் அது. சைவத்திற்கு மாறி இன்றுடன் பதினைந்து வருடங்கள் மேல் ஆகிவிட்டது. வருடம் ஒருமுறை மருத்துவரை பார்க்க சென்றால் மீன் சாப்பிடு, முட்டை சாப்பிடு என அறிவுரை சொல்கிறார்கள். நான் புன்னகையுடன் அவர்களை கடந்து செல்கிறேன்.
என்னைப் பார்த்து ஒருவர் வைணவனா எனக் கேட்டார். எனக்கு எல்லா சமய கதைகளும் பிடிக்கும் என்றே சொல்லி செல்கிறேன். சாப்பாடு விசயத்தில் நான் சைவம் என்று சொன்னால் அது ஒரு சமய அடையாளம் என்று கூட அர்த்தப்படுத்தப்படும். அப்படித்தான் என்னை பலரும் கேட்டார்கள். நான் சைவம் என்றால் உங்கள் மதம் சொன்னதா என்றே கேட்டார்கள். மனைவி சொன்னது என இந்த சைவம் மாறிய கதை எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.