Sunday, 22 September 2013

சூப்பர் ஸ்டார்

என் இனிய நண்பா,

நலம், நலம் அறிய ஆவல். இ-மெயில், பேஸ்புக், ட்விட்டர் என எத்தனையோ வந்த பின்னும் உன்னுடன் எனக்கு கடித போக்குவரத்து மட்டுமே நிகழ்கிறது. தந்தி அனுப்புவதை கூட சமீபத்தில் நிறுத்தி விட்டார்கள், இல்லையெனில் உனக்கு ஒரு தந்தி அனுப்பி இருப்பேன்.

உனக்குத் தெரியும், நான் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து சூப்பர் ஸ்டாரின் பரம ரசிகன். அவர் என்ன செய்கிறார், என்ன பேசுகிறார் என நாள் தவறாமல் தேடித் தேடி படிப்பது உண்டு. அவரை காண்பதற்காக அவரின் ஒவ்வொரு பிறந்தநாளின்போது நான் அவரது போயஸ்கார்டன் தெருக்களில் சுற்றிக் கொண்டு இருப்பேன். எனது நோட்டு புத்தகங்களில் அறிவியல் படங்கள் இருக்குமிடத்தில் எல்லாம் சூப்பர் ஸ்டார் இருந்து கொண்டு இருப்பார். நான் எனது அறையில் தலைவர் படத்தை மட்டுமே வைத்துக் கும்பிட்டு வருகிறேன் என்பது கூட உனக்குத் தெரியும்.

தலைவரது  திரைப்படம் வெளியாகும்போது, முன் இரவே சென்று திரையரங்கு வாசலில் துண்டு விரித்து தூங்கியவன் நான். நீ கூட என்னிடம் எதற்கு இப்படி பைத்தியக்காரனாக இருக்கிறாய் என்றே என்னை கோவித்து இருக்கிறாய். என்னால் முடியவில்லை நண்பா, நான் அவருக்கு ஒரு அடிமையாய் ஆகிப் போனேன். உன்னை கூட, நண்பன் என பாராமல் என் தலைவரை நீ அவதூறாக பேசியதற்கு உனது மூக்கை உடைத்ததை நினைக்கும்போது நான் செய்தது இன்னமும் சரி என்றே கருதுகிறேன். ஆனால் நீயோ என்னை கோவித்துக் கொள்ளாமல் உன்னை என் நண்பனாகவே ஏற்றுக் கொண்டாய்.

நான் முக்கியமில்லை, உனது குடும்பம் முக்கியம்  என்றெல்லாம் தலைவர் சொன்னபோது கூட, அவரே முக்கியம் என அவரது உடல் நலன் சரியில்லாதபோது அவருக்காக நான் ராகவேந்திரா ஆலயத்திற்கு பாத யாத்திரை சென்றேன். இதை கேள்விப்பட்ட நீ,  நான் பத்திரமாக சென்று திரும்ப வேண்டும் என எனக்கு துணையாய் நீ காரில் பயணம் செய்து வந்தாய். உன் தலைவிதி, நீ நடக்கிறாய், என் தலைவிதி உனக்கு பாதுகாப்பு தருவது மட்டுமே, எவரோ ஒருவருக்காக நான் நடக்க வேண்டிய அவசியமில்லை என எனது நலனில் நீ காட்டிய அக்கறை என்னால் என்றுமே மறக்க முடியாது. எனது தந்தையின் மரணத்தின் போது கூட மொட்டை அடிக்காத நான், தலைவரின் உடல் நலம் தேற வேண்டி திருப்பதியில் மொட்டை அடித்த விசயம் கேள்விப்பட்டு நீ கண்ணீர் விட்டு அழுதாய். எதற்கு அழுகிறாய் என உன்னை நான் கேட்டபோது, எனது தந்தையை பற்றி நினைத்தாய் என்றே கூறினாய். அதனால் என்ன இப்போ என்றே அலட்சியம் செய்தேன்.

சில வருடங்களாக தலைவரின் படம் வெளிவராத காரணத்தினாலும், ராணா, கோச்சடையான் பற்றிய செய்திகள் மூலம் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானேன். உன்னிடம் இதை சொல்லாமல் மறுத்தது எனது தவறு என்றே இன்று உணர்கிறேன். இப்போது இதை எப்படி உனக்கு சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கு ஒருவித மனநோய் ஏற்பட்டு இருப்பதாக இன்று மருத்துவர் சொன்னபோது ஆடிப் போய்விட்டேன் நண்பா. நீ அன்று என்னை பைத்தியகாரன் என்று சொன்ன நிலையை இன்று உணர்கிறேன் நண்பா. என்னை ஊரில் 'மெண்டல்' என்றே அழைத்தது உண்மையாகிவிட்டதே என அச்சம் கொள்கிறேன். எனது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாத போது நான் எந்திரன் படம் பார்க்க திரையரங்கு வாசலில் தவம் இருந்தபோது, நீ எனது அம்மாவிற்கு மருத்துவம் பார்த்த விசயம் கேள்விப்பட்டு மனதில் எவ்வித குற்ற உணர்வு அப்போது இல்லை. நண்பா, என்னை மன நோயில் இருந்து உன்னால் மட்டுமே மீட்க முடியும் என்றே எனது அம்மா சொன்னார். அதனால் தான் இந்த மடல் எழுதுகிறேன்.

ஒரு விசயத்தில் அதிக பற்று வைத்து விட்டால், இது போன்ற கொடிய விளைவு ஏற்படும் என்றே மருத்துவர் சொன்னார். மனம் வெகு பாரமாக இருக்கிறது. எதையோ இழந்து பரிதவிப்பது போல் இருக்கிறது. நான் தனிமையில் இருப்பதாய் உணர்கிறேன் நண்பா. என்னை நீ வந்து அழைத்து சென்று உனது அருகில் என்னை வைத்து கொள்ளமாட்டாயா என்றே ஏங்குகிறேன். உனது நிறுவனத்தில் நான் வேலை செய்ய இப்போது சம்மதம் சொல்கிறேன் நண்பா. தீராத மன நோயில் நான் விழுந்துவிடக் கூடாது எனும் அச்சமே முழுக் காரணம். அரசியலுக்கு வருவார், வரமாட்டார் என பலர் கிண்டலாக பேசியபோது அவர்களை நொறுக்கி இருக்கிறேன். தலைவர் என்ன முடிவு செய்கிறாரோ அதுவே எனது முடிவு என்றே இருந்தேன்.

இறுதியாக, எனது தலைவர் தனிமையில் இருப்பதாய் உணர்கிறேன் என நேற்று பேசியதை கேட்டு மிகவும் வேதனைப்படுகிறேன். அவரை உயரத்தில் வைத்தது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்றே சொன்னார். ஆனால் உண்மையிலேயே என்னைப் போன்ற பைத்தியகார ரசிகர்கள் தான் அவரது இந்த உயர்நிலைக்கு காரணம் என்பதை நீ அறிவாய் நண்பா. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ரஜினிதாசன் என்றே என்னை கேட்டுக் கொள்கிறேன். எனது அழகிய 'முருகன்' எனும் பெயரை நான் அலங்கோலம் படுத்திக் கொண்டதாய் நினைக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தை அவர் தூக்கி எறிந்துவிட்டு என்னைப் போன்ற ஏழை பங்காளன் உடன் அவர் நேரத்தை செலவிட சொல்ல வேண்டும் என்றே என் மனம் கேட்கிறது. எதற்கு தனிமையாய் உணர வேண்டும்! ஆனால் 'டாப்' இல் இருப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினை என்றே சொல்லிவிட்டார் நண்பா. ஆனால் நீ, எத்தனயோ உயரத்தில் இருந்தும் சாதாரண நபரை போலவே உலா வருகிறாய். பிரமிப்பாக இருக்கிறது நண்பா. இதற்கு முன்னர் இப்படித்தான் சூழ்நிலை கைதி என சொன்னார், ஆனால் நான் என் தலைவரை உயிருக்கு உயிராக நேசித்தேன் என்பதை நீ அறிவாய்.

எப்படி மது, மாது என அடிமையாய் ஆகிறார்களோ, அதைப்போலவே சினிமா மோகம் என்னை பிடித்து ஆட்டிவிட்டது. ஒரு தனி மனிதனுக்கு என்னை தாரை வார்த்துவிட்டது கண்டே கலங்குகிறேன். ரஜினி ரசிகையைதான் திருமணம் செய்து கொள்வேன் என்கிற கொள்கையை தளர்த்தி கொள்கிறேன். இனி அவர் என் தலைவர் இல்லை என்பதை முழு சம்மதமின்றி ஏற்றுக் கொள்கிறேன். எனக்காக, என்னைப் போன்ற பைத்தியகார ரசிகர்களுக்காக அவர் தனிமையாக இருக்கவும் வேண்டாம், சூழ்நிலைக் கைதியாக இருக்க வேண்டாம், இனி வரும் காலங்களில் அவர் சுதந்திரமாக வாழட்டும் என்றே விரும்புகிறேன். இப்போது கூட என்னால் அவர் கஷ்டப்படுவதை தாங்கிக் கொள்ள இயலவில்லை நண்பா. என்னை விரைவில் வந்து அழைத்து செல், இல்லையெனில் நான்... தெருக்களில்... எழுதவே கைகள் நடுங்குகிறது நண்பா.

உனது வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்

அன்பு நண்பன்
முருகன் என்ற ரஜினிதாசன்

சினிமா ஒரு மாய உலகம், நல்ல மனிதர்கள் நாசமாகப் போகிறார்கள், நாசமாகப் போக இருந்தவர்கள் நல்லவர்கள் ஆகிறார்கள். 

Friday, 20 September 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 20


கோரனை வகுப்புக்கு வெளியே போக சொன்னார் ஆசிரியர். ''I never killed her, she committed suicide and police recorded that, you don't need to argue on that as it is my personal issue and I need to continue the subject''

''Carry on'' கோரன் வகுப்பை விட்டு வெளியே சென்றான். நிலைமையை சரி செய்ய நான் எழுந்தேன்.

''சார், எதுக்கு ஆண், பெண் என இருபாலர் இருக்கனும், முதலில் வந்தது ஆணா, பெண்ணா?. அல்லது இரண்டுமே  ஒரே நேரத்தில் உருவானதா? இந்த இரண்டுமே இனப்பெருக்கம் வழியில் இல்லாம உருவாகி இருந்தா, அப்படியேதானே பெருகி இருக்கனும், எதுக்கு ஆணின் மரபணுக்கள், பெண்ணின் மரபணுக்களோட இணையனும், என்ன காரணம்'' என்று கேட்டு அமர்ந்துவிட்டேன்.

''We absolutely don't know anything about our ancestors, how we came to this world or how we are developed over the million years, but we think we are very good at coming to conclusion based on fossil records, postulating theories and ideas in one way and put all these things on God in another way. We live our imaginary world very lively as Koran thought that I have killed my wife whereas the truth was she committed suicide. Now I can say that she has committed suicide and police do have evidence on that but certain people like Koran would believe that I have killed my wife. How could I change him?''

அதற்குப் பின்னர் நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. பாடம் தாட் ப்ராசெஸ் பற்றியே சுற்றிக் கொண்டு இருந்தது. அப்போதுதான் யோசித்தேன், சுபத்ரா பரிணாமத்தினை பற்றி படித்துக் கொண்டு இருக்கிறேன் என்றுதானே சொன்னாள், அவளிடம் சென்று கேட்டால் என்ன என தோணியது. அன்றைய நாள் முழுவதும் எனது கேள்வியில் மனம் அலைபாய்ந்தது. மதிய உணவு சமயத்தில் கூட காயத்ரி என்ன முட்டாள்தனமான கேள்வியை கேட்ட நீ என்றே கோபித்துக் கொண்டாள்.

மாலை வேளையில் காயத்ரியிடம் பேசினேன்.

''காயூ, நான் சுபாவை பாக்கப்போறேன்,வரியா?''

''என்ன விசயம் திடீர்னு?''

''ஆணா, பெண்ணா? அப்படிங்கிற என் கேள்விக்கு பதில் தெரியனும்?''

''அட முருகேசு, ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஆணும், பெண்ணும் இயற்கை அமைத்துக் கொண்டது''

''இனப்பெருக்கம் இரண்டு வகையில நடைபெறும், ஒன்னு கலவு முறை, மத்தது கலவு இல்லாத முறை , என்ன காரணத்திற்கு கலவு முறை உருவாச்சு, காரணம் இருக்கும் இல்லையா?''

''தெரிஞ்சு என்ன செய்யப் போற''

''இப்ப எல்லாம் ஆண் இல்லாம பெண்கள் பிள்ளை பெத்துக்க முடியும்னு சொல்லிட்டு இருக்காங்க, படிச்சி இருக்கியா''

''ஆஸ்திரேலியாவுல நடத்தின எலி பரிசோதனைய பத்தி பேசறியா''

''நீயும் அதைப் படிச்சியா''

''முருகேசு, மனசை போட்டு குழப்பிக்காத, அது எலி, நாம மனுசுங்க''

''எதுக்கும் சுபாவை பார்த்துட்டு வரலாம்''

''சரி''

எனக்கு குரோமோசோம்கள் பற்றியெல்லாம் மனம் ஓடிக் கொண்டு இருந்தது. எக்ஸ் எக்ஸ் என்றால் பெண், எக்ஸ் ஒய் என்றால் ஆண். இந்த குரோமோசோம்கள் ஒரு உயிரின் ஆண், பெண் தன்மையை நிரூபிக்கின்றன. ஒரு குழந்தை உருவாகும்போது அந்த குழந்தை பெண்ணாகவே பல வாரங்கள் இருக்கும் என்றும், பின்னரே இந்த குரோமோசோம்கள் உதவியால் இனப்பெருக்க உறுப்புகள் தோன்றுவதாகவும் படித்து இருக்கிறேன். என்ன ஆச்சர்யமான மாற்றம் இது.

''என்ன யோசனை முருகேசு''

''காயூ, எல்லா குழந்தையும் உருவாகிறப்ப பெண் தான் தெரியுமா''

''இல்லை முருகேசு, எல்லா குழந்தையும் உருவாகும்போது அது ஒரு எம்ப்ரியோ. அந்த எம்ப்ரியோவில  உள்ள செல்கள் டிப்பெரென்சியெட் ஆகுறப்ப, இட் டேக்ஸ் தா பார்ம், இட் டேக்ஸ் வீக்ஸ்''

''என்ன இங்கிலீஸ் பேசற''

''ஏன் உனக்கு இங்கிலீஸ் புரியாதா, நீயும் தானே சில நேரத்தில இங்கிலீஸ் பேசற''

''நான் தமிழுல கேட்டப்ப, சேகரன் சாரு கூட இங்கிலீஸ்ல தான் பதில் சொல்றார்''

''நீ பேசாம தமிழ் இலக்கியம் படிக்க போய் இருந்து இருக்கலாம்''

''காயூ, அர்த்தநாரீஸ்வரர் பத்தி தெரியும்ல உனக்கு, ஆண் பாதி, பெண் பாதி''

''அதுக்கு என்ன இப்போ''

''இந்த பூமியில ஆணும் பெண்ணும் இணைஞ்சு தோன்றி இருக்கனும், அப்புறம் தான் பிரிஞ்சி இருந்து இருக்கனும், அப்புறம் இனப்பெருக்கம் மூலம் ஆணும் பெண்ணும் உருவாகி இருக்கனும்''

'வாட் நான்சென்ஸ் முருகேசு''

''எதுக்கு கோபப்படுற, நல்லா யோசிச்சி பாரு''

அர்த்தநாரீஸ்வரர் எனது கேள்விக்கு பதில் சொல்லிவிட்டதை போன்றே இருந்தது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இந்த மூலக்கூறுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இருந்து உயிரினம் உருவாகும்போது கலவு முறையில்லாதபோது நமது உடலில் உள்ள செல்கள் எப்படி பெருகி உருவம் உருவாகுதோ அதைப் போலவே இப்படி சேர்ந்து உருவாகி இருக்கனும்.

''ஒரு ரொமான்டிக்கா பேச மாட்டியா, எப்ப பாரு பாடம், பாடம்''

''அன்பே, உனது விழிகளுக்குள் எனது பார்வை மாட்டிக் கொண்டது, எனது பார்வை பறிபோய் விடாதபடி திருப்பி தந்துவிடு''

காயத்ரி அப்படியே நின்று என்னை பார்த்து சிரித்தாள்.

''எந்த படம் முருகேசு''

''நான் எழுதினது காயூ''

''நீ எழுதினா, மைட்டோகாண்ட்ரியா, நீ தான் என்னோட ஆண்ட்ரியா அப்படின்னு எழுதுவ''

''என்ன சொன்ன''

''மைட்டோகாண்ட்ரியா, நீ தான் என்னோட ஆண்ட்ரியா''

''காயூ, மைட்டோகாண்ட்ரியா ஈவ் பத்தி படிச்சி இருக்கியா''

''ஆடம், ஈவும் தெரியும், மைட்டோகாண்டிரியா ஈவும் தெரியும்''

''எழுபது ஆயிரம் வருசம் முன்னால இந்த மைட்டோகாண்ட்ரியா ஈவ் தான் இப்ப இருக்கிற மனித குலத்தோட முன்னோடி. பெரிய எரிமலை வெடிப்புனால மொத்த மண்டிஹா சமூகம் அழிஞ்சி போனப்ப தப்பிச்ச சில பெண்கள் தான் இந்த மனித குலம் தழைக்க உதவினாங்க''

''ஆமா முருகேசு, என்ன என்னமோ பேசற, எதுக்கு சுபாவை பாக்கனும், உனக்கு தெரியாததையா அவ சொல்லப் போறா''

ரெங்கநாதன் வீடு அடைந்தோம். சுபத்ராவை சந்திக்க வந்திருப்பதாக கூறினோம். சுபத்ராவும் வந்தாள். முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள்.

''சுபா, பரிணாமத்தில் முதலில் வந்தது பெண்ணா, ஆணா?'' என்றேன்.

''ம்ம்ம் உன்னோட பாட்டி''

காயத்ரி கிளுக்கென சிரித்துத் தொலைத்தாள்.

''இதுக்கு இப்போ எதுக்கு சிரிப்பு, உண்மையிலேயே முருகேசனோட பாட்டி தான் இந்த உலகத்துக்கு முதலில் வந்தது''

காயத்ரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ரெங்கநாதன் அம்மா, பலகாரங்கள் கொண்டு வந்து வைத்தார்கள். காயத்ரியின் அக்காவும், ரெங்கநாதன் இன்னும் வந்திருக்கவில்லை என்றே தெரிந்தது. அவர்களைப் பற்றி கேட்டபோது, அவங்க வரதுக்கு எட்டு மணி ஆகும் என்றே சொன்னார். ரெங்கநாதனின் அம்மா, அந்த இடம் விட்டு நகர்ந்ததும் சுபத்ராவிடம் மீண்டும் கேட்டேன்.

''சுபா, கிண்டல் பண்ணாம சொல்லு''

''உன்னை கிண்டல் பண்ண நீ என்ன என்னோட முறைப்பையனாடா, இல்லை என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறியாடா, அதுதான் இதோ உன் காயூ இருக்காளே''

''உனக்கு பரிணாமத்தில் ஆர்வம் இருக்கு, அதான் உன்னை பாத்து கேட்டு போகலாம்னு வந்தேன்''

''அதுதான் சொல்றேன்லடா, உன் பாட்டி தான் முதலில் வந்தது''

காயத்ரி அவளது கண்களில் தண்ணீர் தரும் வரும்படியாய் சிரித்துக் கொண்டு இருந்தாள். இவள் இப்படி சிரித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது. இனி சுபத்ராவை மடக்க வேண்டும்.

''என்னோட பாட்டியோட அம்மா, அப்பா வந்து இருப்பாங்களே''

''ஏன்டா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா, உன் பாட்டிதான் முதலில வந்ததுன்னு சொல்றேன், அந்த பாட்டிக்கு ஆயா, அப்பத்தானு பேசறதா''

''உனக்கு அம்மா, அப்பா இருக்கிறமாதிரி''

''நானும், உன் பாட்டியும் ஒன்னாடா''

''முருகேசு, அதான் சுபா சொல்லிட்டாங்கள, உன் பாட்டிதான் முதலில் வந்ததுன்னு, வா போவோம்''

அப்போது ரங்கநாதனின் அம்மா, காபி கொண்டு வந்து வைத்து விட்டு சென்றார்கள்.

''இரு காயூ, காபி குடிச்சிட்டு போவோம்''

''வந்ததுக்கு பலகாரம், காபி கிடைச்சதுல, சாப்பிடறதுக்கே இருப்பியாடா''

''சுபா, என் மேல உனக்கு கோபம் இருக்கும், நீ எனக்கு சாப்பாடு கொண்டு வந்து தந்து இருக்க''

''பரிணாமம் பத்தி தெரிஞ்சிக்கனும்னா, இதோ இவளை மறந்துரு''

''அர்த்தநாரீஸ்வரர் சொல்லி இருக்கார், பரிணாமத்தில் முதலில் வந்தது ஆணும், பெண்ணும் ஒரு உருவமாய். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. எனக்கு என் காயூ முக்கியம், பரிணாமம் இல்ல''

''Yes Suba, both sexes developed simultaneously, Murugesu knows everything. He came to test you whether you are really here to study evolution, அப்படித்தானே முருகேசு வா போலாம்''

வீட்டிற்கு வெளியே வந்தபின்னர் காயத்ரியிடம் கேட்டேன்.

''என்ன காயூ, நான் சுபாவை சோதிக்க போனேன் சொல்லிட்ட''

''முருகேசு, அவ எவ்வளா நக்கலா பேசுறா, என்னாலே சிரிப்பை அடக்க முடியல''

''படிக்கிறப்பவே அப்பத்தான், ரொம்ப கிண்டலா பேசுவா, ஆனா இப்போதான் காதல் அது இது அப்படின்னு மாறிப் போய்ட்டா''

''இது அவளோட புது பரிமாணம்''

''பரிணாமமா''

''பரிமாணம். முப்பரிமாணம்''

''ஆமா, காயூ, பரிணாமத்தில் முதலில் வந்தது பெண்ணா, ஆணா?''

''ம்ம்.. உன்னோட பாட்டி''

காயத்ரி மீண்டும் சிரித்தாள். அப்போதுதான் புரிந்தது. பரிணாமத்தில் முதலில் வந்தது பெண் தான் என்பதை தான் சுபத்ரா அப்படி சொல்லி இருப்பாளோ! வீட்டினை அடைந்ததும் நன்றாக சாப்பிட்டுவிட்டு புத்தகத்துடன் மாடிக்கு கிளம்பினேன். காயத்ரியும் புத்தகங்களுடன் என்னுடன் வந்தாள்.

''காயூ, செல்லில இரண்டு வகை எதுக்கு ஹெப்லோய்ட், டிப்லாய்ட்''

''டுயூப்லைட் பிரகாசமா இருக்கு''

''ஆணும், பெண்ணும் பருவம் அடைய பல வருடங்கள் ஆகுதே காயூ''

''பேசாம படி, இப்படி ஏடாகூடமா பேசின, நான் தூங்கிருவேன், தாங்க முடியல''

கர்மவினை தாண்டினேன், பரிணாமம் என்னை படுத்துகிறது.

(தொடரும்) 

Wednesday, 18 September 2013

காமக்கதைகளுக்கு எப்பவுமே மவுசு அதிகம்

செந்தில்குமார் மிகவும் அக்கறையுடன் படித்துக் கொண்டிருந்தான். ஊருக்குச் சென்றுவிட்டு இன்றுதான் வந்தான். வந்ததும் வராததுமாய் இப்படி புத்தகம் எடுத்துப் படித்ததை கண்டு எனக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது. பரீட்சை எதுவுமில்லையே செந்தில்குமார் என சொன்னேன். உன்னை மாதிரி பரீட்சைக்குப் படிக்கிறவனு என்னை நினைச்சியா, என்னை தொந்தரவு பண்ணாதே, சாயந்திரம் நடக்கப் போவயில, இருட்டப் போகுது போ என சத்தம் போட்டு திட்டிவிட்டான்.

வீட்டின் வெளியில் இருந்த வயல்வெளியில் நடக்க ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் தண்ணீர் பாய்ச்சி முடித்து இருப்பார்கள் போல, எங்கும் ஈரம் அதிகமாகவே இருந்தது. வயல்வெளி தாண்டி மாந்தோப்பு பக்கமாக நடந்தேன். இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கே நின்று கொண்டிருந்தாள். இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தினமும் வயல்வெளி, மாந்தோப்பு என தனியே மாலையில் நடந்து இருக்கிறேன். இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிறது. ஊருக்கு வெளியே கட்டப்பட்ட இரண்டு வீடுகளில் இதுவும் ஒன்று. மாலை வேளையில் ஊர் ஆட்கள் எவரும் அவ்வளவாக இந்தப் பக்கம் எல்லாம் வருவதில்லை. இவள் தனியாய் நின்று கொண்டிருந்தது மட்டுமின்றி இதுநாள் வரை அவளை நான் இங்கே கண்டது இல்லை. மனதில் இனம் புரியாத பயம் ஒன்று சேர்ந்தது. என்னைக் கண்டு அவள் புன்னகை புரிந்தாள்.

பேச்சுக் கொடுக்கலாமா, வேண்டாமா என்றே நினைத்துக் கொண்டிருக்கையில் எதுக்கு அங்கேயே நிக்கிற, வா என அழைத்தாள். அவளது உடையானது ஓரிடத்தில் நில்லாது அங்கும் இங்கும் அல்லாடிக்கொண்டு இருந்தது. என்னை எதற்கு இவள் அழைக்கிறாள் என இல்ல, நா வீட்டுக்குப் போகனும் என்றேன். இவ்வள தூரம் வந்துட்ட, பக்கத்தில வந்துட்டு போறது என்றாள். நீ எந்த ஊரு, உன்னை இதுவரைக்கும் பாத்தது இல்லையே, எதுக்கு இங்க நிக்கிற என்றேன்.

இந்த ஊருக்கு நேத்துதான் வந்தோம். காலாற நடக்கலாம்னு இங்குட்டு வந்தேன் என்றாள். சற்று தைரியத்துடன் அவள் அருகில் சென்றேன். மாந்தோப்புக்குள்ள போலாமா என்றாள். இல்ல வேணாம் என்றேன். வெட்கபடாத, முன் அனுபவம் இல்லேன்னா பரவாயில்ல, எனக்கு இருக்கு என்றாள். என்ன கண்றாவி இது, மாந்தோப்புக்குள் எத்தனை முறை எவ்வித பயம் இன்றி இருட்டிய பின்னர் கூட நடந்து சென்று இருக்கிறேன், இதற்கு எதற்கு முன் அனுபவம்!

யோசிக்காத, சட்டுபுட்டுனு முடிச்சிட்டு போயிருவோம் என்றாள். என்ன சொல்ல வர, மாந்தோப்புக்குள்ள நடக்கிறதுக்கு இப்படி வெளியவே நடக்கலாமே என்றேன். நீ விவரம் புரியாதவனா இருக்கியே. நானும் நீயா தனியா இருக்கிறது கூட உனக்கு புரியலையா. விளக்கமா சொன்னாத்தான் உனக்கு புரியுமா, நீ என்ன பால் குடிக்கிற பாப்பாவா என்றாள். அப்போதுதான் ஆபத்தினை உணர்ந்தேன். அவள் அடுத்த வார்த்தை பேசும் முன்னர் ஓட்டம் பிடித்தேன். நில்லுடா பெண்டுகா எனும் அவளது சப்தம் என்னை கடந்து சென்று கொண்டிருந்தது.

மூச்சிறைக்க வீடு வந்து சேர்ந்தேன். செந்தில்குமார் அப்போதுதான் புத்தகம்தனை படித்து முடித்து விட்டு எழுந்து இருந்தான். என்னடா இப்படி மூச்சிரைக்கிற என்றான். இன்னைக்கு கொஞ்சம் ஓடினேன், அதான் என சமாளித்துவிட்டு குளியலறை சென்று குளித்துவிட்டு வந்தேன். என்ன பாடம் படிச்ச என்றேன். லோகோமோடிவ் என்றான். லோகோமோடிவ், என்ன கதை விடறியா என்றேன். நான் எதைப் படிச்சா உனக்கு என்ன என மீண்டும் சத்தம் போட்டான்.

ஊருக்குள் சென்றுதான் ஹோட்டலில் சாப்பிட வேண்டும். செல்லும் வழியில் மாந்தோப்பில் நடந்த விச யத்தை சொல்லலாமா என யோசித்து வேண்டாம் என விட்டுவிட்டேன். இருவரும் சேர்ந்து ஹோட்டல் அடைந்தோம். அவன் பரோட்டா, ஆம்லெட் என ஆர்டர் செய்தான். நான் என் பங்குக்கு சிக்கன் 65, பரோட்டா ஆர்டர் செய்தேன். சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மாந்தோப்பில் கண்ட பெண் என் அருகில் வந்து அமர்ந்தாள். வீட்டுக்கு வரியா என முனுமுனுத்தவள் ஒரு தோசை ஆர்டர் செய்தாள்.

யாரு அது மச்சி, உன்னை உரசிக்கிட்டு வந்து உட்காருரா என்றான் செந்தில்குமார். எனக்கு தெரியலை என சொன்னேன். ஏன்மா, கொஞ்சம் தள்ளி உட்காரு, உரசிட்டு உட்காருர, இடமா இல்ல, விட்டா மடியில உட்காருவியோ என செந்தில்குமார் அவளை சத்தம் போட்டான். உன்னையவா உரசினேன், வாயை மூடிட்டு சாப்பிடு என்றாள் அவள். என்னக்கும் இல்லாமல் வேகமாக சாப்பிட்டேன். மெதுவா சாப்பிடுடா என்றான் செந்தில்குமார். அவளோட சண்டை போடாத, வா போகலாம் என சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். நாளைக்கு அங்க வா, நான் நிப்பேன் என்றாள்.

சிகரெட் வாங்கி பத்த வைத்தான் செந்தில்குமார். இந்தா இழு என்றான். இன்னைக்கு வேணாம் என்றேன் . என்ன மச்சி பாதி, பாதி மறந்துட்டியா, எதுக்கு அந்த பிள்ளை உன்னை உரசினதுல இருந்து ஒரு மாதிரியா இருக்க, எந்த ஊருக்காரி, என்ன உனக்கு ரூட்டு போடுறாளா, கிடைச்சா அமுக்கிடனும் மச்சி என்றான். சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்றேன்.

எதற்கு அவள் அப்படி நடந்து கொண்டாள் எனும் சிந்தனை என்னை அலைக்கழித்தது. வீடு வந்து சேர்ந்தோம். செந்தில்குமார் ரம் எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான். கம்பெனி கொடுக்கப் போறியா இல்லையா என்றான். கொஞ்ச நேரம் கழிச்சி வரேன் என்றேன். புத்தகம் எடுத்து படிக்கலாம் என ஒரு புத்தகம் எடுத்தபோது அங்கிருந்து ஆடைகள் இல்லாத பெண்கள் படம் போட்ட புத்தகம் விழுந்தது. திடுக்கிட்டேன். இதைத்தான் செந்தில்குமார் படித்தானா என எண்ணிக்கொண்டு அந்த புத்தகம் எடுத்து மாடிக்கு சென்றேன்.

என்னடா இது, எப்ப இருந்துடா இப்படி ஒரு பழக்கம், எதை எதை படிக்கிறதுன்னு ஒரு அறிவு இல்லையா என கத்தினேன்! மச்சி இந்தா வா குடி. அதுல சூப்பர் சூப்பரான கதை எல்லாம் இருக்கு. படிக்க படிக்க அப்படியே கனவுலகத்தில மிதக்கலாம். அதுல ஒரு கதை இருக்கு பாரு, அட்டகாசமான கதைடா என்றான். இது எல்லாம் தப்புடா என்றேன். ஆமா சிகரெட்டு, குடி எல்லாம் தப்புதான், அதை எல்லாம் நீ செய்யல, கதைய கேளுடா என எனக்கு ஊற்றி கொடுத்தான்.

ரெண்டு பிரண்டுஸ். அதுல ஒருத்தன் ரொம்ப யோக்கியம், அடுத்தவன் அப்படி இப்படி. யோக்கியமானவன் ஒரு பொன்னை சந்திக்கிறான். அந்த பொண்ணு அவனை அடைய ஆசைப்படறா. ஆனா அவன் அது தப்பு அப்படின்னு அவகிட்ட சொல்லி அவளை வேணாம்னு தவிர்க்கிறான். இப்படி நடந்த விசயத்தை பிரண்டுகிட்ட சொல்றான். பிரண்டு அடுத்த முறை அவள்கிட்ட பேசி அவளை அடையறான். சும்மா செமையா இருந்தது மச்சி. எப்படி அங்கம் அங்கமா அந்த பெண்ணை எழுதி இருக்கு. படிச்சி பாரு என்றான்.

என்ன செய்வது என  புரியாமல் மாந்தோப்பில் நடந்த விசயத்தை செந்தில்குமாரிடம் சொன்னேன். அடுத்த நாள் மாலையில் எனது கையில் புத்தகம், அவன் மாந்தோப்பு நோக்கி நடந்து கொண்டிருந்தான்.