Wednesday, 18 September 2013

காமக்கதைகளுக்கு எப்பவுமே மவுசு அதிகம்

செந்தில்குமார் மிகவும் அக்கறையுடன் படித்துக் கொண்டிருந்தான். ஊருக்குச் சென்றுவிட்டு இன்றுதான் வந்தான். வந்ததும் வராததுமாய் இப்படி புத்தகம் எடுத்துப் படித்ததை கண்டு எனக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது. பரீட்சை எதுவுமில்லையே செந்தில்குமார் என சொன்னேன். உன்னை மாதிரி பரீட்சைக்குப் படிக்கிறவனு என்னை நினைச்சியா, என்னை தொந்தரவு பண்ணாதே, சாயந்திரம் நடக்கப் போவயில, இருட்டப் போகுது போ என சத்தம் போட்டு திட்டிவிட்டான்.

வீட்டின் வெளியில் இருந்த வயல்வெளியில் நடக்க ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் தண்ணீர் பாய்ச்சி முடித்து இருப்பார்கள் போல, எங்கும் ஈரம் அதிகமாகவே இருந்தது. வயல்வெளி தாண்டி மாந்தோப்பு பக்கமாக நடந்தேன். இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கே நின்று கொண்டிருந்தாள். இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தினமும் வயல்வெளி, மாந்தோப்பு என தனியே மாலையில் நடந்து இருக்கிறேன். இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிறது. ஊருக்கு வெளியே கட்டப்பட்ட இரண்டு வீடுகளில் இதுவும் ஒன்று. மாலை வேளையில் ஊர் ஆட்கள் எவரும் அவ்வளவாக இந்தப் பக்கம் எல்லாம் வருவதில்லை. இவள் தனியாய் நின்று கொண்டிருந்தது மட்டுமின்றி இதுநாள் வரை அவளை நான் இங்கே கண்டது இல்லை. மனதில் இனம் புரியாத பயம் ஒன்று சேர்ந்தது. என்னைக் கண்டு அவள் புன்னகை புரிந்தாள்.

பேச்சுக் கொடுக்கலாமா, வேண்டாமா என்றே நினைத்துக் கொண்டிருக்கையில் எதுக்கு அங்கேயே நிக்கிற, வா என அழைத்தாள். அவளது உடையானது ஓரிடத்தில் நில்லாது அங்கும் இங்கும் அல்லாடிக்கொண்டு இருந்தது. என்னை எதற்கு இவள் அழைக்கிறாள் என இல்ல, நா வீட்டுக்குப் போகனும் என்றேன். இவ்வள தூரம் வந்துட்ட, பக்கத்தில வந்துட்டு போறது என்றாள். நீ எந்த ஊரு, உன்னை இதுவரைக்கும் பாத்தது இல்லையே, எதுக்கு இங்க நிக்கிற என்றேன்.

இந்த ஊருக்கு நேத்துதான் வந்தோம். காலாற நடக்கலாம்னு இங்குட்டு வந்தேன் என்றாள். சற்று தைரியத்துடன் அவள் அருகில் சென்றேன். மாந்தோப்புக்குள்ள போலாமா என்றாள். இல்ல வேணாம் என்றேன். வெட்கபடாத, முன் அனுபவம் இல்லேன்னா பரவாயில்ல, எனக்கு இருக்கு என்றாள். என்ன கண்றாவி இது, மாந்தோப்புக்குள் எத்தனை முறை எவ்வித பயம் இன்றி இருட்டிய பின்னர் கூட நடந்து சென்று இருக்கிறேன், இதற்கு எதற்கு முன் அனுபவம்!

யோசிக்காத, சட்டுபுட்டுனு முடிச்சிட்டு போயிருவோம் என்றாள். என்ன சொல்ல வர, மாந்தோப்புக்குள்ள நடக்கிறதுக்கு இப்படி வெளியவே நடக்கலாமே என்றேன். நீ விவரம் புரியாதவனா இருக்கியே. நானும் நீயா தனியா இருக்கிறது கூட உனக்கு புரியலையா. விளக்கமா சொன்னாத்தான் உனக்கு புரியுமா, நீ என்ன பால் குடிக்கிற பாப்பாவா என்றாள். அப்போதுதான் ஆபத்தினை உணர்ந்தேன். அவள் அடுத்த வார்த்தை பேசும் முன்னர் ஓட்டம் பிடித்தேன். நில்லுடா பெண்டுகா எனும் அவளது சப்தம் என்னை கடந்து சென்று கொண்டிருந்தது.

மூச்சிறைக்க வீடு வந்து சேர்ந்தேன். செந்தில்குமார் அப்போதுதான் புத்தகம்தனை படித்து முடித்து விட்டு எழுந்து இருந்தான். என்னடா இப்படி மூச்சிரைக்கிற என்றான். இன்னைக்கு கொஞ்சம் ஓடினேன், அதான் என சமாளித்துவிட்டு குளியலறை சென்று குளித்துவிட்டு வந்தேன். என்ன பாடம் படிச்ச என்றேன். லோகோமோடிவ் என்றான். லோகோமோடிவ், என்ன கதை விடறியா என்றேன். நான் எதைப் படிச்சா உனக்கு என்ன என மீண்டும் சத்தம் போட்டான்.

ஊருக்குள் சென்றுதான் ஹோட்டலில் சாப்பிட வேண்டும். செல்லும் வழியில் மாந்தோப்பில் நடந்த விச யத்தை சொல்லலாமா என யோசித்து வேண்டாம் என விட்டுவிட்டேன். இருவரும் சேர்ந்து ஹோட்டல் அடைந்தோம். அவன் பரோட்டா, ஆம்லெட் என ஆர்டர் செய்தான். நான் என் பங்குக்கு சிக்கன் 65, பரோட்டா ஆர்டர் செய்தேன். சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மாந்தோப்பில் கண்ட பெண் என் அருகில் வந்து அமர்ந்தாள். வீட்டுக்கு வரியா என முனுமுனுத்தவள் ஒரு தோசை ஆர்டர் செய்தாள்.

யாரு அது மச்சி, உன்னை உரசிக்கிட்டு வந்து உட்காருரா என்றான் செந்தில்குமார். எனக்கு தெரியலை என சொன்னேன். ஏன்மா, கொஞ்சம் தள்ளி உட்காரு, உரசிட்டு உட்காருர, இடமா இல்ல, விட்டா மடியில உட்காருவியோ என செந்தில்குமார் அவளை சத்தம் போட்டான். உன்னையவா உரசினேன், வாயை மூடிட்டு சாப்பிடு என்றாள் அவள். என்னக்கும் இல்லாமல் வேகமாக சாப்பிட்டேன். மெதுவா சாப்பிடுடா என்றான் செந்தில்குமார். அவளோட சண்டை போடாத, வா போகலாம் என சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். நாளைக்கு அங்க வா, நான் நிப்பேன் என்றாள்.

சிகரெட் வாங்கி பத்த வைத்தான் செந்தில்குமார். இந்தா இழு என்றான். இன்னைக்கு வேணாம் என்றேன் . என்ன மச்சி பாதி, பாதி மறந்துட்டியா, எதுக்கு அந்த பிள்ளை உன்னை உரசினதுல இருந்து ஒரு மாதிரியா இருக்க, எந்த ஊருக்காரி, என்ன உனக்கு ரூட்டு போடுறாளா, கிடைச்சா அமுக்கிடனும் மச்சி என்றான். சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்றேன்.

எதற்கு அவள் அப்படி நடந்து கொண்டாள் எனும் சிந்தனை என்னை அலைக்கழித்தது. வீடு வந்து சேர்ந்தோம். செந்தில்குமார் ரம் எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான். கம்பெனி கொடுக்கப் போறியா இல்லையா என்றான். கொஞ்ச நேரம் கழிச்சி வரேன் என்றேன். புத்தகம் எடுத்து படிக்கலாம் என ஒரு புத்தகம் எடுத்தபோது அங்கிருந்து ஆடைகள் இல்லாத பெண்கள் படம் போட்ட புத்தகம் விழுந்தது. திடுக்கிட்டேன். இதைத்தான் செந்தில்குமார் படித்தானா என எண்ணிக்கொண்டு அந்த புத்தகம் எடுத்து மாடிக்கு சென்றேன்.

என்னடா இது, எப்ப இருந்துடா இப்படி ஒரு பழக்கம், எதை எதை படிக்கிறதுன்னு ஒரு அறிவு இல்லையா என கத்தினேன்! மச்சி இந்தா வா குடி. அதுல சூப்பர் சூப்பரான கதை எல்லாம் இருக்கு. படிக்க படிக்க அப்படியே கனவுலகத்தில மிதக்கலாம். அதுல ஒரு கதை இருக்கு பாரு, அட்டகாசமான கதைடா என்றான். இது எல்லாம் தப்புடா என்றேன். ஆமா சிகரெட்டு, குடி எல்லாம் தப்புதான், அதை எல்லாம் நீ செய்யல, கதைய கேளுடா என எனக்கு ஊற்றி கொடுத்தான்.

ரெண்டு பிரண்டுஸ். அதுல ஒருத்தன் ரொம்ப யோக்கியம், அடுத்தவன் அப்படி இப்படி. யோக்கியமானவன் ஒரு பொன்னை சந்திக்கிறான். அந்த பொண்ணு அவனை அடைய ஆசைப்படறா. ஆனா அவன் அது தப்பு அப்படின்னு அவகிட்ட சொல்லி அவளை வேணாம்னு தவிர்க்கிறான். இப்படி நடந்த விசயத்தை பிரண்டுகிட்ட சொல்றான். பிரண்டு அடுத்த முறை அவள்கிட்ட பேசி அவளை அடையறான். சும்மா செமையா இருந்தது மச்சி. எப்படி அங்கம் அங்கமா அந்த பெண்ணை எழுதி இருக்கு. படிச்சி பாரு என்றான்.

என்ன செய்வது என  புரியாமல் மாந்தோப்பில் நடந்த விசயத்தை செந்தில்குமாரிடம் சொன்னேன். அடுத்த நாள் மாலையில் எனது கையில் புத்தகம், அவன் மாந்தோப்பு நோக்கி நடந்து கொண்டிருந்தான்.




Tuesday, 17 September 2013

சூப்பர் ஹீரோ

 இந்திப் படம் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. தூர்தர்சனின் புண்ணியத்தில் மட்டுமே இந்தி படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அதற்கு பின்னர் இந்திப்படம் என பார்த்தது என எதுவுமே நினைவில் இல்லை.

சமீபத்தில் தியேட்டருக்கு சென்று சென்னை எக்ஸ்ப்ரஸ் படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ் படம் என்கிற ஒரு நினைப்பில் படம் பார்க்க அழைத்த போது போகலாம் என தியேட்டருக்குள் அமர்ந்த பின்னர் தான் சட்டென நினைவுக்கு வந்தது, வந்திருப்பது ஒரு இந்திப் படத்திற்கு என.

தமிழே புரியாது, இதில் இந்தி வேறா! நிறைய 'இந்தி'மார்கள் அமர்ந்து இருந்து இருந்தார்கள். படம் தொடங்கியது. எனக்கும் இந்திக்கும் உள்ள ஒரு பந்தம் மிகவும் சுவாரஸ்யமானது. கல்லூரி படித்த காலங்களில் ஆர்வத்துடன் ரமேஷ் எனும் நண்பர் கற்று கொடுத்த இந்தியை இலக்கணம் எல்லாம் என சேர்த்து ஓரளவு படித்து விட்டேன். தலைநகர் டில்லி, கல்லூரி கால கல்கத்தா என பிற மாநிலங்கள் சென்றாலும் இந்த இந்தியை இனிப்புக்கு கூட தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டதில்லை. இந்தி மீது தனிப்பட்ட வெறுப்பு என்றோ , மறத்தமிழர் என்றோ இதற்கு காரணம் இல்லை. ஒருவித சோம்பேறித்தனம் வந்து ஒட்டிக் கொண்டது. எனது வாழ்வில் சில மொழிகள் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றே அவ்வப்போது எண்ணம் தலைகாட்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட.

நல்லவேளையாக படத்தில் 'சப்டைட்டில்' ஆங்கிலத்தில் போட்டார்கள். இருப்பினும் அரைகுறை இந்தி மூலம் சில புரிந்து கொள்ளலாம் என்றே பேசுவதையும் கேட்டு வைத்தேன். ஆனால் 'இந்திமார்கள்' சிரிக்கும்போது எனக்கு தானாக சிரிப்பு வரவில்லை. மொழியின் சுவாரஸ்யம் மொழிப்பெயர்ப்பில் இருப்பது இல்லை. சில இடங்களில் சிரித்து வைத்தேன்.

தமிழ்நாட்டில் இத்தனை பேரழகா என உச் கொட்டும் வகையில் மழையும், அருவிகளும் கொண்ட பிரதேசம் காட்டி இருந்தார்கள். இந்த திரைப்படத்தில் பெண்கள் உடுத்தும் சேலை கண்டு 'இந்திமார்கள்' இத்தனை அழகான சேலை எல்லாம் தமிழ்நாட்டில் கிடைக்குமா/கட்டுவார்களா என ஆச்சர்யபட்டார்களாம். ஒரு சேலை எடுக்க கடைக்கு சென்று ஒரு மாதம் கழித்து வீடு திரும்பிய மனைவிமார்கள் பற்றிய நகைச்சுவை கதைகள் கூட தமிழ்நாட்டில் உண்டு.

இந்த திரைப்படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லி விடலாம். எல்லா திரைப்படங்களும் ஒரு வரி கதைதான். அதை எப்படி வடிவமைத்து முடிப்பது என்பதில் தான் மொத்த திரைப்படத்தின் வெற்றியும் இருக்கிறது. எதிர்பாராத தருணத்தில் வாழ்வில் என்னவெல்லாம் நடந்து விடும் என கதை சொல்லி இருக்கிறார்கள். வீட்டை விட்டு அடிக்கடி ஓடிப்போகும் ஒரு பெண். சுத்துப்பட்டி கிராமங்களை எல்லாம் தன வசத்தில் வைத்திருக்கும் ஒரு 'பெரிய தல' என படம் நகைச்சுவை உணர்வுடன் நகர்கிறது.

எழில் கொஞ்சும் பிரதேசங்கள் கண்டு கொண்டே இருக்கலாம் என்பது போல காட்சி அமைப்புகள். அந்த கிராமங்களில் வில்லன் உட்பட சிலர் இந்தி பேசுகிறார்கள். அரை குறை இந்தி தெரிந்தவர்கள் அதிகம் உபயோகிப்பது 'அச்சா' 'தோடா தோடா ஹிந்தி மாலும் ஹை' என்பதுதான். 'ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியாவில் இழுக்கு. ஆங்கிலம் தெரியாவிட்டால் உலகில் இழுக்கு' என மொழியின் பிரவேசம் குறித்து பேசுகிறார்கள். ஆங்கிலம் பிற மொழிகளை வசப்படுத்தியதன் காரணம், மொழிபெயர்ப்பு தான். மொழிபெயர்ப்பு வல்லுனர்கள் எல்லா மொழிகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள். சில நாடுகள் ஆங்கிலத்தினை கடுமையாக எதிர்த்தும் தற்போது உலகமயமாக்கல் எனும் அடிப்படையில் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டு விட்டது.

இந்த திரைப்படத்தில் காதல் தான் உண்மையான மொழி என சொல்வதோடு பிரச்சனைகள் கண்டு ஓடி ஒளியாமல் அதை எதிர்த்து நிற்கும்போது சாதாரண மனிதன் கூட சூப்பர் ஹீரோ ஆகிவிடுவான் என்றே சொல்லி இருக்கிறார்கள். அதாவது 'பவர் ஆ ஃப் தி காமன் மேன்'. கடைசியில் ரஜினியை வைத்து ஒரு பாடல். பாடல் முடிந்தே பலரும் கிளம்பி சென்றார்கள். ஒரு தமிழ் கலந்த இந்திப் படம் பார்த்தது போன்ற திருப்தி. அதுவும் ஹிந்திமார்கள் பேசும் தமிழ் அழகோ அழகு.

இந்த சூப்பர் ஹீரோ குறித்து உண்மையிலேயே மிகவும் ஆச்சர்யம் அடைய செய்யும் தகவல்கள் உண்டு. 1912ம் வருடம் இந்த சூப்பர் ஹீரோ பற்றியஎண்ணங்கள் உருவாக்கப்பட்டதாக சொல்லபப்டுகிறது. அதாவது சூப்பர் ஹீரோக்கள் அமானுஷ்ய தன்மை கொண்டவர்களா கற்பனை செய்யப்பட்டார்கள். 1937ல் முதல் காமிக்ஸ் புத்தகம் வந்தது, இந்த சூப்பர் ஹீரோக்கள் குறித்து தமக்கென இரண்டு நிறுவனங்கள் உரிமம் வைத்து கொண்டன. இதில் ஸ்பைடர்மேன், கேப்டன் அமெரிக்கா என பல சூப்பர் ஹீரோக்கள் உருவாக்கப்பட்டனர். இவை படங்களாக உருவாக்கப்பட்டன. பேட்மேன் போன்ற சாதாரண மனிதர்கள் சில கலைகள் கற்றுக்கொண்டு தமது திறமை மூலம் சூப்பர் ஹீரோக்கள் ஆனார்கள் என சொல்லப்பட்டது. அனிமேஷன் தொழில்நுட்பம் வந்த பின்னர் இப்படி நிறைய சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்களில் வடிவம் எடுத்தார்கள்.

'kick ass' எனும் திரைப்படம் வாழ்வில் உள்ள நிஜ சூப்பர் ஹீரோக்கள் பற்றி ஒரு  காமிக்ஸ் புத்தகத்தின் அடிப்படையில் உருவானது. அதாவது சில உடைகள் அணிந்து கொண்டு, சமூகத்திற்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதை தனியாளாக செய்வது, அல்லது ஒரு கூட்டமாக சேர்ந்து செய்வது.  kick ass 2 எனும் திரைப்படம் பார்த்தபோதுதான் இந்த நிஜ சூப்பர் ஹீரோக்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்த காமிக்ஸ் புத்தகம் அடிப்படையில் உண்மையிலேயே அமெரிக்காவில் நிறைய சூப்பர் ஹீரோக்கள் நிஜ வாழ்வில் வலம் வருகிறார்கள். உண்மையிலேயே குற்றங்களை களைவது, வீடில்லாதவர்களுக்கு உதவி செய்வது என பல சமூக விசயங்களை அவரவருக்கு பிடித்த சூப்பர் ஹீரோக்கள் உடை அணிந்து செயல்படுவது இவர்களின் வேலை. கனடாவில் அனுஜன் பஞ்சாட்சரம் இது போன்று செயல்படுவதாக குறிப்பு உண்டு. நமது கிராமங்களில் காட்டுக்கு சென்று காவல் காப்பது, எல்லை காவலாளி என ஒரு மட்டத்தில் மட்டும் சூப்பர் ஹீரோக்கள் உண்டு.

இந்த சூப்பர் ஹீரோக்கள் சில நேரங்களில் காவல்துறைக்கு தலைவலியாக அமைந்து விடுவது உண்டு. சில நாடுகளில் இவர்களின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என காவல்துறையே சொல்லிவிட்டது.

நமது தமிழகத்தில்,  இந்தியாவில் பிற நாடுகளில் உள்ளது போன்று  நிறைய நிஜ  சூப்பர் ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள், ஆனால் என்ன பிரச்சினை தமிழக, இந்திய  நிஜ சூப்பர் ஹீரோக்களின் வில்லன்கள் எல்லாம் அதிகார வர்க்கத்தில் அமர்ந்து இருக்கிறார்கள் என்பதுதான் சிரமம்.

Monday, 16 September 2013

ஜீரோ எழுத்து - 7 (குவாண்டம் இயக்கியலும், நிலையற்ற நியமமும்)

நிலையற்ற தன்மை அல்லது நிலையற்ற நியமம். ''ஒரு துகளின் உத்வேகத்தையும், அந்த உத்வேகத்தில் இருக்கும்போது உள்ள நிலையினையும் கண்டறிந்து கொள்வது என்பது முடியவே முடியாத ஒன்று. இக்கணத்தில் எக்கணமும் இல்லை'' கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என காலத்தைப் பிரித்து வைத்தார்கள். நேற்று, இன்று, நாளை இது நாள் கணக்கில் வரும் காலங்கள். நேர கணக்கிலும் சரி, வினாடி கணக்கிலும் சரி இந்த மூன்று காலங்களும் வந்தே தீரும். இதைத்தான் புத்தர் சொன்னார், இக்கணத்தில் எக்கணமும் இல்லை. புத்தர் சொன்னதைத்தான் ஹெய்ன்ஸ்பெர்க் எனும் அறிஞர் நிலையற்ற நியமம் என இயற்பியல் வாயிலாக சொன்னார். குவாண்டம் இயக்கியலில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த கருத்து சொல்லப்பட்டு வருகிறது. இந்த விசயமே சாதாரண இயற்பியல் விதிகளுக்கும் குவாண்டம் இயக்கியலுக்கும் உள்ள மாபெரும் வேறுபாடு என கண்டறியப்பட்டது.

நிகழ்தகவு என சொல்வார்கள். உலகில் கிட்டத்தட்ட எல்லா விசயங்களும் இரண்டாகவே பிரிபட்டு நிற்கும். ஒன்று, இல்லையேல் மற்றொன்று. தற்போது  அலைவடிவம் பெறாத துகள், துகள் வடிவம் பெற்றே இருக்க வேண்டும். அதாவது நாம் செயல்முறை பயிற்சி செய்யும்போது துகள் பெறக் கூடிய அலைவடிவம்தனை, நம்மிடம் இருக்கும் உபகரணம் கொண்டு அதை மாற்றிவிடும் பட்சத்தில் அலைவடிவம் மறைந்தாலும் அந்த துகள் எங்கு செல்கிறது என்பதை நாம் கண்டு கொள்ளும் வாய்ப்பு இருக்க வேண்டும். அதைத்தான் நியூட்டன் ஒரு துகளின் உத்வேகத்தையும், உத்வேகத்தில் உள்ள நிலையினையும் கண்டு கொண்டால் அந்த துகள் எங்கு செல்கிறது என அறியலாம் என்றார். ஆனால் அது சாத்தியமற்ற ஒன்று என பின்னாளில் தெரிய வந்தது. இதனைக் கண்டறிய தமது வாழ்நாட்களில் அதிக நாட்கள் செலவிட்ட ஐன்ஸ்டீன் தோற்றுப் போனார். அப்படியே வரும் காலங்களில் எவரேனும் ஒருவர் ஒரு துகளின் இந்த உத்வேகம், உத்வேகத்தில் இருக்கும் நிலை என இரண்டையும் ஒரு சேர நிச்சயித்து விட்டால் இந்த குவாண்டம் இயக்கியலை மூடிவிட வேண்டியதுதான்.

பார்த்தார், ஹெய்ன்ஸ்பெர்க். இந்த இரண்டு நிலைகளை ஒரு  சேர நிச்சயிக்க முடியாது என சொல்லி 'ஹெய்ன்ஸ்பெர்க் நிலையற்ற நியமம்' என கணக்கு போட்டு காண்பித்துவிட்டார். முதன் முதலாக  நிலையற்ற நியமம் என்ற வார்த்தையை சொன்னது எட்டிங்க்டன் என சொல்வோர் உண்டு. நிலையற்ற நிலையில் x , நிலையற்ற உத்வேகம்  p இருக்கும். xp>h/4pi h = ப்ளான்க் மாறிலி. இந்த பிளான்க் மாறிலி என்பது 6.63 x 10 -34 ஜூல்ஸ்/வினாடி. E= hv அப்படிங்கிற சமன்பாட்டினை காண்பித்தவர் இந்த மாக்ஸ் ப்ளான்க். கதிரியக்க ஆற்றலை பற்றி குறிப்பிட்டார் அவர். நாம் முதன் முதலில் குறிப்பிட்ட ஆற்றல் சிறு சிறு பகுதியாய் வரும் என்பதை சொல்வதுதான் இந்த சமன்பாடு. சாதாரண இயற்பியல் விதிகளுக்கு உட்படாத விசயங்களை பற்றி குறிப்பிடவே இப்படி ஒரு சமன்பாட்டினை ப்ளான்க் வெளியிட்டார் எனும் குற்றசாட்டு முதலில் எழுந்தது. ஐன்ஸ்டீன் பின்னர் ஒளியின் ஆற்றலை இதே சமன்பாட்டினை கொண்டு விளக்கினார். ஒளி ஆற்றல் போட்டான்களாக வெளிவருகிறது என்பதை அறிந்ததும் இயற்பியல் விழித்துக் கொண்டது. என்னதான் இந்த குவாண்டம் கொள்கையை ஐன்ஸ்டீன் நம்பத்தகுந்த கொள்கையாக மாற்றினாலும் இது ஒன்று மட்டுமே இந்த இயற்கை உலகினை விளக்க கூடியது என்பதை ஐன்ஸ்டீன் ஒருபோதும் நம்பியது இல்லை. பிற்காலத்தில் ப்ளான்க் நீளம், ப்ளான்க் நேரம் என கண்டுபிடித்தார்கள். வினாடி, மில்லிவினாடி, மைக்ரோவினாடி என ஒரு காலகட்டத்திற்கு மேல் வினாடியை உடைக்க முடியாது என சொன்னார்கள்.

மீண்டும் செயல்முறை பயிற்சிக்கு வருவோம். இந்த துகள்களின் உத்வேகம், நிலை  குறித்து ஒரு செயல்முறை செய்து பார்க்கலாம் என்றார்கள். அதாவது இரண்டு துகள்களை ஒன்றுடன் ஒன்று மோத விடுவது. மோதிக்கொண்ட துகள்கள் எதிரெதிர் திசையில் செல்லும். வெளிக்காரணிகள் ஆதிக்கம் இல்லாத பட்சத்தில் இரண்டு துகள்களின் உத்வேகம், நிலை ஒரே மாதிரி இருக்கும் என்பது இயற்பியல் விதி. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு துகளின் உத்வேகமும், மற்றொரு  துகளின் நிலைதனையும் நிச்சயித்து விடலாம் என சொன்னார்கள். ஆக மொத்தம் கள்ளாட்டம் ஆடி துகளின் இரண்டு நிலையை சொல்லலாம் என நினைத்தார்கள். ஆனால் இவை எல்லாம் ஏதேனும் துகள்கள் ஒளியினை விட வேகமாக சென்றால் மட்டுமே சாத்தியம் எனவும் குறிப்பிட்டார்கள். ஐன்ஸ்டீனின் சார்பு கொள்கை படி ஒளியை விட வேகமான துகள்கள் இது சாத்தியமில்லை என்றாகிறது. (நியூட்ரினோ துகள் ஒளியை விட வேகம் என தற்போது கண்டுபிடித்ததாக ஒரு குறிப்பு உண்டு)

இந்த செயல்முறை பயிற்சியை செய்தே தீர வேண்டும் என ஒரு பிரெஞ்சு அறிவியலாளர் செய்து பார்த்தார். ஹெய்ன்ஸ்பெர்க் என்ன சொன்னாரோ அதையே சொல்லி ஒளியை விட வேகமாக செல்லக்கூடிய துகள் இருந்தாலும் உத்வேகம், உத்வேகத்தில் உள்ள நிலை என இரண்டும்  ஒரு சேர நிச்சயிப்பது சாத்தியமில்லை என முடித்து கொண்டார். ''The particles do not communicate by any means we knew about. All we know is that every particle knows what every other particle it has ever interacted with is doing''

''விண்டவர் கண்டில்லை, கண்டவர் விண்டில்லை''. இந்த வாக்கியம் பலமுறை கேள்வி பட்டு இருப்போம். இந்த வாக்கியத்தைத்தான் துகளின் உத்வேகம், நிலைத்தன்மை பற்றி குறிப்பிடுகிறார்கள். விண்டவர் கண்டில்லை, கண்டவர் விண்டில்லை அப்படிங்கிற விசயத்தை எப்படி ஒருவர் சொல்ல இயலும். இந்த விசயம் சொன்னவர் ஏதேனும் செயல்முறை பயிற்சி செய்து பார்த்தாரா என்றெல்லாம் குறிப்புகள் இல்லை. ஆனால் இந்த வாக்கியத்தின் உட்பொருள் தனை எவரேனும் உடைத்து விடுவாரெனில், அதாவது விண்டவர் கண்டார், கண்டவர் விண்டார், இறைவனை மூடி விட வேண்டியதுதான்.

எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே துகள் துகளாக அல்லது அலையாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தோம். ''உண்மையை யார் உண்மையிலேயே உண்மையாக கண்டறிந்தது என்பது மனித வாழ்வில் ஒரு பெரும் கேள்விக்குறிதான்' ஆனால் இந்த குவாண்டம் இயற்பியல் சொன்னது நாம் என்ன காண்கிறோமோ அல்லது அளக்கிறோமோ அதுவே உண்மை. ஆனால் கேள்வி நீண்டு கொண்டே போகும். அப்படியெனில் நமது உபகரணம் சரியானதா? வேறு உபகரணம் இருந்தால் என்ன கிடைக்கும் என்பது போன்று. இதைத்தான் 'No Analysis is better than the sample itself' என்று சொன்னார்கள்.  கடவுள் இவ்வுலகை படைத்தார் எனில் கடவுளை யார் படைத்தார் என்றே பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். பெரு வெடிப்பு கொள்கை முன்னர் என்ன இருந்தது என அறிவியலிடம் கேட்டால் இயற்பியல் விதிகளுக்கு உட்படாத தன்மை இருந்தது அதையே இந்த குவாண்டம் இயற்பியல் சொல்ல வருகிறது என்கிறார்கள்.

ச்ச்ரோடிங்க்ர் எனும் அறிஞர் நம்மைப் போலவே குவாண்டம் இயற்பியல் பற்றி புரிந்து கொள்ள முடியாது திணறினார். இருப்பினும் குவாண்டம் இயற்பியல் சொல்லும் உலகை நாம் காண இயலாது என்பதை நிரூபிக்க ஒரு செயல்முறை பயிற்சி சொன்னார். அதைத்தான் ச்ச்ரோடிங்க்ர் பூனை செயல்முறை பயிற்சி என சொல்கிறார்கள்.

ஒரு பெட்டி. அந்த பெட்டிக்குள் ஒரு கதிரியக்க ஐசோடோப். கதிரியக்கம் அளக்கும் ஒரு கருவி. ஒரு சயனைடு சீசா. இப்போது கதிரியக்கத்தை அந்த ஐசோடோப் வெளிவிட, அதை இந்த கருவி அளக்கும், கதிரியக்க அதிகரிப்பால் சயனைடு சீசா உடையும், சயனைடு சுவாசித்து பூனை இறக்கும். இப்போது அந்த ஐசோடோப் கதிரியக்கத்தை உமிழவில்லை எனில் பூனை உயிருடன் இருக்கும். இப்போது நமக்கு அந்த பெட்டியை திறந்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியும். அதுவரை பூனை உயிருடன்  இருக்கலாம், அல்லது இறந்து போயிருக்கலாம். தற்போது கதிரியக்கக் கருவி அவசியமற்ற ஒன்று, ஏனெனில் பூனையே ஒரு கருவியாக இங்கே இருக்க வாய்ப்பு உண்டு. ஒரு நிலையை உடைக்கும் தன்மை நாம் பார்ப்பதில் இருக்கிறது, ஆனால் அதை நாம் பார்க்கும்வரை நிச்சயிக்க முடிவது இல்லை. புலி இருக்கிறதா, புலித்தோல் போர்த்திய பசு இருக்கிறதா என்பது நாம் கண்டுகொள்ளும்வரை தெரிவதில்லை. அறிஞர்கள் பார்த்தார்கள், இது மிகவும் வில்லங்கமாக இருக்கிறதே என பாதி செத்த பூனை என சொல்லி வைத்தார்கள், இருப்பினும் அளவுகோல் எது என்பது இதுவரை புதிராகவே இருக்கிறது. ச்ச்ரோடிங்க்ர் சொன்னார் ''I don't like it, and I am sorry I ever had anything to do with it''. முடிவிலி பற்றி கேள்வி பட்டு இருப்போம். முடிவிலியால் முடிவிலி கொண்டு வகுக்க விடை வரையறுக்க முடியாதது. கணக்குதனில் மதிப்பிலா ஒன்றை புறக்கணித்து விடுவார்கள். 'Let us ignore, it is negligible' ஆனால் குவாண்டம் இயக்கியல் சொல்கிறது, 'Don't ignore because it has infinite energy, infinite charge and  infinite mass'.

இப்படி குவாண்டம் இயக்கியல், இயற்பியல் தனது பங்குக்கு இவ்வுலகம் தோன்றிய இயற்கையை பற்றி விவரித்துக் கொண்டிருக்க சில அறிஞர்கள் ஒரு உலகம் மட்டுமே இல்லை, பல்வேறு உலகங்கள் உண்டு என சொல்லவும் செய்தார்கள். பூலோகம், மேலோகம், பாதாள உலகம் என்று இருக்க எதற்கும் அணுக்களின் உலகம் குறித்து அடுத்துப் பார்ப்போம்.

அதற்கு முன்னர் ஒரு சூப்பர் ஹீரோ காத்துக் கொண்டு இருக்கிறார்.

(தொடரும்)