Thursday, 12 September 2013

ஜீரோ எழுத்து - 6 ( குவாண்டம் கோட்பாடு)

நம்மை எவரேனும் கவனித்துக் கொண்டு இருக்கிறார் என வைத்துக் கொள்வோம், அப்போது நமது செயல்பாடு எப்படி இருக்கும்? அதே வேளையில் நம்மை எவரும் கவனிக்கவில்லை என வைத்துக் கொள்வோம் நமது செயல்பாடு எப்படி இருக்கும்?

இப்போது ஒரு ஒழுங்குமுறை எதில் இருக்கும்? எவரேனும் கவனித்துக் கொண்டு/ பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டுமே அதில் பெரும்பாலானவர்களில் ஒழுங்குமுறை இருக்கும், இல்லையெனில் தறிகெட்டுதான் திரிவார்கள். உதாரணத்திற்கு சாலைகளில் கேமரா பொருத்தி இருப்பார்கள். அந்த சாலையில் அதிக வேகம் இவ்வளவுதான் செல்லலாம் என இருக்கும். பெரும்பாலான காரோட்டிகள் இந்த கேமரா அருகில் வரும்போது மட்டும் குறிப்பிட்ட வேகத்தில் செல்வார்கள், அதற்கு பின்னர் அவர்களின் இஷ்டப்படிதான். இது ஒரு உதாரணம். இதைப்போலவே பல உதாரணங்கள் உண்டு. இதைத்தான் குவாண்டம் கோட்பாடு சொல்ல வருகிறது.

குவாண்டா என்றால் மிக மிக நுண்ணிய துகள்/அலை, அதாவது ஆற்றலின் ஒரு பகுதி என்றே கொள்ளலாம். இப்படிப்பட்ட பகுக்க முடியாத ஆற்றல் குறித்து விளக்கும் கோட்பாடுதான் குவாண்டம் கோட்பாடு. இப்போது குவாண்டம் கோட்பாடு பல்வேறு பரிமாணம் எடுத்துக் கொண்டு வருகிறது. அது குறித்து இப்போதைக்கு  தள்ளிப் போடுவோம்.

குவாண்டம் கோட்பாட்டில் ஐந்து விசயங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

1. ஆற்றலானது தொடர்ச்சியாக இல்லாமல், சிறிது சிறிதாக அதுவும் வெவேறான நிலையில் இருக்கும்.

நமது மீது பாயும் ஒளியானது தொடர்ந்து வந்து விழுந்தாலும் அவை ஒரு பகுதி பகுதியாகவே வரும். அதைத்தான் போட்டான் என குறிப்பிடுகிறார்கள். குவாண்டா அந்த போட்டானின் ஒரு சிறு பகுதி. ஒரு படம் எப்படி புள்ளிகள் இணைந்து உருவாகிறதோ அதைப் போலவே இந்த ஆற்றல் புள்ளிகளாக இருக்கிறது. இது எப்படி சாத்தியம் எனில் ஒரு அணுவில் வெளி ஆர்பிட்டலில் இருக்கும் எலக்ட்ரான்கள் வெவ்வேறு ஆற்றல் நிலை கொண்டு இருக்கின்றன என கண்டறியப்பட்டு இருக்கிறது. அதோடு மட்டுமில்லாது  அவை ஓரிடத்தில் நில்லாமல் மேலும் கீழும் குதித்துக் கொண்டு இருக்கிறது. அதன் காரணமாகவே நாம் பல்வேறு வண்ணங்கள் காண முடிகிறது.

2. அடிப்படைத் துகள்கள், இரட்டைத்தன்மை கொண்டது, அதாவது அலைகளாகவும், துகள்களாகவும் செயல்படும்.

இதற்கு ஒரு செயல்முறை பயிற்சி செய்தார்கள். தற்போதைய காலகட்டத்தில் எல்கட்ரானை துல்லியமாக கண்டறியும் கருவி நம்மிடம் இல்லை. அதனால்  நியூட்ரான் கொண்டு செயல்முறை செய்து பார்த்தார்கள்.

ஒரு அறை. அந்த அறையின் மத்தியில் இரண்டு துவாரங்கள் உள்ள சுவர். அந்த பக்கம் மணல் மூடை, இந்த பக்கம் ஒரு துப்பாக்கியுடன் உள்ள நபர். இப்போது ஒரு துவாரம் மூடப்படுகிறது. சுவருக்கு அருகில் இருந்து சுடும் போது திறக்கப்பட்ட துவாரத்தின் வழியின் மத்தியில் பல குண்டுகள் செல்லும். கணிப்பு மிகவும் துல்லியம். சற்று தள்ளி சென்று சுடும்போது அனைத்தும்  துவாரத்தின் மத்தியில் செல்ல வாய்ப்பு இல்லை. இப்போது மறு துவாரம் மூடப்படுகிறது. மூடப்பட்ட துவாரம் திறக்கப்படுகிறது. அதே விடை கிடைக்கிறது. ஏனெனில் இருப்பது ஒரு திறந்த துவாரம் மட்டுமே. இப்போது இரண்டு துவாரங்களை திறப்போம். முன்னர் மாதிரி சில குண்டுகள் இரண்டு துவாரங்கள் மத்தியில் செல்லும், ஒரு குண்டு ஒரு துவாரத்தில் மட்டுமே செல்லும். ஏனெனில் இந்த குண்டுகள் பருமப் பொருள் மட்டுமே எனவே ஒரே நிலைதான். இப்போது இந்த செயல்முறை பயிற்சியில் முக்கியமானது எந்த குண்டும் துவாரத்தைத் தவிர மற்ற இடத்தில் பட்டு திரும்பாது எனும் ஒரு கட்டுப்பாடு.

அதைப் போன்றே அலைகள் இப்போது செலுத்தப்படுகிறது. ஒரு துவாரம் மூடப்படுகிறது. எப்படி குண்டுகள் சென்றதோ அதைப் போன்றே அலைகள் செல்கிறது. மறு துவாரம் மூடி, மூடப்பட்ட துவாரம் திறக்கபடுகிறது, மீண்டும் அதே போன்ற முடிவு. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இப்போது இரண்டு துவாரங்கள் திறக்கப்படுகிறது. இப்போது முதலில் ஒரு துவாரம் திறக்கப்பட்டபோது இருந்த பதில் இல்லாமல், ஒரு அலை வடிவம் தென்படுகிறது. இப்போது அலையின் உயரம் அதிகமாக தென்படுகிறது. இதற்கு காரணம், இரண்டு துவாரங்கள் வழியாக சென்ற அலைகள் இணைந்து ஒரு பெரிய அலையை உருவாக்கிவிட்டது. அதற்கு பின்னர் சின்ன அலை. சில இடங்களில் அலைகள் சேர்ந்து பெரிதாகவும், சில இடங்களில் அலைகள் சேர்ந்து ஒன்றுமில்லாமலும் ஆகும்.

இந்த குண்டுகள், மற்றும் அலைகள் செயல்படும் விதத்தை அடிப்படைத் துகள்கள் ஒரு சேர செய்கின்றன என்பதுதான் குவாண்டம் கோட்பாடு. உதாரணத்திற்கு எலக்ட்ரான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எலக்ட்ரான்கள் எதிர்மறைத் தன்மை கொண்டவை. இப்போது ஒரு துவாரம் திறக்க இந்த எலக்ட்ரான்கள் குண்டுகள் போன்றும், அலைகள் போன்றும் எப்படி ஒரு துவாரம் திறந்து இருந்ததோ அதைப் போன்றே செயல்பட்டன. இரண்டு துவாரங்கள் திறந்தபோது இந்த எலக்ட்ரான்கள் அலைகள் போன்றே செயல்பட்டன. ஒவ்வொரு எலக்ட்ரானும் மோதிக் கொள்வதால் இருக்கும் என்றே ஒரு ஒரு எலக்ட்ரான் மட்டும் செல்லுமாறு செயல்முறை செய்யப்பட்டது. அப்போதும் அவை அலைகள் போன்றே செயல்பட்டன. இதை கண்டறிய ஒளியை பயன்படுத்தினார்கள்.

ஒரு எலக்ட்ரான் செல்லும்போது இந்த ஒளியினால் வெளிச்சம் தரும். எனவே எலக்ட்ரான்கள் எந்த வழியில் செல்கிறது என கண்டறிய முற்பட்டார்கள். சுவற்றின் பின்புறம் விளக்கு வைக்கப்பட்டது. எலக்ட்ரான் ஆச்சரியமூட்டும் வகையில் குண்டுகள் போன்றே ஒரே ஒரு துவாரத்தில் சென்றன. இதற்கு என்ன காரணம் என அறிய முற்பட்டபோது ஒளியின் இடையூறு என அறிந்து கொள்ள முடிந்தது. இதனால் ஒளியின் தன்மையை குறைத்தார்கள். ஆற்றல் பகுதி பகுதியாய் வருவது என குறிப்பிட்டு இருந்தோம். இப்போது எலக்ட்ரான்கள் ஒளியின் தன்மை குறைந்ததால் ஒளியானது எலக்ட்ரானில் படும்போது குண்டுகள் போன்றும், ஒளியில் இருந்து தப்பிக்கும் எலக்ட்ரான்கள் அலைகள் போன்றும் செயல்பட்டன. முதலில் எழுதிய பத்தியை திருப்பி வாசியுங்கள். நம்மை கவனிக்கும்போது நமது செயல்பாடு, நம்மை கவனிக்காமல் இருக்கும்போது நமது செயல்பாடு!

தற்போது ஒளியின் வேகத்தை (சீரான அளவு எனினும்) குறைத்தார்கள். அதாவது ஒளியலையின் நீளம் அதிகரிக்கப்பட்டது. இப்போது ஓரளவு ஒளியலை நீளம் குறைக்கப்பட்டபோது குண்டுகள் போன்றும், மேலும் ஒளியலை நீளம் குறைக்கப்பட்ட போது அலைகள் போன்று செயல்பட்டது. இந்த செயல்முறை பயிற்சி சொன்னது இதுதான். எதைக் கண்டறிய வேண்டுமோ அதற்குரிய செயல்முறை பயிற்சி இல்லாமல் ஒன்றை சொல்ல முடியாது. நாம் செய்யும் செயல்முறை பயிற்சி குறித்தே ஒன்று இருப்பது, இல்லாதது தெரியும்.

இப்போது ஜீவாத்மா, பரமாத்மா. இதற்குரிய செயல்முறை பயிற்சி யோகம் என்றும், தியானம் என்றும் சொல்கிறார்கள். பரமாத்மா, ஜீவாத்மாவாக வந்ததாக புராணங்கள் குறிப்பிடுகிறது. விஸ்வரூப தரிசனம் என்றெல்லாம் சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு அணுத்துகள் எப்படி துகளாகவும், அலையாகவும் செயல்படும் என குவாண்டம் கோட்பாடு சொல்கிறதோ அதைப்போலவே ஆத்மா ஜீவாத்மா, பரமாத்மா என செயல்படும் என மெஞ்ஞானம் சொல்கிறது. குவாண்டத்தின் இந்த முக்கிய கோட்பாட்டை மறுப்பவர்கள் கடவுளை தாராளமாக மறுக்கலாம். ''If you want to say that something behaves a certain way or even exists, you must give the context of this behaviour or existence since in another context it may behave differently or not exist at all'' யோகிகளின், மகான்களின் மனநிலைக்கு கடவுள் தெரிந்து இருக்கலாம். அதைத்தான் அவர்கள் சொன்னார்கள். நாம் நமது நிலையில் இருந்து கொண்டு கடவுள் இல்லை என சொன்னால் அது நமது நிலைக்கு சரியாகவே இருக்கும்.

3. இந்த அடிப்படைத் துகள்கள் ஒழுங்குமுறையின்றி செல்லும் தன்மை கொண்டது.

4. ஒரு துகளின் உத்வேகத்தையும், அந்த உத்வேகத்தில் இருக்கும்போது உள்ள நிலையினையும் கண்டறிந்து கொள்வது என்பது முடியவே முடியாத ஒன்று. கருவிகள் இல்லாதபட்சத்தில் அதாவது ஓடிக்கொண்டிருப்பவர் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் எவ்வளவு வேகமாக ஓடினார் என அறிந்து கொள்வது சிரமம். இவை இரண்டில் ஒன்றை துல்லியமாக அறிந்து கொள்ள நினைத்தால் மற்றொன்று பிழைத்துப் போகும். ''இக்கணத்தில் எக்கணமும் இல்லை''

5. நாம் இப்போது கண்டு கொண்டு இருக்கும் உலகமும், அணுக்களின் உலகமும் முற்றிலும் வெவ்வேறானவை.

எப்போது ஒரு துகள் துகளாகவும், அலையாகவும் இருக்கும். ஆச்சரியப்படாதீர்கள். எப்போது துகளாக பார்க்கிறோமோ அப்போது துகளாக இருக்கும், எப்போது அலையாக பார்க்கிறோமோ அப்போது அலையாக இருக்கும். நாம் பார்க்கும் முறையை பொருத்தது என்றார் ஒரு அறிஞர். ஒன்றை பார்க்காதவரை அது உண்மை இல்லை என்றார் அவர். எனக்கு  பல நேரங்களில் அறிவியலாளர்கள் முட்டாள்கள் போன்றே காட்சி அளிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத்தான் தெரியும் உண்மை என்னவென்று.

ஒரு நாயை கல்லில் சிலை வடித்த கதை, நமது கிராமங்களில் மிகவும் பிரபல்யம். கல்லில் வடிக்கப்பட்ட சிலை கண்டு, இது கல்லோ, நாயோ என்றே எண்ணி, கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என பாடி வைத்தார்கள். கடவுளுக்கு என இது தெய்வம் என்றால் தெய்வம், சிலை என்றால் அது சிலைதான் என எழுதி வைத்தார்கள். ஆனால் உண்மை எது? ஒரு கல், அது சிலை. இப்போது நாயும், தெய்வமும் நாம் பார்ப்பதில் இருக்கிறது. அடிப்படையில் துகள்கள் துகள்கள்தான். செயல்முறை பயிற்சியில் துகள்களைத்தானே துவாரங்கள் வழியாய் செலுத்தினாய் என்றே கேட்க வேண்டும் போல் இருக்கிறது!

குவாண்டம் கோட்பாடு எனக்கு மிக மிக சரியாகப் புரிந்துவிட்டது,  இன்னும் எனது முட்டாள்தனம் நிச்சயமாக சிறிது நாட்கள் பின்னர் தொடரத்தான் செய்யும்.

(தொடரும்)


Wednesday, 11 September 2013

ஜீரோ எழுத்து - 5 குவாண்டம் கொள்கையும் மூடத்தனமும்


 ''இது தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கை'' - ஐன்ஸ்டீன்

''எப்படி எப்படி நடக்குமோ, அப்படி அப்படியே நடக்கும்'' - வழக்கு மொழி

''கிடைக்கிறது கிடைக்காம போகாது, கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது'' - ரஜினி பட வசனம்

''கடவுள் தாயக்கட்டையை உருட்டுவதில்லை'' - ஐன்ஸ்டீன்

''மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்'' - வழக்கு மொழி

''வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன், திணை அறுப்பான்'' - வழக்கு மொழி

''அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்'' - வழக்கு மொழி

மேலே சொன்ன விசயங்கள் எல்லாம் ஒரு துக்கிரித்தனமாக இருக்கும்.  இது போன்ற பல சொல்லப்பட்ட விசயங்கள்  மூடத்தனமான கருதப்படுகின்றன. இந்தியாவில், ஏன் இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் தத்துவ மேதைகள் போலவே காட்சி அளிக்கிறார்கள். இதில் பெரும்பாலோனோர் வாழ்க்கையை மிகவும் சர்வ சாதாரணமாய் வாழ்ந்துவிட்டு போவார்கள்.

அணுக்கொள்கை பற்றி கிரேக்கம் சொன்னது இது தான். ''ஒன்றை வெட்ட வெட்ட சின்ன துகள்கள் ஆகும். அதை மேலும் மேலும் வெட்ட அதை வெட்ட இயலாத நிலை ஒன்றை  அடையும்'' இப்படி எண்ணற்ற விசயங்கள் நினைவில் இருந்து வந்தவைதான்.

''ஒளியைவிட வேகமாக செல்லும் துகள்களோ, அலைகளோ இல்லை'' - ஐன்ஸ்டீன்

பொதுவாக ஒரு விசயத்தை சொன்னால் அதற்கான செயல்பாட்டு முறை அவசியம், அதாவது நிரூபிக்கும் வழி முறை. கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க பல சோதனைகள் கடவுளே நடத்துவதாக சொல்லப்பட்டு வருகிறது.இவ்வாறு அறிவியலில் சொல்லப்பட்ட விசயங்கள் பல செயற்முறை பயிற்சி மூலம் நிரூபிக்க பட்டு கொண்டு இருக்கிறது.

கீழே சொல்லப்பட்ட வாக்கியங்கள் மிகவும் விசித்திரமானவை. ஒன்றில் இருந்தே மற்றொன்று தொடங்கும் என்பதற்கான ஒரு தொடர்பு.

 ''நெருப்பில்லாமல் புகையாது''

''அறிவியல் யூகம் சொல்லும்''

''அறிவியல் தாயக்கட்டை உருட்டும்''

ஒரு நாணயத்தை, தலை பூ என இருந்தால், சுற்றிவிடும் போது  ஒன்று தலை விழும். அல்லது பூ விழும். இதைத்தான் அறிவியல் சொல்கிறது. ஆனால் எப்போது தலை விழ வேண்டுமோ அப்போது மட்டுமே தலை விழும் என்பதுதான் தீர்மானிக்கப்பட்ட விசயம். இதை வைத்தே ''கடவுள் தாயக்கட்டை உருட்டுவதில்லை'' என்றார்.

''குவாண்டம் கொள்கை'' இந்த உருட்டலைத்தான் சொல்கிறது. குவாண்டம் கொள்கையானது சொல்லப்படும் யூகம் ஓரளவுக்கு சரியே என்பாரும் உளர். ஆனால் இந்த குவாண்டம் கொள்கையினை நிரூபிக்க கூடிய செயல்பயிற்சி முறை இன்னமும் கிட்டவில்லை. இதனால் இதை ஒட்டிய ஷ்ட்ரிங் தியரியை கடுமையாக விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள்.

இந்த குவாண்டம் கொள்கை அறிவியலின் மூடத்தனம் என்றே சொல்லவும் செய்கிறார்கள். அறிவியலால் நிரூபிக்க முடியாத விசயங்களை இந்த குவாண்டம் கொள்கையின் தலையில் கட்டிவிட்டதாகவும், இதற்காக செலவிடப்படும் பணம் ஊதாரித்தனமான செலவு எனவும் சொல்கிறார்கள்.

ஆமாம், குவாண்டம் கொள்கை என்றால் என்ன? இந்த குவாண்டம் கொள்கையை உருவாக்கியவர் சொன்னார், குவாண்டம் கொள்கையை புரிந்து கொண்டேன் என எவரேனும் சொன்னால் அவரைப் போல முட்டாள் எவரும் இல்லை.

குவாண்டம் கொள்கை எனக்கு மிக மிக சரியாக புரிந்து விட்டது. எனது முட்டாள்தனத்தை சிறிது நாட்கள் பின்னர் பார்க்கலாம்.

(தொடரும்) 

Friday, 6 September 2013

சாமியாரின் சுகபோக வாழ்க்கை

நான் சாமியாராகப் போகப் போகிறேன் என்றே கடந்த சில மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தேன். இதனால் எனது அம்மாவும் அப்பாவும் கடும் எரிச்சல் அடைந்தார்கள்.  இருபது வயசுல என்ன சாமியார் ஆசை இவனுக்கு என்றே என்னை மந்தரிக்க எல்லாம் அழைத்து சென்றார்கள். ஆனால் எனது முடிவில் நான் மாற்றம் கொள்ளவில்லை. அவசரம் அவசரமாக ஒரு பெண்ணை பார்த்து எனக்கு மணம் முடிக்க மணப்பெண்ணைத்  தேடி தேடி அலைந்தார்கள்.

யாராவது ஒரு பெண்ணை பார்த்துவிட்டு வந்தால், அந்த குடும்பத்தில் சென்று  நான் சாமியாராகப் போகிறேன் என்றே சொல்லி வைத்தேன். அதனால் எனக்கு எவரும் பெண் தர மிகவும் யோசித்தார்கள். சில சாமியார்கள் சம்சாரிக்கு ஒரு பொண்டாட்டி, சாமியாருக்கு பல பொண்டாட்டிகள் என ஊரில் வசனம் பேச வைத்துவிட்டார்கள். இருப்பினும் எனது சாமியார் ஆசை என்னை விடவில்லை. சாமியார் ஆக வேண்டுமெனில் எப்படி என்னை தயார் படுத்திக் கொள்வது என்று அறிந்து கொள்ள ஒரு சாமியாரை சந்திக்க சென்றேன். இவர் மிகவும் பிரபல்யமானவர் இல்லை. எனது நண்பர் ஒருவர் சொல்லித்தான் இவரைத் தெரியும். அவனிடம் கேட்டதற்கு நீ நேரில் சென்று பார் என முடித்துக் கொண்டான்.

இந்த சாமியார் தனது பெயரில் ஆனந்தா என்றெல்லாம் சேர்த்து கொள்ளவில்லை. தனது பெற்றோர் வைத்த பெயரான வேலுச்சாமி என்பதையே இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தார். அவர் தங்கி இருந்த இடத்தை சுற்றி மரங்கள், செடிகள் என இருந்தன. அந்த மரங்கள் செடிகளுக்கு நடுவே ஒரு ஓலை வேய்ந்த குடிசை. சாமியார், சம்சாரி ஆன கதை எல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன். குடிசை கதவு திறந்தே இருந்தது. ஆனால் உள்ளே அவர் இல்லை. சரி என சுற்றிப் பார்த்தேன். செடிகளுக்கு ஒருவர் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். இவர்தான் சாமியாரா? காவி உடை எல்லாம் இல்லையே என நினைத்துக் கொண்டிருந்தேன்.

அவர் அருகில் சென்று நீங்கள் தான் வேலுச்சாமி சாமியாரா என்றேன். அவரோ எனது பெயர் வேலுச்சாமி, நான் சாமியார் எல்லாம் இல்லை என்றார். எனது நண்பன் சொன்னான், நீங்கள் சாமியார் என்று என்றேன். உனது நண்பன் மீதான நம்பிக்கை எனக்குப் பிடித்து இருக்கிறது, ஆனால் நான் சாமியார் இல்லை என்றார். நான் அமைதியாக இருந்ததை பார்த்துவிட்டு 'சாமியார்' என்றால் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறாய்? என்றார்

எவர் ஒருவர் பக்தியும், அருளும் நிறைந்து சதா இறைவனையே நினைத்து அவருக்கு பணிவிடை புரிகிறாரோ அவரே சாமியார் என்றேன். மிகவும் நல்ல பதிலை சொல்லி இருக்கிறாய் என்றார். எனக்கு உச்சி குளிர்ந்து போனது. சரி, இறைவன் எங்கெலாம் இருக்கிறார் என்றார். இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்றேன். நல்ல பதிலை சொல்லி இருக்கிறாய் என்றார் மீண்டும். எனக்கு சந்தோசமாக இருந்தது. சரி, நீ என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய் என்றார். நான் வேலை எதுவும் செய்யவில்லை, சாமியார் ஆக வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்றேன். பதிலை சொல்லி இருக்கிறாய் என்றார்.

சாமியார் ஆக நீங்கள் தான் எனக்கு அருள் புரிய வேண்டும் என்றேன். மிகவும் தாராளமாக செய்யலாம், தினமும் காலையில் எட்டு மணிக்கு இங்கு வந்துவிடு, மாலை ஆறு மணிக்கு இங்கிருந்து சென்று விடு என்றார். மிகவும் சந்தோசமாக வீடு சேர்ந்தேன். வீட்டில் விசயம் சொன்னதும் பெற்றோர்கள் மிகவும் கோபம் கொண்டார்கள். ஆனால் என்னை அவர்களால் தடுக்க இயலவில்லை.

மறுநாள் காலையில் சாமியாரை காண சென்றேன். அவர் என்னை அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட எல்கை அளவை காட்டி இங்கே பதினோரு மணி வரை நீ தண்ணீர் பாய்ச்சு என சொல்லிவிட்டு சென்றார். நானும் சாமியார் ஆகும் ஆசையில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தேன். அரை மணி நேரத்தில் பழங்கள் கொண்டு வந்து இதை சாப்பிடு என தந்தார். பழங்கள் மிகவும் ருசியாக இருந்தது. நேரம் ஆக ஆக உடல் வலிக்க ஆரம்பித்தது. சரியாக பத்தரை மணிக்கு பழச்சாறு கொண்டு வந்து தந்தார். அமிர்தமாக இருந்தது. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இருந்தது.

பதினோரு மணிக்கு வந்து பார்த்தவர் மிகவும் நன்றாக வேலை செய்து இருக்கிறாய் என என்னை அழைத்துக் கொண்டு அவர் செய்து முடித்து இருந்த வேலையை காட்டினார். பல தென்னங்காய்கள் உரித்து இருந்தார். இதையெல்லாம் மூட்டை கட்டு என்றார். மூட்டை கட்டி முடிக்கும் முன்னர் முதுகெலும்பு உடைந்து போகுமாறு இருந்தது. ஒரு மினி லாரி வந்தது.

இன்னைக்கு எத்தனை மூட்டை சாமி என்றபடி வந்தவர் பத்து மூட்டை இருக்கே என கொஞ்சம் பணம் முதலாக தந்தார். மினி லாரியில் அவருடன் சேர்ந்து நானும் மூட்டைகளை ஏற்றி விட்டேன். வரேன் சாமி என சொல்லிவிட்டு மினி லாரி டிரைவர் கிளம்பினார். அரைமணி நேரம் கழித்து என்னை அழைத்துக் கொண்டு ஒரு ஆசிரமம் சென்றார். அங்கே சிறு குழந்தைகள், முதியவர்கள் என பலர் இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து சிறிது நேரம் பொழுதை கழித்தவர் தன்னிடம் இருந்த பணத்தை அங்கே இருந்த ஆசிரம நிர்வாகியிடம் தந்தார். கணினியில் வேகமாக தட்டிப் பார்த்துவிட்டு சாமி, இதோட உங்க அன்பளிப்பு தொகை பதினைந்து  லட்சம் என்றார். கணக்கு நான் கேட்கலையே என்றார் சாமியார். ஆசிரமத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்டார். நானும் அவர்களுடன் சாப்பிட்டேன்.

இரண்டு மணிக்கெல்லாம் குடிசைக்கு திரும்பியவர் அங்கே இருந்த கயிற்று கட்டிலை என்னிடம் காட்டி அதில் தூங்கு என சொல்லிவிட்டு அவர் ஒரு துண்டினை கீழே விரித்து மர நிழலில் அப்படியே உறங்கினார். நான் சாமியார் ஆக வேண்டும் எனும் ஆசையில் அவர் சொல்வதையெல்லாம் தலையாட்டி பொம்மை போல செய்து கொண்டிருந்தேன்.

நான் விழித்து பார்த்தபோது சாமியார் தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார். மணி ஐந்து ஆகி இருக்கும். நானும் வேகமாக எழுந்து நிறைய நேரம் உறங்கிவிட்டேன் என்றேன். உறங்கத்தானே செய்தாய், உடலுக்கு மனதுக்கு நல்லதுதானே என சொல்லிவிட்டு என்னை களை எடுக்க சொன்னார். நானும் எடுத்தேன். சரியாக மணி ஆறு ஆனதும் என்னை வீட்டுக்குப் போக சொன்னார். நான் தங்கி இருக்கிறேன் என சொன்னேன். சரி என சம்மதம் சொன்னார். அன்று மாலை குளித்து முடித்த பின்னர்  மறுபடியும் பழங்கள், காய்கறிகள் என சாப்பிட தந்தார். வேறு உணவு கிடைக்குமா என கேட்க மனம் வரவில்லை. சாப்பிட்டுவிட்டு அமர்ந்து இருந்தோம். அப்போது விளக்கு ஒன்றை கொண்டு வந்து அத்துடன் ஒரு நோட்டு புத்தகம் தந்தார். இதை படிக்க ஒரு மணி நேரம் ஆகும், படித்து முடி என தந்தார். சற்று தள்ளி அமர்ந்து அவர் எதையோ எழுத ஆரம்பித்தார்.

எனக்கு கொடுத்த நோட்டு புத்தகத்தின் தலைப்பு வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ்வது எப்படி என்று எழுதி அதற்கு கீழே வேலுச்சாமி என்று போட்டு இருந்தது.


A saint is one who has been recognized for having an exceptional degree of holiness, sanctity, and virtue. (Wikidpedia)

A real saint is who preserves the nature and support the humanity (Radhakrishnan)