தமிழகத்தில் மட்டும் இந்த 'தலைவா' எனும் தமிழ் திரைப்படம் வெளியாகவில்லையாம். அதற்கான காரணங்கள் இவையிவையென 'பொழுதுபோக்கு' ஊடகங்கள் வரிசைபடுத்திக் கொண்டே இருக்கின்றன.
முதல் காரணம் தலைவா திரைப்படம் வெளியிடப்பட்டால் தியேட்டர்களுக்கு குண்டு வைப்போம் என ஒரு 'சித்தரிக்கப்பட்ட' மிரட்டல் செய்தி. அதைத் தொடர்ந்து தியேட்டர்களுக்கு எங்களால் பாதுகாப்பு தர முடியாது என கைவிரித்துவிட்ட 'பம்மல்' தமிழக காவல்துறை. அதைகண்டு பயந்து நடுங்குவதை போல 'பாவலா' செய்த திரையரங்கு உரிமையாளர்கள்.
இரண்டாவது காரணம் தலைவா படத்தின் கதாநாயகன் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் விடுத்த 'நான் அண்ணா, என் பையன் எம் ஜி ஆர்' எனும் அறிக்கை.
மூன்றாவது காரணம் 'அதிமுக வெற்றி பெற அணில் போல உதவினோம்' எனும் கதாநாயகனின் 'மறக்கப்பட்டு பின்னர் தூசி தட்டப்பட்ட' தன்னடக்கமான அறிக்கை.
ஆனால் பாவம் தயாரிப்பாளர். திரைப்படத்தின் மூலம் தமிழகத்தின் அரசியல் தலைவிதியை மாற்றி அமைத்தவர் எம் ஜி ஆர். அதன் காரணமாகவே திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் அடைபவர்கள் தமிழக முதல்வர், இந்திய பிரதமர் எனும் கனவு காண்கிறார்கள். தன்னை ஒரு தலைவனாக சித்தரித்துக் கொண்டு கனவு காண்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது?
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தான் தலைவனாக வேண்டும் எனும் ஒரு சிறு எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் பலர் நாட்டிற்கு நல்லது செய்ய தலைவன் எனும் பதவி ஒரு அவசியமான ஒன்று என்றாகிறது. குடும்பத் தலைவர், ஊராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர், ஒன்றிய தலைவர், மாவட்ட தலைவர் இப்படி தலைவர் எனும் தலைவா கோசம் எங்கும் ஒலித்து கொண்டுதானிருக்கிறது.
இப்படி இத்தனை தலைவர் என இருந்தாலும் அரசியல் தலைவர் எனும் 'தகுதியற்ற' சிறப்பு தலைவர் பதவி ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி அதற்கு உண்டு. காங்கிரஸ், பாஜக திமுக, அதிமுக என கட்சிகளின் தலைவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.
இப்படி தலைவர் ஆசை விஜய்க்கு இருப்பது என்னவோ உண்மைதான். மக்களுக்கு உதவ வேண்டும் எனும் தனது கனவு சாத்தியப்பட நினைக்கிறார். திரைப்படத்தில் இருந்து எண்ணற்றோர் அரசியல் உலகுக்கு வந்து வெற்றி பெற முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாகவே கமல் அரசியல் உடம்புக்கு ஆகாது என ஒதுங்கி கொண்டார், ரஜினி அரசியல் மனசுக்கு ஆகாது என அறிக்கையுடன் நிறுத்திக் கொள்கிறார். ஆனால் விஜயகாந்த், விஜய டி ஆர் போன்றோர் எல்லாம் ஒரு கட்சியை நடத்தி அந்த கட்சிக்காக அங்கீகாரம் தேடி தேடி தங்களை தொலைத்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு அரசியல் கட்சி நடத்த ஏகோபித்த மக்கள் ஆதரவு மட்டும் அல்லாது பணம் வேண்டும், ஆள் பலம் வேண்டும், மிக மிக முக்கியமாக அடிமைகள் வேண்டும். இப்படி விசுவாசிகள் எனும் கொத்தடிமைகள் இல்லாத பட்சத்தில் ஒரு கட்சியானது சர்வ வல்லமை பொருந்தியதாக ஆகாது. இதையெல்லாம் தயார் செய்ய மனோதிடம் வேண்டும். எம்ஜி ஆர் செய்து காட்டினார், ஜெயலலிதா அதை பின்பற்றுகிறார். ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவின் நிலை ஒரு கேள்விக்குறிதான். அதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கின்றன.
தமிழகத்தில் ஓரளவுக்கு எல்லாமே தன்னிறைவு அடைந்ததாக இருக்கிறது. மின்சாரம் இல்லை என்றாலும் மின்சாரம் இல்லாமல் வாழப் பழகி கொள்ளும் மனப்பக்குவம் உண்டு. சகித்து கொள்ளும் மனோபாவம் அதிக அளவில் தமிழக மக்களிடம் உண்டு. இல்லையெனில் ஒரே மாதிரியான திரைப்படங்களை மீண்டும் மீண்டும் கண்டு ரசிப்பது எப்படி? மீண்டும் மீண்டும் அதே அரசியல் கட்சிகளை மாற்றி மாற்றி தேர்ந்தெடுப்பது எப்படி? எனவே இங்கே தமிழகத்தில் ஒரு போராளி அவசியமில்லாமல் போகிறது.
விஜய் நடித்த தலைவா எனும் திரைப்படத்தில் முதலும் கடைசியுமாய் 'Time to Lead' என்பது ஒரு அச்சுறுத்தலான விசயமாக தமிழக அரசுக்கு இருந்து இருக்குமா என்பது சந்தேகமே! ஆனால் படைப்பாளிகளை ஒடுக்க வேண்டிய அவசியம் என்ன! அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை கேவலப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்து இருக்கின்றன. அவை எல்லாம் கண்டு கொள்ளாமல் இந்த படத்திற்கு அப்படி என்ன ஒரு தடை. ஆந்திரா, கேரளா, வேறு நாடுகள் என இந்த திரைப்படம் திரையிடப்பட்டு இருக்கிறதே. பாவம் இரண்டு விஜய்கள். தமிழக மக்கள் ஒரு 'முற்பாதி பொழுபோக்கு' படத்தை முழுவதுமாக புறக்கணிக்க செய்துவிட்டார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
தலைவா எனும் திரைப்படத்தின் கதை ஒரு அரசியல் களத்தை சார்ந்தது. அது 'உடன் இருந்து குழி பறிப்போர்' வகையை சார்ந்தது. 'துரோகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கதை வடிவம் இது' மும்பையில் தொடங்கி மும்பையில் முடிகிறது. முதல் பாதி காதல் கலந்த நகைச்சுவை, இரண்டாம் பகுதி பழிவாங்கல் படலம். துப்பாக்கிகள் பெருகி போன இந்த புவியில் இன்னும் கத்திகளுக்கு கொண்டாட்டம் தான்.
கதாநாயகிகள் பொய் சொல்லும் பேர்வழிகள் என்பதை எப்போதுதான் தமிழ் சினிமா மாற்றி கொள்ளுமோ? சகிக்க முடியவில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள்போன்றே ஆஸ்திரேலியாவில் கூட இருக்கத்தான் செய்கிறதாம். கடல் கடந்து வணிகம் திரட்ட சென்றவர்கள் 'கும்பலாக' காதலுக்கு அலைவது கேலி கூத்து.
அடேங்கப்பா, ஆஸ்திரேலியாவில் ஒரு அரைகுறை ஒரு ஹோட்டல் நடத்தி அதன் மூலம் கதாநாயகன் மனம் மயக்கி, அவரது தந்தையை வசப்படுத்துவது எப்படிப்பட்ட 'கிரியேட்டிவ் மூவ்'! மங்காத்தா எனும் திரைப்படத்தில் அஜீத் தனது காதலி மற்றும் தந்தையை ஏமாற்றுவார். இந்த கதையில் வேசம் போட்டு விஜய் ஏமாற்றபடுவார். எல்லாம் சரிதான். விசயங்களை சொல்லும் விதம் தான் படைப்பாளிகளிடம் வேறுபடுகிறது.
அண்ணா! அன்னா ஹசாரே! படத்தின் தொடக்கத்தில் பல தலைவர்கள் பெயர் வருகிறது, அதில் போராளிகள் எல்லாம் வருகிறார்கள். அவர்களது பெயர்களை படிக்கும்போதே உடலில் 'ஜிவ்வென' உணர்ச்சி மேலிடுகிறது. எப்படிப்பட்ட தலைவர்கள், எப்படிப்பட்ட போராளிகள் அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்த உயர்ந்த உள்ளங்கள் அவை, ஆனால் இப்போதைய தலைவர்கள் மக்களை ஒடுக்கவே தலை எடுக்கிறார்கள்.
விஜய், உங்களுக்குள் மக்களை வழி நடத்த வேண்டும் ஒரு எண்ணம் இருப்பின் அதற்குரிய உரிய முயற்சிகள் எடுத்தாக வேண்டும். படத்தில் காட்டியது போன்று நிஜ வாழ்வில் கூட சித்தப்பர்கள் எட்டப்பர்களாக இருப்பார்கள். எப்படி இருப்பினும் தலைவா எனும் பட்டம் பெரிய தலைவலிதான்.
அந்த தலைவலியை தாங்கி கொள்ளும் சக்தி இருப்பின் 'Time to Lead...'