Friday, 1 February 2013

லைப் ஆஃப் பை - வாழ்வியல் விசித்திரம்

கிறிஸ்துமஸ் கால விடுமுறையில் எங்குமே செல்ல இயலாத சூழல். லண்டன் நகரிலேயே பொழுது கழிந்தது. பனி விழும் என எதிர்பார்த்து பனி விழவே இல்லை. அதற்கு பின்னர் இந்த ஜனவரி மாதம் பனி விழுந்தது வேறு கதை.

கிறிஸ்துமஸ் முன்னர் ஒரு படம் பார்க்கலாம் என சென்றோம். படத்தின் பெயர் லைப் ஆப் பை என முடிவு எடுத்தோம். படம் பற்றிய கதை என எதுவும் அறிந்திருக்கவில்லை. சில பாகங்கள் பாண்டிச்சேரியில் எடுத்து இருக்கிறார்கள் என கேள்விபட்டதுடன் சரி. முப்பரிமாணத்தில் பார்க்கலாம் என முடிவு எடுத்து சென்றது நன்றாகவே இருந்தது.

முதலில் படம் ஆரம்பித்த போது ஒரு பாடல். அதுவும் தமிழில். கண்ணே கண்மணியே! நான் பொதுவாக படங்களில் பாடலை கொஞ்சம் கூட விரும்புவதில்லை. கதையின் போக்கினை பாடல்கள் சிதைக்கின்றன என்றே கருதுவேன். ஆனால் முதன் முதலில் தொடங்கிய பாடல், அதை காட்சி அமைத்த விதம் என ஒரு அந்த பாடல் முடியும் வரை பிரமிப்பாக இருந்தது. இத்தனை தத்ரூபமாக காட்சி எவரேனும் அமைத்து இருப்பார்களா என அந்த பாடல் முடியும் வரை நினைத்து கொண்டே இருக்க செய்தது. தமிழ் கண்டு மனம் மிகவும் பூரிப்பு அடைந்தது.

இந்த படத்தின் கதை என பாண்டிச்சேரியில் தொடங்கி அதற்கடுத்து கடலிலேயே பல காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் அயர்ச்சி ஏற்பட்டது உண்டு. கதை வேகமாக நகராதா என எண்ணம் வந்து சென்றது.

அதுவும் படத்தில் ஒரு இயற்கை காட்சி, அதுவும் இரவில் ஒளிரும் தாவரங்கள் என காட்டிய இடம் பிரமிக்க வைத்தது. இந்த இடம் உண்மையிலேயே இருக்கிறதா என ஏக்கம் கொள்ள வைத்துவிட்டது. அத்தனையும் தாண்டி படத்தின் இறுதி காட்சி வாழ்க்கையின் பெரிய அனுபவத்தைச் சொல்லி சென்றது. படம் முடிந்து வெளிவருகையில் உணர்வுப்பூர்வமான படம் என்று சிலர் கண்களை கசக்கி கொண்டிருந்தார்கள். சிலர் இருக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லாமல் அமர்ந்து கொண்டிருந்தார்கள். மிகவும் உணர்வுப்பூர்வமான படம் என்று வயதான இருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள். நானும் அந்த படத்தின் கடைசி காட்சியில் பிரமித்து போனேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இனம் புரியாத ஒரு இறுக்கம் மனதில் எட்டிப் பார்த்தது.

பன்னிரண்டு சிறுவனுடனும், பத்து வயது சிறுமியுடன் படம் பார்த்தோம்.  படம் எப்படி என்று அவர்களிடம் கேட்டேன். இட்ஸ் ஓகே என்றார்கள். படத்தின் அர்த்தம் புரிகிறதா என்றேன். புரியவில்லை என்றார்கள் வாழ்வியல் தத்துவம் சொன்ன திரைப்படம் இது என புலி பற்றிய கதாநாயகனின் எண்ணவோட்டத்தை விளக்கினேன். விளங்கியது போன்றே தலையாட்டினார்கள். கடைசியில் கதாநாயகன் சொன்ன விசயம் வாழ்வியலில் விசித்திரம்.

எனது வாழ்வில் எத்தனையோ திரைப்படங்களை பார்த்தது உண்டு. ஆனால் எப்படி இந்த படத்தில்  முதல் பாட்டு ஒரு பெரிய பிரமிப்பை உருவாக்கியதோ அதைப்போல இறுதி காட்சியும்  பிரமிப்பை உருவாக்கியது.

இந்த படம் ஒரு புத்தகத்தின் தழுவல் என தெரிந்து அந்த புத்தகம் பற்றி தெரிந்து கொண்டபோது கிட்டத்தட்ட ஐந்து புத்தக நிறுவனங்கள் அந்த புத்தகத்தை வெளியிட மறுத்துவிட்டன. அதன் பின்னர் அந்த புத்தகம் வெளிவந்து சிறந்த பரிசும் பெற்றுவிட்டது. எனது அக்கா மகன் இந்த புத்தகத்தை முன்னரே படித்து இருந்ததாக சொன்னான். நீ எல்லாம் நாவல் ஆசிரியர், முதலில் இது போன்ற புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தவும் பட்டேன். வாசிப்பு அனுபவம் மிக மிக குறைவுதான்.

இது போன்ற கதைகள் நான் இந்தியாவில் இருந்தபோது நிறையவே கேள்விபட்டது உண்டு. அத்தனை நம்பிக்கைக்கு உரிய கதைகள் அவை. இந்த படத்தில் கேட்கப்படும், இது எதற்காக நடந்தது, எனக்கு மட்டும் எப்படி நடந்தது போன்றே பல விசயங்கள் பகிரப்படுபவை.

சிறு வயதில் கேட்ட ஒரு கதை என்னை இன்னமும் பிரமிப்பில் வைக்கும்.

சந்தோசமாக இருந்த போது
நான்கு கால் தடங்கள் இருந்தது
இரண்டு உன்னுடையது
மற்ற இரண்டு இறைவனோடது

துன்பமாக இருந்தபோது
இரண்டு கால் தடங்களே இருந்தன.
இரண்டு இறைவனோடது

அப்படியெனில் நான் எங்கே?
உன்னை இறைவன் தூக்கி கொண்டு நடந்தான்!

இதுதான் அந்த கதை. இறைவனின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அப்படித்தான் வாழ்க்கையை நடத்தி கொண்டு வருகிறர்கள. எனக்கு இது மிக மிக பிடித்து போனது.

ஒரு நிகழ்வு - அதில் இரண்டு கதைகள்.

இந்த உலகம் உருவானது குறித்து கூட உண்டு.

இறைவன் உருவாக்கிய உலகம். இதில் நம்புமாறு எந்த ஒரு விளக்கங்களும் இல்லை. ஆனால் சுவராஸ்யமாக இருக்கும். இருப்பினும் பைபிள், குரான், பகவத் கீதை என எல்லாம் தோற்று போவது போலவே தோற்றம் அளிக்கின்றன.

பெருவெடிப்பில் உருவாக்கிய உலகம். இதில் காஸ்மிக் கதிர்கள், ரெட் ஷிப்ட் என பல விசயங்கள் உண்டு.

இந்த இரண்டில் எது உண்மை என கேட்டால் ஏழு பில்லியன் மக்களில் பலரும் இன்னமும் இன்ஷா அல்லா என்றும், இயேசுவே பரம பிதாவே என்றும், நமோ நாராயணா என்றும் ஓம் நமசிவாயா என்றும் இறைவன் உருவாக்கிய உலகம் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

லைப் ஆப் பை - இறைவன் பெருமை சொல்லும் மாபெரும் காவியம்.

இப்படி ஒரு நல்ல படத்தை பார்த்த கண்கள் மற்றொரு படம் பற்றியும் நாளை எழுதும். அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் என்ன!

Thursday, 31 January 2013

தமிழக முதல்வர் மிகவும் பயப்படுகிறார்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விடும் என தமிழக முதல்வர் மிகவும் பயப்படுகிறார். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டே  ஒரு திரைப்படத்தை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அவர் அறிவித்ததை கண்டு பெரும்பாலான அமைப்புகள் மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டு இருக்கின்றன.

இனிமேல் சட்ட ஒழுங்குதனை  சீர்குலைய செய்வோம் என ஒவ்வொருவரும் அவரவருக்கு வேண்டியதை நிறைவேற்ற அரசுவிடம் மனு கொடுக்க ஆயத்தமாகிறார்கள் என அதிகாரபூர்வமான செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

திருடர்கள் அமைப்பு:  
உறுப்பினர்கள்: நான்கு கோடி 

எங்களை எந்த தொந்தரவும் செய்யாமல் திருட வழி வகுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால்  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விடும் அபாயம் இருக்கிறது.

சாதி கட்சி:
உறுப்பினர்கள்: ஏழரை கோடி 

தமிழகத்தில் உள்ள அனைத்து சாதியினர்களும் இனிமேல் வன்னியர்கள் என்று அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்காத பட்சத்தில் எங்கள் உறுப்பினர் கணக்கு பொய்யாகும் சாத்தியம் உள்ளது, அதோடு மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு சாலைகளில் குவிக்கப்படும்.

அரசியல் கட்சி: 
உறுப்பினர்கள்: கணக்கு காட்டப்படவில்லை 

இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் அரசு கவிழ வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக ஆளும் கட்சி என போஸ்டர்கள் ஒட்டப்படுவதுடன் தனித்திராவிட நாடு அமைக்கப்படும்.

மொடாக்குடியர்கள் அமைப்பு:
உறுப்பினர்கள்: ரேஷன் கார்டு இல்லை. 

வீட்டுக்குழாயில் தண்ணீர் பதிலாக மதுபானம் வரவேண்டும்.

இன்னும் இன்னும் தொடரும்...

'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்'


Wednesday, 30 January 2013

இதுவே தருணம் - ரஜினி, கமல் இணைந்து புதிய கட்சி


''குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று 
உண்டாகச் செய்வான் வினை'' 

தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை – தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று – ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும். (‘கைத்து உண்டாக ஒன்று செய்வான்  எனக் கூட்டுக. ‘ஒன்று’என்பது வினையாதல் ‘செய்வான்’ என்றதனாற் பெற்றாம்.

குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும்என்பதாம். - பரிமேலழகர் 

பொருள் வல்லமையுடன், அதிகார பிரயோகம், துஸ்பிரயோகம்  கொண்டு தான் செய்ய நினைக்கும் நல்ல செயல்கள் முதற்கொண்டு தரித்திர செயல்கள் வரை செய்து முடிக்கும் தமிழக அரசின் பல செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உரியவைகளே. இது திருவாளர் கருணாநிதி ஆட்சியிலும் சரி, திருவளர்ச் செல்வி ஜெயலலிதா ஆட்சியிலும் சரி நடந்தேறும் அவலங்களே. 

சமீபத்தில் தனது பிறந்தநாள் விழாவில் திரு. ரஜினி பேசும்போது அரசினை குற்றம் சொல்லாதீர்கள், அதிகாரிகளை குற்றம் சொல்லுங்கள் என்று பேசி இருந்தார். அரசு என்றால் என்ன?, அதிகாரிகள் என்றால் என்ன? அதிகாரிகள் தங்களது பணிகளை சரியாக செய்தால் அரசு சரியாக நடக்கும். ஆனால் அரசின் கைப்பாவைகள், அல்லக்கைகள் தான் அதிகாரிகள் என்பது நாடறிந்த உண்மை. 

நீதித்துறை கூட அரசின் கையில், பொருள் நிறைந்தோர் வளைக்கும் வளைப்பில் தான் உள்ளது என்பதை எவர் சொல்லித் தெரிய வேண்டும்? ஒரு ரூபாய் சம்பாதித்தவர் எல்லாம் கோடி சொத்துகளுடன், சகல சௌகரியங்களுடன் எப்படி வசிக்க முடிந்தது, முடிகிறது? மற்ற பணம் எல்லாம் பிறர் போட்ட பிச்சை என்றா எடுத்துக் கொள்வது? 

திரு ரஜினி சில மாற்றங்களுக்காக காத்து கொண்டிருக்கிறார் என்கிறார். மாற்றங்களை நாம் தான் உருவாக்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் பணபலம் மட்டும் போதாது, அரசியல் பலமும் மிகவும் அவசியம். 

ஒரு திரைப்படத்தின் மூலம், ஒரு படைப்பின் மூலம்  என்ன சாதித்துவிட முடியும்? ஒரு படைப்பாளி தனது பையினை நிரப்புவதுடன், அல்லது பையினை காலியாக்குவதுடன்  அவனது பணி முடிந்துவிடுகிறது. சமூக அக்கறை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். வெற்று அறிக்கைகள், வெறும் போராட்டங்கள் நடத்தி காண்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என எவர் இவர்களுக்கு சொல்லித் தந்தது? 

திரு. ரஜினி, கட்சி ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது, அல்லது உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனும் நோக்கம் உடைய ஒருவர் தைரியமாக கட்சி ஒன்றைத்  தொடங்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. 

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற 
இடுக்கண் இடுக்கட் படும் 

அடுக்கி வரினும் – இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் – தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க ‘அடுக்கி வரினும்’ என்றார். ‘அழிவு’ என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)

எத்தனைத் தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறிய முயற்சித்தால் அந்த துன்பமே துன்படும். 

திரு. கமல் தயாரித்து, இயக்கி, நடித்து தமிழகத்தில் வெளிவரத் துடிக்கும் ஒரு விஸ்வரூபம் திரைப்படம், சமூகப் பிரச்சினையில் இருந்து  அரசியல் பிரச்சினையாகிக் கொண்டு வருகிறது. சக மனிதர்களை மதிக்காதவர்கள் மனிதர்கள் அல்ல. ஒரு படைப்பாளி, அந்த அந்த சமூகத்தின் நிலையை அப்படியே படம் பிடித்து காட்டுபவன். சில நேரங்களில் ஓர வஞ்சகமாகவும் படைப்பாளி நடந்து கொள்வது உண்டு. ஒரு படைப்பு விமர்சனத்திற்கு உள்ளாகலாம், ஆனால் தடை எல்லாம் அவசியம் இல்லை. எந்த ஒரு படைப்பையும் பார்க்கும் உரிமையோ, அல்லது புறக்கணிக்கும் உரிமையோ படைப்பை பார்ப்பவர்களுக்கு உண்டு. அப்படியிருக்க சிறுபான்மையினர் என கூறிக்கொண்ட  அரசின் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. ஒரு சமூகத்தின் உணர்வுகள் குறித்தான அக்கறை அரசுக்கு இதுவரை இருந்ததாக தெரியவில்லை. இப்படியெல்லாம் நடந்து கொண்ட ஒரு அரசு குறித்து மக்களுக்கு சற்று வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பான்மையினரின் வெறுப்பு அரசுக்கு இனிமேல் தான் புரிய வரும். 

இந்த ஒரு பிரச்சினைக்காக திரு. கமல் நாடு விட்டு நாடு எல்லாம் போக வேண்டியது இல்லை. ரசிகர் மன்றங்கள் எல்லாம் நற்பணி மன்றங்கள் என மாற்றிய பெருமை திரு. கமலுக்கு உண்டு. தனக்கு அரசியல் தெரியாது என்றும்  சினிமா உலகம் மட்டுமே தெரியும் என்பவர். சமூக பிரச்சினைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுப்பவர்.

இவருக்கு அரசியல் தெரியாது என்பதால், இவர்களது நற்பணி மன்றத்து உறுப்பினர்கள் ரஜினியின் புதிய கட்சிக்கு முழு ஆதரவு கொடுக்க இவர் சம்மதிக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு மிக சிறந்த ஆட்சி அமைய, மக்கள் யாவரும் நலம் பெற இந்த மாற்றத்தை இப்போதே உருவாக்க வேண்டும். இதுவே தருணம். 

வாழ்க தமிழ். வாழ்க தமிழகம். 

----

இப்படியாக எழுதி வைத்துவிட்டு, ஒரு தேநீர் கோப்பையுடன் தோட்டத்து பகுதியில் நடந்து கொண்டிருந்தேன். 

தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவரிடம், விவசாயம் எல்லாம் எப்படி போகுது என்றே வினவினேன். 

என்னய்யா பண்ண சொல்றீங்க, நீங்க படிச்சி மேல்நாட்டுக்குப் போயீட்டீங்க, எப்போவாச்சும் வரீங்க இங்க மழை தண்ணீ இல்லாம, கரண்ட் இல்லாம நாங்க அன்றாடம் கஷ்ட ஜீவனம் நடத்துறோம் என்றார். 

இதற்கு எல்லாம் அரசு தானே காரணம் என்றேன். 

அட நக்கல் பண்ணாதீங்கயா, எல்லாமே நாம தான் காரணம். நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வைச்சது யாரு? வெளில போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டது யாரு? 

ஒரு படைப்பாளியான எனக்கு அவரின் கேள்விகள் புதிய அர்த்தங்கள் தந்து கொண்டிருந்தன.

அதுதான் மாற்றங்கள் நாம ஏற்படுத்தலாமே என்றேன். 

தெரியாத பேயை விட, தெரிஞ்ச பேயே மேல் தானே என்றார். 

சரியென தலையாட்டிவிட்டு மிகவும் யோசனையுடன் வீட்டுக்குள் நுழைந்தேன். குன்றேறி யானைப்போர்... மேசையில் எழுதி வைக்கப்பட்டு இருந்த கட்டுரை தற்போது குப்பைத் தொட்டியை அலங்கரித்து கொண்டு இருந்தது.  மக்கள் எப்போது மாற்றம் கொள்வார்கள் என்றே நான் யோசிக்கத் தொடங்கினேன்.