Thursday, 24 January 2013

இவனுங்க தீவிரவாதிங்கதான்

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்த  சில அமைப்புகள் முதலில் இதை, இஸ்லாமிய தீவிரவாதம்  தடை விதிக்க ஆர்ப்பாட்டம் நடத்தட்டும்.

விஸ்வரூபம் எனும் பெயரை அரபியே மொழி வடிவத்தில் அமைத்து இருக்கிறார் கமல். கமல் தெரிந்தே தான் எல்லாம் செய்து இருக்கிறார். கமல் குறி வைத்து இருப்பது ஒசாமா போன்ற வகையறாக்களை, சாதாரண முகம்மதுகளை அல்ல.

கமல்... எதற்கு அந்த அமைப்புகளுக்கு எல்லாம் படம் போட்டு காட்டுறீங்க? அவர்கள் என்ன தணிக்கை குழுவில் உறுப்பினர்களா? 

தமிழக அரசு தனது கோமாளித்தனத்தினை மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறது.படம் பார்த்து கலவரம் பண்ணும் அளவுக்கு மதி கெட்டு போனதா தமிழகம்? கலவரம் பண்ணுவதற்கு என அறிக்கை வேந்தர்கள் இருக்கிறார்களே! அவர்களை அல்லவா முடக்க வேண்டும்! இதெல்லாம் இருக்கட்டும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்து தமிழக அரசே! 

ஒரு சில முஸ்லீம்களின் நடவடிக்கையினால் மொத்த முஸ்லீம்களுக்கும் கெட்ட பெயர் என்பதை சராசரி முஸ்லீம்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் முஸ்லீம்கள் அல்லாதவர்களிடம் இது குறித்து கேட்டால் முஸ்லீம்கள் பற்றிய கண்ணோட்டம் வேறு மாதிரிதான் இருக்கிறது. 

சமீபத்தில் லண்டனில் உள்ள ஒரு இடத்தில் சில முஸ்லீம்கள் 'இது எங்க ஏரியா, இப்படி உடை உடுத்தாதே, இங்கே குடிக்காதே என போவோர் வருவோர்களிடம் வம்பு செய்து இருக்கின்றனர்'. இப்படி இவர்கள் நடந்து கொள்வதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறார்கள். இதுதான் கமல் சொன்ன கலாச்சார தீவிரவாதம். நிறைய நபர்கள் இங்கிலாந்து அரசின் உதவித் தொகையின் மூலம் பிழைப்பு நடத்தி வருபவர்கள். 'உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யும் கோமாளிகள்' இருக்கும் வரை ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். 

சல்மான் ருஷ்டியை மிரட்டிய அதே கும்பல்களின் வழித் தோன்றல்கள் தான் இவர்கள் எல்லாம். படைப்பாளியை மதம் என்கிற எந்தவொரு மதம் பிடித்த பெயரில் மிரட்டும் எவரும் தீவிரவாதிதான். 

'நான் எழுதியதை நீங்கள்  தடை செய்ய துடித்தால் நீங்கள் மதிக்கும் மத நூல்களை எல்லாம் தடை செய்ய நான் எதற்கு துடிக்க கூடாது என ஒவ்வொரு படைப்பாளியும் உள்ள குமுறல்களுடன் தான் இருப்பான்' 

இப்பொழுதெல்லாம் எதற்கு எடுத்தாலும் கைது என முண்டாசு கட்ட ஆரம்பித்து விட்டார்கள். கருத்து சுதந்திரம் என்பதன் சுதந்திர அளவு எதுவென புரியவில்லை.

கமல், தான் ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி மற்றும் ஒரு வியாபாரி என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறார். பீத்தினா ஊத்திக்கும் என்பது அவருக்கு தெரியாமலில்லை. ஆனால் திறமை இருக்குமிடத்தில் கர்வம் இருக்கத்தான் செய்யும். கர்வம்தனை வெளிக்காட்டாமல் பணிவுடன் பாசாங்கு போடுபவரைத்தான் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது. தீவிரவாதிகளை விட மிதவாதிகளாக வேசம் போடுபவர்களைத்தான் உலகம் கொண்டாடி வருகிறது. 

வாளால் வெட்டுபவனை விட 
வார்த்தைகளால் வெட்டுபவன் 
மிக மிக கொடியவன்!

உலகம் இப்போது பழைய புதினத்தின் அடிப்படையில் புதிதாக வரலாறு எழுதிக் கொண்டு இருக்கிறது. 

விஸ்வரூபம் - திரைப்படம் வெளியாகும் முன்னரே ஒரு வெற்றி சித்திரம் தான். சிலருக்கு கண்களில் எரிச்சல் தந்து இருக்கிறது, சிலருக்கு கண்களில் குளிர்ச்சி தந்து இருக்கிறது. 

படத்தின் கதை இந்த வரிகளில் ஒளிந்து இருக்கிறது. கணவனின் பழைய வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் முழுரூபம் 

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் புதுரூபம் 

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் சுயரூபம் 

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா!


விஸ்வரூபம் 

அடுத்து எவராவது 'ஔரங்கசீப்' என்ற படம் எடுக்கட்டும்! 

Thursday, 17 January 2013

இன்று எனக்கு பிறந்த நாள்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்.

-----

எனது ஜனன குறிப்பில் இப்படித்தான் எழுதப்பட்டு இருப்பதாக ஞாபகம். 1975ம் வருடம் தை மாதம் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 12.10 மணிக்கு ஜனனம். பூரட்டாதி நான்காம் பாதம், மீன ராசி, துலாம் லக்னம் என்றெல்லாம் குறிப்பினை படித்த அனுபவம் உண்டு. இன்று எனக்கு முப்பத்து எட்டு வயது. இத்தனை வயதாகி விட்டதா என்ற எண்ணம் எழாமல் இல்லை.

அதிகாலையில் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று சொன்ன எனது மனைவிக்கும், எனது பையனுக்கும் ஒரு புன்னகை சிரிப்புடன் நன்றி சொல்லிவிட்டு இத்தனை வருடங்களை ஒரு சின்ன அசைவு போட்டபோது அம்மாவும், அப்பாவும் மட்டுமே முதலில் கண்களில் தெரிந்தார்கள். சிறிது நேரம் பின்னர் மீண்டும் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மனைவியிடம்

அன்னையை இழந்து தவித்து நின்றபோது
அன்னையாய் வந்தவள் நீ

என்று ஒரு கவிதை என அவரிடம் சொல்ல, எனது அழகு பற்றி வர்ணனை கவிதை சொல் என கேட்டார். இப்படி கடந்த பதினான்கு  வருடங்களாக என்னிடம் கேட்டாலும்

நீ ஒரு காதல் கவிதை
உனக்கு எதற்கு ஒரு பொய் கவிதை

என்றே இன்னமும் சமாளித்துக் கொண்டிருக்கிறேன். 

இம்முறை பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் கிடையாது. ஆனால் திடீரென எனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உறவினர்களுடன் சேர்ந்து இந்த லண்டன் வந்த பதினான்கு வருட காலங்களில் அத்திப்பூத்தாற்போல் நடந்தது உண்டு. இந்தியாவில் இருந்தவரை பிறந்தநாள் கொண்டாடியதாக நினைவில் இல்லை, ஒரே ஒருமுறை கல்கத்தாவில் படித்து கொண்டிருந்தபோது நண்பர்களுக்கு இனிப்பு வாங்கி தந்ததாக நினைவு.

இந்த இனிய நன்னாளில், எந்நாளும் போல இவ்வுலகம் செழிப்புற்று இருக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Wednesday, 5 December 2012

அதர்மபுரி - சாதீய அரசியல்

தர்மபுரியில் ஏற்பட்ட கலவரத்தின் மூலம் பாதிக்கப்பட்ட சக மனிதர்களுக்கு எமது அனுதாபங்களும், இந்த கலவரத்தின் மூலம் உயிர் இழந்த சக மனிதர்களுக்கு எமது இரங்கல்களையும் தெரிவித்துக்  கொள்கிறோம். 

சக மனிதர்களின் மனதில் அமைதியும் நற்சிந்தனையும் வளரட்டும் என்றே வேண்டுகிறோம். 
-------------------------------

வேறொரு ஊரை சார்ந்த ரெட்டியார் சாதியச் சேர்ந்தவன் எங்கள் ஊருக்கு விடுமுறைக்காக வந்தபோது, எங்கள் ஊர் சக்கிலியர் சாதி பெண்ணின் கையை பிடிச்சி இழுத்து விட்டான் என்று ஊரெல்லாம் அன்று ஒரே பேச்சாகத்தான் இருந்தது. பக்கத்து கிராமங்களில் இருக்கும் குடும்பமார்கள் என சொல்லப்படும் சாதி வகையைச் சார்ந்தவர்கள், மூப்பனார் சாதி வகையைச் சார்ந்தவர்கள் அந்த ரெட்டியார் பையனை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள், அவனை அடித்து துவைக்க வேண்டும்  என இந்த மூன்று கிராமங்களுக்கு அன்று கிராமத் தலைவராக இருந்த எனது மாமாவிடம் அவர்கள் வந்து சொன்னபோது, எனது மாமாவோ என்ன ஏது என விசாரிக்கலாம் என சொல்லியிருக்கிறார். அதற்கு அவர்கள், இதே உங்க வீட்டு பெண்ணை கையை பிடிச்சி இழுத்து இருந்தா இப்படித்தான் விசாரணை பண்ணனும்னு சொல்லுவீங்களோ என கேட்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த ரெட்டியார் பையன், தான் அவ்வாறு செய்யவில்லை என்றே சொன்னதாகவும், அவன் அவனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டதால் பிரச்சினை பெரிதாகாமல் போனது என்றே நினைவில் இருக்கிறது. இது கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் முன்னர் எனது கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம்.

நான் எனது வாழ்நாளில் இந்த சாதிய வேறுபாட்டு கருமங்களை எல்லாம் ஒரு பொருட்டாக பார்த்ததே இல்லை. கிரிக்கெட் விளையாடும் போது இந்த சாதி பேதங்கள் எல்லாம் உடன் விளையாடும் பையன்கள் பேசும்போது கூட எரிச்சலாக இருக்கும். எதற்கு இப்படி பிரிவினை பார்க்கிறார்கள் என்றே தோணும். அவர்கள் எங்களை சாமி என அழைப்பதுவும் கூட எனக்கு மிக மிக வித்தியாசமாகவே இருந்தது. ஆனால் அவர்களைத்தான் தோட்ட, காட்டு வேலைகளுக்கு எல்லாம் அழைத்துச் செல்வார்கள், இருப்பினும் ஏதோ ஒருவித வேறுபாடு இருந்து கொண்டேதான் இருந்தது. சாதி விட்டு சாதி திருமணம் செய்வது கூட அவ்வளவாக எனது கிராமத்தில் நடந்தது இல்லை. தேவர் சாதி பையனை காதலித்த ஒரே குற்றத்திற்காக தனது மகளை எரித்து அந்த குற்ற உணர்விலேயே இறந்து போன தாய் எனது கிராமத்தில் தான் இருந்தார். கல்லூரியில் இருந்து விடுமுறை காலத்தில் ஊருக்கு வந்தபோது இந்த செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த பையனும் சரி, பெண்ணும் சரி எனக்குத் தெரிந்தவர்கள்தான். இங்கே சாதி பிரச்சினை என்பதைவிட கௌரவ பிரச்சினை தான் பெரிதாக இருந்தது. ஆனால் எனது கிராமத்தில் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டவர்கள் பற்றி அரசல் புரசலாக செய்தி வெளிவரும் போது, அந்த சம்பந்தப்பட்ட கள்ளத் தொடர்பில் இருப்பவர்கள் எல்லாம் வேறு வேறு சாதியை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். கள்ளத் தொடர்பு வைத்திருப்பவர்கள் எல்லாம் வெட்கம் கெட்ட மனிதர்கள் என்றே நினைத்து இருக்கிறேன். இன்றைய கால சூழல் சற்றே மாறி இருக்கிறது எனலாம், இருப்பினும் இன்னும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகமாகவே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இன்னமும் பல இடங்களில் அவர்களைப் பற்றிய கண்ணோட்டம் பெரிதாக மாறிவிட்டதாகத் தெரியவில்லை.

என்னுடன் படித்த நண்பர்கள் என்னிடம் மிகவும் சகஜமாகவே பழகுகிறார்கள். சாதி வேறுபாடு எல்லாம் நான் பார்த்தது இல்லை என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் குறித்தான பார்வை அவர்களிடம் இன்னமும் மாறாமல் இருக்கிறது, அது மரியாதை நிமித்தமாக இருக்கலாம் என்றே கருதுகிறேன். இப்படிப்பட்ட கிராமத்தில் சாதி பெயரை சொல்லி எவரும் பெரிய அளவில் அரசியல் செய்தது இல்லை. பெரிய கலவரங்கள் எதுவும் ஏற்பட்டது இல்லை என்றே நினைவில் இருக்கிறது.

தர்மபுரி - இந்த ஊரின் பெயரில் என்ன இருக்கிறது எனில் தர்மம் நிறைந்த நகரம் என்பதுதான். ஆனால் அங்கேதான் அதர்மம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த தர்மபுரி பற்றி கேள்விப்பட்டபோது ஏதோ வழக்கமான பிரச்சினை என்றுதான் இருந்தேன். இந்த பிரச்சினையின் தீவிரம் என்னவென பார்த்தபோது ஒரு உயர் சாதி என சொல்லப்படும் சமூகம், தலித் சமூகம் மேல் கொண்டிருக்கும் வெறித்தனமான வன்மம் என்றேதான் எண்ணத் தோணுகிறது. இந்த தர்மபுரி ஒரு காலத்தில் பிரிவினை அற்ற இடமாகத்தான் திகழ்ந்து வந்து இருக்கிறது. ஆனால் சாதி அரசியல் இன்று  தர்மபுரியை தங்களது சொந்த நலனுக்கு  சூறையாடி இருக்கிறது  என்பதை மறுக்கவே இயலாது. எல்லா இடங்களிலும் சின்ன சின்ன பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.  அந்த பிரச்சினையின் தீவிரம் என்னவென என்பதை அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் தான் உண்மை நிலவரம் புரியும். ஆனால் நமது மக்கள் உணர்ச்சி வசப்படும் நிலையில் தான் இருக்கிறார்கள். இந்த உணர்ச்சிவயப்படுதலை இந்த சாதி அரசியல் பண்ணுபவர்கள் தங்களுக்கு சாதகமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.

ஒரு பையன் குடும்பம், ஒரு பெண்ணின் குடும்பம். பிரச்சினை பெண் வீட்டார், பையன் வீட்டார். இத்தோடு முடிய வேண்டிய விசயம் எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினை பல வருடங்களாக புகைந்து கொண்டேதான் இருந்து இருக்கிறது. உயர் சாதி என சொல்லப்படும் சமூகம் மரம் வெட்டும் செயலைத்தான் முதலில் இந்த பிரச்சினையில் கும்பலாக தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாமல் திரைப்படங்களில் காட்டப்படுவது போல தலித்  சமூகத்தின் வீடுகளை எல்லாம் சூறையாடி இருக்கிறார்கள். இது மனிதர்களின் பயமுறுத்தல் செயல் என்றே சொல்லலாம். இனிமேல் இப்படி செய்வீர்களா என அவர்களின் மனதில் ஒரு தீராத காயத்தை ஏற்படுத்துவதுதான் அவர்களின் நோக்கம். இந்த துயர சம்பவத்திற்கு காவல் துறையினரும் உடன்போயிருக்கிறார்கள் என்கிறது தலித் மக்கள் இனம். பொருளாதாரத்தில் தாழ்வுநிலையில் இருக்கும் சமூக மக்களின் கண்ணீரை எவருமே துடைப்பாரில்லை, துடைக்க தயாராகவும் இல்லை. தனது சாதிக்காரன் முன்னுக்கு வந்தாலே வயிறு எரியும் நிலையில் இருக்கும் மக்கள் முன்னர் தாழ்த்தப்பட்டோர் என அடையாளம் கொண்டவர்கள் முன்னேறி நிற்பது எப்படி? இதற்காகவே அவரவருக்கு இருக்கும் அடையாளத்தை உடைத்து வெளியில் வாருங்கள் என சொன்னால் எவர் கேட்க போகிறார்கள்?

இந்த சூழலில் சாதிய கணக்கெடுப்பு வேறு! அனைத்து சாதி அமைப்புகள் கூட்டம் வேறாம். வெவ்வேறு நாடுகளுக்கு எல்லாம் சென்றாலும் சாதி அடையாளம் தொலைவதும் இல்லை. நமது ஊரில் தோன்றிய இந்த சாதி ஒழிய இன்னும் பல வருடங்கள் ஆகலாம். மேலும் இந்த கலவரத்தின் முழு விபரங்களை பத்திரிகைகள் விவரித்து கொண்டு இருக்கலாம். இன்னும் இன்னும் பலர் மேடைகள் போட்டு பேசிக்கொண்டு இருக்கலாம். இது போன்ற அவலங்களை எல்லாம் தாண்டி மனித சமூகம் எழுச்சி நடை போட்டு கொண்டுதான் இருக்கிறது, ஆனால் தன்னுள் ஒரு சாதி, இனம், மொழி, என அடையாளத்தை பச்சை குத்திக் கொண்டு திரிகிறது. அப்படி இருக்கும் வரை வேறுபாடுகள் என்றேனும் ஒருவகையில் எவரேனும் ஊதிவிட்டு வேடிக்கை பார்க்கத்தான் செய்வார்கள். அதற்கு எந்த காரணம் வேண்டுமெனிலும் ஒரு காரணம் ஆகலாம். தர்மபுரியில் ஏற்பட்ட பிரச்சினை மெதுவாக தமிழக பிரச்சினையாக மாறாமல் இருக்கட்டும். அதற்கு சாதி அரசியல் பண்ணுபவர்கள் சற்று ஒதுங்கி நின்றால் நல்லது.

மேலும் விபரங்கள் அறிய: தர்மபுரி கலவரம்