ஒரு படைப்பாளியின் நோக்கம் என்ன? ஒரு திரைப்படத்தின் நோக்கம் என்ன? சமூக ஆர்வலர்களாக தங்களை காட்டிக் கொள்ள முயற்சிக்கும் படைப்பாளிகள் என்னதான் செய்ய முயற்சி செய்கிறார்கள்? ஒரு திரைப்படத்தின் நோக்கம் வணிக ரீதியாக லாபம் அடைவது ஒன்றுதான். மற்றபடி எல்லாம் சமூகத்திற்கு இதை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம், அதை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம் என சொல்லிக்கொள்வது எல்லாம் வெறும் கண்துடைப்புதான். எந்த ஒரு படைப்பாளியும் வெட்கம் கொள்ள வேண்டியது, வெட்டியாக படம் பிடிப்பதும், வெட்டியாக எழுதுவதும் தான்.
சமூக அவலங்களை தங்களது படைப்புகள் மூலம் துடைத்து எறிந்து விடலாம் என்றோ, சமூக அவலங்களை படம் பிடித்து காட்டுகிறேன் என தங்களது திறமைகளை பறைசாற்றிக் கொள்ள இவர்கள் கையாள்வது ஒரு ஊடகம். அவ்வளவுதான்.
சினிமா என்பது ஒரு தொழில். அதில் சேவை எல்லாம் செய்ய முடியாது. ஆனால் சேவை செய்வது போல நடிக்கலாம். நடித்து மக்களை கண்ணீர் விட வைக்கலாம். 'உச்' கொட்ட வைக்கலாம். படம் பார்த்து கெட்டுப் போனேன் என சொன்னவர்கள் ஏராளம். படம் பார்த்து திருந்தினேன் என சொன்னவர்கள் மிக மிக குறைவு. ஒரு குடும்பம் திருந்தினாலே போதும் என்கிற முனைப்பு எல்லாம் திரைப்படங்களுக்கு சரிபட்டு வராது. அப்படி என்னதான் இந்த திரைப்படங்கள் சொல்ல வருகின்றன.
அரசு பள்ளி ஒன்றின் இயலாத தன்மையை, ஒரே ஒரு ஆசிரியர் அடியோடு மாற்றி கட்டுகிறார். இது திரைப்படத்தில் மட்டுமே சாத்தியம் என்பதை எல்லாரும் அறிவார்கள். அதைத்தான் இந்த சாட்டை எனும் திரைப்படம் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் செய்து முடித்து இருக்கிறது. படத்தைப் பார்க்கும் போது ஒரு கற்பனையான உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் அவலக் காதல். இதைத் தாண்டி படிக்க வேண்டும் எனும் வேகம் பள்ளி மாணவர்களிடம் வர வேண்டும் என்பதை இந்த சாட்டை கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லி இருக்கலாம். அது இந்த கற்பனை உலகத்துக்கு இன்னமும் வலிமை சேர்த்து இருக்கும்.
அத்தனை மாணவர்கள் திருந்த ஒரு ஆசிரியர் மட்டும் பொறாமை உணர்வுடன் வலம் வருகிறார். ஆஹா மிகவும் சாமர்த்தியமாக கடைசியில் மனம் மாறுகிறார். படம் ஹீரோயிசம் சொல்லி சென்றதே தவறே அடிப்படை பிரச்சனைகளை தொட்டு செல்லாதது பெரும் குறைதான்.
நான் படித்த பள்ளி அரசு பள்ளிதான். அந்த ஊரில் தனியார் பள்ளி ஒன்றும் உண்டு. இரண்டு பள்ளிக்கும் எப்போதுமே ஒரு போட்டி இருக்கத்தான் செய்யும். தனியார் பள்ளியின் சதவிகிதம் அரசு பள்ளியின் சதவிகிதத்தைவிட கொஞ்சம் கூடத்தான். அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கு மாணவர்களை அடிக்கும் உரிமை இருந்தது. மாணவர்கள் ஆசிரியர்களை எதிர்க்கும் தன்மை அடியோடு குறைவு. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பயப்படத்தான் செய்வார்கள். போராடி படித்தும் அந்த பள்ளியின் முதல் மாணவன் பெற்றது வெறும் எழுபது இரண்டு சதவிகிதமே. இதற்கு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றம் சொல்வது எப்படி சரியாகும் என்றே இன்றும் நினைத்து பார்க்கிறேன். நான் படித்து களைத்ததை விட விளையாடி களைத்த நேரம் அதிகம்.
தன்னார்வம் இல்லாத எவரும் முன்னேறியதாகவோ, தம்மில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவராகவோ இதுவரை எந்த வரலாறும் எழுதி வைத்தது இல்லை.
இந்த திரைப்படம் பலருக்கு தன்னார்வம் ஏற்பட வைக்க முயற்சி செய்து இருக்கிறது. ஆனால் தன்னில் ஒரு தன்னார்வம் இல்லாமல் போனதுதான் பெரும் குறை. சினிமா எப்போதும் சினிமா என்ற வட்டத்திற்குள் மட்டுமே இருக்கட்டும். அது சமூகத்தை திருத்திவிடும் எனும் கனவு காண்போர்களுக்கு விழும் சாட்டை அடி பெரிய வலியைத்தான் தரும்.
படம் பார்த்த பின்னரும் திருந்தாத சமூகம் கண்டு இந்த படத்தை இயக்கிய, நடித்த, தயாரித்த இயக்குனர்களுக்கு வலிக்குமா?!