காயத்ரியின் அப்பா என்னை பயத்துடன் பார்த்தார். எனது அதிர்ச்சியை மறைத்துவைத்து கொண்டு மன சுமையை இறக்கி வைக்க முடியாமல் நோட்டு புத்தகங்களை வைத்துவிட்டு முகம் அலம்ப சென்றேன். காயத்ரி என் பின்னால் வரவில்லை.
கை கால் முகம் அலம்பிவிட்டு 'அம்மா இவர் எப்போ வந்தார்?' என்றேன். 'ஒரு அரை மணி நேரம் ஆகி இருக்கும் முருகேசு என காபிதனை கையில் தந்தார். காயத்ரியோட அக்கா இன்னும் வரலையா என்றேன். 'எப்பவும் போலதான் வருவா, இன்னைக்கு மட்டும் என்ன வேகமாகவா வரப்போறா என அம்மா சொன்ன வேளையில் காயத்ரி வந்து நின்றாள். 'இந்தாம்மா காபி'' என காயத்ரிக்கும் கொடுத்தார் எனது அம்மா.
'அப்பா எதுவும் சாப்பிட்டாரா'' என்றாள் காயத்ரி. 'காபி வைச்சி கொடுத்தேன். வெளியில சாப்பிட்டேன் அப்படின்னு சொல்லிட்டார் என்றார் அம்மா. தேங்க்ஸ்மா என்று காயத்ரி சொல்லிவிட்டு அவளது அப்பாவிடம் சென்றாள். நானும் பின் தொடர்ந்தேன்.
'என்னப்பா இமயமலை போக மனசு இல்லையா'' என்றாள் காயத்ரி. என்னை பார்த்தவர் என்ன சொல்வது என புரியாமல் விழித்தார். 'காயத்ரி என்னை மன்னிச்சிரும்மா'' என்றார் அவர். நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'என்ன தப்பு பண்ணினீங்க, உங்களை மன்னிக்க சொல்றீங்க'' என்றாள் காயத்ரி. நிலைமையை சுதாரித்து கொண்டவராய் உங்களை எல்லாம் விட்டுட்டு இமயமலை போகிறேன்னு போனது தப்புதான்மா என்றார். இதையும் நான் எதிர்பார்க்கவே இல்லை. காயத்ரிக்கு விசயம் தெரியாது என நினைத்துவிட்டாரோ? அல்லது காயத்ரி தெரியாதது போல இருப்பது அவருக்கு வசதியாக போவ்யிட்டதோ என நினைத்து கொண்டு நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னை பார்க்கும்போது மட்டும் அவர் குற்ற உணர்வில் இருப்பது போல் நான் உணர்ந்தேன்.
நான் அவரிடம் எதுவுமே பேசவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் அப்பா வந்தார். 'அடடே வாங்க வாங்க, குடும்ப வாழ்க்கையில இருந்தவங்க எல்லாம் அப்படி லேசா எல்லாத்தையும் விட்டுற முடியாது என்றவர் அவரிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். காயத்ரியின் அக்கா அவரது அப்பாவை பார்த்து இனிமே இந்த பக்கமே வரமாட்டீங்கன்னு நினைச்சேன் என சொல்லிவிட்டு போய்விட்டார்.. எனக்கு புரியாமலே இருந்தது. பின்னர் நான் மொட்டை மாடிக்கு சென்றுவிட்டேன். காயத்ரியும் மேலே வந்தாள்.
முருகேசு எனக்கு ஒரு உதவி பண்ணுவியா என்றாள். என்ன என்றேன்? என் அப்பாவை பத்தி என்கிட்டே சொன்னதை நீ யார்கிட்டயுமே சொல்லலைன்னு என் அப்பாகிட்ட சொல்வியா என்றாள். என்னை பொய் சொல்ல சொல்றியா என்றேன். ம்ம் என்றாள். சிரித்தேன். The world is created by a chance. A chance that can be explained in many ways. நான் அவ்வாறு சொன்னதும் இனி உன் இஷ்டம் என்றாள். காயத்ரி கவலைப்படாதே, நீ சொன்னமாதிரி நடந்த்துக்கிறேன் என்றேன். காயத்ரியின் அக்கா கோபத்துடனே இருந்தது கண்டேன். 'ஒருமாதிரியா இருக்கீங்க, வேலையில பிரச்சினையா'' என்றேன். அதெல்லாம் ஒண்ணுமில்லை, இவரை பாத்ததுல இருந்து ஒருமாதிரியா இருக்கு என்றார். நான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
அன்று இரவு காயத்ரியின் அப்பாவிடம் நான் எவரிடமும் எதையும் சொல்லவில்லை என சொன்னதும் என்னை கைகள் எடுத்து கும்பிட்டார். அவரிடம் என்ன நடந்தது ஏது நடந்தது என விசாரிக்க மனம் வரவில்லை. நேராக தூங்க சென்று விட்டேன். ஆனால் தூக்கம் வரவில்லை. Human beings are erroneous subjects without having any proper objects. நினைப்பு எல்லாம் ஆங்கிலத்தில் வந்து தொலைந்தது. ஏதேதோ நினைவுகள் வந்து தூங்கிய விதமே நினைவில் இல்லை.
காலையில் எழுந்து கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருக்கையில் காயத்ரியின் அப்பா நினைவுக்கு வந்தார். அம்மாவிடம் கேட்டேன். அவர் அஞ் சரை மணிக்கே கிளம்பி போய்ட்டார் என்றார். அப்பாவிடம் சென்று கேட்டேன். அப்பா சிரித்து கொண்டே எழுதி கொடுத்த சொத்து பத்திரம் எல்லாம் வாங்கிட்டு போய்ட்டார் என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. காயத்ரிக்கு விசயம் தெரிந்ததும் கண்கள் கலங்கியது. காயத்ரியின் அக்காவுக்கு பயங்கர கோபம் வந்தது. எதுக்கு சார் அந்த பத்திரம் எல்லாம் எங்களை கேட்காம கொடுத்தீங்க என்றார்.
என்னம்மா சொல்ற என்றார் என் அப்பா. என் அப்பா எங்க குடும்பத்துக்கு நல்லவர் இல்லை என்றார் அவர். இதைக் கேட்ட காயத்ரி அதிர்ச்சியானதை கண்டேன். உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன சார் என்றவர் அங்கே எவரையும் கவனத்தில் கொள்ளாமல் சார் என் அப்பாவுக்கு இன்னொரு பெண்ணோட தொடர்பு இருப்பதா என் அம்மா என்கிட்டே சொல்லி இருக்காங்க. இதை நானே நேரா பார்த்து உறுதிபடுத்திகிட்டேன். ஆனா காலக்கொடுமை.. எல்லாம் கைக்கு மீறி போயிருச்சி. அதனால எதுவுமே தெரியாம நான் இருக்க வேண்டியதா போச்சு. எங்க அம்மா இறந்தப்பறம் எங்க நிலைமையை நினைக்கவே முடியல. நீங்க தான் உதவிக்கு வந்தீங்க. எதிர்பாரா விதமா எங்க அப்பா எங்களுக்கு சொத்து எழுதி வைச்சார். இமயமலை போறேன்னு சொன்னதும் எனக்கு அவர் எங்க போகப்போறாரு அப்படின்னு தெரியும். சரி போகட்டும் அப்படின்னு விட்டுட்டேன் என்றவர் இப்போ இந்த சொத்து எல்லாம் எடுத்துட்டு போகத்தான் வந்திருக்கிறதை நினைச்சா அருவெறுப்பா இருக்கு சார் என்றார்.
'சே இதை என்கிட்டே எதுக்கும்மா முன்னமே சொல்லலை. விசயம் தெரிஞ்சு இருந்தா இப்படி பண்ணி இருப்பேனா? என ஆறுதல் சொன்னார். அம்மாவுக்கு கோபம் வந்தது. இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் என பாடல் பாட .ஆரம்பித்துவிட்டார். காயத்ரி மட்டும் அமைதியாக இருந்தாள். நாங்க உங்களுக்குனு இருக்கோம் என அம்மா அவர்கள் இருவரையும் அணைத்து கொண்டபோது எனக்கு சற்று மகிழ்வாகவே இருந்தது.
கல்லூரிக்கு நாங்கள் கிளம்பினோம். Courtship behaviour sometimes are not followed based on customs by some human beings என்றேன். முருகேசு எனக்கு எப்படி இருக்கு தெரியமா என்றாள். எப்படி இருக்கு என்றேன். உன்னை ஓங்கி அறையலாம் போல இருக்கு என்றாள். உன்னோட அப்பாவின் தப்புக்கு நான் எப்படி பொறுப்பு என்றேன். நீ பொறுப்பு இல்லை, ஆனா என்னோட உணர்வுகளை நீ கேலி பண்றமாதிரி சர்காஸ்டிக்கா பேசறது சரியா என்றாள். அப்படின்னா உன் அப்பா மேல கோவம் இல்லையா என்றேன். அவள் கண்கள் கலங்கி இருந்தது.
முருகேசு, காதல் அப்படிங்கிறதோட அர்த்தம் தெரியுமா என்றாள். அவளை பார்த்து கொண்டே இருந்தேன். சொல்லு என்றாள். நான் காயத்ரி என்றேன். பதில் சொல்லு என்றாள். சொல்லிட்டேன். என்னைப் பொருத்தவரைக்கும் என் காதலுக்கு அர்த்தம் நீதான் என்றேன். சாலை என பார்க்காமல் எனது கைகளை இறுக பற்றினாள். இனி என் அப்பா பத்தி பேசவேண்டாம் என்றாள். சரி என சொன்னேன்.
முதல் பாடம் எடுக்க வந்த ஆசிரியரை எனக்கு அத்தனையாக பிடிக்காது. அவர் என்னை நோக்கி என்னை உனக்கு எதற்கு பிடிக்காது என்றார். நான் தடுமாறினேன். சொல்லுப்பா என்றார். சார் என்றேன். சும்மா ஒரு கற்பனைக்கே வைச்சுக்கோ. சொல்லு என்றார். தெரியலை சார் என்றேன்.
என்ன காரணம் என்றே தெரியாமல் ஒருவரை பிடிக்காமல் போவதும், பிடித்துவிடுவதும் என சொல்வது மனிதர்களின் மடத்தனம் என்றவர், எந்த ஒரு காரணமும் இல்லாமல் எந்த ஒரு காரியமும் இல்லை என்றார்.
இதோ இவனுக்கு என்னைப் பிடிக்காமல் போவதற்கு சில காரணங்கள் உண்டு. அதைப்போலவே என்னை பிடிக்கும் எனில் அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்த உயிரினங்களின் எண்ணங்கள் விசித்திரமானவை என்றார்.
சும்மா வெட்டித்தனமா பேசாதீங்க சார் என்றான் எனது அருகில் இருந்தவன். என்னடா சொன்ன? என்றவரின் கோபத்தில் நான் எரிய ஆரம்பித்தேன்.
(தொடரும்)