Saturday, 7 July 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 9

காயத்ரியின் அப்பா என்னை பயத்துடன் பார்த்தார். எனது அதிர்ச்சியை மறைத்துவைத்து கொண்டு மன சுமையை இறக்கி வைக்க முடியாமல் நோட்டு புத்தகங்களை வைத்துவிட்டு முகம் அலம்ப சென்றேன். காயத்ரி என் பின்னால் வரவில்லை. 

கை கால் முகம் அலம்பிவிட்டு 'அம்மா இவர் எப்போ வந்தார்?' என்றேன். 'ஒரு அரை மணி நேரம் ஆகி இருக்கும் முருகேசு என காபிதனை கையில் தந்தார். காயத்ரியோட அக்கா இன்னும் வரலையா என்றேன். 'எப்பவும் போலதான் வருவா, இன்னைக்கு மட்டும் என்ன வேகமாகவா வரப்போறா என அம்மா சொன்ன வேளையில் காயத்ரி வந்து நின்றாள். 'இந்தாம்மா காபி'' என காயத்ரிக்கும் கொடுத்தார் எனது அம்மா.

'அப்பா எதுவும் சாப்பிட்டாரா'' என்றாள் காயத்ரி. 'காபி வைச்சி கொடுத்தேன். வெளியில சாப்பிட்டேன் அப்படின்னு சொல்லிட்டார் என்றார் அம்மா. தேங்க்ஸ்மா என்று காயத்ரி சொல்லிவிட்டு அவளது அப்பாவிடம் சென்றாள். நானும் பின் தொடர்ந்தேன். 

'என்னப்பா இமயமலை போக மனசு இல்லையா'' என்றாள் காயத்ரி. என்னை பார்த்தவர் என்ன சொல்வது என புரியாமல் விழித்தார். 'காயத்ரி என்னை மன்னிச்சிரும்மா'' என்றார் அவர். நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'என்ன தப்பு பண்ணினீங்க, உங்களை மன்னிக்க சொல்றீங்க'' என்றாள் காயத்ரி. நிலைமையை சுதாரித்து கொண்டவராய் உங்களை எல்லாம் விட்டுட்டு இமயமலை போகிறேன்னு போனது தப்புதான்மா என்றார். இதையும் நான் எதிர்பார்க்கவே இல்லை. காயத்ரிக்கு விசயம் தெரியாது என நினைத்துவிட்டாரோ? அல்லது காயத்ரி தெரியாதது போல இருப்பது அவருக்கு வசதியாக போவ்யிட்டதோ என நினைத்து கொண்டு நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னை பார்க்கும்போது மட்டும் அவர் குற்ற உணர்வில் இருப்பது போல் நான் உணர்ந்தேன். 

நான் அவரிடம் எதுவுமே பேசவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் அப்பா வந்தார். 'அடடே வாங்க வாங்க, குடும்ப வாழ்க்கையில இருந்தவங்க எல்லாம் அப்படி லேசா எல்லாத்தையும் விட்டுற முடியாது என்றவர் அவரிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். காயத்ரியின் அக்கா அவரது அப்பாவை பார்த்து இனிமே இந்த பக்கமே வரமாட்டீங்கன்னு நினைச்சேன் என சொல்லிவிட்டு போய்விட்டார்.. எனக்கு புரியாமலே இருந்தது. பின்னர் நான் மொட்டை மாடிக்கு சென்றுவிட்டேன். காயத்ரியும் மேலே வந்தாள்.

முருகேசு எனக்கு ஒரு உதவி பண்ணுவியா என்றாள். என்ன என்றேன்? என் அப்பாவை பத்தி என்கிட்டே சொன்னதை நீ யார்கிட்டயுமே சொல்லலைன்னு என் அப்பாகிட்ட சொல்வியா என்றாள். என்னை பொய் சொல்ல சொல்றியா என்றேன். ம்ம் என்றாள். சிரித்தேன். The world is created by a chance. A chance that can be explained in many ways. நான் அவ்வாறு சொன்னதும் இனி உன் இஷ்டம் என்றாள். காயத்ரி கவலைப்படாதே, நீ சொன்னமாதிரி நடந்த்துக்கிறேன் என்றேன். காயத்ரியின் அக்கா கோபத்துடனே இருந்தது கண்டேன். 'ஒருமாதிரியா இருக்கீங்க, வேலையில பிரச்சினையா'' என்றேன். அதெல்லாம் ஒண்ணுமில்லை, இவரை பாத்ததுல இருந்து ஒருமாதிரியா இருக்கு என்றார். நான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

அன்று இரவு காயத்ரியின் அப்பாவிடம்  நான் எவரிடமும் எதையும் சொல்லவில்லை என சொன்னதும் என்னை கைகள் எடுத்து கும்பிட்டார். அவரிடம் என்ன நடந்தது ஏது நடந்தது என விசாரிக்க மனம் வரவில்லை. நேராக தூங்க சென்று விட்டேன். ஆனால் தூக்கம் வரவில்லை. Human beings are erroneous subjects without having any proper objects. நினைப்பு எல்லாம் ஆங்கிலத்தில் வந்து தொலைந்தது. ஏதேதோ நினைவுகள் வந்து தூங்கிய விதமே நினைவில் இல்லை.

காலையில் எழுந்து கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருக்கையில்  காயத்ரியின் அப்பா நினைவுக்கு வந்தார்.  அம்மாவிடம் கேட்டேன். அவர் அஞ் சரை மணிக்கே கிளம்பி போய்ட்டார் என்றார். அப்பாவிடம் சென்று கேட்டேன். அப்பா சிரித்து கொண்டே எழுதி கொடுத்த சொத்து பத்திரம் எல்லாம் வாங்கிட்டு போய்ட்டார் என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. காயத்ரிக்கு விசயம் தெரிந்ததும் கண்கள் கலங்கியது. காயத்ரியின் அக்காவுக்கு பயங்கர கோபம் வந்தது. எதுக்கு சார் அந்த பத்திரம் எல்லாம் எங்களை கேட்காம கொடுத்தீங்க என்றார். 

என்னம்மா சொல்ற என்றார் என் அப்பா. என் அப்பா எங்க குடும்பத்துக்கு நல்லவர் இல்லை என்றார் அவர். இதைக் கேட்ட காயத்ரி அதிர்ச்சியானதை கண்டேன். உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன சார் என்றவர்  அங்கே எவரையும் கவனத்தில் கொள்ளாமல் சார் என் அப்பாவுக்கு இன்னொரு பெண்ணோட தொடர்பு இருப்பதா என் அம்மா என்கிட்டே சொல்லி இருக்காங்க. இதை நானே நேரா பார்த்து உறுதிபடுத்திகிட்டேன். ஆனா காலக்கொடுமை.. எல்லாம் கைக்கு மீறி போயிருச்சி. அதனால எதுவுமே தெரியாம நான் இருக்க வேண்டியதா போச்சு. எங்க அம்மா இறந்தப்பறம் எங்க நிலைமையை நினைக்கவே முடியல. நீங்க தான் உதவிக்கு வந்தீங்க. எதிர்பாரா விதமா எங்க அப்பா எங்களுக்கு சொத்து எழுதி வைச்சார். இமயமலை போறேன்னு சொன்னதும் எனக்கு அவர் எங்க போகப்போறாரு அப்படின்னு தெரியும். சரி போகட்டும் அப்படின்னு விட்டுட்டேன் என்றவர் இப்போ இந்த சொத்து எல்லாம் எடுத்துட்டு போகத்தான் வந்திருக்கிறதை நினைச்சா அருவெறுப்பா இருக்கு சார் என்றார். 

'சே இதை என்கிட்டே எதுக்கும்மா முன்னமே சொல்லலை. விசயம் தெரிஞ்சு இருந்தா இப்படி பண்ணி இருப்பேனா? என ஆறுதல் சொன்னார். அம்மாவுக்கு கோபம் வந்தது. இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் என பாடல் பாட .ஆரம்பித்துவிட்டார். காயத்ரி மட்டும் அமைதியாக இருந்தாள். நாங்க உங்களுக்குனு இருக்கோம் என அம்மா அவர்கள் இருவரையும் அணைத்து கொண்டபோது எனக்கு சற்று மகிழ்வாகவே இருந்தது. 

கல்லூரிக்கு நாங்கள் கிளம்பினோம். Courtship behaviour sometimes are not followed based on customs by some human beings என்றேன். முருகேசு எனக்கு எப்படி இருக்கு தெரியமா என்றாள். எப்படி இருக்கு என்றேன். உன்னை ஓங்கி அறையலாம் போல இருக்கு என்றாள். உன்னோட அப்பாவின் தப்புக்கு நான் எப்படி பொறுப்பு என்றேன். நீ பொறுப்பு இல்லை, ஆனா என்னோட உணர்வுகளை நீ கேலி பண்றமாதிரி சர்காஸ்டிக்கா பேசறது சரியா என்றாள். அப்படின்னா உன் அப்பா மேல கோவம் இல்லையா என்றேன். அவள் கண்கள் கலங்கி இருந்தது. 

முருகேசு, காதல் அப்படிங்கிறதோட அர்த்தம் தெரியுமா என்றாள். அவளை பார்த்து கொண்டே இருந்தேன். சொல்லு என்றாள். நான் காயத்ரி என்றேன். பதில் சொல்லு என்றாள். சொல்லிட்டேன். என்னைப் பொருத்தவரைக்கும் என் காதலுக்கு அர்த்தம் நீதான் என்றேன். சாலை என பார்க்காமல் எனது கைகளை இறுக  பற்றினாள். இனி என் அப்பா பத்தி பேசவேண்டாம் என்றாள். சரி என சொன்னேன்.

முதல் பாடம் எடுக்க வந்த ஆசிரியரை  எனக்கு அத்தனையாக பிடிக்காது. அவர் என்னை நோக்கி என்னை உனக்கு எதற்கு பிடிக்காது என்றார். நான் தடுமாறினேன். சொல்லுப்பா என்றார். சார் என்றேன். சும்மா ஒரு கற்பனைக்கே வைச்சுக்கோ. சொல்லு என்றார். தெரியலை சார் என்றேன். 
என்ன காரணம் என்றே தெரியாமல் ஒருவரை பிடிக்காமல் போவதும், பிடித்துவிடுவதும் என சொல்வது மனிதர்களின் மடத்தனம் என்றவர், எந்த ஒரு காரணமும் இல்லாமல் எந்த ஒரு காரியமும் இல்லை என்றார். 

இதோ இவனுக்கு என்னைப் பிடிக்காமல் போவதற்கு சில காரணங்கள் உண்டு. அதைப்போலவே என்னை பிடிக்கும் எனில் அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்த உயிரினங்களின் எண்ணங்கள் விசித்திரமானவை என்றார். 

சும்மா வெட்டித்தனமா பேசாதீங்க சார் என்றான் எனது அருகில் இருந்தவன். என்னடா சொன்ன? என்றவரின் கோபத்தில் நான் எரிய ஆரம்பித்தேன்.

(தொடரும்)

Saturday, 26 May 2012

எனக்கு ஏனிந்த வேலை

ந்த சாமியார், ஜோசியர், குறி சொல்பவர் என்பவர்களையெல்லாம் நீக்கிவிட்டேன். ஆச்சரியம் எனக்கு ஒரு வேலை கிடைத்து இருந்தது. ஒரு காலை முழுவதும் செய்த வேலையில் சரியான அலுப்புடன் வீடு வந்து சேர்ந்தேன். என்னால் நம்ப முடியவே இல்லை. நான் காண்பது கனவா, நினைவா எனும் கேள்விக்குறிகள் என்னுள் ஈட்டியாக பாய்ந்து கொண்டிருந்தன. கண்களை கசக்கி கொண்டு பார்த்தேன். ஆனால் பார்த்தது நிஜம் தானா என ஊர்ஜிதம் செய்து கொள்ளவே முடியவில்லை. மீண்டும் கண்களை கசக்கினேன். இப்படி கண்களை கசக்குவதால் மூளைக்கு செல்லும் நரம்புகளும் கசக்கப்படும் என ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்து போனது. 

வார்த்தை குளறியதால் வாய் குளறியது. நீங்கள் பரந்தாமன் நாராயணனா? என்றேன். அங்கே நின்றவர் ஒரு பெரிய புன்னகையை வீசிக்கொண்டு நின்றார். சொல்லுங்கள், நீங்கள் பரந்தாமன் நாராயணனா? என்றேன் மீண்டும். அதே புன்னகை. அருகில் சென்று உடலைத் தொட்டேன். எனது உடல் சில்லென்றது. ''உங்களைத் தொட்டதால் உலகில் உள்ள அனைத்தையும் தொட்டது என்றாகுமோ?'' என்றேன். மீண்டும் புன்னகை. 

''எனது வீட்டில் நீங்கள் எழுந்தருளியிருப்பது எனது பாக்கியம், வாருங்கள் இதோ இந்த நாற்காலியில் அமருங்கள். உனது நாற்காலி எல்லாம் எதற்கு, நானே நாற்காலி செய்து கொள்வேன் என்றெல்லாம் சொல்லி விடாதீர்கள்'' என்றேன். அதே புன்னகை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வீட்டில் வேறு எவரையும் காணவில்லை. பரந்தாமன் நாராயணன் வந்தது தெரிந்தால் அம்மா எத்தனை சந்தோசம் கொள்வார் என அடுப்பங்களைக்கு ஓடினேன். ஏதாவது ஒரு பானையில் ஒரு சோறாவது ஒட்டி இருக்கிறதா என தேடினேன். 'பரந்தாமன் ஒரு சோறு உட்கொண்டால் உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் பசியாறிவிடும் அல்லவா'' என்று பார்க்க சட்டி நிறைய சோறு இருந்தது. இந்த சட்டி நிறைய இருக்கும் சோற்றில் எந்த ஒரு பருக்கையை மட்டும் எடுத்துக்கொண்டு செல்வது என நினைத்துக்கொண்டிருக்க, பரந்தாமன் போய்விடுவாரோ என ஓடி வந்து பார்த்தேன். அதே புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். 

சரி ஆனது ஆகட்டும் என கண்களை மூடி ஒரு பருக்கையை மட்டும் எடுத்துக்கொண்டு பரந்தாமனின் கையில் வைத்தேன். எனது வயிறு நிறைந்தது போலிருந்தது. ஒவ்வொரு சோறாக எதற்கு நாட்கள் முழுக்க பரந்தாமன் உண்ணக்கூடாது என மனதில் நினைத்தேன். அதே புன்னகை. அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய்விட்டது. வீட்டில் எரிந்து கொண்டிருந்த ஒளி அணைந்து போனது. பரந்தாமா, நீங்கள் பேரொளியிருக்க இந்த ஒளி எல்லாம் எதற்கு என்றே சொன்ன பிறகும் இருட்டாகவே இருந்தது. இருளில் நீங்கள் இருப்பது இல்லையோ? என்றே கேட்டேன். இப்போது ஒலி மட்டும் வழி கொண்டிருக்க ஒளி தெளிவின்றி இருந்தது. பரந்தாமன் கொண்டது புன்னகையா இல்லையா என தெரியவில்லை. 

சிறிது நேரத்திற்கெல்லாம் எவர் செய்த புண்ணியமோ மின்சாரம் வந்து சேர்ந்தது, அப்படியெனில் எவர் செய்த பாவத்தினால் மின்சாரம் போனது என்றே நினைத்துக்கொண்டே பரந்தாமா இவ்வுலகில் எதற்காக ஜீவராசிகளைப் படைத்தாய்? அதுவும் என்னை எல்லாம் எதற்காக படைத்தாய்? என்றேன். அதே புன்னகை. எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. இத்தனை பேசியும் எதுவுமே சொல்லாமல் இப்படி மெளனமாக நின்று கொண்டிருக்கிறாரே என மனதில் தைரியம் வரவழைத்துக்கொண்டு வீட்டில் இருந்த பூமாலைகள் எடுத்துகொண்டு வந்து அவரின் கழுத்தில் போட்டேன். மாலை சூடிய மங்கை ஆண்டாள் நான் இல்லை என்றாலும் மரியாதை செலுத்தும் பக்தனாக பரந்தாமன் கண்ணுக்குத் தெரியட்டும் என நினைத்தேன். மீண்டும் அதே புன்னகை. 

ஒரு நன்றியாவது செலுத்தமாட்டாயா என்றே கேட்டேன். அதே புன்னகை. இதோ உலகில் உள்ள பாவங்களையெல்லாம் போக்காமல் எதற்காக பார்த்து கொண்டிருக்கிறாய் என்றேன். மீண்டும் புன்னகை. இன்னும் நின்று கொண்டிருக்கிறீர்களே, அமருங்கள் பரந்தாமா என்றேன். புன்னகை மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. இந்த உலகில் மனிதர்கள் அவர்களுடைய காரண காரியங்கள் படி செயலாற்றி கொண்டிருக்க அவர்களை திருத்துவது மாற்றுவது எல்லாம் அவசியமில்லாத வேலை என்று நினைக்கிறீர்களோ பரந்தாமா? என்ற நான் அவருக்காக ஒரு பாசுரம் பாடினேன். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செல்வித்திரு காப்பு. அந்த பாடலை பாடிய பின்னரும் அதே புன்னகை. எப்படி பரந்தாமா இப்படி இருக்க முடிகிறது உங்களால், பதில் சொல்லுங்கள் பதில் சொல்லுங்கள் என கண்ணை மூடி சத்தம் போட்டேன்.

யாரோ தொட்டு எழுப்புவது போன்று இருந்தது. பரந்தாமன் தான் என்னை தொடுகிறானோ என நினைத்தேன். கண்களைத் திறந்த போது எதிரே அம்மா நின்று கொண்டிருந்தார்.

''மதிய வேளையில் கூட என்னடா தூங்கிண்டு இருக்கே, மணி நாலரையாறது. இன்னைக்குத்தான் கோவில் அர்ச்சகரா வேலைக்கு சேர்ந்தே அதுக்குள்ள இப்படித் தூக்கமா. முகத்தை அலம்பிண்டு நீர் ஆகாரம் குடிச்சிட்டு கோவிலுக்குப் போய் மாலை பூஜை எல்லாம் ஆரம்பி' என அம்மா என்னை எழுப்பி சொன்னதும் 'அம்மா, அம்மா அந்த பரந்தாமன் என் கனவுல வந்தாரும்மா' என சொல்லிக்கொண்டே அடுப்பங்களையில் இருந்த சோற்றுப்பானையை திறந்து பார்த்தேன். ஒரே ஒரு சோறு மட்டும் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்தது.

என் பின்னால் வந்த அம்மாவிடம் இதோ ஒரு சோறு என்றேன். நான் பாத்திரத்தை சரியா கழுவாம வைச்சிட்டேன்டா என்றார். இருக்கட்டுமா என்று ஒரு சோற்றினை மட்டும் எடுத்துக்கொன்டு கோவில் நோக்கி புறப்பட்டேன். உலகில் உள்ள உயிர்களின் பசியை போக்குவார் என்கிற அதீத நம்பிக்கையுடன்.

Friday, 18 May 2012

குருட்டுத்தனமான குரு பெயர்ச்சி

இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படித்தான் வாழ்க்கையில முன்னேறுரது? வழக்கம் போல பழைய புராணம் ஒன்றை கேட்க வேண்டியதாகி போனது. 'என்னை என்ன பண்ண சொல்ற' என பழைய புராணம் ஒன்றை நானும் தான் எடுத்துவிட்டேன். 'ஏதாவது பண்ணி தொலை' அதே சலிப்புடன் அம்மா நகர்ந்து போய்விட்டாள். எனக்கு அப்பாடா என்று இருந்தது.

இந்த முறை கனவு எல்லாம் நம்ப நான் தயாராக இல்லை. எனவே ஏதேனும் சாமியார் ஒருவரை நிஜத்திலேயே சந்தித்து எதிர்கால வாழ்க்கை குறித்து கேட்டு விடலாம் என கிளம்பினேன். நமது ஊரில் சாமியார்களுக்கா பஞ்சம். சாமியாரிடம் என்ன அருள்வாக்கு கேட்பது என மனதில் திட்டம் போட்டு கொண்டேன். இந்த சாமியார்கள் எல்லாம் மிகவும் சக்தி படைத்தவர்கள். அதாவது பிறரை ஏமாற்றும் சக்தி படைத்தவர்கள் அல்லது பிறர் தங்களிடம் வந்து ஏமாறும் நிலையை அறிந்தவர்கள்.

படித்தறிந்த மேதாவிகள் முதற்கொண்டு படிக்காத தற்குறிகள் உட்பட தங்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள கொண்டிருக்கும் ஆவலை அவல் போல மென்று துப்பும் வித்தையை இந்த சாமியார்கள் நிறையவே தெரிந்து வைத்து இருக்கிறார்கள். இதற்காக சாமியார்களை மட்டும் குறை சொல்ல முடியுமா? இது வியாபார உலகம். எது எது வியாபாரம் நன்றாக ஆகுமோ அது அது நன்றாக வியாபாரம் ஆகும்.

உடல் விற்று வாழும் பெண்களை வைத்து நடத்தப்படும் தொழில் கூடத்தான் இவ்வுலகில் பெரும் விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக அந்த பெண்களை குறை சொன்னால் மட்டும் போதுமா? எல்லாவற்றுக்கும் மோகம் கொண்டு திரியும் மனிதர்கள்தான் அத்தனை குட்டிச்சுவர்களுக்கும் முழு காரணம். வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக தவறு செய்பவர்கள் கொஞ்சம் என்றால் தவறு செய்ய வாய்ப்புதனை ஏற்படுத்தி கொண்டு வாழ்பவர்கள் மிகவும் அதிகமாகவே இருக்கிறார்கள். இந்த குட்டி குடைசலை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு ஊரிலேயே பெரிய சாமியார் என சொல்லப்படும் ஒருவரை சந்திக்க சென்றேன். எனது கால கிரகம்.

அப்பாய்ன்ட்மென்ட் இருக்கிறதா என வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து இருந்த ஒருவர் என்னை பார்த்து கேட்டதும் எனக்கு வியர்த்து கொட்டியது. இல்லை, எப்போ சாமியாரை பார்க்கலாம் என கேட்டேன். கையில் இருந்த நோட்டில் வேகமாக பார்த்துவிட்டு அடுத்த மாசம் பத்தாம் தேதி வா என பெயர் விலாசம் எல்லாம் குறித்து கொண்டார். சாமியார் இருக்கும் அறைக்குள் எட்டி பார்த்தேன். ஒரு ஐம்பது நபர்கள் அமர்ந்து இருப்பார்கள். சாமியாருக்கு வந்த கிராக்கி என நினைத்து கொண்டு வெளியே வந்தேன்.

பேசாம சாமியாரா போயிரலாம் போல இருக்கு என எனக்கு நானே பேசினேன். சாமியார் ஆகிறது எத்தனை கஷ்டம தெரியுமா? ஆசைகள் எல்லாத்தையும் துறந்துரனும் என்றார். பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்றார் அவர். என்னய்யா மடத்தனமா பேசற இப்ப எல்லாம் அந்த ஆசைகள் எல்லாம் இருந்தாத்தான் சாமியார் ஆக முடியும். ஊரெல்லாம் சிரிச்சி கேவலப்படுத்தினாலும் ஒய்யாரமா இந்த காலத்தில உலா வரமுடியும் என எனது பங்குக்கு கரிச்சி கொட்டினேன்.

வழியில் ஒரு ஜோசியர் கடை தென்பட்டது. ஜோசியம் எல்லாம் கடை போட்டு விற்பனை பண்ணும் நிலைக்கு வந்து விட்டது. ஜோசியம், பரிகாரம், பூஜை புனஸ்காரம். அப்பப்பா என்ன பண்ணுவதென்றே தெரியவில்லை. எதற்கும் ஜோசியரிடம் ஒரு வார்த்தை கேட்போம் என அங்கே சென்றேன். அங்கே எனக்கு முன்னர் ஒரு ஏழெட்டு நபர்கள் அமர்ந்து இருந்தார்கள். அட பாவி மனுசங்களா என திட்டிவிட்டு பக்கத்தில் இருந்த கடையில் டீ குடித்தேன். அங்கே குருபெயர்ச்சி பலன்கள் என போட்டு இருந்தது. சரி படிப்போம் என பார்த்தேன். இந்த குரு ஒவ்வொரு வருஷம் ஒரு ராசிக்கு பயன் செய்வாராம். இந்த வருஷம் ரிஷபத்தில் இருக்கிறாராம்.

இந்த குருவுக்கு தர மரியாதைய இப்போ எல்லாம் யார் தங்களுடைய ஆசிரியர், தாய், தந்தை என யாருக்கும் தரது இல்லை. கொடுமைடா சாமி. நான் எந்த ராசியா இருந்தா என்ன அப்படின்னு எல்லா ராசிய படிச்சி பார்த்தேன். ஆனா எனக்கு ஒண்ணுமே புரியலை. எதுக்கு இந்த குரு இப்படி குருட்டுத்தனமா இடம் பெயர்ச்சி செய்றார். சரி அப்படின்னு ஜோசியர் கிட்ட போனேன். 

அவர் சொன்னார். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு பணம் அந்தஸ்தை அள்ளி தரும் அப்படின்னு சொன்னார். அவர்கிட்ட ஒரு ஆறு வருசமா அப்படித்தான் சொல்லிட்டு இருக்காங்க ஒன்னும் நடக்கலையே என்றேன். குரு துரோகம் பண்ணாதே அழிஞ்சிருவ அப்படின்னு சொன்னார். 

பணம் அந்தஸ்து இருந்தா எல்லா துரோகம் பண்ணலாம்னு சொல்லிட்டுஉங்க ராசிக்கு என்ன சொல்லி இருக்கு அப்படின்னு கேட்டேன். சகல சௌபாக்கியம் அப்படின்னு சிரிச்சார். 

வெளியே வந்தப்போ வியர்க்க விறுவிறு க்க ஒருத்தர் வேலை செஞ்சிட்டு இருந்தார். என்ன ராசி நீங்க அப்படின்னு கேட்டேன். தெரியாது, எதுக்கு கேட்கறீங்க அப்படின்னு கேட்டார். குரு  பெயர்ச்சிநடந்து இருக்காம் அதான் உங்களுக்கு என்ன பலன் இருக்கும்னு தெரிஞ்சிக்கலாம்னு. 

குரு குருட்டுதனமா பெயர்ச்சி அடைவான். சனி சந்தடிசாக்கில பெயர்ச்சி அடைவான். இப்படி வெட்டித்தனமா சுத்திட்டு திரியற அவங்களே இன்ன இன்ன பலன்கள் தராத வெட்டி கதைகள் பேசிட்டு திரியறாங்களே, உழைக்கிற நாம எவ்வளவு பலன்கள் நமக்கும், நம்மை சுத்தி இருக்கறவங்களுக்கும் தரலாம்னு ஊரெல்லாம் போய் சொல்லு என வியர்வை துடைத்து அவர் வீசி சென்றதில் எனக்குள் இருந்த ஒரு சாமியார், ஜோசியர் என்கிற கற்பனை உலகத்தை முற்றிலும் துடைத்து எறிந்தேன்.