ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் என்ன காரியம் பண்ண இருந்தீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் என்னை நோக்கி கைகள் கூப்பி எங்க இருவரையும் வாழ விடு என்று கெஞ்சினார். எனக்கு கோபம் அதிகமாகவே வந்தது. எத்தனை வருட பழக்கம் என்றேன். சில வருடங்கள் தான் என்றார். சொத்துகள் அனைத்தையும் எழுதி வைத்து விட்டதாக அப்பா சொன்னாரே என்றேன். எனக்கு தேவையானது எடுத்து கொண்டே எழுதி வைத்தேன் என்றார். அவரின் அருகில் இருந்த பெண்ணை பார்த்து இவர் திருமணம் ஆனவர் என்றும் தெரிந்தா இப்படி செய்தீர்கள் என கேட்டேன். அவர் அமைதியாக இருந்தார்.
எனது இந்த செயல்பாடு என்னை கோமாளியாக்கி கொண்டு இருந்தது. இவரை எப்படி வீட்டிற்கு அழைத்து செல்வது என யோசித்தேன். உங்க மனைவியிடம் சத்தியம் செய்தது என சொன்னது எல்லாம் பொய்யா என்றேன். அவர் பேசவில்லை. எப்படி பேசுவார். காயத்ரியின் அம்மா இறந்தபோது இவர் இருந்த நிலை கண்டு நான் எப்படி ஏமாந்துவிட்டேன். எப்படியாவது தொலைந்து போய்விடுங்கள் என சொல்லியபடி அங்கிருந்து கிளம்பினேன். எனக்கு மனம் எல்லாம் பாரமாகி போனது.
வீட்டிற்கு வந்ததும் அம்மா எப்போதும் போல கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். காயத்ரி அருகில் இருந்தாலும் ஒவ்வொரு பொய்யாக சொல்லி கொண்டே இருந்தேன். ஒரு பொய் ஓராயிரம் பொய்தனை இழுத்து கொண்டு வருமாம். எனது நிலைமை மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது. அன்று இரவு காயத்ரியிடம் தனியாக பேசினேன். காயத்ரி இந்த உலகம் எப்படிபட்டது தெரியுமா என்றேன். எப்படிபட்டது என்றாள். பொய்களாலும், புரட்டுகளாலும் நிறைந்தது என்றேன். அது பார்ப்பவர்களின், நினைப்பவர்களின் கைகளில் உள்ளது என்றாள்.
உன் அப்பா பற்றி என்ன நினைக்கிறாய் என்றேன். அவர் மிகவும் தங்கமான்வர் என்றாள். நான் உன் அப்பாவை வேறு ஒரு நிலையில் இன்று பார்த்தேன் என்றேன். அவளுக்கு இது சற்று அதிர்ச்சியாக இருந்து இருக்க கூடும். என்ன என பதட்டத்துடன் கேட்டாள். இன்று நடந்த அனைத்து விசயத்தையும் அவளிடம் அப்படியே ஒப்புவித்தேன். அவளது கண்களில் கண்ணீர் கொட்டியது. உன்கிட்ட சொல்லாம இருக்க முடியல காயத்ரி, என் அம்மாகிட்ட பொய் சொன்னதுக்கு மன்னிச்சிக்கோ, என் அம்மாவுக்கு தெரிஞ்சா பெரிய ரகளையே பண்ணிருவாங்க என்றேன். என்னால நம்ப முடியலை என்றாள் காயத்ரி. சில விசயங்கள் அப்படித்தான் என்றேன்.
அன்று இரவு எல்லாம் அவள் தூங்கியிருக்க வாய்ப்பே இல்லை என்றே எனக்கு பட்டது. எத்தனை அன்பான அம்மா. எத்தனை அன்பாக இருந்து இருக்கிறார் அவளது அப்பா என்றே நினைத்தேன். எதற்கு இந்த மாற்றங்கள் எல்லாம். கல்லூரிக்கு நாங்கள் இருவரும் சேர்ந்தே சென்றோம். அப்போதெல்லாம் சந்தேகம் மனதில் அள்ளிக்கொண்டு போனது. இவர் இப்படி இருப்பாரோ, அவர் அப்படி இருப்பாரோ, சே சே அப்படி எல்லாம் எல்லாரும் இருக்க மாட்டார்கள் எனும் ஆறுதல் வேறு வந்து போனது. கல்லூரியில் காயத்ரியை நிறைய பேர் துக்கம் விசாரித்தார்கள். அவர்கள் விசாரித்த துக்கத்தில் அவளது கண்கள் குளமாகி கொண்டே இருந்தது. அதிலும் அவர் அப்பா பற்றி அவள் அறிந்து இருந்தது அவளுக்குள் பெரும் வேதனையை உருவாக்கி இருந்தது. மதிய வேளையில் சாப்பிட்டு கொண்டு இருந்தபோது 'முருகேசு நீயும் என் அப்பா மாதிரி நடந்துக்குவியா' என்றாள். 'நிச்சயம் நடந்துக்கமாட்டேன்' என உறுதி அளித்தேன். அவளிடம் நீ அந்த பெண்ணை போல நடந்துக்குவியா என கேட்க தோணவில்லை. நான் இறந்தால் காயத்ரியும் இறந்து போக வேண்டும் என வேண்டிக்கொண்டேன். அதே போல காயத்ரி இறந்தால் நானும் இறந்து போக வேண்டும் என கூடுதலாக வேண்டி கொண்டேன்.
எனக்கு பிடித்த ஆசிரியர் பாடம் நடத்த வந்தார். அவர் பாடம் நடத்த ஆரம்பிக்கும் முன்னரே நான் ஒரு கேள்வி கேட்க எழுந்தேன். 'என்னப்பா, வந்ததும் வராததுமா எழுந்துட்ட, வெளியில போறியா' என்றார். 'இல்லை சார், ஒரு கேள்வி' என்றேன்.
பேனை பெருமாள் ஆக்குவது என்றால் என்ன? என்றேன். கலகலவென சிரித்தார். எல்லாரும் என்னை பார்த்து சிரித்தார்கள். 'You made me laugh' என தொடர்ந்து சிரித்தார். என்ன சொல்றார் என புரியாமல் நின்று கொண்டே இருந்தேன். சார், பேனை பெருமாள் ஆக்குவது என்றால் என்ன என திரும்பி கேட்டேன். மறுபடியும் மொத்த வகுப்பும் சிரித்தது. காயத்ரியை கவனித்தேன். காயத்ரி சிரிக்காமல் இருந்தாள்.
'wait' என சொன்னவர் ஒரு பேன் வரைந்தார். 'what is this?' என்றார். பேன் என்றேன். 'ok, well done' என சொல்லிவிட்டு அந்த பேனை அழித்துவிட்டு நாமத்துடன் கூடிய பெருமாள் வரைந்தார். 'what is this?' என்றார். இது பெருமாள் என்றேன். That's it. என மீண்டும் கலகலவென சிரித்தார். சார், நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே என்றேன். சட்டென காயத்ரி எழுந்தாள். 'Can I have your permission to answer this question Sir' என்றாள். தமிழில் சொன்னால் நல்லா இருக்கும் என்றேன். 'Carry on Gayathri' என்றார் ஆசிரியர்.
ஒரு சின்ன விசயத்தை அதாவது ஒன்றுமில்லாத விசயத்தை பெரிது படுத்தி பேசுவதுதான் பேனை பெருமாள் ஆக்குவது என பொருள்படும் என்றாள். உதாரணம் சொல்ல முடியுமா என்றேன். இந்த உலகத்தில் நடப்பது எல்லாம் இயற்கையாகவே நடக்க கூடியது, ஆனால் நடக்கின்ற விசயத்தை 'ஐயோ இப்படி நடந்துவிட்டதே' என அங்கலாய்ப்பது இந்த பேனை பெருமாள் ஆக்குவதற்கு சமம் ஆகும். உதாரணத்திற்கு நீ ஒருவளை காதலிக்கிறாய். அவள் வேறு ஒருவனுடன் ஓடிப்போய்விடுகிறாள். இப்போது நடந்த விசயத்திற்கு என்ன காரணம், அவளுக்கு உன்னைவிட மற்றவனை பிடித்து இருந்தது, அதனால் அவள் சென்றுவிட்டாள். ஆனால் ஊர் உலகம் இதை எப்படி பேசும்? உன்னை பற்றி தவறாக, அவளை பற்றி தரக்குறைவாக ஏதோ ஏதோ காரணங்கள் காட்டி பேசும். இதுதான் பேனை பெருமாள் ஆக்குவது என கூறிவிட்டு அமர்ந்தாள். எனக்கு அவள் காட்டிய உதாரணம் சுர்ரென வலித்தது வகுப்பு மிகவும் மௌனமாக இருந்தது.
'Are you happy with the answer Murugesu?' என்றார். 'No Sir, the example is a disgrace and disgusting. It offended me' என்று அமர்ந்தேன். 'Well, Gayathri did not mean to offend you anyway. She tried to simplify what she understood of this. Don't take it personally. I laughed when you asked this question to me because the same sentence I told my wife today. It is a co-incidence' என்றார். நான் பேசாமல் அமர்ந்து இருந்தேன்.
அன்று அவர் நடத்திய பாடம்தனை கவனிக்க எனக்கு தோணவில்லை. மாறாக காயத்ரி எதற்கு இப்படி பேசினாள் என்றுதான் மனம் அலைபாய்ந்தது. அப்போது ஆசிரியர் சொன்ன ஒரு விசயம்தனை கூர்ந்து கேட்க மனம் எத்தனித்தது.
'This world was created by chance. The chance which occurs very very rarely. There was no reason behind for this happening. It happened at such a rate that no one could ever re-visit. We have various laws of physics to explain this however our biological evidences are showing completely different aspects. Let us consider a Tiger. Now you have to think about this tiger and where its habitat is. Why tiger chose that particular habitat? Think about it and tell me'
மூன்றாவது வரிசையில் இருந்த ஒருவன் எழுந்தான். 'Could you please tell me Sir, does Tiger think why he chose particular habitat?' மொத்த வகுப்பும் அவனையே பார்த்தது. 'Absolutely not' என்றார் ஆசிரியர். 'You may be wrong Sir, did you ask any Tiger'? மொத்த வகுப்பும் கொல்லென சிரித்தது. அவன் கேட்ட கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருந்தது. 'Fabulous Sriram, spot on' என்றார். அப்படியெனில் காயத்ரி ஒன்று நினைத்து சொல்ல நான் ஒன்று நினைத்து விட்டேனோ என நினைத்தேன். காயத்ரியை பார்த்தேன். அவள் அமைதியாகவே இருந்தாள். 'We will continue this' என ஆசிரியர் சென்றார்.
அன்று மாலை காயத்ரியிடம் நீ சொன்ன உதாரணம் எனக்கு ரொம்ப வலிச்சது என்றேன். ஒரு உதாரணத்தை உதாரணமா பார்க்காம இருந்த பாத்தியா அதுதான் பேனை பெருமாள் ஆக்குறது. இப்போ இதையே காரணம் காட்டி நாம இரண்டு பெரும் சண்டை போட்டுகிட்டா நம்ம ரெண்டு பேருக்குத்தான் நஷ்டம். நீ எதுவும் மனசில வைச்சிக்காத என்றாள் காயத்ரி.
ஆனா நீ உன் அப்பாவை பத்தி நான் சொன்னதை இன்னமும் நினைச்சிட்டுதான் இருக்க. அதுதான் அந்த உதாரணம் வந்தது என்றேன். 'தெரியலை, ஆனா என் அப்பாவா அப்படினு என்னால நம்ப முடியல. மத்தபடி நான் என்ன செய்ய முடியும் சொல்லு முருகேசு என சொன்னபோதே அவள் கண்கள் கலங்கியது. காயத்ரியின் அப்பாவை எங்கள் வீட்டில் பார்த்தபோது எனக்கு திடுக்கென இருந்தது.
(தொடரும்)