Thursday, 12 April 2012

மனிதர்களின் தீவு

Isle of Man   

இந்த தீவு அயர்லாந்து கடலில் அமைந்து உள்ளது. கிட்டத்தட்ட நூறாயிரம் மக்கள் மட்டுமே வசிக்கும் இந்த தீவு அழகிய மலைகளால் நிரம்பி உள்ளது. வான்வெளி போக்குவரத்து மிகவும் குறைவு. கடல்படகு மூலம் செல்லும் வழியில் தான் பெரும்பாலோனோர் செல்கிறார்கள். 

வீட்டில் இருந்து இந்த கடல் படகு கிளம்பும் இடத்திற்கு செல்ல ஆறு மணி நேரம் ஆனது. காரினை கடல் படகுதனில் எடுத்து செல்லும் திட்டத்துடனே பயணம் தொடங்கியது. கடல் படகு செல்லும் இடம் அடைந்ததும் சில சோதனைகள் செய்த பின்னர் கடல் படகினில் அனுமதித்தார்கள். சகல வசதிகளுடன் கூடிய கடல் படகு மிகவும் பிரமாண்டமாக இருந்தது. தனிக்கட்டணம் செலுத்தினால், நான்கு படுக்கை வசதி உடைய தனி அறை ஒன்று பெற்று கொள்ளலாம். அதைப்போலவே தனிக்கட்டணம் செலுத்தி நல்ல வசதியான இருக்கையுடன், உணவும் பெற்று கொள்ளலாம். 

மூன்று மணி நேரம் முப்பது நிமிட பயணம். எங்கள் இருக்கைக்கு எதிரே ஒரு எழுபத்தி ஐந்து வயது நிரம்பிய பாட்டியும், அவரது பத்து வயது நிரம்பிய பேத்தியும் அமர்ந்து இருந்தார்கள். புன்னகை மட்டுமே முதலில். அவர்கள் இருவரும் சீட்டு விளையாடி கொண்டு இருந்தார்கள். நாங்கள் காரில் வந்த அலுப்பில் கடல் பரப்பை பார்த்து கொண்டே சென்றோம். அவ்வப்போது உணவு வந்து தந்தார்கள். கிட்டத்தட்ட தீவினை அடைய ஒரு மணி நேரம் இருக்கும்போது அந்த சிறுமி இன்னும் எத்தனை நேரம் என பாட்டியிடம் கேட்டு வைக்க, நான் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என சொன்னேன். அந்த வார்த்தைகள் பல விசயங்கள் பேச உதவியாக இருந்தது. 

அந்த பாட்டியின் கதை வெகு சுவாரஸ்யம். அவரது கணவர் இறந்து போன பின்னர், இந்த தீவில் இருந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டு எட்டு வருடங்களாக பழகி இருக்கிறார்கள். இந்த தீவில் இருந்த அவரின் மனைவியும் இவருடன் பழக்கம் ஏற்படும் முன்னர் காலமாகிவிட்டார். அவர் ஆக்ஸ்போர்ட் வருவதும், இவர் இந்த தீவுக்கு செல்வதுமாக இருந்து இருக்கிறார்கள். பலமுறை அவர் இவரை திருமணம் செய்ய வேண்டும் என சொன்னபோது மறுத்து வந்திருக்கிறார் இவர். ''எத்தனையோ இடங்கள் சுற்றினோம், எனக்குள் காதல் இருந்தது, ஆனால் திருமணம் செய்ய வேண்டும் என சொல்ல மனம் வரவில்லை. எத்தனையோ அருமையான இடங்கள் சென்றபின்னரும், எனது வீட்டின் பின்பக்க தோட்டத்தில் அவரிடம் திருமணம் செய்து கொள்கிறேன் என சென்ற வருடம் தான் சம்மதம் சொன்னேன்'' என அவர் சொன்னதும், அவரின் பேத்தி ''நான் தான் மணமகளின் தோழியாக இருந்தேன்'' என கிளுக்கென சிரித்து கொண்டார். ''அதுவும் திருமணத்தின் போது நான் எல்லா தருணங்களிலும் உடன் இருப்பேன் போன்ற வசனங்கள் எல்லாம் சொன்னபோது நானும் எனது உறவுக்கார பையனும் சிரித்துவிட்டோம்'' என்றார் அந்த சிறுமி. மேலும் ''நானும் திருமணம் செய்து கொள்வேன் ஆனால் இந்த வயதில் அல்ல'' என வாய் மூடி அவர் சொன்னது நகைப்பாகவே இருந்தது. 

தீவு குறித்த விசயங்கள் பல பகிர்ந்து கொண்டார். எதையும் அங்கிருப்பவர்கள் எளிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள் என அச்சம் தந்தார். தாங்கள் வரும்போதெல்லாம் ஒரு மலைப்பகுதிக்கு செல்வதுண்டு என சொன்னார். அப்போது அவர் கீழே விழுந்த கதையும், அவரை ஏற்றி கொண்டு செல்ல ஹெலிகாப்டர் வருவதற்கு ஆயத்தமாக இருந்த விசயம் என நினைவுகளை பகிருந்து கொண்டார். காரில் வருபவர்கள் கடல்படகில் இருந்து வேகமாக சென்று விடலாம் என சொன்னவர் தீவுதனை நெருங்க நெருங்க, தீவு நன்றாக தெரியும், ஆனால் இப்போது தெரியவில்லை என சொல்லிக்கொண்டார். வருடாந்திர பயண சீட்டு வாங்கி வைத்து இருக்கிறாராம். இப்படியாக அவர்களுடன் அந்த நேரம் கழிந்தது. நாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் கடல் படகு நிற்கும் இடத்தில் இருந்து மூன்று மணி நேரம் என எனது மனைவியிடம் விளையாட்டாக சொல்லி வைத்திருக்க, அதை அவரிடம் கேட்டு ஊர்ஜிதம் செய்ய நினைத்தார். அதற்கு அந்த பாட்டி, இந்த தீவுதனையே மூன்று மணி நேரத்தில் சுற்றி விடலாம், எங்கு சென்றாலும், ஒரே இடத்திற்குத்தான் வந்து சேரும் என்றார். 

நிறுத்தம் வந்தது. விடைபெற்றோம். பத்தே நிமிடங்களில் ஹோட்டல் வந்தோம். எங்கே காரை நிறுத்துமிடம் என கேட்க ஹோட்டல் உள்ளே சென்று கேட்டுவிட்டு வெளியில் வந்தபோது கால் வழுக்கி ஒரு கம்பியின் உதவியால் உட்கார்ந்து எழுந்தேன். காலில் அணிந்து இருந்த சூ பயமுறுத்தியது. வீட்டில் கிளம்பியதில் இருந்து இதோடு மூன்று முறை வழுக்கிவிட்டது. எனினும் காரை ஹோட்டல் பின்புறம் நிறுத்திவிட்டு அறைக்கு சென்றோம். அழகிய அறை. தோட்ட அமைப்புடன் கூடிய அறையில் ஒரு பால்கனி என அழகாகவே இருந்தது. நாங்க வந்து சேர்ந்த நேரம் ஆறு மணி என்பதால் மழை தூற்றி கொண்டு இருந்தது. 

இரவு சாப்பிட மில்லினியம் சாகர் எனும் ஒரு இந்தியன் உணவு கடை தேடி சென்றோம். இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்த இடம் தேடி சென்றபோது அங்கே அப்படி ஒரு கடை இல்லவே இல்லை. சிலரிடம் விசாரித்தோம். தெரியாது என்றார்கள். ஒரு இந்தியரை சந்தித்தோம், அவர் சரியாக இடம் சொன்னார். அங்கே சாப்பிட்டுவிட்டு நடந்து வர தாஜ் ரெஸ்டாரன்ட், டேஸ்ட் ஆப் இந்தியா என கடைகள் தென்பட்டன. அடுத்த நாள் காரினை எடுத்து கொண்டு ஒவ்வொரு ஊராக சென்றோம். அந்த பாட்டி சொன்னது போலவே மதியம் இரண்டு மணிக்கெல்லாம் மொத்த தீவையும் சுற்றி விட்டோம். நாங்கள் தங்கி இருந்த இடமே பெரிய நகரம். மற்றவை எல்லாம் சின்ன சின்ன நகரங்களாக இருந்தது. நிறைய பேர் நடந்தார்கள். சைக்கிளில் சென்றார்கள். அற்புதமான மலைகள் கேரளா, ஊட்டி போன்ற இடங்களை நினைவில் கொண்டு வந்தது. பனி மூட்டங்கள் மாலை வேளையில் மலையை தழுவியது. அதில் காரில் சென்றபோது அச்சமாகவே இருந்தது. எப்போதாவது ஒரு கார் செல்லும். மற்றபடி தொடர்பு அற்ற பிரதேசங்களே. அன்று இரவு தாஜ் ரெஸ்டாரன்ட் சென்றோம். பதிவு செய்யாததால் குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என சொல்லி இருக்கை தந்தார். நாங்கள் மட்டுமே இந்தியர்கள். இந்திய உணவை பலரும் ரசித்து சாப்பிட்டார்கள். 

அடுத்த தினம் மிகவும் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றோம். அப்படி செல்லும்போதெல்லாம் சென்ற பாதையே திரும்ப திரும்ப வந்தது. கடற்கரை என சொல்லமுடியாது. எல்லா இடங்களும் கடலை ஒட்டியே இருந்தது. அன்று இரவு டேஸ்ட் ஆப் இந்தியா செல்ல அவர்கள் எல்லாம் பர்மின்காம் பகுதி சேர்ந்தவர்கள் என சொன்னார்கள். இரண்டாம் தினம் சில இந்தியர்களை பார்த்தோம். மிகவும் அமைதியான தீவு. எந்த கொள்ளை, கொலை எதுவும் நடக்காத தீவு என பாட்டி சொன்னது நினைவில் வந்தது. எத்தனையோ ஆபத்தான சாலைகள் எல்லாம் சென்று வந்தாலும் பயம் என்று எதுவும் இல்லை. சின்ன சின்ன சாலைகள் என மொத்த தீவையும் மீண்டும் சுற்றியாகி விட்டது. இனி பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என நினைக்க மேலும் இடங்கள் தென்பட்டன. அடுத்த நாள் நாங்கள் இருந்த இடத்தில் இருந்த நகர்புற கடைகள் பார்த்துவிட்டு முன்னொரு காலத்தில் தண்ணீரில் இருந்து மின்சாரம் உருவாக்க செய்யப்பட மிகப்பெரிய சக்கரம் ஒன்றை கண்டோம். அப்படியே சாக்லேட் தொழிற்சாலை (சிறியது) கண்டோம். பெரிய கோட்டைகள் கண்டோம். அந்த கோட்டைகள் சொன்ன கதைகள் பற்பல. எப்படி மனிதர்கள் தவறு செய்தால் தண்டிக்கப்பட்டார்கள், எப்படி இந்த தீவினை ஆக்கிரமிக்க போர் எல்லாம் செய்தார்கள் எனும் விபரம் எல்லாம் கொட்டி கிடந்தது. இப்படியாக பயணம் முடிவடைய எப்போதும் போல் பிரமிப்பு மட்டுமே மிஞ்சியது. எப்படி மனிதர்கள் இப்படி ஒரு தீவு கண்டுபிடித்து அங்கே வாழ்க்கை நடத்தி, தொடர்ந்து வாழும் விதம்... 

நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் அருகில் இருந்த கடலில் தண்ணீர் அளவு வற்றுவதும், அதிகரிப்பதும் என இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. அந்த தண்ணீருக்கள் கட்டப்பட்ட ஒரு கோட்டைக்கு தண்ணீர் வற்றியதும் பலர் சென்று பார்த்துவிட்டு திரும்பி வந்தார்கள். இரண்டு மணி நேரம் தான். தண்ணீர் அளவு கூடிவிடுகிறது. கடற்கரை என நாங்கள் முதல் நாள் நடந்த இடம், அடுத்த நாள் தண்ணீரால் நிரம்பி இருந்தது ரசிக்கும் வண்ணம் இருந்தது. நான்கு நாள் பயணம் முடிந்து வரும்போது இரவு நான்கு மணி நேரம் காரை ஓட்ட வேண்டும் என படுக்கை வசதி அறையை கடல் படகில் எடுத்து இரண்டு மணி நேரம் உறங்கிய அனுபவம் தனிதான். 

இந்த தீவு தனி அரசு எனினும், பிரிட்டனின் உதவி பல விசயங்களுக்கு இந்த நாட்டிற்கு தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட எட்டாயிரம் வருடங்கள் முன்னர் இங்கே மனிதர்கள் குடியேறி இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பெரும்பாலோனோர் அயர்லாந்து, ஸ்காட்லாண்டு போன்ற நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் எனவும் இவர்களின் மொழி அயர்லாந்து மொழிதனை ஒட்டியது எனவும் கருதுகிறார்கள். 

இந்த நாட்டில் விவசாயம் தொழிலாக இருக்கிறது. பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நாட்டில் என்னை மிகவும் கவர்ந்த மற்றொரு விசயம், இந்த நாட்டின் சின்னம். 

இந்த சின்னம் எதை குறிக்கிறது என அறிந்து கொள்ளும் ஆர்வம் முதல் நாளில் இருந்து தொடங்கி இறுதி நாள் வரை இருந்தது. இறுதி நாள் அன்று என்ன என தேடியதில் 'எப்படி எறிந்தாலும் கீழே விழாமல் இருந்துவிடும் ஒரு கால்' என்பதுதான் அந்த மூன்று கால் கொண்ட சின்னம். வாழ்க்கையில் ஒரு உற்சாகம் தந்துவிட்டு போனது. எனக்கு தெரிந்த உறவினர் ஒருவர் இந்த பயணத்திற்கு சில தினங்கள் முன்னர் தான் எதேச்சையாக சொன்னார். கொக்கு போன்ற படிப்பறிவில்லாத பறவைகள் கூட கண்டம் விட்டு கண்டம் சென்று சரியாக தனது இடம் திரும்பிவிடுகிறது. படித்தறிந்த மனிதர்கள் நம்மால் எதைத்தான் சாதிக்க இயலாது! அவர் சொன்னது எத்தனையோ உண்மை, ஆனால் நமது படிப்பறிவு சண்டை போடுவதிலும், உன் மதம் பெரிதா, என மதம் பெரிதா என்பதிலும். எனது வீடு பெரிதா, உனது வீடு பெரிதா என பொறாமை கொள்வதிலும், வஞ்சகம் தீர்ப்பதிலும், நஞ்சுகளை விதைப்பதிலும் தீர்ந்து கொண்டிருக்கிறது. இது போன்ற விசயங்களால் மனித இனம் எப்படி எப்படியோ எறியப்பட்டாலும் இன்னும் இந்த பூமியில் மனித இனம், மனிதாபிமானம் செழித்தோங்கி கொண்டே வந்து கொண்டிருக்கிறது. 

வீட்டில் இருந்து கிளம்பிய கார் பாதி தூரம் சென்றபோது, எனது பையன் தலைசுற்றலாக இருக்கிறது என சொல்ல காரினை நிறுத்தி எச்சரிக்கை விளக்கை அழுத்தினேன். திடீரென ஒரு வாகனம் எங்கள் முன்னால் நின்றது. அந்த வாகனத்தில் இறங்கிய நபர் ஒருவர் எங்களை நோக்கி வந்து 'எதுவும் பிரச்சினை இல்லையே' என கேட்டுவிட்டு நாங்கள் எதுவும் பிரச்சினை இல்லை, பையனுக்கு வாந்தி வருவது போல் இருந்தது, அதுதான் காற்றோட்டம் கிடைக்கட்டும் என நிறுத்தினோம் என சொன்னதும் சென்றார். அந்த நிகழ்வு ஏனோ கண்களில் கண்ணீரை வரவழைத்தது. மனிதர்கள்... எப்படி எறிந்தாலும் மனிதாபிமானம் எப்படியேனும் தழைத்துவிடும் எனும் நம்பிக்கை இந்த மூன்று கால்கள் கொண்ட சின்னம் காட்டி கொண்டு இருந்தது. 


Wednesday, 4 April 2012

பூமியும் பிரபஞ்சமும் ஒன்றா!

சாமியார் ஒருவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றா!

பக்தா, பரமாத்மாவில் இருந்து பிரிந்ததுதான் ஜீவாத்மா எனவே பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று.

முட்டாள்தனமாக இருக்கிறதே, நான் எப்போது உங்கள் பக்தன் ஆனேன். ஆத்மாவே இல்லை என சொல்லும்போது அதில் எங்கே பரமாத்மா, ஜீவாத்மா! திலோத்தமா என்றுதான் பாட வேண்டும் போலிருக்கிறது.

பக்தா, சிற்றின்பத்தில் மூழ்கி கிடந்தழியும் உனது சிந்தைக்கு ஜீவாத்மா, பரமாத்மா எல்லாம் புரிந்து கொள்ள இயலாது.

இருக்கட்டும், பூமியும், பிரபஞ்சமும் ஒன்றா.

பக்தா, பிரபஞ்சத்தில் இருந்து பிரிந்து வந்ததுதான் பூமி, எனவே பூமியும் பிரபஞ்சமும் ஒன்று.

அப்படியெனில் தாயும் சேயும் ஒன்றா.

பக்தா, தாயில் இருந்து சேய் பிரிந்து வந்ததால் தாயும் சேயும் ஒன்றுதான்.

உங்கள் தாய் எங்கே?

பக்தா, அன்னை எங்கே எனும் தேடல் என்னில் இல்லை.

முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு வந்தீரா, அல்லது தெருவில் கிடந்து உழலட்டும் என விட்டுவிட்டு வந்தீரா.

பக்தா, அன்னை அவள் தன்னை காத்து கொள்வாள்.

தாயும் சேயும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறல்லவா.

பக்தா, உண்மை புலப்படுகிறதோ. பரமாத்மாவில் இருந்து ஜீவாத்மா பிரிந்து வந்தபின்னர் ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு. அதைப்போல பூமி பிரிந்து வந்தாலும் பிரபஞ்சம் வேறு, பூமி வேறு.

இப்படி வேறு வேறு என இருக்க எதற்கு வேதங்கள் எல்லாம் அனைத்தும் ஒன்றே என புலம்பி தள்ளுகின்றன.

பக்தா, உற்று நோக்கில் எல்லாம் ஒன்றே. பற்று வைத்திடில் எல்லாம் வேறு வேறே.

பூமி உருண்டை என சொல்வது தவறு. பூமி தட்டை என்பதுதானே சரி என யஜூர் வேதம் சொல்லி இருக்கிறதே.

பக்தா, நாம் பார்க்கும் விசயங்கள் எல்லாம் ஒளியினால் நமக்கு தெரிபவை. ஒளியின் சிதறல்கள் பொறுத்தே ஒரு பொருள் வடிவமைப்பை பெற்று கொள்கிறது. பூமி உருண்டை என சொல்வதும், பூமி தட்டை என சொல்வதும் நமது பார்வையை பொறுத்தே அமையும். கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டு என சொல்வதைப் போலவே எல்லாம் அமையும்.

பூமி உருண்டை எனில் பக்கவாட்டில் இருக்கும் பொருட்கள் எல்லாம் விழுந்துவிடாதா. கடல் நீர் எல்லாம் கீழே கொட்டிவிடாதா.

பக்தா, சிற்றின்பத்தில் மூழ்கி இருக்கும் உனது சிந்தைக்கு இது எல்லாம் புரியாது. ஈர்ப்பு விசையின் காரணமாக எல்லா பொருட்களும் அட்டை போன்றே பூமியின் பரப்பில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. வெளிஈர்ப்பு விசையினை புவிஈர்ப்பு விசை முறியடித்து விடும் தன்மை உடையது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை தலைகீழாக சாய்த்தால் தண்ணீர் கீழே விழ வேண்டும், அதுதான் நியதி. ஆனால் பூமி அப்படி அல்ல.

பிறகு எப்படியாம்.

இதுகுறித்து பேச மீண்டும் ஒருநாள் வா.

இயந்திரம் மனிதர்களை விட சிந்திக்கும் வலிமை கொண்டவையாம்.

பக்தா, இயந்திரம் சுயமாக சிந்திப்பது இல்லை.

இயந்திரம் சுயமாக சிந்திக்கும் வல்லமை உடையதாக சொல்கிறார்கள்.

பக்தா, மனிதர்களின் கனவு இது. ஒரு விளையாட்டு போட்டியில் இயந்திரத்துக்கு கொடுக்கப்பட்ட விசயங்களின் அடிப்படையில் அவை செயல்பட்டு வெற்றி பெற்றால் அது இயந்திரத்தின் சிந்திக்கும் திறன் என எப்படி சொல்ல இயலும்.

மனிதர்கள் கொடுப்பதை வைத்து தனக்குத்தானே சிந்தித்துதான் இயந்திரங்கள் செயல்படுகின்றன. உதாரணத்திற்கு நாம் சாமியார் என ஒரு தேடுபொறியில் தட்டினால் எந்த சாமியார் என்பது குறித்து தேடி அது சம்பந்தமான விசயங்களை இயந்திரம் தந்துவிடுகிறது அல்லவா.

பக்தா, அது சுய சிந்தனை அல்ல. நமது மூளையை போல சிந்திக்கும் திறன் எந்த இயந்திரமும் பெற்று கொள்ள இயல்வதில்லை. காலப்போக்கில் இவை எல்லாம் சாத்தியமாக கூடும்.

இயந்திரமும், மனிதர்களும் ஒன்றா!

ஆமாம் பக்தா. மனிதன் இயந்திரமாகி கொண்டு வருகின்றான். இயந்திரம் மனிதராகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

முட்டாள்தனமாக இருக்கிறதே.

பக்தா, முட்டாள்களின் தினம் மட்டுமே வருடத்தில் ஒருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, அறிவாளிகளின் தினம் எல்லாம் கொண்டாடப்படுவதில்லை.

எப்போது உங்களை சந்திக்கலாம்?

கண்கள் மூடிக்கொண்டிருந்த வேளையில் தெரிந்த வெளிச்சம், கண்ணை திறந்த பின்னர் இருட்டாகவே இருந்தது. தலையில் லேசாக வலிக்க ஆரம்பித்தது.

Thursday, 29 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 7

வேனில் இருந்து பொருட்களை இறக்கி எங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்தார்கள். 'அப்பா என்ன நடக்கிறது' என்று கேட்டேன். அவருக்கு இறக்கிற எல்லா சொத்துகளையும் இந்த இருவரின் பெயரில் எழுதி வைத்து விட்டார் என்றார் அப்பா. அதற்குள்ளாகவா, என்றேன். ஆமாம் என்றார். அப்படியெனில் அவர் சாக முடிவு செய்துவிட்டாரா என்றேன் கலக்கத்துடன். தெரியவில்லை என சொல்லிவிட்டு வேன் டிரைவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு வந்தார். காயத்ரி கலக்கத்துடன் இருந்தாள். எதற்கு இந்த கல்லூரிக்கு செல்லவேண்டும், எத்தனையோ பேர் இருக்க காயத்ரி எதற்கு கண்ணில் பட வேண்டும், என்னுடன் பேச வேண்டும், பழக வேண்டும், இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கையில் 'என்ன யோசனை முருகேசு' என்றார் அம்மா. மற்ற அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்து இருந்தார்கள்.

'நான் இமயமலைக்கு போகப் போறேன், என்னோட வியாபாரம், இந்த பொண்ணுங்க எல்லாத்தையும் தேவேந்திரன் பாத்துகிறேனு சொல்லிட்டார்' என்றார் காயத்ரியின் அப்பா. எனது அப்பாவின் பெயரை சொன்னதும் எனக்கு திடுக்கென இருந்தது. எனது அப்பாவுக்கு என்ன தெரியும் வியாபாரம், விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை உடையவர். கடையில் ஐந்து ரூபாய் பொருள் என்றால் ஆறு ரூபாய் கொடுத்து வியாபாரம் நல்லா பெருகட்டும் என சொல்லிவிட்டு வரக்கூடியவர். இதுவரை எந்த பொருளுக்கும் பேரம் பேசியது இல்லை. இதனால் அம்மா அதிக கோபம் கொள்வது உண்டு. இவர் எப்படி வியாபாரம் செய்வார். கறாராக இல்லாதபட்சத்தில் வியாபாரம் எல்லாம் வீண் என நினைத்து கொண்டு 'சார், எங்க அப்பாவுக்கு வியாபாரம் பண்ண தெரியாது, நீங்க இரண்டு மாசத்தில திரும்பி வரப்ப எல்லாம் தொலைஞ்சி போயிருக்கும்' என்றேன்.

'நான் இரண்டு மாசத்தில திரும்ப வரப்போறதில, திரும்பி வர சில வருசங்கள் ஆகும், எனக்கு இந்த வியாபாரம் திரும்பவும் வேணாம்' என்றார் அவர். 'முருகேசு செத்த இப்படி வா' என அம்மா அழைத்தார். 'நீ பேசாம இரு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்' என்றார் அம்மா. 'என்னம்மா சொல்ற, இதெல்லாம் அப்பாவுக்கு சரிபட்டு வராது, காயத்ரியின் அக்காவை கல்யாணம் பண்ணிக்கொடுக்கணும், எதுக்கும்மா, வீண் சிரமம்' என்றேன். 'சார் நீங்க யோசிச்சி பேசுங்க, இதோ இந்த ரெண்டு பேரு உங்களை நம்பி வந்தவங்க' என்றேன். 'உங்க அப்பா எல்லாம் பாத்துக்குவார்' என்றார் அவர். 'ஒருவேளை எங்க அம்மா செத்து போய், எங்க அப்பாவும் சாக முடிவு பண்ணிட்டா, நாங்க மூணு பேரு எந்த தெருவுல போய் நிற்கிறது' என்றேன். இந்த வார்த்தைகள் எல்லாம் எப்படி என் வாயில் இருந்து வந்தது என யோசித்து முடிக்கும் முன்னர் 'என்ன பேச்சு பேசற நீ, அவரே மனசு உடைஞ்சு போயிருக்கார், அபசகுனமா பேசிட்டு' என அம்மா சில தினங்கள் பின்னர் என் மீது கோபம் கொண்டார். 'அப்படி எதுவும் நடக்காது' என்றார் அப்பா.

'சரி நான் கிளம்புறேன்' என்றார் அவர். இரண்டு பெண்களும் அமைதியாகவே இருந்தார்கள். 'காயத்ரி உங்க அப்பாவை எங்கயும் போக வேணாம்னு சொல்லு' என்றேன். காயத்ரி கலங்கிய கண்களுடன் 'அவர் கேட்கமாட்டார்; எல்லாத்தையும் விபரமா சொல்லிட்டார்' என்றாள். 'சார், நீங்க போக கூடாது சார்' என்றேன். எனது வயதுக்கு மீறிய வார்த்தைகளா, நிலையின் தன்மையை உணர்ந்து வந்ததா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. 'முருகேசு நீ போய் வேலைய பாரு' என அம்மா அதட்டினார். நண்பன் வீட்டிற்கு செல்வதாக  பொய் சொல்லி சேர்த்து வைத்த பணம் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, எனது தொப்பி ஒன்றையும், கண்ணாடி ஒன்றையும் மறைத்து எடுத்து கொண்டு நான் வீட்டை விட்டு வெளியேறினேன். உண்மை மட்டுமே பேச சொன்ன காயத்ரி நினைவில் அப்போது இல்லை. காயத்ரியின் அப்பா வெளியேறும் வரை ஓரிடத்தில் மறைந்து இருந்து காத்து இருந்தேன். அவர் வந்ததும், அவரை பின்தொடர்ந்து சென்றேன். கையில் சின்னதாய் பெட்டி. பேருந்து நிலையத்தில் நின்றார்.


அவர் ஏறிய பேருந்தில் நானும் ஏறினேன். எந்த இறக்கம் என எப்படி தெரிந்து கொள்வது என தெரியாமல் பேருந்து செல்லும் கடைசி நிறுத்தம் கேட்டு டிக்கட் வாங்கினேன். அவர் இறங்கிய இறக்கத்தில் நானும் இறங்கி பின் தொடர்ந்தேன். இமயமலை செல்வதாய் சொன்னவர் இங்கே எதற்கு இறங்கினார் என புரியாமல் இருந்தது. சில தெருக்கள் தாண்டி ஒரு வீட்டிற்கு முன்னர் நின்றார். வீட்டின் கதவு திறந்தது.  உள்ளே சென்றார். எத்தனை மணி நேரம் இப்படியே காத்து இருப்பது என சுற்றும் முற்றும் பார்த்தேன். துப்பறியும் சிம்பு போல் ஆகிவிட்டேனே என மனம் கிடந்து அடித்து கொண்டது. அந்த வீட்டினை நோட்டம் விட்டு கொண்டே இருந்தேன். அரை மணி நேரத்தில் ஒரு பெண்ணுடன் காயத்ரியின் அப்பா வெளியே வந்தார். அந்த பெண்ணின் கையில் பெட்டி. இருவரும் பேசாமல் நடந்து நான் இருக்கும் இடம் தாண்டி சென்றார்கள். அவர்களை பின் தொடர்ந்தேன்.

அவர்கள் பெங்களூர் செல்லும் வாகனத்தில் ஏறினார்கள். என்னால் அதற்கு மேல் பொறுத்து கொள்ள இயலவில்லை. வாகனத்தில் நானும் ஏறி 'சார் இந்த வாகனம் இமயமலை போகாது' என்றேன். 'யார் நீ' என்றார். தொப்பி, கண்ணாடியுடன் யாராய் இருந்தா என்ன என்றேன். கணவனே கண் கண்ட தெய்வம் என இருக்கும் பெண்கள் மத்தியில் மற்றொரு பெண்ணின் கணவனை கூட கணவனே கண் கண்ட தெய்வம் என நினைக்கும் பெண்கள் இருப்பார்களோ என அச்சம் தவிர்த்து தகராறு பண்ணுவதாகவே முடிவு செய்து இனி இவரை சும்மா விடக்கூடாது என நினைத்தேன். 'நீங்க இப்போ வீட்டுக்கு திரும்பலை, போலீசுல சொல்வேன்' என்றேன். வியாபாரியாச்சே அவர். அந்த பெண் 'இந்த சனியனை அடிச்சி விரட்டுங்க' என்றாள்.

நடத்துனரிடம் அவர் புகார் செய்ய, நடத்துனர் என்னை பேருந்தில் இருந்து கீழே வலுக்கட்டாயமாக தள்ளினார். கோபம் கொப்பளித்தது. அந்த நேரம் பார்த்து ஒரு போலிஸ்காரர் வந்தார். அவரிடம் சுருக்கமாக விபரம் சொன்னேன் என்பதைவிட ஒரு பெரிய பொய் சொன்னேன். ஒருவர் தனது மனைவியை கொலைசெய்துவிட்டு வேறொரு பெண்ணுடன் ஓடிப்போக இந்த பேரில் ஏறி அமர்ந்து இருக்கிறார் என்றேன். வந்து போலிஸ் ஸ்டேசன்ல கம்ப்ளைன் கொடு என சொல்லிவிட்டு போய்விட்டார். தொப்பி, கண்ணாடி கழற்றி மறைத்தேன். பெங்களூர் வாகனம் கிளம்பியது. ஒரு கல்லை எடுத்து அவர் அமர்ந்து இருந்த இருக்கையை நோக்கி எறிந்தேன். நான் எடுத்த வேகம், எறிந்த வேகம். எதுவுமே தெரியாதது போல மக்களுடன் மக்களாய் கலந்தேன். பேருந்தின் சத்தத்தையும் தாண்டி 'ஆ' எனும் அலறல் சத்தம் கேட்டது. பேருந்திற்கு எந்த சேதமும் இல்லை என்பதுதான் எனக்கு ஆறுதலாக இருந்தது. பேருந்து நின்றது. பயமற்ற நிலை என்னுள் பரவி இருந்தது. ஒரு கடையில் சென்று நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் நபராக மாறி இருந்தேன். சிறிது நேரத்திற்கு பின்னர் பேருந்தில் இருந்து தலையில் கட்டுடன் அவரை இருவர் சேர்ந்து இறக்கினார்கள். அந்த பெண்ணும் உடன் இறங்கினாள். நிலைமை விபரீதம் ஆகி கொண்டு இருப்பது தெரிந்தது. பேருந்து கிளம்பியது.

நான் அருகில் சென்று பார்த்தேன்.  அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். முழித்தவர் விழித்தார். மீண்டும் கண்களை மூடினார். மீண்டும் விழித்தார். அங்கே சுற்றி இருந்தவர்கள் 'ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க' என்றார்கள். கைத்தாங்கலாக பற்றி கொண்டு ஒரு ஆட்டோவில் அவரை ஆஸ்பத்திரிக்கு ஏற்றி கொண்டு சென்றேன். தவறு செய்பவர்கள் எல்லாம் நல்லவர்களாக எப்படி உலகில் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அந்த கணம் உணர்ந்தேன். ஆஸ்பத்திரி வந்து இறங்கியதும் நீதான தகராறு பண்ணின பையன் என்றார் அந்த பெண். கல்லெடுத்து அடிச்சதும் நான் தான் என்றேன். பயந்து போனார்.

(தொடரும்)