Friday, 23 March 2012

மௌன நிலை

உன்னைக் கண்டேன் உன்னைக் கண்டேன்
உலகம் மறக்கிறதே - துன்ப
உலகம் மறக்கிறதே

உறங்க மாட்டேன் உறங்க மாட்டேன்
மனசு துடிக்கிறதே - மனசு
கிடந்து துடிக்கிறதே

கனவு இல்லை கற்பனை இல்லை
புரிந்து கொள்வேனா
காதல் இன்றே கனிந்தது என்றே
தெரிந்து கொள்வேனா - மனதில்
உவகை கொள்வேனா

ஆசையை துறந்திட
ஆவல் வந்து பிறந்து மடிகிறதே
நேசம் மட்டும் கொண்டேனென்று
நெஞ்சம் சொல்கிறதே - கண்ணில்
தஞ்சம் கொள்கிறதே.

வாழ்வில் மௌனம் தான் எத்தனை அழகு. இந்த மௌனத்தை கடைபிடிக்க எத்தனை துணிவு வேண்டும். எவரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் உடனடியாய் பேச தோன்றும் நிலையை ஒதுக்கிவிடும் இந்த மௌனம் தான் எத்தனை அழகு.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் எனும் பாடலில் வரும் சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை எனும் வரிகள் போல இந்த மௌனத்திற்கு என்ன விலை கொடுத்து விட இயலும். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்றே அர்த்தப்படுத்தபட்டாலும் மௌனம் பேசும் மொழியை அறிந்தவர் எவரேனும் உண்டா.

இந்த மௌனம் என்ன சொல்ல வருகிறது என அவரவர் ஒன்றை நினைக்கத்தான் வாய்ப்பு உண்டு. இறைவன் மௌனியாகவே இதற்காகவே இருக்கிறானோ! நீ போட்டு வைத்த பாதையில் நான் நடந்து செல்வதை பெருமிதமாக நினைக்கிறேன். பாதை எனக்கு சொந்தமானது அல்ல என்றாலும் கூட.

உன்னை கண்டேன் இறைவா
உறங்க மாட்டேன் என மனசு துடிக்கிறது
எங்கே உறங்கினால் நீ கண்ணில் இருந்து
மறைந்து விடுவாய் என்கிற துடிப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

மௌனமாக உன்னிடம் பேசும்போது
எவருமே என்னை எதுவும் நினைப்பதில்லை
உன்னிடம் பேசுவதாக ஊரெல்லாம்
சொல்லிவைத்தால் ஏதேதோ சொல்லிவிடுவார்கள்.

மௌனம் தான் எத்தனை அழகு. என் மனதில் இருப்பதை இந்த மௌனம் ஒருபோதும் வெளியே சொன்னதும் இல்லை. முக பாவனைகளை கூட மறைத்துவிடும் பாக்கியம் மௌனத்திற்கு உண்டு. மௌனம் அவரவர் மனதிற்கேற்ப சம்மதத்திற்கு அறிகுறி.

உன்னைக் கண்டேன் இறைவா இனி உறங்க மாட்டேன். 

Tuesday, 20 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 6

வந்த அழுகையை அடக்கிக்கொண்டு 'சார்' என்றேன் மீண்டும். என்ன என்பது போல் அவரது பார்வை சிவந்து இருந்தது. 'சார் நம்ம உயிரை நாமளே எடுத்துகிரதுக்கு எந்த உரிமையும் இல்லை' என்றேன். 'ம்ம்' என்றார். 'வலி பொறுக்க முடியாம இப்படி ஒரு வழி தேடிக்கிறது தப்புதானே சார்' என்றேன். 'ம்ம்' என்றார். வேறு எதுவும் பேசவில்லை. எனக்கு வேறு எதுவும் பேசத் தோணவில்லை. அன்று இரவு தூங்குவதும் விழிப்பதுமாக இருந்தேன். என் அப்பாவும் அவ்வப்போது எழுந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் மட்டும் தூங்கியது போலவே தெரியவில்லை.

காலை எழுந்ததும் அவர் குளித்து தயாரானார். நாங்கள் எங்களது வீட்டில் சென்று குளிக்கலாம் என நினைத்து கொண்டு அவரை எங்கள் வீட்டிற்கு அழைத்தோம். சரி என ஒரு பெட்டியுடன் எங்களுடன் வந்தார். வீட்டில் அம்மாவும், காயத்ரியும் அவளது அக்காவும் எழுந்து இருந்தார்கள். இன்று சனிக்கிழமை என்பதால் விடுமுறை தினமாக இருந்தது அசௌகரியத்தில் சற்று சௌகரியமாக இருந்தது. வீட்டிற்கு வந்தவர் காயத்ரியையும், அவரது அக்கா சுபலட்சுமியையும் பெயர் சொல்லி அழைத்தார். அவர்கள் வந்ததும் வாங்க, வக்கீல் ராமலிங்கத்தை பார்க்கனும் என்றார். நான் புரியாமல் அங்கேயே நின்றேன்.


எனது அப்பா குளித்து முடித்து இருந்தார். நான் அவசர அவசரமாக குளித்தேன். நான் குளித்து வெளியே வருமுன் அவர்கள்  அனைவரும் அங்கே இல்லை. எனது அம்மா மட்டும் இருந்தார். 'எங்கேம்மா அவங்க' என்றேன். வக்கீலைப் பார்க்க போய் இருக்காங்க, உங்க அப்பாவும் கூட போய் இருக்கார். ரொம்ப பாவம் கதிரேசு அந்த பொண்ணுங்க என்றார் அம்மா. 'என்னம்மா என்றேன்' ராத்திரியெல்லாம் தூங்கவே இல்லை, காலையில சாப்பிடறதுக்கு முன்னால இப்படி அவசரமா கிளம்பி போய்டாங்க. வா நீயாவது வந்து சாப்பிடு என்றார் அம்மா. 


வக்கீல் ராமலிங்கம் எங்க இருக்காருன்னு தெரியுமாம்மா என்றேன். எத்தனை ராமலிங்கம் இருப்பாங்களோ என்றார் அம்மா. என்ன ஏது என்று தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அதிகம் இருந்தது. அப்பாவின் அலைபேசிக்கு அழைத்தேன், அதை வீட்டிலேயே விட்டு போய் இருந்தார். இனி அவர்கள் வரும் வரை காத்து இருக்கவா வேண்டும் என அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு அக்கம் பக்கத்தில் கேட்கலாம் என கிளம்பினேன். வீட்டுல இரு முருகேசு, எங்க போகப் போற, வந்ததும் பேசலாம் என சொன்னார் அம்மா. அம்மாவின் வார்த்தையை மீறுவதற்கு பயமாக இருந்தது. ஒருவேளை நான் வெளியே செல்ல, அம்மாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால், நினைக்கவே ஈரல், இதயம் எல்லாம் நடுங்கியது. 


'அம்மா, அவர் சாகப்போறதா சொல்லி இருந்தாரும்மா' என்றேன் நான். அம்மா என்னை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். அவர் காயத்ரியோட அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி சாகப்போறதா சொன்னாரும்மா என்றேன் மீண்டும். 'என்னடா பைத்தியகார முடிவா இருக்கு, இந்த பொண்ணுகளை நம்மளை அதுக்குதான் பார்த்துக்க சொன்னாரா. உங்க அப்பாவும் கூட போய் இருக்காரே. உங்க அக்காவுக்கு மாப்பிள்ளை பாத்து கட்டி வைக்கவே போதும் போதும்னு ஆயிருச்சி. இதுல இவர் இப்படி பண்ணிட்டா நம்ம மேல கொலை குத்தம் வந்துறப்போகுது' என்றார் அம்மா. அம்மாவின் பயம் எனது பயத்துடன் தொற்றியது. 


'சத்தியம், நேர்மை, உண்மை, நீதி, தர்மம் எல்லாம் இந்த உலகத்துல இன்னும் இருக்காம்மா' என்றேன். 'அதெல்லாம் எப்பவுமே உலகத்துல இருந்தது இல்லைடா முருகேசு, அவங்க அவங்க வசதிக்கேற்ப அதது மாறும்' என்றார். நான் அம்மாவிடம் பேசிய பொய்கள் என்னை அரித்தன. 'அப்படின்னா நீ நேர்மையா இருந்தது இல்லையாம்மா' என்றேன் நான். அம்மா என்னையவே பார்த்தார். 'இல்லைடா முருகேசு' என்றார். 'ஏன்மா உண்மைய பேசினா நேர்மை தானே' என்றேன் நான். 'பெரிய பெரிய விசயம் எல்லாம் கேட்கற, நம்ம வீட்டுல இருக்கற புத்தகங்களை படி, ஓரளவுக்கு எல்லாம் புரியும்' என்றார். 


மாடி அறைக்கு சென்றேன். புத்தகங்களை தள்ளி தள்ளி பார்த்தேன். தற்கொலையும், விரும்பி சாதலும் என்றொரு புத்தகம் இருந்தது. எடுத்து புரட்டினேன். 'வலி, வேதனை, அவமானங்கள் தாங்க இயலாமல், இதன் காரணமாக வாழப் பிடிக்காமல் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அவல நிலையை மனிதர்கள் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள்' என ஓரிடத்தில் எழுதி இருந்தது. 'ஒருவர் தனது உயிரை மாய்த்து கொள்தல் என்பது கொடிய செயலாகும், ஆனால் யூதனசியா எனப்படும் முறையில் வலி வேதனை உள்ளவர்களின் வாழ்க்கையை மருத்துவர்களே முடித்து வைக்கலாம் எனும் நிலை சில நாடுகளில் நிலவி வருகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். உண்ணாவிரதம் மூலம் ஒருவர் தனது உயிரை மாய்த்து கொள்வது கூட அறிவற்ற செயலாகும். உண்ணாவிரதத்தின் மூலம் அடையும் சாவுக்கும், தற்கொலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு எனினும் இறுதியில் தன்னை தானே மாய்த்தல் என்பது தவறு. கொத்து கொத்தாக மனிதர்கள் போரில் கொல்லப்படுவதும், ஒரு இனம், ஒரு மதம் பிடிக்காமல் அதை சேர்ந்தவர்களை உயிர் துறக்க செய்வதும் கருணை கொலை என்றே கருத சொல்வது மடமையாகும்'.

இதை எல்லாம் வாசித்து கொண்டிருக்கும்போதே நாம் நமது உடலை முறையாக பேணி காக்காமல் நோய் வாய்ப்பட்டு இறப்பது கூட ஒருவகையில் உண்ணாவிரதம் போன்ற சாவுதான் என எண்ணத் தோணியது. அந்த புத்தகத்தில் ஆழ்ந்து படித்தேன். அவ்வப்போது அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறார் என கீழே சென்று பார்த்து வந்தேன். 'ஓரிடத்தில உட்கார்ந்து படி என அம்மா சொன்னதும், கீழேயே அமர்ந்து படித்தேன். புத்தகத்தில் இறுதியாக 'இந்த புத்தகம் ஒரு மரத்தின் மரணத்தில் ஜனித்திருக்கிறது' என்று முடித்து இருந்தது. எனக்கு அந்த வரிகள் விளங்கவே இல்லை. அம்மாவிடம் கேட்டேன்.

'எல்லாம் கர்ம வினை' என்றார் அம்மா. 'கர்ம வினை அப்படின்னா என்னம்மா' என்றேன். 'நாம செய்ற செயல் பொறுத்தே அதனோட வினை இருக்கும்' என்றார். 'புரியலைம்மா' என்றேன். அந்த புத்தகம் உருவாக காகிதம் வேணும். அந்த காகிதத்துக்கு ஒரு மரம் வெட்டப்பட்டு இருக்கும்'. காகிதம் தேவை இல்லைன்னா, அந்த மரம் காகிதத்துக்காக வெட்டப்பட்டு இருக்காது' என்றார்.

'அப்படின்னா காயத்ரியோட அப்பா சத்தியம் செய்து தராம இருந்து இருந்தா தன்னோட சாவு பத்தி நினைச்சி இருக்க மாட்டாரா' என்றேன் நான். 'தெரியலை முருகேசு' என்றார் என் அம்மா. 'எதுக்கு தெரியலை' என்றேன் நான். 'ஒருவேளை அவரோட மனைவி மேல இருக்கற பாசத்தால,  அவரோட மனைவி இல்லாத உலகம் நமக்கு எதுக்குன்னு நினைக்கலாம்' என்றார். 'அப்படியும் இருக்காங்களா' என்றேன் நான்.

'எப்படியும் இருப்பாங்க' என்றார் என் அம்மா! மதிய வேளை நகர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் இன்னும் காணவில்லை. புத்தகம் எனது நேரங்களை தின்று முடித்து இருந்தது. ஒரு மணி நேரம் பின்னர் அவர்கள் அனைவரும் வந்தார்கள். 'இதை பத்திரமா வீட்டில் வை' என அப்பா எனது அம்மாவிடம் தந்தார். பின்னால் ஒரு வாகனம் பல பொருட்களுடன் வந்து இறங்கியது! எனக்குள் அதிர்ச்சி மின்னலாக இறங்கியது.

(தொடரும்)


Thursday, 15 March 2012

குரான் பேசுமா அறிவியல்

ஒரு நூலினை நாம் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு வித எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு நூல் பலரால் போற்றப்பட்டு, பலரால் நம்பப்பட்டு வரும் பட்சத்தில் அந்த நூலில் கூறப்படும் கருத்துகளை மறுத்து பேசுவது என்பது நம்பிக்கையாளர்களின் மனம் நோக செய்வதாகும்.

எத்தனையோ அறிவியல் வல்லுனர்கள், முனிவர்கள் எழுதிய நூல்கள் இருந்தாலும், அதிக மக்களால் அறியப்பட்ட நூல் என்றால் பகவத் கீதை, குரான், பைபிள் என்றே சொல்லலாம். இவை மதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டு இருந்தாலும், வாழ்க்கை முறைகளை சொல்வதாகவே கருதப்பட்டு இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் குரான், பைபிள் போன்ற நூல்கள் தங்களது வலிமையை இழக்கத் தொடங்கின என்றாலும் இன்னமும் இந்த நூல்கள் பலராலும் பின்பற்றப்பட்டு போற்றப்பட்டு வருகின்றன. தாய் வழித் தோன்றல்கள், தந்தை வழித் தோன்றல்கள் போல இந்த நூல்கள் இறைவழித் தோன்றல்கள் என்றே கருதப்பட்டு வருவது இந்த நூல்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

தத்தம் இறைவனை நம்புபவர்கள் இந்த நூல்களை ஒருபோதும் எதிர்த்து பேச முற்படமாட்டார்கள். ஆனால் வெவ்வேறு வழிப்பாதை கொண்டவர்கள் ஒரு கொள்கையின் மீது அவதூறு பேசி தமது கொள்கையே சிறந்தது என தமது வழிப்பாதை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது என்றே பெருமை பட்டு கொள்வார்கள். இதில் பகவத் கீதையை நாம் சற்று தள்ளி வைத்துவிடலாம். இதற்கு காரணம் அந்த நூல் அறிவியல் பேசுகிறது என இதுவரை எவரும் சொன்னதில்லை, பகவத் கீதை யோக நிலைகளை பறைசாற்றும் ஒரு இலக்கியம். அதற்கடுத்து பைபிள், இதுவும் அறிவியல் பேசுவதாக எவரும் சொல்வதில்லை. ஆனால் அவ்வப்போது உலகம் அழிவதாக சொல்வதாக சொல்வார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி குரான் அறிவியல் பேசுவதாக பல அறிவியல் அறிஞர்கள் முதற்கொண்டு படித்து தெளிந்த பலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

குரான் அறிவியல் பேசித்தான் அது இறைவன் சொன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நினைக்கும் அளவுக்கு குரானின் நிலை சென்று கொண்டிருப்பது வருத்தத்திற்கு உரியது. குரான் அறிவியல் பேச வேண்டிய நிர்பந்தம் தான் என்ன? அது அறிவியல் நூலா, வாழ்வியல் நூலா? என்று இதுவரை அறிந்தது இல்லை.

முகம்மது நபிகள் படிக்காதவர், அவருக்கு இத்தனை ஞானம் எப்படி வந்திருக்கும், எனவே குரான் இறைவன் சொன்னதுதான் என்று ஒரு வாதம் வேறு. படிக்காதவர்களை இப்படி எல்லாம் இழிவு படுத்தி இருக்க வேண்டாம். அதே படிக்காத நபிகள் தான் நபிகள் வாக்கு என சொல்லி இருப்பதாகவும் இருக்கிறது. படிக்காத ஒருவர் எப்படி அப்படியெல்லாம் அழகிய வாக்குகள் சொல்லமுடிந்தது என எவரேனும் நினைப்பாரில்லை. குரானும், நபிகள் வாக்கும் பிரித்தே கையாளப்பட்டு இருக்கிறது என்பதுதான் வரலாறு. மேலும் படிப்பறிவு என்பது எதை வைத்து சொல்வது என்பதையும் எவரும் அறிந்தாரில்லை. குரான் எழுதப்பட்டதாக சொல்லப்படும் காலகட்டங்களில் அரேபிய நாடுகள் அறிவியலில் செழித்தோங்கி இருந்தன. அதன் விளைவாக கூட சில வசனங்கள் குர்ஆனில் வைக்கப்பட்டு இருக்கலாம், எனினும் குரானின் நோக்கம் அறிவியல் பேசுவதா?

எனது நண்பர் ஒருவர் சொன்னார், குரான் மட்டுமே அறிவியலுக்கு நெருக்கமாக பேசுகிறது என. நான் அவரிடம் கேட்டேன். நீங்கள் குரான் முழுவதும் படித்து விட்டீர்களா என! இல்லை என்றார். ஒரு நூலை அணுகும் முன்னர் வெளிப்படையான மனம் இல்லை என்றால் அந்த நூலில் நாம் தேடுவது இருக்கிறதா என்றுதான் கண்கள் போகும். அப்படி ஒன்று இருந்துவிட்டால் சாதகம் எனில் சாதகமும், பாதகம் எனில் பாதகமும் என நமக்கு வசதிக்கு ஏற்ப நாம் எழுதுவோம்.

ஆனால் மனதை நிர்மூலமாக்குதல் என முன்னோர்கள் சொல்லி வைத்து இருக்கிறார்கள். அதாவது குரான் ஒரு நூல் மட்டுமே. இப்போது முகம்மது நபிகள் ஒரு இறைத்தூதர், அந்த நூல் முகம்மது நபிகளுக்கு இறைவன் சொன்னது என்பதெல்லாம் இரண்டாம் நிலை. இந்த இரண்டாம் நிலை எல்லாம் நாம் அறிந்து கொண்டு அந்த நூலினை அணுகும்போது நமது மனநிலை, ஒன்று இறைவன் மீது நம்பிக்கை உள்ளவராக இருந்தால் நேசத்தோடும், இரண்டாவது இறைவன் மீது நம்பிக்கையற்றவர்களாக இருந்தால் வெறுப்போடும் அணுகத் தோன்றும். இது மனித இயல்பு. எந்த ஒரு முதல் புத்தகமும், எழுதுபவருக்காக வாங்கப்படுவதில்லை. ஆனால் அதற்குப்பினர் அந்த நபரால் எழுதப்படும் புத்தகங்கள் அவருக்காகவே வாங்கப்படும் நிலை ஏற்படுகிறது. ஆனால் அந்த நிலை எல்லாம் குரானுக்கு இல்லை. குரான் நம்பிக்கைகளின் வெளிப்பாடு.

எனக்கு ஒரு நண்பர் அரபு வசனங்கள் கூடிய தமிழ் வசனங்கள் கொண்ட குரான் தந்தார். முதலில் படிக்கும்போது எதற்கு இறைவன் இப்படி நபிகளிடம் சொன்னார், இதை எல்லாம் இறைவன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றே தோணியது. எப்போது மனதை நிர்மூலமாக்குகிறேனோ அப்போது குரான் வாசிக்கிறேன் என நண்பரிடம் சொன்னேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே உங்களால் மனதை இனிமேல் நிர்மூலம் ஆக்க முடியாது. இதை செய்ய வேண்டும் எனும் அணுகுதல் இருக்கும்போது அதை செய்து விட்டோமா என சரி பார்க்க தோன்றும், எனவே மனதை நிர்மூலமாக்குதல் அவசியம் இல்லை. இறைவன் தந்ததாகவே படியுங்கள் என்றார். அந்த மன நிலை இப்போது இருக்கிறது என்றே கருதுகிறேன். அறிவியல் மூலம் மேலும் பல விசயங்கள் அறிந்து கொள்ளவே விருப்பம் உண்டு, அதுபோலவே இந்த குரானும்.

குரான் - இறைவன் தந்தது.


ஆமாம், குரானை எழுத சொன்னவரே இறைவன் சொன்னதாய் சொன்னது.