Wednesday, 14 March 2012

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (4)

பகுதி 3 

நமது உடலில் அமைந்து இருக்கும் இந்த நுரையீரல், மூச்சுக்குழல் என்பதில் எல்லாம் இந்த ஆஸ்த்மா பிரச்சினை பண்ணுவதில்லை என்றில்லை. மூச்சுக்குழல் இரண்டாக பிரிவடைந்து செல்லும் அந்த இருபகுதிகளில் ஏற்படும் இறுக்கமே ஆஸ்த்மாவுக்கு அடிப்படை காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. நாம் சுவாசம் செய்வதற்கு நமது நரம்பு மண்டலம் உறுதுணையாக இருக்கிறது.

நன்றி: கூகிள்

நாம் உடற்பயிற்சி செய்யும்போதோ, ஓடும் போதோ நமது சுவாசம் அதிகரிப்பதற்கு நமது உடலுக்கு தேவையான ஆக்சிஜனை தரவேண்டியே இந்த சுவாசம் வெகுவேகமாக நடைபெறுகிறது. பெரும்பாலோனோர் மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் நமது உடலில் பல விசயங்களை கட்டுபாடுக்குள் கொண்டு வரலாம் என சித்தர்கள் குறிப்பில் உள்ளதாக கூறுகிறார்கள்.

நமது உடலில் உள்ள தசைகள், செல்கள் எல்லாவற்றிற்கும் மிகவும் சீரான முறையில் ஆக்சிஜன் சென்றாலே போதும். தசைகள், செல்கள் எல்லாம் நன்றாக வேலை செய்யும். யோகா பயிற்சி முறைகள் உடலை கட்டுப்பாடாக வைத்திருக்க உதவி புரியும் என்பதில் இருவேறு கருத்தில்லை. இந்த உடற்பயிற்சி குறித்து ஒருவர் நகைச்சுவையாக சொன்னார்.

அதோ அந்த பூங்காவில் நடந்து கொண்டு இருக்கிறார்களே அவர்கள் எல்லாம் இங்கே எப்படி வந்தார்கள் தெரியுமா? என்றார். 


தெரியவில்லை சொல்லுங்கள் என்றார் மற்றொருவர். 


இதோ இந்த கார்களில் தான் வந்தார்கள் என்றார். 

வாழ்க்கையில் சில விசயங்களை எதற்கு செய்கிறோம் என்கிற ஒரு அடிப்படை உணர்வே நமக்கு மறந்து போய்விடுகிறது. நன்றாக மூக்கு முக்க சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்தால் சரியாகிப் போய்விடும் என்பது. மருந்து மாத்திரை இருக்கிறதே என கண்டபடி வாழ்க்கையை அமைத்து கொள்வது. இதை எழுதும் நான் ஒன்றும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இப்படியெல்லாம் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என நினைத்தே பொழுதுகள் கரைந்து போய்விடுகின்றன.

இந்த ஆஸ்த்மா ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என மரபணுக்கள், அலர்ஜி சம்பந்தமான பொருட்கள் என குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொருவரின் நிலையம் வெவ்வேறாகவே இருக்கிறது. இன்னதுதான் என அறுதியிட்டு சொல்லமுடியாத நிலையும் கூட நிலவுகிறது. இது போன்ற இறுக்கத்தை தளர்த்தும் மருந்துகள் என சல்புடமோல் பெரிதாக உபயோகப்படுகிறது.

பிரணாயாமம் எனும் மூச்சு பயிற்சி முறை பெருமளவில் இந்தியாவில் பேசப்படுகிறது. இது குறித்து திருமூலர் எழுதிய பாடல்களை பார்க்கலாம்.
இந்த தலைப்பில் எழுதப்பட்ட பாடல்கள் என பதினான்கு பாடல்கள் தென்படுகின்றன. பாடல்கள் குறிப்பு எழுதப்பட்டே இருக்கிறது. நேரடியாக எதுவும் சொல்லாமல் இருப்பது போன்றே தென்படுகிறது. இதற்காக பிரத்தியோக தமிழை கற்று கொள்தல் அவசியமாகிறது.

பன்னிரண்டானை பகல் இரவுள்ளது
பன்னிரண்டானையை பாகன் அறிந்திலன்
பன்னிரண்டானையை     பாகன் அறிந்தபின்
பன்னிரண்டானைக்கு பகல் இரவு இல்லையே.

என்னது பன்னிரண்டு? இது குறித்து சிலர் சில விளக்கம் சொல்கிறார்கள். நமது உடலில் இருக்கும் காற்றினை எப்படி கையாள்வது என்பது குறித்தே இவரது சிந்தனையெல்லாம் இருக்கிறது.

புறப்படு புக்கு திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

ஹீமோக்ளோபின் எனும் புரதம் நமது உடலில் உள்ள ஆக்சிஜனை எல்லா செல்களுக்க்ம் எடுத்து செல்கிறது. அப்படிபட்ட ஆக்சிஹீமொக்லோபின் சிவப்பு நிறத்திலே இருக்கும். எப்போது ஆக்சிஜன் நீங்குகிறதோ சிறு பச்சை வண்ணம் மாறி விடும். எதற்கு இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் இங்கே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என பார்த்தால் வாய் வழியாக சுவாசித்து அந்த ஆக்சிஜன் எதற்கு ரத்தத்தில் சேரக்கூடாது எனும் சிந்தனை நமக்கு தேவைப்படுகிறது. மேலும் திருமூலர் சொல்கிறார்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளரில்லை
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளர்க்கு
கூற்றை யுதைக்குங் குறியது வாமே

இப்போது ஆஸ்த்மா உடையவர்கள் இந்த கணக்கை எல்லாம் அறிந்து கொண்டால் தீர்வாகி விடுமா என்றால் இதை சொல்வது மிகவும் கடினம். காற்றே உட்புக வழியின்றி போம்போது அங்கே எப்படி எதை பிடித்து நிறுத்துவது?

இந்த உலகில் ஆஸ்த்மாவினால் கிட்டத்தட்ட முன்னூறு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. கிட்டதட்ட 250,000 மக்கள் வருடந்தோறும் உலகில் இறக்கிறார்கள். இந்த ஆஸ்த்மாவிற்கு முறையான சிகிச்சைகள் இல்லையெனினும், மக்கள் தங்கள் வாழ்க்கை முறையின் மூலம் கட்டுபடுத்தலாம் எனவும் ஆய்வு சொல்கிறது.

ஆஸ்த்மாவிற்கான அறிகுறிகள் என மூச்சு இழப்பு, நெஞ்சில் இறுக்கம், தொடர் இருமல் போன்றவை ஆகும். இப்படி வரும்போது உடனடியாக மருந்தினை எடுத்துகொள்வது பயன் தரும். ஆனால் இது போன்ற சூழலில் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லதாகும்.

எந்த ஒரு நோயையும் உதாசீனபடுத்துவது நம்மில் பெரும் அபாயத்தை விளைவிக்கும். தெரிந்தே அந்த தவறை நாம் செய்து கொண்டே வருகிறோம்.

(தொடரும்)




பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 5

'வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் அக்காவின் காதலை எதற்கு தடுத்தீர்கள் என கேட்டேன். அதற்கு அம்மா, அந்த பையனுக்கும், சுபாவுக்கும் சரிப்பட்டு வராதுன்னு தெரிஞ்சிதான் சொன்னேன், அந்த பையனுக்கு அவனுடைய குணத்திற்கு ஏத்தமாதிரி பொண்ணு கிடைக்கனும்னு நினைச்சேன். நம்ம சுபா அவனுக்கு சரிபட்டு வரமாட்டா.

அம்மாவின் இந்த வார்த்தைகள்... நான் எதிர்பார்க்கவே இல்லை. எப்படி அம்மா தீர்மானம் செய்தார். அப்படியெனில் நான், காயத்ரி. காயத்ரிக்கு நான் பொருத்தமா என்றேன். படிக்கிற வயசில என்ன இப்படி ஒரு ஆசை, பழக்கம் வேற, பழக்கத்தை மீறிய வழக்கம் வேற. நீ நாலைஞ்சி வருஷம் கழிச்சி எப்படி இருப்பியோ அப்பத்தான் சொல்லமுடியும். நேத்து வரைக்கும் நீ இருந்தமாதிரி இருந்தா நிச்சயம் நான் உன்னை அந்த பொண்ணுக்கு கட்டி கொடுக்க மாட்டேன். அவ குணத்துக்கு நீ சரிப்பட்டு வந்து இருக்கமாட்ட. இதெல்லாம் பத்தி இப்ப எதுக்கு கவலைப்படற. ஒருத்தரை பிடிச்சி இருந்தா எதுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைப்பு வருது. அம்மாவின் வார்த்தைகளில் கோபம் மறைந்து கொண்டிருந்ததை உணர்ந்தேன். எப்போதாவது வெளிப்பட்டு விடலாம் என்பதால் அமைதியாக இருந்தேன்.

நான் காயத்ரியை பார்க்க நினைச்சதுக்கு காரணமே இத்தனை வருசமா என்னால உன்னை மாத்த முடியலையே, ஆனா ஒரு நாளுல உன்னை மாத்திட்டாளே அப்படிங்கிறதை தெரிஞ்சிக்கத்தான். அவங்க அம்மா, அப்பா கூட காதல் திருமணம் தான். சொந்தகாரங்க எல்லாம் இவங்களை ஒதுக்கி வைச்சிட்டாங்க. எதுக்கு அந்த ஊருல இருக்கணும்னு கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்தவங்கதான். அதிக பேச்சு வார்த்தை எல்லாம் இல்லையாம். அம்மா தொடர்ந்து பேசியதும் நான் அமைதியாகவே இருந்தேன். இங்க பாரு முருகேசு எனக்கு காயத்ரியை ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு. இதே மாதிரி எல்லாருமே எல்லா நேரத்திலும் இருப்பாங்கனு நினைக்காத.

சரிம்மா என சொல்லிவிட்டு அம்மாவுக்கு உதவியாய் சில வேலைகள் செய்தேன். அம்மா சொன்னது மனதில் என்னவோ பண்ணிக்கொண்டு இருந்தது. அதிலும் அந்த ஆசிரியர் சொன்ன விசயம் நெருடலாக இருந்தது. எனது மனம் காயத்ரிக்கு எதற்கு கட்டுப்பட்டது என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை. எனது சந்ததிகளை பெருக்கி கொள்ளவா நான் காயத்ரியை நேசிக்கின்றேன். ஒருவேளை எங்கள் இருவருக்கும் சந்ததிகளே இல்லாமல் போனால் காயத்ரி என்னைவிட்டும், நான் காயத்ரியை விட்டும் பிரிந்து சென்றுவிடுவோமா?

இந்த சின்ன வயதில் இப்படிப்பட்ட விபரீத எண்ணங்கள் எல்லாம் என்னுள் சுற்றி கொண்டிருந்ததை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என நினைத்தேன். அப்போது தொலைபேசி ஒலித்தது. அம்மாதான் எடுத்து பேசினார். எதிர்முனையில் காயத்ரி என்பதை தெரிந்து கொண்டேன். அம்மா பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தேன்.

காயத்ரியோட அப்பா பிசினஸ் டிரிப்பை கேன்சல் பண்ணிட்டு வந்துட்டு இருக்காராம். காயத்ரியோட அம்மா மூச்சு விட கஷ்ட படறாங்களாம். இந்த வியாதிக எல்லாத்துக்கும் ஒரு மருந்து இருக்க கூடாதா என அம்மா வேதனைப்பட்டு கொண்டார். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்பா வந்ததும் இந்த விசயத்தை அம்மா சொன்னார். ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயிருக்கலாமே என அப்பா தனது பங்குக்கு சொன்னார். எத்தனை வருசமா இருக்கு என்றார் மேலும். சின்ன வயசிலே இருந்து இருக்குனு சொன்னாங்க என்றார் அம்மா.

மருந்து மாத்திரை எல்லாம் பக்கத்திலேயே வைச்சிருக்க சொன்னியா என்றார் அப்பா. ம்ம் என்றார் அம்மா. அப்பா பேசியபோது எனக்குள் இனம் புரியாத பயம் வந்து சேர்ந்தது. ஆஸ்த்மாவினால் அவதிப்படுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் அப்பா சொன்னபோது இது மிகவும் ஆபத்தான நோய் போன்ற தோற்றத்தை எனக்கு கொடுத்தது. ஆமா அவங்களுக்கு சொந்தக்காரங்க இல்லையா என்றார் அப்பா.

யாரும் இங்கே இல்லை என அம்மா சொன்னதும் எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. எதற்கு இப்படி பேசறீங்கப்பா என கேட்டுவிட்டேன். என் மனசுக்கு சரியா படலை முருகேசு என்றார் அப்பா. அப்பாவின் முகம் மிகவும் கலங்கி போய் இருந்தது. இரவு பத்து மணி இருக்கும். தொலைபேசி ஒலித்தது. எங்கள் வீட்டுக்கு இப்படியெல்லாம் இரவில் தொலைபேசி வருவது இல்லை.

எனது அறையை விட்டு வெளியே வந்தேன். அம்மா அருகில் இருக்க, அப்பா தொலைபேசியில் பேசியவர் தொலைபேசியை கீழே வைத்துவிட்டு தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டார். என்ன ஆச்சுங்க எனும் அம்மாவின் குரலில் தெரிந்த பதற்றம் எனக்குள் பற்றிக்கொண்டு கை கால்களில் எல்லாம் நடுக்கம் கொடுத்தது. அந்த பொண்ணோட அம்மா இறந்துட்டாங்களாம் என அப்பா சொன்னதும் அம்மா ஓவென அழுதுவிட்டார். நான் இடிந்து போய்விட்டேன். அப்பா எங்களை அவசரமாக கிளம்ப சொன்னார்.

காயத்ரியின் வீட்டினை அடைந்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது. வேறு சிலரும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். வீட்டிற்குள் சென்றதும் அம்மா அவர்கள் இருவரையும் கட்டிக்கொண்டார்கள். காயத்ரியின் அப்பா வந்தபோது இரவு ஒரு மணி இருக்கும். அவர் காயத்ரியின் அம்மாவை கட்டிபிடித்து அலறிய அலறலில் எனக்கு இந்த உலகம் எல்லாம் வெறுத்து போய்விட்டது.

அன்று இரவெல்லாம் அங்கேயே அழுது கொண்டிருந்தோம். காயத்ரியின் சொந்தக்காரர்கள் என காலையில் சில பேர் வந்து கொண்டிருந்தார்கள். 'என் தங்கச்சி உன்னாலதான் செத்துட்டா' என ஒருவர் காயத்ரியின் அப்பாவை பார்த்து சொன்னபோது நான் நிலைகுலைந்து போனேன். அப்படி சொன்ன அவரை மற்றொருவர் திட்டி கொண்டிருந்தார். தாயை பறி கொடுத்த அந்த நிலையில் இந்த பிரச்சினைகள் காயத்ரியையும் அவளது அக்காவையும் என்ன பாடுபடுத்தும். ஆனால் வந்தவர் விடாமல் காயத்ரியின் அப்பாவை திட்டி கொண்டே இருந்தார். காயத்ரியின் அக்காதான் 'மாமா நீங்க வீட்டை விட்டு வெளியே போங்க' என அழுகையின் ஊடே அவரை சத்தம் போட்டார். 'இவரை வெளியே அனுப்புங்க' என அவர் மீண்டும் சொன்னதும் ஒரு சிலர் அவரைப் பிடித்து வெளியே இழுத்து சென்றார்கள். ஆனால் காயத்ரியின் அப்பா எதுவுமே பதில் பேசாமல் காயத்ரியின் அம்மாவின் முகத்தை பார்த்து கொண்டே இருந்தார். அன்று நடந்த நிகழ்வுகள் என்னை விரக்தியாய் அமர வைத்துவிட்டது.

அப்பா வேலைக்கு லீவு சொல்லிவிட்டார். நான் கல்லூரிக்கு லீவு போட்டேன். காயத்ரியின் அப்பா அதிர்ச்சியில் அமர்ந்து இருக்க, என் அப்பா எல்லா வேலைகளையும் செய்தார். எல்லா காரியங்களையும் அன்றே செய்து முடித்தார்கள். இது எல்லாம் நடந்து கொண்டிருக்க என் அம்மாவை பார்க்கும்போது மனதில் அதிக பயம் வந்து சேர்ந்தது. அம்மாவும் ஒருநாள் இப்படி போய்விட்டால், நினைக்கும்போதே மேலும் அழுகை பீறிட்டு வந்தது. அம்மாவின் அருகில் சென்றேன். அப்பா எதற்கு அப்படி பேசினார் எனும் நினைப்பு சுற்றிக்கொண்டே வந்தது.

வந்திருந்த காயத்ரியின் சொந்தக்காரர்கள் எல்லாம் அன்று இரவே கிளம்பினார்கள். அதுவரை காயத்ரியின் அப்பா ஒரு வார்த்தை பேசவில்லை. மௌனமாகவே இருந்தார். தண்ணீர் குடிக்கவோ, சாப்பிடவோ இல்லை. கண்ணீர் மட்டும் வழிந்தோடி கொண்டிருந்தது. என் அப்பா காயத்ரியின் அப்பா கூட பேச்சு கொடுத்தார். காயத்ரியையும், அவளது அக்காவையும் பார்க்க பாவமாக இருந்தது.

'சார், என் ரெண்டு பொண்ணுகளையும் உங்ககிட்ட ஒப்படைக்கிறேன், பார்த்துக்குவீங்களா' என அவர் சொன்னதும் என் அப்பா 'எதுக்கு சார் அப்படி எல்லாம் பேசறீங்க, மனசு உடைஞ்சிராதீங்க' என அப்பா ஆறுதல் சொன்னார். அதற்கு பின்னர் அப்பாவை ஒரு தனியறைக்கு அழைத்து சென்றார். அரை மணி நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வரவில்லை. காயத்ரியும், அவளது அக்காவும் என் அம்மாவின் மேல் சாய்ந்து இருந்தார்கள். என் அம்மா!

சிறிது நேரம் கழித்து அவர்கள் வெளியே வந்ததும் அப்பா கண்களில் கண்ணீரோடு இருந்தார். அன்று இரவு எங்கள் நால்வரையும் எங்கள் வீட்டிற்கு போக சொன்னார் அப்பா. நானும் உடன் இருக்கிறேன் என சொன்னேன். அம்மா மட்டும் அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு எங்கள் வீட்டிற்கு சென்றார்.

அப்போது அப்பா என்னை வெளியே அழைத்து சொன்ன விசயம் என்னை உருக்குலைய வைத்தது. காயத்ரியின் அப்பா, காயத்ரியின் அம்மாவிடம் செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில் உயிரை மாய்த்து கொள்ள வேண்டும் என முடிவு எடுத்து விட்டதாகவும், அவரை சமாதனப்படுத்துவதற்குள் மிகவும் கஷ்டமாகிப் போய்விட்டது என்றார் அப்பா. ஆனால் எந்த நேரத்திலும் அந்த முடிவுக்கு போய்விடுவாரோ என அச்சத்தில் தான் இருப்பதாக சொன்னார்.

நான் காயத்ரியின் அப்பாவை பார்க்க வீட்டிற்குள் சென்றேன். அவர், காயத்ரியின் அம்மாவின் படத்தையே பார்த்து கொண்டிருந்தார். 'சார்' என்றேன். திரும்பினார். அவரது சிவந்த கண்கள் என்னை மீண்டும் அழ வைத்தது.

(தொடரும்)

Tuesday, 13 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 4

காலையில் விழித்து எழுந்ததும் மீண்டும் போர்வைக்குள் முடங்கி கொள்ள வேண்டும் போல்தான் இருந்தது. ஆனாலும் அம்மாவுக்கு உதவியாய் இருந்திட வேகமாக எழுந்தேன். அம்மா இன்னமும் எழுந்திருக்கவில்லை. வீடெல்லாம் கூட்டி, வாசற்படியை கூட்டினேன். வாசலில் தண்ணீர் தெளித்தேன். அந்த சுகமான காற்று இதமாகத்தான் இருந்தது. அழுக்காக இருந்த ஆடைகள் எல்லாம் வேகமாக அலசி காயப்போட்டேன். பின்னர் வேகமாக குளித்துவிட்டு வீட்டில் இருந்த சாமி அறைக்கு சென்றேன். ஒரு வித்தியாசமான உணர்வு மனதில் சில்லிட்டு போனது. அங்கே அப்படியே அமர்ந்துவிட்டேன். அம்மா வந்து அழைத்த பின்னர் தான் நான் இவ்வுலக்கு மீண்டும் வந்தேன்.

'முருகேசு, நீதானா? இல்லைன்னா அந்த காயத்ரியே உன் ரூபத்தில இங்க வந்துட்டாளா' என்றார். அந்த கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்தது. 'நான் தான் மா' என சொல்லிவிட்டு சாமி அறையை விட்டு எழுந்தேன். 'என்னைக்குமில்லாத திருநாளா ரொம்ப வேலை செஞ்சிருக்கியே, ரொம்ப சந்தோசமா இருக்குடா' என அம்மா சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு நிமிட மாற்றம் என்றெல்லாம் சொல்வார்கள், ஒரு நாள் மாற்றம், மூன்று நாள் மாற்றம், ஒரு மாத மாற்றம், ஒரு வருட மாற்றம் என்றெல்லாம் சொல்வார்கள். மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பார்களாம். ஓரிடத்தில் நிலையாய் மனம் நிற்காதாம். இதைத்தான் மனித மனம் குரங்கு என்றும் பழைய குருடி கதவை திறடி என்றெல்லாம் எழுதி வைத்து இருப்பதாக படித்து இருந்தேன். எனது இந்த மாற்றம் எத்தனை நாளைக்கோ என மனம் கணக்கு போட்டு கொண்டு இருந்தது. வாழ்நாள் வரை இப்படியே வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவை நினைக்கும்போது எதற்கு என்னாலும் முடியாது என நம்பிக்கை வந்தது. பாட புத்தகங்களை புரட்டி கொண்டு இருந்தேன். அம்மா குளித்துவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தார்கள்.

'அம்மா நான் சமைக்க உதவி செய்யட்டுமா' என காய்கறிகள் எடுத்து நறுக்க தொடங்கினேன். அம்மா என்னை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டே இருந்தார். இன்னிக்கு சைவ சாப்பாடு போதும், முட்டை கூட வேண்டாம் என்றேன். அம்மா அசைவம் மிக அரிதாகவே சாப்பிடுவார்கள். எனக்காக, என் அப்பாவுக்காக சமைப்பதோடு சரி. 'முருகேசு நீ போய் படி, நான் செஞ்சிக்கிறேன்' என்றார்கள். அம்மாவை அமர வைத்து சமைத்து பசியாற்ற வைக்க வேண்டும் என எந்த ஒரு பிள்ளையும் நினைத்து இருக்குமா என தெரியவில்லை. வயதான காலத்தில் கூட அம்மாவின் உழைப்பில் பிள்ளை அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருப்பதைத்தான் கண்டிருக்கிறேன். இத்தனை நாள் நான் கூட அப்படித்தான் இருந்தேன். முதன் முதலில் இன்றுதான் சமையல் செய்ய அம்மாவிடம் கற்று கொண்டேன். அம்மா கண்களால் ஒவ்வொன்றாக அளந்தது கண்டு பிரமிப்பாக இருந்தது.

சமையல் செய்து கொண்டிருந்தபோதே ருசி பாரு என கொடுத்தார்கள். எல்லாம் மிக மிக ருசியாக இருந்தது. அம்மா அத்தனை சுவை என்றேன். தானாக உழைத்து அதன் மூலம் வரும் சுகம் என்றுமே அலாதி என்றார் அம்மா. அம்மா நிறைய புத்தகங்கள் வாசிப்பார். வீட்டு வேலை முடிந்ததும் தையல் வேலை செய்வார். மதிய வேளையில் இரண்டு மூன்று மணி நேரம் புத்தகங்களுக்கு என நேரத்தை ஒதுக்கி விடுவார். அம்மாவுக்காகவே அப்பா ஒரு தனி புத்தக அறை வீட்டில் ஒதுக்கி தந்து இருந்தார். அம்மா தான் அடிமைபடுத்தப்பட்டு இருக்கிறோம், தனக்கு சம உரிமை வீட்டில் இல்லை என்றெல்லாம் சத்தம் போட்டது இல்லை. அப்பாவிடம் சத்தம் போட்டால், எங்களிடம் சத்தம் போட்டால் எங்களின் நலன் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிந்தது. நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை அம்மா என்னை சத்தம் போடவே இல்லை.

'அம்மா என்னை நீ திட்டவே இல்லையே' என்றேன். 'முருகேசு நான் திட்டனும்னு நினைச்சா திட்டுறேன்' என்றார். நான் நடந்து கொள்ளும் முறையில் அம்மாவை மிகவும் சந்தோசமாக வைத்து கொள்ளலாம் என்று நினைத்தபோது அளவிலாத சந்தோசம் பெருக்கெடுத்து ஓடியது. அன்று காலையில் நாங்கள் மூவரும் சாப்பிட அமர்ந்தபோது என்னைப்பற்றி அம்மா அப்பாவிடம் மிகவும் பெருமையாக பேசினார். அதைகேட்ட எனது அப்பா நானும் முருகேசு மாதிரி ஆயிருறேன் என சிரித்தார். உங்களுக்கு இன்னொரு காயத்ரியா கிடைக்கபோறா என அம்மா சொன்னதும் நானும் சிரித்து கொண்டேன்.

எத்தனை சுகமான வாழ்க்கை இது. கல்லூரிக்கு கிளம்பினேன். மறக்காமல் அக்கா கல்யாணத்தில் எடுத்த போட்டோ ஒன்றை எடுத்து கொண்டேன். காயத்ரியை எங்க பார்க்கலாம் என கேட்டு வா என அம்மா சொல்லி அனுப்பினார். ஆனால் அன்று காயத்ரி கல்லூரிக்கு வரவில்லை. மனதில் இனம் புரியாத கவலை ஒட்டிக்கொண்டது. காயத்ரியை பற்றி எப்படி விசாரிப்பது என புரியவில்லை. மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு காயத்ரியின் முகவரியை கல்லூரியில் வாங்கினேன். தரமாட்டேன் என முதலில் அடம்பிடித்தவர்கள் பின்னர் கொடுத்தார்கள்.

அந்த மதிய உணவு இடைவேளையில் காயத்ரியின் வீட்டிற்கு சென்றேன். வீட்டின் கதவை தட்டியதும் காயத்ரி வந்துதான் கதவைத் திறந்தாள். 'காயத்ரி என்ன ஆச்சு' என்றேன். 'உள்ளே வா முருகேசு' என அழைத்து சென்றாள். 'அம்மாவுக்கு சுகமில்லை, அதுதான் லீவு போட்டுட்டேன்' என்றாள். என்னைப் பார்த்த காயத்ரியின் அம்மா படுக்கையில் இருந்து எழுந்தார். 'நீங்க படுத்துக்கோங்க அம்மா' என்றேன். 'அம்மாவுக்கு என்ன ஆச்சு, அப்பா எங்கே காயத்ரி' என்றேன். 'அம்மாவுக்கு ஆஸ்த்மா பிரச்சினை, அப்பா பிசினஸ் விசயமா முந்தாநாள் வெளியூர் போனார், வர இரண்டு மூணு நாள் ஆகும், அக்காவுக்கு வேலை இடத்தில லீவு கிடைக்கலை. நேத்து நைட்டு ஆஸ்த்மா கொஞ்சம் சிவியர் ஆயிருச்சி' என்றாள். 'டாக்டர்கிட்ட போகலையா' என்றேன். 'அக்கா வந்ததும் போகணும்' என்றாள். 'அம்மாவை கூப்பிட்டு இப்பவே போவோம்' என்றேன் நான். 'இருக்கட்டும் தம்பி, பிறகு போயிக்கிறோம்' என எழுந்து அமர்ந்தவாறே காயத்ரியின் அம்மா சொன்னார். ஆனால் எனது மனம் கேட்கவில்லை.

அம்மாவுக்கு தொலைபேசி போட்டு முகவரி தந்தேன். அம்மா அடுத்த பதினைந்து நிமிடத்தில் அங்கு வந்தார்கள். 'நீங்க காலேஜுக்கு போங்க' நான் பார்த்துக்கிறேன் என்றார் அம்மா. காயத்ரிக்கு அவளது அம்மாவை விட்டு வர மனம் வரவில்லை. அவள் மிகவும் பயந்து போயிருந்தது அவளது முகத்தில் தெரிந்தது. நான் மட்டும் கலூரிக்கு திரும்பினேன். முதல் பாடம் நடந்து அரைமணி நேரம் ஆன போதிலும் அந்த பாட வகுப்பு ஆசிரியர் உள்ளே அனுமதித்தார். அப்போது ஒரு வாசகம் சொன்னார்.

முப்பது நிமிடம் பாடம் போய்விட்டதே என கவலைப்படுவதை விட இதோ இவனைப்போல பதினைந்து பாடத்தை கற்று கொள்ள ஆர்வம் வேண்டும், ஆனால் இன்று அடுத்த வகுப்பையும் நான் தான் எடுக்க போகிறேன், அதனால் இவன் ஒரு மணி நேர படிப்பை தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்றார்.  வாழ்க்கையை எப்படி எல்லாம் நோக்கலாம் என அவர் சொன்னதில் இருந்து புரிந்தது. நான் 'லேட்டா வந்ததுக்கு மன்னிக்கனும் சார்' என எழுந்து நின்றேன். 'நீ சரியான காரணத்துக்காக லேட்டாக வந்தால் அதற்கு எதற்கு மன்னிப்பு' என அவர் சொன்னதும் வாழ்க்கையில் அடுத்த பாடம் புரிந்தது. 'ஒருவேளை நீ இன்று வராமலே போய் இருந்தால் உனக்குள் ஆர்வம் இருந்தால் எப்படியும் இன்று நான் நடத்திய பாடத்தை உன்னால் கற்று கொள்ள முடியும்' என சொல்லியவர் பாடத்தை தொடர்ந்தார். கல்லூரிகளில் எல்லாம் அனைத்து பாடங்களும் தமிழில் இல்லாமல் இருப்பது சௌகரியமா, அசௌகரியமா என தெரியவில்லை. தமிழில் அத்தனை அழகாக பேசிய அந்த ஆசிரியர் ஆங்கிலத்திலும் அருமையாக பாடம் நடத்த தொடங்கினார்.


'Courtship behaviour in animals results in mating to end up in reproduction. It can be either simple or complex. In simple courtship behaviour, animals may use small number of chemical, visual and/or auditory stimuli. In complex courtship behaviour, it may be involved with two or more individuals that can use several modes of communication.


This courtship behaviour by animals is mainly used to attract a mate. Some use odorous substances such as pheromones, some may dance, so on. This behaviour is also used by the animal species to avoid interbreeding with other species. They use instinct power to achieve this'

அவர் இந்த வரிகளை சொன்னதும் நான் பாடத்தின் குறுக்கே கேள்வி கேட்க கையை உயர்த்தினேன்.

'என்னப்பா சொல்லு' என தமிழில் சொன்னார்.  பாடத்தை ஆங்கிலத்தில் நடத்துவதும் அவர் சாதாரணமாக பேசும் பொது தமிழில் பேசுவதும் எனக்கு பிடித்து இருந்தது. இருப்பினும் நான் தமிழில் கேட்பதா, ஆங்கிலத்தில் கேட்பதா என புரியாமல் தமிழிலேயே கேட்டேன்.

விலங்கினங்கள் என்றால் மனிதர்களையும் குறிக்கும் அல்லவா? அப்படி என்றால் மனிதர்களும், தான் ஒரு துணையை தேடுவது தங்களது சந்ததிகளை பெருக்கி கொள்ளவா? என்றேன். எனது கேள்வி அவரை சில நிமிடங்கள் யோசிக்க வைத்தது.

'Yes absolutely Murugeshu. However we human don't follow our instinct nowadays, although we have common drives and same goals like other animals, we have been moulded by cultural context and we rather follow our customs.

எனது பெயரை சொன்னதும் நான் அதிர்ந்தேன். என்னை எங்கு பார்த்தார், எப்படி எனது பெயர் இவருக்கு தெரியும் என யோசித்து கொண்டிருந்த போதே  'thank you sir' என சொல்லிவிட்டு அமர்ந்தேன். அன்று அவர் நடத்திய பாடம் எல்லாம் எப்படி விலங்கினங்கள், தாவரங்கள் இந்த பூமியில் வாழ வகை செய்து கொண்டன என விவரித்தார். எனக்கு அந்த ஆசிரியரை பிடித்து போனது.

பாடங்களின் ஊடே காயத்ரியின் அம்மாவை பற்றிய நினைவுகள் வந்து போனது. என் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாதபோது நான் இப்படியா இருந்தேன் என நினைக்கும்போது அழுகை வந்தது. மாலை வேளையில் காயத்ரியின் வீட்டை அடைந்தேன். அம்மா அங்குதான் இருந்தார். காயத்ரியின் அக்காவும் வந்து இருந்தார். காயத்ரியின் அம்மா மிகவும் தளர்ச்சியாக காணப்பட்டார்.

'என்னம்மா சொன்னாங்க' என்றேன். 'பயப்படும்படியா ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்கபா' என்றார். அவர்களுக்கு தைரியம் கொடுத்துவிட்டு நாங்கள் வீட்டை விட்டு கிளம்பி போகையில் எனது அம்மாவின் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டு கண்ணீர் விட்டாள் காயத்ரி.

'எதுனாலும் எனக்கு ஒரு போன் போடும்மா, கவலைப்படாதே. நான் காலையில வரேன்' என்றார். என் அம்மாவை கடவுள் என்றே அவர்கள் நினைத்து கொண்டிருக்க கூடும். எனது கண்கள் கலங்கியது. எவரேனும் உதவி என கேட்டு வந்துவிட்டால் அம்மா அடுத்த நிமிடம் என்று கூட பார்க்கமாட்டார். உடனடியாக செய்துவிடுவார். வேறு சாக்கு போக்கு எல்லாம் சொல்வது அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்காது. அதனால் எங்கள் காலனி பகுதியில் இருப்பவர்கள் அம்மாவை 'நிஜ காயத்ரியே இங்க வந்து அவதரிச்சி இருக்கு என்பார்கள்' நாங்கள் ஆறு வருடங்கள் முன்னர் வேறொரு ஊரில் இருந்த போதும் அம்மா இப்படித்தான். அம்மாவின் மீது நான் எரிந்து விழுவேன். உனக்கென கவலை வந்துச்சி என்பேன். யார் எக்கேடு கேட்டு போனால் என்ன என சொல்வேன். அம்மா எப்போதும் ஒன்றே ஒன்றுதான் சொல்வார். 'சாமி இப்போவெல்லாம் இங்கே வராதுடா. நாம தான் சாமியா இருந்து ஒருத்தரை ஒருத்தர் காப்பத்தனும்' என்பார்.

ஒரு ஆட்டோவை பிடித்தோம். 'காயத்ரியை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்குடா' என அம்மா சொன்னதும், அம்மாவின் தோள்களில் சாய்ந்தேன்.

(தொடரும்)