Friday, 9 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 2

புரையேறிய எனக்கு வேகமாக தண்ணீர் பாட்டில் திறந்து தண்ணீர் தந்தாள்.

'யாரோ நினைக்கிறாங்க' என சொல்லிக்கொண்டே 'உன் பேரு என்ன' என திருப்பி கேட்டேன்.

யார் உன்னை நினைப்பாங்க என்றாள் அவளது பெயரை சொல்லாமல்.

என் அம்மா தான் என சொல்லி வைத்தேன்.

உங்க அம்மா மட்டும் தான் நினைப்பாங்களா என அவள் கேட்டதும் உலகம் கண்ணுக்கு முன் வேகமாக சுழன்றது.

என் பேரு காயத்ரி.

'என் அம்மாவோட பேரு கூட காயத்ரிதான். ஆனா அவங்க ஒரே தொனதொன ரகம். எப்ப பார்த்தாலும் அதை செய், இதை இப்படி செய் அப்படின்னு நச்சரிச்சிட்டே இருப்பாங்க. அதனால எனக்கு எரிச்சலா வரும். நிறைய பொய் சொல்வேன் என் அம்மாகிட்ட. எதுனாலும்னா உடனே விரதம் இருக்க ஆரம்பிச்சிருவாங்க.

இப்படித்தான் என் அக்கா ஒருத்தரை லவ் பண்ணினா. அதெல்லாம் கூடாது, அந்த பையன் சரியில்லை அப்படி இப்படி பாட்டு பாடி என் அக்கா மனசை மாத்தி போன வருஷம் தான் வேற ஒருத்தரோட கல்யாணம் ஆச்சு. இதுல என் அக்கா வேற அட்வைஸ். அம்மா பேச்சை கேட்டு நட, யாரையும் லவ் பண்ணி தொலைச்சிராதேனு. ஆனா என் அப்பா எதையும் கண்டுக்க மாட்டாரு' என சொன்னதும் காயத்ரியின் முகத்தில் சின்ன மாற்றம் தெரிந்ததை கவனித்தேன்.

'அம்மாகிட்ட இனிமே பொய் சொல்லாத. இன்னைக்கு என்ன நடந்துச்சோ எல்லாத்தையும் சொல்லு' என்றதும் 'வகுப்பை விட்டு வெளியே அனுப்பினது, உன்னை பாத்துட்டு இருந்தது எல்லாமா' என்றேன்.

'ஆமா, எல்லாத்தையும் தான். இனிமே அம்மா என்ன சொன்னாலும் உடனே செஞ்சிரு. எந்த அம்மாவும் தன்னோட பிள்ளை நல்லா இருக்கனும்னுதான் நினைப்பாங்க, குட்டிச்சுவரா போகணும்னு நினைக்க மாட்டாங்க. அதனால நீ அவங்க சொன்னா மறுக்காம செய்யி. என்னையவே பாத்துட்டு இருக்காத, படிப்புல கவனம் செலுத்து' என்றாள்.

'அப்ப இனிமே என் கூட சாப்பிட வரமாட்டியா, பேசமாட்டியா' என்றேன்

'அதது அதுபாட்டுக்கு நடக்கும், இனிமே உன் அம்மாகிட்ட பொய் பேசாத. நானும் என் அக்காவும் என்ன நடந்தாலும் எங்க அம்மாகிட்ட சொல்லிருவோம். அப்படித்தான் என் அக்கா எட்டாவது படிக்கையில ஒரு திருட்டு தம் அடிச்சிட்டு இன்னைக்கு திருட்டு தம் அடிச்சேன் அப்படின்னு அம்மாகிட்ட சொல்ல, அடுத்த நாளு ஸ்கூலுக்கு போறப்ப என் அக்கா கையில சார்மினார் சிகரெட்டும், லைட்டரும் எங்க அம்மா கொடுத்தாங்க. அக்கா, அம்மாவை கட்டிபிடிச்சிட்டு அழுதுட்டா. ஒன்னே ஒன்னு எங்க அம்மா சொன்னாங்க. நீங்க தப்பு செஞ்சா உங்களை மட்டும் இல்ல, என்னையும் உங்க அப்பாவையும் சேர்த்துதான் பாதிக்கும், அதே போல நாங்க தப்பு செஞ்சா எங்களை மட்டுமில்ல உங்க ரெண்டு பேரையும் சேர்த்துத்தான் பாதிக்கும்னு. அம்மாகிட்ட மறைக்க வேண்டாம்' என்றாள். அவள் சொன்னதை கேட்டதும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் என் அம்மா!

'அவ்வளவுதான், என் அம்மா சாமி ரூம்ல உக்காந்துட்டு பகவானே என்ன இப்படி செய்ற என அழ ஆரம்பிச்சிருவாங்க' என்றேன்.

'அம்மாகிட்ட பொய் சொல்லாத இனிமே. அவங்களுக்கு ஒரு பாதுகாப்பு, நம்பிக்கை தேவை. தன்னோட பிள்ளை தனக்குத்தான் என்கிற ஒரு அன்பு' என சொன்னாள் காயத்ரி.  பின்னர் வகுப்புக்கு நகர்ந்தோம். அனைவரின் கண்களும் எங்களையே மொய்த்தன. அருகில் இருந்த நண்பனிடம் 'எனக்கு தெரிஞ்ச பொண்ணு, எங்க குடும்பத்துக்கு பழக்கம் என பொய் சொன்னேன். இனி அவன் எல்லாரிடமும் சொல்லிவிடுவான், நாங்கள் பழக எந்த பிரச்சினையும் இருக்காது என்றே கணக்கு செய்தேன்.

அன்றைய மாலை பாட வகுப்புகளில் நான் அவளை பார்க்கவே இல்லை. நன்றாக பாடத்தில் கவனம் செலுத்தினேன். மாலை நாங்கள் பிரிந்து செல்லும்போது 'நான் நாளைக்கு சைவம்' என்றாள் காயத்ரி. 'நானும் சைவம்' என சொல்லிக்கொண்டேன். தனது பையில் இருந்து ஒரு புகைப்படத்தை காட்டி 'இது என் அம்மா, இது என் அப்பா, இது என் அக்கா, இது நான், உன் அம்மாகிட்ட காட்டு' என தந்தாள். 'நானும் போட்டோ கொண்டு வரேன்' என சொல்லி விடைபெற்றேன். அவள் முகம் மிகவும் தெளிவாக இருந்தது.

வீட்டிற்குள் நுழையும் முன்னர் 'இன்னைக்கு காலேஜு எப்படி இருந்துச்சி, என்ன பாடம் நடத்தினார்கள், என பல கேள்விகள் கேட்டு வைத்தார் அம்மா. ஆனால் கடைசியாக ஒரு கேள்வி கேட்பார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.


'அந்த பொண்ணு வந்து இருந்தாளா'


'எந்த பொண்ணும்மா'


'அதான், காலேஜுல சேரப் போன  நாளு பார்த்துட்டே இருந்தியே'


அம்மாவின் இந்த கேள்வி என்னை பொய் சொல்ல வைக்க தூண்டியது. ஆனால் பொய் சொல்ல மனமில்லாமல் நடந்த அனைத்து விசயங்களையும், காயத்ரி சொன்ன பொய் சொல்லாதே என்ற விசயத்தையும் சொல்லி வைத்தேன்.  அதோடு காயத்ரி கொடுத்த போட்டோவையும் கொடுத்தேன்.


அதைப் பார்த்த அம்மா...


(தொடரும்)



Thursday, 8 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 1

நான் முதன் முதலாக கல்லூரியில் சேர சென்றபோது எனது கண்ணில் ஒரு பெண் தென்பட்டாள். எத்தனையோ பேர் நடமாடிக் கொண்டிருக்க அவள் மட்டுமே எனது கண்ணில் பட்டாள். ஆனால் அவளிடம் எப்படி பேசுவது என்று ஒரு தயக்கம் மனதில் நிழல் ஆடியது. அருகில் அம்மாவும், அப்பாவும் வேறு இருந்தார்கள். 'கண்ணு எங்கே போகுது?' அம்மா என்னை பார்த்து கேட்டுவிட்டார். 'எங்கேயும் போகலை' என வேண்டா வெறுப்பாக பதில் சொன்னேன். 'ஒழுங்கா படி' என அம்மா அன்பு உத்தரவு போட்டார்.

எத்தனையோ சினிமாவைப் பார்த்து பார்த்து இந்த பார்வை எல்லாம் பழகி போய் இருந்தது. கல்லூரியின் முதல் நாள் வகுப்பு. அதே வகுப்பில் அன்று பார்த்த பெண் வந்து அமர்ந்தாள். எனக்கு மனதில் துள்ளல் அதிகம் ஆகியது. அவளையே பார்த்து கொண்டிருந்தேன். அவள் என்னைப் பார்க்க வேண்டும் எனும் நோக்கம் அதிகமாகவே இருந்தது. ஆனால் கழுதை என்னை பார்க்கவே இல்லை. கழுதை என்றால் அழகு என்று தமிழில் அர்த்தம் என எவரோ சொன்னது பிற்பாடுதான் தெரிந்தது.

என்னை நோக்கி வகுப்பு ஆசிரியர் ஒரு கேள்வியை கேட்டார் என்பதே எனது பக்கத்தில் இருந்த மாணவன் சொல்லித்தான் தெரியும். நானும் சினிமாவில் நடிக்கும் ஹீரோ போல ஆகிவிட்டேன் என நினைக்கும்போது மனதில் வெட்கத்தை விட கர்வம் அதிகமாகவே இருந்தது. முதல் வகுப்பிலேயே வகுப்பை விட்டு வெளியேற்றபட்டேன். கால் கடுக்க வகுப்பின் வெளியில் நின்று கொண்டிருந்தேன். அவள் முகம் தெரியவில்லை. இங்கும் அங்கும் அலைந்து பார்த்தேன், ஆனால் அவள் அமர்ந்து இருந்த இடம் கண்ணுக்கு தென்படவில்லை. ஏகலைவன் போல ஆகிவிட்டேன். வெளியில் நின்று பாடத்தை கற்று கொள்ளலாம் என பாடத்தை கேட்க ஆரம்பித்துவிட்டேன். அம்மா வேறு சொன்னது அடிவயிற்றில் புளியை கரைத்தது, அமிலத்தை வயிற்றில் வளர்த்தது.

அந்த வகுப்பு முடிந்ததும் வெளியில் வந்த ஆசிரியர் என்னை முறைத்து பார்த்துவிட்டு 'உள்ளே போ மூதேவி, இனிமே இப்படி நடந்துகிட்ட உங்க அப்பாவை கூப்பிட்டு வர வேண்டி இருக்கும்' என்றார். ஆனால் அவர் எவர் பெயரையும் அழைத்து பதிவு செய்யவே இல்லை. அப்பாவா, ரொம்ப வசதியாக போய்விட்டதே என நினைத்து கொண்டேன். அம்மா என்றால் அவ்வளவுதான். நான் தொலைந்தேன். இப்படி மனதில் சின்ன பயம் ஒட்டி கொண்டாலும் இதுபோன்ற திரில்லான விசயங்களை செய்ய ஒரு தில் வேண்டும்.

வகுப்புக்குள் சென்றதும் எல்லோரும் என்னை பார்த்து கெக்கே பிக்கே என சிரித்தார்கள். நானும் அவர்களுடன் சிரித்து வைத்தேன். மானம், ரோசம் இருப்பவர்களுக்குத்தான் சுர்ரென்று கோபம் வரும். எனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் அவள் மட்டும் சிரிக்காமல் இருந்தாள். அடுத்த பாட வகுப்புகளில் அவளையே பார்த்து கொண்டிருந்தேன். என்ன பாடம் நடத்தினார்கள் என எனக்கு தெரியாது ஆனால் மதியம் எனது நோட்டினை பார்த்தபோது அவளது அழகிய முகத்தை படங்களாக வரைந்து வைத்து இருந்தேன். கல்லூரி என நினைத்தால் இது ஒரு பள்ளிக்கூடம் போல் அல்லவா இருக்கிறது என மனதில் நொந்து கொண்டேன், ஆனால் எவருமே வரவு பதிவு செய்ய பெயரை கூப்பிடவே இல்லை. அவள் பெயர் தெரிய வாய்ப்பே இல்லாமல் போனது.

மதிய உணவு வேளை வந்தது. 'உன்கிட்ட பேசணும்' என்றாள் அந்த பெண். மனதில் திக்கென்று இருந்தது. எத்தனையோ கவிதைகளை யோசித்து வைத்தேன். ஆனால் ஒரே ஒரு கவிதை மட்டும் நினைவில் நின்றது. கல்லூரியில் நான் கற்றது கல்வி அல்ல, காதல்.

'எதுக்கு என்னை பார்த்துக்கிட்டே இருக்க' என்றாள். 'நான் உன்னைத்தான் பார்த்துக்கிட்டே இருந்தேன்னு உனக்கு எப்படி தெரியும், அப்படின்னா வேற எங்கயோ பார்க்கிற மாதிரி நீ என்னை பார்த்துகிட்டே இருந்தியா' என்றேன். 'இங்க பாரு, தேவையில்லாம பிரச்சினை பண்ணாத, நான் அப்பப்ப பார்க்கறப்ப என்னையவே பார்த்துட்டே இருந்த, பொய் சொல்லாத' என்றாள்.

திக்கென்று இருந்த மனம் திண்டாட தொடங்கியது. 'இனிமே உன்னை பார்க்கலை' என சொல்லிவிட்டு சாப்பிட சென்றேன். நாங்கள் இருவரும் பேசிய வார்த்தைகளில் அன்னியோன்யம் தெரிந்தது. நான் அவளை நீங்க என்றோ அவள் என்னை நீங்க என்றோ சொல்லவே இல்லை.

தனியாக இருந்த ஒரு மரத்தின் கீழே நான் தனியாக சென்று சாப்பிட அமர்ந்ததும் 'என்ன சாப்பாடு' என்றே அவள் வந்து அருகில் அமர்ந்தாள். 'முட்டை, கருவாடு குழம்பு உள்ள சாப்பாடு' என காட்டினேன். அவளும் சிக்கன் சாப்பாடு என காட்டினாள். காலையிலேயே சிக்கன் எல்லாம் உன் வீட்டுல சமைப்பாங்களா' என பெரிய கேள்வியை கேட்டு வைத்தேன். சமைக்க கூடாதா? என ஒரு சிக்கன் துண்டை எனக்கு வைத்தாள். 'உன்னை நான் பார்க்கறதை நீ தப்பா எடுத்துக்கலையே' என்றேன். 'அதைப் பத்தி எல்லாம் பேசாத, சாப்பிடு என்றாள். 'என்னிடம் இருந்த முட்டையை பாதியாக வெட்டி அவளுக்கு தந்தேன்'

'உன் பேரு என்ன?' என்றாள்.

என் பேரு முருகேசு என்றேன். நட்டு கழண்ட கேசு அப்படின்னு வைச்சி இருக்கலாம் என சிரித்தாள்.

'உன் பேரு என்ன' என்றேன்.

'சோகேசு' என்றாள். நான் சிரித்துவிட்டேன், எனக்கு புரை ஏறியது.

(தொடரும்)

Wednesday, 7 March 2012

ஜீரோ எழுத்து -3 (ஒண்ணுமில்லை கோட்பாடு)

உலகில் எல்லாவகையான சிந்தனையாளர்கள் உண்டு. ஆனால் இவர்களை ஒரே மாதிரி சிந்திப்பவர்கள், வித்தியாசமாக சிந்திப்பவர்கள் என பிரித்து விடலாம். இதன் காரணமாகவே ஒருவரைப் பற்றி அவரா, அவர் அப்படித்தான் எனும் சிந்தனை கூட நம்மில் வந்துவிடுவது உண்டு. இப்படிப்பட்ட சிந்தனையில் வறட்டு சிந்தனை, தெய்வீகச் சிந்தனை, காதல் சிந்தனை, காம சிந்தனை, வேலை சிந்தனை, வெட்டிவேலை சிந்தனை என பல சிந்தனைகள் அடக்கம்.

நாம் இயங்கி கொண்டே இருக்க வேண்டும். நாம் ஏதும் செய்யாமல் இருந்தால் நமக்குள் விபரீத சிந்தனைகள் எல்லாம் எழும் என்பார்கள். ஏதும் செய்யாமல் எவரேனும் இருக்க இயலுமா? உறங்குதல் கூட ஒரு செயல் என ஆனபின் எப்படி ஏதும் செய்யாமல் எவராலும் இருக்க இயலும்? 'சும்மா இருப்பதே சுகம்' என்றார்கள்.

ஒரு நபரை சந்திக்கிறோம். நாம் அவரிடம் கேட்கிறோம். ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என! அவர் தனது பைகளில் எல்லாம் தேடிப்பார்த்துவிட்டு என்னிடம் ஒன்னும் இல்லை என சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். இப்பொழுது தன்னை எப்படி அவர் மறந்தார் எனும் கேள்வி எழ வேண்டும். ஒரு மனிதரை விடவா அவரிடம் இருக்கும் பொருள்கள் பெரிது? அவர் என்ன சொல்லி இருக்க வேண்டும், என்னைத் தவிர என்னிடம் வேறு பொருட்கள் இல்லை. ஆனால் எவரும் அப்படி சொல்வதில்லை. என்னிடம் ஒன்னும் இல்லை என சொல்வதன் மூலம் அவர் இருக்கிறார் எனும் புரிதல் தானாக வர வேண்டும் என்பதுதான் அந்த பதிலின் அர்த்தம். ஆனால் இந்த உலகம் பொருள்கள் இல்லாத ஒருவரை 'வெறும் பயல்' என்றுதான் பட்டம் சூட்டுகிறது.

எதற்கு இப்படி இருக்கிறாய்?

ஒண்ணுமில்லை.

ஏதாவது பிரச்சனையா?

ஒண்ணுமில்லை.

ஒண்ணுமே இல்லைன்னா எதுக்கு இப்படி இருக்கிறாய்?

அதான் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டேனே.

இப்படி ஒண்ணுமில்லை, மனிதர்களின் வாழ்வில் ஒரு பெரும் அங்கம் வகிக்கிறது. அறிவியல், தத்துவம், இறையியல் எல்லாம் இந்த ஒண்ணுமில்லை கோட்பாடு பற்றி என்ன சொல்கிறது?

அறிவியல் குறிப்பாக இயற்பியல் விதிப்படி இந்த உலகம் ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்து தொடங்கி ஒன்றுமே இல்லாத ஒன்றில் முடிவடையும் என்பதுதான். ஒன்றுமே இல்லாமல் எப்படி ஒன்று இருந்திட முடியும் எனும் போது 'அப்படித்தான், இப்போது என்ன செய்யப்போகிறாய்' என இயற்பியல் விதிகள் நமது சிந்தனைகளை கட்டுப்படுத்த எத்தனிக்கும்போது அங்கே 'ஒண்ணுமே சொல்ல இயலாமல்' போய்விடக்கூடிய வாய்ப்பு மிகவும் அதிகமே. ஆனால் இது ஒரு விதண்டாவாதம் என எவரும் நினைப்பதில்லை, ஏனெனில் இது அறிவியல்.

ஒரு முழு உருவம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். இப்போது அந்த உருவம் இருக்கிறது. இதற்கு முன்னர் அந்த உருவம் எங்கே இருந்தது? எங்கேயும் இல்லை என சொன்னால் நம்மால் நம்ப இயலுமா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது தத்துவம் சொல்லும் ஒண்ணுமில்லை. இப்பொழுது அதே உருவத்தை சின்னாபின்னாமாக்கி தூள் தூளாக்குவோம். நமது கண்ணுக்கே தென்படாத துகள்கள் இப்போது அந்த உருவம் ஆகிவிட்டது. அந்த உருவம் ஒன்றுமே இல்லையா எனில் ஆம் அப்படித்தான் ஆகிவிட்டது. துகள்கள், முடிந்தால் கண்டுபிடித்து கொள் என்கிறது தத்துவம். பிறக்கும் முன்னர் நாம் எப்படி இருந்தோமோ அப்படியே இறந்து பின்னர் ஆகிவிடுவோம் என மிக சர்வசாதாரணமாக சொல்லி செல்கிறது இந்த தத்துவம் சார்ந்த ஒண்ணுமில்லை. இதைத்தான் எதைக்கொண்டு வந்தாய், எதைக் கொண்டு செல்லப்போகிறாய் என பகவத் கீதை பேசுகிறது என ஒரு சிந்தனையாளர் எழுதினார்.

அடுத்ததாக இறையியல் சொல்லும் ஒண்ணுமில்லை. கடவுள் இருக்கிறார். எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார். எவரேனும் தெரிந்து கொண்டனரா என்றால் ஒண்ணுமில்லை என ஆகாயத்தை விளிக்கிறார்கள். இந்த ஒண்ணுமில்லை தன்னை தானே அறிந்து கொள்தல் என பொருள்கொண்டு அதில் இறைவனை அறிவது என்பதுதான் இறையியல் தத்துவம்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் வானத்தில் இருந்து பார்த்தால் பூமியில் உள்ள எல்லாம் ஒரே மாதிரிதான் தெரியுமாம்.  சமநிலை கோட்பாடு என்பதைத்தான் ஒண்ணுமில்லை கோட்பாடு அடைய துடிக்கிறது என்கிறது இந்த அறிவியல், தத்துவம், இறையியல் கோட்பாடுகள்.

சமநிலையை நோக்கிய ஒரு இழுவை என அறிவியலும், சமநிலையை நோக்கிய ஒரு பார்வை என தத்துவம், இறைவனுடன் கலந்து சமநிலை கொள்தல் என இறையியலும் ஒண்ணுமில்லை கோட்பாடு பற்றி குறிக்கிறது.

ஆனால் சம நிலையும், ஒண்ணுமில்லை என்பதும் வெவ்வேறானவை என்பதை இந்த மூன்று பார்வைகளும் பார்க்காமல் விட்டுவிட்டன. எப்படி ஒண்ணுமில்லை சமநிலை ஆக இயலும்? எல்லாம் இருப்பது கூட சமநிலை அடைய முடியும் அல்லவா.

ஒண்ணுமில்லை என்பதெல்லாம் நமது சிந்தனையை கட்டிப்போட சொன்ன ஒரு வழி. எனது தாய் சொன்ன ஒண்ணுமில்லை இன்னும் நினைவில் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. இயற்பியல் விதிகள் அனைத்தையும் தகர்த்துவிடத்தான் ஆசை. ஆனால் இயற்பியல் விதிகளே ஒன்னுமில்லாதபோது இல்லை என சொல்லியபின்னர், இல்லாத விதிகளை எப்படி தகர்ப்பது?

கந்தகம் நிறைந்த மண்ணில் இருந்துதான் உயிரினங்கள் தோன்றின என எவரேனும் சொன்னால் என்ன செய்வீர்கள்? அது உண்மையாக இருக்காது என ஒதுங்கி போய்விடுவீர்களா? அப்படி கந்தகம் நிறைந்த மண் எங்கே இருக்கிறது என தேடித்தான் போவீர்களா?

(தொடரும்)