Tuesday, 21 February 2012

மஹா சிவராத்திரியும் வில்வ மரமும்

பதினோராம் வகுப்பு படிக்க சென்ற போது ஒரு பாடல் என்னை மிகவும் அதிகமாக சிந்திக்க வைத்தது. அந்த பாடல் பாடிய பின்னரே பள்ளி தொடங்கும். அந்த பாடல் சிவபெருமானின் பெருமையை பற்றி பேசுகிறது என்பதெல்லாம் அந்த கணத்தில் எனக்கு தெரியாது.

உலகமெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

அன்றைய தினத்தில் இந்த பாடலானது பெரியபுராணத்தில் சேக்கிழாரால் எழுதப்பட்டது என்பது தெரியாது. பின்வரும் நாளில் கூட பெரியபுராணமோ, பன்னிரு திருமறைகளோ படிக்க வேண்டும் எனும் முயற்சி ஒருபோதும் எடுத்தது கிடையாது. திருவாசகம் இளையராஜாவின் சிம்பொனி இசையில் வந்தபோது கேட்டு மகிழ்ந்தது உண்டு. அப்போதுதான் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதன் அர்த்தம் புரிந்தது.

அதிலும் புல்லாகி பூடாகி எனும் வரிகள் மொத்த பரிணாமத்தையும் அசைத்து பார்த்துவிட்டு போகும். பல்விருகமாகி, பறவையாய் பாம்பாகி. எப்படியெல்லாம் சிந்தனைகள் வந்து குவிந்துவிடுகின்றன. புராணங்கள் மூலம் சொல்லப்பட்ட சிவன் பற்றிய கதைகள் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை சொல்லும் ஒவ்வொரு விசயங்களும் மனதில் ஒரு சிந்தனையை எழுப்பாமல் போவதில்லை, அது நேர்மறை சிந்தனையா, எதிர்மறை சிந்தனையா என்பது சிந்திப்பவரை பொறுத்தே அமைகிறது.

நான் ஒரே ஒரு விசயத்தில் மிக மிக தெளிவாக இருக்கின்றேன். சிவன், பிரம்மன், விஷ்ணு எல்லாருமே மனிதர்கள். ஒன்று இவர்கள் வாழ்ந்து இருக்கலாம், அல்லது இவர்கள் படைக்கப்பட்டு இருக்கலாம். எவர் இந்த புராணங்கள் (வியாசர் என்றே சொல்கிறார்கள்) எல்லாம் தொகுத்து எழுதினாரோ அவருக்கே எல்லாம் வெளிச்சம். அதைப்போலவே அந்த அந்த காலகட்டத்தில் சொல்லப்பட்ட விசயங்கள் எல்லாம் உண்மையிலேயே நடந்தனவா என்பதை ஆராய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. சொல்லப்பட்ட விசயங்களில் என்ன நீதி சொல்லப்படுகிறது என்பதை காண்பது மட்டுமே அறிவு என்றாகிறது.

கிருஷ்ணர் பற்றி நான் எழுதியதை வீட்டில் சொன்னதும் 'திமிர் பிடித்தவன்' என்றே என்னை சொன்னார்கள். உண்மையிலேயே யோசித்து பார்க்கிறேன், அத்தனை அகங்காரமா எனக்கு? தெய்வங்களாக போற்றப்படுபவர்களை நிந்திக்கும் அவசியம் எனக்கு எதற்கு வந்தது? நான் என்னை ஒருபோதும் ஆத்திகன் என்றோ, நாத்திகன் என்றோ நினைத்து கொள்வதில்லை. ஆனால் எனக்கு இறைவன் மிக மிக பிடிக்கும்.

நேற்று ஆலயத்திற்கு செல்கிறேன். மக்கள் அலைகடலென திரண்டு இருக்கிறார்கள். ஆலயத்தின் உள்ளே செல்லக்கூட இடம் இல்லை. சட்டென மனதில் நினைவுக்கு வருகிறது. அடடா, மஹா சிவராத்திரி. அத்தனை பக்தர்கள் கண்டு மனம் ஆனந்தம் கொள்கிறது. நான் நேற்று மீள்பதிவிட்ட பதிவினை நினைத்து  எனக்கே வெட்கமாக வருகிறது.  அலங்காரம் செய்யப்பட தெய்வ சிலைகள் கண்டு மனம் பூரிப்பு அடைகிறது. எங்கே எனது சிந்தனைகள். எனக்குள் எழுந்த எதிர்மறை சிந்தனைகள் எல்லாம் ஓடி ஒளிகின்றன.

பூஜைகள் நடந்து கொண்டிருக்க ஒருவர் சொற்பொழிவு செய்கிறார். நீங்கள் குரங்கு தெய்வம், மாடு தெய்வம் என விலங்குகளை எல்லாம் தெய்வமாக கொண்டாடுகிறீர்களே நீங்கள் செல்லவேண்டியது மிருககாட்சி சாலை, கோவில் அல்ல என்று ஒருவர் சொன்னாராம். அதற்கு விலங்குகளையும் மதித்து போற்றும் மனப்பான்மை உடையவர்கள் நாங்கள் என்பதில் எங்களுக்கு பெருமை உண்டு எல்லா உயிரினங்களையும் போற்றும் தன்மை படைத்தவர், நன்றியுடன் நடந்து கொள்பவர் இறைவனுக்கு சொந்தமானவர் என பதில் அளித்தாராம்.

அதற்கடுத்து சிவராத்திரி பற்றிய விசயங்களை பேசியதை கேட்டதும் எனக்கு இந்த மஹா சிவராத்திரி பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என ஆவல் பிறந்தது. அதிலும் குறிப்பாக வில்வ மரம் பற்றியும், தனக்கே தெரியாமல் அர்ச்சனை செய்து கொண்டிருந்த ஒருவர் பற்றி கூறியதும் சிவராத்திரி பற்றி தேடி பார்த்தேன். பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இருந்தது.

இந்த மஹா சிவராத்திரியானது வருடத்திற்கு ஒருமுறை வில்வ இலைகளால் சிவனுக்கு  பூஜை செய்யப்பட்டு இரவெல்லாம் விழித்து இருந்து, விரதம் இருந்து வழிபடுவதாகும். இது கிருஷ்ண பக்ச தினத்தில் நடைபெறுமாம். வருடா வருடம் இந்த நாள் மாறி மாறி வரும். இந்த மஹா சிவராத்திரியானது பெண்களால் தங்களது கணவர்மாரும், மகன்களும் நலமுடன் இருக்க வழிபடும் தினமாம். சிவனின் மனைவி பார்வதி தேவியார் அமாவாசை அன்று (இன்றுதான் அமாவாசை) தனது கணவருக்கும், குமாரர்களுக்கும் வழிபட்டதாக சொல்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் பாற்கடலை கடைந்தபோது பாம்பானது கக்கிய விஷம் உலகெலாம் பரவி அனைத்து உயிரினங்களையும் அழித்துவிடும் அபாயம் ஏற்படும் நிலை வந்தபோது 'அழிக்கும் கடவுள்' என போற்றப்படும் சிவன் 'காக்கும் பணியை' எடுத்து கொண்டு அந்த விஷத்தை தானே அருந்திய செயலை கண்டு வெகுண்ட பார்வதி தேவியார் 'பாச கயிற்றால் சிவனின் கழுத்தை பிடித்து நிறுத்த' அந்த விஷமானது அப்படியே நிற்க அந்த தினத்தை மஹா சிவராத்திரியாக கொண்டாடுகிறார்கள் என்பது ஒரு ஐதீகம்.

பிரளயம் என்று ஒன்று புராணங்களில் அதிக அளவு சொல்லப்பட்டு வருகிறது. இந்த பிரளயங்கள் ஏற்படும்போதெல்லாம் ஒரு யுகம் அழிந்து மறு யுகம் தோன்றுவது இயற்கை. அப்படி யுகங்கள் அழிந்து மறுபடியும் யுகம் தோன்றும்போது எல்லாம் அழிந்துவிட்டால் மீண்டும் உருவாக்குவது கடினம் என்பதால் சில விசயங்கள் மட்டும் பாதுக்கக்கப்படும். அப்படி பிரளயம் உருவானபோது சிவனை வழிபடுவோர் இந்த பிரளயத்தில் சிக்காமல் காக்கப்படுவது வாடிக்கை. இங்கே சிவன் அழிக்கும் தொழில் செய்பவரா? காக்கும் தொழில் செய்பவரா என்பது சிந்திக்க வேண்டியது. கெட்டதை அழித்து நல்லதை காக்கும் தெய்வமாகவே சிவனின் செயல்பாடுகள் இருக்கின்றன.

சித்ரபானு எனும் அரசர் தனது மனைவியுடன் சேர்ந்து விரதம் இருந்து சிவனை மஹாசிவராத்திரி அன்று வழிபட்டார்கள். எதற்காக இப்படி வழிபாடு செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அரசவைக்கு வந்திருந்த அஷ்டவக்ரா எனும் முனிவர் கேட்க சித்ரபானு சொன்ன கதை என கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அர்ஜூனன் எப்படி கண்ணனிடம் 'நீ இப்போதுதானே பிறந்தாய், ஆனால் எப்படி சூரியபகவான் மகனுக்கு பகவத் கீதையை சொன்னாய் என கேட்கும்போது' கண்ணன் 'நான் எல்லா பிறப்புகளின் நினைவுகளையும் சுமந்து கொண்டிருப்பவன், ஆனால் நீயோ மற்ற மனிதர்களோ ஒரே ஒரு பிறப்பு மட்டுமே நினைவில் இருக்கும் என்கிறான்'

அதுபோலவே சித்ரபானு தனது முற்பிறவியில் நடந்த விசயங்கள் தனக்கு நினைவில் இருப்பதாக கூறி தான் ஒரு வேட்டைக்காரன் என்றும், பறவைகள், விலங்குகள் என வேட்டையாடி திரிபவனாக வாழ்ந்தேன் என்றும் கூறுகிறான். அப்போது அவனது பெயர் சுஸ்வரா. இவ்வாறு வேட்டையாட சென்ற ஒரு தினம் மானை கொல்ல நினைக்கையில், அந்த மான், அதன் குடும்பத்தின் நிலை கண்டு கொல்லாமல் விட்டுவிடுகிறான். எங்கும் தேடியும் வேறு விலங்குகள் கிடைக்காமல் போக இருள் சூழ்ந்து கொள்கிறது. அது அமாவாசை தினம். அப்போது தன்னை இரவில் காத்து கொள்ள ஒரு மரத்தின் மீது ஏறிக்கொள்கிறான். தன்னிடம் இருந்த தண்ணீர் பானையில் இருந்த சிறு ஓட்டையால் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சம் கொட்டிக்கொண்டு இருந்தது. தனக்கு பசியும் தாகமும் வேறு. இந்த இரு நிலைகள் கொண்டிருந்தால் எப்படி உறக்கம் வரும் என்கிற நிலையோடு, உறங்கினால் கீழே விழுந்துவிடுவோம் என்கிற அச்சம் வேறு. தான் உறங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளை கிள்ளி கீழே போட்டுக்கொண்டே இருக்கிறான். காலை வந்ததும் பசியோடு காத்து இருக்கும் தனது மனைவி குழந்தைகளுக்கு உணவு எடுத்து செல்கிறான். உணவு உண்ணும் தருவாயில் 'எனக்கு உணவு போடுங்கள்' என ஒருவர் வந்து கேட்க தங்களுக்கு இருக்கும் உணவில் அவருக்கு  பகிர்ந்து தருகிறான்.

இப்படி வாழ்ந்த சுஸ்வரா மரணம் அடையும் தருவாயில் அவனை சிவலோகத்திற்கு அழைத்து செல்ல தேவர்கள் வருகிறார்கள். தேவர்கள் சுஸ்வராவிடம் நீ ஒரு இரவில் வில்வ மர இலைகளை மரத்தின் கீழ் இருந்த லிங்கம் மீது போட்டு பூஜித்தாய், உனது பானையில் இருந்த நீர் லிங்கம்தனை கழுவியது. அந்த இரவு முழுவதும் உணவு அருந்தாமல் இருந்தாய்.  எனவே உன்னை சிவலோகம் அழைத்து செல்ல வந்திருக்கிறோம் என்றார்கள். தனக்கு தெரியாமலே சிவனை பூஜை செய்த தனக்கு இத்தனை பெரிய பாராட்டா என சுஸ்வரா ஆச்சர்யம் கொள்கிறான். அதற்கு பின்னர் பல வருடங்கள் கழித்து சித்ரபானுவாக அவன் பிறந்தான். அந்த நாள் நினைவில் இருந்ததால் நானும் எனது மனைவியும் பூஜை செய்கிறோம் என சொன்னான் சித்ரபானு. அப்படித்தான் இந்த மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

இந்த மஹா சிவரத்திரியானது மூன்று மணிநேரம் என நாலு கால பூஜைகள் என நடைபெறும். அப்போது வில்வ இலைகளால் சிவனுக்கு அபிசேகம் செய்வார்கள். முதல் காலத்தில் பால் அபிசேகம், இரண்டாம் காலத்தில் நெய் அபிசேகம், மூன்றாம் காலத்தில் தயிர் அபிசேகம். நான்காம் காலத்தில் தேன் அபிசேகம். நான்காம் கால பூஜை முடிந்ததும் அந்தணர் ஒருவருக்கு அன்னமிட்டு விரதம் முடித்து கொள்வது சிறப்பு என்றே சிவனே சொல்வதாக அமைந்து இருக்கிறது. இந்த மஹா சிவராத்திரி பிப்ரவரி மார்ச் மாதங்களில் வரும்.

வில்வ மரம் மருத்துவ குணங்கள் உடையது. இந்த மரத்தின் பழங்கள் மருத்துவ தன்மை உடையதாகும். வில்வ பழம்தனை காயவைத்தோ அப்படியேவோ சாப்பிடலாம். இந்த பழம் வர கிட்டத்தட்ட பதினோரு மாதங்கள் ஆகும். இந்த பழத்தின் ஓடு மிகவும் கடினத்தன்மை உடையது. மரத்தின் கீழ் நிற்கும்போது இந்த பழம் தலையில் விழுந்தால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. வில்வ பழம் மூளைக்கும், இதயத்திற்கும் நல்லதாம். காசநோய், வயிற்றுபோக்கு, வயிருவலி போன்றவைகளுக்கு நல்லதாம். வில்வ பழத்தில் ரிபோப்லவின் நிறைய உண்டு. இந்த மரத்தின் வேர்கள் மருத்துவ குணங்கள் உடையதாகும். பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை உடையதாம் மற்றும் அலர்ஜி, வீக்கங்கள், காயங்களை சரிபடுத்தும் பாங்கு இந்த வேர்களுக்கு உண்டு. தமிழ் சித்தர்கள் இந்த மரத்தை கூவிளம் என்றே அழைத்தார்கள்.

இந்த வில்வ மரத்தை இந்துக்கள் வெகுவாக போற்றுகிறார்கள். எனது வீட்டில் கூட வில்வ மரங்கள் உண்டு. அவை போன்சாய் மரத்தை போன்றே வளராமல் அப்படியே இருக்கிறது. இதுவரை அவை பழங்கள் தந்தது இல்லை. நான் மஹா சிவராத்திரி கொண்டாடினால் இந்த வில்வ மரம் பழங்கள் தர சிவன் மனம் வைப்பாரோ?!

Monday, 20 February 2012

ரிவிட் அடிப்பது எப்படி? பகவத் கீதையை தீண்டியபோது - 4

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முன்னர் நான் எழுதியவைகள் இவை. இனிமேல் மீண்டும் பகவத் கீதையை படித்துவிட்டு எழுதலாம் என இருக்கிறேன். சகோதரி ஒருவர் அவரது பார்வையில் பகவத் கீதை பற்றி எழுத மறுமொழியாக நான் எழுதிய விசயங்கள் பல. அந்த விசயங்களை திரும்பி படிக்கும்போது எதற்கு எழுதினோம், எப்படி எழுதினோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் ஒரே ஒரே எழுத்தின் மூலம் மொத்த பகவத் கீதையையும் அவமானபடுத்திவிட்டதாக, கேலி செய்துவிட்டதாக அன்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்து இருந்தார். நான் அனைத்து அத்தியாயங்க்ள படித்து முடித்த நிலையில் எழுதிய அந்த கடைசி எழுத்துகளும் அதனால் சினமுற்ற நண்பரின் எழுத்துகளும், அப்படியும் கூட எதையும் மனதில் கொள்ளாமல் நான் எழுதிய பதில்களும் என இந்த பகவத் கீதையை தீண்டியபோது எனும் பகுதியை நிறைவு செய்கிறேன். இதற்கு முன்னர் எழுதி இருந்த விசயங்களை தொகுத்து எழுதுவது எனக்கு நானே தீங்கிழைப்பது போன்றது என்பதை தமிழ் விரும்பி ஐயாவின் பின்னூட்டத்தில் இருந்து தெளிந்து கொண்டேன். இந்த பகுதிக்கு அடுத்து தொடர இருக்கும் பகவத் கீதையை தீண்டியபோது சற்று வேறு கோணத்தில் பார்க்கலாமா என யோசிக்கிறேன். 

---

மனதை என் மேல் செலுத்த வேண்டும் என கண்ணன் சொல்கிறான், அதோடு மட்டுமா என்னை உன்னத இலக்காக கொண்டால் என்னையே வந்தடைவாய் என்கிறான். அது சரி, கண்ணனிடம் சென்று நாம் அடைவதால் நமக்கு என்ன ஆகப்போகிறது?

மேலும் இந்த பகவத் கீதையை தவம் இல்லாதவர், பக்தி செய்யாதவர், சேவை மனப்பான்மை அற்றவர், கேட்க விரும்பாதவர், என்னை பழிப்பவர் போன்றோருக்கு ஒருபோதும் கூறாதே என்கிறான் கண்ணன். எனக்கு இந்த வரிகளை பார்த்ததும் 

அட கண்ணா!!! நீ சொன்ன இரகசியம்தனை சஞ்சயன் திருதிராஷ்டிரனுக்குச் சொல்லிக் கொண்டிருந்ததை அறிந்தாயோ என்னவோ!!! இல்லை நான் அறியாது போனேனோ என்னவோ!!!

நீ சொன்னதை சந்தேகிக்காதே என சொல்லியபோதே, சொன்னதில் உனக்கு எத்தனைச் சந்தேகம் இருந்திருக்கிறது, மேலும் கேள்வி எழுப்பும் உள்ளத்திற்கு நீ சொன்னதன் அர்த்தம் தெரிந்துவிடும் என நினைத்தாயோ! நீ குறிப்பிட்டவர்களில் தான் நிறையபேர் இவ்வுலகில் வாழ்கிறார்கள், என்ன அர்ஜூனன் அவர்களிடம் உன் இரகசியம் சொல்லவில்லை, அவ்வளவே. மற்றபடி உன் இரகசியம் உலகமெல்லாம் தெரிந்திருக்கிறது. 

நானே சத்தியமும் ஜீவனுமாகியிருக்கிறேன். 

ஹா ஹா கண்ணா! பாவம், நீயும்தானே இறந்தாய்? ஆனால் நீ இறக்கவில்லை எனவும் அப்படியே நீ வைகுண்டம் போனதாகவும் சொல்லிவிடுவார்கள், அதுமட்டுமன்றி ஜோதியோடு ஜோதியாய் கலந்ததாய் கதையும் சொல்வார்கள். இதில் நாங்கள் என்ன விதிவிலக்கு! பிறப்பும் இறப்பும் நிரந்தரமல்ல! அது சரி! 

யாருக்கு இங்கே மரண பயம்? எவருக்குமில்லை. இருந்தால் அனைவரும் முறையான வாழ்க்கையை முறையாகவே வாழ்ந்து கொண்டிருப்போம். உன்னை எல்லாம் ஒரு பொருட்டாகவே கருதியிருக்கவும் மாட்டோம் கண்ணா. நீ நடத்திய நாடகம் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பல பகுதிகளில். இன்னும் பல பகுதிகளில் அதன் சுவடு கூடத் தெரியாமல் இருக்கிறது அறிவாயோ? 

நீ உதவியது நிலச் சண்டைக்குத்தானே, அது மட்டும் தர்மம், இங்கே உன் வழிநடத்துதலன்றி மக்கள் சண்டை போட்டால் அது அதர்மம். அதென்ன ஆன்மாவுக்கு அழிவில்லை எனச் சொல்வது அப்புறம் ஏன் அழியும் உடலுக்கு அது செல்ல வேண்டும்! தனித்து இயங்க முடியாதா ஆன்மாவினால். 

பாவத்தின் மொத்த சொரூபமே நீதான் என உன்னை நான் குற்றம் சாட்டினால் என்ன செய்வாய் கண்ணா. உன்னை பழித்தேன் எனச் சொல்வாயா? மிகச்சரியாகவே உண்மை உரைத்தேன் எனத் தட்டிக்கொடுப்பாயா? நீ எதுவும் சொல்லப் போவதுமில்லை, உன்னால் எதுவும் சொல்ல இயலுவதுமில்லை. உன்னைச் சரணடைய வேண்டுமாம், பாவம் தீர்ப்பாயாம். நல்ல நகைச்சுவை கண்ணா. 

ஆனால் ஒன்று கண்ணா நீ வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி உன் கூற்றுப்படி எவரும் இங்கே பலகாலம் இருக்கப்போவதுமில்லை. அப்புறம் உனக்கு எதுக்கு இந்த வேலை? கர்மம் எனச் சொல்வாயோ! கர்மம் அர்த்தப்படும் விதம்வேறு. 

நானும் சாம்பலும் வேறல்ல! எதிர்மறையான தத்துவம் இது. நான் வேறு; சாம்பல் வேறு! ஒரு திருநீறு அணிந்தோமோ இருந்தோமோ என இல்லாமல் எதை எல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு வாழச் சொல்கிறார்கள். 

இறந்துவிடுவோம் அதனால் நன்றாக வாழவேண்டும் என நினைப்பை விதைப்பதை விட, வாழ்கிறோம் அதனால் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பு வரவேண்டும். சாகாமல் இருந்தால் எல்லா அட்டூழியங்களும் செய்யலாமோ என்னவோ? 

எப்படியெல்லாம் உதாரணங்களும் உவமேயங்களும் இறைவனிடம் நம்மை அர்பணிக்க வேண்டுமென பணிக்கின்றன. இதையெல்லாமா ஒரு இறைவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்! 

“ அகங்காரம் இல்லாத இடத்தில் இறையின் ஸ்வரூபம் தெரிவதில் ஆச்சரியமில்லை” 

அப்படியென்றால் அகங்காரம் நிறைந்த சபையில் இவர் ஸ்வரூபம் காட்டியதும், அனைவரும் கண்டதும் என்னவாம்!!! 

எது எப்படியோ பிரபஞ்சமே மாயை என எல்லாருக்குமே தெரிந்து இருக்கிறது ஒருவிதத்தில் அதில் கண்ணனைத் தெரியாதோரும் அடக்கம். 



---------


இப்படி நான் எழுதியதும் 'நன்றாக ரிவிட் அடித்து விட்டீர்கள்' என ஒரு நண்பர் சொல்ல எனக்கு அப்போது புரியவில்லை. காரணம் எவரது மனமும் புண்படுமாறு நான் எழுத முனைவது இல்லை. மீண்டும் மீண்டும் படித்தபோது கூட என்னால் விளங்கி கொள்ள இயலவில்லை. தவறு செய்பவருக்கு தவறு கண்களுக்கு தெரிவது இல்லையோ என்னவோ? இப்படி எழுதியதன் மூலம் எவர் எவரின் கோபத்தை விலைக்கு வாங்கினேனோ அதுபற்றி தெரியவில்லை. பின்னர் நான் எழுதியது கண்டு மனம் வருந்தினேன் என சொன்னவரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டேன் என்பது வேறு. ஒரு கருத்தை மத நூல்களில் மீதோ, மற்ற விசயங்கள் மீதோ எழுதும்போது அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தெளிவாகிறது. 


-----


நண்பர்: கேள்விகள் கேட்கவேண்டும் என்பதற்காக கேட்டு, ஏன் உங்கள் அறியாமையை எல்லோருக்கும் தெரியும் படி செய்ய வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.

நான்: தெளிவின் எல்லைக்குப் போனாலும் அறியாமை நிழல் துரத்துகிறதே ஐயா, என்ன செய்வது? எப்பொழுதும் அறியாமையில் தான் இருக்கிறேன். இதை கேள்விகள் கேட்பதற்காக கேட்டால் என்ன, பதில்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்துக் கேட்டால் என்ன! யாருடைய நம்பிக்கையையும் உரசும்போது எப்பொழுது ஒருவர் சிதறாமல் இருக்கிறாரோ அவரே அந்த நம்பிக்கையில் உறுதியானவர் என்பது எனது தீர்மானம். 

நண்பர்: மரண பயம் என்று நீங்கள் எதைச்சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. மரண பயம் இல்லாத ஜீவன்களே கிடையாது. மரணத்தை சந்தோஷமாக வரவேற்கும் ஞானிகளைத்தவிர மற்ற எல்லோருக்கும் மரணம் என்றால் பயம் தான். விமானத்தில் கோளாரு என்று கேப்டன் சொன்னால், எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்களா, பயத்தில் இருப்பார்களா?... கண்ணன் எந்த சபாவில் நாடகம் போட்டார் என்று தெரியவில்லை, அது எங்கு ஓடுகிறது என்றும் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் நானும் அதை பார்க்க வேண்டும்.

நான்: எனக்கு இல்லை மரணம் பற்றிய பயம், நான் ஞானியுமில்லை. இளங்கன்று பயமறியாது என்பதை அறிந்திருப்பீர்கள் ஐயா. மரணம் என்ன என்றால் என்னவென்றே தெரியாத குழந்தைகளும் பாரினில் உண்டு. அவர்கள் ஒன்றும் ஞானிகளில்லை. தீவிரவாதிகளும்தான் மரணத்தை சந்தோசமாக வரவேற்கிறார்கள். ஆஹா... நாடகம் என்றதும் சபா எல்லாம் கேட்கிறீர்களா? மகாபாரதப் போர் கண்ணன் நடத்திய நாடகம் அல்லவா! 

நண்பர்:அதர்மம் என்று கண்ணன் எங்கு சொன்னான்?

அதானே கண்ணன் எங்கு சொன்னான்?! எனது கருத்தைத்தானே சொன்னேன். 

நண்பர்:மின்சாரத்துக்கு சக்தி இருக்கிறது. அது எத்தனையோ ஹை வோல்டேஜில் கண்டம் விட்டு கண்டம் போகிறது. ஆனால், அது இயங்க வேண்டும் என்றால் அதுக்கு ஒரு சாதனம் தேவைப்படுகிறது இல்லியா. சாதனம் இல்லாவிட்டால் மின்சாரத்திற்கு உபயோகம் ஏது. அதுமட்டுமில்லாமல் பருப்பொருளுக்கு அழிவில்லை என்பதை நமது அறிவியல் சொல்கிறது நமது உடலில் இருக்கும் அந்த அழியா பொருளுக்கு பேர் தான் ஆன்மா.

அருமையான விளக்கம் ஐயா, ஆனால் ஆன்மாவுக்கு அழிவில்லை எனச் சொல்லிவிட்டு அழியும் பொருளைப் பற்றி அவதிப்படுவானேன் என்பதுதான் என் கேள்வி

நண்பர்:கடலில் இருந்து வந்து சேர்ந்த கடல் தவளையிடம் கிணற்றுத்தவளை, "கடல் இந்த கிணறை விட பெரிதா? நல்ல நகைச்சுவை, பெரிதாக இருக்கவே முடியாது, " என்றதாம்.

தங்களை போல் தான் துரியோதணனை சேர்ந்தவர்களும் கண்ணனின் முன்னாடியே நீ பாவத்தின் மொத்த சொரூபம், கபடதாரி, ஏமாற்றுக்காரன், மாயஜால வித்தகன் என்றெல்லாம் கூறி எள்ளி நகையாடினர். அவற்றுக்கு எல்லாம் ஒரு அழகிய புன்னகையை தானே பதிலாக கொடுத்தான். 

கண்ணன் என்னையை சரணடைய என்று சொன்னது, அவனுடைய கருத்துக்களை ஏற்று நடங்கள் என்ற அர்த்தத்தில். அப்படி நடக்கும் பட்சத்தில் எந்த பாவ காரியத்திலும் ஈடுபட முடியாது என்பது தான். பாவம் செய்த நீ சொல்லும் கருத்து எப்படி பாவத்திலிருந்து விடுவிக்கும் என்று கேட்பதாக இருந்தால், வேறு வழியில்லை திரும்பவும் நீங்கள் கருத்து ஆழத்துடன் படிக்க வேண்டி இருக்கும்.

நான்: ஹா ஹா! மன்னிக்கவும் ஐயா. கண்ணனால் எந்த பதிலும் சொல்ல இயலாது என்று சொல்லிவிட்டேன் ஐயா, புன்னகைதான் தரமுடியும். ஐயா நீங்கள் முழு பகவத் கீதையையும் படித்துப் பாருங்கள், அப்படி பாவத்திலிருந்து இந்த கண்ணனும் அவன் சொன்ன பகவத்கீதையும் விடுவிக்குமெனில் அர்ஜூனன் போரே செய்து இருக்கக்கூடாது. உயிர்களைக் கொல்வது பாவம் என்பது உலக தத்துவம் அது நுண்ணுயிர்களாய் இருந்தாலும் கூட.

நண்பர்: எங்கு சொன்னான் பலகாலம் இருக்கப்போகிறார்கள் என்று? எல்லோரும் எப்படியும் இறந்து விடப்போகிறோம் என்று யாராவது சாப்பிடமால் இருக்கிறார்களா? இல்லை வேறு எந்த காரியமும் செய்யாமல் இருக்கிறார்கள். அவனுக்கு சரி என்று பட்டதை அவன் செய்தான். அதை எதற்கு செய்தான் என்று கேட்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது.

நான்: அவனைக் கேள்வி கேட்க எனக்கு தகுதி இருக்கிறது ஐயா. எப்படி வேண்டுமெனிலும் அவனைக் கேட்பேன். அவன் புன்னகை தருவான், தராமல் போவான்.

நண்பர்: இரண்டும் எப்படி வேறுபடும். இறந்தபின் நமது உடலில் இருந்து மிஞ்சுவது சாம்பல் மட்டும் தானே. அது புரியாமல் நான் என்ற அகங்காரத்தில் செய்வது எல்லாம் துன்பத்தில் கொண்டு சேர்க்கும் என்று சொல்வது தேவையில்லை என்பது, ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை நான் எதற்கு தெரிந்து கொள்ள வேண்டும், எனக்கு எதற்கு நினைவுபடுத்தவேண்டும் என்று கேட்பது போல். தீ சுடும் என்பதையோ, தண்ணீரில் மூழ்கினால் அபாயம் ஏற்படும் என்பதையோ ஏன் குழந்தைகளுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்று கேட்பது மாதிரி இருக்கிறது.

நான்: ஹா ஹா! மன்னிக்கவும் ஐயா. இறக்கும் முன் நான் வேறு தானே. இறந்தபின்னால் என்னை புதைத்தால் நான் எப்படி சாம்பலாவேன். இருப்பினும் சாம்பல் வேறு தான். நான் செய்வதையெல்லாம் சாம்பல் செய்ய இயலாது. சாம்பலுக்கு உயிரும் கிடையாது. சட்டதிட்டங்களை அறிந்து கொண்டு வாழ்வதை விட நியாய தர்மங்களை அறிந்து கொண்டு வாழ்வது சாலச் சிறந்தது. 

நண்பர்:நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. இறைவனுக்கு இதுக்கும் சம்பந்தமில்லை. நீங்கள் மருத்துவர். வலியுடன் வருபவரிடம். இந்த மருந்தை சாப்பிடு என்று நீங்கள் கொடுத்தால். நான் சாப்பிட மாட்டேன் என்று சொன்னால், இதில் மருத்துவரான உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அதே போல், எனக்கு இந்த மருந்து வேண்டாம், நான் வேறு ஒரு மருந்து சாப்பிட்டுக்கொள்கிறேன் என்று சொன்னாலும் இதில் மருத்துவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆக இது வலி இருப்பவர் தேர்ந்தெடுக்க வேண்டியது. ஆனால், ஏன் மருத்துவர் எனக்கு இந்த மருந்தை கொடுத்தார், அவரை யார் இதை செய்யச்சொன்னது என்று நாம் கேட்க முடியாது. வலியில் இருப்பவரின் நன்மைக்கா சொன்னது அதன் படி கேட்டு வலி குறைந்தவர் அந்த மருந்தை மீண்டும் வலி வரும்பொழுது எடுத்துக்கொள்வார். அது அவர் அவரின் விருப்பம்.

நான்:அப்படியெனில் நான் சொன்ன கருத்துக்களெல்லாம் என் விருப்பம் தானே! ஏன் இப்படி கேள்வி எழுப்பினாய், நீ எழுப்பியிருக்கவே கூடாது என்பது எந்த விதத்தில் சரியாகப்படும் ஐயா. எப்படியோ உங்களுடன் கண்ணன் என்னை இப்படி பேசச் சொல்லிவிட்டான்.

நண்பர்: அகங்காரம் இல்லாத இடம் என்பது அகங்கார தோரணை இல்லாத ஜீவன் என்று பொருள். அது ஒரு இடத்தை குறிப்பதல்ல.

நான்: அகங்காரம் நிறைந்த ஜீவன்கள்தான் ஐயா
மிக்க நன்றி, நல்லவேளை அறியாமை அகன்றுவிட்டது போலும்!

Saturday, 18 February 2012

பகவத் கீதையைத் தீண்டியபோது - 3 (குணம், வர்ணம், ஞானம்)

பகுதி 2 


கண்ணன் உலகம் தோன்றா காலம் முன்னரே இந்த கீதையை நண்பர்களுக்குச் சொல்லி வந்தானாம். ஒவ்வொரு முறையும் கீதை மறக்கும் பட்சத்தில் மறுபடியும் நண்பனுக்குச் சொல்வானாம். அப்படிச் சொல்லப்பட்ட, இறுதியாகச் சொல்லப்பட்ட கீதைதான் அர்ச்சுனனுக்குச் சொன்னது. அதெப்படி உலகம் தோன்றா முன்னர் சொல்லி இருக்க கூடும், அப்படி எந்த நண்பருக்கு சொல்லி இருக்க கூடும் என்றெல்லாம் என்னிடம் கேட்க கூடாது. 'நல்லாவே காதுல பூ சுத்துறான்' என ஒரு நமட்டு சிரிப்பும் சிரிக்க கூடாது. ஏனெனில் இது பகவத் கீதை. புரிகிறதோ? 


இப்படித்தான் புனித நூல்கள் எல்லாம் தங்களிடம் இருக்கும் 'அழுக்கினை' மறைத்துக் கொண்டு புனிதத் தன்மையினை பாதுகாத்து கொண்டு வருகின்றன என சொல்வோர்கள் உண்டு. நான் எல்லாம் அப்படி சொல்லமாட்டேன். புனிதமான விசயங்களை கூட அழுக்கு படுத்திவிடும் குணங்கள் உடையவர்கள்தான் நாம். 


மூன்று வகை குணங்கள் உடைய மனிதர்கள் என பிரிக்கலாமாம். ஆனால் இந்த மூன்று வகை குணங்கள் ஒவ்வொன்றில் கொஞ்சம் கொஞ்சம் என எல்லா குணங்களும் ஒரு மனிதரிடம் இருக்கும். இந்த மூன்று வகை குணங்களில் எது மேம்பட்டு இருக்கிறதோ அந்த குணத்தை வைத்து அவரை குணவான், கனவான் என சொல்லிக் கொள்ளலாம். ஒரே மரபணுவில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஓங்கியதன்மை உடையது, மற்றொன்று தாழ்த்திய தன்மை உடையது. ஓங்கும் தன்மை செயல்பாடே அது வெளிப்படுத்தும் என்பார்கள். அதே வேளையில் இரண்டு தாழ்த்திய தன்மை இணைந்தால் தாழ்த்திய தன்மை வெளிப்படும் என்பார்கள். நமது குணநலன்கள் மரபணுக்களில் ஒளிந்திருக்கிறதா என்பதை சர்வ வல்லமை பொருந்திய இறைவன் தான் இனி எவர் மூலமாவது வெளியிட இருக்கும் வேத நூலில் தெளிவாக சொல்லவேண்டும். 


மூன்று வகை குணங்கள் எது. சுயநலம் அற்ற வெள்ளேந்தியான கள்ளம் கபடமற்ற சத்வ குணம். இந்த குணம் கொண்டோர் எவரையேனும் காட்டுங்கள் பார்க்கலாம். சில தினங்கள் முன்னர் தான் ஒரு பதிவில் சொன்னோம், சுயநலவாதிகளால் ஆனது உலகம் என. மனிதர்களுக்கு கொஞ்சம் இருக்கும், ஆனால் ஞானிகள், யோகிகள் எல்லாம் இந்த குணம் கொண்டவர்கள் என்கிறது வரலாறு. அப்படியெனில் மனிதர்களுக்கு இல்லை? குழந்தைகள். பொம்மையை தனக்கென வைத்து கொள்ளும் குழந்தைகள் கூட உலகில் உண்டு. இவ்வுலகை படைத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கும் இறைவன் கொண்டது சத்வ குணமோ? 


தானே எல்லாம், தன்னால் தான் எல்லாம் முடியும் என்று தற்பெருமை சொல்லித்திரியும் அகங்காரம் கொண்டு அலையும் தற்குறிகள் கொள்ளும் ரஜோ குணம் அடுத்தது. இதே கண்ணன் நானே எல்லாம், என்னை நீங்கள் பின்பற்றுங்கள், என்னால் மட்டுமே முடியும் என சொல்வது ரஜோ குணம் இல்லையா? இறைவனால் மட்டுமே முடியும், இறைவன் மட்டுமே உலகை படைக்க இயலும் என்பது இறைவனுக்கு ரஜோ குணத்தை தருவதில்லையா? 


எதுவுமே செய்வது இல்லை. உண்பது கூட அடுத்தவர் ஊட்டி விட வேண்டும். உறங்க வைக்க அடுத்தவர் தாலாட்ட வேண்டும் என சோம்பேறியாய் வாழ்வதே தமோ குணம். இந்த குணத்தில் இருப்பவருக்கு இவ்வுலக வாழ்க்கை பற்றி எதுவுமே தெரிவதில்லை. கடவுளா, அவன் கிடக்கான், ராஜாவா அவன் கிடக்கான் என தான் கிடந்தது உழல்பவர். இறைவன் இவ்வுலகில் எதுவுமே செய்வதில்லையே, எல்லாம் மனிதர்கள் தானே செய்து கொண்டிருப்பது அப்படியெனில் இறைவன் கொண்டது தமோ குணமா?


ஒவ்வொருவருக்கம் இந்த மூன்று குணநலன்கள் இருக்கத்தான் செய்யும். நான் சில விசயங்களில் சோம்பேறியாய் இருக்கிறேன், சில விசயங்களில் அகங்காரம் கொண்டு திரிகிறேன், சில விசயங்களில் கள்ளம் கபடமற்று சுயநலமற்று இருக்கிறேன். 


அடுத்ததாக வர்ணம் பற்றி பேசுகிறது கீதை. எனக்கு தெரிந்தது வானத்தில் மழை விழுந்த பின்னர் தெரியும் வானவில். வானவில் ஏழு நிறங்கள் கொண்டது என்றுதான் படித்து இருக்கிறேன். வயலட், இண்டிகோ, புளு, கிரீன், எல்லோ, ஆரஞ்சு, ரெட் (தமிழ் படுத்திக்கோங்க). ஆனால் மனிதர்களில் நான்கு வகை வர்ணங்கள உடையவர்கள் இருக்கிறார்களாம். மனிதர்களில் கூட நிறத்தை தருவது மெலனின் எனும் ஒரு நிறமி. இந்த மெலனின் நிறமி மூன்று வகைப்படும். இந்த மெலனின் நிறமியை உருவாக்கும் மேலநோசைட் பற்றி தான் மூன்று வருடம் ஆராய்ச்சி செய்தேன். இந்த மெலனின் நிறமி தராத வேறு நான்கு வர்ணங்களை இந்த கீதை பேசுகிறது. 


சென்ற பதிவில் குறிப்பிட்டோம், நம்மை தொழில் ரீதியாகவே அறிமுகப்படுத்துவோம் என, அதே போலவே இந்த வர்ணங்கள் தொழில் ரீதியாகப் பூசப்படுகிறது. அந்தணன், சூத்திரன், வைஷ்யன், சத்திரியன். 


பழியே இல்லாத தூய்மையான ஆத்மா அந்தனணன். அடடா! இழிநிலை வாழ்வு கொள்பவன் சூத்திரன். ஆஹா. அடுத்தவன் குடியை கெடுப்பவன் வைஷ்யன். சபாஷ். அழிக்கிரதையே செய்பவன் சத்திரியன். அருமை. ஆனால் மேற்சொன்ன குணங்களையும் இந்த நிலைகளையும் ஒப்புமைபடுத்தி பார்த்தால் எல்லா வர்ணங்களையும் பூசிக்கொண்டு திரிபவரகாத்தான் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் தெளிவு. நான் வர்ணம் பற்றி பேசினால் எனது வலைத்தளத்தில் 'சாணி' எறிந்துவிடுவார்கள் என்பதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். ஏனெனில் அந்த ஞானம் எனக்கு இருக்கிறது. 


அதென்ன ஞானம்? பலனை எதிர்பார்க்காமல் செயல்களை செய்வதே ஞானம் என்பார்கள். அப்படி செய்பவர்கள் ஞானி என போற்றப்படுவார்கள். ஆசை எதுவும் இருக்க கூடாது, ஆனால் ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும். என்னப்பா இது! இந்த உலகத்துக்கு இது அடுக்குமா? ஆசை இல்லாம ஆர்வம் வருமா? பலன் இதுதான் என நினைக்காம எதுவும் செய்ய முடியுமா? 
ஆனால் மிருகம் வேறு மனிதன் வேறு என்பதே இங்குதானாம். 

ஞானிகள் எல்லாம் ஞானம் தேடி குகைகளைத் தேடித் போவாங்க. எந்த ஞானம் தேடி போறாங்க, எந்த ஞானத்தை கண்டு கொண்டாங்க அப்படின்னு பார்த்தா ஒண்ணுமே இல்லை அப்படின்னு பல வருஷம் தியானம் இருந்து கண்டு சொல்வாங்க. பாவ புண்ணியம் எல்லாம் பத்தி இந்த ஞானம் தெளிவா சொல்லுமாம். ஒருத்தருடைய பாவத்தை போக்க இன்னொருத்தர் பாவம் பண்ணுறது எப்படி நியாயமாகும்? இந்த ஞானம் பெற தியானத்தை இமயமலை போன்ற இடங்களில் போய் செய்வாங்களாம். 



ம்ம். இவ்வுலக ஆசைகளும், பந்தங்களும் துன்பத்திற்கே என விட்டு ஒதுங்கி வாழ்வதா வாழ்க்கை. ஒரு வேலையும் செய்யாமல் தியானம் பண்ணுவதைவிட வேலையை தியனாமாக செய்வது சால சிறந்தது. ஞானிகள் வாழும் ஆசையற்ற, பந்தங்கள் அற்ற ஆனந்தமான வாழ்க்கை போல, ஆசையுள்ள, பந்தங்கள் உள்ள ஆனந்தமான வாழ்க்கையும் உண்டு. மனிதர்கள் எல்லாம் பாவிகளாம். இப்படி சொன்னவரை அப்பாவி என்பதா, அடப்பாவி என்பதா. 


எது பாவம்? நமது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், பிறருக்கு துன்புறுத்தல் தராமல் இருக்கவேண்டும் எனில் நாம் எதையும் இவ்வுலகில் செய்ய முடியாது. ஆக பாவம் என சொல்லப்படுவதே பாவமின்றி, மற்றவை பாவம் என வரைகொட்டில் வைக்க முடியாது. இந்த பாவம் குறித்த அறியாமை நிறையவே எனக்கு இருக்கிறது. 


அறிவுள்ள ஒருவன் தனது அறிவினை உபயோகப்படுத்தாமல் இருந்தால் அவன் எப்படி ஞானி ஆவான்! 

பொருள் பற்று இல்லாதவனை ஞானியாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அறிவு தனில் பற்று இல்லாதவனை ஞானியாக ஏன் ஏற்றுக் கொள்வதில்லை. அறியாமையில் இருப்பதால் நானும் ஞானியாக ஆசைப்படுகிறேன். 
நினைவுகளை நம்முடன் மறந்தே எடுத்துச் செல்கிறோம், வந்து் இருக்கிறோம், செல்லவும் செய்வோம்! அந்த நினைவுகளை மட்டும் மறக்காமல் இருந்திட பரந்தாமன் வழி சொல்வானெனில் உண்மை உணர்த்தப்பட்டுவிடும். 


ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி நினைவில் கொண்டால் மறக்காது என எனக்கு நினைவில் வைப்பதின் அதிசயம் பற்றி ஒருவர் பாடம் சொல்லித் தந்தார். அவர் பெயர் இன்று என் நினைவில் இல்லை. மறதி மனிதனுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே'' எனப் படிக்கும்போதெல்லாம் மிகவும் வியப்பாக இருக்கும். ஒரு செயலானது செய்யும்போது அது எவ்விதத்தில் முடிய வேண்டும் என பகுத்தாராய்ந்து செய்வதுதான் சரியான முறை. இது செய்தால் இது கிடைக்கும் என எதிர்பார்த்து செய்தல் கூடாது என்பது ஒரு வகையில் மிக அழகாக, அறிவாக இருந்தாலும் என்ன பலன் என்பதை அடிப்படையாய் வைத்து ஒரு காரியம் செய்வதுதான் நடைமுறை. பலனை எதிர்பார்க்காமல் செய்கிறேன் என நினைக்கும் போதே ஒரு எதிர்பார்ப்பு வந்து அமர்ந்து கொள்வது என்னவோ மனதை கனக்கச் செய்கிறது. எல்லாம் இருந்து, வேண்டாம் எனச் செல்வதுதான் பற்றற்ற தன்மை. அப்படி இல்லாத பட்சத்தில் அது இயலாமையாக கருதப்படும். அறியக்கூடிய தன்மை பெற்றபின் அறிவில் பற்று இல்லாதவரைத்தான் ஞானியாக ஏற்றுக் கொள்ள முடியும். அறியாமைக்கு காரணமான அறிவை அறிந்து கொண்டு அதனை பற்றாமல் இருப்பவரை ஞானியாக ஏற்றுக் கொள்ளலாம் என்றுதான் நினைக்கிறேன். 

பிறப்பு இறப்பு பற்றி எண்ணும்போதெல்லாம் எதற்கு கண்ணன் என எண்ணத் தோன்றும்! இது காலம் காலமாக நடக்கும் யாகம் எனில் எதற்கு கண்ணன்? இல்லாத ஒன்று இருந்ததாய் கண்டு கொண்டதன் உண்மைதான் என்ன? மரணம் அறிவுறுத்துவதில்லை, பயமுறுத்துகிறது. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள் என வரும்போது எதனை விடுப்பது என்பது கேள்வியாக நிற்கப்போவது இல்லை. எல்லாவற்றையும் விடுப்பது என வரும்போது எதனை ஏற்பது என்பது ஒரு கேள்வியாக நிற்கபோவது இல்லை. நாம் எதனையும் பெறுவதுமில்லை எதனையும் இழப்பதுமில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. 

அகந்தை என யார் எதனைச் சொல்வது? ''நானே எல்லாம்'' என கண்ணன் சொல்லும்போது எனக்கு அது மாபெரும் அகந்தையாய் தெரிகிறது! எல்லாம் அவன் என நான் சொல்லும்போது எனக்கு அது அடக்கமாய் தெரிகிறது. எனது செயல்களுக்கு பொறுப்பு யார் ஏற்பது? நான் செய்ததை நான் செய்தேன் எனச் சொல்லிக் கொள்வது அகந்தையா? என்னால் மட்டுமே செய்ய முடியும் என மார் தட்டிக் கொள்வது அகந்தையா? கர்வப்படு. எல்லாம் தொலையும் என தெரிந்தும் கர்வப்படு. 


--------------------

obsessive-compulsive disorder - இது குறித்து நான் மிகவும் அச்சப்படுகிறேன். நாம் எல்லாம் இறைவன் குறித்த விசயத்தில் இப்படித்தான் இருக்கிறோமோ என எண்ணத் தோன்றும்!

எட்ட முடியாத யோகம் எட்டு நிலைகளாய்! சமாதி என்பது எப்படி உணர்வு நிலையாகும்? சமாதி என்பது உணர்வற்று போகும் நிலைதானே! இங்கு உணர்வு நிலை என்பது இறை உணர்தல் நிலையை குறிக்கிறதா? எட்டு நிலை யோகத்தை பின்னர் பார்க்கலாம்.

ஹூம்... ஒரு குழந்தை ஒரு முறை ஆர்வமுடன் ஒரு விசயம் பற்றி கேட்டதும் அக்குழந்தைக்கு அதற்கான விடை சொல்லப்பட்டால் அக்குழந்தை போகிற போக்கில் எல்லா விசயமும் பற்றி கேட்க ஆரம்பித்துவிடுமாம்! அப்படித்தான் அர்ச்சுனன் தெரிகிறான். உலகம் தோன்றா முன்னர் சொன்ன இந்த கீதையை ஒவ்வொருவருக்கும் திரும்ப திரும்ப சொன்ன கண்ணனுக்கு எதற்கு சலிப்பு ஏற்படவில்லை?