Friday, 17 February 2012

பன்முக பதிவர் விருதும் பயந்துபோன நானும்

முதலில் இந்த 'பன்முக பதிவர்' விருதினை எனக்கு அளித்து சிறப்பித்த சகோதரி ஷக்திபிரபா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரி.

பொதுவாகவே விருது என்றால் எனக்கு என்னை அறியாமல் பயம் வந்து தொற்றிக்கொள்ளும். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி செல்லும் எழுத்துகள் காலப்போக்கில் சுயத்தை தொலைத்துவிடும் என்கிற அவசியமற்ற பயம் தான் அது. இதோ இவர்கள் கவனிக்கிறார்கள், அதோ அவர்கள் கவனிக்கிறார்கள் என ஒரு எண்ணம் மனதில் வட்டமிடும்போது அங்கே எதிர்பாராத ஒரு பயம் வந்து சேர்ந்துவிடுகிறது, எங்கே ஏதேனும் எவரேனும் சொல்லிவிடுவார்களோ என அத்தியாவசியமற்ற மனநிலை அனைவருக்கும் நிகழ்வது இயல்பு. ஆனால் அதை எல்லாம் தாண்டி பயமற்ற ஒரு எழுத்து என்பதுதான் ஒருவரின் சுயத்தை அடையாளம் காட்டும். ஒரு எழுத்தை மென்மையாக, இலைமறை காயாக வெளிப்படுத்துவது என்பதைத்தான் நாகரிகம் எனவும் சொல்கிறார்கள். ஒருவர் சொல்லும் விதம் தனில் உங்களது முகம் சுளிக்கிறதா, விரிவடைகிறதா என்பதுதான் அந்த சொல்லிய விதத்திற்கு வெற்றி. ஆனால் எல்லா விதங்களில் எழுதுபவர்களைப் போலவே எல்லா விதங்களிலும் ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.

உங்களை நீங்கள் எப்படி அறிமுகப்படுத்த விரும்புகிறீர்கள் என எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்போம். அனைவருமே தான் செய்யும் தொழில் சம்பந்தபடுத்தித்தான் தங்களை அறிமுகபடுத்துவார்கள்.  அதை எல்லாம் தாண்டி தனிப்பட்ட மனித குண நலன்கள் எல்லாம் எவருக்கு தேவை என்கிற போக்குதான் நம்மிடம் இருப்பது. இப்போது ஒருவர் பலதுறைகளில் புலமை பெற்றவராக இருப்பதால் ஒரு துறையில் தனித்தன்மை பெற இயலாது போகிறது என்றே சொல்வோர் உண்டு. ஆனால் ஒரே ஒரு தொழிலை முதன்மையாக வைத்து கொண்டு மற்ற விசயங்களில் தம்மை ஈடுபடுத்தி கொள்வோரும் உண்டு. முதன்மையான தொழிலை வைத்தே அவரது அடையாளம் பேசப்படும். இதுவரை என்னை நான் பதிவர் என எவரிடமும் அறிமுகமும் செய்தது இல்லை, நான் பதிவுகள் எழுதுகிறேன் என நேரடியாக எவரிடமும் சொல்லிக்கொண்டது இல்லை. எனக்கு இந்த பதிவு எழுதுவது எல்லாம் ஒரு எழுத்து விளையாட்டு போலத்தான். அப்படி எழுத்துவிளையாட்டில் கிடைக்கும் அங்கீகாரம் மிகவும் பெரியது. ஏனெனில் சின்ன சின்ன பாராட்டு கூட மன மகிழ்ச்சியை தரும்.

நான் பதிவர்களுக்கு விருது தர வேண்டும் என ஆரம்பித்து இரண்டே இரண்டு பதிவர்களுக்கு மட்டும் தந்துவிட்டு நிறுத்தி கொண்டேன். விருது வழங்குவதை கூட ஒரு ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும் என்கிற நினைப்பில் அப்படியே நிறுத்திவிட்டேன். இந்த வலைப்பூவில் நான் பெற்ற விருதுகள் என இந்த விருதுடன் சேர்த்து மூன்று விருதுகள். இந்த விருதை நான் எனக்குப் பிடித்த பதிவர் ஐந்து பேருக்குத் தந்தால்தான் நான் இந்த விருதை ஏற்றுக்கொண்டேன் என்பதற்கு சமம் என்ற வாசகம் என்னை சில நாட்கள் யோசிக்க வைத்துவிட்டது.

பொதுவாக மின்னஞ்சல் மூலம் வரும் செய்திகள் இப்படித்தான் வரும். இதை நான்கு பேருக்கு அனுப்புங்கள், எட்டு பேருக்கு அனுப்புங்கள் என. நான் அதுபோன்ற மின்னஞ்சல்களை இதுவரை கண்டுகொண்டதே இல்லை. ஒன்றை ஆத்மார்த்தமாக செய்வதற்கும், செய்ய சொல்லிவிட்டார்களே என செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. விருதுகள் பெற்ற நண்பர்கள் மிகவும் பாக்கியசாலிகள், அவர்களால் ஆத்மார்த்தமாக பதிவர்களை தேர்ந்தெடுக்க முடிந்தது. நான் பல பதிவர்களை மனதில் பரிசீலித்து கொண்டே இருக்கும்போதே அவர்கள் எல்லாம் விருதுகள் பெற்று கொண்டிருந்தார்கள். ஆஹா இப்படி வெட்டி வியாக்கியானம் நினைப்பு கொண்டிருந்தால் பதிவர்கள் மிச்சம் இருக்க மாட்டார்கள் எனும் நினைப்பு வந்து வெட்டிப் போனது. இருப்பினும் பரிசீலித்து கொண்டேதான் இருக்கிறேன்.

பன்முக பதிவர் என்றதும் எனக்கு 'எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்' என்ற பாடல் மட்டுமே நினைவில் வந்தது. அந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என்னையறியாமல் ஒரு உணர்வு சில்லிட்டுப் போகும்.

எங்கிருந்தோ வந்தான்,
இடைச்சாதி நான் என்றான்,
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய்  மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்

எங்கிருந்தோ வந்தான்

இப்படி பல வேசங்கள் தரித்து வாழும் வேடதாரியான நம்மில் பல விசயங்கள் பற்றி எழுதும் தன்மை இருப்பது இயல்போ என தெரியவில்லை. ஆனால் நம்மில் பலர் மிகவும் குறிப்பாக, ஒரு சம்பந்தப்பட்ட துறை மட்டுமே எழுதும் இயல்புடனும் இருக்கிறோம். அப்படி இருப்பவர்கள் பன்முக பதிவர் விருது பெரும் தகுதி அற்றவர்களா என்றால் அதுதான் இல்லை. ஒரே துறை பற்றி எழுதினாலும் அதில் கூட சில பல புதுமைகள் பற்றி எழுதுபவர்கள் கூட பன்முக பதிவர்கள் தான்.

நான் தேர்ந்தெடுக்க இருக்கும் ஐந்து பதிவர்கள் பற்றி விரைவில் எழுதுகிறேன். இந்த விருதினை நான் ஏற்று கொண்டேன் என முழு மனதுடன் உறுதி செய்கிறேன். அதற்கு முன்னர் எனக்கு பிடித்த ஏழு விசயங்கள் பற்றி சொல்லிவிடுகிறேன்.

1. எனக்கு சாப்பிடுவது மிக மிக பிடிக்கும்.

2. எனக்கு எழுதிக்கொண்டிருப்பது மிக மிக பிடிக்கும்

3. புராண காலத்து வேதங்கள், எழுத்துகள் எல்லாம் வாசித்து மகிழ்ந்திருக்க மிக மிக  பிடிக்கும்

4  மக்களுக்கு என்னை முன்னிறுத்தாமல் சேவகம் செய்வது மிக மிக பிடிக்கும்

5 . மலைகள், காடுகள், நாடுகள் என சுற்றிப் பார்க்க மிக மிக பிடிக்கும்

6  யாதும் ஊரே யாவரும் கேளிரும், நன்றும் தீதும் பிறர் தர வாராவும், இறைவனும் மிக மிக பிடிக்கும்.

7 பிடிக்காத விசயங்களை கூட 'வந்து இந்த பூமியில் வந்து பிறந்தோமே' என்பதற்காக செய்வது பிடிக்கும்.

Thursday, 16 February 2012

காதலில் காதல் இல்லை

வருடம் தவறாமல் வாங்கி செல்கிறேன்
வாடிப்போக இருக்கும் பூக்களையும்
மடிந்துபோன மரத்திலால் ஆன வாழ்த்து அட்டையும்
உணர்வற்ற வண்ணமிகு பரிசுப் பொருளும்

எனது உணர்வுகளை இவையெல்லாம் சுமக்கின்றனவாம்
காதலை வெளிப்படுத்துவதன் அவசியம் சொல்கிறார்கள்
கட்டியணைத்து உச்சிநெற்றியில், ஓரத்து இதழில் பதிக்கும்
முத்தம் தரும் பாதிப்பைவிடவா இவை தந்துவிடப்போகின்றன.

கண்கள் கலங்க வைக்கும் கதைகள் கேட்டதுண்டு
காதலை காதலால் மட்டுமே அவை சொல்லிச் சென்றதுண்டு
கருமேகங்கள் மறைத்து நிற்க வேடிக்கைப் பார்க்கும்
மழைத்துளிகள் போன்றே காதல் தவித்து போகிறது

வருடம் தவறாமல் வாங்கிச் செல்கிறேன்
இதை ஒரு வழக்கமாக கொண்டபின்னர்
அதுவுமே பழக்கமாகிப் போனபின்னர்
காதலில் காதல் ஒருபோதும் இருப்பது இல்லை. 

Saturday, 11 February 2012

சுயநலவாதிகளால் ஆனது உலகம்

இதோ ஒரு நிகழ்வு. கிட்டத்தட்ட அனைவருமே இது போன்ற நிகழ்வுகளை நேரிலோ, திரைப்படங்களிலோ கண்டு இருப்பீர்கள். ஓட்டு வீட்டின் முன்னே அரைமணி நேரம் முன்னர் இறந்து போன ஒருவரை நினைத்து அழுது கொண்டு, அரற்றி கொண்டு அவரது மனைவி, மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், சுற்றங்கள், நண்பர்கள் என குழுமி இருந்தார்கள். அவர் எப்படி எல்லாம் வாழ்ந்தார் என ஒரு நண்பர் சொல்லிக் கொண்டு இருந்தார். இறந்து போனவருடன் பல நாட்கள் பகைமை பாராட்டிய ஒரு சிலரும் அங்கே வந்து வருத்தம் தெரிவித்து கொண்டிருந்தார்கள். இதோ வாழ்க்கை அவரைப் பொருத்தவரை முடிந்து போன ஒன்று. இவ்வுலகில் பிறப்பு எடுத்தவர்கள் எல்லாம் இறக்க வேண்டும் என்பது இயற்கை நியதி. 

இந்த வாழ்க்கையில் எப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள்? மனிதர்களை நல்லவர்கள், கெட்டவர்கள், துரோகிகள், நண்பர்கள், எதிரிகள், நயவஞ்சகர்கள், குள்ளநரிகள், கபடதாரிகள், வேடதாரிகள், பிறன்மனை கள்வர்கள், விபச்சாரிகள், பித்தலாட்டகாரர்கள், முடிச்சவிக்கிகள், மொள்ளைமாரிகள், கேனையர்கள், கிறுக்கர்கள், அரக்கர்கள், தேவர்கள், மதவாதிகள், தீவிரவாதிகள், மிதவாதிகள், அகிம்சாவாதிகள், துறவிகள், முனிவர்கள், மற்றும் தூதர்கள் என பல்வேறு வகையாகவே பிரித்து பார்க்கிறது உலகம். தொழில் ரீதியாகவும் இந்த மனிதர்கள் பல்வேறு வகையாக பிரிக்கப்படுகிறார்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள் என பற்பல. ஆனால் இவர்கள் எல்லாமே சுயநலவாதிகள் எனும் ஒரு அடைப்புக்குள் ஒடுங்கிப் போகிறார்கள். இந்த உலகம் சுயநலவாதிகளால் மட்டுமே ஆனது. 

இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றே வைத்து கொள்வோம். நமது சூரிய குடும்பத்தை மட்டுமே இப்போதைக்கு பார்ப்போம். பிற கேலக்ஸிகள், நட்சத்திரங்கள் எல்லாம் இப்போது நமது பார்வைக்கு அவசியம் இல்லை. அப்படி கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் என வைக்க கடவுள் நிச்சயம் சுயநலவாதி தான். பிற கோள்களை எல்லாம் விட்டுவிட்டு பூமியில் மட்டும் உயிரினங்கள் படைத்த காரணத்தை கடவுள் இதுவரைக்கும் எந்த சுயநலவாதிகள் மூலமும் பேசியது இல்லை. மதங்களை, கடவுளின் நூல்களை உருவாக்கிய எந்த ஒரு சுயநலவாதியும் இதுகுறித்து மூச்சு விட்டதில்லை. எதற்கு படைத்தோம் என்கிற நோக்கமே இதுவரை தெளிவில் இல்லை. 

அடுத்ததாக பரிணாமங்கள் பேசும் கொள்கை சுயநலவாதிகள் என்ன சொல்கிறார்கள். இது குறித்து  கோல்டிலாக்ஸ் கோட்பாடு ஒன்று சொல்லப்பட்டு வருகிறது. அதாவது பூமியானது மிகவும் சரியான தொலைவில் சூரியனிலிருந்து இருப்பதாலும், நல்லதொரு தட்பவெட்ப நிலை நிலவுவதாலும்  அதோடு நிறைய தண்ணீரும் பூமியில் இருப்பதாலும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கின்றன. வெள்ளி சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால், தண்ணீர் அதன் பரப்பில் இருக்க வாய்ப்பு இல்லை எனவும், அப்படியே தண்ணீர் இருந்தாலும் அவை எல்லாம் ஆவியாகக் கூடும் என்பதால் அங்கே உயிரினங்கள் வாழ வசதி இல்லை என்கிறது. அதோடு மட்டுமில்லாமல் செவ்வாய் சற்று தொலைவில் இருப்பதால் செவ்வாயின் பரப்பு மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் தண்ணீர் ஓட வசதி இல்லை. அங்கே தண்ணீர் எல்லாம் உறைந்து போகக்கூடிய சாத்தியம் மட்டுமே உண்டு. இந்த சூழலிலும் உயிரினங்கள் வாழ சாத்தியமில்லை என்றாகிறது. அப்படியெனில் இவ்வுலகம் சுயநலவாதிகளால் மட்டுமே ஆனது என்பது ஊர்ஜிதமாகிறது. 

தனக்கு ஏற்ப சூழலில் மட்டுமே வாழ பழகிக் கொண்ட உயிரினங்கள் சுயநலவாதிகள் தான். அதற்கு அடுத்து எவர் எல்லாம் இந்த உலகில் பிழைத்து கொள்வார்கள் என்பது குறித்து பரிணாமங்கள் அடிப்படையில் பார்த்தால் 'எந்த ஒரு உயிரினம் இந்த சூழலில் தன்னைப் பக்குவபடுத்தி வாழ முடியுமோ' அந்த உயிரினமே வாழ இயலும், அந்த உயிரினத்தின் சந்ததிகள் மட்டுமே வாழ இயலும். அதாவது ஒரு குறிப்பிட்ட சீதோசன நிலை மாற்றத்தை தாங்கி கொள்ள இயலாத உயிரினங்கள் மறைந்து அழிந்துவிடும் என்பது பரிணாம தத்துவம். 

இதுவே மதங்களின் அடிப்படையில் பார்த்தால் 'நானே எல்லாம், என்னை தொடர்பவர்கள் ஒருபோதும் பாவத்தின் வழி செல்லமாட்டார்கள், என்னை அணுகுபவர்களுக்கு சரணாகதி தருகிறேன்' என்பது போன்ற கூக்குரல்கள். ஆனால் எந்த இறைவனின் பாதம் தொட்டாலும் மரணம் என்பது மட்டும் எல்லா உயிர்களுக்கும் உறுதி என்பதை ஒருபோதும் எவரும் சிந்தித்து பார்ப்பதில்லை. இந்த உலகம் முழுக்க முழுக்க சுயநலவாதிகளால் ஆனது. நிச்சயம் இது தவறான கூற்றாகவே முடியும். அது எப்படி இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது?

ஒவ்வொரு சீதோசன நிலைக்கும் என பறந்து செல்லும் பறவைகள் சுயநலவாதிகள். தனது உயிரை மட்டுமே காத்து கொள்ள வேண்டும் என போராடும் எந்த ஒரு உயிரினமும் சுயநலவாதிகள் தான். அப்படித்தான் பெரும்பாலானோர் இருக்கிறோம், இருக்கிறார்கள். 

தியாகங்கள் குறித்து எதற்கு இதுவரை பேசவில்லை. ஒரு தியாகியை  சுயநலவாதி என சொன்னால் எப்படி இருக்கும். ஒரு அன்னை, ஒரு சேய். இங்கே உணவுப் போராட்டம் நடைபெறுகிறது. எவரேனும் ஒருவர் மட்டுமே உயிருடன் இருக்க இயலும். அந்த சூழலில் அன்னை தனது உயிரை மாய்த்து கொண்டு சேய் உயிரை காப்பாற்றிட மட்டுமே முனைவார். இது எப்படி சுயநலமாகும்? இது போன்று எல்லா உயிரினங்களிலும் தனது நலம் கருதாது பிறர் நலம் பேணுபவர்கள் இல்லாமல் இல்லையா? இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது எனில் அந்த தாய் நிச்சயம் சுயநலவாதியாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்போது அதே தாய், வேறொருவரின் குழந்தை. இந்த தாய் தன்னுயிர் தருவாளோ? இந்த் இரண்டு சூழல்களிலும் எப்படி இருவரும் உயிர் வாழ்வது என சிந்திக்கும் உயிரினமே வாழ்வில் நிலை கொள்கிறது என்பதுதான் சுயநல தத்துவம். 

இப்போது மனிதர்களை சுயநலவாதிகள், பொதுநலவாதிகள், தியாகிகள் என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 

சுயநலவாதிகள் : அன்றாடம் தனது வேலை, தனது குடும்பம், தனது சுற்றம், தனது நண்பர்கள், தனது உறவுகள் என வாழ்ந்தே கழித்தவர்கள். முதல் பத்தியில் படித்த மனிதர் போன்றவர்கள்.

பொதுநலவாதிகள்: இங்கே தனது சுயநலத்தை முன் நிறுத்தாமல் பொது மக்களுக்கு என்றே அதாவது இன்ன பிரிவினர், இன்ன மதத்துக்காரர், இன்ன கட்சிகாரர் என எந்த பேதமும் பார்க்காமல் அனைவரும் பயன் பெறும்படி வாழ்பவர்கள். இவ்வுலகில் இது போன்ற ஆத்மாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். 

தியாகிகள்: தனது உயிரை தந்து பிறர் உயிரை காப்பவர்கள். காதலில் நடக்கும் இந்த கருமாந்திரம் எல்லாம் தியாகத்தில் சேராது. அதைத் தாண்டிய தியாகம். மிக மிக அரிதாகவே தென்படும். 

இந்த மூன்று பிரிவினைப் பார்த்தால் சுயநலவாதிகள் கூட்டமே அதிகம். அதனால் தான் இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது.