இதோ ஒரு நிகழ்வு. கிட்டத்தட்ட அனைவருமே இது போன்ற நிகழ்வுகளை நேரிலோ, திரைப்படங்களிலோ கண்டு இருப்பீர்கள். ஓட்டு வீட்டின் முன்னே அரைமணி நேரம் முன்னர் இறந்து போன ஒருவரை நினைத்து அழுது கொண்டு, அரற்றி கொண்டு அவரது மனைவி, மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், சுற்றங்கள், நண்பர்கள் என குழுமி இருந்தார்கள். அவர் எப்படி எல்லாம் வாழ்ந்தார் என ஒரு நண்பர் சொல்லிக் கொண்டு இருந்தார். இறந்து போனவருடன் பல நாட்கள் பகைமை பாராட்டிய ஒரு சிலரும் அங்கே வந்து வருத்தம் தெரிவித்து கொண்டிருந்தார்கள். இதோ வாழ்க்கை அவரைப் பொருத்தவரை முடிந்து போன ஒன்று. இவ்வுலகில் பிறப்பு எடுத்தவர்கள் எல்லாம் இறக்க வேண்டும் என்பது இயற்கை நியதி.
இந்த வாழ்க்கையில் எப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள்? மனிதர்களை நல்லவர்கள், கெட்டவர்கள், துரோகிகள், நண்பர்கள், எதிரிகள், நயவஞ்சகர்கள், குள்ளநரிகள், கபடதாரிகள், வேடதாரிகள், பிறன்மனை கள்வர்கள், விபச்சாரிகள், பித்தலாட்டகாரர்கள், முடிச்சவிக்கிகள், மொள்ளைமாரிகள், கேனையர்கள், கிறுக்கர்கள், அரக்கர்கள், தேவர்கள், மதவாதிகள், தீவிரவாதிகள், மிதவாதிகள், அகிம்சாவாதிகள், துறவிகள், முனிவர்கள், மற்றும் தூதர்கள் என பல்வேறு வகையாகவே பிரித்து பார்க்கிறது உலகம். தொழில் ரீதியாகவும் இந்த மனிதர்கள் பல்வேறு வகையாக பிரிக்கப்படுகிறார்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள் என பற்பல. ஆனால் இவர்கள் எல்லாமே சுயநலவாதிகள் எனும் ஒரு அடைப்புக்குள் ஒடுங்கிப் போகிறார்கள். இந்த உலகம் சுயநலவாதிகளால் மட்டுமே ஆனது.
இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றே வைத்து கொள்வோம். நமது சூரிய குடும்பத்தை மட்டுமே இப்போதைக்கு பார்ப்போம். பிற கேலக்ஸிகள், நட்சத்திரங்கள் எல்லாம் இப்போது நமது பார்வைக்கு அவசியம் இல்லை. அப்படி கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் என வைக்க கடவுள் நிச்சயம் சுயநலவாதி தான். பிற கோள்களை எல்லாம் விட்டுவிட்டு பூமியில் மட்டும் உயிரினங்கள் படைத்த காரணத்தை கடவுள் இதுவரைக்கும் எந்த சுயநலவாதிகள் மூலமும் பேசியது இல்லை. மதங்களை, கடவுளின் நூல்களை உருவாக்கிய எந்த ஒரு சுயநலவாதியும் இதுகுறித்து மூச்சு விட்டதில்லை. எதற்கு படைத்தோம் என்கிற நோக்கமே இதுவரை தெளிவில் இல்லை.
அடுத்ததாக பரிணாமங்கள் பேசும் கொள்கை சுயநலவாதிகள் என்ன சொல்கிறார்கள். இது குறித்து கோல்டிலாக்ஸ் கோட்பாடு ஒன்று சொல்லப்பட்டு வருகிறது. அதாவது பூமியானது மிகவும் சரியான தொலைவில் சூரியனிலிருந்து இருப்பதாலும், நல்லதொரு தட்பவெட்ப நிலை நிலவுவதாலும் அதோடு நிறைய தண்ணீரும் பூமியில் இருப்பதாலும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கின்றன. வெள்ளி சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால், தண்ணீர் அதன் பரப்பில் இருக்க வாய்ப்பு இல்லை எனவும், அப்படியே தண்ணீர் இருந்தாலும் அவை எல்லாம் ஆவியாகக் கூடும் என்பதால் அங்கே உயிரினங்கள் வாழ வசதி இல்லை என்கிறது. அதோடு மட்டுமில்லாமல் செவ்வாய் சற்று தொலைவில் இருப்பதால் செவ்வாயின் பரப்பு மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் தண்ணீர் ஓட வசதி இல்லை. அங்கே தண்ணீர் எல்லாம் உறைந்து போகக்கூடிய சாத்தியம் மட்டுமே உண்டு. இந்த சூழலிலும் உயிரினங்கள் வாழ சாத்தியமில்லை என்றாகிறது. அப்படியெனில் இவ்வுலகம் சுயநலவாதிகளால் மட்டுமே ஆனது என்பது ஊர்ஜிதமாகிறது.
தனக்கு ஏற்ப சூழலில் மட்டுமே வாழ பழகிக் கொண்ட உயிரினங்கள் சுயநலவாதிகள் தான். அதற்கு அடுத்து எவர் எல்லாம் இந்த உலகில் பிழைத்து கொள்வார்கள் என்பது குறித்து பரிணாமங்கள் அடிப்படையில் பார்த்தால் 'எந்த ஒரு உயிரினம் இந்த சூழலில் தன்னைப் பக்குவபடுத்தி வாழ முடியுமோ' அந்த உயிரினமே வாழ இயலும், அந்த உயிரினத்தின் சந்ததிகள் மட்டுமே வாழ இயலும். அதாவது ஒரு குறிப்பிட்ட சீதோசன நிலை மாற்றத்தை தாங்கி கொள்ள இயலாத உயிரினங்கள் மறைந்து அழிந்துவிடும் என்பது பரிணாம தத்துவம்.
இதுவே மதங்களின் அடிப்படையில் பார்த்தால் 'நானே எல்லாம், என்னை தொடர்பவர்கள் ஒருபோதும் பாவத்தின் வழி செல்லமாட்டார்கள், என்னை அணுகுபவர்களுக்கு சரணாகதி தருகிறேன்' என்பது போன்ற கூக்குரல்கள். ஆனால் எந்த இறைவனின் பாதம் தொட்டாலும் மரணம் என்பது மட்டும் எல்லா உயிர்களுக்கும் உறுதி என்பதை ஒருபோதும் எவரும் சிந்தித்து பார்ப்பதில்லை. இந்த உலகம் முழுக்க முழுக்க சுயநலவாதிகளால் ஆனது. நிச்சயம் இது தவறான கூற்றாகவே முடியும். அது எப்படி இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது?
ஒவ்வொரு சீதோசன நிலைக்கும் என பறந்து செல்லும் பறவைகள் சுயநலவாதிகள். தனது உயிரை மட்டுமே காத்து கொள்ள வேண்டும் என போராடும் எந்த ஒரு உயிரினமும் சுயநலவாதிகள் தான். அப்படித்தான் பெரும்பாலானோர் இருக்கிறோம், இருக்கிறார்கள்.
தியாகங்கள் குறித்து எதற்கு இதுவரை பேசவில்லை. ஒரு தியாகியை சுயநலவாதி என சொன்னால் எப்படி இருக்கும். ஒரு அன்னை, ஒரு சேய். இங்கே உணவுப் போராட்டம் நடைபெறுகிறது. எவரேனும் ஒருவர் மட்டுமே உயிருடன் இருக்க இயலும். அந்த சூழலில் அன்னை தனது உயிரை மாய்த்து கொண்டு சேய் உயிரை காப்பாற்றிட மட்டுமே முனைவார். இது எப்படி சுயநலமாகும்? இது போன்று எல்லா உயிரினங்களிலும் தனது நலம் கருதாது பிறர் நலம் பேணுபவர்கள் இல்லாமல் இல்லையா? இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது எனில் அந்த தாய் நிச்சயம் சுயநலவாதியாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்போது அதே தாய், வேறொருவரின் குழந்தை. இந்த தாய் தன்னுயிர் தருவாளோ? இந்த் இரண்டு சூழல்களிலும் எப்படி இருவரும் உயிர் வாழ்வது என சிந்திக்கும் உயிரினமே வாழ்வில் நிலை கொள்கிறது என்பதுதான் சுயநல தத்துவம்.
இப்போது மனிதர்களை சுயநலவாதிகள், பொதுநலவாதிகள், தியாகிகள் என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.
சுயநலவாதிகள் : அன்றாடம் தனது வேலை, தனது குடும்பம், தனது சுற்றம், தனது நண்பர்கள், தனது உறவுகள் என வாழ்ந்தே கழித்தவர்கள். முதல் பத்தியில் படித்த மனிதர் போன்றவர்கள்.
பொதுநலவாதிகள்: இங்கே தனது சுயநலத்தை முன் நிறுத்தாமல் பொது மக்களுக்கு என்றே அதாவது இன்ன பிரிவினர், இன்ன மதத்துக்காரர், இன்ன கட்சிகாரர் என எந்த பேதமும் பார்க்காமல் அனைவரும் பயன் பெறும்படி வாழ்பவர்கள். இவ்வுலகில் இது போன்ற ஆத்மாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
தியாகிகள்: தனது உயிரை தந்து பிறர் உயிரை காப்பவர்கள். காதலில் நடக்கும் இந்த கருமாந்திரம் எல்லாம் தியாகத்தில் சேராது. அதைத் தாண்டிய தியாகம். மிக மிக அரிதாகவே தென்படும்.
இந்த மூன்று பிரிவினைப் பார்த்தால் சுயநலவாதிகள் கூட்டமே அதிகம். அதனால் தான் இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது.