Saturday, 11 February 2012

சுயநலவாதிகளால் ஆனது உலகம்

இதோ ஒரு நிகழ்வு. கிட்டத்தட்ட அனைவருமே இது போன்ற நிகழ்வுகளை நேரிலோ, திரைப்படங்களிலோ கண்டு இருப்பீர்கள். ஓட்டு வீட்டின் முன்னே அரைமணி நேரம் முன்னர் இறந்து போன ஒருவரை நினைத்து அழுது கொண்டு, அரற்றி கொண்டு அவரது மனைவி, மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், சுற்றங்கள், நண்பர்கள் என குழுமி இருந்தார்கள். அவர் எப்படி எல்லாம் வாழ்ந்தார் என ஒரு நண்பர் சொல்லிக் கொண்டு இருந்தார். இறந்து போனவருடன் பல நாட்கள் பகைமை பாராட்டிய ஒரு சிலரும் அங்கே வந்து வருத்தம் தெரிவித்து கொண்டிருந்தார்கள். இதோ வாழ்க்கை அவரைப் பொருத்தவரை முடிந்து போன ஒன்று. இவ்வுலகில் பிறப்பு எடுத்தவர்கள் எல்லாம் இறக்க வேண்டும் என்பது இயற்கை நியதி. 

இந்த வாழ்க்கையில் எப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள்? மனிதர்களை நல்லவர்கள், கெட்டவர்கள், துரோகிகள், நண்பர்கள், எதிரிகள், நயவஞ்சகர்கள், குள்ளநரிகள், கபடதாரிகள், வேடதாரிகள், பிறன்மனை கள்வர்கள், விபச்சாரிகள், பித்தலாட்டகாரர்கள், முடிச்சவிக்கிகள், மொள்ளைமாரிகள், கேனையர்கள், கிறுக்கர்கள், அரக்கர்கள், தேவர்கள், மதவாதிகள், தீவிரவாதிகள், மிதவாதிகள், அகிம்சாவாதிகள், துறவிகள், முனிவர்கள், மற்றும் தூதர்கள் என பல்வேறு வகையாகவே பிரித்து பார்க்கிறது உலகம். தொழில் ரீதியாகவும் இந்த மனிதர்கள் பல்வேறு வகையாக பிரிக்கப்படுகிறார்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள் என பற்பல. ஆனால் இவர்கள் எல்லாமே சுயநலவாதிகள் எனும் ஒரு அடைப்புக்குள் ஒடுங்கிப் போகிறார்கள். இந்த உலகம் சுயநலவாதிகளால் மட்டுமே ஆனது. 

இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றே வைத்து கொள்வோம். நமது சூரிய குடும்பத்தை மட்டுமே இப்போதைக்கு பார்ப்போம். பிற கேலக்ஸிகள், நட்சத்திரங்கள் எல்லாம் இப்போது நமது பார்வைக்கு அவசியம் இல்லை. அப்படி கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் என வைக்க கடவுள் நிச்சயம் சுயநலவாதி தான். பிற கோள்களை எல்லாம் விட்டுவிட்டு பூமியில் மட்டும் உயிரினங்கள் படைத்த காரணத்தை கடவுள் இதுவரைக்கும் எந்த சுயநலவாதிகள் மூலமும் பேசியது இல்லை. மதங்களை, கடவுளின் நூல்களை உருவாக்கிய எந்த ஒரு சுயநலவாதியும் இதுகுறித்து மூச்சு விட்டதில்லை. எதற்கு படைத்தோம் என்கிற நோக்கமே இதுவரை தெளிவில் இல்லை. 

அடுத்ததாக பரிணாமங்கள் பேசும் கொள்கை சுயநலவாதிகள் என்ன சொல்கிறார்கள். இது குறித்து  கோல்டிலாக்ஸ் கோட்பாடு ஒன்று சொல்லப்பட்டு வருகிறது. அதாவது பூமியானது மிகவும் சரியான தொலைவில் சூரியனிலிருந்து இருப்பதாலும், நல்லதொரு தட்பவெட்ப நிலை நிலவுவதாலும்  அதோடு நிறைய தண்ணீரும் பூமியில் இருப்பதாலும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கின்றன. வெள்ளி சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால், தண்ணீர் அதன் பரப்பில் இருக்க வாய்ப்பு இல்லை எனவும், அப்படியே தண்ணீர் இருந்தாலும் அவை எல்லாம் ஆவியாகக் கூடும் என்பதால் அங்கே உயிரினங்கள் வாழ வசதி இல்லை என்கிறது. அதோடு மட்டுமில்லாமல் செவ்வாய் சற்று தொலைவில் இருப்பதால் செவ்வாயின் பரப்பு மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் தண்ணீர் ஓட வசதி இல்லை. அங்கே தண்ணீர் எல்லாம் உறைந்து போகக்கூடிய சாத்தியம் மட்டுமே உண்டு. இந்த சூழலிலும் உயிரினங்கள் வாழ சாத்தியமில்லை என்றாகிறது. அப்படியெனில் இவ்வுலகம் சுயநலவாதிகளால் மட்டுமே ஆனது என்பது ஊர்ஜிதமாகிறது. 

தனக்கு ஏற்ப சூழலில் மட்டுமே வாழ பழகிக் கொண்ட உயிரினங்கள் சுயநலவாதிகள் தான். அதற்கு அடுத்து எவர் எல்லாம் இந்த உலகில் பிழைத்து கொள்வார்கள் என்பது குறித்து பரிணாமங்கள் அடிப்படையில் பார்த்தால் 'எந்த ஒரு உயிரினம் இந்த சூழலில் தன்னைப் பக்குவபடுத்தி வாழ முடியுமோ' அந்த உயிரினமே வாழ இயலும், அந்த உயிரினத்தின் சந்ததிகள் மட்டுமே வாழ இயலும். அதாவது ஒரு குறிப்பிட்ட சீதோசன நிலை மாற்றத்தை தாங்கி கொள்ள இயலாத உயிரினங்கள் மறைந்து அழிந்துவிடும் என்பது பரிணாம தத்துவம். 

இதுவே மதங்களின் அடிப்படையில் பார்த்தால் 'நானே எல்லாம், என்னை தொடர்பவர்கள் ஒருபோதும் பாவத்தின் வழி செல்லமாட்டார்கள், என்னை அணுகுபவர்களுக்கு சரணாகதி தருகிறேன்' என்பது போன்ற கூக்குரல்கள். ஆனால் எந்த இறைவனின் பாதம் தொட்டாலும் மரணம் என்பது மட்டும் எல்லா உயிர்களுக்கும் உறுதி என்பதை ஒருபோதும் எவரும் சிந்தித்து பார்ப்பதில்லை. இந்த உலகம் முழுக்க முழுக்க சுயநலவாதிகளால் ஆனது. நிச்சயம் இது தவறான கூற்றாகவே முடியும். அது எப்படி இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது?

ஒவ்வொரு சீதோசன நிலைக்கும் என பறந்து செல்லும் பறவைகள் சுயநலவாதிகள். தனது உயிரை மட்டுமே காத்து கொள்ள வேண்டும் என போராடும் எந்த ஒரு உயிரினமும் சுயநலவாதிகள் தான். அப்படித்தான் பெரும்பாலானோர் இருக்கிறோம், இருக்கிறார்கள். 

தியாகங்கள் குறித்து எதற்கு இதுவரை பேசவில்லை. ஒரு தியாகியை  சுயநலவாதி என சொன்னால் எப்படி இருக்கும். ஒரு அன்னை, ஒரு சேய். இங்கே உணவுப் போராட்டம் நடைபெறுகிறது. எவரேனும் ஒருவர் மட்டுமே உயிருடன் இருக்க இயலும். அந்த சூழலில் அன்னை தனது உயிரை மாய்த்து கொண்டு சேய் உயிரை காப்பாற்றிட மட்டுமே முனைவார். இது எப்படி சுயநலமாகும்? இது போன்று எல்லா உயிரினங்களிலும் தனது நலம் கருதாது பிறர் நலம் பேணுபவர்கள் இல்லாமல் இல்லையா? இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது எனில் அந்த தாய் நிச்சயம் சுயநலவாதியாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்போது அதே தாய், வேறொருவரின் குழந்தை. இந்த தாய் தன்னுயிர் தருவாளோ? இந்த் இரண்டு சூழல்களிலும் எப்படி இருவரும் உயிர் வாழ்வது என சிந்திக்கும் உயிரினமே வாழ்வில் நிலை கொள்கிறது என்பதுதான் சுயநல தத்துவம். 

இப்போது மனிதர்களை சுயநலவாதிகள், பொதுநலவாதிகள், தியாகிகள் என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 

சுயநலவாதிகள் : அன்றாடம் தனது வேலை, தனது குடும்பம், தனது சுற்றம், தனது நண்பர்கள், தனது உறவுகள் என வாழ்ந்தே கழித்தவர்கள். முதல் பத்தியில் படித்த மனிதர் போன்றவர்கள்.

பொதுநலவாதிகள்: இங்கே தனது சுயநலத்தை முன் நிறுத்தாமல் பொது மக்களுக்கு என்றே அதாவது இன்ன பிரிவினர், இன்ன மதத்துக்காரர், இன்ன கட்சிகாரர் என எந்த பேதமும் பார்க்காமல் அனைவரும் பயன் பெறும்படி வாழ்பவர்கள். இவ்வுலகில் இது போன்ற ஆத்மாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். 

தியாகிகள்: தனது உயிரை தந்து பிறர் உயிரை காப்பவர்கள். காதலில் நடக்கும் இந்த கருமாந்திரம் எல்லாம் தியாகத்தில் சேராது. அதைத் தாண்டிய தியாகம். மிக மிக அரிதாகவே தென்படும். 

இந்த மூன்று பிரிவினைப் பார்த்தால் சுயநலவாதிகள் கூட்டமே அதிகம். அதனால் தான் இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது.

Friday, 10 February 2012

புற்று நோய் பரிசோதனைகள் - நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை

முன்னுரை :

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி, பலரும் மனதில் நிறுத்தி கொள்ள வேண்டிய ஒரு அரிய வாசகம். வாழ்வில் நடந்து கொள்ளும் முறைகள் பொருத்தே இந்த நோய்கள் பெரும்பாலும் மனிதர்களை தாக்குகின்றன. வாழ்க்கை முறையில் உணவு, சுற்றுப்புறம் என பல காரணிகள் சுகாதார வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கின்றன. புற்று நோயானது மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களினால் உருவாகிறது. இந்த மரபணு மாற்றம் ஏற்பட புகையிலை, சிகரெட், கதிரியக்கம், சில வேதி பொருட்கள் சூரிய ஒளி என பல தெரிந்த காரணிகளும், சில தெரியாத காரணிகளும் அடங்கும். வருமுன் காப்போம் என்பதுவும், நோயினை முற்றிலும் குணப்படுத்துவது காட்டிலும் அதனை தடுப்பது  மிக சிறந்தது எனவும் நோய் பற்றிய அறிவு மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. மக்கள் இது குறித்த சிந்தனைகள் அறிந்திருத்தல் மிகவும் அவசியம் ஆகிறது. 

நோய் தீர்க்கும் மருத்துவம்: 

ஒரு நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை ஆய்ந்து அறிந்து அதற்குரிய மருத்துவத்தை செய்ய வேண்டும் எனும் சிந்தனையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்களின் சிந்தனையில் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாகவே தங்களுக்குள் ஏற்படும் மன சோர்வு, உடல் வியாதிகள் என அனைத்திற்கும் மருந்து வகைகளை மூலிகைகள் மூலம் கண்டுபிடித்து தங்களது வியாதிகளை அந்த காலகட்டத்தில் குணப்படுத்தி இருக்கிறார்கள். புற்று நோயிற்கு கூட ஒரு தாவரத்தில் இருந்தே மருந்தனாது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புற்று நோயினை முற்றிலும் தீர்க்க முடியாவிட்டாலும் அதனை தடுக்கும் முறையினை இன்று மருத்துவத்தில் கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார்கள். 

நோய்தனை ஆரம்ப நிலையிலே தடுக்கும் வாய்ப்புகளை இப்போது மருத்துவ உலகம் உருவாக்கி கொண்டு வருகிறது. முறையான பரிசோதனைகள் செய்வதன் மூலம் புற்று நோய் முதலான மிகவும் கடுமையான நோய்களை தடுத்து நிறுத்த இயலும். கவனக்குறைவுடன் செயல்படுவதை தவிர்ப்பதன் மூலம் நோய்களை தடுக்க இயலும். கீமோதெரப்பி எனப்படும் மருத்துவ முறைகள் கொண்டு, எக்ஸ் ரே, காமா கதிர்கள் மூலம் இந்த புற்று நோய்தனை கட்டுபடுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த எக்ஸ் ரே, காமா கதிர்கள் அளவுக்கு அதிகமாக உபயோகம் செய்யப்பட்டால் அவைகளே புற்று நோய் உருவாக்கவல்லவை. 

புற்று நோய்கள் வகைகள்: 

புற்று நோய் தலை முதல் கால் வரை வரக்கூடிய ஒன்றாகும். இந்த புற்று நோயில் இரண்டு பிரிவுகள் உண்டு, ஒன்று ஒரே இடத்தில் இருப்பது, மற்றொன்று உடலெல்லாம் பரவுவது. ஓரிடத்தில் இருக்கும் புற்று நோய்தனை விரைவில் குணப்படுத்திவிடலாம். உதாரணமாக மார்பக புற்று நோய் வந்தால் மார்பகத்தை அகற்றுவதன் மூலம் புற்று நோய் தனை அகற்றலாம். ஆனால் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளை அவ்வாறு பிரித்து விடுவது எளிதானது அல்ல. இதன் காரணமாக இந்த புற்று நோய் தனை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்வதால் தடுக்கலாம். 

ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்பது போல் புற்று நோய்தனை அறுபத்தி நான்கு வகைகளாக பிரித்து உள்ளார்கள், அதில் மூளை புற்று நோய், எலும்பு புற்று நோய், கருப்பை புற்று நோய், ரத்த புற்று நோய், மார்பக புற்று நோய், கருக்குழல் புற்று நோய், ஆண் பெண் பிறப்பு உறுப்பு புற்று நோய், தோல் புற்று நோய், வாய் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், கல்லீரல் புற்று நோய், ஆண் இனப்பெருக்க சுரப்பி புற்று நோய், கணையம் புற்று நோய், வயிற்று புற்று நோய் மற்றும் மூச்சு குழல் புற்று நோய் என்பவை குறிப்பிடத் தகுந்தவை. 

ஒவ்வொரு புற்று நோயிற்கும் ஒவ்வொரு அறிகுறிகள் தென்படும். இந்த புற்று நோயானது உடனே நாம் உடல் பாகத்தை தடவி பார்த்து ஊர்ஜிதம் செய்து கொள்ள இயலாது. இந்த புற்று நோய் மிகவும் மெதுவாக வளர்ச்சி அடைந்து உடலெல்லாம் பரவி மனிதர்களை கொல்லும் வலிமை உடையது. நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியானது பலவீனம் அடையும் பட்சத்தில் இந்த நோயின் தன்மை தீவிரம் அடைகிறது எனலாம். 

பரிசோதனை செய்ய பயம் ஏன்:

மனிதர்களில் பலர் மருத்துவம் பார்க்கவே மிகவும் அச்சப்படுகிறார்கள்.  கிராமங்களில் காவல் நிலையத்திற்கு சென்றாலே கௌரவ குறைச்சல் என்பதை போல மருத்துவமனை பக்கம் செல்வது என்றால் தான் நோயாளி என்பது போன்ற உணர்வுகள் வருவது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். வெளிநாடுகளில் எல்லாம் பெண்களுக்கு கருவாயில் புற்று நோய் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்ள வருமாறு மருத்துவமனைகளில் இருந்து அழைப்பு அனுப்புவார்கள். இந்த பரிசோதனை இலவசமானது, ஆனால் பெரும்பாலான பெண்கள் இது போன்ற அழைப்புகளை அலட்சியபடுத்துவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அலட்சியபடுத்துவதன் மூலம் தங்கள் உயிருக்கு தீங்கிழைக்கிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். 

உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். உடலை பேணி காப்பதில் தான் உயிர் காப்பதின் ரகசியம் இருக்கிறது என்பதை இத்தனை தெளிவாக எவரால் சொல்ல இயலும். மருத்துவ தொழில் நுட்பம் பெருகிய இந்த காலகட்டத்தில் புற்று நோயிற்கான உரிய பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் ஆகிறது. 

பரிசோதனை வகைகள்: 

நமது உடலில் புற்று நோய் உருவானால் அதை எதிர்க்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இந்த புரதமானது ஆன்டிபாடி என சொல்வார்கள். புற்று நோய் எதிர்ப்பு ஆன்டிபாடி உடலில் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து பார்ப்பது மூலம் புற்று நோய் தடுக்கலாம். இந்த பரிசோதனையில் ஒருவேளை இந்த எதிர்ப்பு ஆன்டிபாடிகள் கண்டுபிடிக்க இயலாமல் போக வாய்ப்பும் உண்டு. எனவே வேறு சில பரிசோதனை முறைகளும் உபயோகிக்கலாம். 

நமது உடலில் புற்று நோய் ஏற்பட்டால் சில வேதி பொருட்கள் உடலில் அதிகரிக்கும், இந்த வேதி பொருட்களை பரிசோதனை செய்வதன் மூலம் எந்த வகையான புற்று நோய் வந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதில் ஆல்பா பிட்டபுரதம், புற்றுநோய் ஆண்டிஜென் போன்றவை ஆகும். மேலும் ரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே இருக்கும், ஆனால் புற்று நோய் வந்தால் இந்த பொருட்கள் அளவு மாறுபடும் அதை வைத்து புற்று நோய் கண்டு பிடிக்கலாம். இவை எல்லாம் மிக மிக ஆரம்ப நிலையிலே கண்டுபிடிக்க கூடிய வசதிகளாகும். 

சிறிது பெரிதானாலும் கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் உண்டு. உடலை ஸ்கான் செய்து இந்த புற்று நோய் கண்டுபிடிக்கலாம். பெட் ஸ்கான் என சொல்வார்கள். மேலும் உடலில் ஏதாவது கட்டி இருகிறதா என உறுப்புகளின் அளவினை பார்த்து சொல்வதும் உண்டு. இப்படி பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொண்டபின்னர் உரிய மருத்துவ முறையினை பின்பற்றினால் புற்று நோய்தனை தடுக்கலாம். 

விழித்து கொள்ளுங்கள்: 

புற்று நோய் வந்தால் மரணம் நிச்சயம் எனும் உணர்வை அகற்றிவிட்டு புற்று நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து கொண்டு அந்த நோயின் தன்மையில் இருந்து காத்து கொள்ளலாம். தற்போது கரு உருவானதும் அந்த கருவில் மார்பக புற்று நோயிற்கான மரபணு இருக்கிறதா எனும் அளவிற்கு கரு பரிசோதனை எல்லாம் தற்போது மருத்துவத்தில் வந்துவிட்டது. இதை எல்லாம் கிராமங்கள், நகரங்கள் என எல்லா இடங்களிலும் ரத்த தான முகாம், கண் பார்வை முகாம் போன்றது போல, புற்று நோய் முகாம் நடத்த வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். 

இதுகுறித்த அறிவினை எங்கும் பரப்பிட பல அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது, அந்த அமைப்புகளுக்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்து மக்களை அறியாமையில் இருந்து காப்பது அனைவரின் கடமையாகும். 

முடிவுரை:

புற்று நோயிற்கு முற்று புள்ளி வைக்க பரிசோதனை முறைகள் மிகவும் உதவி புரியும் என்றாலும் இது குறித்த அறிவு அனைவருக்கும் அவசியமாகும். அதனை எல்லா இடங்களிலும் கொண்டு சேர்த்திட போராடுவோம். 

Monday, 6 February 2012

கோவம் ஏனய்யா? நாம சாவது

தமிழகத்தில் தென்மாவட்டமாகிய விருதுநகர் அருகில் உள்ள குண்டத்தூரில் இருந்து ஒரு சாமி தாத்தா வருடம் தோறும் எங்கள் ஊருக்கு வருவார். எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள திண்ணையில் தினமும் ஒரு வாரத்திற்கு இரவு கதை சொல்வார். வீட்டில் என்னை கதை கேட்க சொல்லி போகச் சொல்வார்கள். ஆனால் நான் இரவு எட்டு மணி ஆனதும் தூங்க போய்விடுவேன். ஒருநாள் கூட அவர் சொன்ன கதையை கேட்க நான் போனது இல்லை. 

வீட்டின் மாடியில் தான் படுத்து உறங்குவது வழக்கம். அப்போது அவர் பேசும் பேச்சுகள் காதில் காற்றோடு கலந்து வந்து விழும். அவருக்கு.நல்ல கனத்த குரல் அவர் கதை சொல்லி முடித்ததும் ஒரு பாடல் பாடுவார். ஆனால் என்ன என்ன கதை சொன்னார் என்பதெல்லாம் எதுவுமே தற்போது நினைவில் இல்லை, ஏனெனில் நான் கதையை காது கொடுத்து கேட்டது இல்லை. இந்த சாமி தாத்தா எனது உறவினர் தான். இவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. குண்டத்தூர் சென்றபோது ஒரு சில முறை பார்த்து இருக்கிறேன். எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் பார்த்துவிட்டு புன்னகையோடு சென்றதோடு சரி. அவர் என்னிடம் பேசியது இல்லை, நான் அவரிடம் பேசியதும் இல்லை. 

ஆனால் அவர் கதையின் முடிவில் பாடிய பாடலின் முதல் வரிகள் மட்டும் எப்போதும் என்னில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கின்றன. எனக்கு கோபம் வரும் போதெல்லாம் இந்த பாடல் மனதில் தைத்துவிட்டு போகும். ஆனால் கோபம் வந்தது வந்ததுதான். எதற்கு இந்த கோபம் என கோபம் வந்து சென்றபின்னர் சிந்தித்து பார்த்தால் 'எல்லாம் முட்டாள்தனமாக மட்டுமே தோன்றும்'. 

அவர் பாடிய பாடலின் முதல் வரி இதுதான். 'கோவம் ஏனய்யா நாம சாவது நிசம் ஐயா' அதற்கடுத்து என்ன வரிகள் பாடினார், அந்த பாடல் எப்படி போகும் என்பதெல்லாம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இந்த வரி மட்டும் என்னை மிகவும் பாதித்த வரி. நான் மிகவும் கோபக்காரனாகவே எனது வாழ்வில் நான் வாழ்ந்து இருந்து இருக்கிறேன். என்னை எனது வீட்டில் விசுவாமித்திரர் என்றே சொல்வார்கள். 

ஆனால் நான் கோபம் கொண்டது எல்லாம் அன்றைய நாட்களின் தேவைக்கு மட்டுமே. எனக்கு சமூக அக்கறையோ, சமூகத்தின் மீதான அக்கறையில் எழுந்த கோபமோ, அல்லது தீண்டத்தகாதவர் என எனது ஊரில் ஒதுக்கி வைக்கப்பட்ட சமுதாயம்தனை ஒடுக்கி வைத்தவர்களின் மீதான கோபமோ, சாலை போடப்பட்ட ஒரே மாதத்தில் பழுதாகிப் போன சாலை போட்டவர்கள் மீதான கோபமோ, சாதிகள் என பல சாதிகள் கொண்ட ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, சாதியை ஒழிக்க வேண்டும் என்கிற கோபமோ இல்லை. எனது கோபம் எல்லாம் மிக மிக சின்ன சின்ன அதுவும் அற்ப விசயங்கள் என சொல்வார்களே அப்படித்தான் இருந்தது, இப்பவும் அப்படித்தான் இருக்கிறது. 

இந்த கோபம் இயலாமையின் வெளிப்பாடு என்றே ஒருமுறை எனக்கு ஒருவர் சொன்னார். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என மற்றொருவர் சொன்னார். ஆனால் இந்த கோபம் மொத்த குடும்பத்தையே வேரறுக்கவல்லது என்பதை பல கதைகளில் கற்று தெளிந்து இருக்கிறேன். இருப்பினும் கோபம் நம்மை விட்டு அகல்வதில்லை. 

கோபத்தை எதற்காக கட்டுபடுத்த இயலாது? அல்லது கோபத்தை எதற்காக கட்டுபடுத்த வேண்டும்? எனது நண்பர் என்னிடம் சொல்வார், ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் இந்த கோபம் எல்லாம் அனாவசியம் என்பார். ஆனால் அவர் கொண்டுள்ள கோபங்கள் பற்றி எதுவுமே பேசமாட்டார். நான் மிக மிக கோபக்காரன், ஆனால் எப்படி வெளிப்படுத்துவது, எங்கே வெளிப்படுத்துவது என்பதில் நான் மிகவும் கவனமாகவே இருக்கிறேன். 

சாலையில் போய்க் கொண்டிருப்பவனிடம் நான் ஒருபோதும் எனது கோபத்தை காட்டியது இல்லை. எனது உற்றார் உறவினர் என இவர்களிடமும் கூட நான் அவ்வளவாக கோபம் காட்டியது இல்லை. ஏதேனும் அவர்கள் செய்தால் கூட புன்முறுவலுடன் விலகிப் போய்விட முடிகிறது. இவர்கள் மீது கோபம் கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிற உணர்வு மேலிடுகிறது. இவர்களின்பால் எனது அன்பு கூட அளவுடனே இருக்கிறது. என்னால் முடிந்தால் அவர்கள் கேட்கும் உதவிகளை செய்வதுடன் நான் எனது அன்பு எல்லாம் அங்கே நின்றுவிடுகிறது. கேட்டுவிட்டார்களே என மாய்ந்து மாய்ந்து செய்யும் பழக்கம் எல்லாம் இல்லை. எவர் எப்படி பேசினால் எனக்கு என்ன என்கிற மமதை அதிகமாகவே இருக்கிறது. 

ஆனால், எங்கு அன்பு அதிகம் செலுத்துகிறேனோ அங்கே நான் அதிகம் கோபம் கொள்கிறேன். அன்புதனை செலுத்தும் இடத்தில் அங்கே கோபத்திற்கு என்ன வேலை? புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. இந்த கோபத்தின் மூலம் நான் இதுவரை எவரையுமே அடித்தது இல்லை. ஆனால் வார்த்தைகளால் சுட்டு இருக்கிறேன் என்றே கருதுகிறேன். ஒருவேளை நான் அடித்து இருந்தால் ஏற்பட்டு இருக்கும் வலியை விட இந்த வார்த்தைகளின் வலி எனக்கு அதிகம் வலித்து இருக்கிறது. 

கோபத்தை கட்டுபடுத்த பலமுறை நினைத்துவிட்டேன், ஒரு நாள், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள். மீண்டும் கோபம் வந்து தொலைக்கிறது. எனது சாமி தாத்தா பாடிய பாடலும் மனதில் ரீங்காரம் இடுகிறது. இறுதியாக ஒரு முடிவில் வந்து நிற்க முடிகிறது, அதாவது  மனிதன் இறக்கும் வரையில் இந்த கோபம் இறப்பது இல்லை. ஏதேனும் ஒரு காரணம் காட்டி கொண்டு பல்லை நறநறவென கடித்து கொண்டு வார்த்தைகளை துப்பிவிடுகிறது. 

சினம் - குலத்தை அழித்துவிடும். சினம் - நண்பர்களை குலைத்துவிடும். 

நியாயமான கோபம், தார்மீக கோபம் என கோபம் பற்றி என்னவெல்லாமோ சொல்லி நியாயப் படுத்துகிறார்கள். சாவே உனக்கு சாவு வராதா என கதறி அழுதானாம் ஒரு கவிஞன்.  மனித வாழ்வில் பலரும் கோபமே உனக்கு சாவு வராதா என்று கேட்பதில் கூட கோபம் கொள்கிறார்கள். 

கோபம் பற்றி எழுத தூண்டிய சகோதரி ஷக்திப்ரபா பதிவுக்கு நன்றி.