தமிழகத்தில் தென்மாவட்டமாகிய விருதுநகர் அருகில் உள்ள குண்டத்தூரில் இருந்து ஒரு சாமி தாத்தா வருடம் தோறும் எங்கள் ஊருக்கு வருவார். எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள திண்ணையில் தினமும் ஒரு வாரத்திற்கு இரவு கதை சொல்வார். வீட்டில் என்னை கதை கேட்க சொல்லி போகச் சொல்வார்கள். ஆனால் நான் இரவு எட்டு மணி ஆனதும் தூங்க போய்விடுவேன். ஒருநாள் கூட அவர் சொன்ன கதையை கேட்க நான் போனது இல்லை.
வீட்டின் மாடியில் தான் படுத்து உறங்குவது வழக்கம். அப்போது அவர் பேசும் பேச்சுகள் காதில் காற்றோடு கலந்து வந்து விழும். அவருக்கு.நல்ல கனத்த குரல் அவர் கதை சொல்லி முடித்ததும் ஒரு பாடல் பாடுவார். ஆனால் என்ன என்ன கதை சொன்னார் என்பதெல்லாம் எதுவுமே தற்போது நினைவில் இல்லை, ஏனெனில் நான் கதையை காது கொடுத்து கேட்டது இல்லை. இந்த சாமி தாத்தா எனது உறவினர் தான். இவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. குண்டத்தூர் சென்றபோது ஒரு சில முறை பார்த்து இருக்கிறேன். எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் பார்த்துவிட்டு புன்னகையோடு சென்றதோடு சரி. அவர் என்னிடம் பேசியது இல்லை, நான் அவரிடம் பேசியதும் இல்லை.
ஆனால் அவர் கதையின் முடிவில் பாடிய பாடலின் முதல் வரிகள் மட்டும் எப்போதும் என்னில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கின்றன. எனக்கு கோபம் வரும் போதெல்லாம் இந்த பாடல் மனதில் தைத்துவிட்டு போகும். ஆனால் கோபம் வந்தது வந்ததுதான். எதற்கு இந்த கோபம் என கோபம் வந்து சென்றபின்னர் சிந்தித்து பார்த்தால் 'எல்லாம் முட்டாள்தனமாக மட்டுமே தோன்றும்'.
அவர் பாடிய பாடலின் முதல் வரி இதுதான். 'கோவம் ஏனய்யா நாம சாவது நிசம் ஐயா' அதற்கடுத்து என்ன வரிகள் பாடினார், அந்த பாடல் எப்படி போகும் என்பதெல்லாம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இந்த வரி மட்டும் என்னை மிகவும் பாதித்த வரி. நான் மிகவும் கோபக்காரனாகவே எனது வாழ்வில் நான் வாழ்ந்து இருந்து இருக்கிறேன். என்னை எனது வீட்டில் விசுவாமித்திரர் என்றே சொல்வார்கள்.
ஆனால் நான் கோபம் கொண்டது எல்லாம் அன்றைய நாட்களின் தேவைக்கு மட்டுமே. எனக்கு சமூக அக்கறையோ, சமூகத்தின் மீதான அக்கறையில் எழுந்த கோபமோ, அல்லது தீண்டத்தகாதவர் என எனது ஊரில் ஒதுக்கி வைக்கப்பட்ட சமுதாயம்தனை ஒடுக்கி வைத்தவர்களின் மீதான கோபமோ, சாலை போடப்பட்ட ஒரே மாதத்தில் பழுதாகிப் போன சாலை போட்டவர்கள் மீதான கோபமோ, சாதிகள் என பல சாதிகள் கொண்ட ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, சாதியை ஒழிக்க வேண்டும் என்கிற கோபமோ இல்லை. எனது கோபம் எல்லாம் மிக மிக சின்ன சின்ன அதுவும் அற்ப விசயங்கள் என சொல்வார்களே அப்படித்தான் இருந்தது, இப்பவும் அப்படித்தான் இருக்கிறது.
இந்த கோபம் இயலாமையின் வெளிப்பாடு என்றே ஒருமுறை எனக்கு ஒருவர் சொன்னார். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என மற்றொருவர் சொன்னார். ஆனால் இந்த கோபம் மொத்த குடும்பத்தையே வேரறுக்கவல்லது என்பதை பல கதைகளில் கற்று தெளிந்து இருக்கிறேன். இருப்பினும் கோபம் நம்மை விட்டு அகல்வதில்லை.
கோபத்தை எதற்காக கட்டுபடுத்த இயலாது? அல்லது கோபத்தை எதற்காக கட்டுபடுத்த வேண்டும்? எனது நண்பர் என்னிடம் சொல்வார், ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் இந்த கோபம் எல்லாம் அனாவசியம் என்பார். ஆனால் அவர் கொண்டுள்ள கோபங்கள் பற்றி எதுவுமே பேசமாட்டார். நான் மிக மிக கோபக்காரன், ஆனால் எப்படி வெளிப்படுத்துவது, எங்கே வெளிப்படுத்துவது என்பதில் நான் மிகவும் கவனமாகவே இருக்கிறேன்.
சாலையில் போய்க் கொண்டிருப்பவனிடம் நான் ஒருபோதும் எனது கோபத்தை காட்டியது இல்லை. எனது உற்றார் உறவினர் என இவர்களிடமும் கூட நான் அவ்வளவாக கோபம் காட்டியது இல்லை. ஏதேனும் அவர்கள் செய்தால் கூட புன்முறுவலுடன் விலகிப் போய்விட முடிகிறது. இவர்கள் மீது கோபம் கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிற உணர்வு மேலிடுகிறது. இவர்களின்பால் எனது அன்பு கூட அளவுடனே இருக்கிறது. என்னால் முடிந்தால் அவர்கள் கேட்கும் உதவிகளை செய்வதுடன் நான் எனது அன்பு எல்லாம் அங்கே நின்றுவிடுகிறது. கேட்டுவிட்டார்களே என மாய்ந்து மாய்ந்து செய்யும் பழக்கம் எல்லாம் இல்லை. எவர் எப்படி பேசினால் எனக்கு என்ன என்கிற மமதை அதிகமாகவே இருக்கிறது.
ஆனால், எங்கு அன்பு அதிகம் செலுத்துகிறேனோ அங்கே நான் அதிகம் கோபம் கொள்கிறேன். அன்புதனை செலுத்தும் இடத்தில் அங்கே கோபத்திற்கு என்ன வேலை? புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. இந்த கோபத்தின் மூலம் நான் இதுவரை எவரையுமே அடித்தது இல்லை. ஆனால் வார்த்தைகளால் சுட்டு இருக்கிறேன் என்றே கருதுகிறேன். ஒருவேளை நான் அடித்து இருந்தால் ஏற்பட்டு இருக்கும் வலியை விட இந்த வார்த்தைகளின் வலி எனக்கு அதிகம் வலித்து இருக்கிறது.
கோபத்தை கட்டுபடுத்த பலமுறை நினைத்துவிட்டேன், ஒரு நாள், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள். மீண்டும் கோபம் வந்து தொலைக்கிறது. எனது சாமி தாத்தா பாடிய பாடலும் மனதில் ரீங்காரம் இடுகிறது. இறுதியாக ஒரு முடிவில் வந்து நிற்க முடிகிறது, அதாவது மனிதன் இறக்கும் வரையில் இந்த கோபம் இறப்பது இல்லை. ஏதேனும் ஒரு காரணம் காட்டி கொண்டு பல்லை நறநறவென கடித்து கொண்டு வார்த்தைகளை துப்பிவிடுகிறது.
சினம் - குலத்தை அழித்துவிடும். சினம் - நண்பர்களை குலைத்துவிடும்.
நியாயமான கோபம், தார்மீக கோபம் என கோபம் பற்றி என்னவெல்லாமோ சொல்லி நியாயப் படுத்துகிறார்கள். சாவே உனக்கு சாவு வராதா என கதறி அழுதானாம் ஒரு கவிஞன். மனித வாழ்வில் பலரும் கோபமே உனக்கு சாவு வராதா என்று கேட்பதில் கூட கோபம் கொள்கிறார்கள்.
கோபம் பற்றி எழுத தூண்டிய சகோதரி ஷக்திப்ரபா பதிவுக்கு நன்றி.