ரஜினி இலக்கிய விழாவில் பங்கு எடுக்க போகிறார் என்றதுமே எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இந்த மனிதருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என நினைப்பு வந்து அமர்ந்தது. அதோடு நான் இது சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை வலைப்பூ ஒன்றில் படித்தபோது எஸ் ரா மீதான குற்றச்சாட்டு கண்டு மிகவும் கஷ்டமாகவே இருந்தது. இப்படி எல்லாம் செய்து இருப்பார்களா என யோசிக்க வைத்தது.
அந்த குற்றசாட்டின் சாராம்சம் என்னவெனில் எஸ் ராவுக்கும், சாகித்ய அகாடெமி விருது பெற்ற வெங்கடேசன் என்பவருக்கும் தீராத பகை என்பதாகவும், எஸ் ராவின் மரியாதை குறைந்து போனதாகவும், அதனால் அந்த மரியாதையை நிலைநிறுத்த எஸ் ரா, ரஜினியை வைத்து விழா எடுக்கிறார் என்பதுதான்.
இத்தனைக்கும் எஸ் ரா எனது பக்கத்து ஊர்க்காரர். நான் அவரை பார்த்தது இல்லை, படித்தது இல்லை. எடின்பரோ நண்பர் ஒருவர் அன்பளிப்பாக கொடுத்த 'உறுபசி' கூட இன்னமும் புத்தக அலமாரியில் உறங்கி கொண்டிருக்கிறது. சில முறை எடுத்து பார்த்துவிட்டு வாசிக்காமல் வைத்து இருக்கிறேன். சமீபத்தில் வாசித்த தமிழ் நாவல் என எதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஊரில் இருந்தவரை சில புத்தகங்கள் கல்கத்தாவில் இருந்த நூலகங்களில் இருந்து எடுத்து வந்து படித்து இருக்கிறேன். என்னுடன் படித்த அன்பழகன் சார், எனது சீனியர் அண்ணாதுரை சார் இவர்கள் எல்லாம் தமிழ் புத்தகங்கள் எல்லாம் வாரம் வாரம் அள்ளிக்கொண்டு வந்து படிப்பார்கள். ஆச்சர்யபட்டு இருக்கிறேன்.
இப்படி இலக்கியங்கள் படைத்து கொண்டிருக்கும் இலக்கிய எழுத்தாளர்கள் இடையே போட்டி பொறாமை என்றெல்லாம் அந்த வலைத்தளத்தில் படித்தபோது மிக மிக வருத்தமாகவே இருந்தது. மனதில் என்னவெல்லாமோ எழுத தோன்றியது, பின்னூட்டம் எதுவும் இடாமல் வந்துவிட்டேன். ஏனெனில் சென்னையில் இருக்கும் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளமால் என்ன சொல்வது எனும் மனநிலைதான். எப்போது இந்த இலக்கிய விழா நடக்கும் என எதிர்பார்த்து கொண்டிருந்தேன். இதற்கு முன்னர் ரஜினியும் எலக்கியமும் என தலைப்பிட்டு ஒன்றை எழுத நினைத்தபோது ரஜினியின் பேச்சை கேட்காமல் எழுதக் கூடாது என தள்ளிவைத்தேன். அது மிகவும் சரியாக போய்விட்டது. ரஜினிகாந்தும் இலக்கியமும் என நன்றாகவே தலைப்பிட்டு எழுத வைத்தது.
ரஜினி மேடை பேச்சுகளில் எப்போதுமே குட்டி குட்டி கதை சொல்வார். அந்த கதையில் பல அர்த்தங்கள் பொதிந்து இருக்கும். எழுத்து என்பதன் வலிமை என்ன என அவர் பேசிய பேச்சு அற்புதம். அதிலும் கடவுள் இருக்கிறார் என்பதற்கான கதையை சொல்லி அதற்கு பின்னர் அவர் முடித்த விதம் அட்டகாசம். அந்த கதையின் கடைசி வரிகள் தான் ரஜினி ஒரு சிறந்த இலக்கியவாதி என காட்டியது. என்ன சொல்கிறாய் என்பதல்ல எழுத்து, எப்படி சொல்கிறாய் என்பதுதான் எழுத்து.
எத்தனை விசயங்கள். தன்னை தாழ்த்தி பேசும் பேச்சில் மனிதர் உயர்ந்து நிற்கிறார். இதைவிட அந்த வலைத்தளத்தில் எழுதி இருந்த குற்றச்சாட்டுதனை பொடிபொடியாக்கும் வண்ணம் எப்படி இந்த விழா நடக்க காரணமானது என அவர் சொன்ன விதம் எப்படியெல்லாம் உலகில் பிறர் பொய் பேசித் திரிகிறார்கள், வன்மை வைத்து திரிகிறார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. ரஜினி ஏமாறவில்லை. ஏமாற்றவும் இல்லை.
தமிழ் எழுத்தாளர்கள் என ஜெயமோகன், சாருநிவேதிதா ( இவரை பலநாட்கள் பெண் எழுத்தாளர் என்றே நினைத்து இருந்தேன், சுஜாதாவை நினைத்தது போல) இவர்களுக்கு இடையே நடக்கும் எதோ அறபோராம் , அக்கப்போராம் அதையெல்லாம் படித்து எழுத்தாளர்கள் எதற்கு இப்படி இருக்கிறார்கள் எனும் நினைப்பை அகல வைத்தது ரஜினியின் பேச்சு.
இவரது பேச்சை கண்டு ரசிக்க இதோ இங்கே. இரண்டாம் பகுதி.
ஒரு குட்டி சுயசரிதை எழுதப்பட்டு விட்டதாம். பிறர் மனம் நோக வேண்டாம் என வெளியிடவில்லை என அவர் சொன்னதில் இருந்தே ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.