சிறு வயதில் இரவில் நான் ஓடிக்கொண்டிருக்க என்னுடன் ஓடி வரும் நிலா. நான் நின்றால் நின்று கொள்ளும் நிலா. என் பேச்சு கேட்கும் அன்பு நிலா.
அம்மாவின் இடுப்பில் அமர்ந்து நிலாவைப் பார்த்து சாப்பிட்ட தருணங்கள். இந்த நிலா, வெள்ளை நிலா,
நிலா நிலா ஓடி வா என பள்ளி காலங்களில் படித்து ரசித்த பாடங்கள். நிலா உள்ளம் கொண்ட கொள்ளை நிலா.
தேய் பிறை, வளர் பிறை என நிலா தேய்வதும், வளர்வதுமாய். இது நிலா பற்றிய ஒரு கால கணிப்பு.
வானத்தில் மேகங்கள் வலம் வர அங்கே எவரோ இருப்பதாய் கண்டு சிரித்த காலங்கள்.
ஆடு போன்ற உருவங்கள், ராஜா பவனி வரும் குதிரை வண்டிகள் என எத்தனை எத்தனையோ மேகங்களில் பார்த்து ரசித்த ஓவியங்கள். ஒவ்வொரு தினமும் எவரேனும் வரைந்து வைத்ததைப் போன்றே புதிதாக தோன்றும்.
இரவில் வானத்தைப் பார்த்து நட்சத்திரங்கள் எண்ணுவது ஒரு பொழுது போக்காக இருந்தது. எங்கோ தொலைவில் விழுந்து விடும் நட்சத்திரங்கள் விர்ரென பறந்து போனது கண்டு எரி நட்சத்திரம் என்றார்கள்.
சூரிய பகவான். வாயு பகவான். வருண பகவான் என வானத்தில் கடவுளர்களை தேடிய பொழுதுகள் உண்டு. இடி இடித்தால் அர்ஜுனன் பெயர் சொல்லி கதவுக்கு பின்னால் மறைந்த பொழுதுகள் உண்டு.
எத்தனை எத்தனை கவிதைகள், பாடல்கள். வான மங்கை போட இருக்கும் கோலத்திற்கான புள்ளிகள் தான் நட்சத்திரங்கள் என வாசித்த போது சிலிர்க்க வைக்க சிந்தனைகள்.
மழைக்காக மாரியம்மனுக்கு மழை கஞ்சி எடுத்த நினைவுகள். இன்னும் இன்னும் நினைவில் பசுமையாக இருக்கிறது.
வானத்தில் இருக்கும் சொர்க்கம் என்றே பாட்டியிடம் கேட்ட கதைகள். இறந்தவர்கள் சாமியிடம் சென்று விட்டார்கள் என வானத்தை நோக்கி சொன்ன வார்த்தைகள்.
சூரிய நமஸ்காரம் சொன்னதோடு நவ கிரகங்கள் என ஒன்பது கிரகங்களை கோவில்களில் சுற்றி வந்த பொழுதுகள். எந்த கணக்கில் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் என கண்டு கொண்டார்களோ என புரியாத கணக்குகள். ராசியும் பலன்களுமாய்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் தொடர்பு உண்டு. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தொடர்பு உண்டு. இந்த மொத்த அண்ட சாரமும் பிண்டத்தில் உண்டு என்று சொன்ன விதிகள்.
இன்னும் இன்னும். நிலா தொட்டு விட்டோம். பூமிக்கு மட்டுமே நிலா அல்ல, ஒவ்வொரு கிரகத்திற்கும் நிலா உண்டு என்று கண்டு கொண்டோம்.
நாம் இருக்கும் இடம் இந்த பிரபஞ்சத்தில் ஒரு சின்ன துளி. என்றோ அனுப்பப்பட்ட வானியல் கோள் புளுட்டோவை தாண்டி கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
சிறு வயதில் வானத்தில் படங்களை பார்த்தது போல தொலை தூர நட்சத்திரங்களில் நெபுலாவில் அதிசய படங்கள் பார்க்கிறார்கள். அதிசய படங்கள் காட்டுகிறார்கள். அத்தனை அழகுடன் வியாபித்து இருக்கிறது இந்த பிரபஞ்சம்.
நமது சூரிய குடும்பத்தில் உள்ள ஆக்சிஜன் அணு அளவும், நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள ஆக்சிஜன் அணு அளவும் வெவ்வேறு என கண்டு கொள்ள முடிகிறது. இதனால் புது விசயம்தனை தெளிந்து கொள்ளலாம் என போராடுகிறார்கள்.
இப்படி எத்தனையோ முன்னேற்றம் அடைந்து கொண்ட இந்த கால தொழில் நுட்பம் பொது மக்களை வானியல் ஆராய்ச்சி செய்ய அழைக்கிறது. தொலை நோக்கி மூலம் வானில் ஏற்படும் அதிசயங்களை கண்டு தர சொல்கிறது.
ஒருவரின் கண்ணுக்கு தெரிவது மற்றொரு கண்ணுக்கு வேறொன்றாக புலப்படலாம். பலரும் போட்டி போட்டு கொண்டு இந்த பணியில் இறங்கி எந்த ஆராய்ச்சி பட்டம் பெறாத ஒருவர் ஒரு புது கிரகத்தை அதுவும் பூமி போன்ற கிரகத்தை சமீபத்தில் கண்டு பிடித்தார்.
சந்திர கிரகணம். சூரிய கிரகணம். பாம்பு விழுங்கிய கதை எல்லாம் இன்னமும் நினைவில் இருக்கிறது. இன்றும் கூட கிரகணம் சமயங்களில் வெளியில் வர வேண்டாம் என கட்டுபாடுகள் விதிக்கிறார்கள்.
வானத்தில் அதிசயங்கள் நடைபெற்று கொண்டே இருக்கின்றன. வெடித்து சிதறும் பல நட்சத்திரங்கள். குட்டியாய் தோன்றும் நட்சத்திரங்களில் தண்ணீர் சிதறும் மர்மங்கள். இன்னும் இன்னும்.
ஒரு நாள் இரவில் தனியாய் மகனுடன் நடந்து கொண்டு இருந்தேன். வானத்தைப் பார்த்தவன் அதோ நிலவுடன் ஒரு நட்சத்திரம் என்றான். வானில் பறக்கும் விமானமாக இருக்கும் என்றேன். இல்லை இல்லை அது நேர்கோட்டில் அமைந்த நட்சத்திரம் என்றான். படம் எடு என வற்புறுத்த வேண்டாம் என மறுத்தேன்.
மறுநாள் மீண்டும் இரவில் நடந்தோம். அதே நிலா, அதே நட்சத்திரம். படம் எடுத்தே ஆக வேண்டும் என சொன்னான். படம் எடுத்தேன். வானியல் ஆராய்ச்சி விருப்பம் உடையவர்கள் ஒரு தொலைநோக்கியுடன் வானத்தைப் பாருங்கள். அதிசயங்கள் கிட்டும்.
வானில் எத்தனையோ அதிசயங்கள். இறைவன் மட்டும் தென்படுவதே இல்லை.