அமெரிக்காவில் கொண்டுவரப்பட இருக்கும் இரண்டு சட்டங்களை எதிர்த்து இணையதளங்கள் நாளை இருபத்தி நான்கு மணிநேரம் தங்களை முடக்கி கொண்டு எதிர்ப்பினை தெரிவிக்க இருக்கின்றன.
கிட்டத்தட்ட ஐயாயிரம் இணையதளங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் என களத்தில் இறங்கி இருக்கின்றன.
எப்படி நமது இணையதளத்தை முடக்குவது என்பது குறித்தான விபரங்களையும் இந்த இணையதளம் வெளியிட்டு உள்ளது. இணையதளம் வைத்திருக்காத நபர்கள் எதிர்ப்பினை ட்விட்டர், முகநூல் தனில் பதிவு செய்ய வேண்டுமென கேட்டு கொண்டிருக்கிறார்கள். சிடிசன், குடிமக்கள், என்பது போல இணையதளம் வைத்து இருப்பவர்கள் நெட்டிசன், வலைதளமக்கள், என புது பட்டம் அளித்து இருக்கிறார்கள்.
கருப்பு கொடி காட்டுவது போல எல்லா இணையதளங்களும் கருப்பாகவே இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள்.
சரி, அப்படி என்ன அந்த இரண்டு சட்டங்கள் சொல்கிறது. இணையதள ரகசியங்கள் பாதுகாப்பு தடுப்பு சட்டம், அறிவுசார் சொத்து பாதுகாப்பு சட்டம். இப்படி இந்த இரண்டு சட்டங்கள் கொண்டு வந்தால் நிறைய அறிவுசார் இணையதளங்கள் எல்லாம் மூட வேண்டிய நிலை வந்து விடும். நாளை அமெரிக்காவில் கொண்டு வர இருக்கும் சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், நமது சுதந்திர பேச்சை, நமது முன்னேற்றத்தை தடுக்கும் இந்த சட்டங்கள் ஒடுக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்து இருக்கிறார்கள்.
இந்த இணையதளங்கள் செய்யும் பல விசயங்கள் கண்டனத்துக்குரியவையாக இருக்கின்றன என சொல்கிறார்கள்.
1 ஒருவர் எழுதிய நூலை அப்படியே அப்பட்டமாக பதிவது. (இது போன்று நான் எழுத நினைத்த கம்பராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் கிடப்பில் போடப்பட்டு விட்டன).
2 பி டி எப் வடிவில் புதத்தகத்தையே காப்பி செய்து இணையத்தில் பதிவது.
3 இசையை வெளியிடுவது, படங்களை வெளியிடுவது, தொடர்கள் வெளியிடுவது என பல வேலைகளை இலவசமாகவே செய்து வருகின்றன. இதன் மூலம் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைகிறார்கள்.
எத்தனையோ அறிவு சார்ந்த விசயங்கள் இணைய தளம் மூலம் கிடைப்பதால் நூலகம் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்படியெனில் நூலகங்களில் இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள் முடக்கப்படுமா? ஒரு படம் வாங்கி அதில் பல படங்கள் உருவாக்கி வாடகைக்கு விடப்படும் தொழில் முடக்கப்படுமா?
இணையதள வளர்ச்சியினால் பதிப்புரிமை, காப்புரிமை வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டது என்னவோ உண்மைதான். அதற்காக இணையதளத்தையே முடக்குவது அறிவை சிதைப்பது போன்றதாகும்.
காப்புரிமை, பதிப்புரிமை வைத்திருப்பவர்கள் சற்று சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது. அதே வேளையில் இணையதளம் வைத்திருப்பவர்கள் மிகவும் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டிய தருணம் இது.
இணையதளங்கள் மீது திணிக்கப்பட இருக்கும் சட்டத்தை நீங்கள் எதிர்க்கிறீர்களா?, ஆதரிக்கிறீர்களா?